நான் கடவுளை நம்ப வேண்டுமா?


அக்டோபர் 2 - 2012. பெங்களூர் - இந்தியா.





கே: கடவுளுக்கும் ஆன்மீகத்துக்கும் என்ன தொடர்பு இருக்கிறது? கடவுளை நம்பாமல் நான் ஆன்மீகத்தில் ஈடுபட முடியுமா?

குருதேவர்: ஆம்! முடியும்! இந்திய தத்துவங்களைப் போதிக்கும் 6 தர்ஷணாக்களில் – நியாயம், வைசேஷிகம், சாங்க்யம் – என்ற முதல் மூன்றில் கடவுளைப் பற்றிய பேச்சே இல்லை. கௌதம மகரிஷியின் நியாய தர்ஷணா ஞானத்தைப் பற்றிச் சொல்கிறது. உன் ஞானம் சரியா அல்லது தவறா என்று விளக்குகிறது. உதாரணத்துக்கு, உன் புலன்கள் (கண்கள்) மூலம் நீ சூரியன் உதிப்பதையும், மறைவதையும் காண்கிறாய். நியாய தர்ஷணத்தின் படி நீ காண்பதை எல்லாம் நம்பக் கூடாது. மேற்படி ஆராய்ந்து சூரியன் இருக்கும் இடத்திலேயே தான் இருக்கிறது என்றும் பூமி தன்னைத் தானே சுற்றிக் கொள்வதால் சூரியன் உதிப்பது போலும், மறைவது போலும் தோற்றத்தை நீ பார்க்கிறாய் என்று தெரிந்து கொள்கிறாய்.

நாம் கோப்பர்நிகஸ் என்பவர் தான் பூமி தன்னைத் தானே தன் அச்சில் சுழல்வதைக் கண்டு பிடித்ததாக எண்ணுகிறோம். ஆனால் அது உண்மை அல்ல. அவர் கட்டாயமாக அதைத் தெரிந்து கொண்டார். ஆனால் இந்தியர்கள் பல காலம் முன்பாகவே பூமி தன்னைத் தானே சுற்றிக் கொண்டு சூரியனைச் சுற்றி வருவதை அறிந்திருந்தனர். நியாய தர்ஷணாவில் இவைகள் விவரிக்கப் படுகின்றன. நாம் மெய் என்று நினைப்பவைகளில் இருக்கும் பொய்யை நியாய தர்ஷணா விளக்குகிறது.

வைசேஷிக தர்ஷணம் என்பது இந்த ப்ரபஞ்சத்தில் இருக்கும் எல்லா பொருட்களுக்கும் கணக்கு வைத்திருக்கிறது. – நிலம், நீர், நெருப்பு, காற்று, வெட்ட வெளி, மற்றைய பொருட்கள், உயிர்கள் எல்லாவற்றையும் ஆராய்வது வைசேஷிக தர்ஷணம். இதில் மனம், ஆத்மா, அறிவு, சித்தம் இவற்றைப் பற்றிச் சொல்லப் பட்டிருக்கிறது.

சாங்க்ய தர்ஷணம்.இந்த மூன்று தர்ஷணங்களும் கடவுளைப் பற்றிப் பேச வில்லை. ஆனால் அவை ஆத்மாவைப் பற்றிப் பேசுகின்றன. யோக சூத்திரத்தில் (4வது தர்ஷணத்தில்) மட்டும் கடவுள் என்ற ஒரு தலைப்பு இருக்கிறது.எனவே நீ கடவுளை நம்பித் தான் ஆக வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால் எதன் மீதாவது நம்பிக்கை வைக்க வேண்டியது அவசியம். குறைந்த பட்சம், ஆன்மாவின் மேல் நம்பிக்கை வைக்க வேண்டும்.

பொதுவாக, கடவுள் என்றால், யாரோ சொர்க்கத்தில் அமர்ந்திருப்பவர், இந்த உலகைப் படைத்தவர், உலகைப் படைத்த பின் இங்கிருந்து சென்று நம் எல்லோருடைய தவறுகளையும் கண்டு பிடிப்பதற்காக இருக்கிறார் என்று எண்ணுகிறோம். நாம் தவறு செய்யும் போதெல்லாம் ஒரு கோலை எடுத்து நம்மைத் தண்டிப்பார் என்று நினைக்கிறோம். நாம் பேசுவது இப்படிப்பட்ட கடவுளைப் பற்றி அல்ல.

கடவுள் என்பது இருப்பின் அடையாளம். இந்த உலகம் அன்பு என்ற பொருளால் ஆனது. அன்பு தான் கடவுள். நீ தனியானவன் அல்ல. உன்னை நீ கடவுளிடமிருந்து பிரித்து தனியாக்கிக் கொள்ள முடியாது.

கடவுளுக்கு அப்பால் எதுவுமே கிடையாது. எல்லாமே கடவுளுக்கு உள்ளே தான் இருக்கிறது. அது நல்லது, கெட்டது, சரி, தவறு எல்லாவற்றையும் உள்ளடக்கியது. மகிழ்ச்சியும் வருத்தமும் அதற்குச் சமம். எது ஒன்று இருக்கிறதோ, பூரணமான ஒன்று எல்லாவற்றையும் உள் அடக்கியது எதுவோ அதை அழைக்க நாம் கடவுள் என்ற பெயர் வைத்திருக்கிறோம்.இதைப் பற்றி கவலைப் படாதே. நீ உன்னைப் பற்றி அறிந்து கொள்.

கே: குருதேவா! இந்த வாரத்தை மகாத்மா காந்தியின் பிறந்த தினத்தின் நினைவாக, அமைதி மற்றும் ஆரோக்கிய வாரமாகக் கொண்டாடுகிறோம். அமைதிக்கும் ஆரோக்கியத்துக்கும் உள்ள தொடர்பைப் பற்றி விளக்குங்கள்.

குருதேவர்: இது உள்ளங்கை நெல்லிக் கனி போன்றது. நீ ஆரோக்கியமாக இருக்கும்போது உன் மனம் அமைதியாக இருக்கும். ஆரோக்கியம் மன அமைதியை உள்ளடக்கியது.அமைதி இல்லாமல் இருந்தால் நீ ஆரோக்கியமானவன் என்று சொல்ல முடியாது. மனம் சஞ்சலமாக இருந்தால் உடல் நலமும் பாதிக்கப் படும்.

நோய் உடலில் மட்டும் இல்லை. மனதிலும் வரலாம். நோய் உன் அறிவையும் தாக்கி, சரியாக செயல் பட விடாமல், உன் ஆத்மாவையும் வருத்தும். இதெல்லாம் ஆரோக்கியமின்மைக்கு அடையாளம். “ஸ்வஸ்தா” (ஆரோக்கியம்) என்னும் வார்த்தைக்கு ஆழமான பொருள் இருக்கிறது.
நீ பாலித் தீவுக்குச் சென்றால், இங்கு “நமஸ்தே” அல்லது “ஹலோ” என்று சொல்வது போல் “ஓம் ஸ்வஸ்தி ரஸ்து” என்று உன்னை வரவேற்பார்கள். அதன் பொருள் “நீ உன் ஆத்மாவில் லயித்து இரு” என்று பொருள். நீ உன் ஆத்மாவுடன் இணைந்திருக்கும் போது நீ அமைதியாக இருப்பாய். மனம் தெளிவாக இருக்கும். அறிவு தடங்கல் இல்லாமல் செயல் படும். எதிர்மறை உணர்ச்சிகள் உன்னிடம் இருக்காது. உன் உடல் ஆரோக்கியமாக இருக்கும். இதெல்லாம் சேர்ந்ததை சமஸ்கிருதத்தில் “ஸ்வஸ்தா” என்கிறார்கள். “ஸ்வஸ்தா” என்றால் ஆரோக்கியமானவன் என்று பொருள்.

கே: வாழும் கலையில் சேர்ந்த பின், எந்தக் காரியமானாலும் நல்லபடி  நடக்கும் என்ற நம்பிக்கையை வளர்த்துக் கொண்டிருக்கிறேன். ஆனால், சிலசமயம் அப்படி நடப்பதில்லை. ஏன் அப்படி நடப்பதில்லை?

குருதேவர்: ஆம். சில சமயம் நினைத்தது நடப்பதில்லை. அப்படிப் பட்ட சமயங்களில் நீ நினைத்ததை விட நன்மை தரும் ஒன்று உனக்காகக் காத்துக் கொண்டிருக்கிறது என்று தெரிந்து கொள்.

வாழ்க்கையில், சுகம், துக்கம், உயர்வு, தாழ்வு, மானம், அவமானம் எல்லாமே வந்து போகும். இவைகளுக்கு நடுவில், எதையும் சமமாக எடுத்துக் கொள்ளும் தன்மை மிக அவசியம். கஷ்ட காலத்தில் தான் உன் திறமை வெளிப்படும்.

எல்லாமே நன்றாக நடக்கும் போது “எனக்கு நிறைய நம்பிக்கையும் பக்தியும் இருக்கிறது” என்று சொல்வது எளிது. அது ஒன்றும் பெரிய விஷயமல்ல. ஆனால் வாழ்க்கையில் கஷ்டம் வரும்போது,எதிர்பார்த்தது நடக்காதபோது, நம்பிக்கை மற்றும் பக்தியை மறக்காமல் இருப்பது தான் உண்மையான நம்பிக்கை. இயற்கை உன் பாதையில் உன் நம்பிக்கையைத் தகர்க்க பல நிகழ்ச்சிகளை ஏற்படுத்தும். அவைகளைத் தாண்டி உன் நம்பிக்கை பலமாக இருந்தால், நீ ஒரு பூரண மனதனாகி விட்டாய் என்று அர்த்தம். அதன் பிறகு எல்லாமே ஏற்றுக் கொள்ளும் படி நடக்கும். இயற்கையின் நியதி இது தான்.

கே: என்னுடைய நல்ல குணங்களை வளர்த்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும்?

குருதேவர்: நல்ல குணங்களை வளர்த்துக் கொள்ள நீ யோக சாதனை, சேவையில் ஈடுபடு. நீ சேவை செய்யும் போது உன்னை யாராவது திட்டினாலோ, குறை கூறினாலோ அதைக் கேட்டு விட்டு அவர்களிடம் “என்னை மேலும் திட்ட வேண்டுமானால் திட்டுங்கள்” என்று சொல். நாம் மற்றவர்களின் அவச் சொற்களைக் கேட்கும் போது நம் ஆத்மா மலரத் துவங்கும். ஆனால் “நீங்கள் எப்படி என்னைத் திட்டலாம், என்னைக் குறை சொல்லாதீர்கள்” என்று சொன்னால், அவர்கள் திட்டுவதைக் கேட்டு மனம் வருந்தினால், நம் ஆத்மா மலர்வதில்லை. எனவே யோக சாதனை, தியானம் தொடர்ந்து செய். நாம் யோக சாதனையில் ஈடு படும்போது ஆத்மா மலர்ந்து நம்மிடம் நற்குணங்கள் வந்து சேரும்.

கே: குருதேவா! கோடிக் கணக்கானவர்களின் உதாரண புருஷராக இருக்கும் நீங்கள் எப்படி உணருகிறீர்கள்?

குருதேவர்: காலி மற்றும் வெற்றிடம் போல், அதே சமயம் பூரணமாக உணருகிறேன்.

கே: குருதேவா! உபநயனம் பயிற்சியில் உள்ளவர்களிடம் பேசும் போது, எங்களை ப்ரம்ம யஞ்யம் – (நான்கு வேதங்களிலிருந்து நான்கு வேத மந்திரங்கள்) – கற்றுக் கொள்ளச் சொன்னீர்கள். தயவு செய்து, இந்த மந்திரங்களின் பொருளைச் சொல்வீர்களா?

குருதேவர்: மந்திரங்களின் பொருளை விட அதை உச்சரிக்கும் அதிர்வு அலைகள் மிகவும் முக்கியம் வாய்ந்தவை.

இந்த மந்திரங்கள் பல ரிஷிகள் மூலம் நம்மை வந்தடைந்திருக்கின்றன. ரிஷிகள் தியானத்தில் இருந்த போது, அவர்களுக்குக் கிடைத்த இந்த மந்திரங்களை மற்றவர்களுக்குச் சொல்லியிருக்கிறார்கள். அவை அலை வடிவில் (கம்ப்யூடரில் டௌன் லோட் செய்வது போல்) நம்மை வந்தடைந்திருக்கின்றன. அறிவு சார்ந்த நிலையில் கேட்டு எழுதிக் கொள்ளப் பட்டவை அல்ல.

இந்த மந்திரங்கள் பரமாத்மாவிடமிருந்து சூக்ஷ்மமான நிலையில் நம்மை வந்தடைந்திருக்கிறது. நீங்கள் அமர்ந்து, எண்ணத்தில் கொண்டு வந்து சில வார்த்தைகளை சேர்த்து ஒரு பொருள் கொடுத்தீர்கள் என்றால் அது வித்தியாசமானது. ஆனால் உங்கள் ஆழ் மனத்திலிருந்து ஒரு கவிதை போல் வருமானால், அது பல தலை முறைகளைக் கடந்து பரவி நிற்கும். அதற்குப் பொருள் சொல்லத் துவங்கினால், ஒவ்வொரு முறையும் ஒரு விளக்கம் கிடைக்கும். அதனால் தான் இவற்றை மந்திரம் என்று சொல்கிறோம்.

“மனனத் த்ரயதே இதி மந்த்ரஹ” – மந்திரங்களில் லயித்திருக்கும் போது, அது உன் ஆத்ம சக்தியை உயர்த்துகிறது. இது தான் சொல்லப் பட்டது.

மந்திரங்களுக்குப் பொருள் உண்டு. ஆனால் அவை சமுத்திரத்தில் இருக்கும் ஒரு பனிப் பாறையின் நுனி போல் நமக்குத் தெரியும். (சமுத்திரத்தின் நீர் மட்டத்தின் கீழ் எவ்வளவு பெரிதாக இருக்கிறது என்று அளவிட முடியாது.)மந்திரங்களின் பொருள் அவ்வளவு முக்கியம் அல்ல. உச்சரிக்கும் ஒலி அலைகள் மிகவும் முக்கியம் வாய்ந்தவை.

கே: குருதேவா! காயத்ரி மந்திரத்தை ஜபிக்கும் போது நாம் எவ்வளவு முறை ஜபிக்கிறோம் என்பது முக்கியமா? சில தடவைகள் அதிகமாகவோ, குறைவாகவோ ஜபித்தால் எதிர்மறைப் பயன்கள் வருமா? அல்லது உணர்ச்சியோடு (பக்தியோடு) ஜபித்தால் போதுமா?

குருதேவர்: ஆம். உணர்ச்சியோடு (பக்தியோடு) ஜபித்தால் போதும். நீ தண்டனைக்கு ஆளாக மாட்டாய். யாராவது ஏதாவது சொன்னால், “எனக்கு ஒரு வக்கீல் இருக்கிறார்” என்று சொல். உனக்கு ஏதாவது வந்தால், நான் உன் வக்கீல் போல் செயல்படுவேன்.

நிறைய பண்டிதர்கள் மக்களிடையே “தவறாக ஜபித்தால் ஏதாவது ஆகி விடும். பெண்கள் காயத்ரி மந்திரம் ஜபிக்கக் கூடாது” என்ற எண்ணங்களைப் பரப்புகிறார்கள். இவை சரியல்ல. ஒன்றும் நேராது. அன்போடு ஜபியுங்கள். பயத்தோடு ஜபிக்க வேண்டாம்.

கே: எதிர்மறை எண்ணங்களைத் தவிர்க்க கடினமாக முயல்கிறேன். இருந்தாலும் என் மனதில் எதிர்மறை எண்ணங்கள் வருகின்றன. என்ன செய்வது?

குருதேவர்: எதிர்மறை எண்ணங்கள் வரும்போது தடுத்தால், அதை விரட்ட வேண்டும் என்று முயன்றால் அவை பேய் போல உன்னைத் தொடரும். எதிர்மறை எண்ணங்களைக் கைகுலுக்கி வரவேற்று, “என்னோடு வந்து உட்கார்ந்து கொள்ளுங்கள். நான் உங்களை விட மாட்டேன்” என்று சொல். எவ்வளவு சீக்கிரம் அவை மறைகின்றன என்று பார். எண்ணங்கள் உன்னைப் பார்த்து பயப்படும்.நீ எதிர்மறை எண்ணங்களுக்குப் பயந்தால், அவை உன்னைக் கட்டுப் படுத்தும். நீ அவற்றோடு கை குலுக்கினால் அவை மறைந்து விடும்.

கே: பாவத்துக்கும் தவறுக்கும் என்ன வித்தியாசம்? அவை இரண்டும் மன்னிப்புக்கு உரியவைகளா?

குருதேவர்: நிச்சயமாக, இரண்டையும் மன்னிக்க முடியும். பாவத்தின் பின்னால் ஒரு இச்சை, விருப்பம் இருக்கக் கூடும். தவறு என்பது உன்னை அறியாமல் ஏற்படுவது. பாவம் செய்யும் போது இப்படிச் செய்வது சரியல்ல என்று உனக்குத் தெரிந்திருக்கும்.ஆனாலும் அதைச் செய்திருக்கிறாய். அது தான் இரண்டுக்கும் வித்தியாசம். எதுவானாலும் இரண்டுமே கடந்து போகும். ஆகவே கவலைப் படாதே. அவைகளை விட்டு விடு.

கே: எல்லாமே இறைவன் எழுதி வைத்திருக்கும்படி (விதிப்படி) நடக்கும் என்றால் கர்ம வினை என்பது எங்கிருந்து வந்தது?

குருதேவர்: எல்லாமே எழுதி வைத்திருக்கிறது என்று சொல்கிறாய்.அப்படி அல்ல. சில விஷயங்கள் எழுதியபடி (விதிப்படி) நடக்கும்.சில செயல்கள் உன் விருப்பப்படி செய்யலாம்.உதாரணத்துக்கு, மழை பெய்வது எழுதிவைத்த படி நடக்கிறது. நனைவதும், நனையாமல் இருப்பதும் உன்னைப் பொறுத்து இருக்கிறது. ஒரு குடை எடுத்துச் சென்றால் நனையாமல் செல்லலாம். அப்படியே மழையில் சென்றால் நனைந்து விடுவாய். ஆகவே எல்லாமே முன் விதித்த படி அல்ல. நீ உன் விருப்பப் படி செய்யவும் சுதந்திரம் இருக்கிறது.

கே: பெற்றோர்களின் கடமையைப் பார்க்கும் போது,எது முக்கியம்? என்னுடைய நேரமா? அல்லது குழந்தைகளுக்குத் தேவையான எல்லா வசதிகளையும் பணத்தின் மூலம் தருவதா?

குருதேவர்: கேள். உன் மனதில் ஒரு யுத்தம் நடை பெறுகிறது. நீ வேலைக்குப் போவதால் குழந்தைகளுடன் இருக்க முடியவில்லை என்ற உணர்வு இருக்கிறது. அது பரவாயில்லை. எவ்வளவு நேரம் குழந்தைகளுடன் இருக்கிறாயோ, அதை நல்ல வழியில், அவர்கள் மகிழ்ச்சியுடன் இருக்கும் படி செய். அது முக்கியம்.

கே: நான் சுலபமாக மறந்து விடுகிறேன். என் நினைவாற்றலை எப்படி வளர்த்துக் கொள்வது?
குருதேவர்: சங்கு புஷ்பி, ப்ரஹ்மி ரசாயன், மேத்ய ரசாயன் முதலிய ஆயுர் வேத மருந்துகளை சாப்பிடுவதால் நினைவாற்றல் வளரும். அவை மிகவும் நல்ல மருந்துகள்.யூ ட்யூப் மற்றும் டி.வி. முன்னால் நிறைய நேரம் செலவழிக்காதே. சற்று நேரம் பார்க்கலாம். நீண்ட நேரம் பார்ப்பது நல்லதல்ல. அதுவும் ஒரே சமயத்தில் உட்காருவது நல்லதல்ல. சில சமயம் இண்டர் நெட்டில் 5 அல்லது 6 மணி நேரம் செலவழிக்கிறோம். 4 அல்லது 5 மணி நேரம் இடைவிடாமல் டி.வி யில் சினிமா பார்க்கிறோம். அப்படிச் செய்யாதீர்கள்.

கே: நீண்ட கால போதை மருந்து பழக்கத்தை எப்படி விடுவது?

குருதேவர்: இங்கிருந்து கிளம்புவதற்கு முன் “இனிமேல் போதை மருந்தை தொட மாட்டேன்” என்று சத்தியம் செய். வேறு யாரைப் பற்றியோ நீ கேட்டிருந்தால், அவரை இங்கு அழைத்து வா. நிறைய சுதர்சன கிரியா செய்து அந்தப் பழக்கம் போய் விடும் படிச் செய்யலாம். ஆயிரக் கணக்கானவர்கள் பிராண யாமம், சுதர்சன கிரியா, சகஜ சமாதி தியானம் செய்து போதை மருந்து பழக்கத்திலிருந்து விடு பட்டிருக்கிறார்கள்.

கே: ஒரு ரிஷிமுக் பத்திரிக்கையில் ஶ்ரீவிஷ்ணு எல்லா கடவுளர்களின் கடவுள் என்று எழுதியிருந்ததைப் படித்தேன். எப்படி சிவபெருமான் ஶ்ரீவிஷ்ணுவின் குருவாக முடியும்?

குருதேவர்: ஆம். சிவபெருமான் தேவர்களுக்கெல்லாம் தேவரான மகாதேவர். எல்லாருமே ஒன்று தான். ஹரியும் ஹரனும் வேறு வேறு அல்ல. ஒன்றே தான். சிவபெருமானும் விஷ்ணுவும் ஒன்றே தான்.