மனதின் மீது கவனம் தேவை....


24 அக்டோபர் – 2012 – பெங்களூர் - இந்தியா


குருதேவர்: தெரியுமா! எது வந்தாலும் நீ உன் மனத்தைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். நீ மகிழ்ச்சியாக இருக்கும்போது யாரோ வந்து உனக்குப் பிடிக்காத ஒரு செய்தியை உன் காதில் சொல்கிறார் என்று வைத்துக் கொள்.

“அவர் உன்னைப் பற்றி இப்படிச் சொன்னார்” என்று சொல்லிவிட்டு, “நீ என்ன செய்கிறாய்? இப்படி ஒன்றும் செய்யாமல் இருப்பது நல்லதல்ல” என்று சொல்கிறார். திடீரென்று உன் மனம் குழப்பத்தினால் சுழல்கிறது. உனக்கு ஒன்றுமே பிடிக்கவில்லை. நீ மிகவும் பாதிக்கப் படுகிறாய். எப்படி இது நேர்ந்தது. யாரோ எதிர்மறை எண்ணங்களை உன் மனத்தில் விதைத்து விட்டார்கள். இது வழக்கமாக நடக்கும் ஒன்று.

தினசரி வாழ்வில் யாராவது வந்து எதிர்மறை எண்ணங்களை உன் மனத்தில் புகுத்தி, உன் திட சித்தத்தைக் கலைப்பதை நீ பார்க்கலாம். மனம் குழப்பமடைய விடாதே.எதிர்மறை எண்ணங்களைத் திணிப்பது சகஜமான ஒன்று. நீ உன் ஆத்மாவுடன் தொடர்பு வைத்திருக்கும் போது, உன் இயற்கை அறிவு வளமாக இருக்கும் போது, அப்படிப் பட்ட நிகழ்ச்சிகளைப் புன்முறுவலோடு ஏற்றுக் கொள்வாய். காதுகளில் பஞ்சை வைத்து அடைத்ததைப் போல் எதிர்மறை செய்திகளால் துன்பப் படமாட்டாய்.

உலகம் இப்படிப்பட்டது என்று உனக்குத் தெரியும். சில மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நடக்கின்றன. சில துக்க நிகழ்ச்சிகளும் நடக்கும். எது வந்தாலும் அதை எதிர்கொண்டு வாழ்க்கையை நடத்துவது மிகவும் முக்கியம்.

கடந்த 9 நாட்களாக நாம் செய்த யோக சாதனைகள், யஞ்ங்கள், கொண்டாட்டங்கள் உனக்கு உற்சாகத்தையும், சக்தியையும் கொடுத்திருக்கிறது. எனவே, இதயத்தைப் பலமாகவும், மனத்தைக் கூர்மையாகவும் வைத்தால் வாழ்க்கை வண்டி மிகச் செப்பமாக ஓடும். சின்ன விஷயங்களை விட்டு விட்டு, நல்ல விஷயங்களில் ஈடுபடு. சமூகத்துக்கு, தேசத்துக்கு, உலகத்துக்கு உன்னால் என்ன செய்ய முடியும் என்று எண்ணிப் பார். வாழ்க்கைக்கு, ஒரு உயர்ந்த நோக்கம் இருக்க வேண்டும்.

மக்கள் பொதுவாக சிறிய பொருட்களை வேண்டிக் கேட்கிறார்கள். “குருதேவா! எங்களுக்கு டாக்ஸி கிடைக்கவில்லை. ஒரு கார் அனுப்புங்கள்” என்று கேட்கிறார்கள். இது போன்ற சின்ன விஷயங்களுக்காக வேண்டுகிறார்கள். அது பரவாயில்லை. அதில் ஒன்றும் கெடுதல் இல்லை. கேட்கும் போது உயர்ந்த நோக்கத்தோடு எண்ணிப் பார்த்துக் கேட்க வேண்டும்.

நம் இந்திய கலாசாரத்தில், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ‘ஸுகி பஸே ஸன்ஸார் ஸப் துகியா ரஹே ந கோயி’ (எல்லோரும் மகிழ்ச்சியோடு இருக்கட்டும். யாருமே துக்கப்பட வேண்டாம்!) நாம் வேண்டும் போதும் அதையே தான் சொல்கிறோம். ‘லோகா ஸமஸ்தா ஸுகினோ பவந்து!’ இந்த லோகத்தில் எல்லோரும், எல்லாமும் மகிழ்ச்சியோடு இருக்கட்டும்.

இவ்வுலகில் மட்டும் அல்ல. மற்ற லோகங்களில் இருக்கும் நம் முன்னோர்களின் ஆத்மாவும் த்ருப்தியடையட்டும். இதைத்தான் நாம் வேண்டுகிறோம்.

நீ உன் ஆத்மாவுடன் இணைந்திருப்பது முக்கியம். காலம் செல்லச் செல்ல நீ உன்னையே பரிசீலனை செய்ய வேண்டும். நான் செய்யும் செயல்களால் பிறர் பயனடைகிறார்களா? இல்லையா? குறுகிய காலத்துக்கு துக்கத்தை ஏற்படுத்தினாலும், நீண்ட காலம் அந்தச் செயல் எல்லோருக்கும் பயனளிக்குமானால்,அது சரியான செயல் எனக் கொள்ளலாம். இது ஒரு தேர்வுக்கான அளவுகோல்.

ஒரு செயலைத் துவங்கும் முன், “நான் சிறு விஷயங்களிலே அதிக கவனம் வைத்திருக்கிறேனா? அல்லது விரிந்த நோக்கத்தோடு எண்ணிச் செயல்படுகிறேனா? என்று நீ உன்னைக் கேட்டுக்கொள்ள வேண்டும். உன் தொலை நோக்குப் பார்வையை விரிவு படுத்துவது மிகவும் அவசியம். குறுகிய பார்வையோடு செயல் பட்டால் நம் முடிவுகள் தவறாவதற்கு வாய்ப்பு இருக்கிறது. பரந்த தொலை நோக்குப் பார்வையுடன் செயல் படும்போது, நம் சுய அறிவு நன்கு வளரும்.

இன்று வெற்றிக்கான தினம். தெய்வசக்தி தீய சக்திகளை அழித்து வெற்றி பெற்ற தினம். இன்று புதிதாக நல்லெண்ணத்தோடு காரியம் துவங்குவது நல்லது.

“சரி, இப்போது நான் என்ன செய்ய விரும்புகிறேன்?” என்று கேட்டுக் கொள். உனக்காக ஒரு நோக்கம், உலகத்திற்காக ஒரு நோக்கம் தேர்வு செய்து இரண்டும் ஒன்றாக இருக்குமானால் அது மிகவும் நல்லது. அவை வேறு படுமானால் அதுவும் பரவாயில்லை. இரண்டையும் தொடரலாம். ஆனால் அவை ஒன்றை ஒன்று எதிர்க்காமல் பார்த்துக் கொள். முதலில் உன் நோக்கம் சமூகத்துக்காக, உலகத்துக்காக, மக்களுக்காக இருக்க வேண்டும். அதற்கடுத்து உன்னுடைய விருப்பங்கள் தானாகவே நிறைவேறும். ஏற்கனவே அப்படி நடக்கிறது இல்லையா? உங்களில் எத்தனை பேருக்கு நீங்கள் விரும்புவது, கேட்பது கிடைக்கிறது. அப்படிப்பட்ட அனுபவம் எத்தனை பேருக்கு இருக்கிறது. (பார்வையாளரில் பலர் கைகளை உயர்த்துகிறார்கள்.)

ஒரு சாதகனுக்கு அப்படித்தான் நடக்கும். ‘ப்ரத்யவாயோ நா வித்யதே’ என்று சொல்வார்கள். உனக்கு வழி தென்பட்டவுடன் எந்த இடைஞ்சலும் இருக்காது. அதன் பின் நீ என்ன விரும்பினாலும், உன் சங்கல்பத்தின் படி, நீ எண்ணுவது அதிக முயற்சியில்லாமலேயே சுலபமாக நடக்கத் துவங்கும்.

இம்மாதம் கடந்து விட்டது. அஸ்வின் மாதம் மிகவும் முக்கியமானது. ஏன்? 15 நாட்கள் நம் முன்னோர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. மீதி 15 நாட்கள் தெய்வங்களை வழிபட்டு அவர்களுடன் இணைந்திருந்தோம். அதனால் தான் இந்த மாதம் மகத்துவம் வாய்ந்தது. பௌர்ணமி வரைக்கும் கொண்டாட்டங்கள் தொடரும்.

ஆனால் நமக்கு (வாழும் கலை உறுப்பினர்களுக்கு) ஒவ்வொரு நாளும் கொண்டாட்டம் தான். இல்லையா? எங்கும் கொண்டாட்டம் தான். இருந்தாலும் இந்த மாதம் சிறப்பானது.

கே: இவ்வுலகில் மகாத்மாக்கள் இருக்கிறார்கள். அரக்கர்களும் இருக்கிறார்கள். மகாத்மாக்களில் வழி நடப்பவர்கள் சாத்வீகமானவர்களாகிறார்கள். அரக்கர்கள் சாத்வீகமானவர்களை அடக்கித் துன்புறுத்துகிறார்கள். அப்படிப்பட்ட நிலையில் என்ன செய்ய வேண்டும்?

குருதேவர்: நல்லவர் ஒன்றாகச் சேர்ந்திருப்பது அவசியம். சில கெட்டவர்களால் சமூகம் கெட்டு போகவில்லை. நல்லவர்களின் மௌனத்தினால் தான் சமூகம் சீர்குலைந்திருக்கிறது. நல்ல எண்ணம் உடையவர்கள் மௌனம் காக்கிறார்கள். தேர்தலில் வாக்களிப்பதற்குக் கூட செல்வதில்லை. “எப்படியிருந்தாலும் நம்மால் ஒன்றும் செய்ய இயலாது, நாம் அதைப்பற்றி ஏன் கவலைப்பட வேண்டும், நாம் நம் வேலையைப் பார்த்துக் கொண்டு சுகமாக இருக்கலாம்” என்று அவர்கள் நினைக்கிறார்கள்.

சுவரணை இல்லாமல் (உணர்ச்சி இல்லாமல்) ஒன்றும் செய்யாமல் மௌனமாக இருக்கிறார்கள். இது சரியல்ல. சமூக காரியத்தில் இறங்க வேண்டும். அசையாமல் மந்தமாக இருப்பதை நல்ல குணம் என்று கருதக் கூடாது. ஒருவர் மந்தமாக ஒரு காரியமும் செய்யாமல் “நான் நல்லவன்” என்று சொல்வாரானால் அந்த நல்லவரால் யாருக்கும் உபயோகம் இல்லை. நீ நல்லவனாக, இரக்கமுள்ளவனாக இருந்தால், ஏதாவது நற்காரியத்தில் ஈடுபட வேண்டும். இல்லையா?

நீ எதையாவது சரி செய்யக் கூடுமானால் அதை நீ சரி செய்ய வேண்டும். உன்னால் சரி செய்ய முடியாவிட்டால், அது உன் சக்திக்கு மிஞ்சியதானால், இறைவனை வேண்டுவது நல்ல முடிவாகும்.

அதனால் தான் 4 விஷயங்கள் வாழ்க்கைக்கு இன்றியமையாதவை. பக்தி, முக்தி, சக்தி மற்றும் யுக்தி. யுக்தியால் (சாமர்த்தியத்தால்) நீ வேண்டிய காரியங்களை செய்து முடிக்கலாம்.

வாழ்க்கையில் சக்தியும் தேவை. ஆனால் யுக்தியும் சக்தியும் மட்டும் வேலை செய்யாது. அவைகளுடன் உனக்கு பக்தியும் தேவை. முக்தி (விடுதலை)யும் தேவை. நீ விடுதலையை உணரும்போது, உனக்குள் அதிக சக்தி உருவாகி, நீ நினைத்த காரியத்தை பிரயாசையின்றி செய்து முடிக்கலாம். நல்லவர்கள் எப்போதும் தன்னை சக்தியில்லாத வர்களாக நினைக்க கூடாது. உங்களுக்கு எங்கே சக்தி இல்லை? உங்களுக்குள் அளவற்ற சக்தி இருப்பதை நீங்கள் உணர வேண்டும்.

நேற்று முன் தினம் நடந்ததை நினைவில் கொண்டு வாருங்கள். “யஞ்ஞ சாலைக்கு வந்த யானை ஏன் அவ்வளவு பயப்பட்டது” என்று உங்களுக்குத் தெரியுமா? (இந்திராணி என்ற ஆசிரமத்து யானை சண்டி ஹோமத்தில் பங்கு பெற வந்ததை குருதேவர் குறிப்பிடுகிறார்) யானை இந்திராணி தன் உருவத்தை (பிரதி பிம்பத்தை) திரையில் பார்த்து இன்னொரு யானை நிற்பதாக நினைத்து பயப்பட்டது. அதற்கு அது தன்னுடைய பிரதிபிம்பம் என்று தெரிய வில்லை. அதன் பயத்தைப் போக்க அந்தத் திரையை அகற்ற வேண்டியதாயிற்று.

நமக்கும் அப்படிப்பட்ட பயம் ஏற்படுகிறது. நாம் நம் அடையாளத்தைத் தொலைத்து விட்டோம். நாம் யாரென்பதை மறந்து விட்டோம். அதைப் புரிந்து கொண்டால், வாழ்க்கையில் துக்கமென்பது கிடையாது.

கே: 12 ஜோதிர் லிங்கங்களின் சிறப்பு என்ன என்று தயவு செய்து சொல்லுங்கள். (ஜோதிர் லிங்கத்தை ஒளித்தூண்கள் என்று சொல்லலாம். புனிதமான 12 சிவ ஸ்தலங்கள்)

குருதேவர்: உனக்குள்ளும் ஒளி இருப்பதைப்பார். எங்கு ஒளி இருக்கிறதோ, அங்கு சிவபெருமான் இருக்கிறார். ஜோதிர்லிங்கங்கள் உன்னுள் இருக்கின்றன. 12 ஜோதிர் லிங்கங்களும் நம் உடலிலேயே இருக்கின்றன. பழங்காலத்தில் 12 ஜோதிர் லிங்கங்கள் நாட்டின் வேறு வேறு பகுதிகளில், கேதார் நாத்திலிருந்து ராமேஸ்வரம் வரை நிறுவப்பட்டன. தென் பகுதியில் உள்ள மக்கள் வடக்குக்கும், வடபகுதி மக்கள் தெற்குக்கும் பயணம் செய்து இந்த ஸ்தலங்களைத் தரிசித்தனர்.

நம் முன்னோர்களின் இந்தத் திட்டம் நாட்டில் உள்ள அனைவரையும் ஒருங்கிணப்பதற்காக ஏற்படுத்தியது. நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு வேறு ஏதும் வழி இல்லை. இந்தியாவை வேறு எந்த விதத்தில் ஒருங்கிணைக்க முடியும்? ஒவ்வொரு இடத்திலும் வேறுமொழி பேசப்படுகிறது. 

தமிழ்நாட்டுக்கும் உத்திரப் பிரதேசத்துக்கும் என்ன தொடர்பு உள்ளது? இவை வேறு வேறு கலாசாரத்தை, உணவுப் பழக்கத்தை, நடை உடை பாவனைகளைக் கொண்டு இரு வேறு நாடுகள் போன்றன. எல்லாமே வித்தியாசமானவை.

உத்தரப் பிரதேசத்தில் உள்ளவர்களை ராமேஸ்வரத்துக்குப் போகச் சொன்னார்கள். தமிழ் நாட்டினரை காசிக்குப் புனித யாத்திரை செய்து, புனித கங்கை நதியில் நீராடச் சொன்னார்கள். அதன் பின் கங்கையின் புனித நீரை ராமேஸ்வரத்துக்குக் கொண்டுவந்து அங்குள்ள ஜோதிர் லிங்கத்துக்கு அபிஷேகம் செய்து வழிபடச் சொன்னார்கள்.

இது ஒரு பழக்கமாக மாறி இந்தியாவில் எல்லா பகுதி மக்களும் ஒன்று சேர உதவியது. அப்படி இல்லாவிட்டால், இன்று இந்தியா ஐரோப்பாவைப் போல் 24 வேறு வேறு நாடுகளாகப் பிரிந்திருக்கும்.

நம் முன்னோர்கள் வேறு வேறு பகுதியில் வசிக்கும் இந்தியரை ஒருங்கிணைக்கும் இந்த முக்கியமான காரியத்தை நிறைவேற்றினார்கள். அதனால் தான் கங்கை நீரைக் கொண்டு வந்து, ராமேஸ்வரத்தில் உள்ள சிவனை வழிபட வேண்டும் என்று சொல்கிறார்கள்.

கே: குருதேவா! ஞானம் பற்றிய அறிவுரையைக் கேட்கும் போது, சில சமயம், இதை முன்பே கேட்டிருக்கிறோம் என்று மனம் எண்ணுகிறது. ஞானம் பற்றிய அறிவுரையை மீண்டும் மீண்டும் கேட்டு, எப்போதும் அந்தப் பேரானந்த நிலையில் இருக்க என்ன செய்ய வேண்டும்?

குருதேவர்: (ஞானம் பற்றிய அறிவுரையை) முன்பே கேட்ட மாதிரி இருந்தால், அது உன் ஆத்மாவுடன் கலந்திருக்கிறது. அது நல்லது தான். அடையாளம் காண்பது, ஏற்றுக் கொள்வது, அதில் ஒரு பகுதியாக நிலைத்திருப்பது இந்த எல்லாமே தன்னிச்சையாக நிகழும்.

கே: குருதேவா! துர்கா தேவியின் பல் வேறு ஆயுதங்களைப் பற்றி தயவு செய்து சொல்லுங்கள்.

குருதேவர்: நான் சுருக்கமாகச் சொல்கிறேன். அந்த நாட்களில் துப்பாக்கி கிடையாது. திரிசூலம் மட்டும் தான் இருந்தது. அந்த நாட்களில் துப்பாக்கி இருந்திருந்தால், அன்னை துர்காவின் கைகளில் ஏ.கே. 47 துப்பாக்கி இருந்திருக்கும். “தேவி, ஏன் இந்த ஆயுதங்களைத் தாங்கியிருக்கிறாள்” என்று  தேவர்கள் ஒரு முறை துர்கா தேவியிடம் கேட்டார்கள்” என்று சொல்லப்படுகிறது. “நீ ஒரு முறை ஹூம்காரம் செய்தாலே எல்லா அரக்கர்களையும் சுட்டு சாம்பலாக எரித்துவிடலாமே” என்றார்கள்.
இதற்கான விடையையும் தேவர்களே சொன்னார்கள். “ நீ எவ்வளவு கருணை வாய்ந்தவள். நீ உன் ஆயுதங்களால் அரக்கர்களை வதைத்து அவர்களை சுத்தப்படுத்தி ஆட் கொள்கிறாய். அதனால் தான் அவர்களைக் கொன்று முக்தி அளிக்கிறாய். ஒவ்வொரு செயலுக்கும் ஒரு மதிப்பு உண்டு. வெறும் சங்கல்பம் (விருப்பம்) மட்டும் இருந்தால் போதாது.

பாருங்கள். கடவுள் நமக்கு வேலை செய்வதற்காகக் கை கால்கள் கொடுத்திருக்கிறார். அன்னை 
துர்காவுக்கு பல கைகள் இருக்கக் காரணம் என்ன? கடவுளுக்கும் நிறைய வேலை இருக்கிறது. ஒரு கையால் செய்து மாளாது. அதனால் ஆயிரம் கைகள் ஆயிரம் வழிகளில் வேலை செய்யும்.
அரக்கர்களைக் கொல்ல தேவிக்கு ஆயிரம் வழிகள் இருக்கிறது. தீமையை ஒரு மலரால் கூட அழித்துவிடுவாள். அதனால் தான் ஒரு கையில் பூ வைத்திருக்கிறாள். சங்கு ஊதி ஞானம் தருவாள். அதுவும் வேலை செய்யாவிட்டால் சுதர்சன சக்கரத்தை உபயோகிப்பாள். எனவே அவளிடம் ஒன்றுக்கும் மேற்பட்ட யுக்தி உண்டு. உலகத்தில் ஒரு காரியத்தை முடிக்க ஒன்றுக்கும் மேற்பட்ட யுக்திகளைக் கையாள வேண்டும் என்று தேவி நமக்கு உணர்த்துகிறாள். பல வழிகளில் செயல் பட வேண்டும்.

நம் உறவுகளிலும் இதே போல் சூழ்நிலைகள் இருக்கின்றன. எல்லா சூழ்நிலைகளிலும் நாம் பிடிவாதமாக இருக்க முடியாது. நீ உன் தகப்பனாரிடம் எப்போதும் பிடிவாதமாக இருந்தால், காரியம் நன்றாக நடக்கும் என்று எதிர்பார்த்தால் அப்படி நடக்காது. சில சமயம் அன்பு, சில சமயம் பிடிவாதம், சில சமயம் கோபம் வேலை செய்யும். குழந்தைகளிடமும் அப்படித்தான். குழந்தையை வளர்க்க பெற்றோர்கள் கையாளும் முறைகளைக் கவனி. எல்லா சமயங்களிலும் பிரம்பை கையில் எடுக்க முடியாது. சில சமயம் அன்பால் குழந்தையை வழிக்குக் கொண்டு வர வேண்டும்.

“ஒரு பிரச்சினையைத் தீர்க்க பல்வேறு வழிகள் உள்ளன” என்பதை நமக்கு உணர்த்து வதற்காகத் தான் தேவியின் கைகளில் பல் வேறு ஆயுதங்கள் இருப்பதாகச் சித்தரிக்கப் படுகிறது.

கே: காளி மாதா சின்னமஸ்தா ரூபத்தில் இருப்பதன் சிறப்பு என்ன? (சின்னமஸ்தா – தன் தலையை வெட்டி தன் கையில் வைத்திருக்கும் ரூபம்)

குருதேவர்: நீ காளியைத் தன் சிரசை வெட்டி தன் கையிலே வைத்திருக்கும் கோலத்தில் பார்த்திருப்பாய். பார்த்துப் பயந்திருப்பாய். இந்தச் சித்திரத்தின் உட்பொருள் என்ன என்று தெரியுமா?
காலையிலிருந்து இரவு வரை நாம் நம் தலையில் (சிந்தனைகளில், கவலைகளில்) மாட்டிக் கொண்டு உழல்கிறோம். தலை இல்லா விட்டால் நம் கவலைகளும் இருக்காது. பிரச்சினைகளும் கிடையாது. சண்டை சச்சரவும் இல்லை. அந்த நிலையில் நம் இதயம் மட்டும் வேலை செய்யும். இதயத்தில் அன்பின் ஊற்று பெருக்கெடுக்கும். மகிழ்ச்சியும் இன்பமும் பெருகும். வாழ்க்கை எளிமையாக இருக்கும்.

வித்தியாசமான எண்ணங்கள் தலையில் உருவாகின்றன. இதயத்தில் அல்ல. சாதி வித்தியாசம், மத வித்தியாசம், செல்வநிலை மற்றும் பதவியில் வித்தியாசம் எல்லாம் தலையில் இருந்து வருவன. ஆணவம் தலையில் உருவாகும். தவறான காரியங்கள் தலையிலிருந்து துவங்கும். கொடுமை, பலாத்காரம் தலையிலிருது துவங்கும். யாருமே இதய பூர்வமாக பலாத்காரம் செய்வதில்லை. எல்லாமே தலையில் தான் உருவாகின்றன. எனவே சின்னமஸ்தா என்றால் காளி மாதா தன் உடலிருந்து தன் தலையைத் துண்டித்து விட்டாள் என்று பொருள். தலை நீக்கப் பட்டால் எஞ்சுவது தூய்மையான ஆத்மா மட்டுமே. (இதயம் மட்டுமே) இதயம் மட்டும் இருக்கும் போது, அன்பு, கருணை மற்றும் இன்பம் வாழ்வில் மலரும். தீய சக்திகள் அழிக்கப் படும். இது தான் சின்னமஸ்தா உருவம் சித்தரிக்கிறது.

இந்த உருவகங்கள் எல்லாமே உட்பொருளை உணர்த்துவதற்கான குறியீடுகள் தான். இந்த சித்திரத்தின் மூலம் உள்ளடங்கிய இரகசியமான தத்துவங்களை நாம் அறியலாம். இரகசியங்களை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.