ஐந்து தலை நாகம் - எதை குறிக்கிறது?



11- அக்டோபர் 2012 - பெங்களுரு, ஆஷ்ரம்.



நீங்கள் புராண படங்களைப் பார்த்தீர்களானால்,மகாவீரர் ஐந்து தலை நாகத்தின் கீழ் அமர்ந்து இருப்பதைக் காணலாம்.விஷ்ணு பகவான் தியானத்தில் அமர்ந்திருக்க அவர் பின்னால் நல்லபாம்பு இருப்பதை காணலாம். பலரிஷிகளின் படங்களிலும், படம் எடுத்தபடி நல்லபாம்பு  இருப்பதை காணலாம். அது போன்ற படங்களைப் பார்த்து இருக்கிறீர்களா? அது ஒரு நுட்பமான விஷயம்!  

பாருங்கள், நீங்கள் தியானத்தில் அமர்ந்து இருக்கும் போது என்ன ஆகிறது? உங்கள் உணர்வாற்றல் விழிப்புணர்வோடு,மனக்கண் திறந்தபடி உங்கள் பின்புறத்தில் ஓராயிரம் தலைகொண்ட நல்லபாம்பு இருப்பது போல் ஒரு விழிப்புணர்வோடு இருப்பீர்கள். நல்லபாம்பு விழிப்புணர்வைக் குறிக்கிறது.

தியானம் செய்யும் போது அத்தகைய விழிப்புணர்வை உங்கள் தலைக்குப் பின்புறம் உணர்ந்து இருக்கிறீர்கள்? ஒரு விதமான விழிப்பு. எனவே    நல்லபாம்பு,எழும்பி பரவும் ஒரு ஆற்றலின் சின்னம், விழிப்போடும் அதே   சமயம் அமைதியோடும் இருக்கும் ஆற்றல். 

உண்மையில் அவர்கள் தலைக்கு பின்னால் நல்லபாம்பு இருந்தது என்று அர்த்தம் அல்ல, ஆழ்ந்த அமைதியில் உள்ள விழிப்புணர்வைக் குறிக்கிறது  அதுவே தியானம். எதையும் செய்யாமல்,விரும்பாமல்,எதுவாகவும் ஆகாமல், படமெடுத்த நாகத்தின் தலை போல் திறந்த எண்ணத்தோடு,முயிற்சி இல்லாத விழிப்போடு பூரண அமைதியோடு இருப்பது.இரண்டு வகையான விளக்கங்கள்   இருக்கின்றன. ஒன்றில் நாகத்தைப் பற்றியும்,மற்றொன்றில் மலரைப் பற்றியும் கூறுகிறார்கள்.

அதாவது ஆயிரம் இதழ்கள் உள்ள ஒரு தாமரை நம் உச்சந்தலையில் மலர்வது, நம் சக்கரத்தின் கிரீடத்தில்.எனவே சிலர் அதை மென்மையான மலருக்கும், சிலர் அதை விழிப்புணர்வுக்கும் ஒப்பிடுகிறார்கள். இரண்டுமே நன்றாக பொருந்தும்.இப்போது உங்களுக்கு அது புரியவில்லை என்றால் நீங்கள்   வயிறு நிரம்ப உணவு உட்கொண்டு இருக்கிறீர்கள் என்று அர்த்தம். அப்போது உங்களுக்கு நாகத்திற்கு பதில் எருமை தான் வரும்.ஏனெனில் நீங்கள் வயிற்றை உணவு கொண்டு நிரப்பிக்கொண்டதால், நீங்கள் மந்தமாகவே உணர்வீர்கள். 

உலகெங்கும் மக்கள் விரதத்தை பற்றியும் பிரார்த்தனை பற்றியும் அல்லது தியானம் பற்றியும் பேசுகிறார்கள். அதே சமயம் நீங்கள் அளவுக்கு அதிகமாகவும் விரதம் இருக்க கூடாது. சில சமயம் பகல் முழுவதும் சாப்பிடாமல் இருந்து விட்டு பலர் இரவில் அதிகம் உணவு உண்பர். அதுவும் நல்லதல்ல. விரதத்திற்கு சில விதி முறைகள் உள்ளது அதை கடைபிடிக்க வேண்டும். இயற்கை வைத்தியர்களும், மருத்துவர்களும் எப்படி விரதம்   இருக்க வேண்டும், எப்படி அதிலிருந்து வெளிவர வேண்டும் என்று கூறுவர்.  

நவராத்திரி சமயங்களில் நாம் விரதம் இருப்பதுண்டு,அதே சமயம் விரதத்தின் பேரில் விருந்து போல் உண்பதுண்டு. மக்கள், நாங்கள் தானியங்கள் உண்ண மாட்டோம், உருளைக்கிழங்கு மட்டும் உண்போம்', என்று நாம் பிரெஞ்சு பிரைஸ் போன்று எல்லாவற்றையும் உண்போம். நாங்கள் அரிசி சாப்பிட மாட்டோம்,ஆனால் இட்லி மாத்திரம் சாப்பிடுவோம் என்பர். இது ஏமாற்று வேலை. 

உண்மையான விரதம்,இனிப்பு பண்டங்களையும், வறுத்த பண்டங்களையும் உண்பதல்ல. இது தவறான விரத பழக்கம்.இதுபோல் விரதம் இருக்ககூடாது. அல்பாஹர மிதஹர - எளிதில் ஜீரணமாகும் சிறிதளவு உணவு. இதுவும் விரதத்தில் சேர்ந்தது. சிறிதளவு பழங்களும் மற்றும் நீர்.எனவே உடல் கனமாகவும், மந்தமாகவும் இல்லாத போது,தியானம் சிறப்பாக மலரும்.அதே சமயம் அதிக அளவில் விரதம் இருப்பது உங்கள் உடலில் பித்தத்தை   அதிகரிக்கும். அதனால் உங்களால் தியானம் செய்ய இயலாது. எனவே அதிக அளவில் நீர் அருந்துங்கள் அதனால் உங்கள் உடலில் பித்தம் அதிகரிக்காமல்   இருக்கும். 

கே: விஷ்ணு பகவானுக்கும், சிவபெருமானுக்கும் வித்தியாசம் இல்லை   என்றாலும் யார்? யாரிடமிருந்து வந்தார்கள்? விஷ்ணு புராணம் விஷ்ணுவையும், சிவபுராணம் சிவனையும் போற்றுகிறது.

குருதேவ்: நீங்கள் யார் யாரிடமிருந்து வந்தார்கள் என்று நினைக்கும் போது, நீங்கள் நீர் முறையில் சிந்திக்கிறீர்கள்,ஆனால் உண்மை என்றும் கோள வடிவம் போன்றது. அதனால் தான் அதுவும் உண்மை,இதுவும் உண்மை. நீங்கள  எங்கு இருந்து பார்க்கிறீர்களோ, அங்கிருந்து அது பிறக்கிறது. அங்கிருந்து பார்த்தால் அது சரி,இங்கிருந்து பார்த்தால் இது சரி. உண்மையில் இரண்டுமே ஒன்று தான்.இதுதான் கோள சிந்தனை என்பது. எங்கு தொடங்கி எங்கு செல்கிறீர்கள் என்பதை பொறுத்தது. ஷிவா,விஷ்ணு இரண்டுமே வேறு, எனினும் இரண்டும் ஒன்று தான்.  

கே: அஷ்டவக்ர கீதையில்,நீங்கள் நூல்களைப் படித்துக்கொண்டே போகலாம், ஆனால் படித்த நூல்களை மறந்தால் தான் நீங்கள் விடுதலை அடைய முடியும்' என்று கூறுகிறதே! நூல்களைப் படிப்பதால் என்ன பயன்?


குருதேவ்: நீங்கள் பேருந்தில் ஏறவேண்டும், அதே சமயம் பேருந்தில்  இருந்து   இறங்கவும் வேண்டும். நீங்கள் என்னோடு, நான் பேருந்தில், இருந்து இறங்க 
வேண்டும் என்றால், பின் ஏன் ஏறவேண்டும்' என்று வாதம் செய்தால் எப்படி?
விவாதம் இங்கு செல்லுபடியாகாது. 

எனவே,நூல்கள் அனைத்தும் உங்கள் இயல்பை, இந்த பிரபஞ்சத்தின் இயல்பை, சிறு சிறு விஷயங்களில் சிக்கி நிற்கும் மனதின் இயல்பை புரியவைத்து, நமக்கு ஒரு பரந்த கண்நோட்டத்தை தருவதற்குத்தான். எனவே அறிவு என்பது,சலவை செய்யும் சோப்பு போன்றது. நீங்கள் உடலில் சோப்பு போட்டாலும்,சமயத்தில்   அதை கழுவத்தான் வேண்டும்,இல்லையா? அது போல், நான் விடுதலை   அடைய வேண்டும் என்ற எண்ணத்தோடு இருந்தால்,அந்த எண்ணமே மற்ற சிறு எண்ணங்களில் இருந்து உங்களை விலக்கி வைக்கிறது. ஆனால் அந்த  எண்ணத்தையே பிடித்துக்கொண்டு இருந்தால்,அதுவே பிரச்சனை ஆகிவிடும். அந்த எண்ணத்தையும் கைவிட்டு நீங்கள் விடுதலையாக வேண்டும்.

'எனக்கு விடுதலை வேண்டும்,விடுதலை வேண்டும்' என்றால் உங்களுக்கு விடுதலை கிடைக்காது.ஆனால் அந்த எண்ணம் மட்டும் இருந்தால், அது சிறிய   எண்ணங்களில் இருந்து உங்களை விடுவிக்கும்.பிறகு ஒரு நிலையில்,'நான் விடுதலை அடைய வேண்டும் என்றால் சரி, இல்லை என்றாலும் சரி' எனும்   போது அந்த நிமிடமே நீங்கள் விடுதலை அடைந்துவிட்டீர்கள்.

கே: மஹாளய அமாவாசையின் சிறப்பு என்ன?

குருதேவ்: உண்மையில் இந்த அமாவாசை பிரிந்த ஆன்மாக்களுக்கு அர்ப்பணிக்க ப்பட்டது. உடலைவிட்டு நீங்கள் பிரியும் போது, தேவர்கள் அல்லது தேவதைகள் மூலம் நீங்கள் வேறு உலகிற்கு வழி காட்டப்படுவீர்கள்.அவர்களின்  பெயர்கள் புருரவா,விஷ்வேதேவா அவர்கள் உங்களை ஒரு நிலையில் இருந்து  மற்றொரு நிலைக்கு வழிகாட்டுவார்கள். மஹாளய அமாவாசை தினத்தில் எல்லா பிரிந்த ஆன்மாக்களுக்கும் நன்றி கூறி,அவர்களுக்கு அமைதி வேண்டி அவர்களை நினைக்கும் நாள்.

பழங்கால வழிமுறையாக அவர்களின் குடும்பத்தார், சில எள் விதைகளையும், அரிசியையும் கையில் எடுத்து அவர்களின் மூதாதையர்களை நினைத்து, ' உங்களுக்கு சாந்தி உண்டாகட்டும்,என்று மூன்று முறை கூறி, அந்த எள்ளை   சிறிது நீரோடு கீழே விடுவர்.

இதன் முக்கியத்துவம், அந்த பிரிந்த ஆன்மாக்களிடம், உங்களுக்கு இன்னும் சில விருப்புகள் இருந்தால்,அவைகளை இந்த எள் போல் கீழே விட்டு விடுங்கள். நாங்கள பார்த்துக் கொள்கிறோம் நீங்கள் மகிழ்வோடு, நிம்மதியாக, திருப்தியாக இருங்கள். உங்கள் முன் மிகப்பெரிய பிரபஞ்சம் உள்ளது. இந்த பிரபஞ்சம் எல்லையில்லாதது எனவே முன்னே செல்லுங்கள், உங்களை பின்னோக்கி இழுப்பவற்றை கீழே விட்டு விடுங்கள்' இது தான் தர்ப்பணம்   ஆகும். 

தர்ப்பணம் என்பது பிரிந்து ஆன்மாக்களுக்கு திருப்தியும், பூரணமும் அளிப்பது. அது அவர்களை திருப்தியுடன் முன்னே செல்ல கூறுவதாகும். தண்ணீர்   அன்பின் சின்னமாகும்.ஒருவருக்கு தண்ணீர் கொடுப்பதென்றால், அன்பு   கொடுப்பது என்று அர்த்தம்.  

சமஸ்க்ரிதத்தில், அப் என்றால் நீர்,மற்றும் அன்பு என்று பொருள். சம்ஸ்க்ரிதத்தில் பிரியமானவர்களை 'அப்த' என்பர்.எனவே அவர்கள் நினைவாக, நீரை அன்பின்,உயிரின் சின்னமாக வழங்குகிறோம்.எனவே அது மஹாளாய அமாவாசை ஆகும்.இந்த நாளில் உங்கள் மூதாதையர்களை நினையுங்கள்.  

வேத பாரம்பர்யத்தில்,தாயின் பக்கம் மூன்று தலைமுறையும்,தந்தையின் பக்கம் மூன்று தலைமுறையும் பற்றி நினைக்க வேண்டும்.மற்றும் நண்பர்கள் உறவினர்கள், மேலும் அக்கரை சென்ற அனைவரையும் நினைக்க வேண்டும். அவர்களை திருப்தியாக இருக்கும்படி  கேட்டுக்கொள்ள வேண்டும். 

மக்கள் அவர்கள் நினைவாக தான தர்மங்களும்,அன்னதானமும் வழங்குவர். இது உலகில் உள்ள எல்லா கலாச்சாரத்திலும் உள்ளது. மெக்ஸிகோவில் இதைப்பார்க்க எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.மெக்ஸிகோவில் நவம்பர் 2ம்   தேதி,மக்கள் இதைக் கொண்டாடுகிறார்கள். அது போல் சீனாவிலும் கொண்டாடுகிறார்கள்.சீன முறையில், அவர்கள் மூதாதையர்களுக்கு என்று ஒரு தினம்.சிங்கப்பூரிலும் இவ்வாறு செய்கிறார்கள். சிங்கபூர்  ஒரு  சுத்தமான ஊர் என்றாலும்,வருடத்தில் ஒருநாள், சிலமணி நேரங்கள் அவர்கள் தெருவில்  இதை செய்வதால் தெருவே குப்பையாகி விடும். என்ன செய்வார்கள் தெரியுமா? அட்டைகளில் பெரிய பெரிய கார்களும், வீடுகளும் செய்து   தெருவில் வைத்து,அவர்களின் மூதாதையர்களை சென்று அடைவது போல் நினைத்து எரித்து விடுவர்.மேலும் உண்மை அல்லாத போலி நாணய   நோட்டுகளை எரித்து விடுவர்.

கிட்டத்தட்ட உலகம் முழுவதும், பழங்கால முறையில்,அனைவரும் இதை பின்பற்றுகிறார்கள். கிறிஸ்துவ முறையிலும்,'ஆல் செயின்ட்ஸ் டே' என்ற நாளில் மூதாதையர்களை வழிபடுவார்கள். இந்நாளில் அவர்கள் மயானம் சென்று,பிரிந்த ஆன்மாக்களுக்கு பிரார்த்தனை செய்வர்.இவ்வாறு செய்வதன் மூலம் உயிர் நிரந்தரமானதல்ல, மேலும் பலவருடங்களாக வாழ்ந்த இந்த  மக்கள் இப்போது சென்றுவிட்டனர். நாமும் இந்த உலகிற்கு வந்துள்ளோம்,ஒருநாள் நாமும் சென்றுவிடுவோம்  என்று உணர்த்துவதற்கே ஆகும்.எனவே அவர்களுக்கு நன்றி செலுத்தி   அவர்களுக்கு சாந்தி உண்டாக வேண்டும் என்பதே முக்கிய எண்ணம்.

இந்தியாவில் இந்த சடங்குகள் அனைத்தும் சமஸ்க்ரிதத்தில் உள்ளன அதனால் மக்களுக்கு புரிவதில்லை. பண்டிதர்களும் உங்களை அது செய்யுங்கள் இது செய்யுங்கள் என்று கூற நீங்களும் நம்பிக்கையோடு அதை செய்கிறீர்கள்.  

கே: நம் பெற்றோரின் மற்றும் மூதாதையரின் கர்மவினைகள் எப்படி நம்மை பாதிக்கிறது? நாமும் அவர்களின் வினைகளால் தண்டிக்கப்படுவோமா?

குருதேவ்: உங்கள் மூதாதையர்கள் உங்களுக்கு ஒரு வீடு விட்டு சென்றால் அது உங்களுக்கு ஒரு வரம் இல்லையா? அவர்கள் பணம் சம்பாதித்து, ஒரு வீடு கட்டி அதை உங்களுக்கு விட்டு செல்கிறார்கள்.நீங்கள் இந்த நல் வினைகளை அனுபவிக்கிறீர்கள்,இல்லையா? அவர்கள் வங்கியில் பெரும் கடன் வைத்துவிட்டு சென்று, நீங்கள் திருப்பித் தரவேண்டும். அதுவும் உங்கள் கர்மா  தான்? எனவே அது உங்களை பாதிக்கிறது. உங்கள் பெற்றோர் மட்டுமல்ல உங்கள் சகவாசமும்,உங்களை பாதிக்கிறது. நீங்கள் மிகவும் சோர்ந்து  மனத்தளர்ச்சியோடு இருக்கும் மக்கள் இடையே இருந்தால் நீங்களும் மனச் சோர்வோடு இருப்பீர்கள். நீங்கள் மகிழ்ச்சியும், ஆன்மீகமும் நிறைந்த மக்கள்   மத்தியில் இருந்தால் உங்கள் கர்மா முன்னேற்றமடையும்.  

இவ்வுலகில் நல்வினை, தீவினையில் இருந்து தப்பிக்கவே முடியாது. நாம் இதை சுமந்து தான் ஆகவேண்டும். ஏனெனில் நாம் சில சமயம் உடல்நிலை சரியில்லாத மக்களிடையே இருக்கும் சூழ்நிலை உருவாகும். அப்போது நான் அவர்கள் அருகில் இருக்கமாட்டேன் என்று கூறமுடியாது. எல்லோரும் அதை கூறினால் மருத்துவ மனைகளும்,நோயாளிகளும் என்ன ஆவது?  

எனவே இவ்வுலகில் நாம் அனைவருடனும் இருக்கவேண்டும். எனவே தான் நாம் சேவை மனப்பான்மையோடும்,ஞானத்தோடும் இருக்கவேண்டும்.அவை  கவசம் போல் காக்கிறது.'ஓம் நமசிவாய ஜபிப்பது நமக்கு ஒரு கவசம் போல்   நம்மை காக்கும். நம்மை தீய வினைகளில் இருந்தும்,மற்ற நல்ல வினைகள் அல்லாத வற்றிலிருந்தும் நம்மை காக்கிறது.அதற்காக 'ஓம் நம சிவாய' ஜபிக்க வேண்டும் என்பதல்ல.அப்படி செய்தால் நம் மூளை சோர்ந்து போய் விடும்.  

ஒவ்வொரு நாளும் சில மணித்துளிகள், நாம் பல் துலக்குவது போல் செய்யலாம். நீங்கள் ஒவ்வொரு மணிக்கு ஒரு தரமுமா பல் துலக்குவீர்கள்? அப்படி செய்தால் பிறகு பல்லே இருக்காது எல்லாம் விழுந்து விடும். துலக்கவே இல்லை என்றாலும் அதுவும் நல்லதல்ல. நாம் பல் சுகாதாரம் கடைபிடிப்பது   போல், மன சுகாதாரமும் வேண்டும். 

சில நிமிட ஜபம், சில நிமிட தியானம் இவை பலனளிக்கும்.நாம் தினமும் சில நிமிடங்கள் தான் உடலை சுத்தம் செய்ய குளிக்கிறோம் அல்லவா? மேலும் அனைவரும், நீரை கவனமாக உபயோகியுங்கள். உலகெங்கும் பெருமளவில் நீர் தட்டுப்பாடு பெருகிவருகிறது.எல்லா நீர் ஏரிகளும் வற்றிவிட்டன. இந்த வருடம் அவ்வளவு தண்ணீர் இல்லை. எனவே நாம் அனைவரும் தண்ணீரை சேமிக்க வேண்டும். எவ்வளவு தேவையோ அவ்வளவு மட்டுமே உபயோகியுங்கள்.