அகந்தைக்கு சிறந்த மாற்று மருந்து!!!


3 - அக்டோபர் - 2012 ­- பெங்களூரு


கே: உடைமை மனப்பான்மையும் அகந்தையும் தொடர்புடையனவா? இவ்விரண்டையும் விட்டு விலகுவது எவ்வாறு?

குருதேவ்: ஆம். அகந்தை, உடைமை மனப்போக்கு,பொறாமை, கோபம், பேராசை அனைத்துமே ஒன்றோடொன்று தொடர்புடையவை. இவை அனைத்தும் அகந்தையிலிருந்து எழுகின்றன. எவ்வாறு அகந்தையிலிருந்து விடு படுவது? இது பெரிய பிரச்சினை. உண்மையில் இதற்கான தீர்வு மிக எளியது. ஒரு நாள் கிறுக்குத்தனமாக இருக்க முற்படுங்கள். ஒரே ஒரு நாள் கிறுக்குத்தனமாக இருப்பது போன்று நடியுங்கள்.அது போதும்.

அகந்தை என்பது மற்றவர்களைக் கவருவதற்கான முயற்சி.அகந்தையைக் காட்ட இன்னொருவர் அவசியம். நீங்கள் தனியாக ஒரு இடத்தில் இருக்கும் போது அகந்தை என்பதே இருக்க முடியாது. இன்னொருவர் இருக்கும் போது தான் அகந்தை எழுகிறது. ஒரு சிறு குழந்தையைப் போல இயல்பாக ஒட்டுணர்வுடன் இருப்பது தான் அகந்தைக்கு சரியான மாற்று மருந்து. இயல்பு நிலையில் மற்றவர்களிடம் சார்புத்தன்மையுடனும், ஒட்டுணர்வுடனும் , இருக்கும் போது அகந்தை நீடித்திருக்க முடியாது. இந்த இயல்புணர்வு உங்களை மாற்றி விடும். அப்படியும் " நான்" என்கிற எண்ணம் எழுந்தால் 

அந்த அகந்தை விரிவாக்கப்பட வேண்டும்ஒன்று தெள்ளத்தெளிவான களங்கமில்லா அகந்தை. மற்றொன்று விரிவாக்கப்பட்ட அகந்தை. இரண்டுமே ஒன்றைத்தான் குறிக்கிறது. விரிவாக்கப்பட்ட அகந்தை உலகமே தன்னுடையது; ஒவ்வொருவரும் என்னையே சார்ந்திருக்கிறார்கள், நான் தான் எல்லாமே என்பதைக் குறிப்பதாகும். அதுவும் நல்லது தான். ஆகவே அகந்தையை விசை ஏற்றி மிகப்பெரிதாக்குங்கள்; அல்லது களங்கமில்லா எளிமையான செயல்பாடுகள் மூலம் தெள்ளத் தெளிவானதாக்குங்கள்.

கே: குருதேவ்! நான் தற்போது மறக்கவோ மன்னிக்கவோ முடியாத ஒரு சூழ்நிலையில் இருக்கிறேன். என்ன செய்யவேண்டும் என்று தயவு செய்து வழிநடத்துங்கள்.


குருதேவ்: மரணத்தை நினைத்துக் கொண்டு இப்போதே இறப்பதை போல் எண்ணிக் கொள்ளுங்கள். இப்போதுள்ள சூழலை நீங்கள் இருக்கப் பிடித்து வைத்துக் கொண்டாலும் உங்கள் காலம் முடியப் போகிறது. இவ்வுலகை விட்டுச் செல்லப் போகிறீர்கள். இந்த நினைவுடனேயே செல்லப் போகிறீர்களா? விழித்து எழுங்கள்.!

வாழ்கை மிகக் குறுகியது. ஒவ்வொருவரும் கந்தலான பொம்மைகள். தனித்தன்மையான மனம் என்பது கிடையாது. ஏதோ ஒரு சக்தி ஒவ்வொருவரையும் உந்தித் தள்ளுகிறது. அந்த பரமக் காரணக் காரணி தான் எல்லாக் காரணங்களுக்கும் காரணம். சிவதத்துவமானது , வேறுபாடான விஷயங்களை வெவ்வேறு மனிதர்களின் மனதில் விதைத்து விளையாடுகிறது. இந்த அத்வைத ஞானத்தைப் புரிந்து கொள்ளுங்கள், உணர்ந்து கொள்ளுங்கள்.

நாம் அனைவரும் ஒரே விதமான பொருட்கூருகளாலேயே உருவாக்கப்பட்டிருக்கிறோம். சிறு சிறு மன உணர்வுகள் உள்ளன, அவை யாவும் நமது கர்ம வினையின் அடிப்படையிலான பெரும் மனத்தின் தாக்கம் பெறுகின்றன. ஆகவே அதன் படி வெவ்வேறு மனிதர்கள் வெவ்வேறு வகையாக செயல் படுகின்றனர்.

சில சமயம், ஒருவருக்கும் நாம் எந்த தீங்கும் செய்யாத போதும் அவர்கள் நமது விரோதிகள் ஆகிவிடுவதைக் கவனித்திருக்கிறீர்களா? எத்தனை பேர் இதை அனுபவித்திருக்கிறீர்கள்? யாருக்கு நீங்கள் மிக நன்மைகள் செய்திருக்கிறீர்களோ அவர்களே கூட உங்களுக்கு விரோதியாகி விடுவார்கள். இவர் என் நண்பர் இவருக்காக நான் உழைத்திருக்கிறேன் ஆனால் இவர் என் விரோதியாகி விட்டார் என்று ஆச்சர்யப்பட்டிருக்கிறீர்கள். அல்லவா?

அது போலவே, சிலருக்கு எதுவும் தனிப்பட்ட சிறப்புடன் எதுவும் செய்யாத போதும் அவர்கள் உங்கள் நண்பராகி விடுகிறார்கள். இப்படியும் நடந்திருக்கின்றது அல்லவா? ரயிலில் சந்திக்கும் ஒருவர் கூட மனமுவந்து பல உதவிகள் செய்கிறார்.ஆகவே, நட்பும் விரோதமும் கர்ம பலனின் அடிப்படையில் நிகழும் விசித்திரமான ஒன்றாகும். எனவே நண்பர்களும் விரோதிகளும் சமமானவர்களே. ஏதோ ஒரு சக்தி அவர்களை இயக்குகிறது. இதை உணர்ந்து இளைப்பாறுங்கள். அது போலவே நீங்கள் எத்தனையோ நல்ல காரியங்கள்  செய்தாலும் உங்களை சிலர் விமரிசிப்பார்கள். மிக மோசமான செயல்களை செய்பவர்களைப் புகழுவோரும் உண்டு. இது மிக விநோதமானது தான். ஆகவே அனைத்தையும் விட்டு விடுங்கள். உங்களை தளர்த்திக் கொண்டு இளைப்பாறுங்கள்.

கே:  குருதேவ், வாழ்க்கையில் ஒரு குறிக்கோளைக் கொண்டிருப்பது அவசியமா அல்லது வருவதை ஏற்று அப்படியே செல்ல வேண்டுமா? 

குருதேவ்:  நீங்கள் வாழ்க்கையில் என்ன செய்ய விரும்புகின்றீர்கள் என்று உங்களுக்கென்று தனிப்பட்ட ஒரு இலட்சியம்  இருக்கவேண்டும். அப்படி ஒரு இலக்கு இருக்கும் போது வாழ்க்கை ஆற்றின் நீரோட்டம் போல் சீராக இருக்கும். இலக்கு அல்லது நோக்கம் இல்லாத போது வயலில் எங்கும் பரவிக்கிடக்கும் நீர் போல் இருக்கும். நம்மிடம் ஒரு கடமையுணர்ச்சியை ஏற்படுத்தவே இலட்சியம் அவசியமாகிறது. ஒரு பொறுப்பை ஏற்றுக் கொள்ள இலட்சியம் அவசியம். இலட்சியம் என்பது என்ன? மிகச் சிறந்ததை அடைவது, ஒரு யோகியாக மாறி இந்த உலகிற்கு  சேவை செய்வதே சிறந்த இலட்சியம். உலகிற்கு தொண்டு செய்வதே உண்மையான பூஜை. (இறை வழிபாடு)

கே: மக்களையும் சூழ்நிலையையும் அப்படியே ஏற்றுக்கொள்வதென்பது சில சமயங்களில் முடிகின்றது. ஆனால் சில சந்தர்ப்பங்களில் என்னால் அப்படியே ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஏனென்று தெரியவில்லை. எல்லா சமயங்களிலும் பிறரையும் சூழ்நிலையையும் அப்படியே ஏற்றுக்கொள்வது எப்படி என்று எனக்குத் தெரியவில்லை.

குருதேவ்: அது அவசியமில்லை. எல்லா நேரங்களிலும் நீங்கள் அப்படி செய்ய வேண்டும் என்பதில்லை. அவர்களை ஏற்றுக்கொள்ளாதீர்கள். போராடுங்கள். அப்பாடா எத்தனை ஆறுதல்?  இல்லையா? போராடுவதற்கு உங்களுக்கு அனுமதி கிடைத்துவிட்டது. நான் சொல்கிறேன்  நீங்கள் சென்று போராடுங்கள்.  

உங்களால் முடியாத எதையும் நீங்கள் செய்ய வேண்டிய அவசியமில்லை. உங்களால் இயன்றதை மட்டுமே செய்யுங்கள். பிறரை அப்படியே ஏற்றுக்கொள்வதென்பது அத்தனை கடினமாக இருந்தால் ஏற்றுக்கொள்ள வேண்டாம். ஆனால் அது இயல்பாக இலகுவாக இருக்கும் போது கட்டாயம் ஏற்றுக்கொள்ளுங்கள். 

கே: பொதுவாக நற்செயல்களை செய்பவர்கள் துன்பத்தில் வருத்தமாக இருக்கின்றாகள். தீயவற்றை செய்பவர்கள் மிகவும் திருப்தியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கின்றார்கள்.  உண்மையில் அவர்கள் நல்ல  நிலையில் இருக்கின்றார்கள். பிறரால் போற்றப்படுகிறார்கள். இது ஏன்? எப்படி?

குருதேவ்: நான் சோகமாக தெரிகின்றேனா? இங்கே இருக்கும் சுவாமிஜி வருத்தமாகத்  தோற்றம் அளிக்கின்றாரா? பாருங்கள் சுவாமிஜி மகிழ்ச்சியாக சிரித்துக் கொண்டிருக்கின்றார். உங்களைச் சுற்றிப் பாருங்கள். இங்குள்ள பொது மக்கள் எல்லாம் உங்களுக்கு சோகமாகத் தெரிகின்றார்களா? சமையலறை, வரவேற்பறை என்று எங்கும் பாருங்கள். இங்குள்ள அனைவரும் மகிழ்ச்சியாக தோன்றவில்லை? ஆம்.

நீங்கள் கேளிக்கையைத் தொடர்ந்து சென்றால் கவலை உங்களைத் தொடர்ந்து வரும். நீங்கள் ஞானத்தைத் தொடர்ந்து சென்றால் ஆனந்தம் உங்களைத் தொடர்ந்து வரும்.

கே: நான் மிகவும் பலகீனமான மனோபலம் கொண்டிருக்கின்றேன். எவ்வளவு முயற்சி செய்தாலும் பத்தில் எட்டு முறை நான் தோல்வியடைகிறேன். என் மனஉறுதியை வளர்த்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும்?

குருதேவ்: முதலாவதாக, நீங்கள் பலகீனமான மனஉறுதி கொண்டவர் என்று உங்களுக்கு நீங்களே முத்திரை குத்திக்கொண்டிருக்கின்றீர்கள். அதுவே கதையை முடித்துவிடும். அப்படி நீங்களே முத்திரை குத்திக்கொள்ளக்கூடாது. சின்ன சின்ன விஷயங்களில் பயிற்சி செய்யுங்கள். குறுகிய கால வரையறை வைத்து சங்கல்பம் செய்து கொள்ளுங்கள். உதாரணமாக, நான் பத்து நாட்களுக்கு தொடர்ந்து தவறாமல் உடற்பயிற்சி செய்வேன். பத்து நாட்களுக்கு நான் எந்த தீய வார்த்தைகளும் பேச மாட்டேன் என்பது போன்ற சங்கல்பங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். இவற்றை உங்களால் செய்ய முடிந்தால், நீண்ட கால சங்கல்பங்களையும் உங்களால் நிறைவேற்ற முடியும்.

கே: நான் நீண்ட காலமாக தியானப் பயிற்சி செய்து வருகின்றேன். சமீபத்தில் தியானத்தில் நீங்கள் தோன்றி எனக்கு பிரசாதம் தந்தீர்கள். என் கண்கள் மூடியிருந்தாலும் அனைத்தையும்  என்னால் பார்க்க முடிந்தது. அது நீங்கள் தானா அல்லது உங்கள் வடிவத்தில் வந்த கடவுளா?

குருதேவ்: ஒரு சாதகருக்கு வாழ்க்கையில் பல விதமான அனுபவங்கள் உண்டாகும். அவற்றைப் பற்றி எல்லாம் அதிக ஆராய்ச்சி செய்யாமல் போய்க்கொண்டே இருங்கள்.  நேற்றைய அனுபவம் நேற்றைக்கு. இன்றைய அனுபவம் இன்றைக்கு. நாளை புது அனுபவம் ஏற்படலாம். இனிமையான அனுபவமோ அல்லது இனிமையல்லாத அனுபவமோ எதுவாக இருந்தாலும் மேற்கொண்டு செல்லுங்கள்.