வாழ்கையின் மர்மம்


25 அக்டோபர் 2012  பெங்களூர், இந்தியா

கேள்வி: குருதேவ், வாழ்கையின் மர்மத்தை வாழ்தல் என்ற தலைப்பிட்ட உங்கள் நூலில், ‘இந்த உலகத்தில் வேலை செய்ய வேண்டும், ஆனால் அது உன் தலையினுள் புகுந்து கொள்ள அனுமதிக்காதே’ என்று கூறியிருக்கிறீர்கள். தயவுசெய்து இதை மறுபடி விளக்க முடியுமா? பற்றில்லாமல் இருப்பதும் இதுவும் ஒன்றா?

குருதேவ்: மிகச் சரியாக இதை தான் இப்போது தியானத்தில் செய்தோம். நாம் கண்கள் திறக்கும்போது காட்சியைக் காண்கிறோம், நம் கண்களையும் மனதையும் மூடிக் கொண்டால், பின்னர் வேறொரு உலகம். இதை கவனித்தீர்களா?

எனவே தியானம் தான் வழி.




இப்போது நீங்கள் அமர்ந்துகொண்டு நினைக்கிறீர்கள், ‘என் மருமகள் இப்படிச் செய்தாள். என் மகன் என்னை மதிக்கவில்லை...’ இப்படியெல்லாம் இந்த முழு இரவு பின்னர் முழு காலை அதன் பின் முழு பகல் என்று நினைத்துக் கொண்டே இருக்கலாம் அவையெல்லாம் உங்களை பாதிக்கும். அவர்கள் சொன்னது சொன்னவாறு இருக்கட்டும். நீங்கள் உங்கள் கண்களை மூடும்போது உங்களுக்கான வெளியில் நீங்கள் இருங்கள். வெளி உலகம் உங்களை பாதிக்க விடாதீர்கள்.
இது கடினம்தான், எனக்குத் தெரியும், எளிதான விஷயமில்லை. ஆனால், அதுதான் நாம் போக வேண்டிய திசை.

இரண்டு உலகங்கள் உள்ளன. உண்மை என்பது அந்த இரண்டு உலகங்களுக்கு இடையே இருக்கிறது. ஒன்று, மனோராஜ்யம் எனப்படும் உங்கள் சொந்த மனதின் சாம்ராஜ்யம். மற்றது, சமாஜ் எனப்படும் வெளி உலக சூழல். சமாஜத்திற்கும் மனோராஜ்ஜியத்திற்கும் இடையே இருப்பதே உண்மை.

கேள்வி: குருதேவ், தியானத்தில் அமரும்போது, சில எண்ணங்கள் மேகத்தைப் போல் வந்து அப்படியே கடந்து சென்று விடுகிறது. ஆனால் சில எண்ணங்கள் நம்மை நீண்ட பயணத்திற்கு அழைத்துச் செல்கிறது. திடீரென்று நீண்ட பயனத்திலிருப்பதை உணர்கிறேன். எந்த இயல் அப்படி நீண்ட பயணத்திற்கு தள்ளிவிடுகிறது? ஏன் அவை மேகத்தைப் போல கடந்து செல்வதில்லை?

குருதேவ்: அவை அப்படித்தான். சில எண்ணங்கள் இப்படி சில அப்படி. சில உங்களை பாதிக்கின்றன சில பாதிப்பதில்லை. அதனால்தான், தியானத்தின் போது, நம் மனதை மையத்திற்கு கொண்டுவர பல நுட்பங்களும் பல வழிகளும் இருக்கின்றன.

சமீபத்திய பூஜைகளின் போது, ஏன் பல பல இசை கருவிகள் உபயோகப்படுத்தப்பட்டது? மேளம், நாதஸ்வரம், தாள வாத்தியம் போன்றவை ஏன் வாசிக்கப்பட்டது? மந்திர கோஷங்கள்,மத்தளம் போன்ற பல ஓசைகள். வெளியே நிறைய ஓசைகள் எழுப்பி உள்ளே மனம் எண்ணங்களை யோசிப்பதிலிருந்து நிறுத்தப் படுகிறது.

இப்படிப் பல வழிகள். சில நுட்பமான திறன்களைக் கொண்டு மனதை மையத்திற்கு கொண்டு வரவேண்டும். மனம் என்றால் அப்படிதான் இருக்கும். புகார் செய்யக் கூடாது. சில நேரங்களில் அற்பமான, முக்கியத்துவம் அல்லாத விஷயங்களில் ஒட்டிக் கொண்டு இருக்கும். அது அப்படித்தான்.அதனால் தான் மனம் சில நேரங்களில் ஆழம் காண முடியாததாய் இருக்கிறது.

பகவத் கீதையில், அர்ஜுனர் கிருஷ்ணரிடம் கூறுகிறார், ‘இந்த மனம் ஒரு பெரும்பூதம். என்னால் அதை கட்டுப்படுத்த முடியவில்லை, அது நான் சொல்வதை கேட்பதில்லை.’

ஸ்ரீ கிருஷ்ணர் பதில் கூறுகிறார், ‘நிச்சயமாய், நீ சொல்வதை நான் ஆமோதிக்கிறேன்.’ ஆனால், கடைசியில் அதற்கு ஒரு வழி இருப்பதாக ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகிறார்.

கேள்வி: உங்கள் அசீர்வதங்களை பெறக் கூடிய கொள்ளளவை நான் அதிகரிப்பது எப்படி? என்னுடைய கோப்பையை பெரிதாக்குவது எப்படி?

குருதேவ்: மேல் நிலை பயிற்சியில் (advanced course), ஷட் சம்பத் (ஆறு செல்வங்கள்) பற்றி கேட்டிருப்பீர்கள்.

·        சாம (மனதில் சாந்தம்)
·        தாம (புலன்களை கட்டுப்பாடாய் வைத்திருத்தல்)
·        உபரதி (திருப்தி அல்லது நிறைவு நிலை)
·        திதிக்ஷா (பொறுமை அல்லது பிரச்சினைகளை கண்டு அகலாமல் விடாது எதிர்கொல்வது)
·        ஷ்ரத்தா (கடவுள் நம்பிக்கை)
·        சமாதானா (ஒருமுகப் பட்ட மனநிலை)

வாழ்க்கையில் இந்த ஆறு விஷயங்களில் உங்கள் கவனத்தை குவித்து அதிகரித்தால்  போதும். இந்த ஆறு தன்மைகள் அதிகரித்தால், அசீர்வாதங்களை பெறும் திறன் அதிகரிக்கும். ஞானத்தின் நான்கு தூண்களில், மூன்றாவது தூண், இந்த ஆறு விஷயங்கள் கொண்டது. அதைத்தான் நாம் அதிகரிக்க வேண்டும். மேலும், நாம் சேவைகள் செய்ய வேண்டும், ஆன்மீக பயிற்சிகளை விடாமல் செய்துவர வேண்டும்.

கேள்வி: குருதேவ், நம் நாட்டின் புராதன ஞான நூல்கள், ‘இதில் எனக்குக் கிடைப்பது என்ன’ என்ற எண்ணத்தைத் தாண்டி நம்மை மேலே கொண்டு வர உதவுவதாய் இருந்திருக்க வேண்டுமல்லவா? அப்படி இருக்கையில், ஒவ்வொரு நூலிலும் ‘பலஸ்ருதி’’ எனப்படும் ‘இந்த நூலின் பயன்’ என்கிற பகுதி மிக விரிவாய் கொடுக்கப்பட்டிருப்பது ஏன்?

குருதேவ்: உங்களை அதை பின்பற்றத் தூண்டுவதற்காகத்தான். (சிரிப்பு). அது ஒரு விற்பனை நுட்பம். ’பலனில்லாமல் யாரும் எதையும் செய்ய மாட்டார்கள்’ என்ற பழ மொழி இருப்பது உங்களுக்குத் தெரியும். மந்தமான ஒருவர் தனக்குத் தகுந்த பலனில்லாமல் எதையும் செய்ய மாட்டார். நம் புராதன முனிவர்களுக்கு இது நன்கு தெரியும் என்பதால் அவர்கள் தங்கள் 

ஒவ்வொரு நூலிலும், இதைச் செய்தால் இன்னின்ன பலன்கள் கிட்டும் என்று விரிவாக எழுதி வைத்து விட்டனர். அதனால் தான் இது அபரா என்று அழைக்கப் படுகிறது. எதில் நிச்சயமாய் பலன் உண்டோ அதை அபரா வித்யா என்பார்கள். இதைவிட சூக்ஷுமமானது பரா-பரா. இறுதியில் பரா வித்யா – இதில் எதுவுமே பொருட்டல்ல.

பரா வித்யாவை அடைவதற்கு வழி இல்லை.  

கேள்வி: குருதேவ், ரஜஸ் தமஸ் ஆகியவற்றை சத்வம் வெல்வதே நவராத்திரி என்று கேள்விப் பட்டிருக்கிறோம். ஆனால் நம் வாழ்க்கைக்கு மூன்று குணங்களுமே சரி சமமாய் முக்கியம் அல்லவா? எப்படி ஒன்றை விட ஒன்றை மேலானதாய்ச் சொல்ல முடியும்?

குருதேவ்: இல்லை, இது எப்போதும் இப்படித்தான். மூன்றில் ஏதோ ஒன்று விஞ்சும் அலது ஆதிக்கம் செலுத்தும்.

எல்லோரிடமும் சத்வம் நிச்சயமாய் இருக்கும், ரஜஸ் மற்றும் தமஸ் கூட இருக்கும். இந்த மூன்று குணங்களும் எப்போதும் சேர்ந்தே இருக்கும். ஆனால் இவற்றில் எது ஆதிக்கம் என்பதைப் பொறுத்தே வித்தியாசம் ஏற்படுகிறது.

தமோ குணம் ஆதிக்கமடைந்தால் துயரம்.
ரஜோ குணம் ஆதிக்கமடைந்தால் முரண்பாடு / பிரிவினை.
சத்வ குணம் ஆதிக்கமடைந்தால் விழிப்புணர்வு, ஞானம் மற்றும் ஆனந்தம். இவற்றில் எது ஆதிக்கமாய் இருக்கிறது என்பதை கவனிக்க வேண்டும். ஏனென்றால் அதைப்பொறுத்தே அந்த நேரத்தின் தன்மை இருக்கும்.

கேள்வி: அன்பு குருதேவ், எதை வேண்டுமானாலும் மாற்றலாம், விதியைக் கூட மாற்றலாம் என்று நேற்று நீங்கள் கூறினீர்கள். என் வாழ்க்கையில் என்னால் முடிந்த அளவு எவ்வளவோ முயன்றும் விதிப் படிதான் நடப்பதாக உணர்கிறேன். ஏன்?

குருதேவ்: பாருங்கள், வாழ்கை இன்ப துன்பங்கள் கலந்தது. உங்கள் வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயங்கள் மீது உங்கள் கவனத்தை வைத்திருங்கள். பின்னர் அதுவே வளரும். நீங்கள் ஞானத்தில் இருந்தால் கூட உங்கள் விதி மாறும்.