காமத்தையும், ஆசைகளையும் வெல்வது….


8 அக்டோபர் 2012 பெங்களூர், இந்தியா


கே: அன்பு குருதேவ், சில நேரங்களில் என்னைச் சுற்றி இருப்பவர்களின் எதிர்பார்ப்புகளினாலும், என்னிடமிருந்து நானே வைத்திருக்கும் எதிர்பார்ப்புகளினாலும் என்னால் இயல்பாக இருக்க முடிவதில்லை. நான் இயல்பாக இருக்க என்ன செய்ய வேண்டும்?

குருதேவ்: சில நேரங்களில் மட்டுமே, எப்போதும் இல்லை, அல்லவா? எப்போதும் என்றால் நான் உங்களுக்கு ஒரு தீர்வு சொல்கிறேன். சில நேரங்களில் மட்டும் என்றால் பரவாயில்லை. மெய் ஞானம் வளர வளர, உலகத்தின் கனவு போன்ற இயல்பை உணர உணர – எல்லாமே ஒரு கனவு போல இருப்பது, எல்லாமே மாறிக்கொண்டேயிருப்பது, ஆகியவற்றை உணர உணர - நிகழ்வுகள் உங்களை பாதிப்பது குறைந்துகொண்டே போகிறது.
நிகழ்வுகள் உங்களைத் தொடாமல் இருக்க ஒரே வழி, எல்லாம் கடந்து போகும் கனவு என்பதைப் பார்ப்பது மட்டுமே.

கே: அன்பு குருதேவ், சுய விசாரத்திற்கும் நம்மை நாமே எடை போடுவதற்கும் வித்தியாசம் என்ன? சில நேரங்களில் நீங்கள் எடைபோடுதலை நிறுத்துங்கள் என்கிறீர்கள், தயவு செய்து விளக்குங்களேன்.

குருதேவ்: நீங்கள் நடுவிலே உள்ள பாதையை பின்பற்ற வேண்டும்.தங்கள் செயல்களை எப்போதும் ஞாயாயப்படுதிக் கொண்டு இருக்கும் சிலர் இருக்கிறார்கள் மற்றும் சிலர் தங்களைத் தாங்களே எப்போதும் குறை கூறிக்கொண்டு இருப்பார்கள். இரண்டுமே நடுநிலையிலிருந்து தடுமாற்றத்தை ஏற்படுத்தும்.

உங்கள் செயல்களை கவனித்து அதை எப்படி மேம்படுத்துவது என்று ஆராய்ந்து அதே நேரத்தில் முன்னே இருப்பதையும் பார்த்தவாறு இருக்கக்கூடிய நடு பாதையை தேர்தெடுக்க வேண்டும். என்ன செய்ய வேண்டியிருக்கிறது என்று பார்த்து, மேலே செல்லுங்கள், நடந்ததை விட்டுவிடுங்கள். எப்போதும் நடந்ததை ஆராய்ந்து கொண்டே இருக்காதீர்கள்.

நடந்ததை இந்த அளவே பார்க்க வேண்டும். (சிறியது என்பதை கைகளில் காண்பிக்கிறார்)
பாருங்கள், கார்களில் இருப்பதை போல முன்புற கண்ணாடி பெரியது, ஆனால் பின்னால் இருப்பதை காட்டும் கண்ணாடி சிறியது. ஆனால், பின்னால் இருப்பதைக் காட்டும் கண்ணாடி பெரிதாகவும், முன்பக்க கண்ணாடி சிறியதாகவும் இருந்தால் எப்படி இருக்கும் என்பதை கற்பனை செய்து பாருங்கள். இதுதான் உங்கள் காரின் நிலைமை. இப்போது முன்புறத்தின் பாதியை அல்லது அதற்கு மேலேயும் பின்னால் இருப்பதைக் காட்டும் கண்ணாடியே ஆக்ரமித்துக் கொண்டிருக்கிறது. அதனால் நீங்கள் பின்னாலேயே பார்த்துக் கொண்டிருக்க நேரிடுகிறது. அது சரியில்லை.
நீங்கள் நடந்ததை கொஞ்சம் பார்த்துவிட்டு அதிகமாக முன்புறம் பார்க்க வேண்டும்.

இது சரியான உதாரணம். காரும், அதன் முன்புற கண்ணாடி மற்றும் பின்னால் இருப்பதைக் காட்டும் கண்ணாடி ஆகியவற்றை நினைத்துப் பாருங்கள். உங்களுக்குக் கொஞ்சம் தான் பின்பக்க காட்சி தேவை.

கே: குருதேவ், அறிவு பூர்வமாக பார்க்கையில் பற்றற்ற நிலை, சுயநலமின்மை ஆகியவை புரிகிறது, ஆனால் செயல்முறையில் அதை நடைமுறைபடுத்த இயலவில்லை. நான் என்ன செய்வது?

குருதேவ்: வாழ்கை உங்களுக்கு அந்த பாடத்தைக் கற்றுத் தரும். மெய்ஞ்ஞானம் இன்றி, ஏதொவோன்றின் மீது மிகுந்த பற்று வைக்கும்போது, அது வலியைத் தருகிறது.

கே: அன்பு குருதேவ், எங்களில் சிலர் வாழும் கலைக்கு இப்போது தான் வந்தோம், பலர் வெகு நாட்களுக்கு முன்பேயே வந்து விட்டனர். இதுவும் முன் வினையின் காரணத்தினாலா? உங்களை என் வாழ்க்கையில் முதலிலேயே சந்தித்திருந்தால் எவ்வளவோ துயரங்கள் இல்லாமல் போயிருக்கும்.

குருதேவ்: நான் மறுபடி சொல்கிறேன் – பின்னால் இருப்பதைக் காட்டும் கண்ணாடியை அதிகம் பார்த்துக் கொண்டிருக்காதீர்கள்.

கே: அன்பு குருதேவ், ஆன்மீகத்தை நாடுவோரின் இலக்கு என்னவாக இருக்க வேண்டும். அல்லது இயல்பாய் இருந்து, இயற்கையாக தன்னால் நடக்கட்டும் என்றிருப்பதா?

குருதேவ்: ஆம், அதுதான், இயல்பாய் அப்படியே இருங்கள்! நீங்கள் சரியான இடத்தில் இருக்கிறீர்கள், அப்படியே இயல்பாய் இருந்து, எப்படி நடக்கிறது என்று பார்த்து வாருங்கள்.

கே: குருதேவ், அதி தீவிரமான எண்ணங்கள், காமம் மற்றும் ஆசைகள் இவற்றை வெல்வதற்கு எளிதான வழி என்ன?

குருதேவ்: இடைவிடாது ஏதாவதொரு வேலையில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள்.
உங்கள் ஆழ்ந்த ஆசைகள் பெரிதான காரணங்களுக்காக இருக்கட்டும். ஏதாவதொன்றை உருவாக்குவதிலோ ஏற்படுதுவதிலோ உங்கள் ஆழ்ந்த ஆசைகள் இருக்கட்டும்.

ஞானத்தையும் தர்மத்தையும் பரப்புவதில் இடைவிடாமல் ஈடுபடுங்கள். எப்படி மக்களிடம் எடுத்துச் செல்வது, வாழ்க்கையில் நற்காரியங்கள் எப்படிச் செய்வது என்று இரவு பகலாக யோசனை செய்யுங்கள். அல்லது கட்டுரை எழுதுங்கள், இசை ஆக்கம் செய்யுங்கள், பாடல் எழுதுங்கள். அப்படி இடைவிடாமல் உழைக்கும் போது உங்கள் அதி தீவிர எண்ணங்கள் உங்களை தொந்திரவு செய்யாமல் இருப்பதைக் காணலாம்.

குறிப்பாக இளைஞர்கள் இடைவிடாது உழைக்க வேண்டும். காலையில் எழுந்ததிலிருந்து இரவு உறங்கும் வரையில் தங்களைத் தங்களே பல நற்காரியங்களில் ஈடுபடுத்தி உழைக்கும் போது எதுவும் உங்களை பாதிக்காது.

அப்படித்தான் நாம் இருந்தோம்; இருபதிலிருந்து இருபத்தி ஐந்து வரை, இடைவிடாது ஏதாவது செய்துகொண்டிருந்தோம். காலை ஆறு மணியிலிருந்து இரவு ஒன்று அல்லது இரண்டு மணிவரை ஓடிக்கொண்டேயிருப்போம்.

குறிப்பாக ஹார்மோன்கள் உங்களை தொந்திரவு செய்யும் பருவத்தில், நீங்களாகவே வேலைகளை எடுத்துக்கொண்டு இடைவிடாது உழைத்துக் கொண்டே இருங்கள். அதிதீவிர எண்ணங்கள், காமம் மற்றும் எதையும் நீங்கள் வெல்லலாம்.

கே: குருதேவ், பதின் வயதினர் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்த ஊக்கமாய் இருக்கிறார்கள். இதை எப்படி மாற்றுவது?

குருதேவ்: இது மிக மிக அபாயமான ஒன்று என்பதை அவர்களுக்கு சொல்லுங்கள். நண்பர்களுடன் சேர்ந்து விருந்தில் குடிப்பதோ அல்லது தனியாய் குடிப்பதோ அது பொருட்டல்ல. ‘கூடாது’ என்று சொல்லுங்கள், அவ்வளவுதான், முடிந்தது!

உண்மையில் உங்கள் நண்பர்கள் வட்டத்தில் ‘முடியாது’ என்று சொல்ல பெருமைப் பட வேண்டும்.
நீங்கள் பெருமையாய், ‘எனக்கு எந்த தீய வழக்கங்களும் இல்லை, மதுவை தொடுவதே இல்லை’, என்று சொல்லும்போது, நிச்சயமாய் உங்கள் நண்பர்களிடத்தில் கூட உங்களுக்கு மதிப்பு கூடுகிறது.

உங்கள் நற்பண்புகளை நீங்கள் தான் அழுத்தமாய் கடைபிடிக்க வேண்டும். நீங்கள் மற்றவர்களுடன் சேர்ந்து ஒரு குழுவாய் இருந்தாலும் உங்கள் தனித்துவத்தையும், உங்கள் விருப்பங்களையும் விடாமல் கடைபிடியுங்கள். நாம் எப்போதும் அதை செய்கிறோம். பல இடங்களில் நடக்கும் பெரிய கூட்டங்களுக்கு செல்கிறோம், ஆனாலும் நாம் நம் பழக்கங்களை விடாமல் கடைபிடிக்கிறோம்.

இந்த உலகம் இதை மதிக்கத் தொடங்கியிருக்கிறது. பல இடங்களில், பல்கலைக் கழகங்களில் எனக்கு டாக்டர் பட்டம் வழங்க அழைக்கிறார்கள், அங்கு எனக்கு மது மாமிசம் தவிர்த்த காய் கறி உணவைத் தான் தருகிறார்கள்.

பொதுவாக இந்த பல்கலைக் கழகங்களில் மதுவும் மாமிசமும் பரிமாறுவது வழக்கம். ஆனால், நான் செல்லும் இடங்களில் எல்லாம், அது கொர்டோபாவாக இருக்கட்டும், அல்லது நெதர்லாந்தாக இருக்கட்டும், அல்லது நியன்ரோடாக இருக்கட்டும், எனக்கு டாக்டர் பட்டம் அளிக்கும் விழாவில் 
எனக்கு குளிர் பானமும் காய்கறி உணவுமே அளித்தார்கள்.

ஐக்கிய நாடுகள் சபையின் எயட்ஸ் பற்றிய மிகப் பெரிய மாநாட்டிலும், உணவுக் கூடங்களில், மாமிசம் அல்லாத காய் கறி உணவுக்கு தனிப் பகுதி ஏற்பாடு செய்திருந்தார்கள். இது போல நடந்ததே இல்லை. உலக பொருளாதார மாநாட்டில் கூட காய்கறி உணவுக்குத் தனிப் பகுதி ஏற்பாடு செய்திருந்தார்கள்.

முன்பு இப்படி இருந்ததே இல்லை. சுமார் பத்திலிருந்து இருபது ஆண்டுகளுக்கு முன்பு, இதை நினைத்துக் கூட பார்க்க முடியாது.  பத்து வருடங்களுக்கு முன்பு கூட சர்வதேச மாநாடுகளில் இப்படி இருந்ததில்லை. ஆனால் இப்போது அது மாறிவிட்டது. ஏனென்றால் நாம் எப்போதும் நம் தேர்வான மது மாமிசம் தவிர்ப்பதை விடாமல் கடைபிடித்து வந்தோம். உலகம் அதை மதிக்கிறது. எனவே உங்கள் நண்பர்களும் அதை மதிப்பார்கள்.

விமானங்களில் கூட கடந்த பத்து வருடங்களில் இதை கடைபிடிக்கத் தொடங்கிவிட்டனர். முன்பு அப்படி இல்லை. இப்போது ஜைன உணவு (அதாவது உருளைக் கிழங்கு, காரட் போன்றவை இல்லாமல் செய்த உணவு) கூட கிடைக்கிறது. உங்களுக்கு என்ன உணவு வேண்டும் என்பதை நீங்களே தேர்வு செய்யலாம்.

எனவே உங்கள் சொந்த விருப்பங்களை விட்டுவிடாமல் கடைபிடிக்க வேண்டும். இல்லையென்றால், நண்பர்களுடன் குடிப்பது மெதுவாக சொந்தக் கொடுமையாக மாறிவிடும்.

கே: குருதேவ், ஸ்ரீமன் நாராயனருக்கு சேவை செய்து வந்த ஜெய விஜயர்களுக்குக் கூட சாபம் கிடைத்தது. சேவை மட்டுமே செய்துவந்தாலும் கூடவா சாபம் கிடைக்கும்?

குருதேவ்: அதன் பின்னே மனித சமுதாயத்திற்கு மிகப் பெரிய நன்மை ஒளிந்திருந்தது. முனிவர்களின் சாபத்தினால் யாருக்கும் தீமையோ இழப்போ ஒரு போதும் நேர்ந்ததில்லை. இந்தகைய சாபங்களினால் தான் இந்த மனித குலத்திற்கு மிகப் பெரும் நன்மைகள் நடந்திருக்கிறது - ஸ்ரீ இராமர், ஸ்ரீ கிருஷ்ணர் அவதரித்தது, அதன் பின் நடந்தது, எல்லாம்.

முட்டாள்களின் அன்பு கூட பிரச்சினையாகும், முனிவர்களின் கோபம் கூட நமக்கு ஆசீர்வாதங்களாகும் – என்று அதனால்தான் சொல்கிறார்கள்.