மனதின் இயல்பு....


14 – அக்டோபர் – 2012 – பெங்களூர் ------= இந்தியா



இயற்கையில் நீரோட்டம் போல,மனம் சலனமடைவது இயல்பு.

மனச் சலனத்தை எப்படிக் குறைக்கலாம்? பயிற்சி (அப்பியாசம்),பற்றின்மை (வைராக்கியம்) இவற்றால் மனச் சலனத்தைக் குறைக்கலாம். பற்றின்மை (இச்சை இல்லாமல் இருப்பது) என்பது என்ன?

சில சமயம் நீ குழப்பத்தில் இருக்கும் போது,“எனக்கு எதுவும் வேண்டாம். துன்பமெல்லாம் போதும்”என்று சொல்வாய். இது ஒரு வகையான பற்றின்மை. இது மனக் கஷ்டத்தில் இருக்கும்போது வருவது. இதை “மயான வைராக்கியம்” என்று சொல்வார்கள்.

இரண்டாவது வகையான பற்றின்மை, நீ தெளிவான மனத்துடன், திருப்தியுடன் “எனக்கு எதுவும் வேண்டாம். என்னிடம் வேண்டியது இருக்கிறது. இவ்வுலகம் மாறக் கூடியது. எதுவும் நிலையானது இல்லை. இருந்தாலும், இல்லா விட்டாலும் எனக்கு ஒன்று தான்” என்று சொல்வது.

இரண்டாவது வகை வைராக்கியத்தை “ஞான வைராக்கியம்” என்பார்கள். நமக்கு வேண்டியது ஞான வைராக்கியம் தான். மயான வைராக்கியம் அல்ல. மனம் எப்போதும் இன்பத்தை நாடுகிறது. நாம் 

ஞானமும் வைராக்கியமும் உடையவராக இருந்தால் எல்லா இன்பமும் நம்மைத் தேடிவரும். பயிற்சியினால் (அப்பியாசத்தினால்) வரும் இன்பம் சிறந்தது என்று சொல்லப் படுகிறது.

எல்லோருக்குமே ஒரு வகையான வைராக்கியத்தில் அனுபவம் இருக்கும். அதனால் அறிவு பூர்வமாக, மன நிறைவோடு “ எனக்கு வேண்டியது கிடைத்திருக்கிறது” என்று சொல்வது நல்லது. இப்படிப்பட்ட வைராக்கியம் உயர்ந்தது.