குருதேவின் கிறிஸ்துமஸ் தினச் செய்தி

புதன்கிழமை, 24 டிசம்பர் 2014,

பாத் அண்டோகஸ்ட், ஜெர்மனி

வருடத்தின் இந்த காலத்தில், மிகக் குளிராகவும், மற்றும் இயற்கை அசைவற்று அமைதியாகவும் உள்ளது. இருளாகவும் செயல்பாடுகள் மிகக் குறைவாகவும் உள்ள இந்த கால கட்டத்தில், இந்தக் கொண்டாட்டம் மலர்கின்றது.

சூரிய ஒளி அதிகமாக உள்ள காலத்திலேயே அதிக செயல்பாடுகள் இருக்கும். ஆனால்  மிகக் குறைந்த சூரிய ஒளி உள்ள, மிகக் குறைந்த செயல்பாடுகள் உள்ள, இயற்கை உறங்கும் மற்றும் அனைத்தும் செயலற்று இருக்கும் அசைவற்ற அமைதியான நேரத்தில் விளக்குகளுடனும் மகிழ்வு மற்றும் அன்புடனும் மலரும் கொண்டாட்டமே கிறிஸ்துமஸ். இது ஒரு உள்நிகழ்வின் வெளிக் குறியீடு.

உள்ளேயும் நீங்கள் அசைவற்று அமைதியாக செயலற்று இருக்கின்றீர்கள். அங்கிருந்து அன்பு என்னும் செய்தி வருகின்றது. அசைவற்ற நிலையே அன்பு. செயல்பாடுகளில் நீங்கள் ஓய்வின்றி இருக்கின்றீர்கள். செயல்பாடுகளின் போது வெளிப்புறத்திலேயே உங்கள் கவனம் இருக்கின்றது. ஆனால் அசைவற்ற நிலையில், உங்கள் கவனம் உள்நோக்கித் திரும்புகின்றது. செயல்களில் போது நீங்கள் வெளி நோக்குடையவராகவும், அசைவற்ற நிலையில் உள்முகச் சிந்தனையோடும் இருக்கின்றீர்கள். உள்நோக்கி சென்று உள்முக சிந்தையுடன் இருக்கும்போதே  அன்பு மலர்கின்றது, அதனால்தான் கிறிஸ்துமஸ் பாடலில் 

“அமைதியான இரவு, புனிதமான இரவு 
அனைத்தும் அமைதியாக உள்ளது, 
அனைத்தும் நிறைந்துள்ளது 
அதோ அந்தக் கன்னித் தாய் மற்றும் குழந்தையைச் சுற்றி
புனிதக் குழந்தை மிகவும் மென்மையானது மற்றும் லேசானது

பரலோக அமைதியில் உறங்குகின்றது
பரலோக அமைதியில் உறங்குகின்றது “ என்று கூறப்படுகின்றது.

சிறிய மனம் குழந்தையைப் போன்றது. எப்போதும் சிணுங்கிக் கொண்டும் அழுது கொண்டும் குழந்தையை போன்று பிறர் ஆதரவைச் சார்ந்தும் இருக்கும். பெரிய மனம்  தாயை போன்றது. சிறிய மனம் பெரிய மனதின் மடியில் உறங்குகின்றது, சின்ன ஆத்மா எல்லாவற்றையும் குறிக்கும் உலகளாவிய பெரிய ஆத்மாவின் மடியில் உறங்குகின்றது, அதுவே பரலோக அமைதி / சமாதானம். பரலோக அமைதி வெளியில் எங்கோ வானத்தில் இல்லை. மோக்ஷம் என்பது சிறிய மனம் பெரிய மனதின் மடியில் ஒய்வு கொள்வதே ஆகும்.

சிறிய மனம் பெரிய மனதிலிருந்து விலகும்போது ஒழுங்கின்மை, குழப்பம், மற்றும் நரகம் இவை ஏற்படுகின்றன. சிறிய மனம் அழத் துவங்கும்போது அது பெரிய மனதிடம் ஓடிச் சென்று பரலோக அமைதியில் உறங்குகின்றது. அந்த அமைதி தான் உண்மையான அமைதி. மிக நன்றாக இருக்கின்றதல்லவா? இன்று அமைதியான இரவு என்பதற்கு ஒரு வித்தியாசமான பொருளை அறிந்தீர்கள் அல்லவா? 

ஒரு கால கட்டத்தில் நிகழ்ந்த நிகழ்வு அல்ல இது, சாஸ்வதமான செய்தி. இந்த கிறிஸ்துமஸ் பாடலிலிருந்து ஒரு நிரந்தரச் செய்தியை அடையுங்கள். தாயும் குழந்தையும் ஒன்றாக இருப்பதே புனிதம். நமது இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் செய்தி இதோ ஒரு தனிப்பட்ட ஆத்மா, பிரபஞ்ச ஆத்மாவின் மடியில் உறங்கும் போது, பரலோக அமைதி கிடைக்கின்றது. நாளை நீங்களும் இதை செய்யுங்கள். உங்களது சிறிய மனதை பெரிய மனதின் மடியில் கிடத்துங்கள், அதுதான் தியானம். தாயும் குழந்தையும் ஒன்றிணைந்திருக்கும் பரலோக அமைதி தான் தியானம். கிறிஸ்துமஸ் தினத்தன்று ஏராளமான பரிசுகள் உள்ளன. ஒரு குழந்தை தன் தாயுடன் இருக்கும் போது என்ன கிடைக்கின்றது? ஏராளமான பரிசுகள்! ஆன்மீகத்தை இந்த உலகிற்கு எடுத்து வந்தால் ஒழிய  அமைதி இல்லை, வளம் இல்லை, மகிழ்ச்சி இல்லை. சரியா? (அவையோர் 'ஆம்' என்கின்றனர்.)