நேர்மையாக வியாபாரம் செய்!! உன் வருவாய் அதிகரிக்கும்.

31 ஜனவரி 2015
 
பெங்களூர், இந்தியா

கார்ப்பரேட் நிறுவனங்களின் கலாசாரமும்,ஆன்மீகமும் என்ற தலைப்பில், பல தொழிலதிபர்களை கூட்டி ஆக்கபூர்வமாக பேச்சு வார்த்தை நடத்தி, வியாபாரத்தில் நேர்மையை கடைப்பிடிக்கும் படித் தூண்டுவதற்காக, பெங்களூரில் உள்ள வாழும் கலை நிறுவனத்தின் பன்னாட்டு மையத்தில் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பல வியாபார நிறுவனங்களின் தலைவர்கள் கலந்து கொண்டு கீழே கொடுத்திருக்கும் தலைப்புகளில் உரையாற்றினார்கள். தொழில் நிறுவனங்களின் பொதுவான மதிப்புகள்; உழைப்பவர்களின் திறமையை மேம்படுத்தும் வழிகள்; நிறுவனங்களுக்கிடையே ஒத்துழைப்பு; புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் வியாபார வளர்ச்சி.


வாழும் கலை நிறுவனம் மற்றும் வியாபாரத்தில் நேர்மையை வளர்ப்பதற்கான உலக அமைப்பு இரண்டும் சேர்ந்து நடத்திய இந்த மாநாட்டில் சிறந்த (நேர்மையான) தொழிலதிபர் / வியாபாரி மற்றும் சிறந்த (நேர்மையான) வியாபார / தொழில் நிறுவனம் இரண்டுக்கும் குருதேவரின் பெயரால் ஶ்ரீஶ்ரீ பரிசுகள் வழங்கப்பட்டன. (இம்மாநாட்டைத் துவக்கி வைத்து குருதேவர் ஆற்றிய உரை கீழே கொடுக்கப்பட்டுள்ளது)

12 ஆண்டுகளுக்கு முன் கேட்ட ஒரு விஷயத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். புதிதாக வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் சில இளைஞர்களுடன் பெங்களூரில் பேசிக் கொண்டிருந்த போது வியாபாரத்தில் நேர்மை என்ற தலைப்பு வந்தது. அந்த இளைஞர்களின் கருத்து எப்படி இருந்தது என்று அறிய விரும்புகிறீர்களா? அவர்களின் கருத்துப்படி நேர்மையாக அப்பாவிகளால் தான் முடியும். வியாபாரத்தில் வெற்றி அடைய ஒருவர் (அதி புத்திசாலியாக) இருக்க வேண்டும். ஸ்மார்ட்டாக இருப்பது என்றால் எந்த வழியிலும் சென்று குறுகிய காலத்தில் நிறைய பணம் சம்பாதிப்பது என்பது அவர்களுடைய கருத்தாக இருந்தது. எனவே நேர்மை என்பது அப்பாவித்தனம். ஸ்மார்ட்டாக இருப்பது என்றால், பிடிபடாத வரை நேர்மையற்ற செயல்களில் ஈடுபட்டாவது நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும். பிடிபடாத வரை நேர்மையற்ற செயல்கள் செய்வதில் தவறு இல்லை என்று சிலர் நினைத்தார்கள். இந்த இளைஞர்களிடையே கருத்து, பலர் நீண்ட நாட்களாக நேர்மையாக வியாபாரம் நடத்தி லாபம் சம்பாதிப்பதும் தெரிந்தது. அவர்களுடைய நிறுவனங்களும் பன்மடங்கு வளர்ச்சி பெறுவதைக் காணலாம்.

கடந்த 10 ஆண்டுகளில் இளைஞர்களிடையே நிலவி வந்த தவறான கருத்து  மாறியிருக்கிறது. ஏனென்றால் நேர்மையற்ற வழியில் சென்ற பல நிறுவனங்கள் மூடப்படுவதை நாம் கண்டோம். நம் இளைஞர்களும் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளால் பாடம் கற்றுக் கொள்கின்றனர். ஆனாலும் நேர்மையின்மையும், ஸ்மார்ட்டாக இருப்பதும் எப்படி ஒன்று சேர்ந்தது என்பதை நினைத்தால் திகைப்பாக இருந்தது. அந்த சமயத்தில் இளைஞர்கள் கொண்டிருந்த தவறான கருத்தை மாற்ற ஏதாவது செய்ய வேண்டுமென்று நினைத்தேன். நேர்மையாக வியாபாரம் செய்து வளர்ச்சி பெற்ற பலரை அழைத்து அவர்களுடைய அனுபவங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள செய்து அவர்களை இவ்வுலகுக்கு முன்னுதாரணமாகக் காட்டுவது அவசியம் என்று எண்ணினேன்.
பல வியாபாரிகள் / தொழிலதிபர்கள் நேர்மையான வழியில் சென்று நல்ல லாபமடைந்து தங்கள் தொழிலை வளர்த்துக் கொள்கிறார்கள்.

ஆனால் பொதுவாக நேர்மையானவர்கள் முன்னுதாரணமாக காட்டப்படுவதில்லை. நேர்மையான வியாபாரத்திலும் லாபமடைய முடியும் என்ற உறுதி செய்ய இவர்களை முன்னுதாரணமாக மற்றவர்களுக்குக் காட்ட வேண்டும். எனவே இவர்களை அழைத்துப் பாராட்டி அவர்களுடைய அனுபவத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்காக இந்த மாநாட்டைத் துவங்கினோம். கார்ப்பரேட் நிறுவனங்களின் கலாசாரமும் ஆன்மீகமும் என்ற தலைப்பில் இந்த மாநாடு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. இன்று இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பலர் பயன் பெறுவதை நினைத்து பெருமைப்படலாம். மக்களின் கருத்தில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. நேர்மையாக வியாபாரம் செய்பவர்கள் மக்களின் மதிப்பைப் பெறுகிறார்கள். அப்படிப்பட்ட நேர்மையான வியாபாரிகளும், தங்கள் வளர்ச்சியடைந்த அனுபவத்தை பகிர்ந்து கொள்வதில் பெருமை அடைகிறார்கள்.

வியாபாரம் என்பது பயனற்றதல்ல. இந்தியாவில் பலர் வியாபாரம் செய்வதால் ஒன்றும் பயன் கிடையாது என்று நினைத்து வியாபாரம் செய்ய முன் வருவதில்லை. நேர்மையாக வியாபாரம் செய்வதால் எந்தக் கெடுதலும் வராது. ஆனால் நேர்மையற்ற வழியில் வியாபாரம் செய்வது நல்லதல்ல.

பெரிய வியாபார நிறுவனங்கள் தங்கள் சமூகப் பொறுப்பை உணர்ந்து, நேர்மையான வழியில் வியாபாரத்தை நடத்தி, அதில் வரும் லாபத்தில் ஒரு பகுதியை சமூக நலத் திட்டங்களுக்காக செலவழிக்கும் போது, அவர்களுடைய நிறுவனங்கள் ஒரு சமூக அந்தஸ்தைப் பெற முடியும். அவர்கள் மக்களின் நன்மதிப்பைப் பெறுவார்கள்.

நேர்மையற்ற வழியில் சென்று குறுகிய காலத்திலேயே உயர்ந்த இடத்தைப் பெறமுடியும். ஆனால் அவர்களின் வீழ்ச்சி மிகப் பெரிதாகவும், மிக வேகமாகவும் இருக்கும். அதிர்ஷ்டவசமாக கடந்த 10 வருட காலத்தில் அவர்களை பார்த்தோம். இலஞ்சமும்,நேர்மையின்மையும் எல்லாத் துறைகளிலும் நுழைந்து இருப்பதைப் பார்க்கிறோம். விளையாட்டுத் துறை, வியாபாரம், அரசியல் மற்றும் மதச் சார்பான அமைப்புகளிலும் இலஞ்ச ஊழலையும், நேர்மையின்மையையும் காண முடிகிறது. இப்படி சமூகத்துக்குத் தூண் போன்ற ஒவ்வொரு துறையிலும் இலஞ்சம் ஒரு புற்றுநோய் போல் பரவி விட்டது. எனவே இந்த நான்கு துறைகளும் முன் வந்து நேர்மையற்ற செயல் முறைகளில் ஈடுபடுவதை தவிர்த்து தங்கள் அமைப்புகளை தூய்மையாக வழி நடத்த வேண்டும்.

நேர்மையற்ற வழியில் குறுகிய காலத்தில் உச்சநிலையை அடைவதைப் பார்க்கலாம். ஆனால் அவர்களின் வீழ்ச்சியும் பெரிதாகவும், வேகமாகவும் இருக்கும். இயற்கை கடந்த பத்து ஆண்டுகளில் இப்படி பலரை நமக்குக் காட்டிக் கொடுத்திருக்கிறது. பல உதாரணங்கள் உள்ளன. அதில் ஒன்று விளையாட்டுப் போட்டிகளின் முடிவை முன்னதாகவே நிர்ணயித்து சூதாடுவது. (மேட்ச் ஃபிக்ஸிங்). இது வருத்தப்படக் கூடிய செயல். பல கோடி மக்கள் விளையாட்டுப் போட்டிகளை விரும்பிப் பார்க்கிறார்கள். நேர்மையற்ற சிலர் போட்டிகளின் முடிவை முன்னதாகவே அறிந்திருக்கிறார்கள்.  போட்டியில் யார் வெற்றி பெறுவார்? எத்தனை கோல்கள்? எத்தனை விக்கெட்டுகள் போன்ற விஷயங்களை முன்னதாகவே தீர்மானித்து மக்களை ஏமாற்றுகிறார்கள்.

விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பல துறைகளில் ஏன் இப்படிப் பேராசை நுழைந்தது என்பது சிந்திக்க வேண்டிய விஷயமாகும். புதிய தலைமுறையினருக்கு நல்ல உதாரணங்களை முன்வைப்பது நம் கடமையாகும். ஏனென்றால் இளைஞர்கள் வெகு வேகமாக முன்னேற்றமடைய விரும்புகிறார்கள். அவர்கள் நேர்மையானவர்களை உதாரணமாகக் கொண்டு நல் வழியில் செல்வது அவசியம். இந்த மாதிரி மாநாடுகள் வியாபாரம், அரசியல், விளையாட்டுத் துறைகள் மற்றும் மதச் சார்பான அமைப்புகளில் நேர்மையாக நடந்து வெற்றி பெற்றவர்களின் அனுபவங்களை மற்றவர்களுக்கு எடுத்துக்காட்ட உதவும்.

ஆம் ! நீங்களும் நேர்மையான வழியில் சென்று வெற்றியடைய முடியும்.நேர்மையாக இருந்தால் நன்றாகத் தூங்க முடியும். பயமில்லாமல் இருக்கலாம். இதயம் மலர புன்முறுவல் பூக்கலாம். ஆனால் நேர்மையற்ற செயலை செய்திருந்தால், முதலில் அது உன் புன்னகையைத் திருடிவிடும். தூக்கம் வராது. மற்ற சுகங்களையும் அனுபவிக்க முடியாது. பார்க்கப் போனால் நேர்மையற்ற வியாபாரம் உனக்கு அதிக நஷ்டத்தையே கொடுக்கும். நிறைய செலவு செய்து குறைந்த லாபம் பெறுவதை யார் விரும்புவார்கள்? இது நல்ல பொருளாதாரக் கொள்கையல்ல. சமுதாயத்தில் பல துறைகளிலுள்ள இளைஞர்களுக்கு இந்த விஷயத்தைப் பற்றி எடுத்துச் சொல்லவேண்டும். எனவே நேர்மையைக் கடைப்பிடிப்பதும் ஸ்மார்ட்டாக இருப்பதும் ஒன்றே. அதே போல் சேவையில் ஈடுபடுவது ஸ்மார்ட்டாக இருப்பவரின் அடையாளம். இந்த விஷயத்தை தெளிவாக எடுத்துரைக்க் வேண்டும். இந்த மாநாடு அதற்கு உதவும். நேர்மையான வழியைக் காட்டி உலக மக்களை நல் வழியில் நடத்த உதவும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

நேர்மையற்ற செயலால் நீ உன் புன்னகையை இழக்கிறாய். தூக்கத்தை இழக்கிறாய். மற்ற சுகங்களை அனுபவிக்க முடியாமல் போய்விடும். இன்று உலக அளவில் தகவல் தொடர்பு மிக வளர்ச்சியடைந்திருக்கிறது. இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும் கருத்துகள் இங்குள்ளவர்களுக்கு மட்டுமல்லாமல் சில நிமிடங்களில் உலகம் முழுதும் சென்றடையும். நிமிடங்களுக்கு அவசியம் இல்லை. செகண்டுகளில் சென்றடையும். ஜப்பான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் அமெரிக்கா நாடுகளிலுள்ள பலர் இந்நிகழ்ச்சியை பார்க்கிறார்கள். எனவே நாம் அடுத்த இரண்டு நாட்களில் நடத்தும் உரையாடல்கள் நேர்மையான வழிகளில் எல்லாத் துறையினரும் நடந்து கொண்டு இச் சமுதாயத்தை மேம்படுத்த உதவும்.

இச்சில வார்த்தைகளுடன், நான் உங்களனைவரையும் பாராட்டுகிறேன்.கருத்துப் பரிமாற்றங்களோடு, நேர்மையான சமுதாயத்தை வளர்க்க நல்ல திட்டங்களை உருவாக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். மாநாட்டில் பேசிய விஷயங்கள் அதோடு நிற்காமல், சமுதாய மேம்பாட்டுக்கான திட்டங்களை தேர்வு செய்து செயல்படுத்தப்பட வேண்டும். பேசினால் மட்டும் போதாது. செயல்படுத்த வேண்டும்.
இத்தனை அறிவாளிகள் கூடியிருக்கும் மாநாட்டில், கண்டிப்பாக நல்ல திட்டங்கள் உருவாகும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. நல்ல திட்டங்கள் நிறைவேற்றப்படும் போது சமுதாயம் வளர்ச்சியடையும். எல்லோருக்கும் நல்வழி காட்ட எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

ஓம் சாந்தி ! ஓம் சாந்தி ! ஓம் சாந்தி !!