புன்னகை அணிந்து; புன்னகையை ஏற்படுத்துங்கள்

செவ்வாய், ஜனவரி 6, 2015

பாட் அன்டகாஸ்ட்

கேள்வி - பதில்கள்

குருதேவ், நீங்கள் எங்களுக்காக அவ்வளவு செய்கிறீர்கள், உங்களுக்கு நாங்கள் என்ன செய்வது?

நீங்கள் புன்னகையை அணிந்து, புன்னகையையும், மகிழ்ச்சியையும் பரப்புங்கள். செய்வதற்கு ஏராளமான வேலைகள் உலகில் உள்ளது. சிரியா, எகிப்து, உக்ரைன், பாகிஸ்தான், கொலம்பியா, மற்றும் உலகின் வேறு பல பகுதிகளில் பிரச்சினைகள் உள்ளது. நாம் என்ன செய்ய முடியும் என்று பார்க்கவேண்டும். இது மிகப் பெரும் வேலையாக தெரிந்தால், சிறிய வேலைகளை எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் நகரில், ஊரில், நீங்கள் எங்கே இருந்தாலும் அங்கு மகிழ்ச்சியை பரப்புங்கள். ஆனந்த மையங்களை தொடங்குங்கள், அங்கே மக்கள் வந்து அமர்ந்து, மூச்சுப் பயிற்சி செய்து, கொஞ்சம் ஞானமும் பெற்று மகிழ்ச்சியடையட்டும். “கவலைகளையும் மன அழுத்தங்களையும் விடுத்து, அதிகம் புன்னகை செய்யுங்கள்!” என்று அவர்களுக்கு சொல்லுங்கள். அதைத் தான் நாம் செய்ய வேண்டும் – மக்களின் முகங்களில் அதிகம் புன்னகையை அணிவிக்க வேண்டும்,இல்லையா வாழ்க்கையில் தொடர்ந்து செல்ல அவர்களுக்கு நம்பிக்கை அளியுங்கள். இதைத் தான் நீங்கள் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன்.

குறைந்த பட்சம் உங்களது ஐந்து நண்பர்களையாவது அழைத்துக் கூறுங்கள், “வாருங்கள், நாம் அனைவரும் ஒன்றாக சேர்ந்து மூச்சுப்பயிற்சி செய்வோம், கவலையை ஒழிப்போம், வெறுப்பை தவிரித்து மகிழ்ச்சியை பரப்புவோம். நம் மனதை நிர்வகிக்க கற்றுக்கொள்வோம்.”  



அவ்வளவு கோபமும், விரக்தியும், அவநம்பிக்கையும் உலகில் இருக்கிறது. மக்களின் இதயத்தில், மனதில் அவநம்பிக்கை இருப்பதால் தான், முரண்பாடுகள், மனக்கேதங்கள் மற்றும் உலகிலே ஏராளமான பிரச்சினைகள். எனவே மக்களை ஒன்று சேர்க்க நம்மால் முடிந்த ஆகச்சிறந்ததை செய்ய வேண்டும்.

நான் ஈராக்கில் இருந்த போது அதன் பிரதம மந்திரி கூறினார், ‘குருதேவ், உலகில் மிகப்பெரும் சக்திகள் இருக்கின்றன, ஆனால் அவற்றால் மனித இதயங்களை,மனங்களை ஒன்று சேர்க்க முடியாது. பெரும் நாடுகளால் மனித இதயங்களை, மனங்களை ஒன்று சேர்க்க முடியாது. ஆனால் மனிதேய ஆர்வலர்கள் – அவர்களால் மட்டுமே முடியும். மனிதநேயமும் ஆன்மீகமும் மட்டுமே இதைச் செய்ய முடியும்.”“நான் இதை முழுமையாக ஏற்கிறேன்,” என்று நான் பதிலுரைத்தேன். 

எல்லா சமூகங்களிலிருந்தும் மக்கள் வந்திருந்தார்கள். குர்திஷ் பாராளுமன்றம் ஒரு அமைதி மாநாட்டை ஏற்படுத்தி இருந்தது.“நீங்கள் ஈராக் செல்கிறீர்களா? அது அவ்வளவு ஆபத்தானது”, என்று என்னிடம் கூறினார்கள். “அதனால் தான் நான் அங்கு போக வேண்டும்”, என்று நான் கூறினேன்.
நாங்கள் வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, சில மீட்டர் தூரத்தில் பெரும் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. அங்கு கவர்னரை சந்திக்கச் சென்றுகொண்டிருந்தோம். கவர்னர் இல்லத்திலிருந்து ஐந்து நிமிட தூரத்தில், ஒரு கார் குண்டு, தற்கொலை தாக்குதல் நடந்தது. ஆனால் நாங்கள் அந்த மாநாட்டை தொடர்ந்து நடத்தினோம்.

அந்த மாநாட்டில், எல்லா சமூகத்தவரும் வந்திருந்தனர். குர்து, ஷியா, சன்னி, யாசிதி மற்றும் அந்தப் பகுதியை சேர்ந்த பழங்குடியினர் என எல்லா இனத்தவரும் ஒன்றாக வந்து கலந்து கொண்டனர். அந்த முழுச் சூழலே வித்தியாசமாக இருந்தது, அங்கு இருந்த முழு சக்தியே வித்தியாசமாக இருந்தது. பிரதம மந்திரி கூறினார், “இதுதான் இந்த நாட்டிற்குத் தேவை; மக்களை ஒன்றாக்கும், பாலங்களை உருவாக்கும் ஆன்மிகம், ஆம் அதுதான் இங்கு தேவை.” வன்முறை வன்முறையை தடுத்து நிறுத்தாது. அதை ஞானத்தினால் தடுக்க வேண்டும். ஞானத்தினால் மட்டுமே வன்முறையை தடுக்கமுடியும்.

“கண்ணுக்குக் கண், பல்லுக்கு பல் என்று போனால் முழு உலகமும் குருடாகவும் பல் இல்லாமலும் ஆகிவிடும். (அவையினரின் சிரிப்பு). “மற்றவர்கள் வன்முறையை கையிலெடுக்கிறார்கள் என்பதால் நானும் எடுத்தேன்”, என்று மக்கள் கூறினால், அதற்கு முடிவே கிடையாது, அது அப்படியே போய்க்கொண்டே இருக்கும். எங்காவது நிறுத்தியாக வேண்டும், அதைத்தான் ஞானம் செய்யும், அதற்குத் தான் நாம் உழைக்க வேண்டும். நம் பங்களிப்பை இப்படி செய்யலாம். இந்தியாவில், எப்போதும் இரத்தம் சிந்தப்படும் பகுதிகளான ஜார்க்கண்ட் மற்றும் பீகாரில் நாம் இதைத்தான் செய்தோம். நமது தொண்டர்கள் அந்தப் பகுதியில் ஆர்வத்தோடு வேலை செய்ததால், சுமார் ஆயிரம் கெரில்லா தீவிரவாதிகள் (நக்சலைட்டுகள்) தங்கள் ஆயுதங்களை கீழே போட்டனர்.
துப்பாக்கிக் குண்டிலிருந்து வாக்குச் சீட்டுக்கு வாருங்கள் (From Bullet to Ballot) என்று அழைப்பு விடுத்தேன். அந்தக் குரலைக் கேட்ட அவர்கள் தங்கள் ஆயுதங்களைப் போட்டுவிட்டு தேர்தலில் பங்கு பெற்று தேர்தலை அமைதியாக நடக்க விட்டனர். இல்லாவிடில் அவர்கள் பொதுவாக எந்தத் தேர்தலையும் நடக்க விடுவதில்லை. இப்போது, அந்தப் பகுதிகளில் கடந்த 5 – 6  வருடங்களாக வன்முறை ஏதும் இல்லை. சமீபத்தில் நடந்த ஒரு தேர்தலும் மிக அமைதியாக நடந்தது.

நான் இதைச் சொல்லும்போது, உலகில் பல பகுதிகளில் எங்களுக்கு ஏற்பட்ட நடை முறை அனுபவத்தை கொண்டே சொல்கிறேன். வன்முறையால் வன்முறையை அடக்க முடியாது, ஞானமே வன்முறையை நிறுத்தும் சக்தி பெற்றது என்பதை அனுபவபூர்வமாக அறிந்திருக்கிறோம் ஒவ்வொருவரும் ஞானத்தின் தூண்கள், உங்களைப் போல ஞானவிளக்கேற்ற ஏரளாமானோர் இன்றைய உலகில் தேவை. உலகம் மன அழுத்தத்தில் மூழ்கிக் கொண்டிருக்கிறது. அடுத்த பத்தாண்டுகளில், மன அழுத்தமே மக்களைக் கொல்வதில் முதலிடம் வகிக்கப் போகிறது. மக்களை மன அழுத்தத்திலிருந்து காப்பாற்ற வல்லது ஞானமேஉலகிற்கு ஞானத்தை வரவழைக்கும் கடமையேற்று நீங்கள் அனைவரும் ஒன்றாக வந்து ஆரம்பித்துவிட்டீர்கள்.அதற்காக உங்களை நீங்களே பாராட்டிகொள்ளுங்கள்.

குருதேவ், அதிக நேர்மறை எண்ணத்தைப் பெறுவது எப்படி?

எதிர்மறை விஷயத்தை பற்றிக்கொள்வது மனதின் இயல்பு என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். பத்து புகழுரைகளும், ஒரு இகழுரையும் கேட்டால், மனம் அந்த ஒரு இகழ்ச்சியையே பிடித்துக் கொள்ளும். எனவே, இதைத் தெரிந்து கொண்டாலே நாம் ஒரு அடி வெளியே வந்துவிட்டோம். “என் மனம் எதிர்மறை எண்ணங்களில் பயணிக்கிறது”, என்ற உணர்தலை நீங்கள் அப்படி நிகழும் போதெல்லாம் உணர்ந்தாக வேண்டும். மற்றொரு தீர்வு, பிராண சக்தியை அதிகப்படுத்துவது. பிராண சக்தி அதிகமாகும் போது எதிர்மறை தன்மை குறைந்து இருக்கும்.சக்தி குறையும் போது தான் எதிர்மறை தன்மை அதிகமாகிறது.  அதிக அளவு சக்தியோடு இருக்கும்போது எதிர்மறை தன்மை காணாமல் போகிறது.

எனவே எதிர்மறை எண்ணங்களை ஒழிக்க ஆகச் சிறந்த வழி இளமையாய் இருப்பது. இளமையாக இருப்பது என்றால் சவாலை ஏற்கும் மனப்பாங்கு கொள்வது, அதை பிரச்சினையாகக் கருதாமல் இருப்பது. “எனக்கு ஒரு சவால்,” என்று எப்போதும் சொல்லுங்கள். முதலில் பிரச்சினையை சவாலாக மாற்றுங்கள். அதற்குப் பிறகு எதுவுமே சவால் இல்லை. நமக்கு சக்தி இருக்கிறது, உற்சாகம் இருக்கிறது. இந்த மன நிலையோடு நாம் அணுகும் போது நமது செயல்கள் வேறு பாதையில் செல்கிறது, அதாவது வெற்றிப் பாதையில்.

குருதேவ், நம் வாழ்கையின் நோக்கத்தைக் கண்டு கொள்வது எப்படி?

உங்களுக்குக் கிடைத்த உலகத்தை விட மேலான உலகத்தை விட்டுச் செல்வது தான் உங்கள் நோக்கம். உங்களுக்குக் கிடைத்த உலகத்தை விட மேலான ஒன்றை வருங்கால சந்ததியினருக்குத் தரவேண்டாமா? திரும்பிப் பாருங்கள், பத்து வருடங்களுக்கு முன்பு, ஐம்பது வருடங்களுக்கு முன்பு இதை விட மேலாக இருக்கவில்லை? மேலான ஒன்றாக இருந்தது என்றால், எதிர்காலத்துக்கும் மேலான ஒரு உலகைத் தர வேண்டும். இப்போதைய நிலை முன்பை விட மேலாக இருக்கிறது என்று நீங்கள் கருதினால், பிறகு அதைவிட மேலானதை விட்டுச் செல்ல வேண்டாமா? இது ஒரு வழிகாட்டல். இந்தப் பார்வையில், நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைத் தேர்வு செய்யலாம். சமுதாய அமைதி, மன அழுத்தமற்ற வன்முறையற்ற சமுதாயம், ஆனந்தமான சமுதாயம் போன்ற ஏதாவதொன்றை நீங்கள் நோக்கமாகத் தேர்வு செய்யலாம். இதற்குத்தான் நாம் முயற்சி எடுக்க வேண்டும்.

உங்கள் இயல்புக்குத் தக்கவாறு, உங்களுக்குப் பிடித்தமான ஒன்றை நீங்கள் தேர்வு செய்யலாம். உங்களில் சிலர் மருத்துவராகலாம், சிலர் சமூக ஆர்வலராகலாம், சிலர் சமூகத் தொண்டாற்றலாம், சிலர் அரசியலுக்கு வரலாம், சிலர் தொழில் முனைவோராக ஆகி சமூகத்திற்கு செல்வ வளம் சேர்க்கலாம் – இவை உங்கள் தேர்வு. நீங்கள் செய்ய விரும்புவதை நீங்கள் தேர்ந்தெடுங்கள், ஆனால் ஒரு பொதுவான நோக்கம் இந்தச் சமுதாயத்தை மேலான சமுதாயமாக ஆக்குவது – வன்முறையற்ற, மன அழுத்தமற்ற, அவனம்பிக்கையற்ற, துயரற்ற சமுதாயம். இல்லையா? இதில் யாருக்காவது இரண்டாவது கருத்து இருக்கிறதா? யாருக்கும் இருக்கும் என்று நினைக்கவில்லை! எல்லோருக்கும் மகிழ்ச்சியான சமுதாயத்தையே காண விருப்பம், துயரப்படும் சமுதாயத்தை அல்ல.

குருதேவ், சில நேரங்களில் ஆன்மீகப் பாதை குழப்பமாக இருக்கிறது. நான் முன்னேறி கொண்டிருக்கிறேன் என்று எப்படி அறிந்துகொள்வது?

ஒவ்வொரு குழப்பத்திலும் பழைய கருத்துக்களும் நிர்ணயங்களும் உடைந்து புதியன எழுகிறது என்று பொருள், அது நல்லதே. உங்கள் முன்னேற்றத்தை பற்றியெல்லாம் கவலைப்படாதீர்கள். நீங்கள் முன்னேருகிறீர்கள் – ஆன்மீகப்பாதையில் பின்னேற்றதிற்கு வழியில்லை; எப்போதும் முன்னேற்றம் உண்டு. வரையறுக்கப்பட அளவீடு ஏதுமில்லை, ஆனால் உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளலாம், ‘முன்பை விட அதிக மகிழ்ச்சியாய் இருக்கிறீர்களா? முன்பை விட அதிக சாந்தமாய் இருக்கிறீர்களா?” இவையெல்லாம் சில அளவீடுகள், ஆனால் இவற்றை அளவீடுகளாக நிச்சயம் வைத்துகொள்ள வேண்டும் என்ற அவசியமில்லை. ஒரு விஷயம்: சற்றே திரும்பிப் பாருங்கள், ஆன்மீகப் பாதையில் வருவதற்கு முன்பு, தியானம் செய்யக் ஆரம்பிப்பதற்கு முன்பு, உங்கள் வாழ்கை எப்படி இருந்தது இப்போது எப்படி இருக்கிறது? ஏதும் வித்தியாசம் இருக்கிறதா? எத்தனை பேர் வித்தியாசத்தை உணர்ந்திருக்கிறீர்கள்? பெரிய வித்தியாசம் இருந்தால், நீங்கள் ஏற்கனவே முன்னேறி விட்டீர்கள்! இருபது வருடங்களுக்கு முன் எப்படிப்பட்டவராய் இருந்தீர்கள் என்று தொடர்புபடுத்திப் பார்க்க முடியுமா? இப்போது அதே மனிதராய் இருக்கிறீர்களா அல்லது வேறாக இருக்கிறீர்களா? எத்தனை பேர் வித்தியாசமான மனிதராக ஆகியிருக்கிறீர்கள்? (அவையோரில் பலர் கைகளை உயர்த்துகிறார்கள்) ஆம், நீங்கள் வித்தியாசமானவர். 

தியானத்தில் மேலும் ஆழமாகச் செல்ல என்ன செய்ய வேண்டும்?

நீங்கள் சரியான இடத்தில இருக்கிறீர்கள். அவசரப்படாதீர்கள். உங்கள் ஆன்மீகப் பயிற்சிகளை தவறாமல் செய்யுங்கள். குறைந்தபட்சம் முதல் இரண்டு மூன்று வருடங்களுக்கு, அமைதிக் கலை வகுப்பில் மூன்று, நான்கு மாதங்களுக்கு ஒரு முறை கலந்துகொள்ளுங்கள். பிறகு தியானத்தில் இன்னும் ஆழமாகப் போகத் தொடங்குவீர்கள். ஒரு முறை அமைதிக்கலை வகுப்பில் பங்கு பெற்றால் போதாது. போதவே போதாது! திரும்பத் திரும்ப கலந்துகொள்ள வேண்டும். சுவற்றில் வெள்ளை அடிக்கும் போது, முதலில் மேல் பூச்சு அடிப்பார்கள், பிறகு முதல் பூச்சு, பிறகு இரண்டாவது பூச்சு, அதன் பிறகு மூன்றாவது பூச்சு அடிப்பார்கள். பிறகு சில வருடங்களுக்கு ஒருமுறை என மறுபடியும் வெள்ளை அடித்தவாறு இருப்பார்கள். ஏனென்றால் தேய்மானம் ஆகிறது. அதைப் போலவே, நாம் நமது மனம், நமது புத்தி மற்றும் நமது ஞாபகத்தை அவ்வளவு பயன்படுத்துகிறோம், எனவே அதற்கு பராமரிப்புத் தேவைப்படுகிறது. நமது உடம்பிற்குப பராமரிப்புத் தேவை, நமது மனதிற்குப பராமரிப்புத் தேவை. அமைதிக்கலை வகுப்பு அதிகம் தேவையான பராமரிப்பைத் தருகிறது. எட்டு வாரங்களுக்கு தியானம் செய்து வந்தால், மூளையின் அமைப்பு மாறுகிறது என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். உங்கள் மூளையின் செயல் பகுதி அதிகமாகிறது, உங்கள் நோய் எதிர்ப்புச் சக்தி வலிமையாகிறது, உங்கள் புத்தி கூர்மையடைகிறது, உங்கள் ஞாபகம் இன்னும் தெளிவாகிறது. எனவே, பல பலன்கள் விஞ்ஞானிகளால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது, அதை நாம் நடைமுறை வாழ்வில் பார்த்திருக்கிறோம்.

குருதேவ், குற்ற உணர்வில் இருந்து எப்படி விடுபடுவது?

நீங்கள் கடந்த காலத்தில் ஒரு தவறு செய்திருந்தால்,நீங்கள் ஞானம் இல்லாமல் அறியாமையில் இருந்த காலம். அறியாமையில் செய்த தவறை எடுத்துக்கொள்ளக் கூடாது – அது நடந்து முடிந்து போய்விட்டது. இப்போது நீங்கள் புதிய மனிதர். எனவே, முன்னேறிச் செல்லுங்கள். அதே தவறை மறுபடி செய்யாதவரை, பரவாயில்லை.

ஒரு குரு தன் சீடரை எப்படிக் கண்டுகொள்கிறார்? ஒருவருடைய வாழ்வில் எப்போது குரு தோன்றுகிறார்? எனக்கு அந்த இரகசியத்தை தயை கூர்ந்து சொல்லுங்களேன்.

அது இப்போது இரகசியமேயில்லை. நான் இங்கே இருக்கிறேன், நீங்கள் இங்கே இருக்கிறீர்கள். இதில் யார் யாரை முதலில் கண்டது என்பது பொருட்டல்ல. ஒவ்வொரு நிகழ்வுக்கும் பெரிய காரணம் உண்டு. தர்க்கரீதியான ஒன்றை காரணத்துடனோ அல்லது நிகழ்வுடனோ தொடர்புப்படுத்தி அதை வரையறைக்குள் கொண்டுவர முடியாது. ஏனென்றால் வாழ்கை நீங்கள் நினைப்பதை விட மிக அதிகம். நம் முழு வாழ்கையும் நம் வாழ்கையை அராய்ந்து அறிந்துகொள்ள போதாது

வாழ்கை தாராளமானது, அதில் ஏராளம் உள்ளது. அறிவியல்பூர்வமாகவும் இதை பார்க்கிறோம் - பிரபஞ்சம் உலகு உள்ளது, அணு உலகு உள்ளது, ஆனால் இதற்கிடையே காரண உலகும் சூக்ஷும உலகும் இருப்பது வியக்கத்தக்கது. இதைப்பற்றி நான் கேனோபநிஷ உரையில் பேசி இருக்கிறேன். இது மிக சுவாரசியமானது, வேறு ஒரு சமயம் இதைப் பற்றி ஆழமாகப் பார்க்கலாம். வாழ்கையின் இந்த இயல் அவ்வளவு பேராச்சரியமும், உணர்வெழுச்சி கொண்டதுமாகும்.