உண்மை ஒலியலை அதிர்வினை ஏற்படுத்துகின்றது

திங்கட்கிழமை 19 ஜனவரி 2015,


பெங்களூரு, இந்தியா

குருதேவ், நான் ஒரு முஸ்லிம் பெண்.தொலைவிலிருந்து, உங்கள் ஞானச் செய்தியினைக் கேட்க வந்துள்ளேன். எங்களுடைய சமயத்தின் அடித்தளம் குரான் ஆகும், ஆனால் என்னால் இன்றைய இஸ்லாமுடன் அடையாளபடுத்தி கொள்ள முடியவில்லை. தங்களது சொற்கள் எனக்குள் ஆழப் பதிகின்றது ஏன்?

நமது ஆத்மா எப்போதுமே உண்மையையே தேடுகின்றது, எங்கு அது கிடைத்தாலும், ஆத்மாவில் ஒலியலை அதிர்வுண்டாகின்றது. உங்கள் மனதிற்குள் எது சரி என்று தோன்றுகின்றதோ, அதைக் கவனித்து அதனுடனேயே செல்லுங்கள். சமயம் மற்றும் வழக்கங்கள் சார்ந்த மன சீரமைப்பு, சித்தாந்தம், ஆகியவற்றை ஒரு புறம் வையுங்கள். அவற்றிற்கும் மதிப்பு உண்டு, அவற்றை ஒதுக்கி விடவேண்டும் என்று நான் கூறவில்லை அவற்றிக்கான இடம் உள்ளது, ஆனால் உங்கள் ஆத்மா உண்மைக்கு ஏங்குகின்றது, எங்கு அது கிடைக்கப் பெறுகின்றதோ அங்கு ஆத்மா ஒலியலை அதிர்வினை ஏற்படுத்துகின்றது. இதை குற்ற உணர்ச்சியுமின்றி ஏற்றுக் கொள்ளுங்கள்.

சில சமயங்களில் நீங்கள் உங்கள் சமயத்திற்கு அல்லது போதகருக்கு விசுவாசமாக இல்லையோ என்று எண்ணுவீர்கள். இத்தகைய முரண்பாட்டுச் சிந்தனையை நீங்கள் விட்டுவிட வேண்டும் ஏனெனில் எந்த சமயமுமே ஒருவர் வருந்துவதை வேண்டுவதில்லை. இந்த பூமியில் தோன்றிய ஒவ்வொரு சமயத் தலைவரும், தீர்க்கதரிசியும் மாணவரின் மற்றும் மக்களின் சமுதாயத்தின் உயர்வையே வேண்டினர். நீங்கள் உண்மையை அறியும் போது, அதாவது ஆன்மீக உயர்வை, ஆன்மீகச் செறிவூட்டலை அடையும் போது அவர்களின் ஆசியைப் பெற்றதாக அறிந்து உணருங்கள். அனைத்து தீர்க்கதரிசிகளும், குருமார்களும், தலைவர்களும் தங்களது மனமார்ந்த ஆசியினை உங்களுக்கு நல்குகின்றனர். இதை நிச்சயமாக தெரிந்து கொள்ளுங்கள்.

ஆசிரியர்கள்,"ஒரே வழியில் செல்லுங்கள், அங்குமிங்கும் அலைபாயாதீர்கள், ஆன்மீக வணிகம் செய்யாதீர்கள்" என்றெல்லாம் கூறுவார்கள். நான் அவர்கள் கூற்றினை ஏற்றுக் கொள்கின்றேன். ஏதாவது ஒரு காலகட்டத்தில், உங்களுடைய மனம் அனுபவத்திற்குப் பேராசைப்படும் போது, அது வணிகத்தில் இறங்குகின்றது. நிலையாய் நின்று அதை முற்றிலும் உறிஞ்சிக் கொள்ளாமல் மனம் அலைபாய்கின்றது. அத்தகைய வணிக உணர்வுக்கு ஆளாகும் போது, இங்கு கொஞ்சம், அங்கு கொஞ்சம் என்று தேடும் போது, சுய ஒருமுகப்படுத்தப்பட்டு, மையப்படுத்தியவராக ஆகின்றீர்கள். ஆத்மாவை நோக்கி வருவதில்லை. எனவே பழங்கால குருக்கள் "இங்கு இருக்கின்றீர்கள்,இங்கேயே இருங்கள்" என்று கூறியிருக்கின்றனர். ஒரு படகில் இருக்கும் போது, அதே படகில் இருப்பதுவே சிறந்தது. ஆன்மீக வழியில் புதிதாக நுழைந்திருக்கும் ஒருவருக்கு இது மிகவும் பொருந்தும். ஆயினும், ஒரு காலகட்டத்தில், தேக்கம் ஏற்படும்போது, ஆசிரியரே உங்களை வழி நடத்துவார், ஒளியே உங்களை சரியான இடத்திற்கு வழி காட்டும். எனவே, சரி. நீங்கள் இங்கிருக்கும் போது இங்கேயே 100% இருங்கள். அது முற்றிலும் சரி. கவலைப்பட வேண்டாம்.

இந்தியாவிற்கு நான் முதல் தடவையாக வந்திருக்கின்றேன். இங்குள்ள வறுமையும், அழுக்கும் என்னை அதிர்ச்சியடையச் செய்தன.  இவ்வளவு அதிகமான ஞானம் நிறைந்த இந்நாட்டில் இவ்வாறு இருப்பது முரண்பாடல்லவா?

ஆம், இந்தியா மேலை நாடுகளிலிருந்து நிறையக் கற்றுக்கொள்ள வேண்டும். அது போன்று மேற்கத்திய நாடுகளும் கீழை நாடுகளிலிருந்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். எதுவெல்லாம் நல்லவையோ அவற்றையெல்லாம் நாம் பரிமாறிக் கொள்ள வேண்டும். ஏனெனில் நாம் ஒரு உலகக் குடும்பம். நீங்கள் கூறுவது முற்றிலும் சரியே. தற்போதைய பிரதமர் " இந்தியாவைச் சுத்தப் படுத்துவோம்" என்பதையே தனது முதற் பணியாக ஏற்றுக் கொண்டுள்ளார். நாம் வாழும் கலையில் இதை நீண்ட காலமாகச் செய்து வருகின்றோம்.

ஐரோப்பா, அல்லது அமெரிக்காவில் காணப்படாத அளவு குப்பைகள் இங்கு நகர்புறங்களில், காணப் படுகின்றன. ஆனால் இங்கு மக்கட்தொகை அதிகம். மேலும் சுத்தம், சுகாதாரம், நேரம் தவறாமை, ஆகியவற்றை மேற்கத்திய நாடுகளிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கம் மக்களுக்குத் தேவை. நீங்கள் இந்தியாவைச் சுற்றி, பயணித்து, மக்களுக்கு இதைக் கற்றுக் கொடுத்தால், அதை மிக வரவேற்கின்றேன். உங்களுக்கு இரண்டு பொறுப்புக்கள் ஆகும்- ஒன்று கற்றல், மற்றொன்று கற்பித்தல்.

நான் பயிற்சிகள் எடுத்துக் கொண்டு அனேகமாக தினமும் சாதனா செய்து வருகின்றேன். ஆயினும் என்னால் என் மீது அன்புகொள்ள இயலவில்லை. நான் என்ன செய்ய வேண்டும்?

உங்கள் மீது அன்பு கொள்ளவில்லை என்று யார் கூறியது? உங்கள் மீதே கடினமாக இருக்காதீர்கள், சுய இரக்கம் கொள்ளாதீர்கள். நீங்களே அன்பு ஆகின்றீர்கள். அன்பு என்பதாலேயே நீங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றீர்கள். நமது உடல் அமினோ அமிலங்கள், கார்போஹைட்ரட்டுக்கள், ப்ரோடீன், இவற்றால் ஆக்கப்பட்டிருப்பதை போன்று உங்களுடைய ஆத்மா அன்பு, ஒளி, மற்றும் ஆனந்தத்தால் ஆக்கப்பட்டிருக்கின்றது. இதுவே உங்கள் இயல்பு. எனவே விழித்தெழுங்கள்.

குருதேவ், நான் ஒரு கிறிஸ்தவன். அவதாரங்களில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனால், நாம் வேறொரு பிறப்பில் இந்தியர்களாக இருந்திருக்கின்றோமா?

உங்கள் கூற்றை நீங்களே மறுக்கின்றீர்கள். அவதாரங்களில் நம்பிக்கை இல்லை என்று கூறி விட்டு, இதே நாட்டில் பிறந்திருக்கின்றேனா என்றும் கேட்கின்றீர்கள்! ஆம், சாத்தியமானது தான். எனக்கு நிச்சயமாகத் தெரியும், நான் பல முறைகள் இங்கு இருந்திருக்கின்றேன். நீங்களும் இருந்திருக்கக் கூடும்,ஆனால் இந்தியனா இல்லையா என்று எனக்குத் தெரியாது. பரவாயில்லை.  விளக்கங்கள், சமயம், நம்பிக்கைகள் எல்லாமே காலப்போக்கில் மாறுபடும்.

ஒரு காலத்தில், கிருஸ்தவ சர்ச் உலகம் உருண்டை என்று நம்பவில்லை. அவர்கள் உலகம் தட்டையானது என்றே நம்பி வந்தார்கள். சமயத்திற்கு எதிராகப் பேசிய பல விஞ்ஞானிகள் துன்புறுத்தப்பட்டனர். ஆனால் சர்ச்சே பின்னர் அதை ஏற்றுக் கொண்டது. அவர்கள் உலகம் உருண்டை என்னும் டார்வினின் கொள்கையை நம்பவில்லை. ஆனால் இப்போது போப் அது ஏற்றுக் கொள்ளத் தக்கது என்று கூறுகின்றார். அறிவியல் கூறும் போது அதை ஏற்றுக் கொள்கின்றீர்கள். அது போன்றே, உளவியலாளர், மனநல மருத்துவர், பாரா உளவியலாளர் , விஞ்ஞானி, ஆகியோர் ஒரு உயிர் பல பிறவிகள், பல கூடுகளில் (உடல்கள்) இருந்திருக்கக் கூடும்  என்று கூறுகின்றனர். விஞ்ஞானிகள், பல பிறவிகள் உண்டு, உங்களது விழிப்புணர்வு (ஆத்மா) அழிக்க இயலாதது என்று கூறும் போது, அதை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும்.