உற்சாகத்துடன் வாழ்க்கையை ஏற்றுக் கொள்ளுங்கள்

திங்கள்கிழமை,19 ஜனவரி 2015,

பெங்களூரு இந்தியா .


உண்மை ஒலி அலை அதிர்வினை ஏற்படுத்துகின்றது  என்னும் இடுகையின் தொடர்ச்சி
குருதேவ், நான் ஏன் இவ்வளவு பொறுப்புக்களை ஏற்றுக் கொள்ள வேண்டும்? இறுதியில் நான் இறக்க வேண்டும் என்னும் நிலையில் என்னுடைய மகிழ்ச்சி, எனது கணவரின் மகிழ்ச்சி, குடும்பத்தினரின் மகிழ்ச்சி அனைத்திற்கும் நான் ஏன் பொறுப்பேற்க வேண்டும்?

நல்லது, ஏனெனில் நீங்கள் பிறந்துவிட்டதால்! பிறந்துவிட்டால், பொறுப்புக்களை ஏற்கவேண்டும். வாழ்க்கையை இரண்டு விதமாகக் காணலாம்.

1. ஒன்று எதையும் ஒரு பாரமாகக் கருதி வாழ்நாள் முழுவதும் துன்பத்துடன் அவற்றை இழுத்துச் செல்வது

2. உற்சாகத்துடன்  அவற்றை ஏற்றுக் கொண்டு, "எனக்கு இத்தனை பொறுப்புக்களும் சவால்களும் உள்ளன. அவற்றை என்னால் ஏற்றுச் செய்ய முடியும்" என்று எண்ணி, கொண்டாட்டத்துடன் நகர்த்திச் செல்வது.

நீங்கள் களைப்பாக இருக்கும்போது அனைத்தையும் கையாள்வது அதிகமானதாகத் தோன்றும். அவ்வாறான நிலையில் சற்று ஓய்வெடுத்து இளைப்பாறுங்கள். எந்தப் பொறுப்புமே உங்களுக்கு இல்லை என்று எண்ணிக் கொள்ளுங்கள். உங்களுக்குள்ளேயே ஆழ்ந்த ஒய்வினைக் காணுங்கள், அப்போது முன்னேறிச் செல்லத் தேவையான பலம் உங்களுக்குக் கிடைக்கும்.

உங்களுக்குள்ளேயே "எனக்கு எதுவும் வேண்டாம்" என்று கூறிக் கொள்ளுங்கள். இத்தகைய எதுவும் வேண்டாத நிலை ஒய்வுகளிலும் ஆழ்ந்த ஓய்வினை உங்களுக்கு அளிக்கும்.  ஒய்வு என்பது உடலைப் படுக்கையில் கிடத்தியிருப்பது மட்டும் அல்ல. மனம் "நான் திருப்தியுடன் இருக்கின்றேன், நிறைவாக உள்ளேன்" என்று கூறும் முறையாகும். திருப்தி மட்டுமே உங்களுக்கு ஓய்வினைத் தர முடியும். இத்தகைய நிறைவு எந்த செயல்திறன் மூலமாகவும் வராது. ஞானத்தின் மூலமாக மட்டுமே உங்களை வந்தடையும். அந்த ஞானம் என்னவெனில்,

1. அனைத்தும் நிலையற்றவை.
2. நான் திருப்தியுடன் இருக்கின்றேன்
3. எனக்கு எதுவும் வேண்டாம்.

இதுவே ஞானத்தின் சாரம். குழந்தைகளை உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டால், அவர்கள் "ஒன்றும் வேண்டாம்" என்றுதான் கூறுவார்கள். எதுவும் வேண்டாம் என்னும் விதை நிலை ஒவ்வொரு குழந்தையிடமும் உண்டு. அனைத்துமே நிலையற்றவை என்பது அவர்களுக்குத் தெரியாது, ஏனெனில், அவர்கள் தங்களைச் சுற்றியுள்ளவற்றில் முழுவதுமாகக் கண்டுண்டு போகவில்லை. ஒரு நாளில் சில நிமிஷங்களுக்காவது " அனைத்துமே நிலையற்றவை, எனக்கு எதுவும் வேண்டாம்" என்று கூறி அமர்ந்து, ஆழ்ந்த ஓய்வெடுத்தால், உற்சாகத்தையும் சக்தியையும் பெற்று, லட்சக்கணக்கான பணிகளை செய்து லட்சக்கணக்கானவர்களை மகிழ்வுற செய்யமுடியும். அந்நிலையில் எந்தப் பணியுமே முக்கியமானதாகவோ முக்கியமற்றதாகவோ தோன்றாது. இதுதான் உபநிஷத மொழி."அது முக்கியத்துவமானதும் அன்று, முக்கியத்துவமற்றதும் அன்று." சிறு விஷயங்களைக் கூட முக்கியத்துமற்றவை என்று கருத முடியாது, அது போன்று எதையுமே மிக முக்கியமானது என்றும் கருத முடியாது. அதற்குப் பதிலாக எந்தப் பணியையாவது எந்தச் செயலையாவது எங்கேயானாலும் செய்து கொண்டிருங்கள், அவை ஒவ்வொன்றும் இவ்வுலகிற்குப் பயன்படும். 

குருதேவ், இம்மக்கள் கூட்டம் உங்களைத் துதிக்கும் போது மனித தெய்வமாக வேண்டும் என்னும் சலனம் உங்களுக்கு ஏற்படவில்லையா ? எவ்வாறு சமநிலையை நிர்வகிக்கின்றீர்கள்?

இந்தியாவில் வணக்கம் செலுத்தும் முறை மேலை நாடுகள் மற்றும் தூரக் கிழக்கு நாடுகளிலிருந்து வேறுபட்டது. இந்தியாவிலும் தூரக் கீழை நாடுகளிலும் பாதங்களைத் தொட்டு வணங்குகின்றோம். இதுதான் இங்கு சாதாரண வணங்குமுறை. நாங்கள் குழந்தைகளாக இருந்த போது, ஒவ்வொரு நாளும் குனிந்து எங்கள் தாயின் பாதங்களைத் தொட்டு வணங்குவோம். அவ்வாறு செய்யப் பழகியிருந்தோம். எங்களுடைய பாட்டியோ அல்லது வேறு பெரியவர்களோ வந்தால் குழந்தைகள் அனைவரும் சாஷ்டங்கமாக நமஸ்காரம் செய்ய வேண்டும். இது காலாசாரம். அனைவரும் இவ்வாறு செய்ய வேண்டும் என்று எண்ணிக் கொள்ளாதீர்கள். உண்மையில் பல சமயங்களில் இது ஒரு தொல்லை! மக்கள் காலில் விழும்போது ஒருவர் மீது ஒருவர் சரிந்து கீழே விழுந்து விடுகிறார்கள். இத்தகைய கூட்டத்தை சமாளிப்பது மிகுந்த சிரமமானது ஆகும்.

பல சமயங்களில் நான் வெவ்வேறு நிலைகளில் நடக்க வேண்டியதாகின்றது ஏனெனில்  என் பாதத்தைத் தொட்டு வணங்க ஒரு காலை யாராவது இழுத்து விடுகின்றார்கள். நமது நாட்டில் இதுதான் வணங்கும் முறை, என்ன செய்வது? மக்கள் புகழ்ந்து, முகமன் கூறுகிறார்கள், அனால் அனைத்தும் ஒரு மூலத்திற்கே செல்கின்றன. நான் கூறுவது புரிகின்றதா? ஒருவர் இந்த சித்திரம் அழகாக  இருக்கின்றது என்று  கூறினால் யாருக்கு அந்தப் புகழ்? அதை வரைந்தவனுக்கு அல்லவா? நமது ஆசிரியர்களை இதற்கே பயிற்று வித்திருக்கின்றோம். நான் மட்டுமல்ல, நமது ஆசிரியர்களும் எங்கே கற்பித்தாலும், எங்கு எவ்வளவு புகழ் அடைந்தாலும் அவர்கள் சமநிலையிலேயே இருக்கின்றார்கள். எதுவும் அவர்களைப் பாதிப்பதில்லை.

உண்மையில், நீங்கள் யாரையாவது புகழ விரும்பினால், ஒரு முட்டாளைப் புகழுங்கள். அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்., நீங்கள் புகழ்ந்தாலும் புகழாவிட்டாலும் ஒரு புத்திசாலி தன்னுடைய பணியினை செய்து கொண்டே இருப்பான். ஆனால் ஒரு முட்டாளைப் புகழ்ந்தால், அது பயனுள்ளதாக இருக்கும், அவன் ஏதேனும் செய்யலாம்! புரிந்ததா?

குருதேவ், உங்களது பிரதமர், ஒரு தீவிர ஹிந்து தேசீயவாதி என்று பிரான்சில் புகழ் பெற்றிருக்கின்றார். இதற்கு என்ன பொருள்?

செய்தித்தாள்கள் பலவற்றைக் கூறுகின்றன. எனக்குத் தெரிந்த ஒரு விஷயம் என்னவென்றால், வலது சாரி, இடது சாரி, நடுநிலையாளர் என்று அரசியலில் இருக்கின்றார்கள். முக்கியமானது என்னவெனில், ஒருவர் பொறுப்பான பதவியை ஏற்கும் போது அனைவரையும் கவனிக்க வேண்டும்.
எனக்குத் தெரிந்தவரையில், பிரதமர் ஒரு நல்ல மனிதர். தேநீர் விற்றவராக இருந்து முன்னேறி நாட்டின் முதன்மை பதவியை அடைந்திருக்கின்றார். நாட்டின் வளர்ச்சியில் ஈடுபாடுள்ளவர். நல்ல பணியினைச் செய்வார் என்று எதிர்நோக்கி நம்புவோம். சரியான பாதையிலேயே சென்று கொண்டிருக்கின்றார். எனக்குத் தெரிந்தவரையில் வலது சாரி தீவிர வகை மனிதர் அல்ல. 

விவேகமான மற்றும் சக்தியுள்ள மனிதர். தனது பதினைந்து ஆண்டு கால ஆட்சிப் பணியில் அதை நிரூபித்திருக்கின்றார். மக்களை வறுமையிலிருந்து வெளிக் கொண்டு வரமுடியும் என்பதை உலகிற்குக் காட்டியிருக்கின்றார். எனவே, நாடு முழுமைக்கும் நற்பணி செய்வார் என்றும் சர்வ தேச சமூகத்திற்கு நேர்மறையான நற்பங்களிப்பார் என்றும் நம்புகிறோம்.

குருதேவ், இவ்வுலகில் பல்வேறு சமத்துவமின்மைகள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று ஆண்களுக்கும் பெண்களுக்குமிடையே உள்ள சமத்துவமின்மை. பெண்கள் பல்வேறு விதமான பாகுபாடுகளைனால் துன்புறுகின்றனர். ஏன் அவ்வாறு நிகழ்கின்றது? கீழை மற்றும் மேலை நாடுகளுக்கு  நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள்? நாம் என்ன செய்ய வேண்டும்?

மூன்று விஷயங்கள் உள்ளன. மகளிர் மேம்பாடு, மகளிர் மேம்பாடு, மகளிர் மேம்பாடு, !! மகளிர் மேம்பட்டு உணர வேண்டும். ஒரு போதும் பாதிக்கப்பட்டவர்களாக உணரக்கூடாது. பாதிக்கப் பட்டவர்களாக நீங்கள் உணரும் போது, ஆற்றலை இழந்து உற்சாகத்தை இழந்து, சக்தியற்றவாகி விடுகின்றீர்கள். பாதிக்கப்பட்ட விழிப்புணர்வு நிலை மற்றும் குற்ற விழிப்புணர்வு நிலை இரண்டினையும் ஆன்மீகப்பாதையே அகற்றுகின்றது.


பாதிக்கப்பட்டவர் என்னும் நிலையில் சிறிய மனதின் பிடியிலேயே இருக்கின்றீர்கள். ஆன்மாவை அடைய முடிவதில்லை. குற்றவாளி என்னும் நிலையிலும் இதுவே ஏற்படுகின்றது. செயல் நிலையிலேயே நிலைத்திருக்கும் போது ஆன்மாவை சென்றடைய முடியாது. ஆகவே உங்களையே குறை கூறிக் கொள்வதை நிறுத்திப் புகழ்ந்து கொள்ளத் துவங்குங்கள். ஏனெனில் புகழ்தல் என்பது  தெய்வீகக் குணம். பாதிக்கப் படுவதை நிறுத்துங்கள். பெண் என்பதால் பாகுபடுத்தப் படுவதாக எண்ணாதீர்கள். நீங்கள் உறுதியாக எழுந்தால் யாரும் உங்களை எதுவும் செய்ய முடியாது. உங்கள் உரிமைகளை உறுதியாக நிலைநிறுத்திக் கொள்ள உங்களுக்குச் சக்தி இருக்கின்றது.  நிச்சயமாக சமுதாயத்தில் பல மாறுதல்களை நாம் எடுத்து வர வேண்டும். ஆனால் அதை பாதிக்கப் பட்ட உணர்வின்றி நீங்கள் செய்ய வேண்டும்.