இருளிலிருந்து வெளிச்சத்திற்கு

ஞாயிறு, 11/01/2015, 

மும்பை, இந்தியா

(‘உலக அமைதிக்கும் மகிழ்ச்சிக்கும் பண்ணிசைப்போம்’ என்ற கட்டுரையின் தொடர்ச்சி இது)

உயர் பதவிகளில் இருக்கும் அரசியல்வாதிகளும் அரசு அதிகாரிகளும் இங்கே இருக்கிறார்கள். எந்த ஒரு மக்களாட்சிக்கும் நான்கு முக்கிய தூண்கள் உள்ளன.

1.        தர்மம்: ஆன்மிகம் மற்றும் மதரீதியான அமைப்புகளும் இதில் அடக்கம். இது சமூகத்தைத் தாங்கும் முதன்மையான தூண்.
2.        அரசியல்
3.        ஊடகங்கள் மற்றும்
4.        வியாபாரம், தொழில் மற்றும் பொருளாதாரம். இந்த நான்கு தூண்களும் ஒன்றாக வளராவிட்டால் எந்த ஒரு நாடும் முழுமையான வளர்ச்சி அடைய முடியாது.


நாட்டில் ஒரு புதிய அலை (அரசு) ஏற்பட்டிருக்கிறது. நாட்டிற்கு இது ஒரு நல்ல மாற்றம். நாட்டின் அரசியலில் இது ஒரு முக்கியமான மாற்றம். கடந்த சில வருடங்களில், ஆன்மிகமும் மதமும் கூட பல மாற்றங்களைக் கண்டிருக்கிறது. போலி மதத்தலைவர்கள் பிடிபட்டதை தொலைக்காட்சியில் பார்த்திருப்பீர்கள். இதையெல்லாம் மக்கள் அறிந்திருக்கின்றனர். இத்தகைய போலிகளிடமிருந்து மக்கள் விலகி வந்துவிட்டனர். இது துரதிருஷ்டவசமானது. ஏனென்றால், இது மிக முக்கியத்துவம் வாய்ந்தது. இதன் மரியாதையும் பெருமையும் வீழும்போது, மக்களுடைய தர்ம ஞாயங்களும் தன்னம்பிக்கையும் பெரும் பாதிப்புக்குள்ளாகிறது.

இந்தச் சமுதாயத்தை தூக்கி நிறுத்துவதில் ஆன்மிகம் மிகப் பெரும் பங்காற்றுகிறது. ஆன்மீகத் துறை தான் மக்களிடம் ‘நம்பிக்கையை’ நிலைநிறுத்த உதவுகிறது; தங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை, சமுதாயத்தின் மீதுள்ள நம்பிக்கையை மற்றும் இறுதியாக இறை மீதுள்ள நம்பிக்கையை. எனவே ஆன்மீகத்துறையின் செயல்பாடு ஆரோக்கியமான சமுதாயத்திற்கு மிக முக்கியம். தொழிலும் வர்த்தகமும் ஊழலிலிருந்து விடுபடும் போது உண்மையான செழிப்பு நிகழ்ந்து பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கிறது. செல்வாக்கால் பாதிக்கப்படாமல், பாரபட்சமில்லாமல் இருக்கும் ஊடகம், வெறும் பொழுதுபோக்கிற்கான கருவியாக இல்லாமல் நாட்டிற்கு சரியான வழியைக் காட்ட முடியும். எனவே இந்த நான்கும் ஒருங்கிணைந்து ஒன்றோடொன்று சரியான தொடர்பில் வேலை செய்தால், நிச்சயம் நம் நாடு முன்னேறும் நாடுகளில் ஒன்றாக இருக்கும்.

மகாராஷ்டிரத்தில் உண்மையாகவே ஏதோ தனிச்சிறப்பு இருக்கிறது.இந்த மகர சங்கராந்தியின் போது இங்கு வரவழைத்து விட்டீர்கள். எனவே, ‘டில்குல் க்ஹ்யா குட்-குட் போலா’ என்று சொல்ல நான் இங்கு வந்துவிட்டேன். அப்படி என்றால் இனிப்பை சாப்பிடு, இனிமையாகவும் பேசு என்று பொருள். மகர சங்கராந்தியின் போது இப்படிச் சொல்வது ஒரு மரபு. மகாராஷ்ட்ராவில் மகர சங்கராந்தியின் போது எள், இனிப்பு மற்றும் வெல்லம் ஆகியவற்றை தானம் செய்வது ஒரு வழக்கம். பல வருடங்களாக இங்கு இது ஒரு மரபு. நாளை நாசிக்கில் வியக்க வைக்கும் ஒரு நிகழ்ச்சி இருப்பது உங்களுக்குத் தெரியுமா? 5000க்கும் மேலான புல்லாங்குழல் இசைக் கலைஞர்கள் ஒரே மேடையில் இணைந்து வாசிக்கப் போகிரார்கள். இது ஒரு கின்னஸ் சாதனையாகவும் பதியப் போகிறது.

5000 வருடங்களுக்கு முன்பு ஒரு தெய்வீகப் புல்லாங்குழல் இந்த நாட்டில் வாசிக்கப்பட்டது. (ஸ்ரீ கிருஷ்ண பகவானுடைய காலமும் அவருடைய புல்லாங்குழலிசையும்).தெய்வீகப் புல்லாங்குழலின் இனிமையான இசை, வான் வெளியிலும் மக்களுடைய இதயத்திலும் இன்னும் இந்த நாடெங்கும் ஒலித்து வருகிறது. இங்கே மகாராஷ்ட்ராவில், இப்போது, 5000 வருடங்களுக்குப் பிறகு, 5000 கலைஞர்கள் ஒரே மேடையில் இணைந்து புல்லாங்குழல் இசைக்கப் போகிறார்கள். இந்த நிகழ்ச்சி தனிச்சிறப்பான ஈடு இணையற்ற ஒன்றாகும். இணையம் மூலமாகவும் தொலைக்காட்சியிலும் நீங்கள் அனைவரும் அதை நேரடி ஒளிபரப்பாகக் காணலாம். தொடக்கத்தில், 4000 கலைஞர்கள் பதிவு செய்திருந்தனர், பின்னர் மளமளவென அது 5000 ஆகிவிட்டது. யாரையும் விட்டுவிடாமல் விருப்பமுள்ளவர்கள் அனைவருக்கும் வாய்ப்புத் தரச்சொல்லி விழாக் குழுவினரிடம் சொன்னேன்.
நாம் ஒவ்வொருவரும் ஒரு புல்லாங்குழல் போல, எதிர்மறைகள் எல்லாவற்றையும் விலக்கி உள்ளிருந்து வெறுமையாகவும் காலியாகவும் நாம் மாறும்போது, நம்முடைய உள் இருப்பிலிருந்து இறைவனின் இசை ஒலிக்கத் தொடங்குகிறது. பிறகு, நம்மைச் சுற்றி உள்ள முழுச் சூழலும், வெளியும் இனிமையாக மாறிவிடுகிறது. நம் வாழ்வின் தாளமும் ஒலிகளும் ஒன்றிணைந்து பேரானந்த இசையாகிறது. அனைவரும் இதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

இப்படி ஒன்றன் பின் ஒன்றாக வியக்க வைக்கும் உலக சாதனைகள் செய்வதை மகராஷ்டிரா மக்கள் ஒரு பழக்கமாகவே ஆக்கிவிட்டனர். இந்த சாதனைக்காக மகாராஷ்டிரா மக்களை நான் பாராட்டுகிறேன். முன்பு தாள் நினாத் என்ற நிகழ்ச்சியில் 3000 தபேலா கலைஞர்கள் ஒரே மேடையில் இணைந்து வாசிக்க வைத்தனர். பூனாவில்,அந்தர்நாத் நிகிழ்சியில், மேடையில் 2500  பாடகர்களை கொண்டு நமது சாஸ்த்ரிய சங்கீதத்தை இணைந்து பாட வைத்தனர். கோலாப்பூரில், அபங்நாத் என்ற நிகழ்ச்சியில் பல சாஸ்த்ரிய சங்கீதப் பாடகர்களைக் கொண்டு அபங் கீர்த்தனைகளை பாடவைத்தனர்.

எனவே, மகாராஷ்டிரா தனக்கென ஒரு தனிச் சிறப்பைக்கொண்டுள்ளது. இத்தகைய நல்ல வேலைகளை மேலும் செய்து நமது பண்பாடான ‘டில்குல் க்ஹ்யா குட்-குட் போலா’ வைக் கடைபிடிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இனிமை குரலிலும் இதயத்திலும் இருக்கட்டும்.
சுற்றுச் சூழல் முழுதும் இனிமையும் நேர்மறை விஷயங்களும் நிறையட்டும் என்று பிரார்த்திக்கும் ஒரு பகுதி வேதத்தில் கூட உண்டு. உங்கள் இதயத்திலும் குரலிலும் இனிமை இருக்கும் போது, எல்லோரும் உங்களைச் சேர்ந்தவராகவே இருப்பார்கள், புதியவராக யாருமிருக்கமாட்டார்கள். 

இதுவே இந்தியாவின் தனிச் சிறப்பும், உலகத்திற்கான செய்தியும் கூட. இதை செய்தியாகவோ கட்டளையாகவோ எடுத்துக் கொள்ளலாம். ஆனால் நீங்களனைவரும் வாழ்வில் இனிமையும் இசைவும் பெற முழு முயற்சி எடுக்க வேண்டும். இன்று நாம் செய்த ஜெபத்தால், எல்லோரும் பெரும் வலிமையையும்  நேர்மறை தன்மையையும் பெற்றீர்கள், இதை வீட்டிலும் தொடர்ந்து செய்து வாருங்கள். ஜெபத்தில் உச்சரிக்கப்படும் மந்திரங்கள் எந்த மதத்தை அல்லது புனித நூலை வேண்டுமானாலும் சார்ந்ததாக இருக்கலாம். ஜெபித்தலை தினசரி தவறாமல் செய்துவரும்போது, உங்கள் உடல் உறுதியாகிறது, உங்கள் மனம் அமைதியடைந்து நேர்மறையாய் இருக்கிறது, உங்கள் நடத்தை இசைபடுகிறது, உங்கள் உறவுகள் மேன்மையடைகின்றன மற்றும் உங்கள் பேச்சு வியக்கத்தக்க அளவில் மேம்படுகிறது.

உங்கள் மனம் மலரும்போது, உங்களுடைய எல்லா கேள்விகளும் கவலைகளும் காணாமல் போகின்றன. பலர் என்னிடம் வந்து கூறியிருக்கிறார்கள், ‘உங்களைப் பார்க்கும் போது நிறைய கேட்க வேண்டும் என்று யோசித்து திட்டமிட்டு வந்தேன், ஆனால் உங்களைச் சந்தித்த அடுத்த கணம் என்னுடைய கேள்விகளும் பிரச்சினைகளும் மறந்துவிட்டன. நான் கூறுவேன், ‘ஓ, அது நல்லது, நான் தப்பித்தேன்.!’ (சிரிப்பு)

ஒரு கேள்வியை வியப்பாக மாற்றி, வாழ்க்கையில் புதிய மாற்றத்தைக் கொண்டுவரவேண்டும். தொண்டு, பயிற்சி மற்றும் சத்சங்கம் ஆகியவற்றை தவறாமல் கடைபிடிக்க வேண்டும். உறுதியான நாட்டுப்பற்றும் நாட்டின்மீது அர்பணிப்பும் வேண்டும். இத்தகைய நேர்மையான விழைவுடன் வாழ்வில் முன்னேறி செல்வோம்.  இறுதியாக நான் கூறுவது, எல்லோருக்குமான மேன்மையான உலகை உருவாக்க பொறுப்பேற்றுக் கொள்வோம். நீங்களனைவரும் ஏற்கனவே இந்தப் பொறுப்பை எடுத்துக் கொண்டிருப்பீர்கள் என்று எனக்குத் தெரியும், அந்த குறிகோளை புதுப்பித்து இப்பூவுலக வாழ்கையை ஒரு கொண்டாட்டமாக மாற்றுவோம்.


இறுதியாக நான் கூறுவது என்னவென்றால், எல்லோருக்குமான மேலான உலகை கட்டமைக்க நாமே முன் வந்து பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும். நமது இளைய தலைமுறைக்கு மேலான உலகை பரிசளிக்க செயலாற்றுவோம். மாசற்ற, குற்றமும் ஊழலுமற்ற உலகை, ஏராளமானவற்றை தன்னகத்தே வைத்திருக்கும் இந்த உலகை பரிசளிப்போம். அதற்கு அவர்கள் தகுதியானவர்கள்.