இந்தியா – பன்முகம் படைத்த நாடு

செவ்வாய், 27/01/2015  

பெங்களூரு, இந்தியா

(இது ‘புகார் செய்யவும் வேண்டாம், விளக்கவும் வேண்டாம்’ என்ற பதிவின் தொடர்ச்சி)

குடியரசு தின கொண்டாட்டங்கள் பற்றி நேற்று பேசினேன். குடியரசு தினத்தைக் கொண்டாடுவது ‘பிரம்ம ஞானத்தை’ (பிரம்மத்தை அல்லது முழுமையைப் பற்றிய அறிவு)மதித்துக் கொண்டாடுவது போலாகும். அது எப்படி? தாயின் கருவறையிலிருந்து நாம் பிறந்தபோது இந்த முழு உலகுக்கும் நாம் ‘பொது’வானவராகி விட்டோம். பிறப்புக்கு முன் நாம் தனி இடந்தில் இருந்தோமல்லவா!! மூன்று வயதிற்குப் பிறகு நாம் திரும்பவும் தனி ஆகிவிடுகிறோம். நமது சொந்த உலகில் ஒடுங்கி விடுகிறோம். ‘நான் மற்றும் எனது’ என்பதில் சிக்கிவிட்டோம்.‘என்னுடைய அம்மா’,‘என்னுடைய அப்பா’ என்று அதை மட்டுமே நினைக்கிறோம். மறுபடி நாம் தனியாகி விடுகிறோம். உங்களிடம் தனியாக ஏதுமில்லை, எல்லாம் பொதுவானது, ஒவ்வொன்றும் ஒவ்வொருவரும் உங்களுடையவர் என்ற உணர்தல் உங்களுள் எழும்போது – திரும்பவும் நீங்கள் ‘பொது’வாகி விடுகிறீர்கள். அது பொதுவரசு (குடியரசு – Re-public). நீங்கள் ‘த்விஜா’ ஆகிவிடுகிறீர்கள். அதாவது, விழிப்புணர்வு மற்றும் ஞானத்தின் பாதையில் நீங்கள் மறுபடி பிறந்திருக்கிறீர்கள், இரண்டாம் முறை பிறந்திருக்கிறீர்கள் என்று பொருள். ‘தனி’யிலிருந்து மறுபடி பொதுவாக ஆகியிருக்கிறீர்கள்.இதுவே ஞானியின் அறிகுறி. உங்களுக்குள் இருக்கும் உலகத்திற்கும் வெளியே உள்ள உலகத்திற்கும் உள்ள அத்தியாவசியமான ஒற்றுமையை நீங்கள் காண்பதே ஞானம். நீங்கள் உள்ளே வித்தியாசமாக உணர்ந்து, வெளியே வித்தியாசமாக நடந்து கொண்டால் அது மீள் குடியரசு (Re Public) அல்ல. நான் சொல்வது புரிகிறது?


கேள்வி  - பதில்

குருதேவ், நீங்கள் ஃபாரித் மகானின் பஜனைப் பாடல்களில் இருந்து “சப் சயானே ஏக் மட்”  (இறைவன் ஒன்றே என்பதை வேற்றுமையே இல்லாமல் ஞானிகள் கூறுவார்கள்) என்ற பாடலை நீங்கள் அடிக்கடி சொல்வீர்கள். ஆனால் இந்திய வரலாற்றைப் பார்த்தால், புத்தர் மற்றும் மகாவீரர் போன்ற மகான்கள் ஒரே நிலப்பகுதியில் பிறந்திருந்தாலும், வேறு வேறு பாதையில் சென்றனர். எல்லாம் ஒன்று என்றால் ஏன் இத்தனை வித்தியாசங்கள், முரண்பாடுகள்? தயவு செய்து விளக்குங்கள்.

சென்று சேரும் இடம் ஒன்று தான் என்றால் அதற்குப் பல வழிகள் இருக்க முடியும் அல்லவா? எனவே இதில் எங்கே முரண்பாடு? புத்தியைக் கொண்டு இதிலுள்ள ஆழமான உண்மையை கண்டறியாவிட்டால் இது முரண்பாடு போலத் தோன்றும்.

ஒரு குருவின் சீடர்களே தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்கிறார்கள்.ஏசுபிரான் ஒருவரே, ஆனால் இன்று கிருத்துவ மதத்தில் 72 வகைகள் இருப்பதைப் பார்க்கிறோம். முகம்மது நபிகள் ஒருவரே, ஆனால் இஸ்லாத்தில் 5 வகைகள் இருக்கிறது. ஒன்றை பின்பற்றுபவர்கள் மற்றொன்றை ஏற்றுக் கொள்வதில்லை, அவர்களோடு கலப்பதில்லை.வெவ்வேறு மதங்கள், கருத்துக்கள் இருந்தாலும் இவற்றுக்குள் முரண்பாடுகளோ அல்லது மற்றதை பகையாய் பாவிப்பதோ இங்கு இல்லை என்பதே இந்தியாவின் அழகு. சிலர் ஹனுமானின் பக்தர்கள், சிலர் மகாசக்தியை வணங்குபவர்கள், சிலர் வேறு கடவுள்களை வணங்குகிறார்கள். அவர்கள் தங்களுக்குள் சண்டை போடுகிறார்களா என்ன? நமது காலாச்சாரத்தில் அப்படி வேறு வேறாய் இருந்ததால் தான், மற்ற மதங்களின் மீதும் நம்பிக்கைகள் மீதும் நமக்கு சகிப்புத்தன்மை இயல்பாகவே இருக்கிறது. நான் சொல்வது புரிகிறதா?
இந்தியாவில் எத்தனை கடவுளர்கள் இருக்கிறார்கள்? ஆயிரக்கணக்கான கடவுள்கள் இந்தியாவில் உண்டு. ஒரு கடவுளை வழிபடுபவரானாலும் மற்ற கடவுளின் கோவில்களுக்கும் சென்று ஒருவர் வழிபடுகிறார் இல்லையா? அவர்களுக்குள் சண்டை போடுகிறார்களா என்ன? கடவுள் ஒருவரே என்று தெரிந்தாலும் மக்கள் சண்டையிடக் கூடும், ஆனால் பல கடவுள்கள் இருந்தாலும் மக்கள் மற்றவர்களுடைய நம்பிக்கையை மதித்து ஒற்றுமையாய் வாழ்கிறார்கள்.

கிருத்துவ மதத்தின் ஒரு பிரிவான ‘மறுபடி பிறந்தவர்’ (Born again)ஐச் சேர்ந்த ஒருவர் கத்தோலிக்க சர்ச்சுக்குள் நுழைய மாட்டார். கத்தோலிக்க பிரிவை சேர்ந்த ஒருவர் புனிதலூதர் சர்ச்சுக்குள் நுழையமாட்டார். புனித லூதரின் சர்ச்சைச் சேர்ந்தவர் பிரஸ்பைடீரியன் சர்ச்சுக்கு போக மாட்டார். அடுத்தவர்களின் வழிபாட்டுத் தலத்திற்குள் நுழையமாட்டார்கள்.ஆனால், இந்தியாவில் எல்லோரும் எல்லா இடத்திற்கும் போகிறார்கள் இல்லையா? இந்துக்கள் சர்ச்சுக்கோ, ஜைன கோவிலுக்கோ போவதை நீங்கள் பார்த்ததில்லை? ஜைனர்கள் இந்து கோவிலுக்குச் செல்வதை நீங்கள் பார்த்ததில்லை? இந்துக்கள் புத்தர் கோவிலுக்குப் போவதை நீங்கள் கண்டதில்லை? எனவே எல்லோரும் மற்ற வழிபாட்டுத் தலங்களுக்கும் தாராளமாய்ப் போய் வருகின்றனர். ஏன் இப்படி? ஏனென்றால், அவ்வளவு வித்தியாசங்களுக்கிடையேயும் ஒற்றுமையாய் வாழ்வது நமது பழக்கம். 

அதனால் தான் பகவத்கீதையில் ஸ்ரீ கிருஷ்ணர் இறைவனை அடைய ஒரு பாதையை மட்டும் போதிக்கவில்லை. கீதையில், ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகிறார், சிலர் விரதங்கள் மற்றும் பற்றற்ற தவ வாழ்கை மூலம் இறைவனை அடைகிறார்கள்; வேறு சிலர் தியானம் மூலம்,யோகப் பயிற்சிகள், யாகங்கள் செய்து இறைவனின் கருணையை வேண்டுகிறார்கள்; சிலர் ஜபம் செய்து இறைவனை வேண்டுகிறார்கள்; சிலர் தம் சுயத்தைப் பற்றிய ஞானத்தை அறியும் பாதை மூலம் இறைவனை அடைகிறார்கள்; இப்படிப் பல வழிகள்.

இறைவனை அடைய பல வழிகளும் நம்பிக்கைகளும் இருக்கிறது. இவை எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டு அதை மதிப்பது தான் ஒருவரை உன்னதமானவராக்கும். இந்தியாவில், எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் சரி, ஒரு ஞானி கொல்லப்பட்டதேயில்லை. அவரின் மூலம் அல்லது வேர் எதுவாக இருந்தாலும் சரி, ஒரு பிரம்மஞானி இந்தியாவில் எப்போதும் மிக உயர்வாகவே மதிக்கப்படுகிறார். “ஏன் ஒவ்வொருவருடைய மூக்கும் வித்தியாசமாக இருக்கிறது?” என்று ஏன் நீங்கள் கேட்கவில்லை. ஒரு கார் தொழிற்சாலையிலிருந்து ஒரே மாதிரியாக வெளிவரும் கார்களை போல, இறைவன் ஏன் மனிதர்களை ஒரே மாதிரியாக படைக்கவில்லை? ஒவ்வொருவருக்கும் தனித்தன்மை கொண்ட கைரேகை இருக்கும் போது ஏன் பலவிதமான ஞானப் பாதைகள் இருக்கக்கூடாது? இதையெல்லாம் பார்க்கும் போது, இறைவனுக்கு வெவ்வேறாய் இருப்பது மிகவும் பிடிக்கும் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

“குருதேவ், இறைவன் ஏன் இத்தனை விதமான காய்கறிகளைப் படைக்க வேண்டும்? கத்தரிக்காய் மட்டும் போதாதா?”, என்று நீங்கள் கேட்கவில்லை? பிறகு உங்களுடைய காலை, மதியம் மற்றும் இரவு உணவு என எல்லாவற்றுக்கும், ஏன் சிற்றுண்டிக்கும் கூட உங்களை கத்திரிக்காயை மட்டுமே உண்ண வைத்திருப்பார் கடவுள். இதை ஏன் நீங்கள் கேட்கவில்லை? இதைப் போல மகான்கள் வெவ்வேறு அணுகுமுறைகளை நம்பிக்கைகளை கொண்டிருக்கலாம். அதற்கு அவர்களுக்கு உரிமை உண்டு. அவர்கள் மற்றவர்களின் கொள்கைகளையும்,வழிகளையும் கேலி செய்ய வேண்டியதில்லை. ஞானத்தை தங்களின் இயல்பில் வெளிப்படுத்துகிறார்கள். நானும் என் வழியில் தான் பேசுகிறேன். உங்களுக்குப் பிடித்திருந்தால் எடுத்துகொள்ளுங்கள், இல்லையென்றால் விட்டுவிடுங்கள். நான் மாறப் போவதில்லை. (சிரிப்பு)

குருதேவ், இந்த படைப்பு மாயை என்றால், இந்த படைப்பின் ஒரு பகுதியான ஞானமும் மாயை. பிறகு உபநிஷத்களும் பண்டைய நூல்களும்  எதைத்தான் வெளிப்படுத்துகின்றன?

அப்படியென்றால் உங்கள் கேள்வியும் மாயை தான். ஒரு மாயைக்கு நான் ஏன் பதிலளிக்க வேண்டும்? (சிரிப்பு). எதையும் ஒப்பிட்டுப் பார்க்கக் கூடாது. இங்குள்ள ஒவ்வொன்றும் தனித்துவம் வாய்ந்தது, அததெற்கென ஒரு இடம் உள்ளது. எனவே அது மதிக்கப்படவும் போற்றப்படவும் வேண்டும்.