வெளிப்படுத்தும் கலை

வியாழக்கிழமை, 8 ஜனவரி 2015,

பெங்களூரு இந்தியா.



(நம்பிக்கையைத் திறம்பட வைத்துக் கொள்ளுங்கள் என்னும் இடுகையின் தொடர்ச்சி)

பல சமயங்களில், ஆணவம் மிகுந்த ஒருவர் புகழும் மரியாதையும் பெறுகின்றார், ஆனால் அடக்கமான ஒருவர் யாராலும் கவனிக்கப்படாமலேயே இருக்கின்றார். ஏன் ?

இது முற்றிலும் உங்களுடைய கருத்து. ஆணவம் மிகுந்த ஒருவர் மட்டுமே புகழும் மரியாதையும் பெறுகின்றார் என்பது கிடையாது. அப்படியானால், மகாத்மா காந்தி இந்த நாட்டு மக்களின் மரியாதையையும் ஆதரவையும் வென்றிருக்க முடியாது. ஆசார்ய வினோபா பாவே மக்களின் பெரும் மரியாதையை பெறவில்லையா என்ன? மகாத்மா காந்தி ஆணவம் மிக்கவரா? வினோபா பாவே அகம்பாவம் மிக்கவரா என்ன? ராமகிருஷ்ண பரமஹம்சர் பற்றிய நிலை என்ன? ஆகவே இது சொந்தக் கருத்து. இத்தகைய தவறான அபிப்பிராயங்கள் மனதில் இருக்கக்கூடாது.

நீங்கள் இயற்கையில் நல்லவர் ,ஆனால் மக்கள் உங்களிடமுள்ள நல்லவற்றைக்  கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், நீங்கள் உங்களை சரியாக வெளிப்படுத்திக் கொள்ளவில்லை என்று பொருள். உண்மையில் என்னவோ அதை உங்களால் முழுமையாக வெளிப்படுத்திக் கொள்ள முடியவில்லை. இதற்காக பிறரை குறை கூறாதீர்கள். சமுதாயம் அடிப்படையில் நல்லதே ஆகும். நீங்கள் நினைக்கும் அளவுக்கு மோசமானது அல்ல. உண்மையில் சமுதாயமும் மக்களும் நீங்கள் கருதுவதை விட மிக அதிகமாக மேலானது, உன்னதமானது 

எண்ணப்போக்குக்கு காரணம் என்னவென்றால், எந்தப் பிரச்சினையையும் பொதுப்படையாகவும், நிரந்தரமானதாகவும் கருதி அணுகுகின்றோம். அதனால், " அனைவருமே மோசமானவர்கள் " என்று கருதி விடுகின்றோம். அவ்வாறு அல்ல. என்னுடைய கண்ணோட்டபடிப் பாருங்கள். மக்கள் மோசமானவர்கள் அல்லர். மக்களையோ சமுதாயத்தையோ குறை கூறாதீர்கள். ஒவ்வொரு சமுதாயத்திலும் சமூக விரோத சக்திகள் உள்ளன. அதனால் சமுதாயம் முழுவதுமே மோசமானது என்று கூற முடியாது. அவ்வாறு கருதினால், உங்களை நீங்களே நியாயப்படுத்திக் கொள்வீர்கள் அல்லது பிறர் அனைவரும் நேர்மையானவர்கள் அல்லர் என்று எண்ணுவீர்கள். எல்லோருமே உருப்படாதவர்கள் என்று நீங்கள் கூறினால், நீங்களும் அவர்களில் ஒருவர் அல்லவா? இந்த நுண்ணிய புரிதல் உங்கள் மனதில் ஏற்பட  வேண்டும்.

குருதேவ், இந்தக் கேள்வியைக் கேட்க என்னுடைய மனம் வேதனைப்படுகின்றது. எவ்வாறு நம்முடைய சமுதாயத்திலிருந்து ஜாதிப் பிரச்சினையை விலக்குவது ?

வரலாற்றில் ஜாதியின் பெயரால் நம்முடைய நாட்டில் நிகழ்ந்த அனைத்தையும் திரும்பிப் பாருங்கள். இப்போதுள்ள நிலையுடன் அவற்றை ஒப்பிட்டுப் பாருங்கள். ஜாதியின் பெயரால் நிகழ்ந்துள்ள அத்தனை பிரச்சினைகளும் பெருமளவில் இப்போது குறைந்திருப்பதைக் காண்பீர்கள்.
உணவு விடுதிகளில் வெவ்வேறு ஜாதியினருக்கு வெவ்வேறு பானம் பருகும் டம்லர்களைத்   தருவார்கள். உண்மையில் பல்வேறு ஜாதியினர் ஒன்றாக அமர்ந்து உணருந்த மாட்டார்கள். ஜாதியின் பெயரால் ஏராளமான உரசல்களும் விரோதங்களும் இருந்து வந்தன. இன்று உணவு விடுதிகள், திரையரங்குகள், மருத்துவமனைகள் இவற்றில் ஜாதிப் பிரிவினை உள்ளதா என்ன? ஆனால் திருமணங்களில் மட்டும் ஜாதிக்கு முக்கியத்துவம் அளிக்கப் படுகின்றது. ஆனால் மக்கள் படிப்படியாக இதைக் கடந்து வருகின்றார்கள். நாடெங்கிலும் வெவ்வேறு ஜாதியினர் திருமணம் செய்து கொள்கின்றனர். இரண்டாவதாக, இளைய தலைமுறையினருக்குச் சரியான கல்வியைத் தருவதன் மூலம் இந்தப் பிரச்சினையை நீக்கலாம்.

பாருங்கள்,யாரேனும் தங்களுடைய ஜாதிப் பழக்கங்களைப் பின்பற்ற விரும்பினால் சரி. அவ்வாறு செய்வதில் தவறேதும் இல்லை.ஆனால் ஒரு ஜாதி உயர்ந்தது, வேறொரு ஜாதி தாழ்ந்தது என்று எண்ணுவது தவறு ஆகும். எந்த ஜாதியும் மற்றொன்றுக்கு உயர்ந்ததோ, அல்லது தாழ்ந்ததோ அல்ல.

வேதங்களில் தெய்வத்தின் பாதங்களிலிருந்து சூத்திரர்கள் தோன்றினர் என்று கூறப் பட்டுள்ளதே என்று இப்போது நீங்கள் கேட்கலாம். பாதங்கள் பயனற்றதோ முக்கியத்துமற்றவையோ ஆகுமா? உங்கள் பாதங்கள் பயனற்றவை என்று எண்ணினால், எவ்வாறு நடப்பீர்கள்? உழைப்பாளிகளின் மூலமே இயக்கம் பெறுகின்றது. சூத்திர்கள் என்றால் உழைப்பாளிகள் என்று பொருள். அத்தகையவர்கள் இன்றி எவ்வாறு சமுதாயம் இயங்கும்? அதனால் தான், வேதங்களில், விராத் புருஷரின் (அகிலாண்டேஸ்வரர்) பாதங்களிலிருந்து தோன்றிய சூத்திரர்களால் சமுதாயம் இயங்கியது என்று கூறப்பட்டுள்ளது. நாம் தான் வேதத்தில் கூறப்பட்டுள்ளதை தவறாக புரிந்து கொள்கின்றோம். அவர்களை தாழ்ந்தவர்கள் என்று கருதுகின்றோம். சரியல்ல.

விருந்தினர் வருகை தரும் போது அவரது பாதங்களை தொட்டு வணங்குகின்றோமா அல்லது தலையை தொட்டு வணங்குகிறோமா? முதிய அல்லது மதிப்பிற்குரிய ஒருவர் உங்கள் வீட்டிற்கு வரும்போது அவரது பாதங்களை கெளரவிக்கின்றோமா அல்லது தலையை கழுவுகிறோமா? இது பாத பூஜை என்றே அழைக்கப்படுகின்றது.மிகச் சிறந்த பூஜை முறையாகும். ஒரு விருந்தினரை கௌரவிக்க இதை விடச் சிறந்த முறை வேறொன்றுமில்லை. இம்முறையை நாம் மீண்டும் துவங்க வேண்டும். ஆனால் இதைக் குறிப்பிட்ட ஒருவருக்கு பாத பூஜை என்று கூறவில்லை. சமுதாயத்தில் உழைப்பாளிகளுக்கு என்றே பொருள்படும். உழைக்கும் வர்க்கமே சமுதாயத்தை இயக்குகின்றது. எனவே அவர்களும் மதிக்கப் பட்டு கௌரவிக்கப்பட வேண்டும்.வேத வாக்கியமும் அதையே குறிப்பிடுகின்றது.

ருத்ராபிஷேக செய்யுள்கள் ஒன்றில் கடவுள் தீண்டத் தகாதவர் என்றும் சமுதாயத்தின் கடை நிலையில் உள்ளவர் என்றும் கூறப் பட்டுள்ளது. அதனால் கடவுள் தாழ்ந்தவர் மற்றும் பயனற்றவர் என்னும் பொருள் கொள்ளத் தகுமா என்ன? இல்லவே இல்லை. அது தவறான புரிதல் ஆகும். பல ஞானிகளும் முனிவர்களும் சமூகத்தின் தாழ்ந்த பிரிவிலிருந்து தோன்றியிருந்திருக்கின்றனர். அவர்களில் மிகச் சிலரே உண்மையில் பிராமணர்கள் ஆவர். ரிக் வேதத்தில் கூறப்பட்டுள்ள , 17 பேர் பெண் ரிஷிகள் ஆவர். பல மகா ரிஷிகளும் ரிஷிகளும் தலித் என்றழைக்கப் படும் பிரிவினர் ஆவர். அவர்கள் மிகச் சிறந்த மறைகளை எழுதியுள்ளனர். அவதாரங்கள் எனப்படும் ஸ்ரீ ராமரும் ஸ்ரீ கிருஷ்ணரும் கூட பிராம்மண வகுப்பைச் சேர்ந்தவர் அல்லர். ஆய்ந்து பார்த்தால், ஸ்ரீகிருஷ்ணர் இன்றைய OBC (மிகப் பிற்பட்ட) பிரிவினைச் சார்ந்தவர். இவற்றையெல்லாம் நீங்கள் மக்களுக்குக் கூறிப் புரிய வைக்க வேண்டும். மக்கள் இவற்றைப் புரிந்து கொள்ளும் போது ஜாதிப் பிரிவினை முடிவுக்கு வந்து விடும்.

குருதேவ், பல ஆண்டுகள் அலைந்து திரிந்து உங்களைக் கண்டெடுத்திருக்கின்றேன். இங்கிருந்து நான் எங்கே செல்ல வேண்டும் என்று கூறுங்கள்.

அலைந்து திரிந்திருப்பது உங்களை களைப்பாக்கியிருக்கும். இங்கே வந்து விட்டதால் சற்று இளைப்பாறுங்கள். மகிழ்ச்சியாக இருங்கள். எனது பள்ளி நீங்கள் பட்டம் பெற்றாலும் உங்களை மகிழ்வாக தங்க விடும். சாதரணமாக பட்டம் பெற்ற பின்னர் பள்ளியை விட்டு வெளியேற வேண்டும். ஆனால் இது அவ்வாறல்ல. ஒரு நிலையிலிருந்து அடுத்த நிலைக்குச் செல்ல உங்களை அலைக்கழிக்க மாட்டேன். உங்களை நேராக உங்களது இறுதி இலக்கினை அடைந்து நிலைபெறச் செய்யும். திருப்தியுடனும், ஆனந்தத்துடனும் நீங்கள் இருக்கலாம். இலக்கினை அடைய தேவையானவற்றை எல்லாம் நீங்கள் இங்கு பெறுவீர்கள். வீட்டினை (இங்கு ஒருவரது இறுதி இலக்கு என்னும் பொருள்) அடைந்த பிறகு அங்கிருந்து எங்கு செல்லவேண்டும் என்று கேட்பீர்களா என்ன? ஆகவே நீங்கள் வீட்டில் இருக்கின்றீர்கள். இளைப்பாறுங்கள்.

இன்று  சமுதாயத்தில் பணம் மட்டுமே பேசுகின்றது. செல்வந்தர்கள் மரியாதையைப் பெறுகின்றனர். பணமற்றவர் நன்றாக நடத்தப்படுவதில்லை

ஆம், உண்மை தான்.எல்லா இடங்களிலும் பணவசதி உள்ளவர்களே மரியாதையுடன் நடத்தப் படுகின்றனர். ஏழைகளும், நடுத்தர வர்கத்தினரும் அந்த அளவு மதிப்பையும் மரியாதையையும் அடைவதில்லை. பல சமயங்களில் மக்கள் "பலமே சிறந்தது" என்னும் கொள்கைக்கேற்பப் பிறரை நடத்துகின்றனர். உலகின் பல நாடுகளும் இந்நிலையையே காண்கின்றன. அளவில் பெரிய நமது நாடு உலகிலேயே மிகச் சிறந்த ஜனநாயக நாடு என்றாலும் சர்வ தேச அளவில் சரியான அங்கீகாரத்தை பெறுவதில்லை ஏன்? ஏனெனில் இந்தியா, ஏழை மற்றும் மூன்றாம் நிலை நாடாகக் கருதப்படுகின்றது. எனவே, பணத்தின் அடிப்படையில் வேறுபாடு என்பது எங்கும் உள்ளது. இதை நீக்க இரண்டு வழிகள் உள்ளன:
1. ஏழைகள் மற்றும் சமூகத்தில் ஓரங்கட்டப்பட்டுள்ள பிரிவினரிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்துதல்.
2. பணக்காரர்களின் மனதில் அனுதாபம் மற்றும் கருணை உணர்வுகளைத் தோற்றுவித்தல்
சமுதாயத்தில் ஏழை பணக்காரர் என்பதே இல்லாத முழுமையான சமத்துவத்தை ஏற்படுத்த இயலாது. நாற்பது ஆண்டுகளாக அத்தகைய சமூக உருமாதிரியை கம்யுனிச நாடுகள் சோதித்துப் பார்த்தன. பணக்காரர் ஏழைகளாகவும் ஏழைகள் மிக ஏழைகளாகவேயும் ஆனதையே அவை கண்டுபிடித்தன. அந்த முயற்சி முற்றிலும் தோல்வி அடைந்தது. சீனாவும் இதை முயன்று தோல்வி அடைந்தது. தைவான் என்னும் சிறு தீவு செல்வமும் செழிப்பும் மிக்கதாக ஆனபோது சீனா ஏழை நாடாகவே பின்தங்கி விட்டது. ஆனால் அதற்குப் பின்னர், சீனா தன்னுடைய வெளிநாட்டு மற்றும் பொருளாதாரக் கொள்கையை மாற்றிக் கொண்டு விட்டது. வெளிநாட்டு வாணிபம், தன்னுடைய நாட்டு மக்களின் செயல்திறன் அதிகரிப்பு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்தது. அது பெருமளவுக்கு சீன மக்கள்  சுய திறன் நம்பிக்கை செயல்திறமை ஆகியவற்றை அடைய உதவி, தங்களுக்கும் தங்களுடைய குடும்பத்திற்கும் தேவையான பணத்தை சம்பாதிக்கும்  வழியை ஏற்படுத்தியது.

எப்போதுமே ஏழைகள் இந்த சமுதாயத்தில் சுரண்டப்பட்டவர்கள் என்று கருதாதீர்கள்.அது போன்று பணக்காரர்களும் தங்கள் லாபத்திற்காக பிறரை சுரண்டுபவர்கள் மட்டுமே அல்லர். இது சிலர் பிறர் மனங்களில் பரப்பும் தவறான கருத்து. அவர்கள் பணக்காரர்கள், சுரண்டும் நேர்மையற்றவர்கள், என்று போதித்து வருகின்றனர். அனைத்துப் பணக்காரர்களுக்கும் நேர்மையற்று ஏழைகளை  ஏமாற்ற வேண்டிய அவசியம் இல்லை. தவறான கருத்து. இத்தகைய தவறான கருத்துக்களைப் பரப்புவதன் மூலம் ஏழை பணக்காரரிடையே மோதல் மற்றும் விரோதத்தை உருவாக்குகின்றனர்.
அவ்வாறு தவறாக வழிநடத்தப் பட்டவர்கள், பிறரிடம்,"ஒருவர் செல்வந்தரானால் நிச்சயம் பிறரை சுரண்டியிருப்பார். நேர்மையற்ற வழியிலேயே சம்பாதித்திருப்பார்" என்று கூறுவார்கள். மேலும், அவர்கள்," பார்! அவன் காரில் போகிறான், நீ பொது போக்குவரத்து பஸ்ஸில் போகிறாய்.உன்னைப் போன்றவர்களை ஏமாற்றியே அவன் இவ்வாறிருக்கின்றான்" என்றும் கூறுவார்கள் அல்லது, "பார்! நல்ல பள்ளியில் அல்லது மருத்துவக் கல்லூரியில் படிக்கின்றான். உன்னால் முடியவில்லை. அவனைப் போன்ற பணக்காரர்களால் நீ சுரண்டப்பட்டிருக்கின்றாய்" என்று கூறுவார்கள்.
இத்தகைய மனப்போக்கு மிக அபாயகரமானது.

ஒருவன் வாழ்வில் தன்னுடைய சுய திறன், மற்றும் அவனுக்குக் கிடைத்த வளங்களின் மூலம் முன்னேறக் கூடும். ஒருவன், நேர்மையான வழியில் செல்வந்தன் ஆகும் போது நன்றியுடனும் திருப்தியுடனும் இருக்க வேண்டும். அத்தகைய ஒருவர், பிறர் முன்னேறவும், பலர் வேலை வாய்ப்புப் பெற்று சம்பாதிக்கவும் உதவலாம்.

இன்று கேரளாவில் ஏன் ஒரு நல்ல தொழிற்சாலை அல்லது நல்ல தொழிலதிபர் இல்லை? ஒருவர் தொழிலதிபரானால் உடனே மக்கள் அவர் சுயநலத்திற்காக பிறரைச் சுரண்டுவார் என்று போதிக்கப் படுகின்றனர். மேற்கு வங்காளத்திலும் இது போன்றே நிகழ்கின்றது. அரசாங்கமும் அதற்கு ஏற்றாற் போல் சட்டங்களை உருவாக்கி தொழில் நிறுவனங்கள் தொடங்க சிரமங்களை தோற்றுவிக்கின்றது. ஒரு தொழில் நிறுவனத்தைத் துவங்காமல் எவ்வாறு வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்த முடியும்? எனவே "சுரண்டுபவன் பணக்காரன், சுரண்டப் படுபவன் ஏழை " என்னும் கூற்று தவறானது. மக்கள் ஏழைகளாகக் காரணம் அவர்களது கெட்ட பழக்கங்களும் சோம்பேறித்தனமுமே ஆகும்.

உதாரணமாக,ஒரே பள்ளியில் படிக்கும் பத்து மாணவரில் ஏன் சிலர் வாழ்வில் முன்னேறுகின்றனர், சிலர் பின்தங்கி படிப்பைக் கூட விட்டு விடுகின்றனர்? இது வேறு யாராவது செய்த செயலா? ஒரு படித்த குமாஸ்தா ஒரு நாளில் சம்பாதிக்கும் தொகையை ஒரு தொழிலாளியும் சம்பாதிக்கின்றான். இரண்டும் ஏறக்குறைய சமமாகவே இருக்கின்றது. சில இடங்களில் அதிகமாகக் கூட இருக்கின்றது. ஆனால் சாதரணமாக ஒருவர் வசதியாகவும் மற்றவர் ஏழ்மையிலும் இருப்பதை காண்கின்றோம். ஏன்? மது அருந்துதலே காரணம். ஒரு ஏழை தன்னுடைய வருமானத்தில் 60% மது குடிப்பதில் செலவிட்டு விடுகின்றான்.அப்படியானால் எவ்வாறு வறுமையை ஒழிக்க முடியும்? இது ஒருவன் தனக்குத் தானே செய்து கொள்ளும் குற்றம் ஆகும். மதுபானம் இன்று நம் நாட்டில் ஒரு மிகப் பெரிய பிரச்சினை.மது விற்பனை முன்பிருந்ததை விட மூன்று அல்லது நான்கு மடங்கு அதிகமாகி விட்டது.இது உடல் நலத்திற்குக் கேடு, மேலும் ஏழைகளையும் சமுதாயத்தில் ஓரங்கட்டப்பட்ட மக்களையும் வறுமைக் கோட்டிற்கு மேலே வரவிடாமல் செய்கின்றது.