விழித்தெழுந்து தேசத்துக்கு சேவை செய்யுங்கள்

ஜனவரி 09, 2014

பெங்களூரு, இந்தியா

கேள்வி - பதில்

கே: குரு கோவிந்த சிங் அவர்கள் ஒரு போராளி. ஒரு புனிதர் போராளியாக இருக்க முடியுமா?

குருதேவ்: முழுமையாக! புனிதர்கள் போராளியாக இருந்திருக்கிறார்கள். விஸ்வாமித்திரர், பரசுராம், போன்றவர்கள். பல ரிஷிகள் போராளியாக இருந்ததை ஸ்ரீமத் பாகவதத்தில், காணலாம். குரு கோவிந்த சிங் அவர்கள், ‘சந்த் சிப்பாஹி பானோ” (ஒரு புனிதர் போராளியாக வேண்டும்) என்று முழங்கினார். உண்மையில் ஒரு புனிதர் மட்டுமே போராளியாக வேண்டும். தூய்மையான இதயம் கொண்ட ஒருவர் போராளியாக மாறும் போது எல்லோருக்கும் நன்மை ஏற்படும். கோபமும், பேராசையும் கர்வமும் கொண்ட ஒருவர் போராளியானால், அவர்கள் குழப்பம் தான் ஏற்படுத்துவார்.

மகாத்மா காந்தி அவர்களும் இந்த வகையைச் சேர்ந்தவர் தான், அவர் ஒரு மகானாகவும் போராளியாகவும் இருந்தார். நம் ஒவ்வொருவர் உள்ளேயும் ஒரு புனிதரும் ஒரு போராளியும் இருக்கிறார்கள், இது தான் நேரம், அவரை எழுப்புங்கள். 



ஒரு சிப்பாயாகவும் புனிதராகவும் இருக்க, இந்தியாவில், 2014ல் ஒரு வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. உங்களுக்குள்ளே தூங்கிக் கொண்டிருக்கும் சிங்கத்தை தட்டி எழுப்புங்கள்.இந்தியா வீழ்ந்திருக்கிறது, எல்லா வகையிலும் அது வீழ்ச்சி அடைந்திருக்கிறது. ஆன்மீக உலகில் கூட, புதிதான விஷயங்கள் பேசப்படுகிறது. மிக அதிக அளவு தரக்குறைவு ஏற்பட்டிருக்கிறது. எனவே முதலில், இந்தியாவின் அரசியல் சுத்தம் செய்யப்பட வேண்டும். அதற்காக நீங்கள் எழுந்து நிற்க வேண்டும். நம் வீட்டிற்கு காவலாளியை வேலைக்கு வைத்தால், எட்டு மணிநேரம் தான் வேலை தர முடியும், அல்லவா?

ஒரு நாளுக்கு, மூன்று காவலாளிகள். எட்டு மணி நேரத்திற்கு ஒரு முறை அவர்கள் மாறுகிறார்கள், ஏனென்றால் எட்டு மணி நேர வேலைக்குப் பிறகு அவர்கள் களைப்படைகிறார்கள்! எனவே, வீட்டில் காவலாளியை எட்டுமணி நேரத்திற்கு ஒரு முறை மாற்றுகிறோம், அதே காவலாளியை பத்து வருடங்கள் வேலைக்கு வைத்தால் எப்படி வேலைக்கு ஆகும்! களைப்படைந்த ஓருவரை இழுத்து காவல் வேலை செய்ய வைத்தால், அது அநீதியா இல்லையா. தொழிலாளிகள் சட்டத்திற்கு எதிரானது (சிரிப்பு)! ஒரு மாற்றம் தேவை. அவ்வப்போது ஒரு மாற்றம் தேவை.

நாம் எந்தக் கட்சியையும் சேர்ந்தவர்கள் அல்ல, நாம் எல்லோரையும் சேர்ந்தவர்கள். ஒரு உச்ச நீதிமன்ற நீதிபதி எந்த கட்சியையும் சேர்ந்தவர் அல்ல, அவர் எல்லோரையும் சேர்ந்தவர் அல்லவா? நாட்டின் குடியரசுத் தலைவர் எல்லோருக்குமானவர். அதைபோலவே,நாம் எல்லோருக்குமானவர்கள். எனவே, மாற்றம் தேவை என்று நாம் சொல்லலாம். அந்த மாற்றத்தை கொண்டு வருவது உங்கள் கையில் இருக்கிறது.

சரி, மாற்றம் தேவையென்றால், யாரவது புதியவரை பிடிக்க வேண்டுமா? யாருக்காவது துடைப்பம் கொடுத்து சுத்தம் செய்யச் சொன்னால், முதலில் அவர்கள் தாழ்வாரத்தை சுத்தம் செய்ய சொல்லப்பட வேண்டும், பிறகு அந்த வீட்டை உள்ளிருந்து சுத்தம் செய்ய வேண்டும். துடைப்பத்தை கொடுத்து விட்டு, இப்போது தாழ்வாரத்தை சுத்தம் செய் என்று சொல்லிவிட்டு உடனேயே இப்போது வீட்டையும் சுத்தம் செய் என்று சொன்னால் அந்த தாழ்வாரமும் சுத்தமாகாது வீடும் சுத்தமாகாது.

மேலும், எந்தக் கை துடைப்பத்தை வைத்திருக்கிறது என்று எப்போதும் பார்க்க வேண்டும். யாரை மாற்ற விரும்புகிறோமோ அவர் வேறு ஒரு வடிவத்தில் வராமல் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நான் யார் ஒருவரையும் பற்றி பேசவில்லை, ஆனால் ஒரு மாற்றம் தேவை. வேலையில் இருக்கும் அவர் சற்று களைப்பாய் இருந்தால், அவரை சற்று ஓய்வெடுத்துக் கொள்ள சொல்லுங்கள்! ஓய்வில்லாமல் வேலை செய்து கொண்டிருந்தால் மோசடி மேல் மோசடி நடைபெறும். எனவே நாம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். ஒரு மாற்றத்திற்காக எல்லோரும் வேலை செய்ய வேண்டும்.     

கே: நான் குழந்தையாய் இருந்த போது பலவந்தப்படுத்தப் பட்டேன். அந்த மனிதரை மன்னிக்க மிகச் சிறந்த வழி என்ன?

குருதேவ்: பலவந்தப்படுத்துபவர்கள், தாமே ஒரு பாதிக்கப்பட்டவராக இருப்பார் அல்லது அறிவிலியாய் இருப்பார். அறிவிலியாய் இருப்பது அவர்கள் குற்றமல்ல. அவர்களுக்கு யாரும் கற்பிக்கவில்லை. அவர்கள் மீது நீங்கள் பரிதாபமும் பரிவும் கொள்ள வேண்டும். அவர்கள் பாதிக்கப்பட்டவர்களாய் இருந்து குற்றம் செய்பவர்களாய் மாறிவிட்டால், அப்போதும் அவர்களுக்குப் பரிவு தேவை. தங்களைப் பற்றி தாமே அறிந்துகொள்ள அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவேயில்லை, தங்கள் உணர்சிகளை கட்டுப்படுத்த அவர்களுக்கு வாய்ப்புக் கிடைக்கவேயில்லை. அவர்களுக்குத் தங்கள் நடத்தையைக் கட்டுபடுத்த, அல்லது தாமே பழகிக் கொண்ட தீய பழக்கங்களிலிருந்து விடுபட கற்றுத் தரப்படவில்லை. இந்த வழிகாட்டுதல் இல்லாமலிருக்கிறது.

இந்த கோணத்தில் பார்த்தால், ஒவ்வொரு குற்றவாளிக்குள்ளும் ஒரு பாதிக்கப்பட்டவர் உதவிக்காக அழுது கொண்டிருப்பதைக் காண்பீர்கள். குற்றவாளிக்குள் ஒரு பாதிக்கப்பட்டவர் இருப்பதை நீங்கள் உணரும் போது, உங்கள் கோபம், வெறுப்பு மற்றும் சலிப்பு ஆகியவை அப்படியே விலகுகின்றன. நீங்கள் எதுவுமே செய்யவேண்டாம், இது தானாகவே மறைந்துவிடும்.

சூழ்நிலையை விசாலமான பார்வை கொண்டு பார்க்க வேண்டும் என்று இதனால்தான் நான் சொல்கிறேன். மேலும், நீங்கள் உங்களுக்காக அவர்களை மன்னியுங்கள், அவர்களுக்காக வேண்டாம். மன்னிக்கும் போது என்ன நடக்கிறது? நடந்து போன விஷயங்களிலிருந்து, அந்தத் துயரத்திலிருந்து உங்கள் மனம் விடுபட்டு நீங்கள் மேலே முன்னேறிச் செல்கிறீர்கள். மேலும், மற்றவர்களுக்கு உதவுங்கள், அந்த வலையில் வீழ்ந்து கொண்டிரும் பலர் இருக்கிறார்கள். 

அவர்களுக்கு உதவ நீங்கள் என்ன செய்ய முடியும் என்று பாருங்கள். இதைத் தான் நாம் செய்ய வேண்டும். நடந்ததை விதியாகவும், நடக்கப் போவதை உங்கள் மதியாகவும் பார்த்து, இப்போதைய கணத்தில் சுறுசுறுப்பாய் செயல் வீரராய் இருங்கள். உங்களைச் சுற்றி உள்ள உலகத்திற்கு ஆகச் சிறந்ததை செய்யுங்கள்.

கே: சஞ்சயரிடம் என்ன சிறப்பினால் மகாபாரதப் போரில் நடப்பதை அவரால் பார்க்க முடிந்தது? அந்த தெய்வீகப் பார்வை எது?

குருதேவ்: அந்தக் காலத்தில் தொலைகாட்சி இல்லை, மக்கள் தங்கள் மனங்களை அதற்குத் தகுந்தார் போல பயிற்சி அளிக்க வேண்டியிருந்தது. தியானம் செய்து விஷயங்களை பார்க்கும் அளவுக்குத் திறன் பெற அவருக்கு எவ்வளவு நேரம் பிடித்ததோ நமக்குத் தெரியாது. ஆனால் அது பெறக்கூடிய ஒன்று. நம் எல்லோருக்கும் அந்தச் சக்தி இருக்கிறது. இதயம் சுத்தமாகவும், மனம் அமைதியாகவும் இருந்து, உட்கார்ந்து ஒரு விஷயத்தில் மனதைக் குவித்தால், நடப்பவை நமக்குத் தோன்றும். இது உள்ளுணர்வு அல்லது உள்ளிருக்கும் விழிப்புணர்ச்சி என்றும் அழைக்கப்படுகிறது. உங்களில் எத்தனை பேர் இதை அனுபவித்திருக்கிறீர்கள்? (பலர் கைகளை உயர்த்துகிறார்கள்) தியானத்தினால் இது அதிகரிக்கும்.

கே: குருதேவ், பணம் தீயதா அல்லது நாம் தீயவர்களா? நம்மிடம் பணம் இருக்கும் போது பேராசையும் வருகிறது. பணத்துடனான நம் உறவு எப்படி இருக்க வேண்டும்?

குருதேவ்: பணமும் தீயதல்ல, நீங்களும் தீயவறல்ல. எதையும் யாரையும் தீயதாகக் கருத வேண்டாம் – அது பணமோ அல்லது ஒருவரோ. நீங்கள் பேராசை கொள்ள வேண்டுமென்றால், அதிகம் தொண்டு செய்ய பேராசை கொள்ளுங்கள். நீங்கள் ஒன்றை தீயவையாக கருதினால், நீங்கள் சிக்கிக் கொள்வீர்கள். எதுவுமே தீயதல்ல. நம் நாட்டில், பணம் என்பது இலட்சுமி (செல்வத்தின் கடவுள்) தேவியாகக் கருதப்படுகிறது, இலட்சுமி நிச்சயம் தீதல்ல.

கே: அரபு மக்களுக்கும், இந்திய மக்களுக்கும் பொதுவாக ஏதேனும் உள்ளதா?

குருதேவ்: நிச்சயமாக,நாம் எல்லோரும் ஒரே காற்றை, ஒரே சூரியனை உபயோகிக்கிறோம். நாம் அனைவரும் பூமி என்ற கிரகத்தின் மேலே இருக்கிறோம்! இந்தியாவிலிருந்து வளைகுடா நாட்டுக்குச் செல்லும் காற்றையோ, அங்கிருந்து இந்தியாவுக்கு வரும் காற்றையோ நம்மால் தடுக்க முடியாது. இந்தியாவிலிருந்து குளிர்ந்த காற்று வீசுவதாக முஹம்மது பைகம்பர், முஹம்மது இறைதூதர், அவரே சொல்லியிருக்கிறார். நூற்றாண்டுகளாக அப்படித் தான் இருந்துவருகிறது! இந்தியாவில் எப்போதும் இணக்கம் இருந்து வந்திருக்கிறது.

மற்ற பகுதிகளில் மக்கள் பழி சுமத்தப்பட்ட போது, இந்த நிலம் இணக்கத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. யூதர்கள் உலகெங்கும் பழிக்கப்பட்ட காலத்தில், அவர்கள் இந்தியாவுக்கு வந்தபோது அவர்கள் வர வேற்கப்பட்டனர். இந்த நாட்டில் யாரையும் பழிக்கவில்லை. யூதர்கள் பழிக்கப்படவில்லை,பார்ஸிகள் பழிக்கப்படவில்லை, முஸ்லிம்கள் பழிக்கப்படவேயில்லை. கிருத்துவர்கள் முதல் நூற்றாண்டில் இங்கே இருந்தனர். இயேசு பிரானின் சீடர்களுள் ஒருவரான தாமஸ் இந்தியாவிற்கு வந்தார். அவர் ‘சந்தேக தாமஸ்’ என்று அழைக்கப்பட்டார். அவர் இந்தியாவிற்கு வந்தார், அவர் வரவேற்கப்பட்டார். இந்த நிலம் வேற்றுமையில் ஒற்றுமையை என்ற கொள்கையை எப்போதும் மதித்து வந்திருக்கிறது. எனவே பல பொதுவான விஷயங்கள் இருக்கிறது. ‘இஸ்லாமும் இந்துமதமும்’ என்ற நூலை நான் எழுதியிருக்கிறேன். இந்த இரு மதங்களுக்கிடையே உள்ள பொதுவான விஷயங்களை அதில் காணலாம். அதை போலவே கிருத்துவ மதம் மற்றும் இந்துமதம் பற்றியும் எழுதியிருக்கிறேன், நீங்கள் அதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

கே: உங்கள் புகைப்படம் ஏன் எல்லாவிடத்திலும் இருக்கிறது? அகங்காரம் பற்றி என்ன சொல்கிறீர்கள்?

குருதேவ்: என் புகைப்படம் எல்லா இடத்திலும் இருப்பதை நான் விரும்பவில்லை. மக்களுக்கு நான் இதை சொன்னாலும், அவர்கள் கொண்டு வந்து விடுகிறார்கள். என்னுடைய ஒரு பெரிய உருவப்படத்தை Dr.லாரன்ஸ் கார்டரும் அட்லாண்டாவில் செய்திருக்கிறார் (சிரிப்பு). அங்கே பல்கலைக்கழகப் புகழடைந்தோர் வளாகத்தில் அதை வைத்திருக்கிறார். உங்களுக்கு ஒரு நிகழ்வை சொல்ல விரும்புகிறேன். ஒரு முறை நான் விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்தேன், அப்போது ஒரு அரசியல்வாதியான மந்திரியும் பயணம் செய்தார். கீழே இறங்கியவுடன், அந்த அரசியல்வாதி வெளியே செல்ல முற்பட்டார். அங்கே சுமார் 200 பேர் அவருக்கு மாலை போட முயற்சித்தனர். அவரோ அது வேண்டாம் என்று தடுத்துக் கொண்டிருந்தார். அவர் இங்கும் அங்கும் ஓடியவாறு கூறிக்கொண்டிருந்தார், ‘இல்லை, இல்லை, எனக்கு மாலை போடாதீர்கள். நான் ஒரு எளிய மனிதன், என்னை மரியாதை படுத்த வேண்டாம்.’ இந்த நாடகம் சுமார் அரை மணி நேரம் நடந்தது. மாலை போடுவதை தடுத்து ஒரு பெரிய காட்சியை உண்டாக்கி விட்டார்.

நான் சொன்னேன், ‘அவ்வளவு அன்புடன் அவர்கள் கொண்டு வருவதை நீங்கள் ஏற்றுக் கொண்டு நகர்ந்துவிட வேண்டும்!’ முழு விஷயமும் 2 அல்லது 3 நிமிடங்களில் முடிந்து விட்டிருக்கும். ஏதாவதொன்றை விரும்புவதோ அல்லது மறுப்பதோ, இரண்டும் ஒன்று தான் என்று அஷ்டவக்கிற கீதையில் சொல்லப்பட்டிருக்கிறது.


பத்து வருடங்களுக்கு, விளம்பர அறிவிப்புகளோ, என்னுடைய புகைப்படங்களோ எங்கும் பிரசுரிக்கப்படவில்லை; மாத வார இதழ்களிலோ, தினசரிகளிலோ, எங்கும். பத்து வருடங்களுக்கு எதையும் நாம் அச்சகத்தில் பதிப்பிக்கவில்லை, எல்லாம் வாய் வார்த்தையாக நடந்தது – நீங்கள் பயனடைந்தால் உங்கள் நண்பர்களுக்கு சொல்லுங்கள். அவர்கள் நண்பர்களுக்குச் சொன்னார்கள். எனவே எல்லாம் வாய் வார்த்தையாக நடந்து கொண்டிருந்தது. ஆனால் இது பெரிதாக ஆனபோது, மக்கள் சொன்னார்கள், ‘இல்லை, நாம் இதைச் செய்தாக வேண்டும்.’ தகவல் கொடுப்பதற்காக கடிதங்களை தொடங்கினோம். மக்களுக்கு தகவல்களைத் தெரிவிக்க அச்சு, மாத இதழ்கள் எல்லாம் பின்னால் ஆரம்பிக்கப்பட்டது. அந்த காலத்தில் ட்விட்டர்கள் இல்லை, ஏன் கைபேசி கூட இருக்கவில்லை. மாத இதழ்களோ அல்லது கடிதங்களோ தான் ஒரே வழி.