தியானத்தின் ஐந்து படிகள்

1 ஜனவரி 2013

பெர்லின், ஜெர்மனி


உங்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். தியானத்துடன் புது வருடத்தை கொண்டாடுவது ஒரு அருமையான வழி. தியானம் என்றால் என்ன? எல்லாமே எதிலிருந்து வந்ததோ, எல்லாமே எதற்கு போகிறதோ அந்த நிலை தான் தியானம். அது ஒரு உள் அமைதி, அங்கிருந்தே நீங்கள் இன்பம், ஆனந்தம், அமைதி, போன்றவற்றை உணர்கிறீர்கள்.

உங்களுக்குத் தெரியுமா, மூன்று விதமான அறிவுகள் இருக்கிறது. முதாலவது, நம் புலன்களின் மூலம் வரும் அறிவு. நம்முடைய ஐந்து புலன்களும் நமக்கு அறிவைக் கொணர்கிறது. பார்ப்பதால் அறிவு கிடைக்கிறது, கேட்பதால் அறிவு கிடைக்கிறது, தொடுவதால், நுகர்வதால், சுவைப்பதால் அறிவு கிடைக்கிறது. எனவே நம்முடைய புலன்களால் நமக்கு அறிவு கிடைக்கிறது. இந்த அறிவு ஒரு நிலை.

இரண்டாவது நிலை அறிவு நமக்கு புத்தியால் கிடைக்கிறது. புத்தியால் கிடைக்கும் அறிவு புலன்களால் கிடைக்கும் அறிவைவிட மேலானது. சூரியன் உதிப்பதையும் மறைவதையும் பார்க்கிறோம், ஆனால் அது உதிப்பதுமில்லை மறைவதுமில்லை என்று புத்தியால் அறிகிறோம். ஒரு பேனாவை தண்ணீரில் வைத்தால் அது வளைந்திருப்பது போன்று தோற்றம் தருகிறது, ஆனால் அந்தப் பேனா வளைந்திருக்கவில்லை, பார்ப்பதற்கு அப்படி ஒரு தோற்றம் மட்டுமே தருகிறது என்று புத்தியினால் கிடைத்த அறிவைக் கொண்டு அறிகிறோம். எனவே புத்தியினால் கிடைக்கும் அறிவு மேலானது.

பிறகு, இவற்றிலும் மேலான, உள்ளுணர்வால் கிடைக்கும் மூன்றாவது நிலை அறிவு இருக்கிறது. உங்கள் அடி வயிற்றில் உள்ள ஏதோ சொல்கிறது. ஆழ்ந்த அமைதியிலிருந்து ஏதாவது வருகிறது, ஒரு படைப்பு, ஏதேனும் கண்டுபிடிப்பு வருகிறது. இது எல்லாம் பேருணர்வின் அந்த நிலையிலிருந்து வருகிறது, அதுதான் மூன்றாம் நிலை அறிவு.

தியானம் அந்த மூன்றாவது நிலை அறிவுக்கான கதவுகளைத் திறக்கிறது. தியானம் மூன்றாவது நிலை இன்பத்திற்கான கதவுகளையும் திறக்கிறது. இன்பத்தில் மூன்று நிலைகள் உள்ளன.  உங்கள் புலன்கள் புலன் பொருள்களில் ஈடுபடும் போது, அதாவது, கண்கள் பார்ப்பதில், காதுகள் கேட்பதில் ஈடுபட்டிருக்கும் போது, பார்ப்பதில், கேட்பதில், சுவைப்பதில், அல்லது தொடுவதில் இன்பம் கிடைக்கிறது. புலன்களில் ஏதோ இன்பம்  கிடைக்கிறது, ஆனால் புலன்களினால் கிடைக்கும் இன்பத்தை அனுபவிக்கும் திறன் அளவானது. நீங்கள் சாப்பிடும் முதல் டோ நட் (ஒரு இனிப்புத் தின்பண்டம்) சுவைப்பதற்கு மிக நன்றாய் இருக்கும். இரண்டாவது சுமாராக இருக்கும். மூன்றாவது சுவைக்கும் போது மிக அதிகம் போல தோன்றுகிறது, நான்காவதை சுவைப்பது கொடுமையாய் இருக்கிறது.
இது ஏன்? அவை எல்லாம் ஒரே அடுமனையில் செய்தது தான், ஆனால் சுவைக்கும் திறன் குறைகிறது. எல்லா புலன்களுக்கும் இதே தான். பார்வை, தொடல், நுகர்வு, சுவை, கேட்டல்; இவற்றிலிருந்து கிடைக்கும் இன்பம் அளவானது. இல்லையா?

இரண்டாவது நிலை இன்பம் நீங்கள் எதையாவது புதிதாய் படைக்கும் போது, அருமையான ஒன்றை கண்டுபிடிக்கும் போது, கவிதை எழுதும் போது, புதிய உணவு பண்டத்தை சமைக்கும் போது. புதிய ஒன்றைப் படைக்கும் போது வரும் ஒரு இன்பம் இருக்கிறது.
உங்களுக்கு ஒரு குழந்தை பிறக்கும் போது, முதல் குழந்தையோ அல்லது மூன்றாவது குழந்தையோ, அது ஒரு துடிப்பை கொணர்கிறது; ஒரு இன்பம்.

இப்போது, மூன்றாவது நிலை இன்பம் ஒன்று இருக்கிறது. குறையாத இன்பம், புலன்களிலிருந்தோ அல்லது படைப்பாக்கத்திலிருந்தோ அல்லாமல், ஆனால் உள்ளே ஆழத்திலிருந்து புதிரான ஒன்று. அதைப் போலவே, அமைதி, ஞானம் மற்றும் இன்பம், இவை மூன்றும் வேறு ஒரு நிலையிலிருந்து வருகிறது. அவை எங்கிருந்து வருகிறதோ, அந்த மூலம் தான் தியானம்.

தியானத்திற்கு மூன்று முக்கியமான விதிகள் இருக்கிறது. அந்த மூன்று விதிகள், நான் தியானத்தில் அமரப் போகும் அடுத்த பத்து நிமிடங்களுக்கு, எனக்கு எதுவும் வேண்டாம், நான் எதுவும் செய்ய வேண்டியதில்லை மற்றும் நான் எதுவுமில்லை. இந்த முக்கியமான மூன்று விதிகளை பின்பற்றினால், பிறகு நம்மால் தியானத்தில் ஆழமாக போக முடியும்.

தொடக்கத்தில், தியானம் ஒரு தளர்தல் மட்டுமே. இரண்டாவது அடியில், தியானம் என்பது சக்தி தருவது; சக்தியுள்ளவராக உணர்கிறீர்கள். மூன்றாவது அடியில், தியானம் உங்களுக்கு படைப்பாற்றலை தருகிறது. நான்காவது அடியில், தியானம் உங்களுக்கு உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் தருகிறது.  ஐந்தாவது அடியில், தியானம் என்பது விவரிக்க இயலாதது, அந்த ஒன்றிய நிலை; முழு பிரபஞ்சத்தோடு நீங்கள். இது தான் தியானத்தின் ஐந்தாவது நிலை, அதற்கு முன் நிறுத்திவிடாதீர்கள்.

ஸ்பெயின் அல்லது இத்தாலிய நாட்டு கடற்கரைக்கு செல்லும் மக்களோடு நான் இதைப் பொதுவாக ஒப்பிடுவேன். சிலர் அங்கு நடைப் பயிலச் சென்று அதிலே மகிழ்வார்கள். வேறு சிலர் அங்கே சென்று கடலிலே நீந்தி புத்துணர்ச்சி அடைந்து அதிலே மகிழ்வார்கள். சிலர் அங்கு மீன் பிடிக்கச் செல்வார்கள், சிலர் அங்கு சென்று ஸ்கூபா டைவிங் செய்து அங்கு கடலில் உள்ள அற்புதமான உயிரினங்களைப் பார்த்து அதில் மகிழ்ச்சி பெறுவார்கள். மற்றும் வேறு சிலர் இருக்கிறார்கள், அவர்கள் சமுத்திரத்திலிருந்து செல்வத்தை எடுப்பார்கள்; அவர்கள் ஆழமாகச் செல்வார்கள்.

எனவே ஞானம் உங்களுக்கு இந்த எல்லா வாய்ப்புகளையும் உங்கள் முன் வைக்கிறது. ஏதோ கொஞ்சம் தளர்வு, ஏதோ கொஞ்சம் இன்பம், ஏதோ கொஞ்சம் உற்சாகம், அல்லது ஏதோ கொஞ்சம் ஆசைகள் நிறைவேறியது என்று நிறுத்திவிடாதீர்கள். உங்களுக்குத் தெரியுமா, தியானம் செய்வதால் உங்களுக்கு இன்பம் பெரும் திறனும் அதிகரிக்கிறது, தியானத்தினால் உங்கள் ஆசைகளை நிறைவேற்றி கொள்ளும் திறனும் அதிகரிக்கிறது. மற்றும் உங்களுக்கு எதுவும் தேவையில்லை என்றால், உங்களால் மற்றவர்களின் ஆசைகளையும் நிறைவேற்றி வைக்க முடிகிறது. எளிமையாக சொன்னால் இது மிக அருமையான ஒன்று. எனவே அதற்கு முன் நிறுத்தி விடாதீர்கள், தியானம் செய்து கொண்டே இருங்கள்.