யோக சாதனையில் ஈடுபட நேரம் இல்லையா ?


24 ஜனவரி 2014                       

பெங்களூர், இந்தியா



கே: குருதேவா! யோக சாதனை செய்தால் நன்றாக இருக்கிறது. இருந்தாலும் தினசரி வாழ்க்கையில் யோக சாதனைக்காக நேரம் ஒதுக்குவது கடினமாக உள்ளது. இதை எப்படி பழக்கத்தில் கொண்டு  வர முடியும் ?

குருதேவர்: நீ பல் துலக்குவதற்காக நேரம் ஒதுக்குவது கடினமாக உள்ளதா? நீ குளிப்பதற்கென்று நேரம் ஒதுக்க வேண்டியிருக்கிறதா இல்லையா? தினமும் குளிக்க வேண்டியிருக்கிறது. படுக்கையை விட்டு எழுந்தவுடன் அலுவலகத்துக்கு ஓடுகிறாயா? காலை சிற்றுண்டி உண்ணாமல் அலுவலகம் செல்கிறாயா?

டீ அருந்த,சிற்றுண்டி உண்ண, அரட்டை அடிக்க நேரம் கிடைக்கிறது. குளிக்க ஒரு மணி நேரம் எடுத்துக் கொள்கிறாய். கண்ணாடி முன் நின்று தலை சீவி அழகு பார்க்கிறாய். யார் வீட்டுக்கு வந்தாலும் அரட்டை அடிக்க நேரம் இருக்கிறது.எல்லாவற்றுக்கும் மேலாக டி.வி. பார்க்க நேரம் இருக்கிறது. ஆனால் யோக செய்ய நேரம் கிடைக்கவில்லை என்று சொல்கிறாய். அதுவும் யோக செய்தால் மிகவும் நன்றாக இருக்கிறது என்று சொல்கிறாய். வாழ்க்கையில் பல காரியங்கள் செய்ய வேண்டியுள்ளது என்பதை நான் அறிவேன். நேரம் கிடைக்காதது போல் இருக்கும். ஆனால் ஒழுங்கு முறையோடு யோக சாதனைக்கு நேரம் ஒதுக்க வேண்டும். இன்று யோக சாதனை செய்ய நேரம் இல்லாவிட்டால் காலை சிற்றுண்டி உண்ண மாட்டேன் என்ற மன உறுதியோடு இரு. 15 நிமிடமாவது  யோகம், தியானம் செய்யாவிட்டால் எனக்கு எதையும் உண்ண யோக்யதை கிடையாது என்று உறுதியோடு இரு.  

15 நிமிடம் (பதினைந்தே நிமிடம் தான்) காலை எழுந்தவுடன் உடலை தளர்வாக்கிக் கொண்டு, இறைவன் உனக்குள் இருக்கிறார், இறைவன் உனக்குத் தான் சொந்தமானவர் என்று அமைதியாக அமர்ந்திரு.  1980 ம் ஆண்டு நாங்கள் வட இந்தியாவில் உள்ள யாத்திரை ஸ்தலங்களான பத்ரிநாத் மற்றும் கேதார் நாத் சென்றோம். அந்த நாட்களில் பத்ரிநாத், கேதார்நாத் பயணம் மிகக் கடினமாக இருக்கும். ரிஷிகேசத்திலிருந்து பத்ரிநாத் சென்றடைய மூன்று நாட்கள் ஆகும். இரவில் பயணம் செய்ய முடியாது. எங்களுடன் இரண்டு ஜெர்மன் நாட்டவர்களும் இருந்தார்கள். அவர்களுக்கு ப்ராணயாமம், மற்றும் தியானம் கற்றுக் கொடுத்திருந்தோம். மாலை நேரத்தில் அவர்கள் காரை நிறுத்தச் சொல்லி, சாலை ஓரத்தில் யோகா பாயை விரித்து, அதில் அமர்ந்து தியானம் செய்தார்கள்.அவர்களை பார்த்து மிகவும் ஆச்சரியம் அடைந்தேன். எந்த நிலையிலும் பழக்கத்தை விடாமல் தியானம் செய்வது அவசியம். 

என் கல்லூரி நாட்களில் ரயில் வண்டியில் பயணம் செய்யும் போதும் விடாமல் நான் ரயில் வண்டியிலேயே யோக சாதனை மற்றும் தியானம் செய்வேன். ஆனால் அந்த ஜெர்மானியர்களை பார்த்து மிக்க ஆச்சரியம் அடைந்தேன். அவர்கள் தினமும் ஒரே நேரத்தில் மாலை 6 மணிக்கு, எங்கிருந்த போதிலும் மற்ற காரியங்களை நிறுத்தி விட்டு தியானத்தில் அமர்வதை தங்கள் வழக்கமாக வைத்திருந்தார்கள்.

நான் சொல்வதும் அதுதான். எது வந்தாலும் காலையும், மாலையும் (குறைந்தபட்சம் ஒரு வேளையாவது) குறிப்பிட்ட நேரத்தில், வேலையிலிருந்து திரும்பிய பின் முகம் கழுவிக் கொண்டு 20 நிமிடம் தியானம் செய்ய வேண்டும். இந்த நேரத்தை கட்டாயமாக ஒதுக்க முடியும். அல்லது காலையில் சற்று முன்பாக எழுந்து தியானம் செய்ய முடியும். ஒரு நாள் காலை எழுந்திருக்காவிட்டால், அன்று மாலை கண்டிப்பாக தியானம் செய்ய வேண்டும்.
யோக சாதனை செய்யாமல் உணவு உண்ண மாட்டேன் என்ற மன உறுதியோடு இருந்தால், தானாகவே யோக சாதனை மற்றும் தியானம் பழக்கத்தில் வந்து விடும். ஒரு நாள் ஏதோ காரணத்தால் யோக சாதனை செய்ய முடியாவிட்டால் வருந்த வேண்டாம். ஆனால் செய்யாமல் விடுவதை வழக்கமாக்கிக் கொள்ளக் கூடாது.

கபீர் தாசரின் அருமையான பாடல் ஒன்று உள்ளது. “காம் ந சோடா, க்ரோத் ந சோடா, சத்ய வசன் க்யோன் சோட் தியா, நாம் ஜபன் க்யோன் சோட் தியா”. இதன் பொருள் வருமாறு. 
“நீ காம வாசனையை விடவில்லை. கோபத்தை விடவில்லை. அப்படி இருக்கும் போது, உண்மையை ஏன் விட்டு விட்டாய் ? இறைவன் பெயரை ஜபிப்பதை ஏன் நிறுத்தி விட்டாய் ?

கே: குருதேவா ! வாழ்க்கையை நல் வழிப்படுத்த 16 ஆசாரங்களை பின் பற்ற வேண்டும் என்று சொல்கிறார்கள். விவாகரத்துக்கான ஆசாரம் ஏன் இல்லை? வேத காலத்தில் விவாகரத்து இல்லையா ?

குருதேவர்: ஆசாரங்கள் உன்னை நல்வழிப் படுத்துவதற்காக, உன் நன்மைக்காக இருக்கின்றன. விவாகரத்து என்பது கம்ப்யூடரில் டெலிட் பொத்தானை அமுக்குவது போன்றது. ஒரு கண்ணோட்டத்தில் சன்யாசத்தையும் டெலிட் பொத்தான் என்று அழைக்கலாம். ஏனென்றால்  எல்லாவற்றையும் விட்டு விலகுவதை சன்யாசம் என்பார்கள். சன்யாசம் என்றால் எதையும் எழுதி எண்டர் பொத்தானை அமுக்கவில்லை என்று சொல்லலாம். எதையெல்லாம் திரையில் எழுதி என்டர் பொத்தானை அமுக்கினோமோ அதை டெலிட் பொத்தானை அமுக்கும் போது அழித்து விடுகிறோம். விவாகரத்து அப்படிப்பட்டது. ஆசாரங்கள் குடும்ப வாழ்க்கையில் இருப்பவர்களுக்காக சொல்லப்பட்டவை. சன்யாசிகள் டெலிட் பொத்தானை அமுக்கி குடும்ப வாழ்க்கையிலிருந்து விலகி விட்டவர்கள். 

பொதுவாக நான் மக்களுக்குச் சொல்வது இது தான். நீ 100 % கொடுக்கும் போது தான் உறவுகள் வலுவடையும். ஒரு மாதம், இரண்டு மாதம் போதாது. தேவையான நேரம் கொடுக்க வேண்டும். மற்றவர் உன்னை புரிந்து கொள்ளும வரை, நீ அவரை புரிந்து கொள்ளும் வரை பொறுமையாக இருக்க வேண்டும். போதிய அளவு நேரம் கொடுத்த பின்பும் உறவு வலுவடைய வில்லையென்றால் தனித் தனி வழியில் செல்வது நல்லது. உறவுகளை கசப்பாக்கிக் கொண்டு வாழ்க்கையை வெறுக்காமல் மகிழ்ச்சியாக நண்பர்களாக பிரிந்து செல்வது நல்லது.
கணவன் மனைவி உறவு வெற்றியடைய இருவரும் 100 % கொடுக்க வேண்டும். பலருக்கு 

இன்றைய சூழ்நிலையில் இது மிகவும் கஷ்டமாக இருக்கிறது.பழைய காலத்தில் ஒருவரை ஒருவர் ஏற்றுக் கொள்ளும், சகித்துக் கொள்ளும் குணம் நிலவி வந்தது. திருமண உறவுக்கு மதிப்பு இருந்தது. திருமணமாகிய பின் வாழ்நாள் முழுவதும் அவரோடு / அவளோடு நல்வாழ்க்கை நடத்த வேண்டும் என்ற மன உறுதி இருந்தது. நீ எப்படி உன் பெற்றோரையும், சகோதர சகோதரிகளையும் ஏற்றுக் கொண்டாயோ, அதே போல் இவரை கணவராக / மனைவியாக ஏற்றுக் கொண்டு விட்டேன் என்று சொல்வது வழக்கம். இப்படிப்பட்ட மனநிலை பலருக்கு இருந்தது. ஆனால் இன்று அப்படி அல்ல. மாறும் காலத்தோடு வாழ நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.

கே: குருதேவா ! ஏதாவது ஒன்றைப் பெற, ஏதாவது ஒன்றை இழக்க வேண்டுமா ? எனக்கு இரண்டுமே வேண்டுமென்றால் என்ன செய்வது ?

குருதேவர்: ஒரு பெரிய லட்சியத்தை அடைய, சிறிய இழப்புகளை ஏற்றுக் கொள்ள வேண்டும். கையில் ஒரு சிறிய கூழாங்கல்லை வைத்து கொண்டு ஒரு பெரிய கல்லை கையில் எடுக்க வேண்டும் என்று விரும்பும் போது முதலில் அந்த சிறிய கல்லை கீழே போட வேண்டும். ஒரு பெரிய லட்சியத்தை அடைவதற்காக உழைக்கும் போது, சிறிய விஷயங்களின் இழப்பு ஒரு 
பொருட்டாகத் தெரியாது.

இன்னொரு உதாரணம் சொல்கிறேன். சூரிய உதயத்துக்கு முன் இருட்டாக இருக்கும் போது ஒரு மெழுகு வத்தியை ஏற்றினால் அது ஒளியைக் கொடுக்கும். சூரிய ஒளி வந்த பின் மெழுகு வத்தியின் ஒளிக்கு என்ன முக்கியத்துவம் உள்ளது ? அது எரிந்து ஒளி விட்டாலும் சரி, எரியா விட்டாலும் சரி ஒரு வித்தியாசமும் கிடையாது. சூரிய ஒளியைக் காண்பதற்காக மெழுகு வத்தியை அணைக்கத் தேவையில்லை.  இந்த உதாரணத்தை தவறாக பயன்படுத்த வேண்டாம். உனக்கு ஏதாவது கெட்ட பழக்கம் இருந்தால் (குடிப்பது, புகை பிடிப்பது), இவை தானாகவே உன்னை விட்டுப் போகும் என்று எண்ணாதே. இவைகளைக் கைவிட்டே ஆக வேண்டும்.

கே: குருதேவா ! தனிமை என்ற உணர்வை எப்படிக் கையாள வேண்டும் ? யாருக்குமே நான் தேவையில்லை என்ற உணர்விலிருந்து எப்படி விடுபடலாம்?

குருதேவர்: உனக்குத் தெரியும் ! எல்லாம் அழிந்து விடும். வாழ்க்கையில் நீ மட்டும் தனியாகி விடுவாய். அதன் பெயர் வைராக்கியம். (பற்றில்லாமல் இருப்பது) நீ வைராக்கியமாக இருக்கும் போது, எல்லாம் மாறக் கூடியவை, அழியக் கூடியவை என்பதை உணர்ந்திருக்கிறாய். நீ பார்க்கும் அனைத்தும் நிலையற்றவை என்பதை நீ அறிவாய். ஒரு நீர்க் குமிழி உடைவது போல் எல்லாமே அழியக் கூடியவை தான். நீ மட்டும் எஞ்சியிருப்பாய் (ஆன்மா) என்ற ஞானம் உனக்கு இருக்கிறது.
அறிவு பூர்வமாக இந்த விடை உனக்குத் திருப்தியளிக்காவிட்டால் நான் சொல்வது இது தான். தனிமையை விரட்ட கவிதை எழுத ஆரம்பிக்கலாம். எத்தனையோ காரியங்களில் உன்னை நீ ஈடுபடுத்திக் கொள்ளலாம். பல வகையான ஓவியங்கள், சிற்பங்கள், கவிதைகள் 

தனிமையிலிருந்து தோன்றியுள்ளன. கவிஞர்கள் தனியாக இருக்கும் போது பல பாடல்களும், அதற்கான இசையும் தோன்றியிருக்கின்றன. தனிமையை ஒரு மனச் சிதைவாக மாற்றாமல் (டிப்ரஷன்) ஒரு பெரிய லட்சியத்தை நோக்கி முன்னேறலாம். இந்த ஏக்கம் உன்னை அன்பில் வைத்திருக்கும். ஆழ்ந்த துக்கமாக இருக்கும் போது பாடலாம், ஆடலாம், கவிதை எழுதலாம். தனிமையை ஒரு லட்சியத்தை அடையும் ஏக்கமாக மாற்றி, ஏக்கத்தை என்றும் நிலைத்திருக்கும் ஒன்றை அடைவதற்கான ஆக்க பூர்வமான செயல்களில் ஈடுபடலாம். 

கே: குருதேவா ! மௌனம் எப்படி கொண்டாட்டமாகும்? மௌனத்தில் இருக்கும் சிலரின் முகத்தில் கடுகடுப்பாக இருப்பதை காணும் போது அதை எப்படி கொண்டாட்டம் என்று சொல்லலாம்? 

குருதேவர்: அது ஒரு முரண்பாடான கருத்து. கொண்டாட்டம் சத்தம் போடுவதில் இருக்கிறது என்றும் மௌனம் துக்கத்தை காட்ட மட்டும் உள்ளது என்று நீ நினைக்கிறாய். பொதுவாக மக்கள் கொண்டாட்டத்தில் இருக்கும் போது அதிக சத்தம் போடுவது உண்டு. துக்கமாக இருக்கும் போது மௌனமாக இருப்பதும் இயல்பு. யாராவது இறந்த இடத்தில் துக்கத்தில் பங்கு கொள்ள மௌனமாக இருப்பது வழக்கம்.

வாழும் கலையின் கொண்டாட்டம் முற்றிலும் மாறு பட்டது. நம் மௌனம் முற்றிலும் எதிரானது. மகிழ்ச்சியோடு இருக்கும் போதும் நாம் மௌனமாக இருக்க முடியும். ஆனந்தத்தின் ஆழத்துக்குச் செல்ல மௌனம் உதவும். மௌனம் வாழ்க்கையில் ஒரு ஆதிக்க சக்தியாக செயல் படும்.. எனவே இத்தகைய மௌனம் வருத்தம் தெரிவிப்பதற்காக அல்ல. நம் கொண்டாட்டம் மேலோட்டமான அற்பமான விஷயத்துக்காக அல்ல. ஆழ் மனதை கொண்டாட்டத்துக்கு எடுத்துச் செல்ல மௌனமாக இருப்பது அவசியம். மௌனம் புகழாக வெளிப்பட, நாம் மௌனத்தைக் கொண்டாட வேண்டும்.

கே: குருதேவா ! விருப்பங்கள் என்னை ஓய்வாக இருக்க விடுவதில்லை. விருப்பங்கள் இல்லா விட்டால் என் லட்சியத்தை எப்படி அடைய முடியும் ?

குருதேவர்: ஞானம் அங்கு உதவும். ஞானம் உன்னை விருப்பங்களை நோக்கி செலுத்தும். ஞானம் பொறுமையை அதிகப் படுத்தும். பொறுமையாக இருக்கும் போது எழும் விருப்பம் சங்கல்பம் எனப் படும். அந்த சங்கல்பம் நிறைவேற மன உறுதி ஏற்படும்.வாழ்க்கையில் யோக சாதனைகள் அவசியம். நீ உன் ஆன்மாவோடு இருக்க விரும்பினால், உன் தீர்மானத்தை (சங்கல்பத்தை) இறைவனுக்கு சமர்ப்பிக்க வேண்டும். உன் பொறுப்பை, சங்கல்பத்தை சமர்ப்பித்து, சற்று நேரம் கண்களை மூடி எனக்கு எதுவும் வேண்டாம் என்று நினைக்க வேண்டும். இப்படிச் செய்வதால் மன உறுதி அதிகரிக்கும். அறிவு பெருகும். உடல் நலம் கூடும். ஆன்மா மென்மயாகும். யோக சாதனையால் இப்படி நடக்கும். நம் யோக்யதை அதிகரிக்கும். மனத்தின் இயல்பு தீர்மானிப்பது. யோக சாதனை மூலம் அத் தீர்மானங்கள் செயலாக மாறி வெற்றிகரமாக நிறைவேறும்.

கே: இரண்டும் சரி சமமாக இருக்கும் போது எதைத் தேர்ந்தெடுப்பது ? எந்தப் பக்கம் செல்லலாம் ?

குருதேவர்: நீ தான் தேர்ந்தெடுக்க வேண்டும். நான் வாழ்த்துகிறேன். உன் கார் பழுதடைந்தால், அதை சரி செய்வது , ஓட்டுவது  மெகானிக்கின் வேலை. காரை எங்கு ஓட்டிச் செல்ல வேண்டும் என்று நீ தான் தீர்மானிக்க வேண்டும். மெகானிக் காரை மட்டும் சரி செய்வார்.

கே: குருதேவா ! யாரையாவது பார்க்கும் போது அவரைப் பற்றிய முடிவுகள் மனதில் எழுகின்றன. எல்லோரிடம் நிபந்தனை இல்லாத அன்பை உணர்வது எப்படி?

குருதேவர்: இல்லை ! நிபந்தனையில்லாத அன்பை உணர முடியாது. அது சாத்தியமில்லை. எவ்வளவுக்கெவ்வளவு உணர விரும்புகிறாயோ, அது கை கூடாது. ஓய்வாக, இயல்பாக இரு. எப்போது நீ மற்றவரை பற்றி ஒரு முடிவுக்கு வருகிறாய் என்று உனக்கே தெரிகிறதோ, அப்போதே அந்த முடிவு மறைந்து விட்டது. 

கே: குருதேவா ! நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன். அதை சொல்லத் தெரிய வில்லை. என்ன செய்யலாம்? தயவு செய்து விளக்குங்கள்.

குருதேவர்: ஏற்கனவே சொல்லி விட்டாய் ! (சிரிக்கிறார்). உண்மையான அன்பை அப்படித்தான் உணர்வாய். அந்த உணர்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. ஏனென்றால் அன்பு விவரிக்க முடியாதது. அன்பு மிகப் பெரியது. பலர் அன்பை விவரிக்க முயற்சி செய்து தோல்வி அடைந்திருக்கிறார்கள். நாரத முனிவர் சொன்னது இது தான். “அனிர் வசனீயம் ப்ரேம சொரூபம்” அன்பை விவரிக்க இயலாது. உண்மையான அன்பு வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது.