உலகாயதத்திற்கு மேலே


ஜனவரி 11, 2014

பெங்களூரு, இந்தியா

கேள்வி - பதில்

கே: குருதேவ், நீங்கள் பற்றின்மை பற்றியும் மற்றும் எல்லாவற்றையும் சமமாக கருதுவது பற்றியும் பேசுகிறீர்கள், 


ஆனால் நான் என்னுடைய பாதுகாப்பாக கருதுபவற்றை விட்டு விட்டால் நான் மிகவும் பலவீனமான உணர்வு கொண்டவனாக மாறிவிடுகிறேன். இதிலிருந்து எப்படி வெளி வருவது?

குருதேவ்: யோகவசிஷ்ட்டா படியுங்கள். இந்த முழு உலகமும் வெறும் கனவே என்பதை கண்டு கொள்ளுங்கள். அது உங்களுக்கு துன்பமான சூழலைத் தாங்கும் சக்தியும் அதை எதிர்கொள்ள உறுதியும் அளிக்கும். அல்லது அஷ்டவக்கிர கீதை தரும் ஞானத்தை கேளுங்கள்.

உங்கள் புத்தியை உலகாய விஷயங்களுக்கு மேலே வைத்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் உலகாய விஷயங்களில் எப்போதும் கலக்கம் உண்டு. உங்கள் புத்தியை ஒரு உயர்ந்த தளத்தில் வைத்துக் கொள்ளும் போது, நீங்கள் செய்ய வேண்டிய செயல்களை செய்தவாறு இருப்பீர்கள், ஆனால் அதே நேரம் அதில் அவ்வளவு பற்று வைக்காமல் இருப்பீர்கள்.

கே: குருதேவ், ஸ்ரீ கிருஷ்ண பகவான் அர்ஜுனருக்கு குருவாக பாத்திரம் வகித்தார். ஸ்ரீ கிருஷ்ண பகவான் வாழ்க்கையில் அர்ஜூனர் என்னவாக இருந்தார்? குருவின் வாழ்க்கையில் ஒரு சீடர் என்ன பங்கு வகிக்க முடியும்?

குருதேவ்: இரண்டு வகையான சீடர்கள் மட்டுமே இருக்க முடியும்: எளிதான சீடர் மற்றும் கடினமான சீடர். கடினமான சீடருக்கு விளங்க வைப்பது கடினம். ஒரு விஷயம் புரிய அவருக்கு வெகு நேரம் பிடிக்கும். எளிமையான சீடர்கள் உணர்வு பூர்வமானவர்கள், எளித்தாக கற்றுக் கொள்வார்கள். எருமையும் பசுவையும் போல என்று சொல்லலாம்.

ஒரு பசுவிடம் ‘ஏய்!’ என்று கத்தினால் புரிந்து கொண்டு முன்னே நகர்ந்துவிடும். ஆனால் எருமையோ, அதை நகர வைக்க ஒரு மூங்கில் குச்சி எடுத்து மெதுவாக அடித்தால் தான் அது நகரும். அல்லது உங்கள் கைகளைக் கொண்டு தள்ள வேண்டும்.

சீடர்கள் இந்த இரண்டு வகை தான். எளிதாகப் புரிந்து கொண்டு உணர்வுபூர்வமாய் இருப்பது ஒரு வகை, சொல்வதை கவனிக்காமல் விஷயத்தை புரிந்து கொள்வதற்கு வெகு நேரம் எடுப்பவர்கள் மற்ற வகை.

கே: குருதேவ், நீங்கள் ஸ்ரீ கிருஷ்ணரா?

குருதேவ்: ஏன்? எனக்கு ஏதாவது பிரச்சினையை கொண்டு வரப் போகிறீர்களா? பகவத் கீதை படியுங்கள். யார் ஒருவர் எல்லாவற்றிலும், எல்லோரிடத்திலும் என்னை காண்கிறாரோ அவரே உண்மையில் புத்திசாலி என்று ஸ்ரீ கிருஷ்ண பகவான் கூறுகிறார்.
யோ மாம் பஷ்யதி சர்வத்ர சர்வம் ச மயி பஷ்யதி தஸ்யாஹம் ந பிரணஷ்யாமி ஸ ச மே ந ப்ரணஷ்யதி’  (6.30)

ஒவ்வொருவரிடமும் என்னை பார்ப்பவர் மற்றும் என்னை ஒவ்வொருவரிடமும் பார்ப்பவரே புத்திசாலி. அதனால் தான், ‘சர்வம் வாசுதேவம், இதி ஸ-மகாத்மா ஸ-துர்லபஹா’ (என்னை எல்லாவற்றிலும் பார்ப்பவர் மற்றும் எல்லாவற்றிலும் என்னைப் பார்ப்பவர் அரிதானவர்) என்று சொல்லப்படுகிறது. எல்லாம் வாசுதேவரே (இறைவனே) என்று சொல்லக்கூடிய மா மனிதர்கள் அரிதானவர்கள்.

கே: குருதேவ், ஏகாதசி ஏன் ஸ்ரீ கிருஷ்ண பகவானுக்குப் பிரியமான நாளாக இருக்கிறது? இன்று வைகுண்ட ஏகாதசி. உங்களுடன் இன்று அதைக் கொண்டாடியபின், எங்களுக்கு வைகுண்டத்தின் கதவு திறந்திருக்குமா?

குருதேவ்: முதலில் வைகுண்டம் (ஸ்ரீ மஹா விஷ்ணுவின் இருப்பிடம்) என்றால் என்ன என்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். எந்த ஒரு குறைவும் இல்லாத, பஞ்சமே இல்லாத, எல்லாம் ஏராளமாய் இருக்கும் இடமே வைகுண்டம். வைகுண்டத்தில் இருக்கும் ஒவ்வொருவரும் ஸ்ரீ நாராயணரே என்று ஸ்ரீமத் பாகவதத்தில் எழுதப்பட்டிருக்கிறது. (அப்படி என்றால், இறைவன் வசிக்கும் அப்படிப்பட்ட இடத்தில், ஒவ்வொரு ஆத்மாவும் இறை நிலைக்கு உயர்த்தப்பட்டு,எல்லா படைப்பிலும் இருக்கும் உச்சநிலைப் பேருணர்வான ஸ்ரீ நாராயணராகவே தோற்றமளிப்பார்கள்.) யார் ஸ்ரீ நாராயணர் யார் பக்தர் என்று வித்தியாசம் காண முடியாது.

இந்தி மொழியில், ‘குந்தா’ என்ற வார்த்தைக்கு இல்லாமை என்று பொருள். எங்கு இல்லாமை இல்லையோ, எங்கு எதற்கும் குறைவு இல்லையோ, அதுவே ‘வைகுந்தம்’ எனப்படுகிறது. வைகுந்தத்தில் இருப்பவர்கள் எல்லோரும் பகவான் ஸ்ரீ நாராயணரின் வடிவமாகவே இருப்பார்கள் என்று சொல்லப்படுகிறது. மேன்மையானவர் என்ற ஆதிக்க உணர்வும் இல்லை, தாழ்ந்தவர் என்ற பலவீன உணர்வும் இல்லை.

இங்கு எதற்காவது பஞ்சம் உண்டா? குருவிற்கு அருகே வரும்போது கைலாசத்தையும் (சிவ பெருமானின் இருப்பிடம், மற்றும் பேரானந்தப் பரவசத்தின் குறியீடு) வைகுந்தத்தையும் காண்பீர்கள். குரு என்பது ஒரு தத்துவம் (அடிப்படையான பொருள் அல்லது கோட்பாடு) என்று உங்களுக்குத் தெரியும். ‘குரு பிரம்மா, குருர் விஷ்ணு, குருர் தேவோ மகேஷ்வரஹா’, என்று நாம் அடிக்கடி உச்சரிக்கிறோம் இல்லையா? குரு தத்துவத்தில் இந்த மூன்று சக்திகளும் குணங்களும் உள்ளது; குரு பிரம்மா (படைக்கும் கடவுளான பிரம்ம தேவரைப் போன்ற சக்தி கொண்டவர் குரு), குரு விஷ்ணு (படைப்பை காப்பவரும் அதன் பாதுகாவலருமான ஸ்ரீ விஷ்ணுவைப் போன்ற சக்தி கொண்டவர் குரு), மற்றும் குரு மகேஷ்வரஹா (எதிர்மறை விஷயங்களை மாற்றியமைப்பவரும் அழிப்பவரும் ஆன சிவ பெருமானைப் போன்ற சக்தி கொண்டவர்). எனவே குரு தத்துவத்தில் இந்த மூன்றும் உண்டு. எனவே எங்கே இந்த மூன்றும் இருக்கும்? எங்கே வைகுந்தம் இருக்கிறதோ அங்கே.

கைலாசம் என்றால் என்ன? எந்த இடத்தில் சந்தோஷமும் பேரானந்தமும் இருக்கிறதோ அந்த இடம்; எங்கு கொண்டாட்டம் மட்டுமே இருக்கிறதோ அந்த இடம்; எங்கு அன்பு மட்டுமே எல்லா இடத்தையும் நிறைத்திருக்கிறதோ அந்த இடம். அதுதான் கைலாசம். வைகுந்தம் என்றால், எந்த இடத்தில எதற்கும் குறைவில்லையோ அந்த இடம், எந்த இடத்தில் எல்லாம் ஏராளமாய் கொட்டிகிடக்கிறதோ அந்த இடம். இன்று வைகுண்ட ஏகாதசி, எனவே இங்கு எதற்கும் பஞ்சமில்லை என்றாலும், இன்று நீங்கள் எதையும் உண்ணாமல் விரதமிருக்கலாம் (சிரிப்பு).

உண்பதற்கு ஏதுமில்லாமல் பட்டினி இருந்தால் அது ஏழ்மை. எதுவும் குறைவில்லை, எல்லாம் ஏராளமாய் இருக்கிறது, இருந்தும் நீங்கள் உண்ணாமல் நோன்பு இருக்கிறீர்கள். இது வைகுண்ட ஏகாதசி. இந்த நாளில்தான் ஸ்ரீ கிருஷ்ண பகவான் பகவத் கீதையை அருளியதாகச் சொல்கிறார்கள். எனவே இன்றைய தினத்தை கீதை ஜெயந்தியாகக் கூட கொண்டாடுகிறார்கள். இன்றைய தினத்தை தேவோத்தன ஏகாதசி என்றும் சொல்வார்கள். இன்றுவரை தேவ தேவிகள் (ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் இறைசக்தி) உறங்கிக் கொண்டிருப்பதாகச் சொல்வார்கள். இன்று அவை எழுந்திருந்து மக்கள் நலனிலும் அவர்களை உயர்த்துவதிலும் தம்மை ஈடுபடுத்திக் கொள்ளும். எனவே இன்றைய செய்தி என்னவென்றால், ஒவ்வொருவருக்குள்ளும் உள்ள இறையை எழுப்ப வேண்டும். நாடு நலம் காண கடமை ஏற்றுக் கொள்ளுங்கள்.

கே: குருதேவ், பத்து வருடங்களுக்கு முன் பார்த்த திரைப்படத்தின் கதை ஞாபகம் இருக்கிறது. ஆனாலும் நேற்று கேட்ட ஞானம் ஞாபகத்தில் இல்லை. ஏனிப்படி?

குருதேவ்: விட்டுத் தள்ளுங்கள். ஞானம் தேவைப்படும் போது அவ்வப்போது வரும், பிறகு அதை நீங்கள் மறந்தும் விடலாம். மறதி ஒரு பேரானந்தம். எல்லா ஞானத்தையும் தலையில் வைத்திருக்கக் கூடாது; அது உங்கள் தலையில் ஒரு பாரமாகவே இருக்கும்.
உங்களுக்குத் தெரியுமா? ஞானம் என்பது சோப்பு போன்றது. பகவத் கீதையில், ‘ந ஹி ஞானேன சத்ருஷம் பவித்ரம் இஹ வித்யதே. தத் ஸ்வயம் யோக-சம்சித்த காலேனாத்மநி விந்ததி,’ என்று சொல்லப்பட்டிருக்கிறது.   (4.38)

நீங்கள் சோப்பை உபயோகித்த பின் அதை கழுவிவிடுகிறீர்கள். அதைப் போல ஞானத்தை எடுத்து கொள்ளுங்கள், அதை உபயோகப்படுத்திய பின் அதை விட்டுவிட்டு வெறுமையாய் வெற்றிடமாய் ஆகிவிடுங்கள். அதிலிருந்து நீங்கள் விடுதலையாகிறீர்கள். தேவைப்படும் போது அது உங்களிடம் நிச்சயம் வரும்.

கே: குருதேவ், வாழ்க்கையில் தியாகத்தின் முக்கியத்துவம் என்ன?

குருதேவ்: தியாகத்தில் நீங்கள் சக்தி பெறுகிறீர்கள். உங்கள் வீரத்தை அதிகரிக்கிறது. தியாகம் உங்களுக்கு அவ்வளவு அமைதியை அளிப்பதால், உங்கள் வாழ்கை பயனுள்ளதாக உணர்கிறீர்கள். ஒரு விஷயத்திற்காக ஏங்குவதிலோ அல்லது அதை அடைவதிலோ கிடைக்கவே கிடைக்காத அந்த அளவு மகிழ்ச்சி அதை தியாகம் செய்வதினால் கிடைக்கும்.
யாருக்காவது ஏதாவது கொடுத்தால் நமக்கு மகிழ்ச்சி கிடைப்பதில்லையா? பெறுவதினால் கிடைக்கும் இன்பத்தை விட தருவதில் அதிக இன்பம் இருக்கிறது. நீங்கள் விரும்பிய பொருளை அடையும்  போது மகிழ்ச்சி கிடைக்கும்தான், ஆனால் அதை மற்றவருக்குத் தரும் போதோ அல்லது மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் போதோ கிடைக்கும் மகிழ்ச்சி இரட்டிப்பானது. ஏதாவதை வைத்திருப்பவர் மட்டுமே எதையாவது கொடுக்க முடியும். அதனால் தான், தியாகம், அதாவது கொடுப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சி பெறுவதில் கிடைக்கும் மகிழ்ச்சியை விட மேலானது.