இறைவன் நேர்மையற்றவரா?

ஜனவரி 09, 2014 - 1

பெங்களூர், இந்தியா 

கேள்விகளும்: பதில்களும்



கே: நான் இதுவரை இரண்டு வகையான மனிதர்களை சந்தித்திருக்கின்றேன்.முதல் வகையை சேர்ந்தவர்கள் எந்நேரமும் மகிழ்ச்சியும், கருணையும் நிறைந்து பிறருக்கு தார்மீக ஆதரவு அளிப்பவர்கள். ஆனால் வாழ்க்கை அவர்களுக்கு தொடர்ந்து தோல்வியையும், மீண்டும் மீண்டும் சங்கடங்களையுமே அளித்துள்ளது. இரண்டாவது வகையை சேர்ந்தவர்கள் பிறருக்கு எந்த அளவிற்கு துன்பமும், சங்கடமும் அளிக்கின்றோம் என்று சிறிதும் கவலைப்படாமல் பிறரைக் கீழே தள்ளி மிதித்து முன்னேறுபவர்கள். இருந்தும் அவர்கள் எல்லா செல்வங்களும் பெற்று மேல்மட்டத்தில் மதிப்போடு வாழ்கின்றனர். இந்த நியாயமற்ற நிலைக்குக் காரணம் என்ன?  

குருதேவ்: இறைவன் ஏன் இப்படி நியாயமற்றவராக இருக்கின்றார்? தவறு செய்பவர்கள் கீழே விழுந்தே தீர வேண்டும். குறைவான உயரத்திலிருந்து விழும்போது அடி பலமாக இருக்காது. அது போதுமான தண்டனையாகவும் இருக்காது. ஆகவே தான், கீழே விழும்போது பலமான அடி விழுகின்ற அளவிற்கு அவர்கள் நன்றாக உயரத்திற்கு செல்கின்றனர்.இவ்வாறு நிகழ்வதை நீங்கள் பார்த்திருக்கின்றீர்கள் இல்லையா? ஊழல் செய்தவர்களெல்லாம் மிக உயரத்திற்கு சென்று பிறகு நேராக அப்படியே அடிமட்டத்திற்குச் சென்றனர். சிறைச்சாலையில் கம்பி எண்ணும் நிலைக்குச் சென்றனர். எப்போதும் வாய்மையே வெல்லும் என்பதில் நம்பிக்கை கொள்ளுங்கள்.   

கே: என் வாழ்க்கை ஒரு பங்குச்சந்தை போல் ஒரு சமயம் உச்சத்தை அடைகின்றது, பிறகு பூஜ்யத்திற்கு விழுந்து விடுகின்றது. நான் ஒரு நிலையான தன்மையை கொண்டு வருவது எப்படி? இந்த வரைபடைத்தை நிலையாக்க முடியுமா அல்லது மரணம்  மட்டும் தான் இதற்கு தீர்வாகுமா?  

குருதேவ்: இல்லை,முதலில் உங்கள் வாழ்க்கை ஒரு பங்கு சந்தை என்று நினைக்காதீர்கள். மனம் அவ்வாறு தான் மேலும் கீழும் அலைபாயும். கடந்த காலத்தை கொஞ்சம் திரும்பிப் பார்த்தால், சமயங்களில் நீங்கள் அது தான் வாழ்க்கையின் இறுதிக்கட்டம் என்று நினைத்திருப்பீர்கள். ஆகாயமே உங்கள் தலை மேல் விழுந்துவிட்டது போல் உணர்ந்திருப்பீர்கள்.  ஆனால் கண்ணுக்கு புலப்படாத கரம் ஒன்று ஒவ்வொரு நெருக்கடி நிலையிலிருந்தும் உங்களை வெளியே கொண்டு வந்துள்ளது. நெருக்கடியில் இருக்கும்போதெல்லாம் உங்களுக்கு உதவி கிடைத்துள்ளது. பின்னோக்கி பார்க்கும் போது வாழ்வின் எல்லா நேரங்களிலுமே உதவி கிடைத்துள்ளது என்பதே உண்மை என்று உணர்வீர்கள். உங்கள் எதிர்காலத்திலும் கண்ணுக்கு புலப்படாத நீங்கள் அறிந்திராத கரங்களிலிருந்து உங்களுக்கு உதவி கிடைக்கும் என்பதை அறிந்து கொள்ளுங்கள். அதுவே தெய்வீகம். என்னை கண்காணிக்கவும், உடன் கொண்டு செல்லவும், எப்போதும் கை விட்டுவிடாமல் இருக்கவும் ஒரு சக்தி இருக்கின்றது என்பதை நீங்கள் அறிந்து கொண்டால் நீங்கள் வாழ்க்கை பங்கு சந்தை போன்று இருக்கின்றது என்று சொல்ல மாட்டீர்கள். அதுவே வாழ்வின் உறுதியான அஸ்திவாரம்.  

கே: மத ஈடுபாடு என்பது எவ்வாறு என் ஆன்மீகத் தேடலுக்கு உதவி புரியும்?  

குருதேவ்: குணத்தில் நேர்மை, இதயத்தில் தூய்மை, மனதில் தெளிவு, செயலில் இயல்பான தன்மை ஆகியவற்றை கொண்டு வருவதே மத ஈடுபாடு. தூய்மையான இதயம் இல்லையென்றால் நீங்கள் மத ஈடுபாடு கொண்டவராக இருக்க முடியாது. உங்கள் மனம் கவலைகளால் நிரம்பி இருந்தால் நீங்கள் மத ஈடுபாடு உடையவராக இருக்க முடியாது.  நீங்கள் சந்தேகங்களும் பயமும் கொண்டிருந்தால் உங்களிடம் நம்பிக்கை குறைகின்றது என்று அர்த்தம். 
ஆகவே, நற்குணங்கள் நிறைந்திருப்பதும் பாரம்பரியத்தை காப்பதுமே மத ஈடுபாடு ஆகும்.    பிரார்த்தனைகள் செய்வதும், கொண்டாட்டங்களும் எல்லாவற்றையும் விட ஆன்மீக மேம்பாடும் மிகவும் அவசியம்.  

கே: குருதேவ் ஆன்மீகப் பாதையில் ஐம்புலன்களையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டிய   அவசியம் என்ன?

குருதேவ்: ஆன்மீகப் பாதையில் மட்டுமென்றில்லை.  உங்கள் நாவின் மீது கட்டுப்பாடின்றி மனதில் தோன்றுவதை எல்லாம் உளறினால் துன்பத்தில் சிக்கிக் கொள்வீர்கள்.  நீங்கள் நினைத்ததையெல்லாம் பேச முடியாது. உங்களுக்கு பேச்சுரிமை இருந்தாலும், நீங்கள் பிறரை வசைபாட முடியாது. அது என் உரிமை என்று நீங்கள் சொல்லவும் முடியாது. அதே போல் உங்கள் உடல் உணர்த்துவதை கவனிக்காமல் மிக அதிகமாக உண்டால் அதன் விளைவுகளை சந்திக்க நேரும்.  

கே: குருதேவ், கவலை குறித்து என்ன செய்ய வேண்டும்? அனைத்தையும் விட்டு உணர்ச்சி வசப்படாத நடு நிலையில் சாந்தமாக இருப்பது மகிழ்ச்சியை தரும் என்று சொல்கிறார்கள்.  அது ஒருவரை முடமாகவும் நம்பிக்கை அற்றவராகவும் மாற்றி விடாதா?  

குருதேவ்: இல்லை. உணர்ச்சி வசப்படாத சாந்த நிலை என்பது மூச்சினை வெளிவிடுவது போன்றது. பேரார்வம் என்பது மூச்சினை உள்ளே இழுப்பது போன்றது. ஆர்வம் இருப்பது அவசியம், ஆனால் பேரார்வம் மட்டுமே இருந்தால் அது மன அழுத்தத்தில் கொண்டு போய் விட்டுவிடும். ஏனென்றால்  அனைத்து விருப்பங்களும் உடனே கனிந்து விடுவதில்லை. அதற்கான நேரம் தேவைப்படும். அச்சமயங்களில் உணர்ச்சி வயப்படாத நடுநிலை துணை செய்யும்.  

பற்று அல்லது ஆர்வம் என்பது மூச்சினை உள்ளே இழுப்பது போன்றது. வைராகியம் அல்லது சாந்தம் என்பது மூச்சினை வெளி விடுவது போன்றது. நான் மூச்சை உள்ளே இழுப்பேன் ஆனால் வெளியில் விட மாட்டேன் என்று நீங்கள் சொல்ல முடியாது. அப்படி செய்தால் நீங்கள் இறந்து விடுவீர்கள். அதே போல் வைராக்கியம் என்பது நம் வாழ்வின் ஒரு பகுதி.   இல்லையென்றால் உங்களால் உறங்க முடியாது. உறக்கம் இல்லையென்றால் நீங்கள் ஞாபகமின்மையால் பாதிக்கப்படுவீர்கள்.  

பேரார்வம், ஆர்வமற்ற நடுநிலை இரண்டுமே நம்முள் இயற்கையாய் அமைந்துள்ளன. ஏதோ ஓரிடத்தில் நீங்கள் அனைத்தையும் விட்டுவிட வேண்டும். இந்த இரண்டு நிலைகளுக்கு இடையில் இரக்கம் என்பது உள்ளது. எனவே நம் வாழ்வில் ஆர்வம், ஆர்வமற்ற நடுநிலை, இரக்கம் என்ற மூன்றும் அவசியமாகின்றது.  

கே: ஐந்து விதமான கேள்விகள் உள்ளன என்று தாங்கள் எப்போதுமே கூறுகின்றீர்கள். வர்த்தக உலகில், சில சமயங்களில் ஒருவர்  கூட்டத்தில் கேள்வி எதுவும் கேட்கவில்லை என்றால் கவனம் இல்லாமல் இருப்பதாகக் கருதப்படுவார். மௌனம் விவேகமானதாக பொருள் கொள்ளப்படுவதில்லை.

குருதேவ்: முற்றிலும் சரி! தொலைக்காட்சி மற்றும் வர்த்தக கூட்டங்களில் நீங்கள் ஏதேனும் பேசிக் கொண்டே இருக்க வேண்டும். பேசுவதில் பொருள் உள்ளதா இல்லையா என்பது இரண்டாம் பட்சம். நியாய சாஸ்த்திரத்தில் எட்டு விதமான நியாயங்கள் உள்ளதாகக் கூறப் படுகின்றது. விவாதங்களில் பல வகை; அவை வாத, விவாத ஜல்ப விதண்டா, ஹெட்வபசா என்பன. நியாய சாஸ்திரத்தில் உள்ள தத்துவம் இதுவாகும். பழங்காலத்திலேயே இவை தொகுக்கப்பட்டு விட்டன. எனவே பேசிக் கொண்டிருங்கள் ஆனால் என்ன பேசுகிறோம் என்பதை மட்டும் உணர்ந்து கொள்ளுங்கள். மௌனமாக இருக்க வேண்டாம், அதே சமயம்,உளறிக் கொண்டிருப்பதும் நல்லதல்ல. குறிப்பாக தேவையானதை மட்டும் பேசினால்  பாராட்டப்படுவீர்கள்.

கே: குருதேவ்! சமயம், ஒரு சமுதாயத்தின் அபினி என்று அழைக்கப்படுகின்றது. சமயத்தின் பெயரில் ஏன் இந்த அளவு வன்முறை ஏற்படுகின்றது? சமுதாயத்தில் எது ஊக்கு சக்தியாக விளங்க வேண்டும் என்று எண்ணுகின்றீர்கள்? முன்னேற்றத்தில் ஆர்வம், நெறிமுறைக் கோட்பாடுகள், பணம்  இவற்றில் எது?

குருதேவ்: மனித நேயம். மனித நேயமற்ற சமயத்தில், அதன் பெயரால் வன்முறைகள் மட்டுமே நிகழும்.உலகிலுள்ள அனைவரும் உங்களைச் சேர்ந்தவர்கள், ஒரே கடவுளை சேர்ந்தவர்கள் என்று கருதாமல், அவர்களை உங்கள் எதிரிகளாகக் கருதினால் சண்டைகள் தாம் நிகழும். இன்று உலகிலுள்ள பிரச்சினைகள் சமயத்தின் அடிப்படையில் எழுந்திருப்பது மிகுந்த துரதிர்ஷ்டம்.
முதலில் இவ்வித சண்டைகள் இஸ்லாமியருக்கும் யூதர்களுக்கும் இடையே, கிறிஸ்தவர்களுக்கும் இஸ்லாமியருக்கும் இடையே, மற்றும் இஸ்லாமியருக்கும் ஹிந்துக்களும் இடையே ஏற்பட்டது போன்று தோற்றம் அளித்தது. இவையெல்லாமே தோற்றம் தாம். சற்று உள்ளாழ்ந்து பார்த்தால் ஒரே சமய மக்கள் தங்களுக்குள்ளேயே சண்டையிட்டுக் கொண்டிருப்பது தெரிய வரும். இஸ்லாமியர், கிறிஸ்தவர், ஹிந்துக்கள் அனைவரும் தங்களுக்குள்ளேயே பூசல் கொண்டிருக்கின்றனர். எனவே உலகெங்கிலும், சமயங்கள் ஒன்றோடொன்று சண்டையிட்டுக் கொண்டும், தங்களுக்குள் உட்பூசலிட்டுக் கொண்டும் இருக்கின்றன. இதற்கு முதன்மைக் காரணம், கடவுளோ, அருட்போதகரோ, சமயக் கோட்பாடுகளோ அல்ல. முதன்மை காரணம் மக்களின் ‘தான்‘ என்னும் அகந்தை, மற்றும் குறுகிய எண்ணப்போக்கும் ஆகும். சமயம் என்னும் பெயரில், அவர்கள் தங்களுடைய அடக்கி வைக்கப்பட்டிருந்த கோபம், உள்ளப்புழுக்கம்,மன அழுத்தம் ஆகியவற்றை வெளிப் படுத்துகின்றனர். ஏனெனில், யாரும் அவர்களுக்கு அழுத்தமின்றி,விடுதலை உணர்வோடு 

இந்தக்கணத்தில் மகிழ்வுடன் எவ்வாறு வாழ்வது என்று கற்றுத்தரவில்லை. பிறரை கருணையுடன் காண்பது எப்படி என்று எவரும் அவர்களுக்குக் கற்றுத்தரவில்லை. இந்த பாடம் மற்றும் பயிற்சி காணப்படவில்லை. எல்லோரும் இப்படி இருப்பதாகக் கூற முடியாது. 

ஒவ்வொரு சமயத்திலும் நல்லவர்கள் இருக்கின்றார்கள். புத்த சமயம், கிறிஸ்தவ சமயம், ஜைன மதம்,இஸ்லாம், ஹிந்து சமயம் அனைத்திலும் சமுதாயத்தின் மேம்பாட்டிற்காக உழைக்கும் நல்லவர்கள் இருக்கின்றார்கள்.  சிலர் மட்டுமே மோதல்களில் ஈடுபடுகின்றனர், அவர்களுக்கு உதவி தேவை. கண்டனத்தை விட உதவி தான் அவர்களுக்குத் தேவை. ஒரு தீயவனை கண்டனம் செய்வது எளிது, ஆனால் அது அவனுக்கு உதவாது. மனம் ,மற்றும் இதயத்தில் நிலை மாற்றம் ஏற்படுத்த வேண்டும்.  இது ஆன்மீகத்தின் பங்கு. ஆன்மிகம் அனைத்து சமயத்தினரையும் ஒருங்கிணைத்து,  அன்பினாலேயே உருவாக்க பட்டிருக்கின்றோம் என்னும் ஒரே உண்மையை உணர்ந்து அனுபவிக்க செய்வது.

கே: தர்மம் என்பது என்ன? ஒருவருக்கு தர்மமாகத் தோன்றுவது மற்றொருவருக்கு அதர்மமாக தோன்றுகின்றது. என்னுடைய தர்மம் என்ன என்று எவ்வாறு நிச்சயிப்பது?

குருதேவ்: எது உங்களை உயர்த்துகின்றதோ அதுவே தர்மம். உண்மை, நேர்மை,கருணை, சேவை இவையனைத்தையும் ஒரே சொல்லில், தர்மம் என்று கூறலாம். ஒருவனது இயற்கை குணம், நற்பண்புகள், கோட்பாடுகள் இவையனைத்தையும் ஒரே சொல்லில் தர்மம் என்று கூறுகின்றோம். எது உங்களை ஆறுதல்படுத்தி, உங்கள் மனம், உடல் ஆத்மா என்னும் கூட்டுத் தொகுதியை உயர்விக்கின்றதோ அதுவே தர்மம்.