உனக்கு வேண்டியது கொடுக்கப்படுகிறது.

02 ஜனவரி 2014 – பகுதி 2

பாத் ஆன்டகாஸ்ட், ஜெர்மனி



           

கே: என் மனம் சேவையில் ஈடுபட விரும்பும் போது என் தொழிலை நான் எப்படி முழுமனதோடு செய்ய முடியும்?

குருதேவர்: நீ உன் சேவையையும், உன் தொழிலையும் சமநோக்கோடு பார்த்து இரண்டையும் செய்யலாம். வாழ்க்கையில் ஒரு தருணத்தில், சேவையைத் தவிர வேறு ஒன்றும் செய்ய விருப்பம் இல்லாமல் போகும் போது உன் வாழ்க்கையை சேவைக்காக அர்ப்பணிக்கலாம்.
உன் தேவைகள் என்ன? உண்ண உணவு, உடலை மூட ஒரு உடை, ஒரு நல்ல கார். இதெல்லாம் உனக்கு தானாகவே கிடைக்கும். இயற்கையே உனக்குத் தேவையானவற்றை அளிக்கும். நான் எப்போதுமே தேவையான பணம், பொருள், மக்கள் எப்படிக் கிடைக்கும் என்று யோசிப்பது இல்லை. வாழும் கலையில் ஒரு சேவைத் திட்டத்தைத் துவங்கும் போது அதற்குத் தேவையான எல்லாமே கிடைக்கிறது. வாழும் கலை அமைப்பை ஆரம்பிக்கும் போது என்னிடம் பணம் கிடையாது. இருந்தாலும் 175 குழந்தைகளுக்கான பொறுப்பை ஏற்றுக் கொண்டேன். அவர்களுக்குத் தேவையான உணவு, உடை மற்றும் இருப்பிடம் முதலியவற்றுக்கு ஏற்பாடு செய்ய வேண்டியிருந்தது. குருதேவர் யாரையும் எதுவும் கேட்க மாட்டார். இத்தேவைகள் எப்படி நிறைவேறும் என்று மக்கள் ஆச்சரியமடைந்தனர். 

“குருதேவா! நீங்கள் யாரையும் பணம் கொடுக்கச் சொல்லிக் கேட்க மாட்டீர்கள். இப்பள்ளியை எப்படி நடத்துவீர்கள்?” என்று என்னைக் கேட்டார்கள்.

“எனக்குத் தெரியாது” என்று சொன்னேன்.

எங்கள் வீட்டிலேயே அம் மாணவர்களைத் தங்க, என் தந்தை ஏற்பாடு செய்தார். சில நாட்கள் கழித்து ஒரு நண்பர் “நான் அமெரிக்கா செல்கிறேன். இது என் வீட்டு சாவி. என் வீட்டை நீங்கள் உபயோகிக்கலாம்.” என்று சொல்லி தன் வீட்டை எங்களுக்காக விட்டுச் சென்றார். மற்றொருவர் “நான் மூன்று மூட்டை பருப்பு அனுப்பி வைக்க விரும்புகிறேன்” என்று அனுப்பி வைத்தார். மற்றொருவர் மூன்று மூட்டை அரிசி அனுப்பி வைத்தார். ஒருவர் ஒரு உறையில் பணத்தை வைத்து, பள்ளி நடக்க உதவினார். எனக்கு இந்தப் பள்ளி எப்படி நடக்கும் என்ற கவலை ஒரு நாளும் இருந்ததில்லை. இப்படித்தான் வாழும் கலை அமைப்பு துவங்கியது. இதைத் துவங்க எனக்கு வாய்ப்பு இருந்தது. நான் “ஆம்” என்று சொன்னேன்.

முதலில் கிராமம் கிராமமாகச் சென்றோம். பின்பு நகரங்களுக்குச் சென்றோம். பிறகு நான் டெல்லி சென்றேன். அங்கு அந்நிய நாட்டு தூதரகங்களைச் சேர்ந்தவர்களுக்கு வாழும் கலைப் பயிற்சியளித்தேன். ஐக்கிய நாடுகளைச் சேர்ந்த ஒரு பிரமுகரும் அவருடைய மனைவியும் அந்தப் பயிற்சியில் சேர்ந்திருந்தனர். அப்போது அவர்களுக்கு சுதர்சன கிரியா கூட சொல்லிக் கொடுக்க வில்லை. எல்லோரும் அமர்ந்து சில பயிற்சிகளில் ஈடுபட்டோம். அப்போது நான் அதிகமாகப் பேச மாட்டேன். சில வார்த்தைகளே பேசுவேன்.

அவர்களனைவருக்கும் அந்தப் பயிற்சி மிகவும் பிடித்துவிட்டது. ஆச்சரியம் அடைந்தார்கள். நான் பின்பு அமெரிக்கா சென்ற போது அந்த ஐ.நா. பிரமுகரின் மனைவி திருமதி கூப்பர் என்னை சந்தித்தார். என்னிடம் பயிற்சி எடுத்துக் கொண்ட முதல் அமெரிக்கப் பெண்மணி அவர் தான். 32 ஆண்டுகள் கழித்து அமெரிக்காவில் “பூன்” ஆசிரமத்துக்கு நான் சென்ற போதும் அவர் வந்திருந்தார். பின்பு யாரோ என்னை இங்கிலாந்து வரும்படி அழைப்பு விடுத்தார்கள். நான் இங்கிலாந்து சென்றேன். பின்பு இத்தாலி சென்றேன். பிறகு ஜெர்மனி, ஸ்விட்சர்லாந்து முதலிய நாடுகளுக்கும் சென்றேன். இதேபோல் பல இடங்களுக்கு அழைப்பு வந்து அங்கெல்லாம் சென்று வருகிறேன். நான் எதையும் கணக்குப் பார்த்ததில்லை. எப்படி நடக்கும் என்று கவலைப்பட்டதில்லை. எல்லாம் தானாகவே நடந்தது.

மக்கள் என்னை லண்டனுக்கு அழைத்தார்கள். நான் அங்கு சென்றேன். நான் தங்கியிருந்த வீட்டில் மாலை நேரங்களில் சத்சங்கம் நடக்கும். தியானமும் நடக்கும். வீட்டுக்குள் வர மக்கள் வரிசையில் நிற்பார்கள். சத்சங்கத்துக்கு வந்த மக்கள் மிகவும் நன்றாக இருப்பதாக உணர்ந்தார்கள்.  அவர்கள் மனம் மிகவும் ஆறுதலாக இருந்ததை உணர்ந்த மக்கள் தங்கள் நண்பர்களிடம் சத்சங்கத்தைப் பற்றித் தெரிவித்தார்கள். புதிதாக வந்தவர்களும் மகிழ்வோடு தங்கள் நண்பர்களுக்குச் சொன்னார்கள்.

10 வருடம் வரை எந்த விளம்பரமும் கொடுக்கவில்லை. ஆரம்ப நாட்களில் நான் விளம்பரத்தை அனுமதிக்க வில்லை. படம், போஸ்டர், பேனர் முதலியவைகளையும் அச்சடிப்பதை அனுமதிக்க வில்லை. வாய்வழி செய்தி மூலமே மக்கள் வாழும் கலையைப் பற்றி அறிந்தார்கள். உனக்கு பயனுள்ளதாக இருந்தால், மற்றவர்களுக்குச் சொல்லி அவர்களையும் பயனடையச் செய். அவர்கள் பலனடைந்தால், அவர்கள் தங்கள் நண்பர்களுக்குச் சொல்லட்டும் என்று நான் சொல்வது வழக்கம்.

பிற்காலத்தில் 1989க்குப் பின் வாழும்கலை உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகமான பின் செய்தித் தாள்களில் வாழும் கலையின் சத்சங்கம் தியானம் நடக்கும் இடம், நேரம் பற்றிய விவரங்களைக் கொடுக்கும் வழக்கம் ஆரம்பித்தது. வாழும் கலை இப்படி சிறிய அளவில் துவங்கி, மிகப் பெரிய (சேவை) நிறுவனமாயிற்று.

இப்ப்ரபஞ்சத்தின் பெரிய திட்டத்தில் நாமும் ஒரு சிறிய பங்கு வகிக்கிறோம் என்பதை அறிவது அவசியம். நம் தேவைகள் தானாகவே பூர்த்தியாகும். ஆனால் பேராசை என்ற தாகத்தை எப்போதும் தணிக்க முடியாது. பேராசை தேவையிலிருந்து மாறுபட்டது. தேவைகள் எப்போதும் கிடைக்கும். உனக்கு ஆழ்ந்த விருப்பம் இருந்து, அதற்காக ப்ரார்த்தனை செய்யும் போது அது நிறைவேறும். சில சமயம் தாமதமாகலாம். ஆனால் எப்போதும் தாமதமாகாது.

கே: சமஸ்கிருத மொழி எல்லா கிரகங்களிலும் பேசப்படுகிறதா? அல்லது இந்த பூமியில் மட்டுமா?

குருதேவர்: எனக்கு மற்ற கிரகங்களை பற்றித் தெரியாது. ஆனால் இந்த பூமியில் யாரும் சமஸ்கிருத மொழியைப் பேசுவதில்லை. எல்லா மொழிகளும் சமஸ்கிருதத்திலிருந்து வந்தது என்றாலும், சமஸ்கிருத மொழியை யாரும் பேசுவதில்லை. இந்தியாவில் 99.9 % சமஸ்கிருதம் காணாமல் போய் விட்டது. 0.01 % மக்கள் கொஞ்சம் சமஸ்கிருதத்தை அறிந்திருக்கிறார்கள். சமஸ்கிருத மொழியை மீண்டும் மக்களிடையே அறிமுகப்படுத்த வேண்டும். இப்போது அது நடக்க ஆரம்பித்திருக்கிறது. மெதுவாக மக்கள் சமஸ்கிருதத்தின் பெருமையை உணரத் துவங்கியிருகிறார்கள். சமஸ்கிருதம் கம்ப்யூடர்களில் உபயோகப்படுத்த ஒரு நல்ல மொழியாகும்.

சமஸ்கிருத மொழியின் ஒலிகள் நம் நரம்பு மண்டலத்தோடு சிறப்பாக ஒன்றியிருக்கிறது. இத்தாலிய மொழியில் 50 – 60 % சமஸ்கிருத வார்த்தைகள் உள்ளன. ரஷ்ய மொழியில் பல சமஸ்கிருத வார்த்தைகள் உண்டு. ஆங்கில மொழியும் அப்படித் தான். இந்திய மொழிகள் அனைத்திலுமே பல சமஸ்கிருத வார்த்தைகள் கலந்திருக்கின்றன. சீன, ஜப்பானிய மொழிகளிலும் பல சமஸ்கிருத வார்த்தைகள் உண்டு. சமீபத்தில் நான் ஜப்பான் சென்றிருந்த போது, ஒரு அறிஞர் எழுதிய புத்தகத்தைப் படித்தேன். அதன் படி ஜப்பானிய மொழியில் 80 % வார்த்தைகள் தமிழ் மொழியிலிருந்து தோன்றியதாக எழுதியிருக்கிறார். தமிழ் மொழியும் சமஸ்கிருத மொழியோடு இணைந்த ஒன்றே. அதற்கான தனித் தன்மையும் உண்டு. நீ எந்த மொழி பேசுபவனாக இருந்தாலும், உன் இதயத்தின் மொழியைப் பேசு என்று சொல்வேன். 
இதயத்தின் மொழி உண்மையானது. நேரானது. யாரையும் குறை சொல்லாதது. யாருக்கும் துன்பம் விளைவிக்காதது. யாரைப் பற்றியும் தீய உணர்வுகளும் இல்லாதது. தூய இதயத்தோடு, தெளிந்த மனத்தோடு பேசினால் வெற்றி உன்னைத் தேடி வரும். உனக்கு வெற்றி நிச்சயம்.
கே: நான் கர்ப்பமாக இருக்கிறேன். சைவ உணவு மட்டுமே உண்கிறேன். “நான் அசைவ உணவு உண்ண வேண்டும். அப்போது தான் என் குழந்தை ஆரோக்கியமாக வளரும்” என்று சொல்கிறார்கள். நீங்கள் சொல்வது என்ன?

குருதேவர்: அப்படிப்பட்ட கருத்துக்கு நான் உடன்பட மாட்டேன். இன்று இந்தியாவில் பல குழந்தைகள் பிறக்கின்றன. ஆரோக்கியமாக வளர்கின்றன. இந்தியாவில் பெரும்பாலோர் சைவ உணவு மட்டுமே உண்பவர்கள். அமெரிக்காவிலும் பலர் தற்போது சைவ உணவு உண்கிறார்கள். 
கோடிக்கணக்கான அமெரிக்க மக்கள் சைவ உணவுக்கு மாறி விட்டார்கள். ஐரோப்பாவிலும் மாற்றம் துவங்கியிருக்கிறது. மருத்துவர்களின் கருத்துப்படி நம் உடலுக்கு சைவ உணவே சிறந்தது. மிருகங்களின் புரோட்டினை ஜீரணிக்க நம் உடல் ஏற்றதல்ல. 

மாமிசம் உண்டால் தான் நம் உடல் வலுப்பெறும் என்ற எண்ணம் தவறு. அசைவ உணவு நம் உடலுக்குத் தேவையில்லை. மாமிசம் சாப்பிடாததால் நீ பலவீனமாக இருக்கிறாய் என்று சொல்வது தவறான கருத்தாகும். குதிரையைப் பார். இயந்திரங்களின் வலுவை குதிரைச் சக்திப்படி மதிப்பிடுகிறோம். குதிரை ஒரு சைவ உணவு உண்ணும் மிருகம். யானையும் சைவ உணவு மட்டுமே உண்கிறது. ஒட்டகச் சிவிங்கி, வரிக் குதிரை முதலிய மிருகங்களும் சைவ உணவையே உண்கின்றன. பெரிய ஐந்து மிருகங்களில், சிங்கத்தைத் தவிர 4 மிருகங்கள் சைவ உணவை மட்டுமே உண்கின்றன. அதற்காக அவை பலவீனமாக இருப்பதில்லை. பசுக்களும், காளைகளும் சைவ உணவு உண்பவையே. காளைகள் மிகவும் பலம் வாய்ந்தவைகள். எனவே அசைவ உணவே பலம் தரும் என்ற கருத்து முற்றிலும் தவறானது. மாமிசம் உண்பதால் பல வித நோய்களால் பாதிக்கப் படும் வாய்ப்பு உண்டு. இண்டர்நெட்டில் போய் அதைப் பற்றிய  விவரங்களை அறியலாம்.

கே: சமீபத்தில் இந்தியாவில் டெல்லியில் ஒரு புதிய அரசியல் கட்சி தோன்றி, அக்கட்சி இலஞ்ச ஊழலையும், வி.ஐ.பி கலாசாரத்தையும் எதிர்ப்பதாக அறிந்தேன். வாழும் கலை அமைப்பில், சில சமயம் நான் இந்த வி.ஐ.பி கலாசாரத்தை காண்கிறேன். நீங்கள் வி.ஐ.பி. கலாசாரத்தை ஊக்குவிப்பீர்களா?

குருதேவர்: கண்டிப்பாக வி.ஐ.பி கலாசாரம் கூடாது. அதற்காக எல்லோரும் ஒரே காரியத்தை செய்ய வேண்டும் என்று சொல்லக் கூடாது. ஒவ்வொருவரும் தத்தம் பொறுப்பை முறைப்படி செய்ய வேண்டும்.

டெல்லியில் வி.ஐ.பி கலாசாரம் என்ற பெயரில் சிலருக்கு தனிச் சலுகைகள் கொடுக்கப்பட்டு வந்தது. நம் சத்சங்கங்களில் வி.ஐ.பி என்ற பெயர் அட்டைகளை வைக்க வேண்டாம், வி.ஐ.பி என்ற போர்டுகளை வைக்க வேண்டாம் என்று சொல்வேன். இருந்தாலும் நுழையும் இடத்தில் அப்படி ஒரு அட்டையை வைக்கிறார்கள். நம் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள சிலருக்கு பாஸ் வழங்கப்படுகிறது. பாஸ் வைத்திருப்பவர்கள் அந்த வழியாக உள்ளே சென்று அமர்வதற்காக அப்படி வைக்கிறார்கள்.

இந்த அரசியல் கட்சி புதிதாக ஆரம்பிக்கப்பட்டது. இரண்டு மாதங்கள் கழித்து அவர்கள் வி.ஐ.பி கலாசாரத்தை பின்பற்றாமல் இருப்பார்களா என்று பார்க்கலாம். சில சமயம் அப்படி நடக்க முடிவதில்லை. ஜெர்மனியின் ஜனாதிபதி இங்கு வருவதாக வைத்துக் கொள்ளுங்கள். அவர் எங்கு வேண்டுமானாலும் உட்கார முடியுமா? முடியாது. அவரைச் சுற்றி பலத்த பாதுகாவல் இருக்கும். (மோப்பம் பிடிக்கும் நாய்கள் கூட அவர் அருகில் இருக்கக் கூடும்)

நான் புதிய கட்சியின் தலைவரான அரவிந்த் கேஜ்ரிவாலிடம் சொன்னேன். உங்கள் இலட்சியம் நல்லது. ஆனால் சமூக விரோத சக்திகள் உங்களுக்கு இடையூறு விளைவிக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே சிறிது பாதுகாப்பு அவசியம் தான். இவ்வுலகில் இப்போதும் குற்றவாளிகள் இருக்கிறார்கள். பொது இடங்களின் நம்மைப் பாதுகாத்துக் கொள்வது அவசியம். என் பார்வைப்படி எல்லோரும் நல்லவர்கள் என்று கருதினாலும், சில சமூக விரோதிகள் இருக்கக் கூடும். நாம் வாழ்வது ராம ராஜ்யம் அல்ல. ராம ராஜயம் என்றால் அங்கு ஒரு குற்றமும் நிகழ்வதில்லை என்று அர்த்தம். பழைய நூல்களின் படி, ராமராஜ்யத்தில் எல்லோரும் நீதி வழுவாமல் நடந்ததாகத் தெரிகிறது. எல்லோரும் சமமாக நடத்தப் பட்டார்கள். அன்பாக இருந்தார்கள். இந்தியாவை ராம ராஜ்யமாக்க மகாத்மா காந்தி கனவு கண்டார். ராமரின் பெயரால் இந்திய மக்களை ஒன்று சேர்த்தார். ராம ராஜ்யம் வேண்டுமென்றால் எல்லோரும் ஒன்று சேர்ந்து வாழ வேண்டும் என்று வலியுறுத்தினார். 

இன்றும் ராமராஜ்யம் வரவில்லை. எங்கு குற்றம் நிகழுமோ, அங்கு பாதுகாப்பாக இருப்பது அவசியம். ஆன்மீக சக்தியுள்ளவர்களுக்கு பாதுகாப்பு தேவையில்லை. மற்றபடி பொதுவாழ்வில் ஈடுபடுபவர்களுக்கு பாதுகாப்பு தேவை.

நீங்கள் சிலரை மட்டும் தனியாக பார்த்துப் பேசுகிறீர்கள். எல்லோரையும் ஏன் தனியாக பார்ப்பதில்லை என்று கேட்கிறார்கள். நான் எல்லோரையும் பார்க்கிறேன். சிலர் சேவைத் திட்டங்களை பற்றி தாங்கள் செய்த சேவைகளை பற்றிப் பேச விரும்பும் போது சற்று நேரம் அவர்களோடு தனியாகப் பேசி விவரம் கேட்கிறேன். அவர்கள் தங்கள் ஊரில் செய்த சேவைகளை பற்றி என்னிடம் சொல்ல விரும்புகிறார்கள். நீ என்னிடம் வந்து அமர்ந்து கொள்வதை மட்டும் விரும்பினால், எனக்கு நேரமில்லை. அரட்டை அடிக்க என்னிடம் நேரம் கிடையாது. உன்னிடம் சேவைத் திட்டம் இருக்குமானால், அதைப் பற்றி விளக்க தனியாக நேரம் ஒதுக்குவேன். ஆனால் இது வி.ஐ.பி கலாசாரம் இல்லை.

கே: (சத்சங்கத்தில் கேள்வி கேட்டது காதில் விழவில்லை)

குருதேவர்: என் பார்வையில் நாம் தான் இந்த எல்லைகளை ஏற்படுத்துகிறோம். 1980 களில் நான் ஐரோப்பா சென்ற போது பல விசாக்கள் எடுக்க வேண்டியிருந்தது. ஜெர்மனிக்கு ஒரு விசா. ஃப்ரான்ஸுக்கு ஒரு விசா. இத்தாலிக்கு ஒன்று; ஸ்விட்சர்லாந்துக்கு ஒன்று; ஹாலந்துக்கு ஒன்று. மற்றொன்று ஸ்காண்டிநேவிய நாடுகளுக்கு. பல விசாக்கள். கடவுளே ! ஒவ்வொரு நாட்டுக்கும் விசா எடுக்க நாலைந்து நாட்களாகும். அதனால் என் ப்ரயாணத்தை மிகவும் முன்பாகவே திட்டமிட வேண்டியிருந்தது. அந்த சமயத்தில் என் மனதில் “ஐரோப்பிய நாடுகளுக்கிடையே உள்ள எல்லைகள் மறைய வேண்டும்.” என்ற விருப்பம் தோன்றியது. “ஏன் இத்தனை விசா கட்டுப்பாடுகள்? இந்தக் கட்டுப்பாடுகள் அகல வேண்டும்” என்று இதை நான் வெளிப்படையாக சொன்னது உண்டு. சில ஆண்டுகளுக்குப் பின் இப்படி நடந்தது. இப்போது நீங்கள் ஒரு (ஷெங்கன்) விசாவிலேயே எல்லா ஐரோப்பிய நாடுகளுக்கும் செல்ல முடியும். ஸ்விட்சர்லாந்து நாடு இதில் கடைசியாக சேர்ந்தது. அவர்கள் மற்றவர்களை நீரில் தள்ளிவிட்டு, அந்த இடத்தில் எவ்வளவு ஆழம் என்று பார்ப்பவர்கள் ! (சிரிப்பு) மிக ஜாக்கிரதையாக இருப்பார்கள்.

இப்போது அந்தப் பிரச்சினை கிடையாது. ஒரே ஒரு விசா தான் தேவை. ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த எல்லா நாடுகளுக்கும் அந்த விசாவில் செல்ல முடியும். போலந்து நாடும் இதில் சேர்ந்து விட்டது. முன்பு நான் ஜெர்மனி சென்ற போது அங்கிருந்து போலந்துக்கு தனியாக விசா எடுத்துத் தான் செல்ல முடியும். இப்போது அது தேவையில்லை. நாடுகளுக்கிடையே உள்ள எல்லைகள் அழிந்து விட்டன. இது தான் இயற்கையின் வழி. இயற்கையின் சமீபத்தில் நாம் செல்கிறோம்.
கலாசார இடைவெளிகள், பலதரப்பட்ட மனித இனங்களுக்கிடையே, மொழிகளுக்கிடையே உள்ள கருத்து வேறுபாடுகள், நாடுகளுக்கிடையே உள்ள எல்லைப் பிரச்சினைகள் எல்லாவற்றையும் விட்டுவிட வேண்டும். அதற்கான வேளை வந்து விட்டது. உலக மக்கள் அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். “வசுதேவ குடும்பகம்”