வாழ்க்கையின் நோக்கம் என்ன?

03 ஜனவரி 2014,


பாட் ஆண்டோகாஸ்ட், ஜெர்மனி.

கேள்விகளும் பதில்களும்:



கே: வாழ்க்கையின் நோக்கம் என்ன?
குருதேவர்: இங்கு உள்ள அனைத்தும் நிரந்தரமானவை, நான் மட்டும் ஒரு நாள் இறந்து விடுவேன் என்று நினைக்கும் போது, வாழ்க்கையில் ஒவ்வொரு பொருளும், நிகழ்ச்சியும், செய்யும் செயல்கள் அனைத்தும் அர்த்த மற்றவையாகத் தோன்றும். அச்சமயம் “யோக வசிஷ்டா” என்னும் புத்தகத்தை படி. யோக வசிஷ்டா ஒலித்தட்டுகளை இயக்கி அதை கேள். ஆத்மாவின் இயல்பை நீ புரிந்து கொள்வாய். நீ யார்; நீ என்னவாக இருக்கிறாய் என்பதை அறிந்து கொள்வாய்.
எதற்குமே ஒரு அர்த்தமில்லை. ஒரு இலக்கு இல்லை. நாம் ஏன் இங்கு இருக்கிறோம்? இந்த உலகம் எதற்காகப் படைக்கப்பட்டது? இந்த கேள்விகளை ஒரு முதிர்ந்த அறிவுடையவரால் மட்டுமே கேட்க முடியும். ஞானத்தின் ஆழ்ந்த நிலைகளை அடைய இதுவே சரியான நேரமாகும்.
வேதத்தின் ஞானம் கூட உனக்கு உதவியாக இருக்கும். இந்தக் கேள்விகள் உன் மனதில் எழுந்ததை பற்றி மகிழ்ச்சி அடைய வேண்டும். நீ ஒரு அதிர்ஷ்டசாலி. பல மனிதர்களுடைய மனதில் பல காலம் வாழ்ந்த பின்னும் கூட இத்தகைய கேள்விகள் எழுவதில்லை. இப்படிப்பட்ட நேரங்களில் (வாழ்க்கையில் ஒரு அர்த்தமே இல்லை என்று எண்ணும் போது) உன்னை நீ ஒரு அதிர்ஷ்டசாலியாக எண்ணலாம்.
கே: குருதேவா! தேவியைப் பற்றி (பெங்களூர் ஆசிரமத்துக்கு சமீபத்தில் எடுத்து வந்த புனிதமான கல்) தயவு செய்து சொல்லுங்கள்.
குருதேவர்: அது ஒரு கல். நாளைக்கு பனி பெய்யுமா? பனி அதிகமாக இருக்குமானால் நீ கனமாகி விடுவாய். பனி பெய்யாமல் இருந்தால் நீ லேசாக இருப்பாய். பனி பெய்யும் போது கல் லேசாக ஆகி விடும். பனி இல்லாத போது கல் மிக கனமாக ஆகிவிடும். உன்னால் தூக்க முடியாது. அக் கல்லில் ப்ராண சக்தி இருக்கிறது.
2600 வருடங்களுக்கு முன் அந்தக் கல்லில் ஒரு சாது ப்ராண சக்தியை ஏற்றி வைத்தார். இதை ப்ராண ப்ரதிஷ்டா என்று சொல்வார்கள். அதில் தேவியின் சக்தி உள்ளது. (பெண் தெய்வத்தின் சக்தி)
தாய் சக்தி உள்ள அக்கல், தேவியின் கல் ஆசிரமத்துக்கு வந்து நாலைந்து மாதமாகிறது. நீ எந்தக் கேள்வி கேட்டாலும் உனக்கு பதில் கிடைக்கும். அடுத்த ஆண்டு எனக்குத் திருமணமாகுமா? என்று கேட்பதாக வைத்து கொள். “ஆம்” என்றால் அக்கல் கனமாகி விடும். “இல்லை” என்றால் அக்கல் லேசாக இருக்கும். விடைக்குத் தக்கவாறு கல் கனமாகவோ,லேசாகவோ ஆகும். கடவுள் நம்பிக்கை இல்லாத ஒருவர், எப்போதுமே கடவுளை நம்பாதவர், இந்திய விமானப் படையில் பணி செய்து 60 வயதாகி ஓய்வு பெற்றவர், தனக்கு ஓய்வு ஊதியமாக கிடைத்த பணத்தில் ஒரு நிலத்தை வாங்கினார். அந்த நிலத்தில் அவருக்கு இந்தக் கல் கிடைத்தது. அவருடைய கனவில் “தேவி” தோன்றி “நான் இந்தக் கல்லில் இருக்கிறேன்” என்று அவருக்கு உணர்த்தினாள்.
முதலில் அவர் இதை நம்பவில்லை. அவருக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவர் மனைவி தான் “இதை பார்த்து விடலாம்” என்று அவரிடம் சொன்னார். அந்தக் கல்லைப் பார்த்ததிலிருந்தே அவர் வாழ்க்கை மாறி விட்டது என்று சொன்னார். அவர் அந்தக் கல்லை பெங்களூர் ஆசிரமத்துக்கு எடுத்து வந்தார். பொதுவாக தேவி (அந்தக் கல்) எங்கும் செல்வதில்லை.
அவர் அவளிடம் கேட்டார். பாரத ஜனாதிபதி அழைத்தால் செல்வாயா ? என்று கேட்டார். தேவி “மாட்டேன்” என்று சொன்னாள். குருதேவர் அழைத்தால் நீ செல்வாயா? என்று கேட்டார். தேவி “செல்வேன்” என்று சொல்லி இங்கு வந்து விட்டாள். இப்போது இரண்டு பேர்களை மட்டும் தன்னைத் தொட அனுமதி கொடுத்திருக்கிறாள். ஒன்று நான். மற்றவர் அந்தக் கல்லின் சொந்தக்காரர். தேவி அரிடம் குருதேவரின் ஆசிரமத்துக்கு செல். அவர் அங்கு இருக்கிறார் என்று சொல்லியிருக்கிறாள். எனவே அவர் தேவியுடன் ஆசிரமத்துக்கு வந்தார்.
அவருக்கே இது அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருந்திருக்கிறது. நான் அந்தக் கேள்வியை 100 முறை கேட்டேன். 100 முறையும் அவள் என்னை ஆசிரமத்துக்கு எடுத்துச் செல்ல சொன்னாள். பின்பு ஒருநாள் அவளை இங்கு (ஜெர்மன் ஆசிரமத்துக்கு) அழைத்து வருவோம். குருதேவர் செல்லுமிடத்துக்கு நான் வருவேன் என்று சொல்லியிருக்கிறாள். எனவே ஒருநாள் அவளை அழைத்து வருவேன்.
பல விஞ்ஞானிகள் வந்து தேவியைப் பார்த்தார்கள். வியப்படைந்தார்கள். என்ன சொல்வது என்று அவர்களுக்குப் புரியவில்லை. அந்தக் கல் 200 கிலோ வரை கனமாகி விடும். விடை “இல்லை” என்றால் அதைத் தூக்கவே முடியாது. விடை “ஆம்” என்றால் ஒரு பறவையின் சிறகைப் போல அதை தூக்கலாம். ஒரே கல் பறவையின் சிறகைப் போல லேசாகவும், அதே கல் தூக்க முடியாத படி கனமாகவும் ஆவதற்குக் காரணம் என்ன என்று இன்றைய விஞ்ஞானிகளுக்கு தெரியவில்லை. இது அவர்களுடைய விஞ்ஞான அறிவுக்கு சவாலாக இருக்கிறது.
கே: கைலாசம் என்றால் என்ன?
குருதேவர்: கைலாசம் என்பது ஒரு மலை. சீன நாட்டில் இருக்கிறது. அங்கு செல்வது ஒரு சிரமமான பயணமாக இருக்கும். பல வாரங்களாகும். பலமுறை மக்கள் என்னை அங்கு செல்ல அழைக்கிறார்கள். ஆல்ப்ஸ் மலை கூட மிக அழகானது. பனியால் மூடியிருக்கிறது. 
ஸ்விட்சர்லாந்தில் ஆல்ப்ஸ் மலைக்குச் செல்ல சாலை வசதிகள் உள்ளன. அங்கு தங்குவதற்கு வசதியான இடங்கள் உண்டு. கைலாசம் செல்லும் போது அங்கு கூடாரங்களில் தங்க வேண்டும். மிகவும் குளிராக இருக்கும். அறையை சூடு செய்வது போல் கூடாரங்களில் முடியாது. மரங்களில்லாத மலைப் பகுதியில் பல மைல் தூரம் நடந்து செல்ல விரும்பினால், உயர்ந்த மலை உச்சிகளில் ஆக்ஸிஜன் மிகக் குறைவாக இருக்குமிடங்களுக்கு செல்ல விரும்பினால் கைலாச மலைக்கு நீ செல்லலாம்.
கைலாசம் என்றால் ஆனந்தமிருக்குமிடம் என்று அர்த்தம். “லாஸ்”  என்றால் ஆக்க சக்தி என்று பொருள். கைலாசம் என்றால் ஆக்கசக்தி இருக்குமிடம். எப்போதும் கொண்டாட்டமிருக்குமிடம். அது தான் கைலாசம். அதுவே வாழ்க்கை. அத்தகைய அதிர்வலைகளை நீ எந்த இடத்திலும் உருவாக்க முடியும். நான் செல்லுமிடங்களில் அத்தகைய ஆக்க சக்தியின் அதிர்வலைகளை உருவாக்குகிறேன். ஆக்க சக்தியைத் தேடி நீ ஒரு இடத்துக்குச் செல்லத் தேவையில்லை.
சமஸ்கிருத மொழியில் ஒரு பழமொழி உண்டு. “மக்கள் தியானம் செய்யும் இடங்கள், சாதுக்கள் இருக்கும் இடங்கள் தூய்மையான பவித்திரமான இடங்களாகும். உங்கள் ஒவ்வொருவரிடமும் ஒரு சாது இருக்கிறார். நீங்கள் அமர்ந்து தியானம் செய்யும் போது சுற்றுச் சூழல் தூய்மையாகும்.
கைலாசத்தில் மக்கள் வசிப்பதில்லை. இருக்க கட்டிடங்கள் கிடையாது. வேறு பிராணிகளும், மரங்களும் கிடையாது. இருந்தாலும் மக்கள் கைலாசம் செல்கிறார்கள். அங்கு சென்றால் மட்டுமே உனக்கு சிறப்பான (விசேஷமான) சக்தி கிடைக்கும் என்று சொல்ல மாட்டேன். இல்லை. அந்த சக்தி இங்கு தான் இருக்கிறது. (குருதேவர் இதயத்தைக் காட்டுகிறார்). நீ அங்கு உள்ளே செல். அந்த சக்தியைக் காண்பாய்.
கே: கூட்டத்தில் ஒருவர் கேட்ட கேள்வி காதில் விழவில்லை.
குருதேவர்: காம இச்சை (உடல் இச்சை) எதிர்மறை சக்தி என்று ஏன் எண்ணுகிறாய்? நாம் அனைவரும் அந்த இச்சையின் காரணமாகவே பிறந்திருக்கிறோம். காம இச்சை பாவமானது என்று மக்களை சிலர் நம்ப வைத்திருக்கிறார்கள். காமம் ஒரு பாவம் அல்ல. அது ஒரு அடிப்படைத் தேவை. தாவரமோ, மனிதனோ, மிருகமோ காம இச்சையால் பிறப்பிக்கப் படுகிறது. இந்த உண்மையை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
ஆனால் காமத்துக்கும், ஆனந்தத்துக்கும் வேறுபாடு உண்டு. காமத்தினால் சக்தி குறைகிறது. ஆனந்தத்தால் சக்தி காக்கப்படுகிறது. ஒன்று சக்தியை விரயமாக்குகிறது. மற்றது சக்தியைக் காப்பது.
கே: பச்சை (சமைக்காத) உணவை உண்பது உடலுக்கு ஏற்றதா?
குருதேவர்: சமைக்காத உணவு நல்லது தான். ஆனால் அதையே உண்பது சரியல்ல.. நம் உடல் பல தலைமுறைகளாக சமைத்த உணவுக்குப் பழகி விட்டது. ஆயுர்வேதப்படி அதிகப் படி பச்சை உணவு உண்பதால், உடலில் வாதத்தின் அளவு சமநிலையிலிருந்து பாதிக்கப்படும். நம் உடலுறுப்புகள் சரிவர இயங்காது.
சில நாட்கள் அல்லது சில வேளைகள் சமைக்காத பச்சை உணவை உட்கொள்ளலாம்.அது உடலை சுத்தமாக்கும். தினந்தோறும் அதிக அளவு பச்சை உணவை சமைத்த உணவோடு சேர்த்துக் கொள்வது நல்லது. குளிர் காலத்தில் சூடான உணவும் தேவை. இது என் கருத்து. உன் உடலுக்கு எது ஏற்றது என்பதை நீயே தெரிந்து கொள்வது நல்லது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான உணவுப் பழக்கம் ஏற்றதாக இருக்கும். இதைப் பொதுவான கருத்தாக ஆக்க முடியாது.