நீங்கள் உணர்ச்சிவசப்படுபவரா அல்லது விவேகமானவரா?


ஜனவரி 25, 2014                                      பெங்களூரு - இந்தியா


கேள்விகளும் - பதில்களும்







கே: குருதேவ்! நமது கவனத்தைப் பிறர் மீது செலுத்தும் போது, நாம் பலவீனமாகி விடுகின்றோம். யுதிஷ்டிரர் (பாண்டவ மைந்தருள் ஒருவர்) தனது கவனத்தை பாண்டவர்களின் மீது வைத்து பலவீனமானவராக ஆகிவிடுகின்றார். அதனால் கிருஷ்ணர் அவரை தன்னிலை மைய்யமாக இருக்கும்படி கூறுகின்றார். நாம் பிறர் மீது கருணையுள்ளவராக இருக்கக் கூடாது என்று பொருள்படுமா?

குருதேவ்: பிறரிடம் கருணையுள்ளவராக இருப்பதற்கும் பிறருடைய உணர்ச்சிகளுக்குள் சிக்கிக் கொள்வதற்கும் இடையே உள்ள வேறுபாட்டினை புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் வெகு சுலபமாக பிறரது உணர்ச்சிளுக்குள் சிக்கி உங்கள் மைய்ய கவனத்தை இழந்து விடலாம். அப்போது உங்களது அறிவாற்றல் மங்கி விடலாம், உங்களது தீர்மானங்கள் தெளிவற்றதாகவும், தவறாகவும் ஆகலாம். ஒரு குழந்தை அழும் போது, அதன் பெற்றோர், அதன் அழுகையை உணர்ந்து அது அழுவதை நிறுத்தி விடும் என்றும் அறிந்து அதன் தேவையை பூர்த்தி செய்கின்றனர்.  உணர்ச்சி வசப்பட்டு, ஓ ! குழந்தை அழுகின்றது, அதனால் நானும் அழப்போகின்றேன் என்று கூறுவதில்லை.

ஒவ்வொரு நாளும் குழந்தைகள் பிறக்கின்றன. அக்குழந்தைகள் ஒரு மணி அல்லது இரண்டு மணி நேரத்திற்கொருமுறை அழுகின்றன. அவ்வாறு அழும் குழந்தைகளோடு தாய்மார்களும் ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரத்திற்கொரு முறை அழுது கொண்டிருந்தால் எப்படி இருக்கும் என்று சற்றுக் கற்பனை செய்து பாருங்கள்.
கருணை அவசியம். குழந்தையின் அழுகையை பற்றி கவலைப்படாத தாய் இருப்பதில்லை. தாய் மிகுந்த கருணையுடன் இருக்கின்றாள், ஆனால் குழந்தையின் உணர்ச்சிகளால் அலைக்கழிக்கப் படுவதில்லை. யாராவது அழுதால் நீங்களும் அழத் துவங்குகின்றீர்கள். அது பிறரது உணர்ச்சிகளால் உறிஞ்சப்படுகிறீர்கள் என்பதாகும். ஒரு தாய் கருணை உள்ளவளாக இருக்கின்றாள். குழந்தையின் உணர்ச்சிகளால் உறிஞ்சப்படுவதில்லை. அது போன்றே யோகா செய்கின்றது. யோகா உங்களை மைய்யப்படுத்தி கூருணர்வு உள்ளவராகவும், நல்லறிவாளராகவும் ஆக்குகின்றது.

இரண்டு விதமான மனிதர்கள் இருக்கின்றார்கள்.
1. மிகுந்த அறிவுள்ளவர்கள். புத்திக் கூர்மை உடையவர்கள். ஆனால் கூர்மையான உணர்வுள்ளவர்கள் அல்லர். ஏனெனில், தங்களுக்குத் தெரிந்தது எல்லாம் சரியானது என்ற எண்ணம் கொண்டவர்கள்.
2. இரண்டாவது வகையினர், கூருணர்வு மிக்கவர்கள்.  ஆயினும் புத்திக் கூர்மை உடையவர்கள் அல்லர். உணர்ச்சிகளால் அலைக்கழிக்கப்பட்டு, உணர்ச்சி பூர்வமாகவே பேசுபவர்கள்.

ஒரு ஆண்டில் மூன்று மாதங்களுக்கு யானைக்கு ஆண்மை இயக்கு நீர் சுரப்பது அதிகமாகும்.  அந்த மூன்று மாதங்களும் அந்த யானை தனது பாகனுக்குக் கூடக் கட்டுப்படாது. எனவே அக்காலங்களில் அதை ஒரு சங்கிலியால் பிணைத்திருப்பார்கள். முதல் முறையாக இவ்வாறு சங்கிலியால் கட்டப்பட்டிருக்கும் யானையைப் பார்த்த ஒரு பெண் அழத் துவங்கினாள். அது மட்டும் சங்கிலியால் பிணைக்கப் படவில்லையென்றால் மதம் பிடித்த அந்த யானை என்ன வேண்டுமானாலும் செய்யும், அனைவரும் துன்புற்று அழுதிருப்பார்கள்! சில கிலோக்கள் எடையுள்ள ஒரு சங்கிலி என்பது யானைக்குப் பெரிய விஷயம் அல்ல. அது பல டன் எடைகளைச் சுமக்கும் வலிமை உடையது.  ஆனால் அச்சங்கிலியானது யானையைக் கட்டி வைத்திருப்பது  போன்று தோன்றுகின்றது.
உணர்ச்சி வசப்படும் மக்கள் அதை அறிவதில்லை. தேவையானது என்னவென்றால், கூருணர்வுடன் கூடிய, அறிவுத் திறன் ஆகும். சாதாரண  மொழியில் கூறுவதென்றால், மூளையும், இதயமும் ஒருங்கிணைதல் எனலாம்.

பெண்களுக்கு கூருணர்வு அதிகம், அவர்கள் இன்னும் கூட அறிவுத்திறனுடன் இருக்கலாம். ஆண்களுக்கு அறிவாற்றல் ஏற்கனவே உண்டு, அவர்கள் சற்று கூருணர்வுடன் இருக்கலாம். இது பொதுவிதி அல்ல. பல சமயங்களில் இது முற்றிலும் மாறுபடுவதும் உண்டு.  இது என்னை நான் காத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக! (சிரிப்பு)

கே:  என்னுடைய பிரச்சினை என்னவென்றால்என்னால் திறம்பட மற்றவர்களுக்கு பற்றுறுதி ஊட்ட முடியவில்லை அதிலும் முக்கியமாக மிக உயர்ந்த இந்த வாழும்கலைப் பயிற்சியைப் பற்றி மெய்ப்பித்துக் காட்ட முடியவில்லை. நான் அவர்களிடம் என்ன கூறுவது?

குருதேவ்: யாருக்கும் பற்றுறுதி ஊட்ட முயற்சிக்க வேண்டாம். நீங்கள் அதில் உறுதியாக இருந்தால் அதுவே போதும். மற்றவர்களும் இதனால் பயன் பெற வேண்டும்,அவர்கள் முகத்திலும் புன்முறுவல் பூக்க வேண்டும், இந்த ஞானத்தை அனைவரும் அடைய வேண்டும் என்று உங்கள் ஆழ்மனதில் விருப்பம்  கொண்டால் அது அவ்வாறே நிறைவேறும்.

நீங்கள், பிறருக்கு எதைப் பற்றியாவது பற்றுறுதி ஏற்படுத்த வேண்டும் என்று விரும்பினாலோ, அல்லது முயற்சித்தாலோ, அவர்களுக்கு அவ்விஷயம் தெரியாது அல்லது அவர்கள் அவ்விஷயத்தில் நம்பிக்கை வைக்கவில்லை என்று எண்ணிக் கொண்டிருக்கின்றீர்கள். எல்லோருமே மகிழ்ச்சியாக இருக்க விரும்புகிறார்கள். இப்பூமியில் இருக்கும் அனைவருமே அன்பும் பாசமும் மிகுந்தவர்கள், தாங்களும் அன்பை அடைய வேண்டும் என்று விரும்புபவர்கள். தங்களுள் ஆழ்ந்து ஆராய விரும்புபவர்கள் யார் தான் மகிழ்ச்சியை விரும்ப மாட்டார்கள்? தெளிந்த மனம் யாருக்குத் தான் வேண்டாம்? அனைவருக்குமே இவை தேவை தான்.

யாருக்குத் தான் ஆரோக்கியமான உடல் வேண்டாம் கூறுங்கள்? ஒவ்வொருவருக்கும் தேவை தான். எல்லா சந்தர்ப்பங்களிலும் இனிமையுணர்வு அல்லது நேர்மறை உணர்வுகள் யாருக்குத் தான் வேண்டாம்? எல்லோருக்குமே தேவை தான்.  நாம் ஒருவருக்குப் பற்றுருதியூட்ட முயலும் போது அவர்களுக்கு இவையெல்லாம் தேவையில்லை, ஆகவே நாம் அப்பற்றுருதி ஊட்டுகிறோம் என்னும் எண்ணம் ஏற்படுகின்றது. அங்கு தான் நாம் தவறு செய்கிறோம்.

நீங்கள் யாருக்கும் பற்றுறுதி ஏற்படுத்த முயற்சிக்க வேண்டாம் என்று நான் கருதுகின்றேன். நீங்கள் இந்த ஞானத்தில் நம்பிக்கையுடன், புன்முறுவலுடன் தொண்டாற்றுங்கள். உங்களை சுற்றி இருப்பவர்களிடம் என்ன கூற விரும்புகிறீர்களோ அதை தயக்கமின்றி மனம் விட்டுக்  கூறுங்கள்.

கே: குருதேவ்! எங்களது ஆசிரியர்களிடம் கர்மா வினை பற்றி எப்போது கேட்டாலும், அவர்கள் "குருதேவ் அது ஒரு சிக்கலான விளையாட்டு என்று கூறுவார்" எனப் பதிலளிக்கின்றார்கள்.  அத்தகைய  சிக்கலான விளையாட்டுப் பற்றி மேலும் அறிய விரும்புகின்றோம்.

குருதேவ்: கர்மா என்பது சிக்கலானது தான். பல விதமான கர்மாக்கள் உள்ளன. மனிதனின் கர்மாக்கள், குடும்ப வினைகள், சமுதாய வினைகள், நாட்டின் கர்மாக்கள், காலத்தின் கர்மாக்கள் என்பன.

தவிர சஞ்சித கர்மாக்கள் அதாவது,குவிக்கப்பட்ட கர்மாக்கள்; பிராரப்த கர்மாக்கள் - ஏற்கனவே பலன் அளிக்கத் துவங்கி விட்டவை. பின்னர், ஆகமி கர்மாக்கள் வருங்காலத்தில் நிகழக் கூடியவை. ஆகவே இது மிகச் சிக்கலானது. உணவு செரிக்கும் முறையைப் போன்றது. நீங்கள் உணவை வாயில் இடும் போது உமிழ்நீரினால் மாவுச்சத்துப் பொருள் சீரணிக்கப்படும். பிறகு அது இரைப்பைக்குச் செல்கிறது. இரைப்பையிலுள்ள சுரப்பு நீர்களால்,மேலும் சீரணிக்கப் படுகின்றது. பின்னர் முன்சிறுகுடல், கணையம் ஆகியவற்றின் வழியாகச் சென்று சீரணிக்கப் படுகின்றது. ஒரு சிறு வாழைபழத் துண்டு சீரணிக்கப்படும் இயக்குமுறையானது ஒரு தொழிற்ச்சாலை இயக்குமுறையைப் போன்றது.  ஒரு சிறு துண்டு வாழைப் பழமோ, ஆப்பிளோ ஒரு துளி ரத்தமாக மாற்றப்படுவது ஒரு தொழிற்ச்சாலை இயக்கத்தை போன்றது! நமது உடலால், அது சிரமம் இல்லாமல் செய்யப்படுகின்றது.

அது போன்று கர்மாக்கள் மிகப் பெருமளவுள்ளவை. பகவத் கீதையில் ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகின்றார்,"கஹன கர்மானோ கதிஹ் " இதன் பொருள், கர்மாக்களின் வழிகள் ஆராய்ந்து ஆழங்காண முடியாதவை என்பதாகும். எனவே சிறந்த வழி என்னவென்றால், கர்மாக்களை பற்றிக் கவலைப்பட்டு ஆராய்ந்து கொண்டிராமல், இப்போது உங்கள் முன்னிலையில் உள்ள பணிகளைச் செய்யுங்கள். இயல்பாக இருங்கள். தெளிவான சிந்தனை, தூய உள்ளம், இயல்பான செயல்பாடு இவை தாம் நாம் பின்பற்ற வேண்டிய சூத்திரம் (நடைமுறை விதி). தெளிவான சிந்தனை, தூய உள்ளம், இயல்பான செயல்பாடு என்னும் மூன்றும் நமது கர்மாக்களை கவனித்துக் கொள்ளும்.

தியானம் செய்யும் போது ஏற்படும் காலியான வெற்றிட உணர்வினால் தீய கர்மாக்கள் விலகி விடும். தியானம் செய்யும் போது உங்களது நோக்கங்கள் தெளிவாகி பல தீய கர்மாக்கள் கரைந்து  விடும். ஆகவே, ஞானம், விழிப்புணர்வு, தொண்டு, சத்சங்கம், சாதனா ஆகியவை தீய கர்மாக்களைக் கரையச் செய்யும்.

கே: நான் ஒரு கிருஸ்தவரை திருமணம் செய்து கொள்ள விரும்புகின்றேன். நான் கிருஸ்தவ மதத்திற்கு மாற வேண்டியது அவசியமா?

குருதேவ்: இதை நீங்கள் திருமணம் செய்து கொள்ள விரும்பும் மனிதரிடமும்  அவரது குடும்பத்தினரிடமும் கேட்க வேண்டும். உங்கள் சமய நம்பிக்கையிலேயே நீங்கள் தொடர்ந்து இருக்கலாம் என்பது என் கருத்து.  உங்கள் நம்பிக்கையிலேயே ஒட்டியிருங்கள். அதில் நீங்கள் விட்டுக் கொடுக்க வேண்டும் என்று நான் கருதவில்லை. ஏனெனில் அது மனோரீதியாகவும் ஆன்மீக வழியிலும் ஆரோக்கியமானது.

நீங்கள் ஒரு ஹிந்துவாக இருந்தால் பிரச்சினை இல்லை ஏனெனில் ஹிந்து மதத்தில் எல்லா சமயகுருமார்களும் ஏற்றுக்கொள்ளப் படுகின்றார்கள். ஹிந்து சமயம் அனைத்து சமய நம்பிக்கைகளுக்கும் மூத்த தாய் (பாட்டி) போன்றது. எந்த நம்பிக்கையையும் தவறென்று கூறாமல் அனைவரையும் அரவணைத்து கொள்ளக் கூடிய பழம்பெரும் சமயம். எனவே ஹிந்துவானால் உங்களுக்கு எந்தப் பிரச்சினையோ, அல்லது முரண்பாடோ ஏற்படாது.

நீங்கள் முகம்மதியராக இருந்தாலும் பிரச்சினை இல்லை. ஏனெனில், அதுவும் ஒரே  சமூக அல்லது மரபு சார்ந்தது தான், ஆயினும் நீங்கள் உங்கள் பாரம்பர்யத்திற்கு மதிப்பளிக்க வேண்டும் என்று நான் கருதுகின்றேன்.

கே: குருதேவ், ஒரு பக்தனாக பக்தி செய்வதை மட்டுமே விரும்புகின்றேன். நான் என் பொறுப்புகளிலிருந்து தப்பிக்க முயற்சி செய்கின்றேனா? ஒரு பக்தனுக்கு ஏதேனும் பொறுப்புகள் இருக்கின்றனவா? 

குருதேவ்: பக்தி என்றால் பொறுப்பற்ற நிலை என்று அர்த்தமில்லை. பக்தி என்றால் முழு பொறுப்பு என்று பொருள். "நான் செடி கொடிகளை மிகவும் நேசிக்கிறேன். ஆனால் அவற்றிற்கென நான் எதுவும் செய்ய விரும்பவில்லை.நான் மக்களை நேசிக்கின்றேன். ஆனால் அவர்களுக்காக எதுவும் செய்ய மாட்டேன்" என்று நீங்கள் சொல்ல முடியாது. நீங்கள் எதையாவது நேசிக்கின்றீர்கள் என்றால் நிச்சயமாக ஏதேனும் செய்வீர்கள். நீங்கள் மரங்களை நேசிக்கின்றீர்கள் என்றால் யாராவது ஒரு மரத்தினை வெட்ட முற்படும் போது அதனை தடுத்து நிறுத்துவீர்கள். நிறைய மரங்களை நட்டு வளர்ப்பீர்கள். அதுவே நீங்கள் மரங்களை நேசிப்பதன் அடையாளமாகும்.

நீங்கள் மக்களை நேசிக்கின்றீர்கள் என்றால் அவர்களுக்காக நிச்சயம் ஏதாவது செய்வீர்கள்.  நான் மக்களை நேசிக்கின்றேன் ஆனால் அவர்களுக்கு ஏதாவது ஒரு பிரச்சினை என்றால் எதுவும் செய்ய மாட்டேன் என்று சொல்வது அபத்தமாகும். அன்பு இருக்கும் போது செயல் தன்னிச்சையாக நிகழும்.
 
கே: குருதேவ், உடல், மனம் மற்றும் சமூக ரீதியாக பலவீனமாக உள்ள ஒருவன், மூன்றிலுமே வலிமை வாய்ந்தவனாக மாறுவதற்கு என்ன செய்ய வேண்டும்?

குருதேவ்: முதலாவதாக, மிகவும் பலவீனமானவர் என்று உங்களுக்கு நீங்களே முத்திரை குத்திக்கொள்ளக் கூடாது. அப்படிச் செய்கின்ற அந்த நொடியிலேயே நீங்கள் மேலும் பலவீனமாக உணர்வீர்கள். உங்களை பற்றியும் உங்கள் பலத்தைப் பற்றியும் நீங்களே   அறியவில்லை என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் என்ன செய்ய விரும்புகின்றீர்களோ அதற்கு தேவையான பலம் உங்களிடம் உள்ளது என்பதை உணருங்கள்.  

கே: குருதேவ், நான் ஆசிரமத்தில் தியானம் செய்யும் போது அது எவ்வித முயற்சியுமின்றி எளிதாக உள்ளது. ஆனால் நான் வீட்டிற்குச் சென்ற பிறகு அவ்வாறு இருப்பதில்லை.  வீட்டிலும் அதே போன்ற சக்தி வெளியினை நான் உண்டாக்க வழி ஏதேனும் உள்ளதா? 

குருதேவ்: வீட்டில் ஒரு குறிப்பிட்ட இடத்திலோ அல்லது ஒரு குறிப்பிட்ட அறையிலோ  நீங்கள் சக்திவெளியினை உண்டாக்க முடியும். அதற்காகத் தான் மக்கள்  வீட்டில் பூஜை அறை என்று தனியாக வைத்திருந்தனர். வீட்டின் ஒரு மூலையினை, குறிப்பாக வட கிழக்கு மூலையினை பூஜைக்கென வழங்கியிருந்தனர். அதே போல் நீங்களும் அறையின் ஒரு மூலையை தியானத்திற்கென ஒதுக்கி அங்கே தொடர்ந்து ஒரு பாய் அல்லது கம்பளம் விரித்து தியானம் செய்வதை வழக்கமாக்கிக் கொள்ளலாம். 

கே: குருதேவ், நான் ஆசிரமத்திற்கு வந்தால், உங்கள் பின்னாலேயே ஓடிக் கொண்டிருக்க வேண்டும் என்று தோன்றுகின்றது. நான் என் சொந்த நகரத்தில் செய்வது போல் சேவை செய்ய வேண்டும் என்று கூடத் தோன்றுவதில்லை. நான் என்ன செய்வது? 

குருதேவ்: நான் ஆசிரமத்தில் எங்கேயும் ஓடிக் கொண்டிருக்கவில்லையே. நான் நிலையாகத் தான் இருக்கின்றேன். நீங்களும் அப்படியே இருங்கள். நான் எதன் பின்னாலும் ஓடுவதில்லை. நீங்களும் அவ்வாறு ஓடாமல் இருப்பதே நல்லது. இயல்பாக இருங்கள். நீங்கள் பெற வேண்டியதை நிச்சயம் பெறுவீர்கள். இந்த இடம் நீங்கள் உங்களுக்குள்ளே ஆழத்தில் அமைதியும் திருப்தியும் அடைவதற்கும், சேவை செய்வதற்குமான இடம் ஆகும். அனைவருக்கும் உடல் சார்ந்த செயல் மிகவும் அவசியம். எனவே சேவை செய்யுங்கள்.

கே: குருதேவ், ஐக்கிய நாடுகள் சபை மகிழ்ச்சி என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் அடிப்படை பிறப்புரிமை என்று அங்கீகாரம் செய்கின்றது.  குடியரசு நாளான ஜனவரி 26ந்தேதியில் நம் நாடு மேலும் மகிழ்ச்சிகரமான நாடாக முன்னேறுவது எப்படி?

குருதேவ்:  இந்நாட்டின் குடிமகன் ஒவ்வொருவனிடமும் இக்கேள்வி எழ வேண்டும்.நமக்குள் மகிழ்ச்சியைக் காண்பது எப்படி? நம் சமுதாயத்தில் மகிழ்ச்சி பெருகுவது எப்படி என்ற எண்ணம் ஒவ்வொரு மனதிலும் முளைவிட வேண்டும். செயல் விரைவில் பின்தொடரும். 

நாம் ஒரு கொணரிப் பட்டை (கன்வேயர் பெல்ட்) மீது இருப்பது போல் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். அனைத்தும் நகர்ந்து சென்று கொண்டுள்ளது. அதைப் பற்றி நினைப்பது இல்லை. இலக்கற்ற, திசை தெரியாத ஒரு வாழ்க்கை. ஒரே இலக்கு எவ்விதத்திலாவது,தில்லு முள்ளு செய்தாவது நிறைய பணம் சேர்ப்பதாக இருக்கலாம்.  நம் நாட்டில் ஊழல் உச்சத்தை அடைந்துள்ளது. மேலிருந்து கீழ் வரை எதிலும், எங்கும் ஊழல். 

இன்று, சில தொழிலதிபர்களையும், வியாபாரிகளையும் நான் சந்தித்த போது அவர்கள் என்னிடம் என்ன சொன்னார்கள் தெரியுமா?  இந்தியாவில் பூமிக்கடியில் கரி வளம் மிக அதிக அளவில்  இருந்தும் நாம் கரி  இறக்குமதி செய்கின்றோம். நம் நாட்டில் எண்ணெய் மற்றும் எரிவாயு இருந்தும்  நாம் வெளியிலிருந்து பெறுகின்றோம். இரும்புத் தாது நிறைய இருந்தும்  நாம் எக்கு  இறக்குமதி செய்கின்றோம். பாக்சைட்  எனப்படும் அலுமினிய தாது பூமிக்கடியில் ஏராளமாக உள்ளது.  பாக்சைட் சுரங்கங்களின் மேல் அமர்ந்து கொண்டு நாம் அதனை பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்கின்றோம். 

மத்திய கிழக்கு நாடுகளில் எண்ணெயும் எரிவாயுவும் உள்ளது.  மறுபுறம் மலேசியாவிலும் இந்தோனேசியாவிலும் எண்ணெய் வளம் உள்ளது. இவற்றிற்கு நடுவில் எண்ணெய் வளத்தின்  மேல் நாம் இருக்கின்றோம். ஆனால் ஊழல் நிறைந்த நம் அரசியல்வாதிகள் மக்களை எதையும் செய்யவிடாமல் தங்கள் சுய நலத்திற்காக நாட்டின் வளர்ச்சியை தடுக்கின்றனர். 

உலகமெங்கும் உணவுப் பொருட்களின் விலை சரிந்துள்ளது. ஆனால் இந்தியாவில் மட்டும் அவற்றின் விலை ஏறியிருப்பது புதிராக உள்ளது. இந்தியாவில் மட்டும் தான் தானியங்களின் விலை ஏறியுள்ளது. ஒருநாள் திடீரென்று வெங்காயத்தின் விலை உயருகின்றது.  ஒன்றிரண்டு நாட்களில் அதுவே நாயாகரா  நீர்வீழ்ச்சி போல் வீழ்கின்றது. இவ்விரண்டிற்கும் இடையில் சிக்கிக்கொண்டு விவசாயி வடிப்பது கண்ணீர் இல்லை. அவன் கண்களில் வழிவது அவன் குருதி ஆகும்.  இத்தகைய ஒரு நிலையில் நாம் பேசாமல் அமைதியாக எப்படி இருக்க முடியும்? மக்கள் என்னிடம் "குருஜி  நீங்கள் ஆன்மிகம் பற்றி மட்டும் பேசி மக்களுக்கு ஆறுதல் அளியுங்கள். ஊழல் மற்றும் அது போன்ற சமுதாய பிரச்சனைகள் குறித்து பேசாதீர்கள். சிலரை பாதிக்கும் என்பதனால் இவை குறித்து எதுவும் பேசாதீர்கள்"’என்று சொல்கின்றனர். "யார் என்ன நினைக்கின்றார்கள் அல்லது நினைப்பதில்லை என்று நான் யோசிப்பதில்லை. உண்மையை பேசுகின்றேன். மக்களுக்கு அநீதி இழைக்கப்படுகின்றது என்ற விழிப்புணர்வை மக்களிடையே நாம் உண்டாக்க வேண்டும்.

துரதிருஷ்டவசமாக, மகாத்மா காந்தி, சர்தார் வல்லபாய் பட்டேல், ராஜாஜி போன்றவர்கள் முன்னுதாரணமாக திகழும் நம் நாட்டில் இன்று ஆட்சியில் உள்ள சில அரசியல்வாதிகள்  மக்களின் நம்பிக்கையை தவறாகப் பயன்படுத்தியுள்ளனர். 1.2 பில்லியன் மக்கள் வாழும் நம் நாட்டில் தவறாக ஆட்சி புரிந்து  அவர்களை முட்டாள்கள் ஆக்கியுள்ளனர். இந்த அநீதிக்கு எதிராக நாம் எழுந்து நிற்க வேண்டும் என்று நீங்கள் அனைவரும் நினைக்கவில்லையா? இதுவே சரியான தருணம். இப்போது உங்கள் வோட்டுரிமையை பயன்படுத்தும் நேரம் வந்துள்ளது. நீங்கள் ,"இந்த ஊழல் நிறைந்தவர்களுக்கு நான் மீண்டும் வோட்டளிக்க மாட்டேன்"  என்று உறுதியாக சொல்ல வேண்டும். 

நம் பாராளுமன்றத்தின் மூன்றில் ஒரு பாகம் ஊழல் நிறைந்தவர்களாலும் குற்றவாளிகளாலும்  நிறைந்துள்ளது. வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் நாம் அவர்களை வெளியேற்ற வேண்டும். இனியும் நாம் அக்கறை செலுத்தாமல் இருக்க முடியாது. வோட்டு என்கின்ற பலம் நம் கையிலிருக்கும் தேர்தல் சமயத்தில் மட்டுமே  நாம் எதையும் செய்ய முடியும். ஜாதி, இனம் என்றெல்லாம்  நினைக்க வேண்டாம். குற்றவாளி என்று ஆதாரம் இருந்தாலோ அல்லது ஊழல் புரிந்தவர்களாக இருந்தாலோ அவர்களை அரசியலில் இருந்து தூர விலக்கி வையுங்கள்.  

நம் நாட்டில் மத சார்பின்மை என்ற பெயரில் நல்லொழுக்கம் மற்றும் நன்னெறி  மக்களிடமிருந்து நீக்கப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி அவர்கள் தினமும் சத்சங்கம் நடத்தி, நல்லொழுக்கம் மற்றும் நன்னெறியினை போதித்தார். ஆனால் கடந்த சில ஆண்டுகளில் மது அருந்தும் பழக்கம் நம் நாட்டில் மும்மடங்கு அதிகரித்துள்ளது. அதனால் தான் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பெண்கள் தீவிரமாகத் தாக்கப்படுவதை பற்றி நாம் தினமும் செய்தித் தாள்களில் படிக்கின்றோம். முன்பெல்லாம் நம் நாட்டில் இவ்வாறு இல்லை. ஐந்து அல்லது பத்து ஆண்டுகளுக்கு முன்பு பெண்களுக்கு எதிராக இவ்வளவு குற்றங்கள் நாம் கேள்விப்பட்டதில்லை. இதற்கு முக்கியமான காரணம் மதுப்பழக்கம். நம் நாடு விழித்தெழ வேண்டிய நேரம் வந்து விட்டது.