வாழ்க்கை விதி வயப்பட்டதா ? அதை மாற்ற நமக்கு சுதந்திரம் உள்ளதா?

ஜனவரி 06, 2014

பெங்களூரு, இந்தியா



கே: நாங்கள் இங்கே வருவதிலும் உங்களை சந்திப்பதிலும் விதியின் பங்கு என்ன, மேலும் இது வெறும் வாய்ப்பாக இருப்பதின் பங்களிப்பு என்ன?

குருதேவ்: வாழ்கை இந்த இரண்டின் கலவை (விதி மற்றும் வாய்ப்பு). நம்முடைய விதிக்கு சிறிய பங்கு இருக்கிறது, மற்றும் நம் மனம் அல்லது புத்திக்கும் பெரும் பங்கு இருக்கிறது. இது மட்டுமோ அல்லது அது மட்டுமோ அல்ல. ஒரு கணத்திற்கு இறந்த காலம் மற்றும் எதிர்காலம் என்று இரண்டு இருப்பது போல. இறந்த காலமே இல்லாத அல்லது எதிர்காலமே இல்லாத எந்த ஒரு கணமும் இல்லை. எனவே, இறந்த காலம் என்பது விதி, எதிர்காலம் என்பது நம்முடைய மதி, மற்றும் இந்தக் கணம் மிக அழகானது. இப்படியாக விஷயங்களை நீங்கள் பார்த்தால், நீங்கள் மிக அறிவாளி. ஆனால், இறந்தகாலம் நம் மதிப்படி, எதிர்காலம் விதிப்படி மற்றும் இந்தக் கணம் கொடுமையானது, என்று இதை நீங்கள் தலைகீழாய் எண்ணினால், அது அறிவார்ந்த செயலல்ல. அறிவின்மையை இது காட்டுகிறது. பிறகு வாழ்கை துயரமாகிப் போகிறது.

ஒரு கணத்தை இறந்த காலம் இல்லாமல் பார்க்க முடியுமா? முடியவே முடியாது. எதிர்காலமே இல்லாமல் ஒரு கணம் இருக்க முடியுமா? முடியவே முடியாது. வாழ்கை இறந்த காலமா அல்லது எதிர்காலமா என்று நீங்கள் என்னைக் கேட்டால், அது இரண்டின் கலவை என்றே நான் சொல்வேன்.

விதியும் மதியும் வேறு வேறு அல்ல. அவை ஒரு நாணயத்தின் இரு பக்கங்களே. எதை விதி என்று அழைப்பீர்கள்? நிகழ்வுகள் உங்கள் எண்ணப்படி இல்லாமல் இருக்கும் போது, நீங்கள் அதை விதி என்று அழைக்கிறீர்கள். நிகழ்வுகள் உங்கள் எண்ணப்படி நடக்கும் போது அதை உங்கள் மதி என்று அழைக்கிறீர்கள். இவை எல்லாம் உங்கள் எண்ணத்தின் திசைப்படியே.

உங்கள் எண்ணத்தின் திசையை எப்படித் தேர்வு செய்வீர்கள்? உங்கள் மனம் தெளிவாய் கலக்கமில்லாமல் இருக்கும்போதுதான் உங்களால் அதைச் செய்ய முடியும். நாம் வாழ்க்கையில் செய்யத் தேவையானது அடைய வேண்டியது: இதயத்தில் தூய்மை, மனதில் தெளிவு, நம் செயல்களில் திறமை. நம் செயல்கள் இயல்பாகவே நடக்கும் நிலையை நாம் அடைய வேண்டும். அதுதான் அவசியம். புரிந்ததா?

ஒரு குழந்தையாக நமக்கு இந்த மூன்றும் இருந்தது, இல்லையா? குழந்தைகளின் மனங்கள் மிகத் தெளிவானவை. அவர்கள் உங்களைப் பார்க்கும் விதத்தை எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா? அவர்கள் நேராக உங்களைப் பார்ப்பார்கள். அவர்கள் மனம் மிகத் தெளிவானது. அவர்களுடைய கண்களைப் பார்த்தால் அவர்கள் மனம் மிகத் தெளிவானது என்பதைப் பார்ப்பீர்கள். ஆனால் பெரியவர்களாகிய நாம், இதயத் தூய்மையையும் மனத் தெளிவையும் தொலைத்துவிட்டார்ப் போல இருக்கிறது. ஒரு குழந்தையின் மனம் மிகத் தெளிவானது மற்றும் அதன் இதயம் மிகத் தூய்மையானது. இது அவ்வளவு இயல்பாக இருக்கக் கூடியது. நாம் வளர்ந்த பிறகும் அப்படி இருக்கலாம். எனவே நம் செயல்களிலும் நம் வெளிப்பாடுகளிலும் திறன் இருக்க வேண்டியது தேவை.


கே: குருதேவ், சுயமாய் ஏற்படுத்திக் கொண்ட குற்றவுணர்வு இல்லாமல், பிறரால் சுமத்தப்பட்ட குற்றவுணர்வு இல்லாமல் வாழ்வது எப்படி?

குருதேவ்: நீங்கள் சரியான இடத்தில் இருக்கிறீர்கள். இதைத் தெரிந்து கொள்ளுங்கள், குற்றவுணர்வு என்பது ஆடைகளின் மீது இருக்கும் தூசி அல்லது உங்கள் தோல் மீது இருக்கும் தூசி போன்றது. எனவே என்ன செய்வீர்கள்? சிறிது சோப் மற்றும் தண்ணீர் கொண்டு அதை கழுவி விடுவீர்கள். ஞானம் தான் சோப், மற்றும் தியானம் தான் தண்ணீர். எனவே ஞானம் மற்றும் தியானத்தைக் கொண்டு நீங்கள் அதை வெல்லலாம்.


கே: நான் ஒரு முஸ்லிம், நான் இன்று காலை ருத்ர பூஜையில் அமர்ந்தேன். வெகு இயல்பாக வீட்டிலிருப்பது போல உணர்ந்தேன், எங்கள் அரபி மொழியின் ஒலி வடிவங்களைக் கொண்ட பிரார்த்தனையைப் போன்றே இருந்தது. அந்த உச்சாடனங்களில் ஒரு சமயம் அல்லாஹ் என்ற வார்த்தையைக் கேட்டேன். அது ஒரு சம்ஸ்க்ருத வார்த்தையா?

குருதேவ்: ஆம், அப்படி இருக்கிறது. இறைவனுக்கு அல்லாஹ் என்றும் ஒரு பெயர் சம்ஸ்க்ருதத்தில் கூட இருக்கிறது. எல்லா பெயர்களும் ஒன்றுதான்; எல்லா பெயர்களும் ஒரே இறைவனுடையது தான், ஒரே கடவுளுடையது தான். இந்த மிகத் தொன்மையான ருத்ராபிஷேக பூஜை, அந்த மந்திர உச்சாடனங்களுடன், பல்லாயிரம் ஆண்டுகளாக செய்யப்பட்டு வருகிறது. அது நம்முடைய மெய்யுணர்வில் மிக ஆழமான ஒத்திசைவை ஏற்படுத்துகிறது,  ஏனென்றால் நம்முடைய மெய்யுணர்வும் மிகத் தொன்மையானது. இந்த உச்சாடனங்களும், பூஜையும் மிக நேர்மறையான சூழலை உருவாக்குகிறது, அதன் நோக்கம் சுற்றுப் புறத்தில் உள்ள எதிர்மறைகளை களைவது தான். அந்த உச்சாடனங்களால் எல்லாமே நேர்மறையாக மாறுகிறது.


கே: போப் என்பவர் தவறுகளே செய்யமாட்டார், அவர் மிக நம்பத் தகுந்தவர் என்று ஐரோப்பாவில் நாங்கள் கருதுகிறோம். ஒரு குருவாக நீங்களும் நம்பத் தகுந்தவரா, அல்லது நீங்களும் தவறுகள் செய்வீர்களா?

குருதேவ்: நீங்கள் வெகு இயல்பாக இயற்கையோடு ஒத்து இருந்தால், பிறகு தவறுகள் நடப்பதில்லை. நான் இப்போது பிரெஞ்சு மொழியில் பேச முயற்சித்தால் நான் தவறு செய்ய முடியும்! (சிரிப்பு) எனக்குத் தொலைக்காட்சிப் பெட்டியை சரி செய்யத் தெரியாது ஆனால் என்னால் நிச்சயம் முயற்சிக்க முடியும். இங்கும் அங்கும் சில தவறுகள் செய்யலாம். எனக்கு எல்லாம் தெரியும் என்பதல்ல. உங்கள் நோக்கம் சரியாக இருந்தால், பிறகு சரியான செயல்கள் பின் வரும். இப்போது எந்தச் செயலும், 100% கச்சிதமாக இருக்காது. ஆனால் உங்கள் நோக்கம் எப்போதும் கச்சிதமாக இருக்க முடியும்.

உலகில் நீங்கள் எங்கு பார்த்தாலும், ஆகச் சிறந்த செயல்களில் கூட சற்று பிசகு எப்போதும் இருக்கவே செய்கிறது. எனவே எந்தச் செயலிலும் மேலும் சற்று சிறப்பாக செய்ய இடம் உண்டு. நான் என்ன செய்திருந்தாலும், இதை இன்னும் நன்றாகச் செய்திருக்கலாம் என்று என் அம்மா சொல்வதுண்டு. அந்தக் கோணத்தில் பார்த்தல், வளர்ச்சி என்பது நம்முடைய பரிணாமத்தின் ஒரு அங்கம். வளர்ச்சி என்பது மேன்மையின் வேறு வார்த்தை, எனவே எப்போதும் செயலை இன்னும் மேன்மையாய்ச் செய்வதற்கு இடமுண்டு. ஆனால் நம்முடைய இருப்பைப் (சுயத்தைக் குறிக்கிறார்) பற்றிக் கேட்டால், அல்லது இருப்பின் நிலைப் பற்றிக் கேட்டால், அது முழுமையானது. சூரியனின் கிரணங்கள் மேகங்களினால் சிறிது குறைவாகவோ அல்லது அதிகமாகவோ இருந்தாலும் சூரியன் முழுமையாக இருப்பது போல. ஆனால் உங்களால் பகலை இரவாகக் கருதும் அளவு அறிவிலியாய் இருக்க முடியாது.


கே: நமது ஆசிரமத்தில் உள்ள பஞ்சகர்மா மையத்தில் சிகிச்சை பெறுகிறார்கள். இது உண்மையில் பயன் தரக்கூடியதா? ஏன்?


குருதேவ்: நீங்கள் சொல்லுங்கள். சிகிச்சைக்குப் பிறகு நீங்கள் நன்மையை உணர்கிறீர்களா? காலத்தால் நிரூபிக்கப்பட்ட பல்லாயிரம் ஆண்டுகளாக உபயோகப்படுத்தப் பட்டுவரும் ஒரு நுட்பம். பஞ்சகர்மா என்பது ஒரு தூய்மைப்படுத்தும் முறை என்று மக்கள் கண்டு கொண்டார்கள். முதல் இரண்டு -  மூன்று நாட்கள் தூய்மைப்படுத்துதல் நடப்பதால் நீங்கள் நன்றாக உணராமல் போகலாம். ஆரம்பத்தில் மருந்துகள் உள்ள மூலிகை எண்ணையைக் குடிப்பதால், சிலருக்கு வசதி குறைவாய்த் தெரியலாம். ஆனால், மக்கள் உண்மையில் இதனால் பலனடைந்ததாகவே நான் இதுவரை கேள்விப்பட்டிருக்கிறேன். உங்களுக்குக் குறிப்பாக ஏதேனும் கேள்விகள் இருந்தால், அங்கு உள்ள ஆயுர்வேத மருத்துவரிடம் ஆலோசிக்கலாம்.