என்னை நானே நேசிப்பது எப்படி?

ஜனவரி 10,  2014

பெங்களூரு, இந்தியா

கேள்வி - பதில்கள்

கே: குருதேவ், இது கொஞ்சம் கிறுக்குத்தனமாக இருந்தாலும், என் இதயத்தில் எழுந்த உண்மையான கேள்வி. ஒருவர் தன்னை தானே அதிகம் நேசிக்க ஆரம்பிப்பது எப்படி?

குருதேவ்: ஒரு சொலவடை உண்டு. இல்லாத கறுப்புப் பூனையை இருட்டு அறையில் யாரோ தேட முயற்சி செய்தார்களாம். முதலில், அங்கே பூனை இருக்கிறது என்று நினைக்கிறீர்கள் பிறகு அதை பிடிக்க முயல்கிறீர்கள். உங்களை நீங்கள் நேசிக்கவில்லை என்ற அனுமானமே முதலில் தவறு. நீங்களே அன்பு. உங்களை நீங்களே நேசிக்கவில்லை என்று எண்ணும் போது, உங்களை நீங்களே நேசிக்க முயற்சி எடுக்கும்போது, அது முழு தோல்வியில் முடிகிறது. நான் சொல்கிறேன், நேசிக்க செய்ய முயற்சிக்கவே முடியாது, அது உங்களையோ அல்லது வேறு யாரையோ. நீங்கள் தளர்வாகி நீங்கள்தான் அந்த அன்பு என்பதை உணர வேண்டும், அவ்வளவே. புரிந்ததா?

ஏன், தற்கொலை செய்துகொள்ள விரும்புபவர் தன் மீது தனக்கு அன்பில்லை என்று நினைத்தாலும் கூட, உண்மையில் அவர் தன் மீது மிகுந்த அன்பு கொண்டிருக்கிறார். சிறு அசௌகரியத்தைக் கூட தாங்க முடியாத அளவு சௌகரியத்தை அவர் விரும்புகிறார். 


அதனால் தான் மக்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். தற்கொலை செய்து கொள்வதால் அசௌகரியதிலிருந்து வெளி வர முடியாது. நல்ல குளிரை உணரும் போது உங்கள் கம்பளிச் சட்டையை கழட்டுவது போல இது. அவ்வளவு குளிரை உணர்கிறீர்கள், ஆனால் உங்கள் கம்பளிச் சட்டையை கழட்டுகிறீர்கள். இது எப்படி உதவும்? நீங்கள் தான் அன்பு என்பதை உணருங்கள், அவ்வளவே. உங்களை நீங்களே நேசிக்க முயல வேண்டாம், தளர்வாகுங்கள் போதும். ஆகச் சிறந்த வழி பிரணாயாமம் மற்றும் தியானம். மூச்சுப் பயிற்சி மற்றும் தியானம்.

கே: குருதேவ், வரலாற்றில் ஒவ்வொரு குருவும் தன்னுடைய வழி தான் ஆகச் சிறந்தது என்று சொல்லியிருக்கிறார்கள். மேலோட்டமாகப் பார்த்தால் அது ஒரு குறுகிய எண்ணம் போலத் தோன்றினாலும், அதன் பின்னே உள்ள ஆழமான பொருள் என்ன?

குருதேவ்: இயேசு கிறிஸ்து சொல்லியிருக்கிறார், ‘எனக்கு முன்னே வந்தவர்கள் அனைவரும் திருடர்கள் கயவர்கள்’. அவர் ஏன் அப்படிக் கூறினார் தெரியுமா? ஏனென்றால், அவருக்கு முன்னே அமர்ந்திருந்தவர்கள் எல்லோரும் இறந்த காலத்தையோ அல்லது வருங்காலத்தையோ நினைத்திருந்தார்கள். இறந்த காலத்தை கொண்டாடி கொண்டிருந்தார்கள் அல்லது எதிர்காலத்தில் எதையாவது எதிர்பார்த்தார்கள். அவர்களுடைய மனங்கள் நிகழ் காலத்தில் இல்லை. “இறந்தகாலம் உங்கள் மனதைத் திருடிவிட்டது. வாருங்கள், இப்போது இங்கே இருங்கள்’, இந்த பொருள்படத்தான் கூறினார். இங்கு தான் (இந்தக் கணம்) நீங்கள் இருக்கிறீர்கள். இதுதான் ஆகச் சிறந்தது. கையில் இருக்கும் ஒரு பறவை புதரில் இருக்கும் இரண்டை விட மேலானது அல்லவா? புதரிலிருக்கும் இரண்டை நினைத்து கையிலிருக்கும் ஒன்றையும் விட்டுவிட்டால், நீங்கள் அப்படி ஒரு அறிவிலியாய் இருப்பீர்கள். அதனால் தான் மக்கள் சொல்லி வந்தார்கள், நீங்கள் இப்போது இருக்கும் இடம் தான், இதுதான் பாதை. வாருங்கள், எழுந்திருங்கள்.

இயேசு இதைத்தான் சொன்னார். ஸ்ரீ கிருஷ்ண பகவானும் இதைத்தான் சொன்னார், ‘என்னிடம் வா, உன்னுடைய பாவங்களை எல்லாம் நான் போக்குகிறேன்’. எனவே இது ஒன்றுதான் பாதை, ஞானத்திற்கான பாதை, உண்மைக்கான பாதை, உங்கள் சுயத்துக்கான பாதை. இதை நீங்கள் எங்கும் காணலாம். அப்படியென்றால், இப்போது இங்கே இரு.

பலப்பல ஒற்றுமைகளைப் பார்க்கலாம்; ஸ்ரீ கிருஷ்ண பகவான் என்ன கூறினார் என்று பார்த்தால், ‘உன்னுடைய எல்லா பாவங்களிலிருந்து நான் விடுவிக்கிறேன், என்னிடம் வா’, ஏறக்குறைய இதே வார்த்தைகளை இயேசுவும் கூறியிருக்கிறார்.

கே: குருதேவ், ஆன்மீகத்திற்கு ஏன் பலப்பல பாதைகள் இருக்கிறது என்று தயவு செய்து விளக்குங்கள். இதுதான் என்று எப்படி நான் உறுதியாய் தேர்ந்தெடுப்பது?

குருதேவ்: பலப்பல மக்கள் இருக்கிறார்கள், என்னுடைய வாழ்க்கைத் துணையாக யாரை நான் தேர்ந்தெடுப்பது என்று கேட்பது போல இருக்கிறது. உங்கள் இதயத்தைக் கேளுங்கள். உங்கள் இதயம் இது எனக்கானது என்றும் சொல்லும்போது, அந்தப் பாதைக்குள் நடை போடுங்கள். பேராசையால் அல்ல.

கே: நான் வாழும் கலை ஆசிரியராக சரியான நேரத்தை நான் தெரிந்து கொள்வது எப்படி?

குருதேவ்: ஒரு வருடம் பயிற்சி செய்துவிட்டீர்கள் என்றால், நீங்கள் அதற்குத் தகுதியானவர்.

கே: குருதேவ், வாழும் கலை அமைப்பு பசு வளர்ப்பிற்கு ஆதரவளிக்கிறது என்பதை அறிந்து மகிழ்சி அடைகிறேன். மற்ற நாடுகளில் பசுக்களையும் மற்ற விலங்குகளையும் ஒரு தொழிற்சாலை போல் கொடுமைப்படுத்தி வளர்ப்பதை தடுக்க நீங்கள் தயவு செய்து உதவ முடியுமா?  நான் தனிப்பட்ட முறையில் உங்களுக்கு இதில் எப்படி உதவலாம்?

குருதேவ்: விலங்குகளின் உரிமை பற்றியும், அவற்றை பாதுகாப்பது பற்றியும், குறிப்பாக நாட்டு இன விலங்குகளை பாதுகாப்பது பற்றியும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இதை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா இல்லையா என்று எனக்குத் தெரியாது, பால் புரதத்தில் இரண்டு வகை உண்டு. A1 மற்றும் A2  புரதம். இந்தியாவில் உள்ள நாட்டு இனப் பசுக்கள் தரும் பாலில் A2 வகை புரதம் இறக்கிறது. இது தாய்ப்பாலிலும் ஆட்டுப் பாலிலும் உள்ள புரதத்தைப் போன்றது. ஆனால், டென்மார்க் மற்றும் ஸ்காண்டிநேவியன் நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சீமை பசுக்களும் மற்ற பசுக்களும் தரும் பாலில் A1 புரதமே இருக்கிறது. அந்த பசுக்கள் அதிகம் பாலைச் சுரந்தாலும் அதில் உள்ள A1 புரதம் புற்று நோய் மற்றும் பிற பிரச்சினைகள் ஏற்படக் காரணமாய் இருக்கிறது. நம் பசுக்கள் A2 புரதம் இருக்கும் பாலைக் குறைவாக பொழிந்தாலும், அந்தப் பால் சத்துள்ளதாக தாய்ப்பாலுக்கு இணையான தரமுள்ளதாக இருக்கிறது.

இங்கு இந்தியாவில், பல்லாயிரம் வருடங்களாக, பசுக்கள் தாய் என்று அழைக்கப்பட்டு, தாயாகவே போற்றப்பட்டு வழிபடப்படுகிறது. பசுக்களின் புரதம் கூட மாறிவிட்டது வியப்பாய் இருக்கிறது. இப்போது பிரேசில், நம் நாட்டுப் பசுக்களை ஏராளமாய் இறக்குமதி செய்துகொண்டிருக்கிறது. A2 புரதம் மனிதர்களுக்கு மிக நல்லது. எனவே மக்களிடையே இந்த விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துங்கள். இந்தப் பசுக்கள் குறைந்த அளவு பால் தந்தாலும் அவை மனிதர்களுக்கு உகந்தது. இது சத்துள்ளது, ஆரோக்கியமானது மற்றும் புற்று நோய்க்கு எதிரானது. எல்லோரும் அதை உட்கொள்ள வேண்டும்.

கே: குருதேவ், சத்சங்கத்தில் நீங்கள் ஒரே இறைவனை பற்றி பேசினீர்கள். அப்படியென்றால் நீங்கள் இந்து தேவ தேவிகளை வெறும் உருவகங்களாக தான் காண்கிறீர்களா? இது உங்கள் பாரம்பரியதிற்கு முரணாக இல்லையா?

குருதேவ்: இல்லவே இல்லை. பாருங்கள், ஒரு வெள்ளை நிற ஒளி முப்பட்டகத்தில் பாய்ந்து வெளிவரும் போது ஏழு நிறங்களாகப் பிரிகிறது. இந்த வண்ணங்கள் அனைத்தும் ஒரு வானவில்லை சேர்ந்தது, ஆனாலும் அவை வித்தியாசமானவை. அவை தனக்கென்று ஒரு தரம், தனக்கென்று ஒரு அடையாளம், தனக்கென்று ஒரு குணாதிசயத்தைக் கொண்டது. எனவே அது ஒரு வானவில். இறைவனுக்கு பலவித வித்தியாசங்கள் பிடிக்கும், அதனால் தான் எல்லோரையும் வித்தியாசங்களோடு படைத்தார். அதே நேரத்தில், அவர் இராணுவ உடைகளோடு வர வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கவில்லை. எனவே கடவுள் தனக்கு எத்தனை விதமான உடைகள் விருப்பமோ அத்தனையும் அணிய முடிவு செய்தார்.

யாரோ ஒருவர் கேட்டார், ‘ஏன் சாண்டா கிளாஸ் பெண்ணாக இருக்கவில்லை?’நான் சொன்னேன், ‘அது முடியவே முடியாது, ஏனென்றால் பெண்ணாக இருந்திருந்தால் ஒரே உடையை ஒவ்வொரு வருடமும் அணிவது பிடிக்காது.’ பெண்ணாக இருந்தால் புதிய புதிய வடிவ ஆடைகளை விரும்பியிருப்பார்கள். இறைவன், ஒரு ‘அவன்’ மட்டுமல்ல, ஒரு ‘அவளும்’ கூட, ‘அவள்’ எப்போதும் விதவிதமான உடைகளையே விரும்புவாள். ஆனால், மனதில் கொள்ளுங்கள், அது ஒரு ஒளி, ஒரு பரமாத்மா. பரமாத்மா (உச்ச நிலை இறை சக்தி) ஒன்று தான், தேவ தேவதைகள் பல. இதுவும் உண்மை தான் அதுவும் உண்மை தான். இதுவும் சரிதான், அதுவும் சரிதான்.

குவாண்டம் இயற்பியலின்படி எல்லாம் ஒன்றுதான். ஆனால், வேதியலில் உள்ள பீரியாடிக் அட்டவணை ஒவ்வொரு தனிமமும் வேறு வேறு என்கிறது. இரும்பு தங்கத்திலிருந்து வேறுபட்டது, வெள்ளியிலிருந்து வேறுபட்டது, யுரேனியத்திலிருந்து வேறுபட்டது. பீரியாடிக் அட்டவணையும் சரிதான், பொருட்களே இல்லை, எதுவுமே இல்லை, எல்லாமே வெறும் அலைவடிவம் தான் என்று சொல்லும் குவாண்டம் இயற்பியலும் சரிதான். புரிந்ததா? இந்த தத்துவம் புரியவில்லை என்றால் நீங்கள் அறிவியலுக்குப் போக வேண்டும். அறிவியல் மூலம் இந்த தத்துவத்தை நீங்கள் புரிந்துகொள்ளலாம்.

கே: ஆழமான ஞானத்தை கிரகிக்கும் போது ஏன் அழுகிறோம்? குருதேவ், உங்கள் உரையைக் கேட்கும் போது இது எனக்கு ஏற்படுகிறது, உங்கள் கருத்து என்ன?

குருதேவ்: ஆம், நம் நூல்களில் அப்படி எழுதப்பட்டிருக்கிறது. உங்கள் அன்பிற்கினியவரை சந்திக்கும்போது, உங்களுள் அன்பு தூண்டப்பட்டு, இதயத்தின் முடிச்சு அவிழ்ந்து, எல்லா சந்தேகங்களும் மறைந்து உங்கள் கண்களில் கண்ணீர் பெருகுகிறது. உங்கள் இதயம் திறக்கும் போது, உங்கள் இதயம் ஆழமாய் தொடப்ப்படும் போது, ஏற்படும் அதன் குறியீடுகளே இவை. அது அனுபவமும் கூட, இல்லையா? ஏதாவது ஒன்று உங்கள் இதயத்தை தொடும் போது, சந்தேகங்கள் மறைகிறது. அந்த உணர்வு எழும்போது, நன்றியுணர்வு பெருகி, கண்ணீர்ப் பெருகுகிறது; அது பொதுவாய் நிகழ்வது தான். அதை நீங்கள் இங்கு ஏராளமாய்க் காணலாம்.

கே: குருதேவ், பெயர் மாற்றுவதன் மூலம் விதியை மாற்ற முடியுமா? அல்லது பெயரில் உள்ள எழுத்துக்களை மாற்றுவத்தின் மூலம் விதியை மாற்றலாமா?

குருதேவ்: சில எண் ஜோதிடர்கள் இதை சொல்கிறார்கள். ஆனால் கேளுங்கள், நீங்கள் பெயரையும் விஞ்சியவர்கள். பெயர் மாற்றுவது, ஏதாவது கற்களை அணிவது போன்ற சிறிய விஷயங்களால் உங்கள் விதியை மாற்ற முடியுமா? இல்லை. உங்கள் தனிப்பட்ட உணர்வு மாற்றலாம். உங்கள் உணர்வுகள் தூயவையாய் இருந்து, உங்கள் இதயம் அன்பாலும் பிரார்த்தனையாலும் நிறைந்து இருந்தால், தியானம் நிகழ்கிறது, அதனுடன் சேவையும் செய்யும் போது, அவை உங்கள் விதியை நிச்சயம் மாற்றும்.

கே: குருதேவ், அனன்ய ஷரன் பாவ (ஒருமுகப்பட்ட பக்தி மனநிலை) என்றால் என்ன? அதை ஒருவர் எப்படிப் பெறுவது?

குருதேவ்: அதைப் பெறுவது பற்றிய சிக்கல்களில் மூழ்க வேண்டாம். அது ஏற்கனவே உங்களிடம் இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். வெவ்வேறு ஆன்மீக முறைகளில் மாறி மாறி ஈடுபட்டு பொருள்களை வாங்குவது போலச் செல்ல வேண்டாம்.

சிலர் உங்களிடம் சொல்லலாம், ‘இந்த இடத்திற்கு கருப்பு நிறப் பணப் பையுடன் வாருங்கள் உங்களுக்கு எல்லாவித சக்தியும் அதிர்ஷ்டமும் கிடைக்கும்’. இவற்றில் சிக்காதீர்கள். பேராசை கொண்டவர்களே அதில் வீழ்வார்கள். சென்ற முறை டில்லி சென்றபோது, இரண்டு ஆசிரியர்கள் கூறினார்கள், ‘குருதேவ், இங்கு ஒரு பாபா இருக்கிறார், அவர் மக்களுக்கு ஆசீர்வாதங்கள் அளிக்கிறார், கருப்பு நிறப் பணப் பையைக் கொண்டு செல்லவேண்டும். அவர் ஆசீர்வாதத்திற்குப் பிறகு எல்லா வேலைகளும் நிறைவேறுகிறது, இப்போது எல்லோரும் அங்கு செல்கிறார்கள்.’
நான் சொன்னேன், ‘இது ஒன்றுமே இல்லை, இது கொஞ்ச காலம் தான் வேலை செய்யும், நீங்கள் கவலைப்பட வேண்டாம். நீங்கள் தியானத்தை போதித்தவாறு இருங்கள். அங்கு செல்பவர்கள் இங்கு திரும்ப வருவார்கள்.’ நமது மன உறுதி இதை நடத்தி வைக்கும். தியானத்தையும், சேவைகளையும், சத்சங்கங்களையும் செய்தபடி இருங்கள். இதுதான் அனன்ய ஷரன் பாவ (ஒருமுகப்பட்ட பக்தி மனநிலை) எனப்படுவது.

யாராவது உங்களிடம் வந்து எனக்கு சித்தி பெற்ற ஒருவரைத் தெரியும் அவரால் இதைத் தர முடியும் அதைத் தர முடியும் என்று சொன்னால், நீங்கள் அவரிடம் சொல்லுங்கள், ‘அப்படியா? நான் தூரத்திலிருந்தே நமஸ்காரம் செய்கிறேன்.’ ‘DSN: தூர் சே நமஸ்கார்.’ என்று சொல்லுங்கள்.
எல்லோருக்கும் நமஸ்காரம் செய்யுங்கள். எல்லோரிடமும் கொஞ்சம் நல்ல குணங்களும் கொஞ்சம் தீய குணங்களும் உள்ளன. எது எங்கே இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியாது. ஏன் யாரையும் உதாசீனப்படுத்துவது? நாம் ஏன் யாரையும் எடை போட வேண்டும்? அவருக்கு ஒரு நமஸ்காரம் செய்தால் போது, அவர்களுக்கு அருகே செல்ல வேண்டும் என்று தேவையில்லை. நாம் ஒரு பாதைக்கு வந்திருக்கிறோம், நமக்கு இங்கே எல்லாம் கிடைக்கிறது, இதுதான் அனன்ய ஷரன் பாவ. இங்கு நாம் விரும்புவது கிடைக்கிறது, எதிர் காலத்திலும் கிடைக்கும், அதுதான் நம்பிக்கை.

கே: மகாபாரதத்தில், மகாவீரர்கள் பாண்டவர்களால் சதி செய்யப்பட்டு கொல்லப்பட்டனர். இதற்குபின் உள்ள காரணம் என்ன? தீயவை நடப்பது கூட, இறைவனின் திரு உளப்படிதானா?

குருதேவ்: ஆம், மகாபாரதம் ஒரு அழகான கதை, மேலும் அது உருவகமானதும் கூட. கடந்தகாலத்தில் எப்போதோ ஒருமுறை நடந்தது இது என்று எண்ணாதீர்கள், இது ஒவ்வொரு நாளும் நடக்கிறது, குறிப்பாக இந்த நாட்டில். பல சகுனிகள் இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் தந்திரகள் செய்துகொண்டிருக்கிறார்கள். இந்த ஒரு இதிகாசம் சுமார் 5220 ஆண்டுகளாக இந்தியா மட்டுமல்லாமல் மலேசியா, சீனா, இலங்கை, ஏன் ஆஸ்திரேலியா வரை உள்ள பல கோடி மக்களின் வாழ்கை மீது ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

ஆஸ்திரேலியா என்பது சம்ஸ்க்ருத வார்த்தை என்று உங்களுக்குத் தெரியுமா? ஆஸ்திரேலியா என்ற வார்த்தைக்கு சம்ஸ்க்ருதத்தைத் தவிர வேறு எந்த மொழியிலும் பொருள் இல்லை. ஆஸ்திரேலியா என்றால் ஆயுதங்கள் வைத்திருக்கும் இடம் என்று பொருள். இன்றைய அணு ஆயுதத்தை ஓத்த பயங்கர ஆயுதங்களை அவர்கள் வைத்திருந்தார் போலத் தெரிகிறது. அதனால் தான் ஆஸ்திரேலியாவின் மத்திய பகுதி பாலைவனமாகவே உள்ளது. அங்கு எதுவுமே வளர்வதில்லை. இத இடம்தான் அஸ்திராலயம் என்று அழைக்கப்பட்டது. மகாபாரதத்தில் இது சொல்லப்பட்டிருக்கிறது.

ஆங்கிலேயர்கள் இந்தியா வந்த போது, இந்த காலாசாரம் மிக உறுதியானது என்று கூறினார்கள். இதை அழிக்கவில்லை என்றால் நம்மால் இவர்களை ஆளமுடியாது. எனவே, மெக்காலே பிரபு இங்கிலாந்துக்குத் திரும்பச் சென்றபோது, எலிசபெத் இராணிக்கு இவ்வாறு எழுதினார், ‘இந்தியாவின் நீள அகலத்தில் பயணம் செய்துவிட்டேன், ஒரு பிச்சைக்காரரைக் கூட, ஒரு திருடரைக்கூட பார்க்கவில்லை. அவ்வளவு வளமும், உயர்ந்த நீதி நெறிகளும், வல்லவர்களும் நிறைந்த இந்த நாட்டை, அதன் முதுகெலும்பான ஆன்மீக கலாசார பாரம்பரியத்தை உடைத்தால் ஒழிய நம்மால் இவர்களை வெல்லவே முடியாது.’ அதிலிருந்து ஆங்கிலேயர்கள் சில சட்டங்களை போட்டு மக்களை ஒடுக்கி நம் வாழ்வியல் மதிப்புகளை முழுமையாக ஒழித்துவிட்டனர். ஜெர்மனியில் உள்ள துபிஞ்சன் பல்கலைக்கழகம், ஹாம்பர்க் பல்கலைக்கழகம் இவற்றில் நூற்றுக்கணக்கான ஓலைச் சுவடிகள் உள்ளதைக் காணலாம். அவர்கள் அதையெல்லாம் இங்கிருந்து எடுத்துச் சென்றுவிட்டனர். இங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்ட இப்படிப்பட்ட பிரதிகள் இங்கிலாந்திலும் இருக்கின்றன.

கே: எல்லாவற்றையும் என்னுடைய வேலையாக கருதிச் செய் என்று பகவத் கீதையில் ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகிறார். என்னுடைய தினசரி வேலையை எப்படி நான் இறைவனின் வேலையாக 
கருத முடியும்?

குருதேவ்: பாருங்கள், நீங்கள் செய்யும் எல்லாவற்றையும் புனிதமாகக் கருதுவது, உங்களிடம் உள்ளது. எந்த வேலை செய்தாலும், சுயநலமில்லாமல், உங்கள் சுகத்திற்காக மட்டுமே அல்லாமல், ஆனால் பிறர் நலனுக்காக செய்யப்படும் எந்த வேலையும் புனிதமானது தான். உட்கார்ந்து அப்படி ஒரு உணர்வை உருவாக்கி காலத்தை வீணடிக்காதீர்கள். மனநிலையை உருவாக்குவதை செய்யாதீர்கள். இயல்பாக இருந்து விடுங்கள் அவ்வளவே.

கே: குருதேவ், நான் திருமணம் செய்து கொண்டால், உலகாய விஷயங்களில் சிக்கி என்னுடைய ஆன்மீகப் பாதையிலிருந்து விலக நேரிடுமோ என்று எண்ணுகிறேன். ஞான நிலை அடைய விரும்பும் ஒருவர் திருமணம் செய்து கொள்ளலாமா கூடாதா?

குருதேவ்: நீங்கள் என்னை பிரச்சினையில் சிக்க வைக்கிறீர்கள். நான் இப்படியோ அல்லது அப்படியோ சொன்னால், நீங்கள் வேறு விதமாகக் கேள்வி கேட்கப் போகிறீர்கள். திருமணம் செய்து கொள்வதா இல்லையா என்பது உங்கள் தனிப்பட்ட தேர்வு. மற்றும், நீங்கள் இரண்டையும் செய்யலாம். இங்குள்ள பலர் செய்வது போல, திருமண வாழ்க்கையில் இருந்துகொண்டே ஆன்மீகப் பாதையில் செல்வதும் செய்யலாம். ஆனால் நீங்கள் விரிவான குடும்பம் கைக்கொண்டு, உலக மக்கள் அனைவரின் நலனுக்காக உங்களை அர்பணித்துக் கொண்டு சேவை செய்ய விரும்பி, அதற்காக தனியாக இருக்க விரும்பினால், அதுவும் செய்யலாம். ஆனால் ஒரு விஷயம் நான் சொல்வேன். திருமணம் செய்து கொள்கிறீர்களோ அல்லது தனியாக இருக்கிறீர்களோ, மகிழ்ச்சியாய் இருங்கள். திருமணம் செய்து கொண்டும் மகிழ்ச்சி இல்லாமலிருப்பவர்களும் இருக்கிறார்கள், திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக இருந்தும் மகிழ்ச்சி இல்லாமல் இருப்பவர்களும் இருக்கிறார்கள். அந்த வகையில் நீங்கள் சேர்ந்துவிடாதீர்கள். இது முக்கியம். தனியாக இருந்து மகிழ்ச்சியாக இருப்பதோ அல்லது திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக இருப்பதோ, இரண்டில் ஒன்றை நீங்கள் தேர்வு செய்ய வரவேற்கப்ப் படுகிறீர்கள்.

கே: குருதேவ், இந்தக் காலத்தில் எல்லோருமே இலவசமாய் அறிவுரை தருகிறார்கள். ஒவ்வொருவரும் என்னுடைய குருவாக இருக்க விரும்புகிறார்கள். கேட்காமலேயே அறிவுரை கிடைக்கிறது. யாருடைய அறிவுரையைக் கேட்பது யாருடையதைத் தவிர்ப்பது?


குருதேவ்: இது இந்தக் காலத்தில் மட்டும் அல்ல, பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. ஒருவர் எல்லோர் சொல்வதையும் கேட்க வேண்டும், ஆனால் தான் விரும்புவதை செய்ய வேண்டும். காதுகளுக்கு மூடி இல்லை, அவை திறந்தே இருக்கிறது. ஏன்? அப்போது தான் எல்லாவற்றையும் கேட்க முடியும், ஆனால் விரும்பியதை மட்டுமே பார்க்க முடியும். அதனால் தான் கண்களுக்கு மூடி இருக்கிறது. காதுகளுக்கு அவை இல்லை. காதுகளையும் நாம் மூடி வைப்போம். எனவே எல்லோர் சொல்வதையும் கேளுங்கள், ஆனால் அவற்றை அதிகம் உள்ளே எடுத்துச் செல்லாதீர்கள். எல்லோரும் இலவசமாய் அறிவுரை தருகிறார்கள் என்பதை உணர்ந்து கொண்டீர்கள், அது சரி தான்.