பேரானந்தமே நம் இயல்பு


27 ஆகஸ்ட், 2013 - பெங்களூரு - இந்தியா 

கே: புத்த மதத்தினர் கடவுளை நம்புவதில்லை என்கிறார்கள். புத்தரும்  கூட, தெய்வச் சிலைகளை வழிபடக் கூடாது என்று கூறி இருக்கின்றார்.ஞான ஒளி அடைந்த அவர் இதன் மூலம் கூறும் கருத்து என்ன

குருதேவ்: கடவுளைப் பற்றி புத்தர் ஒருபோதும் கூறியதில்லை. கடவுளைப் பற்றிய எந்த விவாதத்திலும் அவர் ஒருநாளும் ஈடுபட்டதில்லை. அவர் கூறியது என்னவென்றால் : முதலில் துன்பம் இருக்கின்றது என்பதை அறிந்து கொள்ளுங்கள் என்பதே ஆகும். 


பலர் துன்பத்தை அனுபவிப்பதையே மறுத்து வந்தார்கள். பலர் அதை உணரவில்லை .பல சமயங்களில் நோயுற்ற ஒருவரிடம் கேட்டால், அவர், தான் மிக  நலமாக இருப்பதாகக் கூறுவார். தான் எனும் அகந்தை உள்ளவர், இன்னும் அதிகமாகவே, தனது உடல் நலக் குறைவை மறுப்பார்.

சிலர் உள்ளூரத் துன்பமாக இருப்பார்கள்.ஆனால் வெளியில் உற்சாகமாக இருப்பது போன்ற முகத்திரை அணிந்து, தன்னம்பிக்கையுடனும், சில சமயம் அதிகாரத் தோரணையுடனும் காணப் படுவார்கள்.எல்லாம் நன்றாக இருப்பது போன்று பாசாங்கு செய்வார்கள், ஆனால் அவர்கள் முகத்தில் வேதனை  சொட்டு வதைக்  காணலாம். அவர்தம் உடலின் ஒவ்வொரு பகுதியும் கோபம்,கசப்பு,வெறுப்பு, துன்பம் ஆகிய வற்றை வெளிப் படுத்துவதைக் காணலாம். இதைத் தான் புத்தர் கூறினார்: வாழ்வில் துன்பம் உள்ளது. அதை அறிந்து கொள்ளுங்கள். அதற்கு தீர்வுகள் உண்டு.யாராவது சோகமாக இருப்பது என்  இயல்பு என்று கூறினால் அதற்கு யாரும் எதுவும் செய்ய முடியாது; கடவுளே கூட எதுவும் செய்ய முடியாது. துன்பமாக இருப்பது என்பது நமது இயல்பு அல்ல. அது சம்ஸ்காரம் (முற்பிறவி எண்ணப் பதிவுகள்) அல்லது கர்மங்களினால் ஏற்படுவது.இதை மற்ற சம்ஸ்காரங்களினால் நீக்க முடியும்.அவற்றில் ஒன்று பிரத்யாஹாரா ( யோகாவின் எட்டு அங்கங்களில் ஒன்று அதாவது புலனுணர்வுகளைக் கட்டுப் படுத்தி, அவற்றை உள் நோக்கித் திருப்புதல்) மற்றொரு தீர்வு தியானம். எனவே தியானம், பிராணாயாமம் மற்றும் சத்சங்கத்தின் மூலம் நாம் துன்பங்களிலிருந்து விடுபடலாம்.அப்பொழுது, நாம் நமது உண்மையான இயல்பு மகிழ்ச்சி, பேரானந்தம் என்று புரிந்து கொள்கின்றோம். ஒளி இருளை விலக்குவது  போன்று நமது ஆத்மசக்தி (ஆத்மா என்னும் சக்திவாய்ந்த விழிப்புணர்வு) நமது துன்பங்களை விலக்குகின்றது. ஆன்மீகப் பயிற்சிகளின் வழியாக பயம், கோபம் ஆகிய எதிர்மறை எண்ணங்கள் மறைகின்றன. ஆன்மீகப் பயிற்சிகளின் நோக்கமே , நமது இயல்பாகிய விவரிக்க முடியாத  பேரானந்தத்தில் மூழ்குவதே ஆகும்.

உபநிஷதங்களில் கூறப்பட்டுள்ளவையே புத்தரும் கூறுகின்றார். அந்த செய்யுள் :
ந கர்மாண ந ப்ரஜாய தானென த்யகேனைகே அம்ர்த த்வமானசு I  
பரேன நகம் நிஹிதம் குஹயாம் விப்ரஜதே யத்யாதயோ விசந்தி || 
(சன்யாச சுக்த மஹாநாராயணோஉபநிஷத், 4.12)

இதன் பொருள் என்னவென்றால், ஒருவனுடைய செயல்களாலோ, (கர்மா) மேன்மையான குடும்ப சந்ததியாக இருப்பதாலோ (பிரஜா) செல்வத்தினாலோ (தனா) இறைவனை அடைய முடியாது. தியாகம் மற்றும் பற்றற்ற நிலையினாலேயே (தியாகா)) ஒருவன் நிலைத்திருக்கும் நிலையை அம்ருதா) அடைய முடியும். இதையேதான் புத்தரும் கூறியிருக்கின்றார். உபநிஷதங்களைக் கவனமாகப் படித்துப் பின்னர் புத்தர் என்ன கூறியிருக்கின்றார் என்று படித்தீர்களானால் அவை இரண்டும் ஒன்றே என்று புரிந்து கொள்வீர்கள்.எந்த வேறுபாடும் கிடையாது. அதனால் தான் ஆதி சங்கராச்சார்யார் "ப்ராச்சன்ன பௌத்தா" ( மறைந்திருக்கும் அல்லது விளம்பரபடுத்தப் படாத புத்தர்: அதாவது ஞானஒளி அடைந்தவர் ) என்று அழைக்கப் படுகின்றார். ஏனெனில் அவர் கூறியுள்ள அனைத்துமே புத்தமதத்தில் கூறப் பட்டவை போன்றிருப்பதாகும். ஆகவே சனாதன தர்மத்திற்கும் (ஹிந்து மதத்தின் வேறொரு பெயர்) புத்த மதத்திற்கும் எந்த வேறுபாடும் கிடையாது. கொள்கைகள் ஏறக்குறைய ஒன்றேதாம். முழுவதுமாக இரண்டும் ஒன்றேதான் என்று கூற மாட்டேன், ஆனால் இரண்டும் நெருங்கியவையாக இருக்கின்றன. புத்த மதம் சூன்ய வாதம் (ஒவ்வொன்றும் ஒன்றுமே இல்லாதது – சூன்ய என்றால் சமஸ்க்ருதத்தில் ஒன்றுமில்லாத என்று பொருள்) என்பதை ஆதரிக்கின்றது, ஆனால் வேதாந்தம் பூர்ண வாதம் (ஒவ்வொன்றும் முழுமையானது) என்பதை வலியுறுத்துகின்றது. புத்த மதத்தில் துன்பம் என்றிருப்பதை உணருவதுதான் முதல் நிலை

ஆனால் துன்பம் என்று ஒன்றே கிடையாது; விழித்தெழுந்து பாருங்கள், நீங்கள் முழுமையான மகிழ்ச்சியுடையவர் (ஆத்மா பேரானந்தம் உடையது) என்று வேதாந்தத்தில் கூறப்பட்டுள்ளது. புத்த மதம்  துக்கம் மறைந்தவுடன் மகிழ்ச்சி ஏற்படுகின்றது என்கிறது, ஆனால் வேதாந்தா எப்போது ஆத்மமகிழ்வு உணரப்படுகின்றதோ அப்போது தானா கவே துக்கம் மறைந்து விடுகின்றது என்று கூறுகிறது. எனவே, கீழிருந்து மேல், அல்லது மேலிருந்து கீழ் என்னும் அணுகுமுறைகள்தாம் வெவ்வேறு, ஆனால் இலக்கு ஒன்றே தான்.வேதாந்தத்தில் கூட கட்டாயமாக தெய்வச் சிலைகளை வழிபட வேண்டும் என்று கூறப்படவில்லை. ஆத்ம தெய்வத்தை (உடல் என்னும் கோவிலில் குடிகொண்டிருக்கும் ஆத்மா என்னும் தெய்வீகம்) வழிபடுதலே மிக உயர்ந்த வழிபாடு என்று கூறுகின்றது. ஆனால் அத்தகைய நிலையை அடைவதற்கு ஆரம்பத்தில் ஒரு தகுந்த சூழ்நிலை தேவை. அது தான் பூஜை என்பது. ஒரு கால கட்டத்தில் எல்லாமே உங்களுடைய விரிவு நிலை, எல்லாமே ஒன்று என்பதாக தோன்றும். முடிவாக, உலகிற்கும் இறைவனுக்கும் எந்த வேறுபாடும் இல்லை - இறைமை - மரங்களில், தெய்வச்சிலைகளில், மண்ணில், நீரில், நீல வானத்தில் எங்கும் நிறைந்துள்ளது என்றுணரும்போது ஒருவன் எதையும் எங்கிலும் வழிபடலாம். (பொருள்: ஒருவன் ஒவ்வொன்றும் தெய்வீகத் தன்மையின் காட்சி என்று உணரும் நிலையை அடையும் போது).

ருத்ர பூஜையில் கூட ஒரு விதி உள்ளது: ந ருத்ரம் ருத்ரம் அர்ச்சயேதி" அதாவது நீங்களே சிவனாகும் வரை (உங்களில் உள்ள தெய்வீகத் தன்மையை உணரும் வரை) இறைவனை  வழிபட முடியாது. எனவே, முதலில் நீங்கள் இறைவனாகி பின்னர் இறைவனை வழிபட வேண்டும்.அதாவது உங்களில் உள்ள இறைமையில் ஆழ்ந்து நிலை பெறவேண்டும். உங்களின் இறைத்தன்மையில் ஆழ்ந்து நிலை பெற்றுப் பின்னர் இறைவனை வழிபட வேண்டும். பூஜை என்பது ஒரு லீலை - இந்த வழிபாட்டுணர்வை வெளிக்காட்டும் விளையாட்டு.

கே: குருதேவ்! சுகஸ்ய துக்கஸ்ய நகோபி தாஸ்ய ( உங்களுடைய மனதை தவிர வேறு யாரும் வேதனையையோ மகிழ்ச்சியையோ தருவதில்லை) என்று தாங்கள் கூறி இருக்கின்றீர்கள். அப்படியானால் நமது செயல்கள் பிறர் மீது எந்த பாதிப்பையுமே ஏற்படுத்துவதில்லையா?

குருதேவ்: எந்த அளவு எடுத்துக் கொள்கிறார்களோ அந்த அளவு நமது செயல்கள் பிறர் மீது பாதிப்பை ஏற்படுத்தும். (அதாவது பாதிப்பு என்று அவர்கள் ஏற்றுக் கொள்ள விரும்பினால்) அவ்வாறு எடுத்துக் கொள்ளவில்லை என்றால் நல்லதோ கேட்டதோ எதுவானாலும் அவர்களைப் பாதிக்காது. மன்னர் அலெக்சாண்டரால் அடிமைப்படுத்தப்பட்ட டியோகேன்ஸ் என்ற ஒரு முனிவர் இருந்தார். அலக்சாண்டர், அவரைச் சங்கிலிகளால் பிணைத்துக், கை விலங்கிட்டார். சந்தையில் அடிமை என்று விற்க முற்படும்போது, டியோகேன்ஸ் பலமாகவும், நம்பிக்கையுடனும் இருக்க, அவரை விற்பவர் அடிமை போன்று காணப்பட்டார். டியோகேன்ஸ் ஒரு அடிமை போன்று தோற்றமளிக்கவே இல்லை. எனவே நமது செயல்கள் எந்த அளவு எடுத்துக் கொள்ளப்படுகின்றதோ, அந்த அளவே பாதிப்பை ஏற்படுத்தும்.

உங்கள் பேச்சைக் கேட்காத ஒருவரை நீங்கள் சபித்தாலும், அது வேறு ஏதோ மொழி என்றோ, அல்லது நீங்கள் அவரைப் புகழ்வதாகவோ எண்ணிக் கொண்டால், உங்கள் சொற்கள் அவரிடம் என்ன பாதிப்பை ஏற்படுத்தும்? நீங்கள் சீரிய அறிவுபூர்வமான கருத்துக்களை ஒருவரிடம் கூறும்போது அவர் கல் போன்று அமர்ந்திருந்தால், உங்களுடைய பேச்சு அவரிடம் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்? ஒருவர் கூறப்பட்ட எதையும் உள்ளார்ந்து ஏற்றுக் கொண்டால் தவிர அவரிடம் நேர்மறை அல்லது எதிர்மறையான பாதிப்பு ஏற்படாது.

அதற்காக, நீங்கள் பிறருக்கு துன்பத்தையும் வருத்தத்தையும் தரலாம் என்ற பொருள் அல்ல. சுகஸ்ய துக்கஸ்ய நகோபி தாஸ்ய என்பது நீங்கள் உங்களால் முடிந்த அளவு பிறருக்குத் துன்பத்தைத் தரலாம் என்பது அல்ல. இல்லவே இல்லை. நீங்கள் நுண்ணுணர்வுடன் இருக்க வேண்டும். உங்களுக்காக என்று நீங்கள் விரும்பாததை ஏன் நீங்கள் பிறருக்குச் செய்ய வேண்டும்? அது தான் தர்மம். பிறர் நம்மை சபிக்கும் போது நாம் மிகவும் வருந்துகிறோம். நம்மிடம் இருந்து பிறர் திருடுவதை விரும்பாத போது, நாம் பிறர் பொருளைத் திருடக் கூடாது. எதையெல்லாம், நமக்கு நிகழக் கூடாது என்று எண்ணுகிறோமோ, அதையெல்லாம் பிறருக்குச் செய்யக் கூடாது. இதுதான் தர்மம் என்பதன் எளிய சாரம்.ஒருவரின் கடமை என்னும் ஞானம்.

கே: ஸ்ரீ கிருஷ்ணருக்கும் ராதாவிற்கும் இடையே என்ன உறவு? ஸ்ரீ கிருஷ்ணரின் மனைவிக்குக் கூடக் கிடைக்காத அத்தகைய சிறப்பான உறவு என்ன?

குருதேவ்: நான் ஸ்ரீமத் பாகவதம் படித்ததில்லை.ஆனால்அதில் ராதா என்று எங்கும் குறிப்பிடப் படவில்லை என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ராதா என்னும் சொல்லுக்குப் பொருள்,தோற்றுவாய்க்கு திரும்புவது என்பதாகும்.தாரா என்பது தோற்றுவாயிலிருந்து வருவது,‘ராதா என்பது தோற்றுவாய்க்கு திரும்புவது. ராதா என்று அழைக்கப்படுவது ஒரு தெய்வீக சக்தி ஆகும். தோற்றுவாய்க்குத் திரும்பினாலொழிய நம்மால் கிருஷ்ணரை அனுபவிக்க முடியாது. ஏன் அவ்வாறு? ஏனெனில், கிருஷ்ணர் தான் தோற்றுவாய். ராதா அதற்கு அழைத்து செல்லும் பாதை. ருக்மிணியோ, சத்யபாமாவோ கூட, (கிருஷ்ணரின் இரு மனைவியர்) ராதாவாகும் வரை கிருஷ்ணரை அடைய முடியாது. இதுதான் இக்குறியீட்டில் மறைந்திருக்கும் பொருள்.

கே: குருதேவ்! சில சமயங்களில், யோகா என்னும் பாதையில் சில சித்திகளை அடைகிறார்கள். அச்சித்திகளே  கவன மாற்றத்திற்கு வழி வகுக்கின்றது. எவ்வாறு இவற்றைக் கையாள்வது?

குருதேவ்:அவற்றுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்காதீர்கள். அவற்றின் பின்னால் ஓடாதீர்கள். அத்தகைய சில உங்களுக்கு வந்து சேரும். பலர் அதை அறிந்திருப்பார்கள். அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டாம். உங்களிடம் அறிமுக அட்டையைக் கேட்கும் போது தருகிறீர்கள். ஆனால் நீங்கள் அந்த அறிமுக அட்டை அல்ல. உங்களுடைய ஆத்மாவில் நீங்கள் நிலை பெற்று ஒன்றி இருங்கள். இதுதான் குறிக்கோள்.

கே: குருதேவ்! எனக்கு மிகவும் பிரியமான நெருங்கியவர்களின் மரணத்தை பற்றி பயந்து கொண்டிருக்கின்றேன். இப்பயத்திலிருந்து எவ்வாறு விடுபடுவது?

குருதேவ்: இந்த உலகத்தில், உங்களை சேர்ந்தவராக இல்லாமல் யாராவது இருக்கின்றார்களா? வேற்று மனிதர் என்பது யார்? சற்று இதை கவனித்துப் பாருங்கள். இங்கு தான் கடவுள் நம்பிக்கை என்பது முக்கியத்துவம் பெறுகின்றது. இறைவனை நம்புங்கள். உங்களுக்கு தேவையான எல்லாவற்றையும் இறைவன் கவனித்து உங்களை எப்போதும் பாதுகாப்பான் என்று நம்புங்கள். பகவத் கீதையில், ஸ்ரீகிருஷ்ணர் கூறுகின்றார்:

அனன்யாச் சிந்த யந்தோ மாம் எ ஜனாஹ்  பர்யுபசதே
தேஷாம் நித்யபியுக்தானாம் யோக க்ஷேமம் வஹாம் யஹம் (9.22)

எப்போது நீங்கள் இறைவன் தாழ் பணிந்து, பூரண சரணாகதி அடைகிறீர்களோ, அப்போது இறைவன் உங்களுக்கு ஏற்கனவே இருப்பதப் பாதுகாத்து, தேவையான அனைத்தையும் வழங்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்கின்றான். ஸ்ரீ கிருஷ்ணர் கூறுவதாவது: யோக க்ஷேமம் வஹாம் யஹம். இங்கு யோக என்பது என்ன வேண்டுமோ அவை, க்ஷேமம் என்பது உங்களுக்கு ஏற்கனவே வழங்கப் பட்டதைப் பாதுகாத்து கவனித்தல் என்று பொருள்.இரண்டுமே அவரது பொறுப்பு.இதை ஸ்ரீ கிருஷ்ணர் தெளிவாகக் கூறுகின்றார்.இதை அறிந்து, உங்களை தளர்த்திக் கொள்ளுங்கள்.

கே: குருதேவ்! தாங்கள் எங்கள் அனைவரையும் சமமாகக் கருதுகின்றீர்கள். ஆனால், யாராவது, உங்களை தனது குரு என்று கூறிக் கொண்டால் எனக்கு மிகுந்த பொறாமை ஏற்படுகின்றது. நீங்கள் எங்கள் அனைவரையும் சார்ந்தவர் அல்லவா? நான் இதை என்னுடைய மனம் புரிந்து கொள்ள என்ன செய்ய வேண்டும்? என்னால் மற்றவருடன் எதையும் பகிர்ந்து கொள்ள முடியும். உங்களை மற்றவருடன் எவ்வாறு பகிர்ந்து கொள்வது?

குருதேவ்: யாராவது குருதேவ் என்னுடையவர் என்று கூறினால், நீங்கள் என்னுடையவரும் கூட' என்று கூறுங்கள்.அவர் ஒரு முறை கூறினால், நீங்கள் இரு முறை கூறுங்கள் (சிரிப்பு) நீங்கள் உங்கள் வீட்டிலுள்ள ஜன்னல் கதவைத் திறந்தால், முழுமையாக சூரிய ஒளி வருகின்றது. அல்லவா? வேறொருவர் தனது வீட்டு ஜன்னலைத் திறந்தால், அங்கும் முழுமையாக சூரிய ஒளி பரவுகின்றது. உங்களுக்குக் குறைவாகவும், அவருக்கு அதிகமாகவும் வெளிச்சம் வருகின்றதா என்ன? அது போன்று தான் காற்று.வீட்டில் அதிகமாகவும் மற்ற இடங்களில் குறைவாகவும், பாரபட்சமாக வீசுகிறதா? சூடு அதிகமாக இருக்கும் போது, ஒரு வீட்டில் அதிகம் மற்றொரு வீட்டில் குறைவு என்று இருக்கின்றதா? இயற்கை எல்லோரையும் ஒரே விதமாகத் தான் அணுகுகின்றது. நீங்கள் முழு நிலவைக் காணும் போது, பிற நகரங்களிலுள்ள மக்களனைவரும் முழு நிலவைக் காண முடியும்.ஒரு இடத்தில் அதிகம், ஒரு இடத்தில் குறைவு என்று இராது. எங்கு சென்றாலும் முழு நிலவு முழு நிலவு தான். உங்களுக்கு நான்கு குழந்தைகள் என்று வைத்துக் கொள்ளுவோம். தற்காலத்தில் இரண்டு குழந்தைகள்தாம் சாதரணமாக இருக்கின்றன. எது எப்படியானாலும் நீங்கள் அத்தனை குழந்தைகளையும் சமமாகத் தானே கருதுவீர்கள்? ஒரு குழந்தைக்கு உணவு தந்து விட்டு மற்றக் குழந்தைகளைப் பட்டினியில் வாட விடுவீர்களா? ஒரு தாயால் ஒரு நாளும் அவ்வாறு செய்ய முடியாது.

நாம் மேலே உயரும் போது, விரிந்த உடமை உணர்வும், பரந்த மனப்பான்மையும்,எந்த முயற்சியும் இன்றி ஏற்பட்டு தானாகவே அவை நம் வாழ்வின் ஒரு அங்கமாகின்றது. சில சமயங்களில் கோபமும் பொறாமையும் ஏற்படும்.பரவாயில்லை.கோபம் பொறாமை போன்றவை வரும், அவை தானாகவே போகும்..ஞானத்தின் மூலமாகவே இத்தகைய எதிர்மறை எண்ணங்களையும், சிதைவுகளையும் கையாள முடியும்.

கே: குருதேவ்! நான் ஒருவரிடத்தில் ஆழ்ந்த அன்புடன் இருக்கின்றேனா அல்லது வெறும் பிணைப்பா என்று எப்படி அறிந்து கொள்ளுவது?

குருதேவ்: காலம் அதை கூறும்.(சிரிப்பு) அன்புடன் ஒரு தியாக உணர்வு தொடர்பு கொண்டிருக்கும். அன்பு என்னும் பெயரில் பிணைப்பு அல்லது கவர்ச்சி ஏற்படும் போது அது துன்பத்தையே தரும்.உண்மையான அன்பில், தியாகம் கூட ஒரு மன நிறைவை ஏற்படுத்தும். அன்பு தியாகம் மற்றும் மன நிறைவுக்கு வழி வகுக்கும், ஆனால் பிணைப்பும் ஜுரவேகமும் துன்பத்துக்கே அடிகோலும்.

கே: குருதேவ்! நமது  மனசாட்சிக்கு எது சரி எது தவறு என்று தெரியும். ஆயினும், பல சமயங்களில் இந்த உட்குரலைக் கேட்காமல் இருக்கின்றோம். மனசாட்சிக்கு செவி கொடாமல் செயல்பட எது நம்மைத் தூண்டுகின்றது? இதைத் தாண்டுவது எப்படி?

குருதேவ்: பழைய பழக்க வழக்கங்களாக இருக்கலாம் அல்லது வேறேதாவது செய்தால் மகிழ்ச்சி காணலாம் என்னும் மயக்கமாகவும் இருக்கலாம். இவை இரண்டும் மட்டும் தான்.

கே: குருதேவ், சில மாதங்களுக்கு முன்பு தான் எனக்கு தங்களுடன் தொடர்பு ஏற்பட்டது.  தாங்கள் ஏற்கெனவே என்னை தங்கள் மீது பித்து பிடித்தது போல் அன்பு கொள்ள வைத்து விட்டீர்கள். நான் கடந்த ஆண்டுகளில் இழந்துவிட்ட மொத்த அன்பையும் மீண்டும் பெற முடியுமா? நான் என் பின்னடைவை சரி செய்ய விரும்புகின்றேன். 

குருதேவ்: நம் அன்பின் பிணைப்பு மிகப் பழமையானது. நம் இதயம் பழமையில் பெருமை கொள்ளும் தன்மையுடையது. பழையனவற்றைத் தேடி ஓடக் கூடியது. ஆனால் மனமானது புதியவற்றால் கவரப்படுகின்றது. உதாரணத்திற்கு, மனம் நவீன உடைகள், நவீன அறிவியல் கண்டுபிடிப்புகள் போன்றவற்றால் கவரப்படுகின்றது. இதனால் தான் அறிவியலும் புதிய கண்டுபிடிப்புகள், உருவாக்கங்களைத் தேடிச் செல்கின்றது. மனமும், புத்தியும் எப்போதும் புதியனவற்றால் வசீகரிக்கப் படுகின்றன. ஆனால் இதயம் அப்படியில்லை. நாம் யார் மீதாவது அன்பு கொண்டிருந்தால் இரண்டு நாட்களாக அல்லது இரண்டு வாரங்களாக அன்பு கொண்டிருப்பதாக சொல்வதில்லை. நாம் பல காலமாக ஏன் பல பிறவிகளாக அவர்களை நேசிப்பதைப்போல்  உணர்கின்றோம். இவ்வாறாக, நமக்கு பரிச்சயமானவை மற்றும் பழமையானவைகளுக்காக ஏங்குவதே இதயத்தின் தன்மையாகும். பழமை, புதுமை ஆகிய இரண்டும் கலந்ததே நம் வாழ்க்கை. இரண்டையும் ஒன்றாக ஏற்றுக் கொள்ள வேண்டும். 

நீங்கள் மாயையில் சிக்கியிருக்கும் போது அல்லது உங்கள் இதயமும் புத்தியும் முரண்படும் போது ஏற்படும் சச்சரவுகள் அனைத்தும் கடந்த காலம் குறித்தவையே ஆகும். ஏக்கம் வெறுப்பு  போன்ற அனைத்தும் கடந்த கால சம்பவங்கள் தொடர்பானவையே. 'நான் 20 வருடங்களுக்கு முன்பு உங்கள் வீட்டு திருமணத்திற்கு வந்த போது நீங்கள் என்னை முறைப்படி கவனிக்கவில்லை. போதுமான அளவு இனிப்புகளும், பரிசுகளும் அளிக்கவில்லை. உங்கள் அப்பாவும் அம்மாவும் இப்படிச் செய்தார்கள்;அப்படிச் செய்தார்கள்' என்று ஒருவர் சொல்லலாம்.    மக்கள் தங்கள் மனதில் கசப்புணர்வை 20 ஆண்டுகளுக்குப் பிறகும் பேணி வளர்க்கின்றனர்.  போதிய அளவு விவேகமும் பகுத்தறியும் ஆற்றலும் இல்லாத காரணத்தினால் மக்கள் இது போன்ற உணர்வுகளில் சிக்கி விடுகின்றனர். எனவே நீங்கள் விவேகத்தைப் பயன்படுத்தி இவை பற்றியெல்லாம் அறிந்து கொள்ள வேண்டும். 
  
கடந்த காலத்தை விட்டுவிட வேண்டும். மனமும் புத்தியும் கடந்த காலத்திலேயே சுழன்று கொண்டிருந்தால் எதிர்மறை உணர்வுகளில் நிலைத்து கெட்டு விடுகின்றன. இதயம் புதியனவற்றை நாடி செல்லும்போது ஸ்திரத்தன்மையை இழந்து விடுகின்றது. ஆகவே அனைத்தையும் அவற்றிற்கு உரிய இடத்தில் வைப்பதே விவேகம் ஆகும். சரியான முறையில் செயல்பட வாழ்க்கையில் புத்தியும் உணர்வுகளும் இரண்டுமே அவசியம்.அறிவை பயன்படுத்தி தொழில் செய்யுங்கள். வாழ்க்கையை உணர்வுபூர்வமாக வாழுங்கள்.அவ்வாறில்லாமல் வீட்டில்  அறிவிற்கும் தொழிலில் இதயத்திற்கும் இடம் கொடுத்தால் இரண்டுமே பிரச்சினையாகிவிடும். 

கே: குருதேவ், ரூபாயின் மதிப்பு குறைந்து கொண்டே வருகின்றது. முன்னேற்றம் வருமா?   நான் மத சார்பின்மை என்ற பெயரால் என் மதத்திலிருந்து அந்நியப்படுத்தப்படுகின்றேன்.  எகிப்தில் நிகழ்வனவற்றை நாங்களும் சந்திக்க நேருமா? (சமீபத்தில் நிகழ்ந்த உள்நாட்டுப்போர் மற்றும் கலவரத்தைக் குறிப்பிடுகின்றார்).

குருதேவ்: கடவுள் கிருபையில் நம் நாட்டில் அவ்வாறு நடக்காமல் இருக்கட்டும். எகிப்திலும் சிரியாவிலும் நடப்பவை எப்போதுமே நம் நாட்டில் நடக்கக் கூடாது. இங்கே இந்தியாவில் மத சார்பின்மை என்ற பெயரால் ஏதேனும் அநீதி இழைக்கப்படுமென்றால் அதற்கு நீங்கள் மட்டுமே பொறுப்பாக இருக்கமுடியும். வேறு யாரும் பொறுப்பாக முடியாது ஏனென்றால் நீங்கள் அனைவரும் இவற்றிற்கு எதிராக சேர்ந்து நிற்பதில்லை. நம் மதத்தை நாமே மதிக்க வில்லையென்றால் மற்றவர்கள் எப்படி மதிப்பார்கள்? மற்றவர்களை கைகாட்டி குற்றம் சொல்ல வேண்டாம். நம்மை நாமே தன்னாய்வு செய்து கொள்ள வேண்டும். இன்று ஜாதி மற்றும் இன வேறுபாடுகள் மிக அதிக அளவில் உள்ளன. ஜாதியின் பெயரால் மிகவும் பிளவு பட்டு இருக்கின்றோம். நாம் இவற்றை எல்லாம் மீறி மேலெழுந்து அன்பு மற்றும் கருணையினால் அனைவரையும் ஒன்று சேர்க்க வேண்டியது மிகவும் அவசியம். நாம்  பொறுப்புள்ள குடிமக்களாக மாற வேண்டும். 

வேறெதுவும் செய்யவில்லையென்றாலும் மாதத்திற்கு  ஒருமுறையாவது ஒரு கோவிலிலோ அல்லது அதுபோன்ற வேறொரு இடத்திலோ அனைவரையும் ஒன்று சேர்க்க முயற்சி செய்ய வேண்டும். கிராமங்களிலும் இவ்வாறு செய்ய வேண்டும். பண்டிகைகள் கொண்டாடும் போது நாம் அனைவரும் ஒன்றாக சேர்ந்து கொண்டாடுவதற்கான முயற்சிகள் செய்வதே இல்லை.  ஒவ்வொருவரும் அவரவர்கள் தனித்தனியாக கொண்டாடவே விரும்புகின்றனர். விநாயக சதுர்த்தி, ஜன்மாஷ்டமி போன்ற பண்டிகைகளை அவரவர்களுடைய தெருவிலோ அல்லது காலனியிலோ தனியாக கொண்டாடுகின்றனர். ஒவ்வொருவரும் 'நான்',' எனது' 'என்னுடையது' என்று நினைப்பதனால் தான் இவ்வாறு நடக்கின்றது. நாம் ஒன்றாக இணைந்து நிற்காமல் இவ்வாறு பிரிந்து கிடப்பது நம் இந்தியாவின் மிகப்பெரிய துரதிருஷ்டம். நாம் மொழி, இனம், ஜாதி,மாநிலம், ஏன் அரசியல் கட்சிகள் போன்றவற்றால் பிரிந்து நிற்கின்றோம். அவ்வாறில்லாமல் நாம் ஒன்றாக  இணைவோமேயானால் தர்மம் மேலோங்கும். பிறகு உங்களை யார் காயப்படுத்தவோ அல்லது இழிவுபடுத்தவோ முடியும்? அதனால் தான் 'சங்க சக்தி கலியுகே' என்று சொல்லப்பட்டுள்ளது. (நல்லவர்கள் மற்றும் நேர்மையானவர்களின்  தொடர்பே இருள் சூழ்ந்த கெட்ட நேரங்களில் சக்தி தரும் ஆதாரமாகும்.)

இன்று பலர் தாங்கள் அநீதியால் துன்பப்படுவதாகச் சொல்கின்றனர். ஜம்மு காஷ்மீரிலும் கேரளாவிலும் இருக்கும் மக்கள் பலர் தங்கள் நாட்டிலேயே அவர்கள் இரண்டாம்தர குடிமக்களாக மாறிவிட்டதைப் போல் உணர்வதாக புகார் செய்துள்ளனர். வட கிழக்கிலும் ஆந்திராவிலும் கூட மக்கள் அதிக அளவில் அக்கறையின்மையும், அநீதியும் இருப்பதாக சொல்கின்றனர். யாரும் அவர்கள் மீது அக்கறை கொள்வதில்லை என்று சொல்கின்றனர்.  மேற்கு வங்காளத்திலும் பெரும்பான்மை இனத்தில் மிக அதிக அளவில் அநீதியும் தவறான நடவடிக்கைகளும் இருப்பதாக சொல்கின்றனர். பலமுறை மக்கள் என்னிடம் வந்து இதை சொல்லி என் முன்னால் அழுகின்றனர். 

"நீங்கள் அனைவரும் இந்த அநீதிக்கு எதிராக இணைந்து நிற்க வேண்டும். உங்கள் கால்களில் நிற்க வேண்டும். நீங்கள் உங்களுக்குள் பிரிந்து சிதறி கிடக்கும் வரையில் மற்றவர்கள் அதனை  தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்வார்கள். இதை செய்யாமல் நாம் மற்றவர்களைக் குறை கூறுகின்றோம். ஒன்று சேர்ந்து சங்கங்கள் அமைத்து முன்னேறுவதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது. அவ்வாறு யாராவது முன்னேறும் போது நாம் ஏன் அவர்களை தடுத்து கீழிறக்கவேண்டும்? அவர்களும் முன்னேறட்டும். நாமும் வெற்றி பெற முயற்சிகள் செய்வோம். இந்த எண்ணம் நம் அனைவருக்குள்ளும் எழவேண்டும். 

இன்று சிறு நகரங்களில் கூட பத்து வெவ்வேறு கோவில்கள் கட்டப்படுகின்றன. பத்து கோவில்கள் இருப்பது தவறில்லை. ஆனால் அவர்களுக்குள் போட்டி உணர்வு உண்டாகி விடுகின்றது. ஒரே கோவிலிலும் நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கிடையே சிறு  விஷயங்களுக்கெல்லாம் கருத்து வேறுபாடுகளும்,விவாதங்களும் ஏற்படுகின்றன.  இவையெல்லாம் விவேகமற்றவை.பிறகு அவர்கள் தாங்கள் சரியாக கவனிக்கப்படவில்லை,அவர்களுக்கு தேவையானவை கிடைக்கவில்லை என்றெல்லாம் புகார் செய்கின்றனர். மதம், அரசியல், பொருளாதாரம் மற்றும் அனைத்து துறைகளிலும் விவேகம் மிக அவசியம்.இதற்கான மாற்றம் உண்டாக வேண்டும். நம் இளைஞர்கள் இந்த குறுகிய மனப்பான்மையிலிருந்து வெளி வந்து பெரும் மாற்றத்தினைக் கொண்டு வருவார்கள் என்று நான் நம்புகின்றேன். அவர்கள் ஒன்றாக சேர்ந்து நன்முறையில் செயல்பட வேண்டும்.

கே: நீல நட்சத்திரம் என்பது என்ன? நான் அதைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கின்றேன். தயவு செய்து விளக்கம் கூறுங்கள், குருதேவ்.

குருதேவ்: நீங்கள் ஏன் வேறு யாரையாவது கேட்க கூடாது? நட்சத்திரங்களை வானத்தில் தான் பார்க்க முடியும்; தரையில் அல்ல. யாராவது தங்கள் பாதங்கள் தரையில் இல்லாமல் ஆகாயத்தில் நடப்பது போல் நடந்தால் (அதாவது  கிறுக்குத்தனமாகவும்  நடைமுறைக்கு மாறாகவும்  நடந்தால்) அவரே நீல நட்சத்திரம் என்று அழைக்கப்படுவார்.(சிரிப்பு)அது தான் பொருள். சரியா? ஆசிரமத்திலும் யாராவது நடைமுறையிலிருந்து விலகி நடந்தால் அவர் நீல நட்சத்திரமாகி விட்டார் என்று சொல்வார்கள்.அவர் என்ன சொல்கிறார் என்ன செய்கிறார் என்று யாருக்கும் தெரியாது. ஆனால் இதற்கும் தீர்வு உண்டு.