ஸ்ரீ கிருஷ்ணரின் பிறந்த நாள் (ஜன்மாஷ்டமி)

ஆகஸ்ட் 28, 2013 – பெங்களுரு - இந்தியா



நம்முள் திறனாற்றல் மலரும் போது தோன்றுவது தான் யோகா.யோக கர்மாசு கௌசலம்' என்று கூறப்பட்டுள்ளது. நாம் ஒரு செயலை செய்யும் போது அரை மனதுடன்,' இது நடக்குமா நடக்காதா?' இதை அரை குறையாக செய்திருக்கிறோமோ?' இதை முடிக்க வெகு நேரமாகுமோ' என்றெல்லாம் எண்ணிக் கொண்டு செய்யக் கூடாது. ஒன்றை செய்ய வேண்டும் என்று நினைத்தால் செய்யுங்கள். நினைத்த மாத்திரத்திலேயே சில காரியங்கள் நடக்கும்.அது தான்  சித்தி என்பது. அது ஒரு அபூர்வமான திறன். மனித வாழ்க்கையில் அத்தகைய சித்தியை அடைய வேண்டும் என்று குறிக்கோளாக கொள்ள வேண்டுமேயன்றி, சிற்றின்பங்களையும், பொருள் சேர்ப்பதையும் இலக்காக கொள்ளகூடாது.

இந்தியாவில் ராமாயணம், மகாபாரதம் போன்ற பெருங்காப்பியங்கள் நீக்கி விட்டால், இந்தியாவே இல்லை. நமது நாட்டின் இரு கண்களை போன்ற இந்தக் காப்பியங்கள் ஒருங்கிணைந்து இதிகாசங்கள் என்று அழைக்கப்படுகின்றன. அவை எந்த ஒரு குறிப்பிட்ட சமயத்தையோ கருத்துப் பள்ளியையோ சார்ந்தவை அல்ல. அவை நமது பண்பாடு மற்றும் பாரம்பரியத்துடன் ஆழமாக பிணைக்கப்பட்டுள்ளவை. நம் நாட்டின் ஒவ்வொரு கிராமத்திலும் ராமாயணமும், மகாபாரதமும் படிக்கப்பட்டு விவாதிக்கப்படுகின்றன. இவற்றின் முக்கியத்துவம் என்னவென்றால், அவை ஏதோ ஒரு காலத்தில் நடந்து முடிந்தவற்றையோ அல்லது இனி நடைபெற முடியாதவற்றையோ குறிப்பிடுவன  அல்ல. இந்த இரு காப்பியங்களும் உயிருள்ளவை, அவை இன்றும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. ஒவ்வொருவருடைய வாழ்விலும் தினந்தோறும் மகாபாரத நிகழ்ச்சிகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. பகவத் கீதையில் கூறப்பட்டுள்ளவை ஒவ்வொரு நாளும் உண்மையாக உணரப்படுகின்றன.

கிருஷ்ண பகவானின் பிறந்த நாள் ஜன்மாஷ்டமியாகக் கொண்டாட படுகின்றது. கிருஷ்ண பகவான் என்று குறிப்பிடப்படுவது ஆனந்தம் (பேரானந்தம், தூய மகிழ்வு). எந்தக் கொண்டாட்டத்திலும் நாம் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றோம்.ஜன்மாஷ்டமி என்பது பேரானந்தத்தின் பிறப்பைக் குறிப்பதாகும். இந்த நாளில் தான் தெய்வீக ஆனந்தம் வெளிப்படுத்தப்பட்டது. உண்மையில் பிறப்பு என்னும் சொல் கூடச் சரியல்ல. கிருஷ்ண பகவானுக்கு பிறப்பு என்பது கிடையாது. பேரானந்தம் எப்போதுமே இருக்கின்றது. அது (கிருஷ்ண பகவான் உருவில்) வெளிப்படுத்தப்பட்டு தெளிவாக தெரிந்தது இந்த நாளில் தான். நாம் கிருஷ்ணரை எங்கு தேட வேண்டும்? எங்கிலும்! ஒருவன், எல்லோரிடத்திலும் என்னை காண்கிறானோ மற்றும் என்னிடத்தில் எல்லோரையும் காண்கின்றானோ, அவனே புத்திசாலி. இவ்வுலகில் யாருமே முட்டாளாக இருக்க விரும்புவதில்லை. எல்லோருமே புத்திசாலியாக இருக்கவே விரும்புகின்றார்கள். யார் பரமாத்மாவை (எங்கும் நிறை பரப்ரம்ம விழிப்புணர்வு) படைப்பின் வெளிப்பாடுகள் அனைத்திலும் காணப்படும் ஆனந்த தத்வம் (பேரானந்தம்) என்று அறிகின்றானோ அவனே புத்திசாலி. இதுதான் ஜன்மாஷ்டமியின் சிறப்புச் செய்தி. இதற்கு ஒருவனுக்கு என்ன தேவை? குழந்தை போன்று களங்கமில்லாத மனம் வேண்டும்.போலேபவாமிலேரகுராய்’’ (களங்கமில்லாத தூய்மையான உணர்வுகளுடன் இறைவனை அடைதல்) என்று கூறப்பட்டுள்ளது.

இன்றைய ஞானச் செய்தி: நாம் கருத்தூன்றிக் கொண்டாடி மகிழ வேண்டிய காலம் வந்து விட்டது! (சிரிப்பு). நீங்கள் ஆழ்ந்த ஓய்வின் மூலம் தான் ஸ்ரீ கிருஷ்ணரை உணர முடியும். உங்கள் போராட்டங்கள், முயற்சிகள் மூலம் உணர முடியாது. எப்போது உங்களால் ஆழ்ந்த ஒய்வு எடுக்க முடியும்? எப்போது உங்கள் மனம் ஜுரவேக ஆசைகள்விருப்பங்கள், வெறுப்புகள் இவற்றால் அலைக்கழிக்கப்படாமல்அமைதியற்று இல்லாமல் உள்ள நிலை ஏற்படுகின்றதோ அப்போது தான் ஆழ்ந்த ஒய்வு உண்டாகும். அந்த கணங்களில் தான் ஸ்ரீ கிருஷ்ணரின் பிறப்பை (தெய்வீகப் பேரானந்தத்தை) காண முடியும்.

ஸ்ரீ கிருஷ்ணரின் பிறப்பை ஆன்மீகக் கண்ணோட்டத்தில் காண வேண்டும். தேவகி (ஸ்ரீ கிருஷ்ணரின் தாய்) ஸ்தூல உடலைக் குறிப்பிடுவது. வசுதேவர் (ஸ்ரீ கிருஷ்ணரின் தந்தை) உயிர்ச்சக்தியை (ப்ராணா) குறிப்பிடுவது. உயிர்ச்சக்தி உடலில் பாய்ந்தோடும் போது ஆனந்தம் (ஸ்ரீ கிருஷ்ணரைக் குறிப்பது) பிறக்கின்றது. அந்த நேரத்தில், தான் என்னும் அகங்காரம் (கம்சன்-கிருஷ்ணரின் தாய் மாமன் மற்றும் தீய அரசன்) இந்த ஆனந்தத்தை அழிக்க முற்படுகின்றது. எங்கு மகிழ்ச்சி இருக்கின்றதோ அங்கு அகந்தை இருக்கமுடியாது. மகிழ்ச்சி நிறைந்த ஒருவன் யாரிடமும் தவறாக நடந்து கொள்ள மாட்டான். அப்படிப் பட்டவன் பிறருக்குத் தொல்லை தந்து அவர்களை துன்புறுத்த மாட்டான். பிறருக்கு துன்பம் தருபவன் ஏதோ ஒரு விதத்தில் தானே காயப்பட்டு வருந்திக் கொண்டிருப்பான். அப்படிப்பட்டவன் தன்னைச் சுற்றி இருப்பவர்களுக்கு துன்பம் விளைவித்துக் கொண்டிருப்பான்.

அநீதியை அனுபவித்த ஒருவன் பிறரையும் அநீதியுடன் துன்புறுத்தி  கொண்டிருப்பான். நிறைவுடனும் மகிழ்வுடனும் உள்ள ஒருவன் எங்கும் யாருக்கும் தீங்கிழைக்க மாட்டான். பிறர் பொருளை அபகரிக்க மாட்டான். எனவே ஞானம், மகிழ்ச்சி மற்றும் அன்பு, இவை அகந்தையின் எதிரிகள். ஸ்ரீ கிருஷ்ணர் அன்பு மற்றும் ஆனந்தத்தின் குறியீடு. அன்பிருக்கும் இடத்தில் எவ்வாறு அகந்தை பிழைத்திருக்க முடியும்? அன்பு என்றால் அகந்தைக்கு பயம். வேறொன்றும் இல்லை. அன்புக்கு அகந்தை, தலை வணங்க வேண்டும். உலகில் எப்படிப் பட்ட வீர புருஷனும் தனது குழந்தையின் அன்புக்கு முன் கரைந்து விடுவான். மிகுந்த தைரியசாலி கூட தனது  குழந்தை உடல் நலமற்று இருந்தால், தன்னுடைய குழந்தை மீதுள்ள அன்பினால் கரைந்துருகி விடுவான். இயல்பாகவே கவலை மேலோங்கும். அன்பு, மகழ்ச்சி, இயல்புத்தன்மை எல்லாமே அகந்தையின் எதிரிகள். ஸ்ரீ கிருஷ்ணர் எதை குறிக்கிறார்? ஆனந்தம் மகிழ்ச்சி மற்றும் இயல்புத்தன்மை ஆகியவற்றின் குறியீடாகின்றார். பேரானந்தத்தின் மூலாதாரமும் அவரே.

அதனால் தான் அகந்தைக்கும் அன்புக்குமிடையே போர் ஏற்படும் போது அகந்தை கரைந்து, மறைந்து அன்பு உள்ளிருந்து மலருகின்றது. கம்சன் அகந்தையை குறிப்பிடுவது, அது இந்த உடல் பிறக்கும் போதே தோன்றி விடுகின்றது. தேவகி (இவ்வுடல்) கம்சனின் சகோதரி. ஸ்ரீகிருஷ்ணர் சிறைச் சாலையில் பிறக்கும் போது, சிறைக் காவலர்கள் அனைவரும் உறங்கி விட்டனர். மகிழ்வும் ஆனந்தமும் (ஸ்ரீகிருஷ்ணர்) இல்லாத போது  இந்த உடல் ஒரு சிறைச் சாலை போன்று தோன்றுகிறது. எப்போது அன்பு (ஸ்ரீகிருஷ்ணர்) சிறையில் (உடல்) தோன்றுகிறாரோ அப்போது அத்தனை புலன்களும் (சிறைக் காவலர்கள்) உறங்கிக் கொண்டிருக்கின்றன. ஐம்புலன்கள் (கண்கள், செவிகள், மூக்கு, நாக்கு மற்றும் தோல்) உடலின் காவலர்கள், எப்போதும் வெளியிலேயே இன்பத்தை தேடுபவை. உண்மையில் அவைகள் கம்சனின் (அகந்தை) காவலர்கள். ஒருவன் உள்நோக்கி, இன்பத்தின் மூலாதாரத்தை தேடி, அங்கு பிறக்கும் பேரின்பத்தை (ஸ்ரீகிருஷ்ணர்) காணும் போது, புலன்கள் உறங்கி விடுகின்றன. பிறந்தவுடன் ஸ்ரீ கிருஷ்ணர், ஆதரவு மற்றும் பாதுகாப்பு (கம்சனிடமிருந்து) இவற்றின் காரணமாக, வேறொரு இடத்திற்கு அழைத்து செல்லப் பட வேண்டியிருந்தது. எனவே விருந்தாவனத்தில் இருந்த நந்தா மற்றும் தேவி யசோதாவின் இல்லத்திற்கு சென்றார். இந்தக் கதைகளை நீங்கள் ஆழ்ந்து கவனித்து படித்தால், அவற்றிலுள்ள சிறந்த ஆன்மீகக் கருத்துக்களையும், பண்புகளையும் புரிந்து கொள்ளலாம். ராமாயணம் அல்லது மகாபாரதம், எதை எடுத்துக் கொண்டாலும்அதில் கூறப்பட்டுள்ள கதைகள் அல்லது நிகழ்வுகளின் முக்கியத்துவம் மற்றும் உள்ளுறை நீதிகள், குறிப்பிட்ட இடத்திற்கோ, அல்லது காலத்திற்கோ மட்டும் வரையறுக்க பட்டவை அல்ல.

கே: குருதேவ்! கிருஷ்ண பகவான் எதற்காக மயில் இறகை தன் கிரீடத்தில் வைத்திருக்கிறார் என்று உங்களுக்கு தெரியுமா? 

குருதேவ்: உங்களில் எவ்வளவு பேருக்கு இதன் பின் உள்ள ரகசியம் தெரியாது. கிருஷ்ண பகவான் எப்போதும் நேராக நிற்பதோ நடப்பதோ கிடையாது. ஒரு கால் தரையில் முழுவதுமாக ஊன்றியிருக்கும், மற்றொரு கால் சற்று மேலாக நுனிக்கால் மட்டும் தரையை தொட்டவாறு இருக்கும், அவர் அப்படித் தான் நின்றிருப்பார் ஆனால் நேராக பார்த்துப் பேசுவார். எதற்காக மயிலிறகு கிரீடத்தின் மேல் உள்ளது. பொதுவாக கிரிடம் மிகவும் பளுவானது. அது அதிக பொறுப்புகளை குறியிட்டு காட்டுகிறது. கிரீடம் அணியும் ஒருவர் இந்த முழு சமுதாயத்திற்கு பொறுப்பானவர். எனவே கிரீடம் அணிந்திருப்பவருக்கு அது மிகப்பெரிய சுமை ஆகும். சமுதாயத்தில் ஏதாவது தவறாக நடந்து விட்டால் நீங்கள் யாரை அதற்கு பொறுப்பாக்குகிறீர்கள்?.

நீங்கள் அரசரை இந்த சமுதாயத்திற்கு பொறுப்பாக்குகிறீர்கள் இல்லையா? அரசரின் தலையில் உள்ள கிரீடம் அந்த பொறுப்பின் சுமையை எடுத்துக் காட்டுகிறது. ஆனால் நீங்கள் அந்த பொறுப்புகளையும் கடமைகளையும், மயிலிறகைப் போல லேசாகவும் அதிக முயற்சியின்றியும் செய்யும் போது உங்களுக்கு அந்த சுமை தெரியாது. மயிலிறகை கிரீடத்தின் மேல் வைத்திருப்பதன் அர்த்தம் இதுவே. பலவிதமான பொறுப்புகளையும் எவ்வித சுமையும் இன்றி தாங்கிக் கொள்ளுவதையே இது குறியிட்டுக் காட்டுகிறது.
 
இறைவன் எப்போதுமே அவருடைய படைப்புகளை அவருக்கு ஒரு சுமையாக எண்ணுவது  கிடையாது. ஒரு தாயும் எப்போதும் தன்னுடைய குழந்தைகளை ஒரு சுமையாக எண்ணுவது இல்லை. அது போலவே தான் யோகேஸ்வரர் (யோகிகளுள் சிறந்தவர்) என்று அழைக்கப்படும் கிருஷ்ண பகவானும் எப்போதுமே பொறுப்புகளை சுமையாக எண்ணுவது இல்லை. ஒவ்வொரு பொறுப்புமே லேசானவையும் சுலபாமானவையும் ஆகும். அதனால் தான் அவருடைய கிரீடம் ஒரு மயிலிறகால் அழகுபடுத்தப்பட்டுள்ளது. மயிலிறகு பல வண்ணங்களை கொண்டிருப்பது போல் அவரும் பல பொறுப்புகளை ஏற்றுக் கொண்டுள்ளார். ஆனால் அவை அவருக்கு ஒரு சுமையே அல்ல. அவை யாவுமே ஒரு விளையாட்டாக தோற்றமளிக்கின்றன.

கிருஷ்ண பகவானின் பல பெயர்களுள் ஒன்று வெண்ணெய் திருடன் என்பது. நமக்கு பாலில் இருந்து தயிரும், தயிரில் இருந்து வெண்ணெயும் கிடைக்கின்றன. பால் திரவ வடிவானது. ஊட்டச்சத்து மிக்கது. அதிலிருந்து நமக்கு சற்று கெட்டியான தூய்மை படுத்தப்பட்ட தயிர் கிடைக்கிறது. தயிரை கடைவதன் மூலம் நமக்கு வெண்ணெய் கிடைக்கிறது. வெண்ணெய் திரண்டு வரும் போது அது நீரின் மேற்புறத்தில் மிதக்கின்றது. பாத்திரத்தின் அடிப்பகுதிக்கு மூழ்கி செல்வது இல்லை. எனவே அது மிகவும் லேசானது மற்றும் ஊட்டச்சத்து மிக்கது ஆகும். நமது அறிவாற்றலும் வெண்ணெய் போலவே  தூய்மைப்படுத்தப்படும்போதும் முதிர்ச்சியடையும் போதும், நாம் அறிவாற்றலில் மலரும் போதும் 'ஸ்திதப்ராஜ்னா' (எப்போதும் அமைதியான மன நிலையில் இருப்பவர்) ஆகிறோம். ஆனால் மிக அமைதியாக இருக்கின்ற ஒருவரின் மனதையும் இதயத்தையும் கூட திருடக் கூடிய ஒருவர் கிருஷ்ண பகவானே. கிருஷ்ண பகவான் சுத்தமான ஈர்ப்புடையவர். மிகவும் அறிவாற்றலும் புத்தி கூர்மையும் உள்ளவர்களையும் கூட ஈர்க்கக்கூடிய மற்றும் கவரக் கூடிய திறமை உள்ளவர் கிருஷ்ண பகவான் ஒருவரே. சிறிதும் உணர்ச்சி வசப்படாத மற்றும் பற்றற்ற முனிவர்களையும் கூட கவரக் கூடியவர் கிருஷ்ண பகவான். 

அறிவாற்றலில் வெண்ணெய் போல பழுத்த நிலையில் உள்ளவர் ஒரு புத்திசாதுரியம் மிக்க முனிவர் ஆவார். கிருஷ்ண பகவான் அத்தகையவரின் மனதையும் இதயத்தையும் கவரக் கூடியவர் ஆவார். அதனால் தான் அவர் வெண்ணெய் திருடன் என்று அழைக்க படுகிறார். கிருஷ்ண பகவான் மட்டுமே, சிறிதும் உணர்சிவயப்படாத அறிவார்ந்தவர்களின் இதயத்தையும் உருக்கி அவர்கள் மனதையும் கிண்டக்கூடியவர். அதை அவரால் எப்படி செய்ய முடிகிறது? அன்பு செலுத்துவதன் மூலமாகவே. 
                                 
சரி, நீங்கள் அனைவரும் இப்போது 'க' என்ற எழுத்தை 'அ' என்ற ஒலியை சேர்க்காது உச்சரிக்க முயற்சி செய்யவும்.(கூட்டத்தில் இருப்பவர்கள் முயற்சி செய்து பின்னர் விட்டு விடுகிறார்கள்) நீங்கள் எவ்வளவு தான் முயன்றாலும் உங்களால் முடியவில்லை அல்லவா? அவ்வாறு செய்ய முடியுமா? கண்டிப்பாக முடியாது. 'க' என்று சொல்ல முயலும் போதே நாம் அந்த  ஒலி  எங்கு தோன்றுகிறதோ அந்த இடத்திற்கு அழைத்து செல்லப்படுகிறோம். அதுவே பிரம்மன் என்கின்ற தொடக்கம். ஒலியும் சப்தமும் திரும்ப செலுத்தப்படுகின்ற இடமே அது. ஏனென்றால் பிரம்மன் அல்லது ஆத்ம தத்துவத்தை (அனைத்து படைப்புகளிலும் பரவி இருக்கும் அடிப்படையான மூலம் போன்ற ஆன்மா) சப்தம் அல்லது வார்த்தைகள் மூலம் அடைய முடியாது.

பிரம்ம வெளியில் உதறல் எடுக்கும் மனம் கூட ஒய்வு கொள்ளுகிறது. அங்கு ஒலியோ குரலோ இல்லை. ஆழ்ந்த அமைதி பெற்ற ஒரு நிலை. அந்த நிலையில் ஒருவர் ஆழ்ந்த  தியானத்திற்கு சென்று விடுவார். நீங்கள் உங்களுள் ஒருவராகி விடுவீர்கள். எனவே 'அ' ஒலியில்லாமல் 'க' என உச்சரிக்க முயற்சி செய்வதே ஒரு தியானம் போன்றது. நீங்கள் அனைவரும் இதை படுக்கச் செல்லுவதற்கு முன்போ அல்லது காலையில் படுக்கையில் இருந்து எழுந்த உடனோ அல்லது பகலில் எதாவது ஒரு நேரத்திலோ முயற்சி செய்ய வேண்டும். அதை செய்ய முயன்று கொண்டிருக்கையில் உங்கள் மனம் மற்றும் புத்தியில் என்ன ஏற்படுகிறது என்பதை கவனிக்கவும்.மிக விரைவாக உங்களை சுற்றி அனைத்துமே அசையா நிலைக்கு வந்து விடுவதையும் ஒரு ஆழ்ந்த அமைதி ஏற்படுவதையும் காணலாம்.

அந்நிலையில் நீங்கள் வியப்பில் ஆழ்ந்து விடுவீர்கள். அழகிய பாமரத்தன்மையும் உங்களுக்குள் உதிக்கும். நீங்கள் சிறு வயதினராக இருந்த போது, கேட்கின்ற அனைத்து வார்த்தைகளையும் அப்பாவித்தனத்துடன் உச்சரிக்க  முயற்சி செய்து கொண்டே இருப்பீர்கள். நீங்கள் அத்தகைய நிலைக்கு திரும்புவதன் மூலமாக, வார்த்தைகள் மற்றும் ஒலிகள் எங்கு தோன்றினவோ அந்த மூலத்திற்கு அழைத்து   செல்லப்படுவீர்கள்.  

பகவத் கீதையில், கிருஷ்ண பகவான், " யோகா பற்றி ஆராய்ந்து அறியும் எண்ணம் உடைய ஒரு புத்திசாலி கூட இறுதியில் வார்த்தைகளுக்கு அப்பால் எல்லை கடந்து அவைகளுடைய மூலத்தை அடைகிறார்" என்று கூறுகிறார். உலகம் முழுவதும் உள்ள மக்கள் பலர் நம்முடன் இணைந்து ஆயிரக்கணக்கான வாழும் கலை மையங்களில் நடைபெறும் கொண்டாட்டங்களை பார்க்கின்றனர். இவ்வுலகில் நாம் னைவரும் ஒன்று சேர்ந்து ஜன்மாஷ்டமியை கொண்டாடுகிறோம். நாம் சமுதாயத்தில் இது போன்ற ஆனந்த அலைகளை ஏற்படுத்த வேண்டும். இது நம் அனைவருடைய கடமை ஆகும். 

கே: குருதேவ்! கிருஷ்ண பகவான், காலத்தை வென்று தொடக்கமும்,முடிவும் இல்லாமல் நிலைத்து நிற்பதன் பின் உள்ள ரகசியம் என்ன? காலம் வேகமாக சென்று கொண்டே இருக்கும் போது கூட கிருஷ்ண பகவான் மக்கள் மனதில் நிலைத்திருக்கிறார்.

குருதேவ்: ஆம், இது நீங்கள் உங்கள் மனதில் விரிவாக்க படுதிக்கொள்ளகூடிய ஒரு ரகசியம் ஆகும். இதை நீங்களே கண்டுபிடிக்க வேண்டும். உண்மையே நிலையானது. உண்மையே இறுதியில் வெற்றி பெறும். அது அழிக்க முடியாதது. அதனால் தான் கிருஷ்ண பகவான் 5100 ஆண்டுகளுக்கு பின்னும் வாழ்ந்து வருகிறார். இது ஏன் இப்படி? மக்கள் கிருஷ்ண பகவானை ஒரு போதும் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கோ ஒரு குறிப்பிட்ட காலத்திற்கோ உட்படுத்திக்கொள்ளவில்லை.

கிருஷ்ண பகவான் நிலையானவர் முடிவில்லாதவர் (சனாதன்). முதலும் முடிவும் இல்லாதவரே “சனாதன்” என அழைக்கப்படுவர். எப்போதும் நிலைத்திருப்பது மற்றும் காட்சியளிப்பது என்பதே அதன் பொருள். அது எங்கே தொடங்கியது என யாருக்கும் தெரியாது. கிருஷ்ண பகவான் கொடுத்தது அத்தகைய அறிவே.

கிருஷ்ண பகவான் அர்ஜுனனிடம் "நீயும் நானும் பல பிறவிகள் எடுத்துள்ளோம். நான் அவைகளை ஞாபகத்தில் வைத்துள்ளேன். ஆனால் நீ அவைகளை ஞாபகத்தில் வைத்திருக்கவில்லை. நாம் இருவருமே ஆரம்பமற்றவர்கள். நாம் எத்தனை முறை மனித வடிவம் கொண்டோம்? எத்தனை பிறவிகள் எடுத்தோம்? என்று யாருக்கும் தெரியாது. நாம் இவ்வுலகில் வந்துள்ளோம். நாம் இங்கிருந்து சென்று விடுவோம். நாம் மறுபடியும் வருவோம்". 

கே: குருதேவ், பகவத் கீதை 17ம் அத்தியாயம் 27வது ஸ்லோகத்தில் கிருஷ்ண பகவான் தான்தான் பரப்ரம்ஹதிற்கு மூல காரணம்(எங்கும் நிறைந்த உணர்வுகள்), மற்றும் அதன் இருப்பிடம் என்று சொல்லி இருக்கிறார் இது பல கல்வி மான்களிடையே குழப்பதை ஏற்படுவதாய் இருந்தது. ஆதி சங்கராச்சார்யா விற்கும் குழப்பதை ஏற்படுத்தியது. தயவு செய்து இது பற்றி சிறிது தெளிவுபடுத்தவும்

குருதேவ்: கிருஷ்ண பகவான் மூன்று வெவ்வேறு வழிகளில் ஞானத்தை கொடுத்தார். பிரத்ம்புருஷ் (பிரதாம்புருஷ்) (முதல்வர் என்று அர்த்தம்) மத்யம்புருஷ் (இரண்டாமவர் என்று அர்த்தம்) உத்தம் புருஷ் (அதாவது பற்றற்ற நிலையில் இருந்து பார்க்கும் மனிதராகவும்). அதனால் கிருஷ்ண பகவான் கடவுளை பற்றி பேசும்பொழுது "அவருடைய","அது","அவர்" என்றும், மற்றும் சில சமயங்களில் "நீ", "உன்னுடையது" என்றும், பல் வேறு சமயங்களில் பரமாத்மாவை பற்றி கூறும்பொழுது "நான்," "  என்னுடையது" என்றும் கூறுகிறார். 

அதனால் நாம் "தத்வமசி" (அதாவது " நீதான் அது") என்று கூறுகிறோம். மேலும் நாம்   சர்வகல்விதம் பிரம்மாசி" (அதாவது எல்லாமே பிரம்மா தான்) என்றும் கூறுகிறோம் .  தத்வமசி என்றால் "நீ தான் அது" என்று அர்த்தம். அந்த "அது" (ஆத்மா)  உன்னுள்ளேயே இருக்கிறது. மேலும் நாம் "அஹம் பிரம்மாஸ்மி" (அதாவது நானே தான் பிராமன்) என்றும் கூறுகிறோம். அதனால் சில சமயம் கிருஷ்ண பகவான் "வா , என்னிடம் வந்து சரணடை" என்று கூறுகிறார். வேறு சில சமயங்களில் "கடவுளிடம் சரணடை" என்று கூறுகிறார். இரண்டும் சரியானது தான். ஒரு குருவின் பணியே இந்த பாதையில் இருப்பவனை முன்னோக்கி அழைத்து செல்வது தான்.

தன்னுடைய விஸ்வரூப தரிசனத்திற்கு முன்பு கிருஷ்ண பகவான் அர்ஜுனனிடம் இவ்வாறு கூறுகிறார். "இஷ்வரம் சர்வ பூதானாம் ஹரித தேஷே அர்ஜுன திரிச்தடி ப்ரமையன் சர்வ பூதானி யந்த்ர உதாணி மையாய"

கிருஷ்ண பகவான் சொல்கிறார் "கடவுள் எல்லாருடைய இதயத்திலும் வசிக்கிறார்" என்று. பிறகு அர்ஜுனனுக்கு விஸ்வரூப தரிசனம் காட்டிய பிறகு எல்லாமே அவருள் வசிப்பதை உணர்த்துகிறார். "எல்லாவற்றையும் துறந்து விட்டு என்னிடம் மட்டுமே வந்து சரணடை" என்கிறார். கீதைக்கு ஆயிரம் விளக்கங்கள் (தீகா) இருக்கின்றன. ஆனால் இவற்றில் முக்கியமான விஷயம் "உண்மை என்பது ஒன்று தான்" என்பதே. அந்தந்த காலகட்டத்திற்கு ஏற்றவாறும் மனித குலத்தின் அவசியத்திற்கு ஏற்றவாறும்

இதை பல்வேறு விதங்களில் விளக்கியிருக்கிறார்கள். கீதையில் ஆரம்பித்திலிருந்து கடைசி வரை முரண்பாடுகள் உள்ளன. அர்ஜுனன் கூட கிருஷ்ணனிடம் சொல்கிறார் "இந்த துன்பங்களிலிருந்து விடுபட ஒரே ஒரு நிச்சயமான வழி இருந்தால் கூறவும். பல்வேறு வழிகளை கேட்டு நான் மிக குழப்பத்தில் உள்ளேன். நீங்கள் ஒரு சமயம் ஒரு வழியும் அடுத்த சமயம் இன்னொரு வழியையும் கூறி என்னை மேலும் குழப்பத்தில் ஆழ்த்துகிறீர்கள். பகவத்  கீதை மட்டும் தான் ஒரு மனிதனை படிப்படியாக இறைவனை நோக்கி, நம் ஆன்மாவை நோக்கி செல்வதற்கான சிறந்த வழியை காட்டுகிறது.வேறு எந்த பாடமும் கீதைக்கு சரி சமமானது இல்லை. இத்தனை முரண்பாடுகளுக்கு இடையேயும் ஒருவனை அந்த அழியாத உண்மையை நோக்கி செல்ல உதவுகிறது.

கே: குருதேவ்! இராமாயணத்தில் இராவணன் சீதையை அபகரித்தான். மகாபாரதத்தில்  ருக்மணி தேவியை சிசுபாலனை மணக்கும்படி வற்புறுத்தும் போது கிருஷ்ண பகவான் ருக்மணி தேவியை அபகரிக்கிறார். கடவுள் கிருஷ்ணனாக அவதாரம் எடுத்தபொழுது இராவணன் சிசுபாலனாகவும், சீதா தேவி ருக்மணி தேவியாகவும் அவதாரம் பெற்றார்கள். கர்ம விதியின் சம்பந்தம் இதிலும் உள்ளதா ?

குருதேவ்: “கஹநோகர்மனோ கடித்” என்று சொல்வதுண்டு. அதாவது கர்மாவின் வழிகளை அளப்பது என்பது முடியாது. கர்மாவின் வழிகளும் வேகமும் மிகவும் மர்மமானது. அளக்க முடியாதது. ஒருவராலும் புரிந்து கொள்ள முடியாதது.

கே: குருதேவ்! ட்விட்டரில் "இந்த கால கட்டத்தில் நம்மை சுற்றி கணக்கற்ற துட்சாதனர்களும், சகுனிகளும் இருக்கிறார்கள். அவர்களுக்கு உரிய சரியான இடத்தை இந்த சமுதாயத்தில் காட்ட வேண்டும்” என்று எழுதியுள்ளீர்கள். யார் துட்சாதனர்கள்? யார் சகுனிகள்? அவர்களுக்கு உரிய சரியான இடம் எது?


குருதேவ்: ஊகிப்பதை உங்களிடமே விடுகிறேன். அனைத்து துட்சாதனர்களும் சகுனிகளும் இருக்க வேண்டிய இடம் கிருஷ்ணர் பிறந்த இடம் (சிறைச்சாலை) புரிந்ததா? சிறைச்சாலை தான் இவர்களுக்கு உரிய சரியான இடம். நீங்களும் அவ்வாறே நினைக்கிறீர்களா?