நிபந்தனையற்ற அன்பு

12 - ஆகஸ்ட் 2013 - பெங்களூரு, இந்தியா



குருதேவ், இருவருக்குள் அன்பு நிலவும் போது திருமணம் செய்து கொள்ள முடிவெடுக்கிறார்கள். திருமணத்திற்குப் பின் இந்த அன்பு காணாமல் போவது ஏன்?

குருதேவ்: இந்த விஷயத்தில் நான் ஏதும் சொல்ல முடியாது. இதில் அனுபவமில்லை! (சிரிப்பு)  திருமண அனுபவமுமில்லை,அன்பு காணாமல் போன அனுபவமுமில்லை!அவனிடமிருந்தோ அல்லது அவளிடமிருந்தோ ஏதாவது ஆதாயம் தேடும் நோக்கில் அன்பு வைத்தால், பின்னர் நிச்சயம் அந்த வகை அன்பு காணாமல் போகும். ஆனால், இதற்கு மாறாக, மற்றவருக்கு ஏதாவது கொடுக்க வேண்டும் அல்லது செய்ய வேண்டும் என்ற ஆழமான உணர்விருந்தால், பின்னர் அப்படிப்பட்ட அன்பிற்கு முடிவே இல்லை. நீங்கள் இவரிடமிருந்து எனக்கு என்ன கிடைக்கும்?’, பின்னர் அன்பின் பெயரால் அவரிடமிருந்து ஏதாவதை பெறுவதற்கான போட்டியிலும் போராட்டத்திலும் தான் இருப்பீர்கள். அப்படிப்பட்ட அன்பு ஒரு நாளில்லை ஒரு நாள் முடிந்து தான் தீரும்.

ஆனால், நீங்கள் கொடுப்பவராய் இருந்தால், மற்றவருக்கு எப்படி இன்னும் வசதி செய்து கொடுக்கலாம் என்று எண்ணுபவராய் இருந்தால், பிறகு அப்படிப்பட்ட அன்பு காலத்தை விஞ்சி நிற்கும். நீங்கள், ‘எப்படி என் கணவரை (அல்லது மனைவியை) மகிழ்ச்சியாய் வைத்துக் கொள்வது?’ என்று நினைத்தால், பிறகு அந்த அன்பு நிலைக்கும். மேலும், இந்த எண்ணம் தம்பதியினர் இருவருக்கும் இருக்க வேண்டும். அப்போது மட்டுமே இருவருக்குமிடையே உள்ள அன்பு முடிந்து விடாமல் இருக்கும். வாழ்க்கையில் இருவருக்கும் ஒரே இலக்கு இருக்க வேண்டும். இரண்டு கோடுகள் எதிரெதிர் திசையில் சென்றால் பின்னர் அவை குறுக்கிட்டுச் செல்லும் (அதாவது அன்பைத் தொடருவது பெரும் போராட்டமாய் இருக்கும்). ஆனால் இருவரும் ஒன்றாகச் சென்றால், ஒரே இலக்கை நோக்கிச் சென்றால், பிறகு அந்த அன்பு எப்போதும் தொடர்ந்தபடி இருக்கும். புரிந்ததா?

குருதேவ், மதத்தை பின்பற்றாமல் நான் ஆன்மீகத்தில் இருக்க முடியுமா? தர்மம் (மதத்தை பின்பற்றுவது) அவசியமா?

குருதேவ்: ஆன்மீகம் மதத்தின் ஒரு அங்கம். ஆன்மீகம் எல்லோரையும் ஒன்றிணைக்கிறது. அது ஒரு உள்ளார்ந்த அனுபவம். எல்லா மதங்களின் சாரமும் அதுவே. மதத்தை சாராமல் நான் ஆன்மீகத்தில் இருப்பேன் என்று நீங்கள் சொன்னால், அது இயலாது. நம் வாழ்விலும் சமூகத்திலும், மதத்திற்கு என்று ஒரு இடம், அதற்கென்று ஒரு முக்கியத்துவம் இருக்கிறது. ஆன்மீகத்திற்கும் அதற்கென்று ஒரு இடம் இருக்கிறது. அதைத்தான் நாம் அனைவரும் புரிந்து கொண்டாக வேண்டும். இது எல்லோருடைய இதயங்களையும் ஒன்றாக இணைக்கிறது. பழக்கங்கள், மரபு மற்றும் சடங்குகள் மதத்தின் ஒரு முக்கிய அங்கம். இதுவும் ஒரு ஆரோக்கியமான சமுதாயத்திற்கு முக்கியம். ஆனால் உள்ளங்களை மற்றும் ஆத்மாக்களை இணைக்கும் கலை ஆன்மீகத்தில்தான் உள்ளது. இதும் முக்கியமே.

குருதேவ்: ஆணவம் கொண்டிருப்பவரால், தானும், அவரின் குடும்பத்தினரும் அவரது ஆணவத்தினால் மூழ்குகிறார்கள். ஆணவத்தை ஒதுக்க அன்பு தான் தீர்வு என்று நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள். ஆனால் குருதேவ், ஆணவம் கொண்ட மனிதரிடம் எனக்கு உள்ளிருந்து எந்த அன்பும் வரவில்லை. இதற்கு ஒரு தீர்வை தயவு செய்து சொல்லுங்கள்.

குருதேவ்: யாராவது ஆணவம் கொண்டவராய் இருந்தால், அவர் அப்படியிருப்பது அவருடைய அறியாமையினால் மற்றும் புரிதல் இல்லாமையால். அவருடைய அறியாமை மீதும் அறிவிலித்தனமான நடத்தை மீதும் கோபம் கொண்டீர்களானால், நீங்களும் அவரைப் போல அறியாமையும் அறிவின்மையும் கொண்டவர் ஆவீர்கள். அதனால் தான் அவர்களிடம் பரிவு காட்ட வேண்டும். அவரின் இந்த நடத்தைக்குக் காரணம் அவருக்கு அந்த அறிவு இல்லை அல்லது அந்த விழிப்புணர்வு இல்லை, மற்றும் தன்னுடைய ஆணவத்தினாலேயே அவர் மூழ்கி கொண்டிருக்கிறார் என்பதை நீங்கள் உணர வேண்டும். இதைத் தெரிந்து கொள்வதால், குறைந்தபட்சம் உங்கள் மனம் கோபத்தின் விளைவிலிருந்து காப்பாற்றபடும். இல்லையென்றால், யாருடைய முட்டாள் தனத்தினாலோ உள்ளேயிருந்து வரும் கோபத்தால் நீங்களும் எரியத் தொடங்கி உங்கள் மன அமைதியை எல்லாம் இழந்திருப்பீர்கள். அதில் என்ன பயன்?

குருதேவ், யாராவது இடைவிடாமல் நம்மை தொல்லை செய்யும் போது நாம் பொறுத்துக் கொள்ள வேண்டும், அந்த சூழ்நிலையில் என்ன செய்வது? நாம் எப்படி நம் பொறுமையை வளர்த்துக் கொள்வது?

குருதேவ்: இது உங்களுடைய தனிப்பட்ட பிரச்சினையா அல்லது மறைமுகமாக என்னிடம் கேட்கிறீர்களா? உங்களுடைய மறைமுகமான கேள்விக்கு நான் நேரடியாகப் பதில் சொல்ல வேண்டுமா? (சிரிப்பு) இது எப்படி முடியும்?

நீங்கள் சூழ்நிலையை கவனித்து அதற்குத் தக்கவாறு நடக்க வேண்டும். யாராவது உங்களை தொடர்ந்து தொந்திரவு செய்தால், ஒன்று நீங்கள் அங்கேயிருந்து விலகி விடுங்கள் அல்லது அந்த மனிதருடன் முரண்பட்டு நிற்கலாம். ஒருவர் செய்யும் கொடுமையை எப்போதும் பொறுத்துப் போக வேண்டும் என்று நான் அறிவுறுத்த மாட்டேன். உங்கள் புத்தியினாலும், சமயோசிதத்தினாலும், உறுதியினாலும் மற்றும் அன்பினாலும் அந்தச் சூழ்நிலையை மாற்ற முயல வேண்டும். 

வலிமையால் மட்டும் இதைச் செய்ய முடியாது. இதை உடல் வலிமையால் மாற்ற முடியும் என்று சொன்னால் அது இயலாது. மேலும், சமயோசிதத்திற்கும் புத்திசாலித்தனதிற்கும் தேவை உள்ளது. கடினமான கல்லைக் கூட அன்பால் உருக வைக்க முடியும். அன்பை கொண்டு நீங்கள் மாற்றத்தை உருவாக்க முடியும்.

குருதேவ், இந்த உலகம் ஒரு கண்ணாடி என்று பெரியோர்கள் சொல்லியிருக்கிறார்கள். நாம் என்ன செய்தாலும், நம் வாழ்கை நமக்கு அதைத் திருப்பிச் செய்யும். நல்லதையே செய்து வந்தாலும் கூட நல்லோர்கள் ஏன் துயரப்படுகிறார்கள்?

குருதேவ்: இது ஒரு விரிவான உரையாடல். இதை நான் ‘மௌனத்தை கொண்டாடுங்கள்’ என்ற நூலில் விரிவாக எழுதியிருக்கிறேன். அவர்கள் செய்த நல்லவைகளாலும் புண்ணியங்களாலும் ஆவர்கள் துன்பத்தை அனுபவிப்பதில்லை. வேறு பல காரணங்கள் இருப்பதை நாம் பார்க்க வேண்டும்.

குருதேவ், ஒரு மிக முக்கிய முடிவெடுக்கும் முன்னே வாழ்கை உப்படியே உறைந்து நிற்கிறது. என்னுடைய முடிவு சரியா தவறா என்பதில் எனக்கு அடிக்கடி சந்தேகம் ஏற்படுகிறது. நான் எப்படி முடிவெடுப்பது?

குருதேவ்: உங்கள் வாழ்க்கையில் கடந்த காலத்தை திரும்பிப் பாருங்கள். உங்கள் மனம் குழம்பி நிற்பது இது முதல் முறையல்ல. இதற்கு முன்னும் கூட பல முறைகள் இப்படிப்பட்ட கேள்விகளையும் சூழ்நிலைகளையும் நீங்கள் சந்தித்திருக்கிறீர்கள்; மற்றும் ஒவ்வொரு முறையும் அதை சமாளிக்க நீங்கள் உதவி பெற்றிருக்கிறீர்கள். மற்றும் எப்போது நீங்கள் உதவி கேட்டாலும், உங்களுக்கு அது நிச்சயம் கிடைக்கும். தக்க நேரத்தில் உங்கள் குழப்பம் விலகும். எனவே கவலை வேண்டாம்.

குருதேவ், குழந்தைகளுக்கு ஒரு வயது ஆனவுடன் மொட்டை போடும் சடங்கின் முக்கியத்துவத்தைப் பற்றி தயவு செய்து ஏதாவது கூறவும்.

குருதேவ்: குழந்தையின் முதல் முடியை எடுத்து விட வேண்டும் என்று நம் முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். பிறகு புதிய முடி முளைக்கும். குழந்தையின் முதல் பற்கள் எப்படித் தானாக விழுந்த பின்னரே வேறு பல் முளைக்கிறதோ அப்படியே தான் இதுவும். ஆனால், முதல் முடி நீக்கியாக வேண்டும்; பற்களைப் போல தானாக விழுவதில்லை. அவை மறுபடி வளர்ந்து விடுகிறது. இந்த உலகிற்கு வந்துவிட்டீர்கள்,உங்களுக்கென நிறைவேற்ற வேண்டிய பொறுப்புகள் இருக்கின்றன என்று நமக்கு நினைவூட்டுவது தான் இந்தப் பாரம்பரிய சடங்கு. உங்கள் வாழ்கை முடியும்வரை உங்கள் பெற்றோருக்குத் தொண்டு செய்யவும் கீழ்பணிந்து நடக்கவும் உங்களுக்குக் கடமை இருக்கிறது. இது தான் மொட்டை போடுவதின் முக்கியத்துவம். நம் வேத நூல்களின் படி, வாழ்கையின் வெவ்வேறு கட்டங்களில் அதனுள் புதிதாய்ச் செல்லும் போது செய்யக் கூடிய பதினாறு வித சடங்குகள் (ஷோடஷ சம்ஸ்கார்) இருக்கின்றன. நாமகரணம் அல்லது பெயர் சூட்டும் சடங்கும் அந்தப் பதினாறு சடங்குகளில் ஒன்றாகும்.

குருதேவ், ஆடி மாதம் பிறந்துவிட்டது. இந்த மாதத்தில் ருத்ர பூஜையின் முக்கியத்துவம் என்ன?

குருதேவ்: ஒவ்வொரு மாதத்துக்கும் ஒரு முக்கியத்துவம் உண்டு என்பதை நம் முன்னோர்களின் நூல்களைப் படித்தால் தெரிந்துகொள்ளலாம். ஒவ்வொரு மாதமும் அதன் வழியில் நல்ல புனிதமான மாதங்களே. ஆடி மாதத்தில் நல்ல மழை உண்டு. இந்த நேரத்தில் அமர்ந்து தியானம் செய்து இறைவனை நினைத்தவாறு இருக்க வேண்டும். இந்தியாவில் அந்த நாட்களில், மழை இருக்கும் போது செய்வதற்கு எந்த வேலையும் இருக்காது. வயல்களிலோ அல்லது வேறு சில வீட்டு வேலைகளோ செய்ய முடியாது. எனவே மக்கள் வீட்டிலே எதுவும் செய்யாமல் சும்மா உட்கார்ந்திருக்க வேண்டும். அப்படி சும்மா வீட்டில் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தால் சண்டை சச்சரவு தான் ஏற்படும். எனவே, அதற்கு பதில் உட்கார்ந்து தியானம் செய்து இறைவனை நினைக்க அறிவுறுத்தப்பட்டார்கள். உங்களைச் சுற்றி உள்ள எல்லாவற்றிலும் சிவ பெருமானைப் பார்க்கச் சொல்லியிருக்கிறார்கள். ஒவ்வொருவருடைய உள்ளத்தின் ஆழத்திலும் அமர்ந்திருப்பவர் சிவ பெருமான். அவர் நிர்குணன் (அதாவது வடிவமோ அல்லது குணங்களோ அற்றவர்). அவர் நிராகார் (உருவம் மற்றும் வடிவமற்றவர்), மற்றும் அவர் எல்லாவற்றிலும் விரவி இருக்கும் பர-ப்ரம்மஹம் (மிக உயர்ந்த மேலோங்கிய பேருணர்வு). அதில் நம்பிக்கை வை. அதுதான் ருத்ர பூஜை.

குருதேவ், சில நாட்களுக்கு முன்பு மாயை பற்றி உரையாடினீர்கள், நான் என்னுடைய மாமியாரை பற்றி நினைத்தேன். கடவுள் அவருக்கு எல்லாவற்றையும் அளித்திருக்கிறார். அருமையான வீடு, வேலையாட்கள், கார் மற்றும் என்னைப் போன்ற மருமகள். ஆனால், இவை எல்லாம் இருந்தும் அவர் முகம் எப்போதும் கடுமையாகவே இருக்கிறது. இதில் வியப்பு என்னவென்றால் அவர் பெயரும் மாயா தான். இப்போது எனக்கு மாயா என்றால் என்ன என்றும் தெரிகிறது. மாயாவிலிருந்து எப்படி விடிபடுவது என்று எனக்குத் தயவு செய்து சொல்லுங்கள். (சிரிப்பு).

குருதேவ்: நான் முதலில் ‘மாயா’ விடம் (அவருடைய மாமியாரைக் குறிக்கிறார்) கேட்டுப் பிறகு சொல்கிறேன். (சிரிப்பு). அவருக்கும் கூட யாரிடமிருந்தாவது விடுபட வேண்டியிருக்கலாம். விடுதலை ஒரு பக்கம் கொண்டது மட்டுமல்ல. உங்களுடைய அம்மா கூட உங்களை திட்டியிருக்கிறார், இல்லையா? தன் சொந்த அம்மாவிடம் திட்டு வாங்காத பெண் ஒருவர் கூட இல்லை. இங்குள்ள எல்லோரும் தன் அம்மாவிடம் திட்டு வாங்கியிருக்கிறீர்கள், சரி தானே? ஆனால், உங்கள் மாமியார் திட்டுவது உங்கள் அம்மா திட்டியதில் ஒரு பத்து சதவீதம் கூட இருக்காது. உங்கள் சொந்த அம்மா செய்த போது, நீங்கள் அதை எளிதாக ஏற்றுக் கொண்டீர்கள்! அப்போது அது உங்களை அவ்வளவு உறுத்தவில்லை. உங்கள் அம்மா உங்களை திட்டுவதால் அவர்கள் மீதுள்ள அன்பு குறையவில்லை. குறைந்ததா? இல்லை, அது எப்போதும் குறைவதில்லை. மாமியாரும் ஒரு அம்மா தான். அவர் உங்கள் கணவரின் அம்மா. அவர் உங்களை மகளாக நினைத்து சில சமயம் சில கடுமையான வார்த்தைகளை சொல்லியிருக்கலாம். அதை நீங்கள் உங்கள் போக்கிலேயே எடுத்துக் கொண்டு அதை ஏற்றுக் கொள்ளுங்கள். அதனால் ஏன் வருத்தப்பட்டு நொந்து போகிறீர்கள்? ஏன் அதை இதயத்தில் வைத்துக் கொண்டு துன்பம் கொள்கிறீர்கள்? போய் உங்கள் மாமியாருடன் அமர்ந்து, அன்போடு பேசி அவருடன் இருங்கள். குடும்ப பந்தம் உடைந்து போக விடாதீர்கள்.

மிகச் சிறிய பிரச்சினைகளை நாம் மனதில் பிடித்து வைத்துக் கொண்டு துன்பம் அடைகிறோம். நாம் இதைச் செய்யக் கூடாது. உங்கள் தாய்க்கும் மாமியாருக்கும் கிட்டத்தட்ட ஒரே வயது தானே இருக்கும். பிறகு அவர்களுடைய செயல்பாடுகள் அதே போலத் தான் இருக்கும். உங்கள் அம்மா உங்களைத் திட்டுவது கூட நீங்கள் உங்கள் கணவர் வீட்டில் திட்டு வாங்க உங்களைத் தயார் செய்யத்தான். சில நேரம் இந்த மருந்து வேலை செய்யாத போது இடையில் அறிவுரை தேவைப்படுகிறது. உங்கள் மாமியாரின் திட்டுகளை விழுங்கி விடுங்கள், அவரை அன்பால் அரவணைத்துக் கொள்ளுங்கள், பிறகு உங்கள் குடும்பம் உடையாது. உங்கள் கணவர் சந்தோஷமடைவார், பிறகு கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் மாமியாரும் சந்தோஷமடைவார். மாமியாரையும் மருமகளையும் எப்படிக் கையாள்வது என்று ஒரு புத்தகம் எழுத வேண்டும் என்று நினைக்கிறேன் (சிரிப்பு). இதற்காக ஒரு பயிற்சி வகுப்பை வடிவமைத்து, அதில் இருவரும் ஒன்றாக அமர்ந்து, எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்தும் திட்டியும் தீருங்கள் என்று சொல்லிவிட வேண்டும். அது முடிந்தபின், இருவரும் ஒருவரை ஒருவர் தழுவிக் கொள்ள வேண்டும்.

சம்ஸ்க்ருதத்தில் ஒரு அழகான பழ மொழி இருக்கிறது: ‘டடட்டு டடட்டு காலி, காலி பன்டோ பவது’.’ காலி என்பதற்கு மூன்று பொருள் இருக்கிறது. முதல் அர்த்தம் வசவு அல்லது திட்டு. இரண்டாவது அர்த்தம் பொருள் அல்லது செல்வம். மூன்றாவது அர்த்தம் சக்கரம், அதாவது மேலே நகரும் ஒன்று. எனவே, உங்களைத் திட்டுபவரிடம், ‘என்னைத் திட்டி கொண்டே இரு. ஆனால் நீங்கள் இன்னும் வளமாக செல்வத்தோடு முன்னேற வேண்டும் என்று உங்களை நான் வாழ்த்துவேன். இது நான் உங்களுக்குக் கூறும் வாழ்த்து. நீங்கள் என்னைத் திட்டலாம், ஆனாலும் உங்களுக்கு நல்லது நடக்க நான் வாழ்த்திக் கொண்டே இருப்பேன். ஏனென்றால், ஒவ்வொரு முறை நீங்கள் திட்டும் போதும் என்னுடைய தீய வினைகள் (பாபங்கள்) குறைகிறது’. ஒவ்வொரு முறை நம்மைத் திட்டும் போதும் அவர்கள் நம் வினைகளைக் குறைக்கிறார்கள். அதனால் தான் நம்மை ஒருவர் திட்டும் போது அசிங்கப்படவோ அல்லது கோபப்படவோ கூடாது. ஐந்து விரல்களுக்குள் யார் சிறந்தவர் என்று உரையாடல் நடந்தது. எத்தனை பேர் இந்தக் கதையை கேட்டிருக்கிறீர்கள்? கைகளைத் தூக்குங்கள் (அவையோரில் பலர் கைகளைத் தூக்குகிறார்கள்). குருபூர்ணிமாவின் போது கூட இதைப் பற்றி பேசினேன். பரவாயில்லை, திரும்பச் சொல்கிறேன். ஒருமுறை, கைகளில் உள்ள ஐந்து விரல்களில் யார் சிறந்தவர் அல்லது யார் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவர் என்று ஒரு விவாதம் நடந்தது. பெருவிரல் சொன்னது, “உங்களில் இருந்து நான் தனித்திருக்கிறேன். நான் மிக வலிமையானவன், மற்றும் யாராவது வெற்றி பெற்றால் பெருவிரலை உயர்த்திக் காட்டி வெற்றியின் குறியாகக் காண்பிக்கிறார்கள். எனவே நான்தான் பெரியவன், ஏனென்றால் நான் வெற்றியை குறிக்கிறேன்”. இதைக் கேட்ட ஆள்காட்டி விரல் சிரித்துவிட்டுச் சொன்னது, “நான் தான் வழியைக் காண்பிக்கிறேன். நான் காட்டிய வழியில் தான் நீங்கள் சென்று செல்ல வேண்டிய இடத்தை அடைகிறீர்கள். நான் வழியைக் காண்பிப்பதால் நான் தான் பெரியவன். நான் தான் சிறந்தவன்.” பிறகு நடுவிரல் சொன்னது, “உங்களுக்குள் விவாதம் வேண்டாம். யார் நடுவில் இருக்கிறார்கள், அதுவும் உயரமாக இருக்கிறார்கள் என்று பாருங்கள்! நான் தான். நான் தான் நடுவில் நிற்கிறேன், நான்தான் உயரமானவன். இந்த முழு உலகிற்கும் இது தெரியும். இதைப் பற்றி விவாதிப்பதே முட்டாள்தனம். எனவே நான் தான் ஆகச் சிறந்தவன்.”பிறகு மோதிர விரல் சொன்னது,“யார் ஆகச் சிறந்தவரோ அவருக்கே மணிமுடி அணிவிப்பார்கள். அரசனுக்கு மணிமுடி அணிவிப்பார்கள். அரசர்களும் பேரரசர்களும் விலை மதிப்பில்லா அணிகலன்களை நகைகளை அணிவார்கள். யாருக்கு மோதிரம் அணிவிக்கிறார்கள்? எனக்கு மட்டுமே. எனவே நான் தான் ஆகச் சிறந்தவன்.” இப்போது ஒவ்வொரு விரலும் இப்படித்தான் அப்படித் தான் என்று ஏதேதோ சொல்லின. சுண்டு விரல் எதுவும் பேசவில்லை. அது சிரித்துக் கொண்டிருந்தது. நீ ஏதாவது பேச வேண்டுமா என்று மற்ற விரல்கள் கேட்டன. அது மேலும் சிரிக்கத் தொடங்கியது. “ஏன் சிரிக்கிறாய்’ என்று கேட்டன. அது சொன்னது, “யாராவது பெரிய மனிதர் வந்தாலோ அல்லது இறைவன் முன் நிற்கும் போதோ எந்த விரல் முன்னால் இருக்கிறது? (அதாவது, கைகூப்பி நமஸ்கரிக்கும் போது அல்லது வணங்கும் போது சுண்டு விரல் தான் வெளிப் பக்கம் இருக்கும்).யார் இறைவனுக்கு அருகில் இருக்கிறார்களோ அவர்களே ஆகச் சிறந்தவர் என்றே நான் நம்புகிறேன். இறைவன் முன் கைகூப்பி வணங்கி பிரர்த்தனை செய்யும் போது என்னைத் தான் இறைவன் முன் முதலில் நிறுத்துகிறார்கள், அதனால் தான் நான் ஆகச் சிறந்தவன்.”


யார் மிகப் பணிவாக வணங்கி இருக்கிறார்களோ அவரே இறைவனுக்கு அருகில் இருப்பதாகச் சொல்வார்கள். நீங்கள் மிகச் சிறியவராக (அதாவது பொய்யான கர்வத்தை விட்டுவிட்டு) ஆகும் போது, இறைவனுக்கு மிக அருகில் இருக்கிறீர்கள். எனவே நீங்கள் நெருக்கமாக இருக்க என்னவாக வேண்டும்? நீங்கள் சுண்டு விரலாக ஆக வேண்டும். சிறியவராய் (அதாவது அடக்கமாக பணிவாக) இருங்கள் பிறகு நீங்கள் எப்போதும் இறைவனுக்கு நெருக்கமாக இருப்பீர்கள்.