இறைவனை காண்பது

ஆகஸ்ட் 10, 2013 பெங்களூரு, இந்தியா

இன்று என்ன நடக்கிறது என்றால், முதுகலை பட்டம் பெற்றவர்களுக்கு கூட வேலை கிடைப்பதில்லை, ஏனென்றால் அவர்களால் ஒரு எளிமையான வேலையை கூட தாமே செய்து முடிக்க இயலவில்லை. அந்த அளவு நம் கல்வி அமைப்பின் தரம் வலிமையற்றதாய் இருக்கிறது. திறமைகள் இருப்பதில்லை. திறன் அடிப்படையில் அமைந்த கல்வி தேவை. அதைத் தான் நாகப்பட்டினத்தில் உள்ள நமது பள்ளி செய்கிறது.

உங்களுக்குத் தெரியும், சுனாமி ஏற்பட்டபோது தான் நமது தொண்டர்களும் ஆசிரியர்களும் அங்கு சென்று இந்தப் பள்ளியை கட்டினார்கள். அதில் குறிப்பிட்ட சில திறமைகளையும் கற்பிக்க ஆரம்பித்தார்கள். சுனாமியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த சுமார்  600 க்கும் மேற்பட்ட குழந்தைகள் இப்போது தங்கள் திறன்களால் ஒரு சுனாமி ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்! இது உண்மையில் ஒரு அற்புதம். இதை நடத்திக் காட்டிய ஆசிரியர்களையும் தொண்டர்களையும் நாம் பாராட்டியே ஆக வேண்டும்.


மற்றொரு சுவாரசியமான விஷயத்தை அந்த பள்ளி நிர்வாகிகள் என்னுடன் பகிர்ந்து கொண்டார்கள். அந்தப் பகுதியைச் சேர்ந்த இரண்டு சட்ட சபை உறுப்பினர்கள் தங்கள் குழந்தைகளைச் சேர்க்க பரிந்துரைகளுடன் முயன்றனராம். பொதுவாகவே அந்தப் பள்ளியில் சேர்ப்பதற்கு நீண்ட வரிசை இருக்கும். ஆனால் சில குறிப்பிட்ட தகுதிகள் இருந்தால் மட்டுமே அங்கு குழந்தைகள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.

எனவே நம்முடைய ஆசிரியர்கள், தொண்டர்கள் மற்றும் பள்ளி முதல்வர் ஆகியோர் தங்கள் விதிமுறைகளுக்கு உட்பட்டே இருந்தார்கள். தகுந்த காரணமின்றி, குறிப்பிட்ட தகுதிகள் இன்றி, வரிசைமீறி அவர்களுடைய குழந்தைகளை சேர்த்துக் கொள்ளச் சொல்லி அவர்களை வெகுவாகக் கட்டாயப்படுத்தினார்கள். ‘இல்லை’ என்று பள்ளி நிர்வாகிகள் உறுதியாகச் சொல்லிவிட்டனர்.

அது இலவசப் பள்ளிதான், ஆனாலும். இலவசப் பள்ளியில் சேர்க்க இவ்வளவு பேர் போட்டி போடுவதை  கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஒரு கடமை உணர்வோடு மக்கள் வேலை செய்யும்போது இப்படித்தான் நடக்கும். முழுமனதோடு ஆத்மார்த்தமாய் நீங்கள் வேலை செய்தால் எந்த ஒரு நிறுவனமும் உச்சிக்குப் போக முடியும். எனவே, அந்தப் பள்ளி நிர்வாகத்தினர் கூறினர், ‘நீங்கள் பணம் கொடுத்தால் கூட நாங்கள் வாங்க மாட்டோம். எப்படியும் இது இலவசப் பள்ளி, நாங்கள் பணம் வாங்குவதில்லை. எங்கள் விதிமுறைகளின்படியே நாங்கள் நடப்போம். நீங்கள் பொதுவாக எல்லோருக்கும் உள்ள வழியில் தான் நீங்களும் வர வேண்டும், பரிந்துரைகள் ஏற்கப்படமாட்டாது.’

இது மிக அருமை. இது ஏதோ மேலே உள்ள அதிகாரிகளோ அல்லது அறக்கட்டளையின் தலைவர்களோ இதை அவர்களுக்குச் சொல்லவில்லை. விழிப்புணர்வு தானாகவே ஒருவருக்குள் எழுகிறது. குணங்களும் கடமையுணர்வுகளும் உள்ளேயிருந்து வருகிறது, அதுதான் ஆன்மிகம்.

உங்களை கடமையுணர்ச்சி உள்ளவராக ஆக்கிக்கொள்ள உங்களுக்கு உதவுவதே, ஆன்மீகம் உங்கள் வாழ்கையின் மீது ஏற்படுத்தும் விளைவு. உங்களுக்கு நீங்களே ஒரு மிக உயர்ந்த அளவு கோலை ஏற்படுத்திக் கொள்கிறீர்கள்; வேறு யாருடனாவது போட்டிபோட்டுக் கொண்டு அல்ல! உங்களுக்கு நீங்களே தரத்தை நிர்ணயித்துக் கொண்டு அதை விஞ்சுகிறீர்கள். அதுதான் வாழ்க்கையில் நிறைவை ஏற்படுத்துகிறது.

கே: நீங்கள் உலகத்தின் மிகப் பெரிய படைக்கு சொந்தகாரர். உலகெங்கும், உங்களிடம் ஆகச் சிறந்த தளபதிகளையும் அர்ப்பணிப்பில் சிறந்த வீரர்களையும் வைத்திருக்கிறீர்கள். உங்கள் செயல்வீரர்கள் ஓய்வு பெறுவதே இல்லை. உண்மையில், புதிதாகவும் தொடர்ந்து சேர்ந்து கொண்டே இருக்கிறார்கள் – நீங்கள் ஆகச் சிறந்த சம்பளமான ஆனந்தத்தை அவர்களுக்கு அளிப்பதால். ஆனாலும் உங்கள் நோக்கமான ‘வசுதெய்வ குடும்பகம்’ (ஒரு உலகம் – ஒரு குடும்பம்) இன்னும் ஒரு தொலை தூர கனவாகவே இருக்கிறதே. நம் நாட்டிலேயே கூட நாம் இன்னும் இணைந்திருக்கவில்லையே. எப்படி மேலே செல்வது?

குருதேவ்: அந்த வேலை நீங்கள் செய்யத்தான் இருக்கிறது. உங்களுக்கும் அதைச் செய்ய பங்கிருக்கிறது. இதைத் தான் நீங்கள் செய்ய வேண்டும்.

நாம் கிராமம் கிராமமாக சென்று இதயங்களையும் மனங்களையும் இணைக்க வேண்டும். இது கடினமான வேலை என்று நினைக்காதீர்கள், ஒற்றுமை ஏற்கனவே இருக்கிறது. ஏதோ கொஞ்சம் தவறான புரிதலும், கொஞ்சம் சுயநலமும் மற்றும் ஒரு விசாலமான பார்வையின்மையும் ஏதோ ஒரு நம்பிக்கையில்லாத ஒரு சூழலை உருவாக்கியிருக்கிறது. மக்கள் அடிப்படையில் மிக நல்லவர்கள். 90% மக்கள் மிக நல்ல இதயம் படைத்தவர்கள். ஏன், மீதமுள்ள அந்த 10% கூட நல்ல இதயம் படைத்தவர்களே. எங்கோ ஏதோ பிசகிவிட்டது, ஆனால் நம்மால் அதைச் சரி செய்ய முடியும்.

இன்று நம்முடன் கிரண் பேடி இங்கு இருக்கிறார்.  அவர் சிறைகளுக்குப் பொறுப்பாளராய் தில்லியில் இருந்த போது, எல்லா சிறைகளையும் ஆசிரமமாக்கி விட்டார். அவைகள் திஹார் ஆசிரமம் என்று அழைக்கப்பட்டன. இன்றும் கூட, திஹார் சிறையில் திறன் மேம்பாட்டு மையம் செயல் பட்டுவருகிறது, நம்முடைய நிகழ்சிகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது. தியானங்கள் மட்டும் அல்ல, வாழும்கலை மையம் கூட பல சிறைச்சாலைகளில் இருக்கிறது. அது உங்களுக்குத் தெரியுமா?

இங்கு இந்தியாவில் மட்டுமல்ல, அர்ஜென்டினாவின் மிகப் பெரிய சிறையில், அந்த நாட்டைச் சேர்ந்த 5,500 சிறைவாசிகள் கொண்ட சிறைச்சாலையில் கூட ஒரு வாழும்கலை மையம் உள்ளது. எல்லோரும் தியானம் செய்கிறார்கள். நான் பிரேசிலில் இருந்தபோது, என்னை அந்த நாட்டின் ரியோ டி ஜெனிரோவின் சிறைச்சாலைக்கு அழைத்து சென்றார்கள், அங்கு வாழும்கலை பெயர்ப் பலகையைப் பார்த்தேன்! நமது சின்னத்தில் உள்ள அன்னப் பறவைகளைக் கூட வரைந்திருந்தார்கள். இதைப் பார்த்து ஆச்சரியமடைந்தேன், அந்த மக்களின் கண்களில் கண்ணீர். குற்றவாளிகள் என்று சமூகத்தால் நிந்திக்கப்பட்டவர்களுக்கும் கூட இதயம் உண்டு!இன்று திஹார் சிறையில், சிறைவாசிகள் பலவிதமான திறன்களை கற்று வருகிறார்கள். மின்சார தொழில்நுட்பம் எல்லாம் கற்றுத் தரப்படுகிறது. அவர்கள் மின்சார வேலை செய்பவர்களாகவும் தச்சர்களாகவும் ஆகி வருகிறார்கள்.

நமது ஆசிரியர்களில் ஒருவர் (தீபக்), திகாரில் அற்புதமாகத் தொண்டாற்றியிருக்கிறார். கிராமிய வளர்ச்சித் திட்டத்தின் மூலம் நாடெங்கும் பல திறன் பயிற்சி நிலையங்களை திறந்திருக்கிறார்.
எனவே அடிப்படையாக, மக்கள் நல்ல இயல்பு உள்ளவர்களே; அவர்கள் இயல்பாகவே நல்லவர்கள். அவர்களுக்கு அந்த ஆன்மீகத் தூண்டல் தேவைபடுகிறது.ஆன்மிகம் இல்லாமல், வாழ்கை வறண்டது. இதைக் காண்கிறீர்களா? அவ்வளவு வறட்சியாய் உணரும் போது, உங்களால் தவறைத் தவிர வேறேதும் செய்ய முடியாது. எதைச் செய்தாலும் அது தவறாகத் தான் இருக்கும். எனவே உங்களுக்கு ஒரு செயல், ஒரு இலக்கு, ஒரு வேலை, செய்ய இருக்கிறது. அதைத் தொடங்கி விடவேண்டியது தானே.

கே: கடவுள் இருக்கிறாரா? புராணங்கள் எல்லாம் ஒரு கற்பனைக் கதை போல எனக்குத் தோன்றுகிறது. நான் எப்படி கடவுளை காண்பது? எப்படி அவர் இருப்பை நம்புவது, நான் ஏன் நம்பவேண்டும்?

குருதேவ்: இப்போது கவனியுங்கள், கடவுள் ஓய்வாய் இருக்கட்டும். இப்போது கடவுளைப் பற்றிய கவலை வேண்டாம். உங்களைப் பற்றி கவலைப்படுங்கள். நீங்கள் யார்? முதலில் ஆத்மா பிறகு பரமாத்மா. அந்த பரமாத்மா (கடவுள்) ஒரு தனிப்பட்ட ஆத்மாவை விஞ்சியவர். முதலில் வீட்டின் சுற்றுச் சுவருக்கு (அதாவது நீங்கள் யாரென்று தெரிந்துகொள்வது) வாருங்கள், பின்னர் வீட்டினுள் (கடவுளைத் தெரிந்துகொள்ளலாம்) போகலாம்.‘நான் எதிலும் நம்பிக்கை இல்லாதவன்’ என்று சொல்பவர்கள் குறைந்தபட்சம் தாம் சொல்லும் வார்த்தையில் நம்பிக்கை வைக்க வேண்டும். நீங்கள் எதையும் நம்புவதில்லை என்று சொன்னால், குறைந்தபட்சம் நீங்கள் எதையும் நம்புவதில்லை என்ற கருத்தையாவது நம்பவேண்டும், சரிதானே?

எனவே, அதைச் சொல்பவர் யார்? நீங்கள் யார்? நீங்கள் உங்கள் எண்ணங்களா? இல்லை, அவை மாறிக் கொண்டேயிருக்கும். நீங்கள் உங்கள் உடம்பா? கடந்த 5 – 10 வருடங்களில் பாருங்கள், உங்கள் உடம்பு அவ்வளவு மாறியிருக்கிறது. ஒரு வருடத்தில், உங்கள் உடம்பிலிருக்கும் செல்கள் அனைத்தும் மாறுகிறது. இது உங்களுக்குத் தெரியுமா?

நம் உடம்பில் இருக்கும் ஒவ்வொரு செல்லும் மாறுகிறது. நம் வயிற்றில் இருக்கும் உட்சுவர் செல்கள் ஒவ்வொரு ஐந்து நாட்களுக்கும் மாறுகிறது. இரத்தம் ஒவ்வொரு இருபத்தினாலு மணி நேரத்திற்கும் மாறுகிறது. ஒவ்வொரு 30 நாட்களுக்கு ஒரு முறை நம் தோல்கள் கூட மாறுகிறது. நம் உடம்பில் உள்ள ஒவ்வொரு செல்லும், ஒவ்வொரு அணுவும், ஒரு வருடகாலத்தில் மாறிவிடுகிறது.

எனவே உங்கள் உடம்பு ஒரு ஓடும் நதி. அதே ஆறுதான், ஆனால் அதில் தண்ணீர் புதிது. நீங்கள் புதியவர் மற்றும் தொன்மையானவரும் கூட. இதே தான் கங்கைக்கும், யமுனைக்கும், காவிரிக்கும். அதே ஆறுதான், பல வருடங்களாக, ஆனால் தண்ணீர் எப்போதும் புதியது. அதைப் போலவே நீங்கள் புதியவர் மற்றும் தொன்மையானவரும் கூட. உங்களுள் எது தொன்மையானது மற்றும் எது புதியது என்று கவனியுங்கள். உங்களுக்கே தெரியும். கடவுள் தானாகவே தொடருவார்.

எனவே நம்புவதற்கு எந்த முயற்சியும் எடுக்க வேண்டாம். உங்களை நீங்களே கட்டாயப் படுத்திக் கொண்டு எதையும் நம்பிக் கொள்ளக் கூடாது. நம்பிக்கை என்பது உங்கள் மீது நீங்களே திணித்துக் கொள்வது அல்ல. அது உங்களுக்குள் இருந்து வெளிவருவது. அறிவியல் மூலமாகவோ அல்லது ஆன்மிகம் மூலமாகவோ. தியானம் மூலம் அந்த அதே ஒரு இலக்கை அடைவீர்கள். அந்த இலக்கு என்ன? இந்த முழு பிரபஞ்சமும் ஒரு அலை வடிவே, ஒரு அதிர்வே, ஒரு பொருள் தான்! அந்த ஒரு பொருள் தான் எல்லாவற்றிற்கும் பொறுப்பு. அந்த ஒரு பொருள்தான் நானாக இருப்பது. அதை நீங்கள் கடவுள் என்றோ அல்லது பிரம்மன் என்றோ அல்லது அவன் என்றோ அல்லது அவள் என்றோ அல்லது அது என்றோ அல்லது எதுவோ என்றோ அழைத்தாலும் அது வேலை செய்யும்.

நீங்கள் தியானத்தில் ஆழமாகப் போகும் போது ஒரு பரிசுத்த பேருணர்வோடு ஒன்றிணைந்து 
கரைந்து போகிறது. அந்த கள்ளமில்லா இயற்கையோடு மற்றும் அன்போடு அந்த அடைதல் நடக்கிறது. உங்கள் மனம் அவ்வளவு லேசாகா ஆவதே, அன்பு என்பது கோபத்திலும்  வெறுப்பிலும், மனம் உயிரற்று நிற்கிறது, மற்றும் ஒரு சுமை உணரப்படுகிறது. நீங்கள் அன்பில் இருக்கும்போது உங்கள் மனம் அவ்வளவு லேசாகிறது. இதை அனுபவித்திருக்கிறீர்களா?

நீங்கள் மகிழ்ச்சியாய் இருக்கும்போது, நீங்கள் அடையும் உணர்ச்சி என்ன? ஒரு லேசான உணர்வு. நீங்கள் மகிழ்ச்சியற்று இருக்கும்போது, உங்கள் தலை மீது ஒரு கல் உட்கார்ந்திருப்பது போல இருக்கிறது, சரியா? உங்களை லேசாகச் உணரச் செய்யும் அறிவியல் யோகா. இது ஒரு எடை குறைக்கும் ஒரு நிகழ்ச்சி அல்ல, உங்கள் மனதை லேசாக்கவும் செய்யும். எல்லா இடங்களிலிருந்தும் நீங்கள் எடுத்துக் கொள்ளும் மனம் சம்பந்தப்பட்ட கோபம், பொறாமை, வெறுப்பு, பேராசை, போன்றவற்றை விடுவித்து உங்களை உள்ளேயிருந்து லேசாக உணரச் செய்கிறது.

நீங்கள் எப்போது லேசாக உணரமுடியும்? வாய்மையே வெல்லும் – சத்ய மேவ ஜெயதே என்பதை நீங்கள் நம்பும்போது, அது தெரியும்போது. பிறகு நீங்கள் விரும்புவது நடக்கும் என்ற தைரியம் கிடைக்கிறது. உங்களிடம் சங்கல்பமும் (உறுதி) விசுவாசமும் (நம்பிக்கை) இருந்தால் யாருடனாவது நீதி மன்றத்திற்குச் சென்று சண்டை போடுவதானால் கூட புன்னகையுடன் செய்ய முடியும். ஒரு சண்டைக்குக் கூட புன்னகையுடன் செல்ல முடியும். கோபத்துடனோ அல்லது மனதில் சுமையுடனோ அல்ல. இதைப் புரிந்துகொள்கிறீர்களா? இதுதான் பகவத் கீதையின் சாரம்.

இரண்டாம் அத்தியாயத்தில், ஸ்ரீ கிருஷ்ண பகவான் கூறுகிறார், ‘யோக-ஸ்தாஹ் குரு கர்மணி, சங்கம் த்யக்த்வா தனன்ஜயா. சித்தி அசித்யோ சமோ பூத்வா, சமத்வம் யோக சயதே’ யோகத்தில் தடுமாறாமல் ஸ்திரமாய் இருந்து உனக்குள் ஏற்படும் இலகுத் தன்மையை உணர்ந்துகொள். வெற்றியின்மீது உள்ள நம்பிக்கையை வெளிப்படையாய் வைத்து, உனது கடமைகளைச் செய், வேலையைச் செய்தவாறு இரு. பிறகு களைப்பு என்பதே இல்லாமல் போவதைப் பார்ப்பாய். எப்போது களைப்பு ஏற்படுகிறது? நம்பிக்கை ஒளிக்கிரணங்கள் மங்கும்போது. ராக (வேட்கை)  துவேஷங்கள் (வெறுப்பு) மனதை ஆக்கிரமிக்கும்போது ஒருவர் களைப்படைகிறார்.

உலகிற்கு ஒரு தனித்துவமான பரிசை இந்தியா கொடுத்துள்ளது என்றால் அது இதுதான் – விருப்பு வெறுப்பு இல்லாமல் போர் செய் – உலகத்திற்கு இது ஒரு சிறந்த பரிசு. எனவே, சவால்கள் வரும். சவால்களை தன்னம்பிக்கையோடும், சாந்தமாகவும், நிதானமாகவும் மற்றும் சுய மரியாதையுடன் எதிர்கொள். கடமை உணர்வும் சாந்தமும் சூழ்நிலைகளை சந்திப்பதற்குத் தேவை.

கே: குருதேவ், ஞானம் பெறுவதற்கு ஒரு பிறவி போதுமா?

குருதேவ்: நிச்சயம் போதும்! ஒரு பிறவியே அதிகம்!

கே: குருதேவ், என் வீட்டை மகிழ்ச்சியான இடமாக மாற்றுவது எப்படி? வார இறுதிகளில் கூட என் மனைவி வாக்குவாதம் செய்யகிறார்கள்.

குருதேவ்: நான் உங்களுக்கு ஒரு ஆலோசனை சொல்கிறேன். வாக்குவாதம் செய்யும் போது முறை வைத்துக் கொள்ளுங்கள், ஒரே நேரத்தில் செய்யாதீர்கள். திங்கள் கிழமை நீங்கள் வாக்குவாதம் செய்தால் ஞாயிற்றுக் கிழமை உங்கள் மனைவி வாக்குவாதம் செய்யட்டும்! நீங்கள் நகை முகத்தோடு இருங்கள். உங்களுக்குத் தெரியும், ஒரு வாதத்தை எதிர்கொள்ள மற்றொரு வாதத்தால் முடியாது. கேள்விக்கு பதிலாக கேள்வி இருக்க முடியாது. அவர்கள் வாக்குவாதம் செய்யும் போது, நீங்கள் புன்னகை செய்யுங்கள், சரியா?

இதை கொள்கையாகவே வைத்துக் கொண்டு படகை செலுத்துங்கள்!

கே: குருதேவ், மனப்போக்கிற்கும் குற்றத்திற்கும் (கெடுதல் செய்ய உள்ள விழைவு) உள்ள வித்தியாசம் என்ன? அன்பும் தொண்டும் தான் நம் இயல்பான மனப்போக்கு என்றால், பிறகு ஏன் குற்றங்கள் அதிகரிக்கிறது?

குருதேவ்: சமூகத்தில் ஆன்மீகக் கல்வி மற்றும் மனித மதிப்புகள் குறைவு. மன அழுத்தம் கொண்டுள்ள நம் மக்களுக்கு அதை எப்படி குறைத்துக் கொள்வது என்று சொல்லித்தரப்படவில்லை, அதனால் குற்றங்கள் நடக்கிறது. நான் சொன்னது போல, நீங்கள் சிறையிலுள்ள கைதிகளிடம் பேசினால் அவர்கள் தீயவர்கள் அல்ல என்பதைக் காண்பீர்கள். அவர்கள் நல்லவர்கள். அனால் உணர்ச்சி ஆவேசத்தில் குற்றம் செய்துவிட்டார்கள். அவர்கள் மூலம் ஏதோ நடந்துவிட்டது. அவர்களை நீங்கள் கேட்டால், அவர்கள் சொல்வார்கள், ‘ஓ, அது நடந்துவிட்டது. இது நடக்கும் என்று எதிர் பார்க்கவில்லை’.

கே: குருதேவ், திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறதென்றால், ஏன் பூமியில் அத்தனை விவாகரத்துகள் நடக்கிறது?

குருதேவ்: திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன, ஆனால் விவாகரத்துகள் பூமியில் நிச்சயிக்கப்படுகின்றன! (சிரிப்பு)

பொறுமையின்மை. நம் நாட்டில் எங்கோ நாம் பொறுமையை இழந்து கொண்டிருக்கிறோம். நமக்கு எல்லாம் உடனடியாக வேண்டும், மற்றும் நமக்கு உடனடி முடிவுகள் வேண்டும், மற்றும் வேகமாக மாற்றங்கள் வேண்டும். நமது கனடா அமைப்பில், வெகு காலமாக ஒரு தலைவர் இருந்து வந்தார், சுமார் 10 – 12 வருடங்களுக்கு முன்பு. அவர் ஒரு 82 வயது பெண்மணி. அவர் சொல்லுவார், ‘ஒருவரால் ஒரு படகை ஓட்ட முடியவில்லை என்றால், அவரால் மற்ற எந்த படகையும் ஓட்ட முடியாது. நீங்கள் படகை மாற்றினால் கூட படகை எப்படி ஓட்டுவது என்று கற்றுக் கொள்ள முடியாது’. எனவே அவர் சொன்னார், ‘நான் முடிவெடுத்துவிட்டேன், எனவே நான் அதே படகையே கடந்த 45 வருடங்களாக ஓட்டிவருகிறேன்!’ அவர் தன் கணவரையும் அறிமுகப்படுத்தி வைத்தார்.

இந்நாளைய இளைஞர்களுக்கு இது தெரிவதில்லை, படகை மாற்றுவதினால் நன்றாக ஓட்ட முடியும் என்று நினைக்கிறார்கள்! பாருங்கள், இது எப்படிப்பட்ட ஒரு ஞானம். எப்படி படகு ஓட்டுவது என்று தெரிந்துவிட்டால் எந்தப் படகையும் ஓட்டலாம். புதிதாகத் திருமணமான பெண்கள் பலமுறை வந்து தங்கள் மாமியாரைப் பற்றி புகார் செய்கிறார்கள். அவர்களை அன்பால் வெல்லுங்கள் என்று நான் சொல்கிறேன். அவர்களுக்கு என்ன வேண்டும்? நீங்கள் ஏன் அவர்களை விட்டு பிரிய வேண்டும்?

நமக்கு அடிப்படை தகவல் தொடர்புத் திறன் இருப்பதில்லை. இந்தப் பெண்களை நான் ஒரு கேள்வி கேட்டேன், ‘உங்கள் அம்மா உங்களை எந்த விமர்சனமும் செய்யவில்லையா?’
அவர்கள் சொன்னார்கள், ‘ஆம்’. பாருங்கள், உங்கள் அம்மா உங்கள் மாமியாரைவிட உங்களை அதிகம் விமர்சனம் செய்தார்கள். உங்கள் அம்மா சொன்ன எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டீர்கள், ஆனால் உங்கள் கணவரின் அம்மா சொன்னால் மட்டும் உங்களை அது ஆழமாகக் குத்துகிறது, நீங்கள் அந்த வீட்டை விட்டு வெளியே வர விரும்புகிறீர்கள்.

உங்கள் அம்மாவை எப்படி நடத்துவீர்களோ அப்படியே அவரையும் நடத்துங்கள். உங்கள் அம்மா சொல்வதை எப்படி எடுத்துக் கொள்வீர்களோ அப்படியே அவர் சொல்வதையும் ஏற்றுக் கொள்ளுங்கள். பலப் பல திருமணங்களில் இது மிகப் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும். இந்த சிறு ஞானம் தெரிந்தாலே போதும். கொஞ்சம் தியானம் செய்யுங்கள். சரி, மாமியார் உங்களை விமர்சனம் செய்கிறார், அவர் செய்துவிட்டுப் போகட்டும்! தன்னைச் சேர்ந்தவர் என்ற தன்மை இருக்கும் போது விமர்சனமும் இருக்கும்! உங்கள் மாமியார் ஏதேனும் சொன்னாரா, பரவாயில்லை! அவர் சொல்வதை என்ன என்று கேளுங்களேன். அது உங்களை வருந்தச் செய்தால், காதில் பஞ்சை வைத்துக் கொண்டு கேட்பதை தொடருங்கள், புன்னைகை செய்யுங்கள்!

அன்பினால் யாரையும் வெல்லலாம். வீட்டில் உள்ள பெரியவர்களை வெல்லுவதில் என்ன கஷ்டம்? கொஞ்சம் பொறுமை கொஞ்சம் நிதானம் வேண்டும். பொறுமையை இழந்தால் நம் சமூகத்தில் எந்த விதத்திலும் முன்னேற முடியாது. பொறுமையையும் நிதானத்தையும் எப்படி அதிகமாக்குவது என்று என்னைக் கேட்டால், நீங்கள் இங்கு செய்வதை தொடர்ந்து செய்யுங்கள் என்றே சொல்லுவேன்.உங்களில் எத்தனை பேர் மாற்றமடைந்திருப்பதாக, அதிகம் பொறுமை அடைந்திருப்பதாக உணர்கிறீர்கள்? நான் பார்க்கிறேன். நல்லது.