உண்மை வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டவை

ஆகஸ்ட் 23, 2013 - பெங்களுரு - இந்தியா



எல்லாம் அவனே! வேறு எவரும் இல்லை! இதுவே தெய்வீக அன்பில் நனைந்திருக்கும் பக்தர்களின் மொழி. இறைவன் மட்டுமே எங்கும் நிறைந்திருக்கிறான். அவனை தவிர வேறு எதுவும் இல்லை. இதுவே பக்தர்களின் பாதை.  

கே: குருதேவ்! என்னுடைய தொழிலில் என்னால் பொய் சொல்லாமல் இருக்க முடியாது. பொய் சொல்லாமல் என்னுடைய தொழிலை நன்றாக செய்ய ஏதேனும் வழி உள்ளதா?

குருதேவ்: என்ன தொழில் அது? (சிரிப்பு). ஒரு வழக்கறிஞர் தொழில் போல் தோன்றுகிறதே. ஊழல் நிறைந்தவர்கள் மற்றும் தவறானவர்களின் வழக்குகளையோ அல்லது மற்றவர்களுக்கு கெடுதல் விளைவிக்கும் வழக்குகளையோ எடுத்துக்கொள்ளாத பல புகழ்பெற்ற ஆற்றல் மிக்க வழக்கறிஞர்கள் இருக்கிறார்கள். அவர்கள் முதலில் வழக்கை நன்கு படித்து, பின் வெற்றி பெரும் வாய்ப்புகள் உள்ளதா என மதிப்பீடு செய்வார்கள்.அதன் பிறகே அவ்வழக்கை எடுத்துக்கொள்வார்கள். நீங்களும் உங்கள் தேர்வு செய்யும் உரிமையை உபயோகித்து முடிவு எடுக்கவும்.

உண்மையானது வார்த்தைகள் மூலமாக வெளிப்படுத்தப்ப்படும் போது அது பொய்யாகிறது அல்லது செயற்கையாகிறது. (உண்மை என்பது வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது மற்றும் வெளிப்படுத்த இயலாதது). உண்மையானது வார்த்தைகளாக வெளிப்படும் போது பொய்யாக திரிந்து விடும் என்று பழங்காலத்தில் சொல்லப்பட்டுள்ளது. எவையெல்லாம் வெளிப்படுதப் படுகின்றதோ அவை எல்லாம் பொய்யாகி விடுகின்றன, திரிக்கப்பட்டு விடுகின்றன. ஆகையினால் நீங்கள் கவலைப்பட வேண்டாம். உண்மை பேசப்படுவதில்லை. எது பேசப்படுகின்றதோ அது உண்மையும் அல்ல. உண்மை என்பது எல்லா காலத்திற்கும் பொருத்தமானது. கடந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் ஆகிய முக்காலத்திற்கும் அப்பாற்பட்டது. எனவே எது முக்காலத்திலும் ஒரே மாதிரியாக உள்ளதோ அதுவே உண்மை ஆகும். எனவே நீங்கள் கவலை இன்றி உங்கள் தொழிலை தொடரவும். மற்றவற்றை கடவுளிடம் சமர்ப்பித்து விடவும்.    

கே: நெற்றியில், இரு புருவங்களுக்கு மத்தியில் திலகம் இடுவதின் பொருள் அல்லது சிறப்பு என்ன? அது எதைக் காட்டுகிறது? நமது நாட்டில் திருமணமான பெண்கள் கூட திலகம் இடுகின்றனர். இதன் பின் உள்ள காரணம் என்ன?

குருதேவ்: மூன்றாவது கண் அங்கே உள்ளது. ( விழிப்புணர்வுடனும் சம்பந்தப்பட்ட மையப்பகுதியை குறிப்பிடுவது). எனவே தான் சந்தனம் அல்லது வேறு திலகங்களை, மனம் மற்றும் உடலில் பெரும் விளைவுகளை ஏற்படுத்தும் பீனியல் மற்றும் பிட்யூடரி சுரப்பிகள் உள்ள அந்த இடத்தில வைத்துக் கொள்கிறார்கள். நமது நெற்றியின் அந்த பகுதிக்கு மதிப்பை கொடுக்கவே அங்கே திலகம் இடப்படுகிறது என்பது ஒரு காரணம். அது நமது கவனத்தை தூண்டுகிறது. நீங்கள் சிந்தனை செய்யும் போது என்ன செய்கிறிர்கள்?  உங்களுடைய கை தானாகவே அந்த இடத்திற்கு செல்லுகின்றது. நீங்கள் தவறு செய்யும் போது கூட உங்கள் கை தலையின் அந்த பகுதிக்கு செல்லுகிறது. நீங்கள் சிந்தனை செய்யும் போதோ, எதைப் பற்றியாவது ஆழ்ந்த யோசனையில் உள்ள போதோ அல்லது ஒரு சிக்கலில் உள்ள போதோ உங்கள் கையை அந்த பகுதியில் வைத்துக் கொள்கிறீர்கள். நீங்கள் இந்த உலகின் எந்த மூலைக்கு அல்லது எந்த நாட்டிற்கு சென்றாலும் எல்லா இடங்களிலும் மக்கள் அவ்வாறே சிந்தனை செய்வதை பார்க்கலாம். அது ஞானத்தின் இருப்பிடம். ஞானத்தின் பீடம். அதனால் தான் அந்த இடத்தில சந்தனம் மற்றும் குங்கும பொட்டு   இடப்படுகிறது. அது சுட்டிக்காட்டப்படுவது.    

கே: பிரதிகர்மான் என்பதின் அர்த்தம் என்ன குருஜி?

குருதேவ்: ஜைன மதத்தில் பிரதிகர்மான் (தன்னாய்வு)என்ற ஒரு பழக்கம் உள்ளது. ஒவ்வொரு மாலையும் உறங்க செல்லுவதற்கு முன் அவர்கள் தாங்களாகவே ஓர் இடத்தில அமர்ந்து, காலையில் இருந்து செய்தவை அனைத்தையும் ஞாபகத்திற்கு கொண்டு வருவர். இரவு படுக்க செல்லுவதற்கு ஒரு மணி அல்லது இரண்டு மணி நேரம் முன்னதாக அவற்றை நினைவிற்கு கொண்டு வந்து அதைப் பற்றி சிந்தித்து பின் படுக்க  செல்வார்கள். இதுவே பிரதிகர்மான் என்று அழைக்கப்படுகிறது. மனதில் ஏற்படும் பதிவுகளையும் கர்ம வினைப் பதிவுகளையும் நீக்க செய்யப்படும்  கலை ஆகும். இதுவே பிரதிகர்மான்.    

கே: ஒருவன் தன்னுடைய கடமைகளை செய்து முடித்த பின் அவைகளுடைய பலன் அல்லது விளைவுகள் குறித்து எவ்வித விருப்பமும் கொள்ளக்கூடாது என்பது ஏன்? அவ்வாறு எண்ணுவது இயல்பானது தானே?

குருதேவ்: சரி. நீங்கள் நினைப்பது போல விருப்பம் கொள்ளலாம் (சிரிப்பு). முடிவு குறித்து விருப்பமோ அல்லது எதிர்பார்ப்போ இல்லாமல் இருக்க வேண்டும் என்று சொல்லப்படவில்லை. ஆனால் அந்த முடிவின் மேல் உங்களுக்கு எந்த கட்டுப்படும் கொள்ளமுடியாது. நீங்கள் விருப்பப்படுவதற்கு முன்போ அல்லது தேவைக்கு முன்போ ஒரு பொருள் உங்களுக்கு கிடைத்து விட்டது என்றால் அதே அதிபாக்கியமானது. பாக்கியம்) என்றால் என்ன? உங்களுக்கு தேவைப்படும் என்று நீங்கள் நினைப்பதற்கு முன்பே அது உங்களுக்கு கிடைத்து விடுவதே பாக்கியம். கேட்பதற்கு முன்பே அனைத்தும் கிடைத்து விடுகிறது என்ற நிலையே "சித்தி" என்பது.

யாருக்கு கேட்ட பிறகு அனைத்தும் கிடைக்கின்றதோ அவர், கேட்பதற்கு அவசியம் இல்லாமலேயே அனைத்தும் கிடைக்கப் பெறுபவரை விட குறைந்த பாக்கியம் பெற்றவர் ஆவார். மற்றொருவர் மனதில் நிறைய விருப்பங்கள் வைத்திருந்தும், மிகுந்த முயற்சிக்கு பிறகும் குறைந்த   அளவே கிடைக்கப் பெற்றால் அவர் இன்னமும் குறைந்த பாக்கியம் பெற்றவர் ஆவார். வாழ்நாள் முழுவதும் கஷ்டப்பட்டும் எதுவும் கிடைக்காதவர் மிகவும் குறைந்த பாக்கியம் பெற்றவர் ஆவார்.

எப்படி ஒருவர் ஒரு படியில் இருந்து மற்றொரு படிக்கு மேலே செல்வது? சத்கர்மா என்று சொல்லப்படும் நற்செயல்கள் மூலம் இது செயல்படுத்த கூடிய ஒன்று. சேவை, சத்சங்கம், சாதனா ஆகியவைகள் உங்களுக்கு உதவியாக இருக்கும். உங்களில் எதனை பேர் நீங்கள் இங்கே நினைப்பது உங்களுக்கு கிடைக்கும் என்று நினைக்கிறீர்கள்? (கூட்டத்தில் பலர் கை தூக்குகின்றனர்). எவ்வளவு பேருக்கு நீங்கள் நினைப்பதற்கு முன்பே அவை கிடைத்து விடுகின்றன? (கூட்டத்தில் பலர் கை தூக்குகின்றனர்). அது தான் "சித்தி" என்பது. நீங்கள் அனைவருமே இப்போது சித்தி பெற்றவர்கள்(தனிச்சிறப்பான திறமைகள் உள்ள நேர்த்தியானவர்கள்) (சிரிப்பு).

கே: குருதேவ்! ஒருவர் உதவியற்ற நிலையிலும், உதவியற்ற நிலையே ஊக்கமற்றதகவும் கோபம் மற்றும் துயரமானதகவும் மாறும் போதும் என்ன செய்ய வேண்டும்?

குருதேவ்: உங்களில் ஒரு பெரிய சக்தி உள்ளது என்பதையும் அது உங்கள் கட்டுப்பாட்டிலேயே உள்ளது என்பதையும் நீங்கள் மறந்து விடுகிறீர்கள். உதவியற்ற நிலையில் இருப்பதாக நினைக்கும் நேரமே பிரார்த்தனை செய்ய சிறந்த நேரம். உங்களுடைய பிரார்த்தனை நம்பகமானதும், பரிசளிக்கக் கூடியதும் ஆகும்.

கே: என்னுடைய வாழ்வின் நோக்கம் என்ன? நான் இந்த பூமியில் நீங்கள் இங்கு இருக்கும் இந்த காலத்திலேயே எதற்காக வந்திருக்கிறேன்? இந்த வாழ்க்கைக்கு ஏதாவதொரு நோக்கம் இருக்க வேண்டும். அது எனக்கு எப்படி தெரிய வரும்?

குருதேவ்: ஒரு மிகச் சிறந்த நோக்கம் உள்ளது. நிறைய வேலைகள் உள்ளன. சேவைகள் செய்ய வேண்டிய தேவை உள்ளது. இந்திய மேம்பாட்டிற்க்கான முயற்சியில் ஒரு தன்னார்வ தொண்டராக சேரலாம். மிகுந்த அளவில் சேவைகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நாட்டுக்கு நீங்கள் தேவைப்படுகிறீர்கள். உங்களுடைய சேவை, சாதனா, சத்சங்கம் ஆகியவற்றை செய்து வரவும். நீங்கள் கேட்டு வரும் ஞானத்தையும் பெற்று வரும் மகிழ்ச்சியையும் பரப்பவும்.

கே: குருஜி! மனுஸ்மிருதி என்கின்ற மனுநீதி பற்றி கூறுங்கள். (தனி மனிதனையும், சமுதாயத்தையும் ஆளுமை செய்வதற்காக ஏற்படுத்தப்பட்ட சட்ட நெறி முறைகளும் மற்றும் தர்மமும், மனுநீதி என்று அழைக்கப்படுகிறது) இது இன்றைக்கு பொருத்தமானதா?  

குருதேவ்: மனுஸ்மிருதி என்று அழைக்கப்படும் மனுநீதி மனு என்ற ஒரு மன்னனால் எழுதப்பட்டது. அவர் ஒரு நல்ல தீர்ப்பாளர். மனுநீதியில் கூறப்பட்டுள்ள, பெண்கள் எல்லோரும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நீதியும், சாதி முறையும் தவறாக பொருள் கொள்ளப்பட்டன. நான் அவைகள் மிகைபடுத்தப் பட்டிருந்தன என நினைக்கிறேன். ஆனால் அவைகள் ரிஷிகளால் எழுதப்பட்ட மறைகள் அல்ல. அது ஒரு மன்னனால் எழுதப்பட்டது. அரசியல் அமைப்பு சட்டம் போன்றது. அவ்வளவு தான்.    

எனவே மனுநீதி சனாதன தர்மத்திற்கான ஒரு அதிகார உரிமை அல்ல. நாம் அதை பின்பற்ற வேண்டிய தேவை இல்லை. அது ஒரு அரசியல் சாசனம் போன்றது. இந்திய அரசியல் சாசனம் போல அந்நாளில் மக்களும் சில விதிகளை மேற்கொண்டனர். ஆனால் அவை உலகளாவிய மறைகள் அல்ல. மேலும் அதை அனைவரும் பின்பற்ற வேண்டிய அவசியமும் இல்லை. அவை அவ்வாறானவையும் அல்ல.

ஆனால் மனுநீதியில் சில மிகச் சிறந்த நல்ல விஷயங்களும் கூறப்பட்டுள்ளன. நல்ல அறிவுரைகள் உள்ளன. எனவே இன்றைய நடைமுறைக்கு சாத்தியமானவற்றை மட்டும் எடுத்துக்கொண்டு மற்றவற்றை விட்டு விடலாம். நம் நாட்டு மக்கள் இதை பின்பற்றி வருகின்றனர். இவ்வுலகில் உள்ள அனைத்து மறைநூல்களையும்    மெய்யறிவுடனும் பார்க்க வேண்டும். அதையே தான் மறைநூல்களும் கூறுகின்றன. நாம் அறிவுரைகளையும் மறைநூல்ககளையும் பின்பற்றும் பொது இடம் (நாடு) மற்றும் காலத்தை கவனத்தில் வைத்திருக்க வேண்டும் என்று சொல்கின்றனர். இது முக்கியமானது. எதனால் உலகத்தில் இப்போது பல விதமான சிக்கல்கள் நிறைந்துள்ளன? ஏன் என்றால் சிலர் 2000 அல்லது 1400 வருடங்கள் பழமையான மறைநூல்களையும்,அறிவுரைகளையும் செயல்படுத்த விரும்புகிறார்கள். ஆனால் அவைகள் இக்காலத்திற்கு பொருத்தமே இல்லாதவை. மத்திய கிழக்கு நாடுகளில் இவை மிகப் பெரிய பிரச்னையாக உள்ளன. சிலர் இன்றைய நடைமுறைக்குப் பொருந்தாத விதிமுறைகளை நடைமுறைப்படுத்த விரும்புகின்றனர். அவை அந்த சமயத்தில் பொருத்தமானவையாக இருந்தன. ஆனால் தற்போது பொருத்தமானவையே அல்ல.  

கே: மனிதனின் சிறந்த வெளிப்பாடு எது? தியானமா அல்லது சேவையா?

குருதேவ்: இரண்டுமே தேவை. இது எப்படியென்றால் எது சிறந்தது தொலை காட்சியைப் பார்ப்பதா அல்லது கேட்பதா என்று கேள்வி கேட்பது போன்று உள்ளது. நான் என்ன கூறமுடியும்?இரண்டும் ஒன்றோடொன்று இணைந்தது. தொண்டு என்பதன் பொருள் என்ன? உங்களால் சிறிதளவாவது என்ன செய்ய முடியுமோ அதைச் செய்யுங்கள் என்பது தான். உங்களால் என்ன முடியாதோ அதைச் செய்யாதீர்கள். புரிந்து கொண்டீர்களா?

கே: நாம் பல்வேறு விதமான அருஞ்சுவை பதார்த்தங்களைச் செய்கிறோம், அப்படியும் அவை நமக்கு அலுத்து விடுகின்றன. ஆனால் விலங்குகள் ஒரே விதமான தீவனத்தைத் தினமும் உண்கின்றன ஆயினும் அவைகளுக்கு சலிப்பு ஏற்படுவதில்லையே? கடவுள் ஏன் விலங்குகளுக்கு அத்தகைய அருள் கூர்ந்தார்?

குருதேவ்: அவைகள் நிகழ்காலத்தில் இருக்கின்றன, நீங்கள் ஸ்ம்ரிதியில் (நினைவுகள்) இருக்கின்றீர்கள்.

கே: ஒருவர் பஞ்சாங்கத்தை அறிவதன் மூலம் தளைகளிலிருந்து விடுபட முடியும் என்று கூறப்படுகின்றது. தயை கூர்ந்து, பஞ்சாங்கம் என்றால் என்ன என்று கூறுங்கள்.

குருதேவ்: பஞ்சாங்கம் என்பது கோள்கள் மற்றும் விண்வெளிப் பொருட்களின் இயக்கத்தைக் குறிப்பிடுவது. ஜோதிடம் என்பதே பஞ்சாங்கம் தான்.(விண்வெளிக் கிரகங்களின் இட நிலை மற்றும் ஒரு மனிதனின் மீது அவற்றின் தாக்கம் இவற்றைக் காட்டும் உபகரணம்). உதாரணமாக, ஒருவர் உங்கள் மீது கோபப்பட்டால், இவன் ஏன் இவ்வாறு எனக்கு செய்தான் என்றே எண்ணிக் கொண்டிருப்பீர்கள். உங்களுக்கு ஜோதிடம் தெரிந்தால், அப்போது, அவன் மீது எந்தத் தவறும் இல்லை என்று உணர்ந்து கொள்வீர்கள். இதற்குக் காரணம் என்னுடைய ஜாதகத்தில் தற்போதுள்ள கிரக இயக்கம் தான். நான் இந்த அவமானத்தை பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று புரிந்து கொள்ளுவீர்கள். இதுதான் முக்தி ( விடுதலை). அந்த மனிதனுடன் உங்கள் மனம் ஈடுபட்டிருந்த விருப்பு வெறுப்பு (ரக - த்வேஷ ) நிலையிலிருந்து விடுபட்டு விட்டது.  காலம் சரியில்லை , அதனால் தான்  நல்லவர்கள் கூடச் சண்டை இடுகின்றார்கள், காலம் நன்றாக இருந்தால், பகைவன் கூடத் தேவையான உதவியை செய்வான் என்பதைப் புரிந்து கொள்ள ஜோதிஷம் உதவுகின்றது. இதை புரிந்து கொள்ளும் போது  உங்கள் மனதில் உள்ள (ரக - த்வேஷ) கரைந்து, உங்கள் மனம் அமைதி அடைகின்றது.

முக்தி என்பது என்ன? உதாரணமாக, நீங்கள் நிறைய தண்ணீர் குடித்து விடுகிறீர்கள். கழிவறைக்குச் செல்லும் தேவை ஏற்படுகிறது. ஆனால் நீங்கள் ஒரு கூட்டத்தில், நடுவில் எழுந்து செல்ல முடியாத நிலையில் இருக்கிறீர்கள். எப்படியோ, இறுதியில், கழிப்பறைக்குச் சென்று வந்தவுடன், அவ்விடர் தீர்ந்து "ஆஹ் ! ஒரு வழியாக விடுபட்டேன்! என்று  உணருகின்றீர்கள்.

அது  போன்று  பசியிலிருந்து விடுபடுவதும் முக்தி. அது போன்று, பஸ்சில் அல்லது ரயிலில் ஒரே இடத்தில் 8-10 மணி நேரம் உட்கார்ந்திருக்கிறீர்கள். பயணம் முடிந்து எழுந்ததும், உங்கள் கை கால்களை நீட்டி மடக்கி 'ஆ விடுதலை அடைந்தேன் என்கிறீர்கள். இறுதித் தேர்வு நாளன்று குழந்தைகள் வீடு திரும்பி, பெரு மகிழ்ச்சியுடன் புத்தகங்களை ஒதுக்கி வைத்து விட்டு விடுதலை அடைந்ததாகக் கூறுகிறார்கள். அது போன்று வீட்டில் ஒரு திருமணம் அல்லது விருந்தினர் கூட்டம் முடிவடைந்து, விருந்தினர் அனைவரும் திரும்பிச் சென்ற உடன், ஹாய் எல்லாம் முடிந்து விட்டன அல்லவா? என்கிறீர்கள்.

எப்போதெல்லாம் நீங்கள் ஹாய் ஆக உணருகின்றீர்களோ (ஓய்வில் தளர்வடைந்து) அப்போதெல்லாம் அது முக்தி என்று எண்ணிக் கொள்ளுங்கள். எப்போதெல்லாம் ஹாய்-தௌபா (கூச்சல் குழப்பம்) ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் அது தளை என்று அறிந்து கொள்ளுங்கள். வாழ்வில் முழு திருப்தி ஏற்படும் போது அது ஜீவன் முக்தி (உயிருடன் இருக்கும்போதே விடுபட்ட நிலை). அது, "இந்த  வாழ்க்கையில் இனி எனக்கு எதுவும் தேவை இல்லை. நான் முழு திருப்தியுடன் இருக்கின்றேன், என் சக்திக்கு இயன்றவரை பிறருக்கு உதவுவேன். இந்த முழு உலகமும் என்னுடையது. அது என்னை, மற்றும் என் இயல்பையே  பிரதிபலிக்கின்றது." என்று நீங்கள் உணரும் நிலையே ஆகும்.இந்த ஞானத்தை நீங்கள் உங்கள் உள்ளிலிருந்து உறுதியுடன் அடைந்து நிலைப் படுத்திக் கொள்ளும் போது, பூரண திருப்தியும் ஆனந்தமும் உங்களில் மலருகின்றன. எல்லாக் குறைகளும் மறைந்து விடுகின்றன. விருப்பம் என்று ஒன்று தோன்றுவதற்கு முன்னரே அது கிடைத்து விடுகின்றது.தேவையான ஞானம் எல்லாம் உடனடியாக வந்தடைகின்றன. இதுதான் ஜீவன் முக்தி.

கே: குருதேவ்! தாங்கள் தெய்வம் .ஆயினும் எந்த தெய்வத்தை நீங்கள் நம்புகிறீர்கள்?

குருதேவ்: எந்த தெய்வத்தை பற்றிக் கேட்கின்றீர்கள்? பல தெய்வங்கள் உள்ளனவா என்ன? ஒரே தெய்வம் தான். அத்தெய்வம் உங்களில், என்னில் நிறைந்திருக்கின்றது. இரண்டு கிடையாது.

கே: குருதேவ்! மரணம் என்பது என்ன? மரணத்திற்குப் பின்னர் ஒரு மனிதனுக்கு என்ன ஆகின்றது? சிலர் ஒருவன் பிசாசாகி விடுவான் என்கிறார்கள். வேறு சிலர், இறப்பிற்குப் பின் ஒருவன் சுவர்க்கம் அல்லது நரகத்திற்கு செல்வான் என்கிறார்கள். உண்மையில் மரணத்திற்குப் பின்னர் என்ன நிகழ்கின்றது?

குருதேவ்: அதைக் கண்டு பிடிப்பதற்கு இன்னும் நிறைய காலம் இருக்கின்றது. கண்டிப்பாக உங்களுக்கு அது தெரிய வரும். முதலில் வாழ்கை என்ன என்று புரிந்து கொள்ளுங்கள்.

கே: குருதேவ்! இறப்பிற்குப் பிறகு, நமது உடல் உறுப்புக்களைத் தானம் செய்யலாமா?

குருதேவ்: ஆம். செய்யலாம். உடல் உறுப்புக்களைத் தானம் செய்வதால் அடுத்த பிறவியில் பிரச்சினை எதுவும் இருக்காது. பார்வையற்றவராகவோ, உடல் ஊனமுற்றவராகவோ அடுத்த பிறவியில் பிறக்க மாட்டீர்கள். அதனால் அதிகப் படியான கண்ணும் கிடைக்காது (சிரிப்பு) இப்பிறவியில் என் இரு கண்களைத் தானம் செய்து விட்டேன், அதனால் அடுத்த பிறவியில் நான்கு கண்கள் வேண்டும் என்று கேட்காதீர்கள் அப்படி எதுவும் நடக்காது.

கே: ஆச்ரமத்திலுள்ள சுமேரு மண்டபத்தின் கீழே குகையில் சிலர் தவம் செய்து வருவதாகக் கூறுகிறார்கள். அவர்கள் இன்னும் விடுதலை அடைய வில்லையா?

குருதேவ்: அங்கே யாரும் தவம் செய்யவில்லை. அப்படி எதுவும் நிச்சயமாக கிடையாது.

கே: நமது பெற்றோர் நமது முதல் குரு என்று கூறப்படுகின்றது. இங்கு வருபவர்களில் எத்தனை பேர் தங்கள் பெற்றோரை மதிக்கிறார்கள்? நீங்கள் அது பற்றி ஏதேனும் கூற விரும்புகிறீர்களா?

குருதேவ்: ஆம்.நிச்சயமாக அவர்கள் தங்கள் பெற்றோருக்கு மரியாதை காட்ட வேண்டும். ஒவ்வொருவரும் தங்கள் பெற்றோரை மதித்து அவர்களுக்குக் கீழ்ப்படிய வேண்டும்.

கே: குருதேவ்! எனது நண்பன் இதை மிகவும் விமரிசித்து கெட்ட விதமாக பேசுகிறான். நான் ஆசீர்வாதத்தை நம்புகிறேன். பயிற்சியிலும் பங்கேற்றுக் கொண்டிருந்திருக்கிறேன். நான், என் நண்பனுக்காக மிகவும் வருந்துகிறேன்.

குருதேவ்: பரவாயில்லை. இதற்காக நீங்கள் வருந்த வேண்டாம். புன்முறுவலுடன் இருங்கள்.