கச்சிதமின்மையை கச்சிதமாய் ஏற்றுகொள்ளுங்கள்

ஆகஸ்ட் 30, 2013 பெங்களூரு, இந்தியா

கே: இடைவிடாது குற்றச்சாட்டுக்கு ஆளாகும் போது என்ன செய்வது, குறிப்பாக நமக்கு மிகவும் நெருங்கியவரிடமிருந்து வரும் போது?

குருதேவ்: இடைவிடாது வரும் போது அது பழகிவிடும் (சிரிப்பு). எனவே அதைப் பற்றி கவலை வேண்டாம். யாராவது தொடர்ந்து குற்றம் சாற்றிக் கொண்டிருந்தால், அதை பொருட்படுத்த வேண்டாம்.

தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை குறை கூறிக் கொண்டே இருக்கும் போது, குழந்தைகள் அதை கண்டு கொள்வதை நிறுத்தி விடுவது அடிக்கடி நடக்கிறது. இது ஏனென்றால் தங்கள் அம்மா இப்படி தான் தினமும் செய்யப் போகிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது, சரி தானே?

பிரச்சினை எப்போதென்றால், எந்தக் குறையும் சொல்லாதவர் திடீரென்று குறை சொல்லும் போது தான். எப்போதும் முரட்டுத்தனம் காட்டாதவர், திடீரென்று முரட்டுத்தனமாய் ஆகும் போது, அது உங்களை அதிகம் பாதிக்கிறது, இல்லையா?

பிரச்சினையை நிரந்தரமாக ஆக்கிவிடுகிறீர்கள் அல்லது நடப்பதை சமாளிக்கும் திறன் இருப்பதில்லை. இந்த இரண்டு மட்டும் தான். எனவே சூழ்நிலைகளை திறமையாய் சமாளித்து அது நிரந்தரமாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.  சற்று கச்சிதமாய் இல்லாமலிருப்பதற்கு ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு. மற்றவர்களுடைய கச்சிதமின்மையையும் உங்களுடைய கச்சிதமின்மையையும் ஏற்றுக் கொண்டாக வேண்டும். பிறருடைய கச்சிதமின்மையை ஏற்றுக் கொள்ள முடியாத போது கோபம் வருகிறது. உங்களுடைய கச்சிதமின்மையை ஏற்றுக் கொள்ள முடியாத போது குற்ற உணர்வும் உங்கள் மீதே கோபமும் வருகிறது. இந்த இரண்டு நிலைகளுமே உங்களுக்கு ஆரோக்கியமானதும் உகந்ததும் அல்ல. எனவே, வாழ்க்கையில் கச்சிதமின்மைக்கு சற்று இடம் கொடுத்து, மேலே செல்லுங்கள். இறந்தகாலத்தில் சிக்கி நிற்காதீர்கள்.

கே: குருதேவ், ஸ்ரீ கிருஷ்ண பகவான் அர்ஜுனருக்கு தன்னுடைய விஸ்வரூப தரிசனத்தை அளித்தார். நீங்கள் உங்களுடைய விஸ்வரூப தரிசனத்தை எப்போது யாருக்குக் காண்பிக்கப் போகிறீர்கள்?

குருதேவ்: இந்த முழு படைப்பும் பகவானின் வடிவம். இதுதான் விஸ்வரூப தரிசனம் என்பதின் பொருள். அப்படியென்றால், ஒரு பகவானை உங்களை சுற்றி உள்ள எல்லாவற்றிலும் காண்பது, அது ஆறோ, மலையோ, கற்களோ, மக்களோ அல்லது விலங்குகளோ.

அன்பே இறைவன். இந்தப் பார்வையை நீங்கள் முதலில் கைக்கொண்டாக வேண்டும், அப்போது தான் இறைவனின் பிரபஞ்ச வடிவை உங்களால் உணர முடியும். இந்த உலகைப் பார்க்கும் குறுகிய பார்வை உதவாது. ஏனென்றால், ‘ஓ, இவர் அப்படி, அவர் அப்படி’, என்று நீங்கள் எண்ணிக கொண்டிருக்கிறீர்கள். உங்கள் பார்வை வேட்கைகளாலும், துவேஷங்களாலும் மங்கலாகி இருக்கும் போது உங்களால் இறைவனின் பிரபஞ்ச வடிவை உணர முடியாது. முதலில் நீங்கள் எல்லாவற்றையும் ஒன்றிணைக்கும் அன்புப் பார்வையை நீங்கள் கைக்கொள்ள வேண்டும், எப்படியும் அதை நான் உங்களுக்கு அளித்து வருகிறேன். இது உங்களுக்கு கைவந்தால் இறைவைனின் விஸ்வரூப வடிவை நீங்கள் தானாக பார்ப்பீர்கள்.

கே: குருதேவ், மனிதப் பிறவி மிக உன்னதமானது மற்றும் 84 இலட்சம் யோனிகளைக் (பிறவிகள் அல்லதி மெய்யுடல் எடுப்பது) கடந்த பின்னர் தான் இந்தப் பிறவி கிடைக்கிறது என்று சொல்கிறீர்கள். ஆனால் இன்றைய மனிதர்கள், அதிகாலையில் எழ வேண்டியிருக்கிறது, புற நகர ரயிலிலோ அல்லது இரு சக்கர வாகனத்திலோ அலுவலகத்திற்கு அவசரமாய்ச் சென்று, பல பிரச்சினைகளை சந்தித்து, முழுதும் களைப்படைந்தே வீட்டிற்கு வந்து தூங்க வேண்டியிருக்கிறது. சில சமயம் மன அழுத்தத்தில் தூக்கம் கூட வருவதில்லை. இந்தப் பாடு படுவதற்கு ஏன் 84 இலட்சம் யோனிகளைக் கடந்து வர வேண்டும் என்று நினைக்கிறேன்.

குருதேவ்: இது ஒரு நல்ல சிந்தனை. ஹிந்தியில் ஒரு பழமொழி இருக்கிறது: ‘அஜ்கர் கரே நா சாக்ரி, பண்ச்சி கரே நா காம். தாஸ் மலுகா கே கையே, சப்கா டாட்டா ராம்’ (இறைவன் எல்லோருக்கும் அளிப்பதால், ஒருவர் எதற்கும் எந்த முனைப்பும் செய்ய வேண்டாம்)

எல்லோருக்கும் எல்லாவற்றையும் அளிப்பது இறைவன் என்ற நம்பிக்கை ஒருவருக்கு இருந்தால், என்ன வந்தாலும் சரி நீங்கள் உங்கள் உற்சாகத்தை இழக்கவே மாட்டீர்கள். நீங்கள் அலுவலகம் செல்லும் போதோ அல்லது புற நகர ரயிலில் செல்லும் போதோ, உங்களைச் சுற்றிப் பாருங்கள், தன் தினசரி கடமைகளிடையே அவ்வளவு நல்ல நேர்மறையான எண்ணங்களை கொண்ட நல்லவர்கள் இருக்கிறார்கள்.

அதைப் பற்றி கவலைப்படுவதினால் எந்த வேலையும் முடிந்துவிடாது. அறிவுபூர்வமான எண்ணங்களாலும் புத்திசாலிதனமான செயல்களாலுமே முடிக்கப்படுகிறது. அதற்கு உங்கள் மனம் அமைதியாகவும் ஆனந்தமாகவும் இருக்க வேண்டும். வேலையில் அவ்வ்வளவு பிரச்சினைகள் இருக்கும் போது அந்த அமைதியையும் ஆனந்தத்தையும் ஏற்படுத்துவது எப்படி? எனக்குத் தேவையான எல்லாவற்றையும் அளிப்பதற்கும் பார்த்து கொள்ளவும் இறைவன் இருக்கிறார் என்ற நம்பிக்கை வைப்பதின் மூலம்.

நீங்கள் விரும்புவதெல்லாம் நிறைவேறுகிறது என்று உங்களில் எத்தனை பேர் உணர்கிறீர்கள்? (அவையிலிருக்கும் பல அடியவர்கள் கைகளை உயர்த்துகிறார்கள்).

கே: என்னால் எதையும் இடைவிடாமல் செய்ய முடிவதில்லை. இந்த குணத்தை நான் எப்படி வளர்த்துக்கொள்வது?

குருதேவ்: இதை நீங்களாகவே உணர வேண்டும். எப்படி உங்களால் எதையுமே இடைவிடாமல் செய்ய முடியவில்லை என்று கூறுகிறீர்கள்? உங்களை நீங்களே ஏன் அப்படி முத்திரை குத்திக் கொள்கிறீர்கள்?முதலில் உங்களை நீங்களே உண்மையாக அறியவில்லை என்பதை ஒத்துக் கொள்ளுங்கள். உங்களையே உங்களுக்குத் தெரியாத போது, உங்களுள் இருக்கும் நீங்கள் செய்யக்கூடிய திறன் உங்களுக்குத் தெரியாது.

எத்தனை விஷயங்கள் உங்களால் செய்யமுடியும் என்பதைப் பற்றி உங்களுக்கு எதுவும் தெரியவில்லை. எனவே முதலில் நீங்கள், ’என்னால் இதை இடைவிடாமல் செய்ய முடியாது’ என்ற முத்திரையை நீக்குங்கள். அது இறந்த காலம். இப்போது நீங்கள் வேறு. ஒவ்வொரு கணமும் நீங்கள் புதியவர், முன்பு எப்படி இருந்தீர்களோ அதிலிருந்து வேறானவர்.

நம் வாழ்கை ஒரு நதி போன்றது. ஒரே தண்ணீரில் இரு முறை இறங்க முடியாது. எனவே வாழ்கை என்பது ஒரே நேரத்தில் புதிதானது மற்றும் புராதனமானது. உங்கள் பேருணர்வு கற்களைவிட, நதிகளை விட, மலைகளை விட, பிரபஞ்சத்தில் உள்ள மற்ற எவற்றையும் விட பழமையானது. உண்மையில், அது மிகவும் பழமையானது. சூரியனைப் போல அவ்வளவு பழமையானது; சூரியனின் வயது 1900 கோடி வருடங்கள். ஆனாலும் சூரியனின் கிரணங்கள் ஒவ்வொரு தினமும் புத்தம் புதிது. அதே கிரணங்களை அடுத்த நாள் பார்க்கவே முடியாது.

கே: என் வாழ்கையின் முழு வீச்சையும் எப்படி வாழ்வது?

குருதேவ்: மிகச் சரியாக இதை தான் நீங்கள் இங்கு (வாழும் கலையில்) கற்றுக் கொள்கிறீர்கள். வாழ்க்கையில் உள்ள எதிரெதிர் விஷயங்களுக்கு இடமளிக்கும் திறன்: செயலில் ஓய்வு. எல்லா நேரமும் இயங்கிக் கொண்டிருந்தால் அது வேலைக்காகாது. ஓய்வு மட்டுமே எடுப்பதும் வேலை செய்யாது. இரண்டிற்கும் இடமளிக்க வேண்டும். புரிந்ததா? அதைப் போலவே குதூகலமாய் இருப்பது பிடித்து அதை மட்டுமே எப்போதும் செய்து கொண்டிருக்க முடியாது. எப்போதும் தீவிரமாய் இருக்கவும் முடியாது. குதூகலமும் வேண்டும் தீவிரமும் வேண்டும்.

அதைப் போலவே நீங்கள் உணர்வு பூர்வமாகவும் இருக்க வேண்டும் காரண பூர்வமாகவும் இருக்க வேண்டும். உணர்வு பூர்வமாக இருப்பவர்கள் காரண பூர்வமாய் இருப்பதில்லை, காரண பூர்வமாய் இருப்பவர்கள் உணர்வு பூர்வமாய் இருப்பதில்லை. உங்களுக்கு இரண்டும் வேண்டும். நீங்கள் நேரடியாக இருக்க வேண்டும் அதே நேரம் மென்மையாகவும் இருக்க வேண்டும். நேரடியாக இருப்பவர்கள் தங்களை முரட்டுத்தனமாய் இருப்பதாக அடிக்கடி முத்திரை குத்தப்படுவதை காண்பார்கள், மென்மையாக இருப்பவர்கள் தாங்கள் பலவீனமானவராக கருதப்படுவதை பலமுறை காண்பார்கள். இந்த இரண்டின் கலவை தேவைப்படுகிறது; நேரடியாகவும் மென்மையாகவும்.

கே: குருதேவ், ஸ்ரீ கிருஷ்ண பகவான் புருஷோத்தம யோகா வில் (உச்ச நிலை புருஷரின் யோகம்) க்ஷரா, அக்ஷரா மற்றும் உத்தம புருஷர் என்று மூன்று வகை புருஷர்களை அல்லது ஜீவன்களைப் பற்றி கூறுகிறார். இதைப் பற்றி சற்று கூறுங்களேன்.

குருதேவ்: க்ஷரா என்றால் மாறிகொண்டேயிருப்பது. முழு உலகமும் அதில் உள்ள அனைத்தும் மாறிக் கொண்டேயிருக்கிறது. எனவே இடைவிடாமல் மாறிக் கொண்டேயிருப்பது ஒரு வகை புருஷர் (மனிதர் அல்லது ஜீவன்).
உங்களுக்குள் சற்றே உற்று நோக்கினால், பலபல எண்ணங்கள் உங்களுக்குள் எழுவதையும், பலபல உணர்வுகள் உங்களுக்குள் ஏற்படுவதையும் காணலாம். உங்கள் உடல், உங்கள் எண்ணங்கள் மற்றும்  உணர்வுகள், இவை அனைத்தும் இடைவிடாமல் மாறிய வண்ணம் இருக்கின்றன. எது மாறாமலிருக்கிறதோ அது அக்ஷரா எனப்படுகிறது. இருப்பதிலேயே மிகச் சூக்ஷுமமானதும், அடிப்படைத் தத்துவமானதும் மற்றும் இவை இரண்டிற்கும் அப்பாற்பட்டதை பரம-புருஷர் என ஆழைக்கிறோம்.

கே: குருதேவ், நம்முடைய முன்னோர்கள் நம் புனித நூல்கள் எந்த ஒரு இடத்திற்கும் காலத்திற்கும் மட்டும் பொருந்துமாறு அனுமதிக்கவில்லை என்று கூறியிருக்கிறீர்கள். அப்படியென்றால், இந்தப் புனித நூல்கள் நம் முன்னோர்களான மேதைகள் எழுதிய கதைகள் தானா அல்லது அவை உண்மையான வாழ்கை நிகழ்வுகளா?

குருதேவ்: அவை அனைத்தும் உண்மையான நிகழ்வுகளே. ஆனாலும், அவற்றை எழுதும்போது அந்த விளக்கங்கள் எந்த ஒரு இடத்திற்கும் காலத்திற்கும் மட்டும் பொருந்திவிடுமாறு அனுமதிக்கவில்லை. இதுதான் நம் புனித நூல்களின் சிறப்பு.

ஒருவரை எல்லா காலத்திற்கும் எல்லா இடத்திற்கும் பொருத்தமான கவிதைகளை எழுதுமாறு சொல்வது போன்றது இது. தீபாவளி, ஹோலி போன்ற ஒரு குறிப்பிட்ட விழாவைப் பற்றியோ அல்லது ஒரு குறிப்பிட்ட நிகழ்வைப்பற்றியோ நீங்கள் ஒரு கவிதை எழுதினால் அந்த நிகழ்வின் போது மட்டுமே அதைப் பாட முடியும். ஹோலிக்கான பாட்டை மற்ற எந்த பண்டிகையின் போதும் பாட முடியாது அல்லவா? அப்படிப்பட்ட பாடல்கள் ஒரு சிறப்பான நிகழ்விற்காக அல்லது அந்த கால கட்டதிற்காக மட்டுமே.
ஆனால் சில பாடல்கள் எந்த காலத்திலும் பாட உகந்தவையாக இருக்கும். எனவே நம்முடைய புனித நூல்கள் எந்த காலத்திற்கும் எந்த இடத்திற்கும் உகந்ததாக இருக்க வேண்டும் என்பதை மனதில் கொண்டு அவற்றை இயற்றினர்.

கே: குருதேவ், ‘இருக்கும் குழப்பங்களுக்கிடையேயும் உங்களுக்குள்ளே இருக்கின்ற அந்த நிர்சலனத்தொடு கொண்டாடுங்கள். ஆழ்ந்த ஓய்வில் சின்னஞ்சிறு கிருஷ்ணரை எழுப்புங்கள், ஏனென்றால் நாம் தீவிரமாக, விகடமாக இருக்க வேண்டிய நேரம் இது! ஞானத்தை விளையாட்டாக கற்றுக்கொள்ளுங்கள்’, என்று டிவிட்டர் மூலம் கூறியுள்ளீர்கள். இதைப் பற்றப் பேசுங்களேன்.

குருதேவ்: ஆம், வெளியே இருக்கும் அத்தனை குழப்பங்களுக்கிடையே உங்களுக்குள்ளே உள்ள அந்த நிர்சலனத்தோடு கொண்டாடுங்கள். எனவே வெளியே குழப்பங்கள் இருக்கும் போது உள்ளே நிர்சலனதைக் காணுங்கள்.
ஞானம் என்பது உங்கள் தலை மேல் உள்ள பாரமாய் இருக்கக் கூடாது. அது வெகு இயல்பாக இருக்க வேண்டும். ஞானத்தைக் கொண்டு நீங்கள் சற்று விளையாட்டாக மாற வேண்டும். புரிந்ததா?

கே: நான் மிகவும் அன்பும் மரியாதையும் வைத்திருப்பவரின் முன்னே புத்திசாலித்தனமாய் இருக்க முடியவில்லை. இதனால் நான் பல முட்டாள்தனமானவற்றை செய்கிறேன். நான் என்ன செய்வது?

குருதேவ்: பரவாயில்லை, கவலை வேண்டாம். முட்டாள்தனமாக நடப்பதில்கூட ஒரு அழகு இருக்கிறது. அது கூட மக்களை கவர்கிறது.
சில நேரங்களில் தன்னுடைய நடவடிக்கையால் ஒரு முட்டாள் தரும் சந்தோஷத்தையும் வியப்பையும் ஒரு புத்திசாலியால் கூடத் தர முடியாது.