இந்தியா ஒரு ஆன்மீக நாடு

15 ஆகஸ்ட் 2013 - பெங்களூரு, இந்தியா


மகிழ்ச்சிக்கான ஒரு பயிற்சி வகுப்பு, இதுதான் நமக்கு தேவை. நாட்டில் ஒரு நெருக்கடியான நிலையில் நாம் இன்று இருக்கிறோம். எங்கும் இருண்டு,நம்பிக்கையின்மை நிலவுகிறது. விலைவாசிகள் உச்சத்திற்கு போய் மக்கள் ஒரு பாதுகாப்பில்லாத உணர்வோடு இருக்கிறார்கள். ஒவ்வொருவரும், ஒவ்வொரு நாடும், சமுதாயமும் பாதுகாப்பின்மையை உணர்ந்து கொண்டிருக்கிறார்கள். நம் இதயங்களில் புதிய நம்பிக்கையை நிரப்பும், மனதிற்கு ஒரு வழியைக் காட்டும் ஒரு ஆனந்த அலை இந்த நேரத்தில் தேவைப்படுகிறது. மாற்றத்திற்கு நீங்கள் தயாரா? (அவையோர் பலமாக ஆம் என்று சொல்கிறார்கள்)

சமுதாயத்தில் ஒரு பெரிய மாற்றம், நம் மனப்போக்கில் ஒரு மாற்றம், எல்லோருக்கும் தேவைப்படுகிறது. நீதியின்மையைக் கண்டு கவலை இல்லாமல் இருப்பது கூடாது. அறியாமையை கண்டு கவலை இல்லாமல் இருப்பது கூடாது. ஆனால், நம் எண்ண ஓட்டத்தில் ஒரு மாற்றம், நம் மனப் போக்கில் ஒரு மாற்றம் மற்றும் நம் சமுதாயத்தில் ஒரு மாற்றம் தேவை.

பழக்கங்களுக்கு அடிமையாவது வெகுவாக அதிகரித்துவிட்டது இன்று. மதுவின் விற்பனை மூன்று மடங்காக உயர்ந்துள்ளது. சிறுவர்கள் கூட போதைப் பழக்கங்களுக்கு அடிமையாகிறார்கள் மற்றும் தற்கொலைகளும் நடக்கிறது. இந்த எல்லா தீமைகளும் ஏன்? இவை எல்லாம் மகிழ்ச்சியற்ற தன்மையினால் தான். ஒரு மகிழ்ச்சியான மனிதர் யாரையும் போய் தொந்திரவு செய்வதில்லை, அவர் மகிழ்ச்சியை மட்டுமே பரப்புகிறார். மகிழ்ச்சியற்ற மக்கள் தான் சமுதாயத்தில் இன்னும் அதிகம் மகிழ்ச்சியின்மையை பரப்புகிறார்கள். எனவே, இப்போது நாம் மகிழ்ச்சியை நம் சமுதாயத்திற்கு திரும்பக் கொண்டுவர வேண்டும். மேலும், அறிவும் இல்லாமல், ஞானமும் இல்லாமல் மகிழ்ச்சி இருக்க முடியாது.

சுமார் 12,000 பேர் கேரளாவிலிருந்து அவ்வளவு தூரம் வந்திருப்பதை பார்க்க அருமையாய் இருக்கிறது. உங்களிடம் இருக்கும் ஆனந்தமும் கடமையுணர்வும், நம் நாட்டைப் பற்றியும் நம் சமுதாயத்தைப் பற்றியும் நீங்கள் கொண்டுள்ள அக்கறை, இவற்றை இந்த நேரத்தில் முழுமையாக வெளிப்படுத்த வேண்டியது மிக மிகத் தேவையான ஒன்றாக இருக்கிறது. இந்த ஆனந்த அலை வெற்றிபெற்றதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி – கேரளாவில் ஆரம்பிப்பது இமயமலை வரை – ஏன் அதற்கு மேலும் செல்லும்.

இமயமலைக்கு மேலே சீனா உள்ளது, நமது சீன நண்பர்களும் உள்ளனர். பாகிஸ்தான், வளைகுடா நாடுகள், தமிழ்நாடு மற்றும் வட இந்தியா என பல பகுதிகளில் இருந்தும் வந்திருக்கிறார்கள். இந்த மகிழ்ச்சி ஸ்ரீலங்காவிற்கும் பரவ வேண்டும், ஸ்ரீலங்கா அதிகம் பாதிக்கப்பட்டுவிட்டது. உங்கள் பாட்டரிகள் சார்ஜ் (சக்தி) ஏற்றப்பட்டுவிட்டால், ஒவ்வொருவரும் உங்கள் மாவட்டத்திற்கு, கிராமங்களுக்க சென்று, அங்கு துயரை ஒழிக்கவும், வறுமையை ஒழிக்கவும், வன்முறையை ஒழிக்கவும் மற்றும் ஊழலை ஒழிக்கவும் வேலை செய்ய வேண்டும். இந்தியா திறமைகளின் இருப்பிடம். பாருங்கள், எவ்வளவு திறமைகள் இங்கு இருக்கின்றன.

உங்களுக்குத் தெரியுமா, நீங்கள் 12,000 பேரும் சேர்ந்து அருமையாய் பாடுகிறீர்கள், நீங்கள் ஆறு கோடி (கேரள மாநிலத்தின் மக்கள் தொகை) பேரும் சேர்ந்தால்? மன அழுத்தம், கவலைகளை மறந்து பாடவும் ஆடவும் தொடங்க, ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் நாம் மக்களைக் கொண்டு வர வேண்டும். மேலான இந்தியாவை நோக்கமாகக் கொள்ள நாம் மக்களைக் கொண்டு வர வேண்டும். மேலான இந்தியாவை அடைய நாம் வேலை செய்ய வேண்டிய தேவை இருக்கிறது – மேலான இந்தியாவிற்காக தொண்டு செய்யுங்கள்.

இன்று நம்மிடையே அவ்வளவு திறமையான மக்கள் காலையிலிருந்து நம்மை உற்சாகப்படுத்தி கொண்டு இருக்கிறார்கள், அவர்கள் நமக்கு பல விஷயங்கள் சொல்லியிருக்கிறார்கள். நம்முடைய பெரியோர்களுக்கு இருந்த இந்த கவலையை நாம் மனதில் கொள்ள வேண்டும். மக்கள் பலர் மற்றும் நம் முன்னோர்கள் செய்த தியாகத்தால் நாம் விடுதலை பெற்றோம். அதை நாம் பாதுகாக்க வேண்டும். கிட்டத்தட்ட நாம் அதை இழந்துவிட்டோம்.

இந்த நாட்டிற்கு எப்படி விடுதலை கிடைத்தது தெரியுமா? சத்சங்கங்களின் மூலமாக! மகாத்மா காந்தி மாவட்டம் மாவட்டமாக, மாநிலம் மாநிலமாக சென்று பெரும் சத்சங்கங்கள் நடத்தினார். இந்த சத்சங்கங்களில், மக்கள் ‘ரகுபதி ராகவ ராஜாராம்’ என்று பாடிய போது அனைவரும் சேர்ந்து கொண்டனர். ‘வந்தே மாதரம்’ என்று பாடத் தொடங்கினர்.

நாட்டில் ஒரு பெரும் ஆத்ம பலம் பெருகியது, அதுவே விடுதலையை பெற்றுத் தந்தது. இதை நாம் மறந்துவிட்டோம். நம் நாடு ஆன்மீக நாடு என்பதை மறந்துவிட்டோம்சம்ஸ்க்ருதத்தில் ஒரு பழமொழி இருக்கிறது, ‘காவ்ய ஷாஸ்த்ரா விநோதேன காலோ கச்சதி தீமாடம்.’ அப்படி என்றால், புத்திசாலியான ஒருவர் தன் நேரத்தை, ஞானம்,இசை, அறிவியல் மற்றும் மக்களை ஒன்றிணைப்பது போன்றவற்றில் செலவழிப்பார்கள். ஆனால் அறிவிலிகள் தங்கள் நேரத்தை போதை (வ்யாசனம்), சச்சரவு மற்றும் சண்டைகளில் செலவழித்து மகிழ்வார்கள். எனவே, இங்கு ஏராளமான புத்திசாலிகள் உள்ளனர். உங்களுக்குத் தெரியுமா, புத்திசாலிகள் மட்டுமே ஆன்மீகவாதியாக முடியும். நான் சொல்கிறேன், புத்தி குறைவாக உள்ளவர்கள் ஆன்மீகத்திற்கு வருவதில்லை.

யார் ஒருவர் புத்திசாலி – இதுதான் இனம் காணும் வழி? கொஞ்சம் ஆன்மீக எண்ணம் கொண்டவரே புத்திசாலி. அது இல்லை என்றால் பிறகு ஏதோ சரியில்லை என்று பொருள். கண்களுக்குத் திரையிடப்பட்ட குதிரையைப் போன்றவர்கள் அவர்கள். அவர்களுக்கு விசாலமான பார்வையில்லை. அவர்கள் தங்கள் வாழ்க்கையை பார்ப்பதில்லை. தாம் யார் என்று அவர்களுக்குத் தெரியவில்லை.
உங்களுக்குத் தெரியுமா, இந்த ஆஸ்ரமதிற்கு எதிரில் உள்ள இடம் கேரளாவின் நாராயண குருவின் ஆஸ்ரமத்திற்கு சொந்தமானது. நாங்கள் முதலில் இங்கு வந்த போது, ‘நாராயண குரு ஆஸ்ரமம்’, என்ற பெயர்ப் பலகையை பார்த்தோம். என்ன நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை வேறு யாரோ எடுத்துக் கொண்டார்கள். எனவே நாம் இங்கு நாராயண குரு ஆஸ்ரமதிற்கு எதிரில் இருக்கிறோம்.

நாராயண குரு ஏராளமான தொண்டு செய்திருக்கிறார், மேலும் மக்கள் பலரை ஒன்று சேர்த்திருக்கிறார். இந்த செய்தியைத் தான் வாழும் கலை நிறுவனம் உலகெங்கும் எடுத்து செல்கிறது. கேரளாவில் அந்த உணர்வை மறு தூண்டல் செய்ய வேண்டும். அதை நாம் உயிர்ப்போடு வைத்துக் கொள்ளவேண்டும். கேரளா கடவுளின் இடம் என்று அழைக்கப்படுகிறது. எனவே அந்த உணர்வை நாம் நம் சமுதாயத்தில் திரும்பக் கொண்டு வர வேண்டும்.

வயதிலும் உணர்விலும் உற்சாகமிக்க இளைஞர்கள் இவ்வளவு பேர் இருக்கும் போது பல ஆனந்த நிகழ்ச்சிகள் (வாழும் கலை பகுதி 1 பயிற்சி வகுப்பு) நிச்சயம் நடக்கும் என்பது உறுதி.
ஒரு முறை நான் பூனாவில் இருந்த போது, பல அரசியல்வாதிகள் என்னுடன் மேடையில் இருந்தனர். மக்கள் என்னிடம் கேட்டனர், ‘குருதேவ், இந்த ஊழல்வாதிகள் உங்களைச் சுற்றி ஏன் இருக்கின்றனர்? நான் சொன்னேன்,‘ ஊழல்வாதிகளையும் என்னிடம் அனுப்புங்கள், நான் அவர்களோடு உட்கார வேண்டும். அவர்கள் இங்கே மாற்றமடைகிறார்களா இல்லையா என்று பார்த்து விடுவோம்.’ அவர்கள் இங்கு மாறாவிட்டால் எங்கு தான் மாறுவார்கள். ஒரு மருத்துவமனை கட்டிவிட்டு, இங்கு நோயாளிகள் நுழையக்கூடாது என்றால், அதில் எந்தப் பயனுமில்லை!

மாற்றங்கள் நடைபெறக்கூடிய ஒரு புலம் ஆன்மீகம். குற்றவாளிகள் கூட மாற்றமடைய முடியும், ஏனென்றால் ஒவ்வொரு மனிதருக்குள்ளும் அழகும் மகிழ்ச்சியும் இருக்கின்றன. அதை உயர்த்துவதன் மூலம் அந்த உள்ளே உள்ள செல்வம் வெளியே வருகிறது. பிறகு எல்லா தீய நோக்கங்களையும் மக்கள் மறந்துபோகிறார்கள்; அவற்றை அப்படியே விட்டுவிடுகிறார்கள்.
ஸ்ரீ கிருஷ்ண பகவான் பகவத் கீதையில் சொல்கிறார், ‘அபி செட் சு-துராசாரோ பஜதே மாம் அனன்ய-பாக். சதுர் ஏவ ச மன்டவ்யாஹ், சம்யக், வ்யவசிதோ ஹி சாஹ்.’   

ஒருவர் எவ்வளவு தாழ்ந்து போயிருந்தாலும், ஞானத்திற்கு, தியானத்திற்கு வந்து, ஆன்மீகத்திற்கு வரும் போது, நீங்கள் அவரை மன்னித்து அவர் செய்த குறும்புகள் அனைத்தையும் மறந்து விட வேண்டும். ஏனென்றால் அவர்கள் சரியான வழியில் நடக்கத் துவங்குவார்கள். மேலும் சரியான ஞானத்தில். சமுதாயத்தை மாற்ற இந்த அறிவு, இந்த ஞானம் நம்மிடம் இருக்கிறது. எனவே நாம் யாரையும் குற்றம் சொல்வதில்லை. யார் மீதும் நமக்குக் கோபமில்லை. நாம் ஒவ்வொருவரிடமும் பரிவு காட்டுகிறோம்.

நீங்கள் அநீதியைக் காணும் போது என்ன நடக்கிறது? கோபம் வருகிறது. கோபம் வரும்போது நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்களோ அதைச் செய்ய முடிவதில்லை, ஏனென்றால் கோபம் உங்கள் சக்திகளையெல்லாம் எடுத்துச் சென்றுவிடுகிறது. அந்தக் கோபத்தை, பரிவையும் சேர்த்து படைபாற்றலில் வழிப்படுத்தும்போது உங்களால் எந்த சூழலையும் மாற்ற முடிகிறது. அந்த ஞானம், அந்த சக்தி உங்கள் அனைவருக்கும் உண்டு. நீங்கள் தியானத்தின் மூலம் பெற்ற ஆன்மிகம் அல்லது உங்கள் உள்ளுறுதி, இதில்தான் உபயோகப்படுகிறது.

ஸ்ரீ கிருஷ்ண பகவான் ஏன் இந்த மயிலிறகை தலையில் வைத்திருந்தார் தெரியுமா?ஒரு அரசனின் மணிமுடி எப்போதும் சுமையானது. எனவே மணிமுடி தரித்திருப்பவர் மகிழ்ச்சியாய் இருக்க மாட்டார். ஆனால் மணிமுடி சுமையல்ல இலகுவானது என்று மயிலிறகு குறிக்கிறது. அதன் பொருள், நீங்கள் பொறுப்புகளை ஏற்றுக் கொள்வீர்கள், ஆனால் அந்தப் பொறுப்புகள் லேசாகவும் மிக வண்ணமயமாகவும் இருக்கிறது. பொறுப்புகளின் சுமையால் நீங்கள் பாதிப்படையவில்லை.
உங்களுக்கு ஞானம் இருக்கும் போது, உங்கள் மணிமுடி சிறகைப் போல இலகுவாய் இருக்கும்! அப்படி என்றால் உங்களால் சுமையான உணர்வு இல்லாமல் பொறுப்புக்களை ஏற்றுக் கொள்ள முடிகிறது என்று பொருள். இந்த நாட்டிற்கான பொறுப்பு நமக்கு இருக்கிறது, மற்றும் இந்தப் பொறுப்பை பாதிப்பில்லாமல் தோள்களில் தாங்கப் போகிறோம்!


உங்கள் மகிழ்ச்சியை, உங்கள் உற்சாகத்தை இழந்துவிட்டால் உங்களால் எதுவும் செய்ய முடியாது என்பது உங்களுக்குத் தெரியும். எல்லாவற்றுக்கும் முதலாக உங்களிடம் அந்தக் கனல் இருந்தாக வேண்டும். உங்களிடம் அந்த உற்சாகமும் மகிழ்ச்சியும் இருந்தாக வேண்டும். இந்த மகிழ்ச்சியைக் கொண்டு சமுதாயத்தில் ஏராளம் சாதிக்கலாம்.