சேவை என்பது உங்கள் இயல்பு

ஆகஸ்ட்  22 - 2013 - பெங்களூர் - இந்தியா


கே: குருதேவ், மோட்சமடைய வேண்டும் என்று விரும்புவதும் ஒரு ஆசையே  ஆகும். அது அவசியமானதும் கூட. ஆனால் ஆசைகள் இருக்கும் வரை ஒருவர் இறைவனை உணர முடியாது என்று சொல்லப்படுகின்றது. வழிகாட்டுங்கள் குருதேவ்.

குருதேவ்: முக்தியடைய வேண்டுமென்ற ஆசை மிகவும் இயல்பானது. அனைத்து ஆசைகளும் நிறைவடைந்த பிறகு எஞ்சியிருக்கும் ஒரே ஆசை இது தான்.  முழுமையாக சரணடைந்த ஒரு நிலையில்,அதாவது சமாதி நிலையில் முக்திக்கான ஆசை எவ்வித முயற்சியுமின்றி  இயல்பாக மலருகின்றது.

முனிவர் கபீர்  என்பவர் மக்களை எப்போதும் அனைத்தையும் துறந்து விட்டு  இறைவனிடம் அர்ப்பணிக்கும்படி சொல்வார். ஒரு நாள் அவரது சீடர்கள் சிலர் அவரிடம் சென்று மிகவும் புத்திசாலித்தனமாக நடந்து கொள்ள முயற்சி செய்தனர். அவர்கள் அவரிடம்,நாம் எல்லாவற்றையும் துறந்துவிட வேண்டும் என்றால் நாம் ஏன் நாம ஜெபம் (இறைவனின் நாமத்தை உச்சரித்துக் கொண்டிருப்பது) செய்து கொண்டிருக்க வேண்டும்? அதையும் துறந்து விடலாமே என்று சொன்னார்கள். இவ்வாறு சொல்லி அவர்கள் அவர்களது வீடு, பெற்றோர், குரு மற்றும் இறைவனின் நாமத்தை உச்சாடனம் செய்தல் போன்ற அனைத்தையும் துறந்து விட்டனர். அப்போது கபீர் அவர்களிடம், "உங்கள் கோபம்,பேராசை போன்றவற்றை உங்களால் விட முடியவில்லை. ஆனால் இறைவனின் புனித நாமத்தை உச்சரிப்பதை விட்டு விட்டீர்கள். நீங்கள் என்ன  செய்துள்ளீர்கள்? என்று கேட்டார். 

இறைவனின் நாமத்தை உச்சரிப்பதை எவ்வித முயற்சியும் தூண்டுதலும் இன்றி   இறைவனோடு ஒன்றி விட்ட தீவிர பக்தி நிலையில் இயல்பாக நீங்களாகவே விட்டு விடுவதென்றால் பரவாயில்லை.   

கபீரின் சீடர்கள் இறைவன் நாமத்தை உச்சரிப்பதற்கு சோம்பலாக இருப்பதாக சொல்லி இருக்கின்றனர். நானும் நேற்று இதை பற்றி பேசியுள்ளேன். மக்கள் இதை செய்வது மிகவும் சலிப்பாக உள்ளது என்று பல நேரங்களில் சொல்கின்றனர். நீங்கள் உணவு உண்ணும் போது சோம்பலாகவும் சலிப்பாகவும் உணருவதில்லை. பல் துலக்குவதற்கும் குளிப்பதற்கும் சலிப்படைவதில்லை. ஆனால் ஏதேனும் நல்ல விஷயம் செய்யும் போது மட்டும் சோம்பலடைகின்றீர்கள். உங்களை நீங்களே கவனியுங்கள். என்ன செய்கின்றீர்கள் எங்கே சென்று கொண்டிருக்கின்றீர்கள் என்று பாருங்கள். 

அதனால் தான் கிருஷ்ண பகவான் பகவத் கீதையில், அதாவது  இந்த உலகத்தில் யாரும் எதுவுமே செய்யாமல் இருக்க முடியாது என்பதே இதன் பொருள். எதையாவது கொஞ்சமாகவாவது நாம் செய்ய தான் வேண்டும். அப்படி செய்வது எதுவாக இருந்தாலும் அதை நாம் விவேகமும், பகுத்தறிவும் பயன்படுத்தி செய்ய வேண்டும். வெறும் மனம் போன போக்கில் செய்யக் கூடாது. இந்த உலகத்திற்கு வந்து விட்ட பிறகு சிறிதளவாவது அனைவருக்கும் பயன் தரும் நல்லவற்றை செய்யுங்கள். நமக்கு இதனால் என்ன கிடைக்கும் என்பதையே நினைத்து அதிலேயே சிக்குண்டு கிடக்காதீர்கள். இந்த உலகத்திலிருந்து நீங்கள் கொண்டு செல்ல போவது  எதுவும் இல்லை. இங்கே கொண்டு செல்வதற்கு எதுவும் இல்லை. நீங்கள் கொடுப்பதற்காக வந்துள்ளீர்கள். அனைவருக்கும் பயன் செய்வதற்காகவே நீங்கள் இங்கே வந்துள்ளீர்கள்.

இவ்வாறு சேவை செய்வதில் நீங்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டும். சேவை செய்வதில் எந்த சந்தோஷமும் கேளிக்கையும் இல்லை என்று குறை கூறாதீர்கள். மகிழ்ச்சியையோ அல்லது எதோ ஒரு திருப்தியையோ பெறுவதற்காக சேவை செய்வது என்பது வாழ்வில் கீழ்த்தரமான ஒரு அணுகு முறை. அவை நீண்ட காலம் நீடித்திருக்காது. நீங்கள் செய்தே தீரவேண்டும் என்பதற்காக சேவை செய்யுங்கள். வேறு வழியில்லை. இங்கே பல ஆசிரியர்கள் அமர்ந்திருக்கின்றீர்கள். 

மகிழ்ச்சி அளிக்கின்றது என்பதற்காக நீங்கள் பயிற்சிகளை கற்பித்தால் அந்த மகிழ்ச்சி நிலையானது இல்லை. சிறிது காலத்திற்கு பிறகு உங்களுக்கு அதில் ஆனந்தம் கிடைக்காமல் போகலாம்.ஆனால் மக்களுக்கு இது தேவைப்படுகின்றது. அவர்கள் இதனால் பயனடைகின்றனர் என்பதற்காக நீங்கள் கற்பிக்கும் போது அது நிச்சயமாக நிலையத்திற்கும்.இன்பம் பெறுவதற்காக மட்டும் சேவை செய்தால் நீங்கள் சுயநலம் மிக்கவராகின்றீர்கள்."சேவை செய்வது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கின்றது" என்று சொல்லிக்கொண்டு பல சேவை செய்ய வருகின்றனர்.  சிறிது காலத்திற்குப் பிறகு அவர்கள் எதையாவது எதிபார்க்கத் துவங்கி விடுகின்றனர் அல்லது எல்லாவற்றையும் குறை சொல்லத் துவங்கி விடுகின்றனர்.   

அவர்களை விட சிறந்த முறையில் யாராவது சேவை செய்தால் அவர்களிடம் குற்றம் கண்டு குறை கூறி அவர்கள் முன்னேறி செல்லவிடாமல் தடுத்து கீழே இறக்குவதற்கான முயற்சிகளை செய்கின்றனர். "நான் மிக சிறப்பாக சேவை செய்கின்றேன். யாரும் என்னை அங்கீகரிப்பதோ, பாராட்டுவதோ  இல்லை" என்று கவலைப்படுகின்றனர். உங்கள் மனம் உங்களுக்கே தெரியாமல் உங்களை பல வழிகளில் வலையில் சிக்க வைக்கின்றது. அதனால் தான் குரு இருக்கும் போது மனம் இருப்பதில்லை, மனம் இருக்கும் போது குரு இருப்பதில்லை என்று சொல்லப்படுகின்றது. (குறுகிய ஆசைகள், ஏக்கங்கள் ஆகியவற்றில் மனம் சிக்குண்டு இருக்கும் போது ஒருவர் பரந்த கண்ணோட்டம், எல்லையில்லா இறைத் தன்மை ஆகியவற்றை காணத் தவறி விடுகின்றனர்) ஒன்று குரு சொல்வதை கவனிக்கலாம் அல்லது உங்கள் மனம் சொல்வதை கவனிக்கலாம்.

பண்டைக் காலத்தில் குருமார்கள் மனம் என்பதை அழிக்க முயற்சி செய்தனர். சீடர்களின் விருப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படவே இல்லை. நீங்கள் மைசூர் செல்ல வேண்டுமென்று விரும்பினால் குரு உங்களை ஹைதராபாத் செல்ல சொல்வார். வெளிப்படும் உங்கள் ஆசைகளை, மிகச் சிறிய ஆசைகளைக் கூட அவர்கள் அழிக்க முயன்றனர். நீங்கள் மிகுந்த பசியுடன் இருக்கும் போது வேண்டுமென்றே அரை மணி நேரமாவது உங்களை உட்கார வைத்து பேசத் துவங்குவார்கள். ஆசைகளை அழிப்பதற்கென்று இவ்வாறெல்லாம் செய்வார்கள். ஏனென்றால் ஆசைகளை கடந்து விட்டால் இந்த பொருள் சார்ந்த உலகை வென்று விடலாம் என்ற நம்பிக்கை வழிகாட்டியாக இருந்தது.

உங்கள் மனம் உங்களை அமைதி இழக்க செய்கின்றது. இலக்கின்றி இங்கும் அங்கும் திருப்தியை தேடி அலைய விடுகின்றது. அதனால் சிலர் தொழிலை மாற்றிக் கொண்டே இருக்கின்றனர். அமெரிக்கா மற்றும் சில வெளிநாடுகளில் மக்கள் தங்களது சிநேகிதிகளை மாற்றி கொண்டே இருக்கின்றனர். அறுபது வயதில் 'உலகம் முழுவதும் தேடியும் தனக்கு சரியான ஆத்மார்த்தமான துணை கிடைக்கவில்லை என்று சொல்கின்றனர். ஆத்மார்த்தமான துணை எப்போது கிடைக்கும் என்று என்னைக் கேட்கின்றனர். அவர்களுக்கு நான் இன்னும் இருபது ஆண்டுகள் காத்திருந்தால் சொர்கத்தில் அவர்கள் திருமணம் செய்து கொள்ளலாம் என்று சொல்வேன். நீங்கள் மனம் போன போக்கில் போய்க் கொண்டிருந்தால் தொடர்ந்து அமைதியற்று இருப்பீர்கள்.


கே: குருதேவ், வேதங்கள் ஆதி அந்தம் இல்லாதவை என்று கூறுகிறோம் ஆனால் மந்திரங்கள் ரிஷிகளினால் ஆக்கப்பட்டவை என்றும் கூறுகிறோம். வேதங்கள் ரிஷிகளால் ஆக்கப்பட்டவை என்றால் எப்படி ஆதி அந்தம் இல்லாதது ஆகும் ?

குருதேவ்: நியூட்டன் விதி ஆதி அந்தம் இல்லாதது. அது எப்பொழுதுமே இருந்து கொண்டு இருக்கிறது. ஆனால் அதை நியூட்டன் முன் கொண்டு வந்தார். அவர் அந்த விதிகள் இருந்ததை கண்டுபிடித்தார். அதே போல் மந்திரங்கள் எப்பொழுதுமே ஆகாயத்தில் இருந்தன. ரிஷிகள் அதை கொண்டு வந்தார்கள் ரிஷிகள் அந்த மந்திரங்களை அடையாளம் கொண்டு உலகத்திற்கும் மனித குலத்திற்கும் அதை கொடுத்தார்கள். அதனால் தான் ரிஷிகள் மந்திரம் எழுதியதாக எப்பொழுதும் கூறியதில்லை.அவை உணர்வினால் உண்டானவை. அதாவது மந்திரங்கள் கண்டதும் கேட்டதும் ஆகும். ரிஷிகள் அதை வெளி கொண்டு வந்தார்கள். ரிஷிகள் எப்போதும் தங்கள் மந்திரங்களை உருவாக்கியதாக கூறவில்லை. மந்திரங்களை ஒருவரும் உருவாக்கவில்லை.

அதனால் தான் வேதங்கள் அபௌறேஷ்ய (மனித முயற்சி இல்லாமல் உண்டானது) என்று கூறபடுகிறது. பௌறேஷ்ய என்றால் மனிதனால் செய்யபடுபவை. எனவே மந்திரங்கள் எப்பொழுதுமே இருந்திருக்கின்றன. நியூட்டன் விதிகள் நியூட்டன் செய்ததோ அல்லது உருவக்கபட்ட்தோ அல்ல. அவை எப்போதுமே இருந்திருக்கின்றன. நியூட்டன் அதை கண்டுபிடித்தார். மந்திரங்கள் எப்போதுமே இருந்தன. அதை ரிஷிகள் கண்டுபிடித்து வெளிகொண்டு வந்தனர்.

கே: பல வருடங்களாக தர்மத்தின் விளக்கத்தை ரிஷிகளும் சொல்லி இருக்கிறார்கள்.ஆனால் அந்த தர்மத்தின் தூய்மையை எப்படி நிலை நாட்டிக்கொள்வது ?

குருதேவ்: தர்மத்தின் வளர்ச்சியாலும், மூட நம்பிக்கைகளை தள்ளி வைப்பதாலும் முடியும். தர்மமும் விஞ்ஞான ரீதியானது தான். பார்க்க போனால் விஞ்ஞானமும் தர்மமும் ஒன்றுக்கு ஒன்று முரண்பட்டவை அல்ல. விஞ்ஞானமும் வளர்ந்து கொண்டிருக்கும் ஒரு பாடம் தான். தூய்மையான எண்ணங்களால் தர்மத்தின் தூய்மையை நிலை நாட்டிக் கொள்ள முடியும்.

கே: குருதேவ், என்னுடைய அந்தராத்மாவின் வேள்வி ஞானத்தை அழுத்தமாகவும் வேகமாகவும் ஆக்க என்ன செய்ய வேண்டும்? அதை வேகமான பாதையில் எடுத்து செல்ல என்ன செய்யவேண்டும்?

குருதேவ்: ஆத்ம ஞானத்தில் வளர்ச்சி அடைய வேண்டும் என்ற எண்ணமே போதுமானது. அதில் ஆர்வமும் ஆசையும் இருந்தாலே வேக பாதையில் நீ இருக்கிறாய் என்று அர்த்தம். அதுவே ஒரு மாற்றத்தை உண்டு பண்ணும் .

கே: குருதேவ், வாழ்க்கையில் சந்தோஷமாக இருப்பவர்கள், ஒரு சீரான எண்ணங்களுடன் எந்த வித பிரச்னைகளும் இல்லாமல் இருப்பவர்கள், அநேகமாக கடவுளை தேடுவதில்லை; வாழும் கலை பயிற்சிகளிலும் சேருவதில்லை. ஆனால் முன் கோபக்காரர்கள் எதிர் மறை எண்ணங்களுடன் தங்களுடைய பிரச்னைகளை தீர்த்து கொள்ள தெரியாதவர்கள் தான் அதிகமாக கடவுளை தேடுகிறார்கள்; யோகா மற்றும் த்யான வகுப்புக்களில் சேர்கிறார்கள். இது எதனால்?

குருதேவ்: இல்லை. இந்த உலகத்தில் எல்லா விதமான மனிதர்களும் இருக்கிறார்கள். நோயாளிகளும், பலஹீனமானவர்களும்தான் பேருண்மையை தேடி அலைவார்கள் என்று இல்லை. சந்தோஷமாக, ஆரோக்யமாக சௌகர்யமாக இருப்பவர்களும் ஞானத்தை தேடுவார்கள். அதில் கொஞ்ச சதவிகிதம் வித்தியாசம் இருக்கலாம். ஆனால் பொதுவாக எல்லாரும் இப்படி தான் என்று நிர்ணயம் செய்ய முடியாது.

கே: நாம் பூஜை செய்யும் பொழுது யார் ஆராதனை செய்கிறார்? பூஜை செய்பவரும் ஆராதனை செய்பவரும் ஒருவர் தானா? அப்படியானால் இவற்றில் என்ன வித்தியாசம் மற்றும் ஆராதனை செய்வதற்கு அவசியம் என்ன ?

குருதேவ்: நதியிலும் தண்ணீர் தான், ஏரியிலும் தண்ணீர் தான் .இரண்டுமே தண்ணீர் தான். அனால் ஏரியில் தண்ணீர் வருகிறது, நதியில் தண்ணீர் ஓடுகிறது .அதே போல் சிறிய மனது பிரார்த்தனை செய்கிறது, பெரிய மனது அதை ஏற்று கொள்கிறது. எனவே இரண்டும் ஒன்றாக இருக்கிறன - அதாவது பெரிய மனது அல்லது ஆத்மா மற்றும் சிறிய மனது (அளவான மனது) எனவே சிறிய மனது அதாவது நமது சிறிய அகம் மற்றும் பெரிய மனது அதாவது நம்முடைய உயர்ந்த மனது. எல்லாமே தண்ணீர் தான். நான் சொல்வது புரிகிறதா?

நதி (சிறிய மனம்), கடல் (பெரிய மனம்) இரண்டுமே தண்ணீர் தான். நதி கடலில் சேருகிறது. அதே போல் சிறிய மனம் பெரிய மனதை நெருங்கி வருகின்றது. இவ்வுலக வாழ்வை  அனுபவிக்கும், சஞ்சலம் நிறைந்ததும் ஆசைகளும் பயமும் கொண்டதுமான சிறிய மனம்  கடலைப் போல் நிரந்தரமான ஆனந்தமயமான சக்தி நிறைந்த பெரிய மனதிடம் நெருங்கி வருகின்றது. 

கே: குருதேவ்! இந்தியாவில், மகாவீரர், புத்தர், கிருஷ்ணர் போன்ற இறைப் பெருமக்கள் தோன்றி இருந்திருக்கின்றார்கள். ஆயினும் இந்தியா கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றது. குற்றங்களும், ஊழலும் அதிகமாக இருக்கின்றன. ஏன்?

குருதேவ்: இவர்களெல்லாம் பயனற்றவர்கள் எனும் பொருள்படக் கூறுகின்றீர்களா? அவ்வாறு அல்ல. ஒரு வேளை ஆன்மீகமே இந்தியாவில் இல்லாமல் இருந்திருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். இந்தியாவின் விதி எப்படி ஆகி இருக்கும்? உங்களால் கற்பனை கூடச் செய்ய முடியாது. ஆன்மீகமற்ற பகுதிகளிலெல்லாம் அதிக வன்முறைகள் ஏற்படுவதைக் கவனித்திருக்கிறீர்களா? உதாரணமாக, எங்கெல்லாம் நக்சலைட்டுகள் இருக்கின்றார்களோ அங்கெல்லாம் அவர்கள் சமயத்தை நம்புவதில்லை,கடவுளை மற்றும் ஆன்மீகத்தை நம்புவதில்லை. கம்யுனிஸ்டு களுக்கு ஆன்மிகம் என்னும் சொல்லைக் கேட்டாலே வெறுப்பு. சமீப காலம் வரை அவர்கள் சுவாமி விவேகானந்தரை விலக்கி ஒதுக்கிக் கொண்டிருந்தார்கள்.ஆனால் எப்படியோ கடந்த ஐந்தாறு ஆண்டு களாக, அவர்கள் தங்கள் வீடுகளில், விவேகனந்தரின் படத்தை வைத்துக் கொள்ளத் துவங்கியுள்ளார்கள். வேறு வழியின்றி ஆன்மீகத்தை போற்றத் துவங்கியுள்ளார்கள். இதுநாள் வரை அவர்கள் தோற்றுவித்தது என்ன? வன்முறை கலாச்சாரம் மட்டுமே. வேறெதுவும் இல்லை. அல்லவா?

எனவே,ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு ஆன்மிகம் அவசியம். இல்லையென்றால்,இந்தியா எப்போதோ பால்கன் நாடுகளாகியிருக்கும். ஆந்திரப் பிரதேசத்தில் என்ன ஆயிற்று பாருங்கள். ஒரு பெண்மணி தனது சொந்த நலனுக்காகவோ, ஓட்டுக்களைப் பெறுவதற்காகவோ, ஆந்திராவைப் பிரிக்க எண்ணும் வரையில் எல்லாமே சரியாகத் தான் இருந்தது. இப்போது எல்லா இடங்களும் தீப்பிடித்து எரிகின்றன. ஒரு மாதம் மக்களிடையே அமைதியற்ற நிலை இருந்து வந்து இன்று ஆந்திரப் பிரதேசத்திலேயே இயக்கமற்ற நிலை ஏற்பட்டுவிட்டது. ஆன்மீகம் தான் இந்தியாவை நிதானத்தில் வைத்திருக்கின்றது. இந்தியாவின் ஆன்மீகக் குணத்தினாலேயே நாம் அனைவரையும், உலகின் எல்லா சமயங்களையும், அரவணைத்துக் கொண்டோம். எல்லா இனத்தவருக்கும் இங்கு இடம் அளித்தோம். இந்தியாவில் மட்டும் தான் யூதர்கள் ஒரு நாளும் துன்புறுத்தப்படவில்லை. அவர்களுக்கு உலகின் ஒவ்வொரு பகுதியிலும் துன்பங்கள் ஏற்படுத்தப்பட்டன. இரானிலிருந்து வந்த பார்சி மக்கள் இந்நாட்டு மக்களுடன் நன்கு கலந்துவிட்டனர். எல்லா சமயத்தவரும் இங்கு நல்லிணக்கத்துடன் இருந்து வருகின்றனர்.இங்கு அனைவருக்கும் உண்மையான வரவேற்பு இருக்கின்றது. இவை அனைத்தும் ஆன்மீகத்தினாலேயே ஏற்பட்டது. ஆன்மீகமே அனைத்து சமயத்தவரையும் ஒற்றுமையாக இணைக்கின்றது. ஆன்மீகமற்ற வெறும் சமயப் பற்று நாடாக இருந்திருந்தால், இப்படி இருந்திருக்காது.

ரோமில் ,கான்ஸ்டாண்டிநோப்பிளில் என்ன நடக்கின்றது பாருங்கள். தேவாலயம் அழிக்கப்பட்டு மசூதி எழுப்பட்டது, இல்லையெனில் மசூதி அழிக்கப் பட்டு தேவாலயம் எழுப்பப்பட்டது. இத்தகைய நடவடிக்கைகளில் லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர் அனைத்து மக்களின் மனங்களையும் இதயங்களையும் ஒருங்கிணைப்பதற்கு ஆன்மீகமே தேவையாகிறது. எந்த சமயத்தை அல்லது சமயப் பிரிவை ஒருவர் பின்பற்றுகிறார் என்பது முக்கியமல்ல. ஒரு நல்ல மனிதனாக, இறைமையுடன் இணைந்து வாழ்வதே மிகவும் முக்கியமானது. எகிப்தில் என்ன நடந்து கொண்டிருக்கின்றது, நேற்று இரவு சிரியாவில் என்ன நடந்தது என்று உங்களுக்குத் தெரியுமா? நம்பவே முடியாது( மக்களின் அமைதியின்மையையும், வன்முறையையும் குறிப்பிட்டு), ஒவ்வொரு நாளும் பலர் கொல்லப்படுகின்றார்கள், பலர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.

கே: ஆன்மீகத்தில் இருத்தல் என்னும் சொல்லை அடிக்கடி கேட்கின்றேன்.இருப்பது  என்பது என்ன? அது ஒரு மன நிலையா?

குருதேவ்: இருத்தல் என்றால் இருத்தல் தான். நீங்கள் காது என்றால் என்ன அதை கண்களோடு எப்படி ஒப்பிடமுடியும் என்று கேட்டால் நான் என்ன பதில் கூறுவது? ஒரு வேளை, ஒருவர் உங்களுடன் பேசிக் கொண்டிருக்கும் போது உங்கள் மனம் வேறெங்கோ சஞ்சரித்து கொண்டிருந்தால் நீங்கள் அங்கு இருக்கவில்லை என்று பொருள் படும். நீங்கள் அங்கு இல்லை என்று விளக்கிக் கூற முடியும். நீங்கள் ஓரிடத்தில் இருந்தால் அங்கு ஒவ்வொரு சொல்லையும் கவனித்துக் கேட்கின்றீர்கள். அது தான் இருத்தல் என்பது. நீங்கள் பயத்துடன் இருக்கும் போது முழுமையாக இருக்கின்றீர்கள்( முழு கவனத்துடன், விழிப்புணர்வுடன் அந்த க்ஷணத்தில் இருப்பதைக் குறிக்கும் வகையில்). ஏதோ ஒன்றின் மீது அல்லது யாரோ ஒருவர் மீது முழு அன்புடன் இருக்கும் போது,உங்கள் முழு கவனமும் அங்கு நிலை பெற்றிருக்கின்றது. இருத்தல் என்பது உங்களைச் சுற்றி உள்ளவற்றைப் பற்றிய முழு உணர்வுடன் இருப்பது.ஒரு வேளை நீங்கள் கண்களை மூடிக் கொண்டிருக்கும்போது, உங்கள் அருகாமையில் ஒருவர் வந்தால், அதைத் தெரிந்து கொள்ளுகின்றீர்கள். பார்ப்பதில்லை ஆனால் யாரோ அருகாமையிலுள்ளதை உணர்ந்து கொள்ளுகிறீர்கள். பார்த்தல், நுகருதல்,கேட்டல்,தொடுதல்,ருசித்தல் இவற்றை யெல்லாம் தாண்டி உணருதலே 'இருத்தல்' ஆகும்.

கே: குருதேவ்! நான் திருமணம் செய்து கொள்ள என் இதயம் கூறுவதைக் கவனிக்க வேண்டுமா அல்லது ஜோசியத்தை கேட்க வேண்டுமா?

குருதேவ்: இரண்டையும் சிறிது கேட்டுக் கொள்ளுங்கள்.

கே: குருதேவ்! முட்டாள்தனமான கேள்வியைக் கூட உங்கள் பதில் பிரமாதமானதாக ஆக்கி விடுகின்றது. நான் தங்களைப் போன்று பதிலளிக்க முடியுமா? அவ்வாறு பதிலளிக்க நான் என்ன செய்ய வேண்டும்?

குருதேவ்: தளர்த்திக் கொள்ளுங்கள். கேள்விகளை பற்றிக் கவலைப்படாதீர்கள். அவ்வாறிருந்தால் இயல்பு நிலை வரும்.

கே: காமத்தை வெல்லுவது எப்படி?

குருதேவ்: நீங்கள் நான் எழுதியிருக்கும் " மௌனம் ஒரு கொண்டாட்டம்" “ ஞானம் தேடுபவருக்கு ஞானப் பேழை" ஆகிய நூல்களைப் படிக்க வில்லை என்று எண்ணுகிறேன். அப்புத்தகங்களில் நான் பல கருத்துக்களை கூறியுள்ளேன். அவற்றை நீங்கள் பயன்படுத்திப் பார்க்க வேண்டும். அவற்றில் ஏதேனும் ஒன்று பயன்பட்டாலும் நன்று. எதுவுமே பயன் படவில்லை என்றால், சிறிது காலம் பொறுத்துப் பாருங்கள். சற்று வயதாகும் போது, தானாகவே மறைந்து விடும். அப்போது, நீங்கள் ஒரு நாளமில்லாச் சுரப்பு வைத்தியரை (Endocrinologist) அணுக வேண்டும். ஹார்மோன்களின் பிரச்சினைகளாலும் இவ்வாறு நிகழலாம். காம உணர்வு மிதமாக இருந்தால் நீங்கள் பாதுகாப்பாக இருக்கின்றீர்கள். அதிகப்படியாக இருந்தால், நீங்கள் பின்பற்றுவதற்கு பல வழிகளை குறிப்பிட்டுள்ளேன். உங்கள் உணவை கவனியுங்கள். உங்கள் நண்பர் சகவாசத்தை கவனியுங்கள். எப்போதும் சுறுசுறுப்பாக உங்களை வைத்துக் கொள்ளுங்கள்.

காமத்தின் திருப்தி நிலை என்பதற்கு எல்லையே கிடையாது. காமத்தை தீர்த்துக் கொள்ள கிடைத்திருக்கும் அத்தனை வழிகளும் முடிந்தவுடன், மனம் கிடைக்காத வழிகளைத் தேட ஆரம்பிக்கும். கிடைக்காத வழிகளை அடைய முயலும் போதுதான் உலகில் பல்வேறு விதமான காமக் கோளாறுகள் காணப்படுகின்றன.அத்தகைய சிதைந்த கோளாறுகள் பயங்கரமானவை. மக்கள் மிருகங்கள் மற்றும் பலவற்றுடன் உடலுறவு கொள்ளத் துணிகிறார்கள். உங்களால் கற்பனை கூடச் செய்ய முடியாது. குழந்தைகளுடன் உடலுறவு போன்ற காமச் சிதைவு கோளாறுகள் மூலம் மனிதனுக்கு மன நோய் ஏற்படுகின்றது.ஆகவே தான் ஆழமான ஆன்மீக ஞானத்தை அடைய வேண்டும். இவற்றை எல்லாம், “ஞானம் தேடுபவருக்கு ஞானப் பேழையில்” புத்தகத்தில் படியுங்கள்.

கே: குருதேவ்! நாங்கள் நாசிக் நகரிலிருந்து வருகின்றோம். அங்கு (பன்னிரண்டு ஜோதிர் லிங்கங்கள் அல்லது சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட புனித இடங்கள் உள்ள)  த்ரியாம்பகேஸ்வரர் கோவில் உள்ளது. த்ரியாம்பா என்பது இறைத்தாயைக் குறிக்கும் பெயர்களில் ஒன்றாக இருக்கும் போது எவ்வாறு சிவனுக்கு இப்பெயர் ஏற்பட்டது?

குருதேவ்: நான் ஸ்தல புராணங்களைப் (சிவன் கோவில்களைப் பற்றி பல்வேறு மொழிகளில் எழுதப்பட்டுள்ள கதைகள்) படித்ததில்லை. எனக்கு அவற்றைப் பற்றித் தெரியாது. இங்கு நிறைய மகாராஷ்ட்ரியர்கள் இருக்கின்றார்கள். அவர்களைக் கேளுங்கள். பல கதைகள் இருக்கின்றன. சிவனுக்கு மூன்று கண்கள், அதனால் த்ரி நேத்ரா என்று அழைக்கப்படுகிறார். அந்த மூன்று  கண்கள் யாவை? அவை மூன்று மனித உடலில் இருக்கும் முக்கிய நாடிகள்( நுண்ணிய சக்திப் பாதைகள்) - இடா, பிங்களா, சுஷ்மா நாடிகள்.

கே: குருதேவ்! பதஞ்சலியின் யோகசூத்ராவில் ஆசனங்களை பற்றி மிகக் குறைவாகவே விளக்கப்பட்டிருக்கின்றது. ஆயினும் ஏன் மக்கள் ஆசனங்களை யோகாவுடன் இணைத்து கூறுகின்றார்கள்?

குருதேவ்: ஏனெனில் அது வெளிப்படையாகக் கண்ணுக்குத் தெரிகின்றது. மக்கள் அவர்கள் கண்ணுக்குத் தெரிவதை இணைத்துப் பேசிக் கொண்டே இருக்கின்றார்கள். ஹத யோகா யோகாவில் பெரும்பாலும் உடல் இருக்கை நிலை பற்றிய ஒரு பிரிவு) என்பது அஷ்டாங்க யோகாவில் (யோகக் கலையின் எட்டு வழிகள்) ஒரு சிறிய பகுதி தான். மக்கள் அது மட்டுமே யோகா என்று தவறாகப் புரிந்து கொண்டு விட்டார்கள். பரவாயில்லை. நல்லது தான். அது மக்களை நோயிலிருந்து காத்து உடல் நலத்துடன் இருக்க வைக்கின்றது.

கே: குருதேவ்! ஒருவர் யாரையாவது விரும்பும் போது அது மோகம் (பற்றுதல்) என்று அழைக்கப் படுகிறது. ஆனால், இறைவனோ, தளையற்ற ஞானியோ ஒருவரை விரும்பும் போது அவ்வாறு அழைக்கப்படுவதில்லை. இந்த இரண்டிற்கும் இடையே உள்ள வேறுபாடு என்ன? லோகாயதமான அன்பை எவ்வாறு இறையன்பாக மாற்ற முடியும்?

குருதேவ்: உங்கள் கேள்விக்கு நீங்களே விடையளித்து விட்டீர்கள். நீங்கள் கேள்வி கேட்பது போன்று தோன்றுகிறது, ஆனால் நீங்கள் உங்களது கருத்தைக் கூறுகிறீர்கள். உண்மையான கேள்வியையும் கருத்துக் கூறுதலையும் என்னால் வேறுபடுத்தி அறிய முடியும்.

கே: குருதேவ்! என்னிடம் நிறைய அறிவும், குறைவான அர்ப்பணிப்பும் உள்ளது. அறிவிலிருந்து அர்ப்பணிப்பிற்கு எவ்வாறு நகர்ந்து செல்லுவது?

குருதேவ்: முதலில், உங்களிடம் அர்ப்பணிப்புக் குறைவு என்று எண்ணுவதை நிறுத்துங்கள். அது ஒரு நாளும் குறைவாக இருக்க முடியாது. நீங்கள் அதை வளர்த்துக் கொள்ள விரும்பினால், நாரத பக்தி சூத்ரா (நாரத முனியின், தெய்வீக அன்பைப் பற்றிய முதுமொழிகள் அடங்கிய வேத நூல்) படியுங்கள், பண்ணிசையுங்கள், ஆடுங்கள், கொண்டாடுங்கள்.அதிக அளவில் நூல்களைப் படித்துக் கொண்டிருப்பதாக எண்ணினால் அதைக் குறையுங்கள். அதிக அளவில் தொண்டில் ஈடுபடுங்கள், மக்களுக்கு உதவுங்கள்.

கே: இந்தியாவிற்கு நல்ல தலைமை கிடைக்குமா? நல்ல தலைவர் கிடைப்பது மிக கடினமானதா?

குருதேவ்: அல்ல.அப்படியன்று. இந்தியாவிற்கு நல்ல தலைவர்கள் கிடைப்பார்கள். மிக திறமையான நல்லவர்கள் இந்தியாவில் இருக்கின்றார்கள்.அதற்கு நீங்கள் அனைவரும் உழைக்க வேண்டும். காலத் தேவையை உணர்ந்து ஒருங்கிணைந்து செயல் பட வேண்டும். கெட்டவர்கள் அதிகமாக இருப்பதால் இந்தியா இந்த நிலையை அடையவில்லை, உண்மையில் நல்லவர்கள் மௌனமாக இருப்பதே அதற்குக் காரணம்.நல்ல மக்கள், மௌனமாகவும், வெறுப்பினால் செயலற்று இருப்பதும் தான் இந் நிலைக்குக் காரணம்.நல்லவர்கள் அரசியலில் நுழைந்து, நல்ல மக்களின் வாக்குகளைச் சேகரிக்க உறுதி பெற வேண்டும்.அப்போது எந்த அரசியல் கட்சியும், ஒரு குற்றவாளிக்கு தேர்தல் டிக்கெட்டைக் கொடுக்க முன்வராது. தண்டனைக் குற்றவாளிகள் பாராளுமன்றத்தில் அமரக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் கூறியிருக்கின்றது. ஆனால் தற்போது, பாராளுமன்றத்தில் இருக்கும் அரசியல்வாதிகள், தண்டனை குற்றவாளிகள் இடம்பெற அனுமதிக்கப் பட வேண்டும் என்று கூறுகின்றார்கள். தண்டனைக் குற்றவாளிகளுக்கு எதிரான உச்சநீதிமன்றத் தீர்ப்பை அத்தனை அரசியல் கட்சிகளும் ஏற்றுக் கொள்ள மறுக்கின்றன. இது உங்களுக்கு ஆச்சர்யமாக இல்லையா? அரசியல் கட்சிகள் குற்ற வாளிகள் உள்ளிருக்க வேண்டும் என்று விரும்புகின்றன. இது விசித்திரமானது தான். அரசியல்வாதிகளின் மனதில் என்ன இருக்கின்றது என்று புரிந்து கொள்ளுவது கடினமாக இருக்கின்றது. ஒரு பெரும் ஆராய்ச்சி இதற்குத் தேவை படுகின்றது. ஒரு கட்சியில் உள்ளவர்கள் மக்களுக்கு எதிராகவும், அதே கட்சி உறுப்பினர்களுக்கு எதிராகவும் செயல்படுவதைக் காண்கின்றோம். நாட்டை விடுங்கள், தங்கள் கட்சியைப் பற்றியே கூட அவர்கள் கவலைப்படுவதில்லை.இத்தகைய அரசியல்வாதிகளைப் பற்றி மனோ தத்துவ நிபுணர்களை ஆராய்ச்சி செய்யும்படிக் கேட்டுக் கொள்ள வேண்டும். அவர்கள் மனம் ஏன் இவ்வாறு செயல்படுகிறது? யாருக்கும் பயனற்ற செயல்களை ஏன் அவர்கள் செய்கிறார்கள்? தாங்கள் அமர்ந்திருக்கும் மரத்தின் கிளைகளையும் வேர்களையும் அவர்கள் வெட்டுகின்றார்கள். ஏன்?

கே: குருதேவ்! வர்த்தக உலகம் லாபம் அடைவதையே சுற்றி உள்ளது. ஆன்மீக உலகம் செல்வத்தை பகிர்ந்து கொடுப்பதையே சுற்றி உள்ளது. எவ்வாறு இவ்விரண்டையும் சமநிலைக்கு எடுத்து வருவது?

குருதேவ்: எப்படி ஒரு மோட்டார் பைக்கை ஓட்டுகிறீர்களோ அது போன்று தான். உங்கள் வணிக நிறுவனம் லாபத்தில் இயங்க வேண்டும். அது நஷ்டத்தில் ஓடினால் எப்படி உங்களால் தர்மவானாக இருக்க முடியும்? அப்போது தர்மம் செய்ய முடியாது அல்லவா? ஆகவே இரண்டையும் கவனித்துக் கொள்ளுங்கள்.

கே: குருதேவ்! ஆன்மிகம் என்னை செல்வந்தன் ஆக்குமா?

குருதேவ்: ஆன்மிகம் உங்களைச் செல்வந்தன் ஆக்காது. உங்களை பலவான் ஆக்கும். அப்போது அந்தப் பலத்தை கடின உழைப்புடன் நல் வழியில் பயன்படுத்துங்கள். சமஸ்க்ரிதத்தில் ஒரு முது மொழி உண்டு - கடின உழைப்பு செல்வந்தனாகவும், பலவானாகவும் சக்தியுடையவனாகவும் ஆக முடியும். கடின உழைப்பிற்கு, உங்களுக்கு பலமும் தன்னம்பிக்கையும் தேவை. அதை ஆன்மிகம் அளிக்கும். ஆன்மீகத்தால் மட்டுமே உங்களுக்கு சிங்கம் போன்று தன்னம்பிக்கையும், பயமற்ற நிலையையும் தர முடியும். வேறு வழி கிடையாது.