தெய்வம் தரும் பாதுகப்பு

ஆகஸ்ட்  14, 2013 பெங்களூர்,  இந்தியா 



தென்னை மரத்திலிருந்து தேங்காய் நம் தலைமீது விழுந்து விடாமல்  தடுத்து ஒரு கூரை நம்மைக் காப்பது போல் இறைவன் நம்மை பல வழிகளில் காத்துகொண்டிருக்கின்றான்  என்பது உங்களுக்குத் தெரியுமா?  ப்ரிஹச்பதி  ( ஹிந்தியில்  குரு ப்ரிஹச்பதி ) என்றழைக்கப்படும் ஜுபிட்டர்  (வியாழன்)  கிரகம்  பூமியைக் காப்பதாகச் சொல்கின்றனர்.    பூமியின் மீது மோதித் தாக்கும் வண்ணம் பல விண்கற்கள் பூமியை  நோக்கி பயணிக்கின்றன.  ஆனால்  ஜுபிடர் கிரகமானது தன்னுடைய மிக அதிகமான புவியீர்ப்பு  விசையின் மூலம்  நம்மை அந்த விண் கற்களிடமிருந்து  காக்கின்றது .  இல்லையென்றால் நம் பூமியானது நீண்ட காலத்திற்கு  முன்பே அழிந்து போயிருக்கும்.  இந்த ஜுபிட்டர் கிரகத்தைப்போலவே  இறைவனும்  நம்மை பல வழிகளில் காக்கின்றார்.  நீங்கள் குழந்தையாக இருக்கும்போது அன்னையாகவும் தந்தையாகவும் இருந்து காக்கின்றார்.  நீங்கள் வளரும்போது  குருவின் வடிவத்தில் உங்களை காக்கின்றார்.  கண்ணை இமை காப்பதுபோல் இறைவன் நம்மை காக்கின்றார்.  பல வழிகளிலும் பல வடிவங்களிலும் இறைவன் காப்பதனால் நாம் பயப்படுவதற்கு அவசியமே இல்லை.  

கே:  குருதேவ், நேற்று நீங்கள் சங்கல்ப  சக்தி, அதாவது  ஒருவரது விருப்பம் , ஆசைகளை நிறைவேற்றக்கூடிய  எண்ணங்களின் சக்தி பற்றி பேசியுள்ளீர்கள் .  மேலும் நீங்கள்  சில சங்கல்பங்கள் நிறைவேறும் ;  சில நிறைவேறாது என்று சொல்லியிருக்கின்றீர்கள்.  அது   ஏன்? 

குருதேவ்:  நீங்கள் சங்கல்பம்  எடுக்கும்போதெல்லாம் . "எனக்கு இது வேண்டும் அல்லது இதைவிட மேலானது இருந்தால்  அது வேண்டும் " என்று பிரார்த்தனை செய்ய வேண்டும்.  இயற்கை  நாம் நினைப்பதை விட மிகவும் அதிகமான புத்திக் கூர்மை வாய்ந்தது. அது உங்களுக்கு மிகவும் சிறந்தவற்றையே கொடுக்க விரும்புகின்றது. உங்களுடைய அளவான குறுகிய  கண்ணோட்டத்திலிருந்து இதுதான் எனக்குச் சிறந்தது என்று நீங்கள் நினைக்கலாம்.  ஆனால் பிரபஞ்சத்திற்கு உங்களை விட நன்றாகத் தெரியும்.  உங்களுக்கு அதைவிட மேலான ஒன்று கிடைக்க  வேண்டுமென்றால்  நிச்சயமாக அதை உங்களுக்கு அளிக்கும்.  

கே:  குருதேவ், பகவத் கீதையில்  கிருஷ்ண பகவான் தன்னுடைய விஸ்வரூபத்தினை (மாபெரும் எல்லை கடந்த உருவம்)  அர்ஜுனனுக்கு காட்டுகின்றார்.  அதன்மூலம் அர்ஜுனன் தெய்வீகத்தை உணருகின்றான். இருந்தும், இறைவனின் விஸ்வரூபத்தினை பார்த்த பிறகும், அர்ஜுனன்   சமாதானம் அடையவில்லை.  இறுதியாக அர்ஜுனனை  அனைத்தையும் கைவிட்டுவிடுமாறு சொல்வதற்கு  கிருஷ்ண பகவான் மிகவும் பிரயத்தனப்பட வேண்டியிருந்தது.  இறை அனுபவம் பெற்ற பிறகும்  அர்ஜுனனால் ஏன் புரிந்துகொள்ள முடியவில்லை?

குருதேவ்:  இதைப்பற்றி எனக்கொன்றும்  தெரியவில்லை.  ஒருவேளை அர்ஜுனன் மிக மந்தமான ஒரு சீடனின் பாத்திரத்தை ஏற்பதன் மூலம் மிக மந்தமானவர்களும் இந்த புனிதமான தெய்வீக ஞானத்தை புரிந்து கொள்ள வேண்டுமென்று  விரும்பி இருக்கலாம். இல்லையென்றால் பகவத் கீதை இத்தனை விரிவாக இருந்திருக்காது.  அது ஓரிரண்டு வரிகளிலேயே முடிந்து போயிருக்கும்.  இந்த ஞானம் மக்களுக்குத் தேவை என்பது கிருஷ்ண பகவானுக்கு தெரிந்திருந்ததால்  அவர் பல மொழிகளில் பல வழிகளில் பேச வேண்டியிருந்தது.  

கே:  யோக மார்கத்தில் நாம் பயிற்சிகளைத் தொடரும்போது  'அவன் ' (இறைவன்)  இயல்பாக வெளிப்படலாம்.  இருந்தாலும்  கூடவே அது யோக மாயாவையும்  உண்டாக்கலாம்.  (ஒருவர் அசாதாரணமான   திறன்களை அடையும்போது   ஏற்படக்கூடிய ஏமாற்றங்கள்).  யோகா மாயாவினால் பாதிக்கப்படாமல்  மக்கள் ஆன்மீகப் பயிற்சிகளைத் தொடர்ந்து செய்வது  எப்படி?

குருதேவ்:  யோக  மாயாவைப் பற்றி  அறிந்திருந்தால் அதுவே  போதும்.  

கே:  குருதேவ்  நான் எப்பொழுதும் 'நான் ஒன்றும் அறியேன்' என்ற நிலையில்  இருக்கிறேன் . வாழ்க்கையின் குறிக்கோள் என்ன என்று நாம் எப்படி நிர்ணயம் செய்வது ?

குருதேவ்:  ஒரு ஆச்சர்யமான அழகான "ஒன்றும் அறியேன்" என்ற நிலைக்கு  நகரும்பொழுது , இந்த 'நான் ஒன்றும் அறியேன் " என்ற நிலை இரண்டு விதமானது.  ஒன்று, நாம் எரிச்சலுடன் இருக்கும்பொழுது சொல்வது "என்னை கேட்காதே . எனக்கு ஒன்றும் தெரியாது . போ "என்ற நிலை.  இரண்டாவது மிக அழகான. ஆச்சர்யத்துடன்  கலந்த "ஒன்றும் அறியேன்" என்ற நிலை. வாழ்க்கையே இந்த கோவமான "ஒன்றும் அறியேன் " என்ற நிலையிலிருந்து  ஒரு அழகான ஆச்சர்யத்துடன் கலந்த "ஒன்றும் அறியேன் " என்ற நிலைக்கு செல்லும் பயணம்தான் .  இந்த இரு நிலைகளுக்கும் நடுவில் ஒரு குழப்பமான "ஒன்றும் அறியாத" நிலையும் உள்ளது .  இந்த குழப்பமான நிலையீலிருந்தால் . கோவமான முதல் நிலையிலிருந்து விலகி , அந்த மிக அழகான ஆச்சர்யத்துடன் கலந்த நிலையை நோக்கி செல்ல வேண்டும்.

கே: குருதேவ், நிறைய இயக்கங்கள்   ஊழலுக்கு எதிராக ஆரம்பித்தாலும் அவை அனைத்தும் வெகு சீக்கிரமாகவே அடங்கி விடுகின்றன .  எப்படி இவற்றை அழியாமல் நடத்திக்கொண்டு போவது ?

குருதேவ்:  இது ஒரு  கம்பீரமான விஷயம் . நாம் சுதந்திரத்திற்கு முன்னால் எந்த நிலையில் இருந்தோமோ அதே நிலையில் தான் இப்பொழுதும் இருக்கிறோம் . அப்பொழுதும் ஒன்றும் செய்ய முடியாத நிற்கதியில் இருந்தோம் , நம் நாட்டில் இருந்தவற்றை சுரண்டினார்கள். இந்தியாவிலிருந்து  900 கப்பல்களில் தங்கம் எடுத்து சென்றார்கள். மக்களின் மேல் வரித் தொகையும் கண்டபடி சுமத்தினார்கள் . அப்பொழுதும் நாம் செயலற்று நின்றோம். அனைவரும் சத்சங்கத்தின் மூலமாக ஒன்று சேர்ந்து ஒன்றாக கூடி நின்றார்கள் . அந்த காலத்தில் மக்களை ஒன்று சேர்க்கவும் ஒருங்கிணைக்கவும் மிக பெரிய சத்சங்கங்கள் நடத்தினார்கள். அந்த காலத்தில் மிக உயர் தரமான ஒலி பெருக்கிகள் இல்லை என்றாலும் , இந்த சத்சங்கங்களில் மக்கள் மனதாலும் ஆன்மாவாலும் ஒன்று சேர்ந்து ஒருங்கிணைந்து இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் பங்கு பெற்றார்கள் . 

எத்தனையோ பேர்கள் நாட்டிற்காக தங்களுடைய வாழ்க்கையையே தியாகம் செய்தார்கள். ஆனாலும் இன்றுவரை இந்த இயக்கங்கள் யாவும் முழுமை அடையவில்லை.. நாம் திரும்பவும் அதே மாதிரியான செயலற்ற நிலையில்தான் இருக்கிறோம் .  நாம் அனைவரும் மறுபடி ஒருங்கிணைந்து ஒரு சேர ஊழலுக்கு எதிராக நிற்க வேண்டும். அப்பொழுது தான் ஒரு மாற்றத்தை கொண்டு வர முடியும் -  சூழ்நிலையில் மாற்றம் ; நடைமுறையில் மாற்றம் ; மன நிலையில் மாற்றம்.   நீங்கள் அனைவரும் இந்த மாற்றங்களுக்கு தயாரா ? நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து இதற்கு பாடுபட வேண்டும் .

கே:  குருதேவ்  நீங்கள் கேன உபநிஷத்தை பற்றி விளக்கம் கொடுக்கும் பொழுது  "உங்கள் உணர்வுகளை உள்ளே இழுங்கள்" என்று கூறினீர்கள் . அப்படி என்றால் நாம் வாழ்க்கை முழுவதுமே ஒரு துறவறம் போல் தான் இருக்க வேண்டுமா ?  இல்லை ஒரு குறிப்பிட்ட நாள் மட்டும் உணர்ச்சிகளை நம் கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும்  என்று கூறுகிறீர்களா 

குருதேவ்:  வாழ்க்கையில்  உணர்வுகளுக்கு என்று ஒரு தனி இடம் உண்டு.  ஆனால் அவை உன்னுடைய கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் . நீ அவற்றின் கட்டுப்பாட்டில் இருக்க கூடாது. இந்த உணர்வுகளின் பிடியில் சிக்கினால் வாழ்க்கையில் துன்பமே மிஞ்சும் .

கே: குருதேவ்  இங்கு இருக்கும் மஹா ஜனங்களிடம் ஒரு விண்ணப்பம் கேட்க ஆசைபடுகிறேன் .  அனைவரும்  தங்கள் இறப்பிற்கு பிறகு உடல் உறுப்புகளை தானம் செய்யும்படி விண்ணப்பிக்கிறேன். 

குருதேவ்:  ஆம் இது மிகவும்  நல்ல விஷயம் .  இறப்பிற்கு பின் இந்த பிறவியில் உடல் உறுப்புக்களை தானம் செய்தால் நம்முடைய அடுத்த பிறவியில் அந்த உறுப்புக்கள் இல்லாமல் பிறப்போம் என்ற மூட நம்பிக்கை நம்மிடம் இருந்து வருகிறது.  ஆனால் அது உண்மை இல்லை. அதனால் அனைவரும் இறப்பிற்கு பின்னால் உடல் உறுப்புக்களை தாராளமாக தானம் செய்யலாம்.