பெண்களின் பலம்


ஆகஸ்ட் 20, 2013 பெங்களூர், இந்தியா



இன்று ஷ்ரவனபூர்னிமா என்னும் புனிதமான நல்ல நாள் (இந்துக்களின்  நாள்காட்டியின் படி புனிதமான சிரவண மாதத்தின் பௌர்ணமி நாள்). பொதுவாக அண்ணன் தான் தனது தங்கையை பாதுகாத்து கவனித்துக் கொள்பவன் என்று சொல்லப்படுகின்றது. இன்று நாம் ரக்ஷபந்தன் என்னும் பண்டிகையின் மூலம் ஒரு சிறப்பு வாய்ந்த நிகரற்ற மரபினை கொண்டாடுகின்றோம். இதில் தங்கை தன தனயனைக் காப்பதாக உறுதி எடுக்கின்றாள்.  நம் நாட்டில் பெண்கள் நலிந்தவர்கள் என்றும் சக்தியற்றவர்கள் என்றும்  சொல்லப் படுகின்றனர். அப்படியிருக்க வலிமையற்றவள் என்றும் மென்மையானவள் என்றும் கருதப்படும் ஒரு பெண் எப்படி ஒரு ஆணுக்கு பாதுகாப்பு தந்து மன வலிமையையும் ஆதரவையும் தர முடியும் என்பது வியக்கத்தக்க ஒன்றே.

பெண்கள் சக்தியற்றவர்கள், நலிந்தவர்கள் என்னும் தவறான கருத்து காலம் காலமாக வளர்ந்து வருகின்றது.அப்படி இல்லவே இல்லை. பெண்கள் நிகரற்ற ஒரு சக்தியை பெற்றுள்ளனர். அதுவே சங்கல்ப சக்தி எனப்படும் வலிமையான எண்ணமும் மன உறுதியும் ஆகும். ஆக, ஒரு பெண் கூட தன்  மன உறுதி மற்றும் ஆன்ம பலத்தின் மூலம் ஒரு ஆணைப் பாதுகாத்து ஆதரவு அளிக்க முடியும். இந்தியாவில் நாம் ஒரு போதும் பெண்களை பலவீனமானவர்களாகவும் எந்த விதத்திலும் கீழானவர்களாகவும் கருதியதில்லை. ஒரு பெண் எப்படி நலிந்தவளாக இருக்க முடியும்? ஆற்றல் மிக்க சூரியனையே தடுத்து நிறுத்தக் கூடிய அளவு மன வலிமை மிக்கவள் பெண். சத்யவான், அவன் மனைவி சாவித்திரி ஆகியோரது கதையை நீங்கள் அறிந்திருப்பீர்கள். எமனுடன் போராடி தன் கணவனது உயிரை மீட்டுக் கொண்டுவரும் அளவிற்கு சாவித்திரி தன் கணவன் மீது பக்தி கொண்டிருந்தாள். தேவி அனுசுயாவின் கதையையும் நீங்கள் கேட்டிருப்பீர்கள்.
 
பெண்கள்  மன உணர்வுகளின் வலிமை மிக்கவர்கள். தங்களுக்குள்ளே பெரும் சக்தியை உள்ளடக்கியவர்கள். ஒருவர் பெற்றிருக்கக் கூடிய மிகப்பெரும் வலிமை இதுவே. ஒருவர் தன உள் வலிமையை இழந்து விட்ட பிறகு வெளியே உடல் வலிமையினால் எந்தப் பயனும் இல்லை. ஒருவர் உடல் ரீதியாக பலசாலியாக இருக்க வேண்டுமென்றால்  முதலில் அவர் உள் வலிமையும் தைரியமும் கொண்டவராக இருக்க வேண்டும்.  உள்  பலம் என்பது புத்தி பலத்தையும் மற்றும் உறுதியான எண்ணம் மற்றும் உணர்வுகளின் பலத்தையும் சேர்த்தே குறிக்கின்றது. இவ்விரு பலங்களின் ஒரு அற்புதமான கலவை பெண்ணிடம் உள்ளது. அதனால் தான்  ரக்ஷபந்தன் அன்று பெண்கள் ஆண்களைக் காப்பதாக உறுதி எடுக்கின்றனர். அதை குறிக்கவே சகோதரர்களின் மணிக்கட்டில் ஒரு புனிதமான நூலினைக் கட்டுகின்றனர்.

கே: குருதேவ், உங்களை ஏன் நூல்களால் கட்டி வைத்துள்ளனர் என்று நம் சர்வதேச குடும்பத்தில் உள்ளவர்கள் பலர் கேட்கின்றனர். 

குருதேவ்: ஆம். அதைபற்றி தான் நான் பேசிக் கொண்டிருந்தேன். ஒரு சகோதரி தான் எல்லா நேரங்களிலும் பாதுகாவலாக இருப்பேன் என்னும் வாக்குறுதி, தன் அன்பின் அடையாளமாக தனது சகோதரனின் வலது கை மணிக்கட்டில் ராக்கி என்னும் புனிதமான நூலைக் கட்டுகின்றாள். பெரும் பாலான ராக்கிகள் சீனாவில் தயாரிக்கப்படுகின்றன. இப்போதெல்லாம் நம் பண்டிகைகள் அனைத்தும் சீனாவுடன் தொடர்பு கொண்டுள்ளன. விநாயகரின் சிலைகள் சீனாவில் செய்யப் படுகின்றன. கிருஷ்ண பகவானும் சீனாவிற்கு இடம் பெயர்ந்து விட்டார். அங்கிருந்து தான் வருகின்றார். அதே போல் ராக்கியும் சீனாவிலிருந்து தான் வருகின்றது. பாதுகாக்க வேண்டும் என்கின்ற வலுவான எண்ணத்துடன் அல்லது உறுதியுடன் ராக்கி  கட்டப்படுகின்றது. எண்ணத்தின் சக்திக்கென்று ஒரு தனி இடம் உள்ளது. ரக்ஷபந்தன்  என்னும் பண்டிகை இதையே குறிக்கின்றது. அது சகோதரர்கள் சகோதரிகளுக்கான பண்டிகை. அவர்கள் இனிப்புகளை பரிமாறிக்கொண்டு ராக்கி கயிற்றினை கட்டி பாதுகாப்பாக இருக்கவேண்டுமென்று  வாழ்த்திக் கொள்கின்றனர். இங்கே என் நலம் விரும்பிகள் ஏராளமாக இருக்கின்றனர். அதனால் தான் என்  மணிக்கட்டிலும் ஏராளமான கயிறுகளும் முடிச்சுகளும் உள்ளன. 

கே: குருதேவ், எல்லா மதங்களுக்கும் சின்னங்களும் பழக்க வழக்கங்களும் வெவ்வேறாக இருந்தாலும் அடிப்படை தத்துவங்கள் ஒன்றே அல்லவா? அப்படி இருக்கும் பொழுது இந்த மத மாற்றம் பண்ணுவதில் எதற்கு இவ்வளவு ஒரு உத்வேகம்? அப்படியே மதம் மாறினாலும் அதை பற்றி நாம் ஏன் தேவையில்லாத கவலை கொள்ள வேண்டும், அடிப்படை தத்துவங்கள் ஒன்று தானே

குருதேவ்: ஆம் அடிப்படை தத்துவங்கள் ஒன்றே தான் என்றாலும் பழக்க வழக்கங்களும், கலாச்சாரமும் வெவ்வேறாக உள்ளது. இடத்துக்கு இடமும், நாட்டுக்கு நாடும் நம்பிக்கைகளும் கோட்பாடுகளும் மாறுபடுகின்றன. ஆனால் இந்த மத மாற்றங்கள் வெறும் மத சார்பற்றது மட்டும் இல்லாமல, துரத்ரிஷ்டவசமாக அரசியல் சார்புள்ளதாகவும் உள்ளது. இந்த மத மாற்றங்கள் வெறும் மதத்திர்காகவோ, யாரையாவது காப்பாற்றுவதர்காகவோ செய்யப்படுவது மட்டும் இல்லாமல் அரசியல் அதிகாரத்திற்கும், ஆக்கிரமிப்பதற்கும் கூட பின்னணியிலிருந்து உதவுவது போல் உள்ளதுஇது இந்த பூமியில் நமது கலாச்சாரமும் நாகரிகமும் வளர்வதற்கான நல்ல அறிகுறி இல்லை. இந்த நாளில் நடக்கும் சண்டைகள் எல்லாமே மதம் அல்லது மதபிரிவு சார்பாக உள்ளவை; அவை தீவீரமாகவும் உள்ளதுதீவீரவாதி சொல்வான் "அனைவரும் என்னை போலவே இருக்க வேண்டும். என் மதத்தையே பின் பற்ற வேண்டும்."அவர்களுடைய மனதில் அவர்களின் எண்ண அலைகளை தவிர வேறு எதுவும் இருப்பதில்லை.ஆனால் இது இந்த உலகத்திற்கு அபாயகரமானது. உலகம் பலரகபட்டது. இந்த உலகத்தின் வெவ்வேறு ரகங்களை  காப்பாற்றுவது நம்முடைய பொறுப்பாகும்.

இது பல நாட்டு வர்த்தகங்கள் செய்வது போல் உள்ளது. இந்த வர்த்தகங்கள் நம்முடைய விதையை (நம் கலாசாரம், சிறந்த கலைகள்) பொசுக்கி விடுகின்றன. அவர்களுக்கு அவர்களுடைய விதைகள் துளிர்த்து வளர்ந்தால் போதும். உதாரணத்திற்கு மான்சாண்டோ வர்த்தக குழு. இப்படி ஆனால் ஒரே ஒரு விதை தான் இருக்கும். ஏனென்றால் அவர்களால் இந்த பல ரகத்தையும் ஒத்து கொள்ள முடியாது. இதற்கு காரணம் அவர்களுடைய கெட்ட எண்ணமே.

இந்த அழகான பூமியில் பல வித எண்ண அலைகளுடன்  நடக்கும் பள்ளிகளும் , பல அழகான வேதாந்தகளும், பல வித வாழ்க்கை முறைகளும் பலவித வழிப்பாடுகளும் கலாச்சாரமும் உள்ளது. இவை அனைத்தையும் காப்பாற்ற வேண்டும். ஒருவன் தன மதத்தை விட்டு இன்னொரு மதத்திற்கு செல்லும் பொழுது தன் மதத்தை பற்றி இழிவாக நினைக்கிறான். தன மதத்தை இழிவாக்காமல் இன்னொரு மதத்திற்கு செல்ல முடியாது . இது நல்லது அல்ல. நாம் இந்த அளவுக்கு இழிவாக கூடாது. தன்னுடைய சொந்த மதத்தை பற்றி  இழிவாக நினைப்பவன், அதை பற்றி ஒன்றும் தெளிவாக தெரிந்து கொள்ளவில்லை என்று அர்த்தம். அதனால் தான் நாம் இந்த மத மாற்றங்களை எதிர்க்க வேண்டும். இந்த குழுக்கள் பல வித ஆசைகள் காட்டி மத மாற்றம் செய்கிறது. நல்ல பள்ளியில் இடம் வாங்கி தருகிறேன்; நல்ல சாப்பாடு, பணம் வேலை வாங்கி தருகிறேன் என்று சொல்லி மாற்றம் செய்கிறார்கள். இதனால் குடும்பத்தில் எவ்வளவு கஷ்டங்களும் பிரச்னைகளும் உண்டாகிறது என்று தெரியுமா ? நமக்கு முழுமையாக தெரியாது. திடீரென்று ஒரு குடும்பத்தில் குழந்தைகள் அவர்களுடைய பெற்றோர் நீண்ட காலமாக செய்து வரும் பராம்பரியமான திருவிழாக்களில் பங்கேற்று கொள்வதில்லை

அவர்கள் தங்கள் உறவுக்காரர்களுடன் பழகுவதில்லை. எல்லா விதத்திலும் வித்தியாசமாக இருக்கிறார்கள் . இந்த பிரச்னைகள் எழுவதால் பல வித வேறுபாடுகள் குடும்பத்திலும் சமுதாயத்திலும் உண்டாகிறது. அதனால் தான் நாம் எல்லா மதங்களையும் மதிக்க கற்று கொள்ள வேண்டும் என்று நான் கூறுகிறேன். ஆனால் மடத்தனமாக மத சார்புள்ள நடவடிக்கைகளில் மட்டுமே ஈடுபாடு கொள்ளாமல் ஆத்ம ஞானத்தில் ஈடுபாடும் கொள்ள வேண்டும்.

கே: குருதேவ்! தாங்கள் சன்யாசம் பற்றிப் பேச முடியுமா? சந்நியாசி என்பதன் பொருள் என்ன?

குருதேவ்: சன்யாசம் என்பது முற்றிலும் மையம் கொண்டிருப்பது.அதன் பொருள் என்னவென்றால், எல்லாமே என்னைச் சார்ந்தவை, நான் ஒவ்வொருவரையும் சார்ந்தவன் என்னும் எண்ணம் கொண்டிருப்பது. எனக்கென்று நான் வேண்டுவது எதுவுமில்லை. எல்லாவற்றையும் கொடுக்கத் தயாராக இருக்கின்றேன் என்பது தான்.

கே: குருதேவ்! ஒருவன் குற்றங்களிலேயே மிகப் பெரிய குற்றத்தைச் செய்தும், அதை பற்றிச் சிறிதும் வருந்தாமல் இருந்தால், அக்குற்றவினை  குறிக்கப்படுவதில்லை  அதாவது எதிர்மறை வினை அவனைக் கட்டுப்படுத்துவதில்லை, ஆனால் ஒருவர் சிறிய தவறு செய்து விட்டு அதற்காக உடனே வருந்தினால் அவ்வினை குறிக்கப்படுகின்றது என்று நான் படித்திருக்கிறேன். அது உண்மையா?

குருதேவ்: வருத்தப்படுவது என்று மட்டும் இல்லை. அதை விட அதிகமான ஒன்று இருக்கின்றது. அது உங்களுள் இருக்கும் 'தான் கர்த்தா அல்ல' என்னும் மெய்ப்பொருளை உணருதல் ஆகும். ஒவ்வொரு வருள்ளும் இரண்டு நிலைகள் உள்ளன. ஒன்று கர்த்தா மற்றொன்று கர்த்தா அல்ல என்பவை ஆகும். உங்களுடைய அடையாளம்  உங்களுள் இருக்கும், முழுவதுமான  கர்த்தா அற்ற நிலைக்குச் சென்றால் அப்போது கர்மம் ஒட்டிக் கொள்ளாது. ஆனால் அதற்கு நீங்கள் முற்றிலும் காலியான வெற்றிட நிலையினை அடைய வேண்டும்.

கே: குரு தனது சீடனைத் தேர்ந்தெடுக்கின்றாரா அல்லது சீடன் தன்னுடைய குருவைத் தேர்ந்தெடுக்கின்றானா ?

குருதேவ்: அவர்கள் ஒருவரையொருவர் தேர்ந்தெடுக்கும் நிலையில் எதுவானாலும் பரவாயில்லை!(சிரிப்பு). இதற்கு, இரண்டு வழிகள் உள்ளதாக சமஸ்க்ரிதத்தில் கூறப்பட்டுள்ளது. அவை குரங்கும் பூனைக் குட்டிகளும் போன்றவை. தாய் குரங்கு சுற்றிக் கொண்டே இருக்கும், குரங்குக் குட்டி கவனத்துடன் தாயை பின்பற்றிச் சென்று கொண்டிருக்கும். ஆனால் பூனைக் குட்டி தன் தாயைப் பற்றிக் கவலையேபடாமல், தாயை திரும்பிக் கூடப் பாராமல் விளையாடி கொண்டிருக்கும். ஆனால் தாய்ப் பூனை, தனது குட்டியைப் பாதுகாத்து எங்கு சென்றாலும் கவனத்துடன் அதை வாயில் கவ்விக்கொண்டே செல்லும்.

இங்கு தாய்பூனை தன் குட்டியைக் கவனித்துக் கொள்கின்றது, அங்கு குரங்குக் குட்டி தன் தாயின் மீது கவனம் வைத்துக் கொண்டு தாயின் கூட ஒட்டி கொள்கின்றது.எனவே, இரண்டு விஷயங்கள் இருக்கின்றன. ஒன்று சீடனின் வழி. சீடன் பூனைக் குட்டியை போன்று கடவுள் தன்னை வழிநடத்த விடுகின்றான். ஒரு தத்துவஞானி அல்லது யோகி, குரங்குக்குட்டி தாயைப் பற்றிக் கொள்ளுவது போன்று இறைமையிடம் தன்னைத் தாழிட்டுக் கொள்ளுகிறான். முதலாவது கர்மயோகி  (இறைவனாலேயே தனது எல்லா செயல்களும் வழிநடத்தப்படுகின்றன என்னும் எண்ணம்) அடுத்தது பக்த யோகி (ஒவ்வொன்றுக்கும் இறை நம்பிக்கை மற்றும் பக்தியில் முழுவதுமாகத் திளைத்து விடுதல்). இந்த இரண்டில் எதை வேண்டுமானாலும் நீங்கள் தேர்ந்தெடுக்கலாம், சில நேரங்களில் இரண்டையுமே கூடத் தேர்ந்தெடுக்கலாம்.

கே: "கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர்" என்றொரு முது மொழி இருக்கின்றது. யாராவது என்னை ஞானம் அடைந்துள்ளேனா என்று கேட்டால் என்ன கூற வேண்டும்? என்ன கூறக்கூடாது ?

குருதேவ்: ஆம் என்பதை விட இல்லை என்று கூறுவது சுலபம். உங்களுக்கு கிடைத்துள்ள நேரத்தைப் பொறுத்து முடிவு செய்து கொள்ளுங்கள் ஏனெனில், ஒருவர் உங்களது ஆம் அல்லது இல்லை என்னும் பதிலையன்றி அதை உணர முடியவில்லை என்றால், நீங்கள் ஆம் அல்லது இல்லை என்று எந்தப் பதில் அளித்தாலும் உணர முடியாது. யாராவது இங்கு விளக்குகள் பொருத்தப் பட்டுள்ளனவா என்று கேட்டால், அவர் தன்னுடைய கண்களைத் திறக்கவில்லை என்று தான் பொருள்.நீங்கள் ஆம் என்றாலும் இல்லை என்றாலும் அது எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை. அல்லவா? அவர் பார்வையற்றவராக இருந்தாலும் நீங்கள் ஆம் என்றால் அது எவ்வாறு அவருக்குப் பொருட்டாகப் போகின்றது? ஆகவே எல்லா சூழ்நிலைகளிலும் தங்கமான கொள்கை என்னவென்றால், புன் முறுவலுடன் மௌனமாக இருந்து விடுங்கள். 

புரிகிறதா? அவரால் உணரமுடியும் என்றால் நீங்கள் 'இல்லை' என்று கூறினாலும் அவர் உணர்ந்து கொள்ளுவார். ஒரு சமயம் நான் சுவீடனில் இருந்த போது, ஒரு கூட்டம் நடை பெற்றது. அக்கூட்டத்தில் ஒரு பத்திரிகையாளர் என்னிடம்," நீங்கள் ஞானம் அடைந்தவரா? சுற்றி வளைக்காமல் கூறுங்கள். நான் கேட்கிறேன், நீங்கள் ஞானம்  அடைந்தவரா?" என்றார். நான் புன்முறுவலுடன் அவரைப் பார்த்து, "நீங்கள் மிகவும் புத்திசாலி" என்றேன். அப்போதும் அவர் விடாமல்," நீங்கள் ஞானம் அடைந்தவரா?" என்றார். இல்லை என்று கூறுவதே நல்லது அப்போது அந்த முழு உரையாடலும் முடிந்து விடும். ஏன் ஆம் என்று கூறி, அதை நிரூபிக்கக் கஷ்டப்பட வேண்டும்? அது மேலும் தலைவலி. நிரூபிக்க முயன்றவர் எல்லாம் மிகுந்த கஷ்டப் பட்டிருக்கின்றார்கள். எனவே இல்லை என்றேன். இதற்கும் பத்திரிகையாளர் ''நீங்கள் என்னிடம் உண்மையைக் கூறவில்லை. நான் நம்ப மாட்டேன்" என்றார். அப்போது உங்களை நம்புங்கள், உங்கள் இதயம் என்ன கூறுகின்றதோ அதை நம்புங்கள்.

கே: குருதேவ்! இன்று பூணூல் மாற்றும் போது, (உபநயனம் சடங்கு) பண்டிட்டுகள், ரிஷிவந்தனம் ஜபம் செய்தார்கள். அம்மந்திரத்தின் முக்கியத்துவத்தை விளக்கிக் கூற முடியுமா?

குருதேவ்: இன்று நாம், பண்டையக் கால முனிவர்களையும், மெய்யுணர்வாளர்களையும் நினைவு கூறுகின்றோம். அவர்கள் தாம், ஞானத்தை உயிர்ப்பித்து வைத்திருந்து இந்த வேத மந்திரங்களை நமக்கு அளித்திருக்கின்றார்கள். எனவே, பூணூலை மாற்றும் போது, மக்கள் இம்மந்திரங்களை உச்சாடனம் செய்கிறார்கள். பூணூல் எதைக் குறிக்கின்றது? எண்ணம், சொல், செயல் இவற்றின் மூலம் பொறுப்பேற்று கொள்ளுவதைக் குறிக்கின்றது. நீங்கள் ஏற்றுக் கொண்டிருக்கும் பொறுப்பை உங்களுக்கு நினைவூட்டுவதற்காக அப்பூணூல் போடப் படுகின்றது. "நான் இந்தப் பொறுப்பை ஏற்றுக் கொள்கின்றேன்" என்று கூறுவது போன்றது. நன்றியுணர்வுடன் கூடியது என்பது அச்செய்முறையுடன் சார்ந்த ஒன்று.  

கே: பக்தன், இறைவனிடம் அல்லது குருவிடம் ஏதாவது கேட்க விரும்பினால் எதை கேட்பது மிகச் சிறந்தது?


குருதேவ்: அடடா ! நீங்கள் என்ன கேட்க வேண்டும் என்பதை கூட நான் கூற வேண்டுமா? அதற்கு அவசியம் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை.உங்கள் தேவை இயல்பானது. உங்கள் உள்ளிலிருந்து வருவது.அதைத் தவிர்க்க முடியாது. ஏதாவது கேட்க வேண்டும் என்று உங்களை நீங்கள் கட்டாயப்படுத்திக் கொள்ள முடியாது. அப்போது மெய்யானதாக இருக்காது.