தியானம் புதுக் காட்சியைத் தருகின்றது

திங்கள்கிழமை, 8 ஜூன், 2015,

பெங்களூரு, இந்தியா


குருதேவ், தினமும் பயிற்சி மற்றும் தியானம் செய்வதால் ஒருவரது அடிப்படை குணநலன்கள் மாறிவிடுமா?

இந்தக் கேள்விக்கு விடை, அடிப்படை இயல்பு அல்லது குணநலன்கள் என்பதைப் பற்றி உங்களது புரிதலைப் பொறுத்துள்ளது. கோபம் உங்களுடைய அடிப்படைக் குணம் என்று கூறினால் நான் அதை நம்பத் தயாராக இல்லை. வாதம், பித்தம் கபம் என்னும் மூன்று குணங்களால் ஒருவரது அடிப்படை நடத்தை நிச்சயிக்கப்படுகின்றது. இந்தக் குணங்களால் ஒருவரது நடத்தை மாறிக் கொண்டே இருக்கின்றது. ஆனால் அடிப்படைப் பண்புகள் என்பது அனைவருக்கும் ஒன்றேயாகும். அவை, படைப்பாற்றல், உற்சாகம், மகிழ்ச்சி, பிறருடன் ஒத்திசைந்து வாழ்தல் ஆகியவை. இவை அனைவருக்கும் மாறாமல் இருக்கின்றன. வாழ்க்கை என்பது மாறாதவையும், மாறிக்கொண்டே இருப்பவையும் கலந்த கலவையேயாகும். அனைத்தும் மாறிவிட்டன என்றோ எதுவுமே மாறவில்லை என்றோ  ஒருபோதும் கூறமுடியாது. இரண்டும் கலந்ததே வாழ்க்கை. நம்மில் சில மாறக்கூடும், சில மாறவே மாறாது. இரண்டையும் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.உங்களுடைய உயரம் 5 அடியாக இருந்தால், 21 வயதிற்குப் பிறகு அந்த உயரம் மாறாது.எந்த வயதிலும் உங்கள் எடை 70கிலோ அல்லது 100கிலோ என்று கூடலாம், பின்னர் குறையலாம்.வாழ்க்கை என்பது மாறாதவை மற்றும் மாறக்கூடியவை என்பவற்றின் நுட்பமான சமநிலையாகும்.பயிற்சியின் மூலம் உங்களுடைய அடிப்படை இயல்பு வலிமை பெற்று, மாறக்கூடியவை விரைவாக மாறுகின்றன.

குருதேவ், வாழ்க்கையில் நிறைவேறுதல் என்பது எங்கேயுள்ளது?

நிறைவேறுதல் என்பது உண்மையில் வாழ்க்கை என்ன என்பதை தெரிந்து கொள்வது

வாழ்க்கை ஒரு கனவானால் மெய் என்பது என்ன?

வாழ்க்கை ஒரு கனவு என்று யார் கூறியது? இந்தக் கணம் வரையில் கடந்த காலத்தில் நிகழ்ந்தவையெல்லாம் நம் நினைவில் தங்கியவை, நமது நினைவுத் திறன் என்பது கனவிலிருந்து வித்தியாசமானது அல்ல. இந்தப் புரிதலுடன் கடந்து சென்றுவிட்ட அனைத்தையும் நீங்கள் தெரிந்தறிந்தால் அப்போது அனைத்தும் ஓர் கனவு போன்று தோன்றுகிறது. இந்த ஞானம் உங்களில் எழும் க்ஷணத்தில், ஏதோ ஒன்று அசைந்து உங்களை விழித்தெழச் செய்கின்றது - விழிப்புணர்வு தான் ப்ரக்ஞயா (விழிப்புற்ற அறிவுத்திறன்). இந்த பயிற்சிகள் அனைத்தையும் அத்தகைய விழிப்புணர்வு நிலையினை அடைவதற்காகவே செய்கின்றோம், வேறெதுவுமில்லை.

குருதேவ், எவ்வாறு நாம் சராணாகதி அல்லது செயல்பற்றற்ற நிலையினை அடைவது?

செயல் பற்று மற்றும் செயல்பற்றற்ற நிலை என்று வேறுபடுத்திக் காண்பதை நிறுத்துங்கள். எதைச் செய்தாலும் 100 சதவீதம் ஈடுபாட்டுடன் முற்றிலும் அதில் ஆழ்ந்து,உங்கள் முழுமனதையும் செலுத்தி செயல்படுங்கள். அந்த வேலை முடிந்தவுடன், நீங்கள் முற்றிலும் ஆழ்ந்த ஓய்வெடுங்கள். நாம் சாதரணமாக என்ன செய்கிறோம்? ஓய்வெடுக்கும் போதும் கூட நாம் என்ன செய்யவேண்டும் என்று எண்ணிக் கொண்டேயிருக்கின்றோம். செயல்படும் போது," ஒ இது அதிகமான வேலை, நான் ஓய்வெடுக்க வேண்டும், எனக்கு ஒய்வு தேவை என்றே எண்ணிக் கொண்டிருக்கின்றோம். இந்த வகையில் பணிபுரியும் போது, சரியாக வேலை செய்யவும் முடியாது, சரியாக ஓய்வெடுக்கவும் முடியாது. இரண்டையுமே இழந்து விடுகின்றீர்கள்.

குருதேவ், தியானம் செய்த பின்னரும் கூட என்னால் கோபத்தை அடக்க முடிவதில்லை என்ன செய்வது?

தியானத்தில் ஆழ்ந்துவிடுங்கள்.அதிகமாகப் பிராணாயாமம் செய்யுங்கள்.தியானம் செய்த பின்னரும் உங்கள் கோபம் அடங்காமல் இருக்க வாய்ப்பில்லை. அப்படியும் கோபம் குறையவில்லையெனில், உங்களை நீங்களே கூர்ந்து கவனிக்கத் துவங்குங்கள்.

முன்னர் உங்களுக்குக் கோபம் வரும்போது அது அதிக நேரம் நீடித்திருந்திருக்கும். சமீப காலத்தில் நீங்கள் தியானம் செய்யத் துவங்கியிருந்தால்,கோபம் வந்தாலும் விரைவில் அடங்கி விடுவதைக் கவனிப்பீர்கள். நான்கு அல்லது ஐந்து நிமிடங்களில் கோபம் குறைந்து விடுகிறது அல்லவா? அவ்வாறெனில் அது நேர்மறையான பாதையில் ஒரு பெரிய படி என்றே நீங்கள் கருதவேண்டும்.  முன்பு கோபம் வந்தபோது நீங்கள் தியானம் செய்ததில்லை. உங்கள் கோபம் பல மணிநேரம், பல நாட்கள், பல மாதங்கள் கூட நீடித்திருந்திருக்கலாம். இப்போது நீங்கள் ஒழுங்காக தியானம் செய்யத் துவங்கிய பின்னர், வெகு நேரம் நீடித்திருப்பதில்லை. ஏனெனில், கோபம் வரும் போது, அந்தக் க்ஷணத்தில் உங்கள் கவனம் மூச்சின் மீது லயித்திருப்பதால், உங்கள் மூச்சை நீங்கள் நினைவில் கொள்வதால், அது உங்கள் கோபத்தை சரிப்படுத்த உதவுகின்றது.  

கடந்த தியான அனுபவம் உங்களை சாந்தமான அமைதியான மனநிலைக்கு அழைத்து சென்று கோபத்தை பாதிவழியிலேயே நிறுத்திவிடுகின்றது. இந்த மாதிரி நடந்திருக்கின்றதல்லவா? எத்தனை பேர் இதை அனுபவித்திருக்கின்றீர்கள்? (பலர் கையுயர்த்துகின்றனர்). சில காலமாகத் தியானம் செய்து வருகின்றான், ஆயினும் கோபம் அடைகின்றான் என்று மற்றவர்கள் கூறலாம். ஆனால் உங்கள் உள்மனதிற்கு தியானத்திற்குப் பின்னர் மாற்றம் அடைந்துவிட்டது தெரியும். மாற்றம் நிச்சயம் ஏற்படும். செய்யும் எந்தத் தியானமும் வீணாகாது. 

அனைத்துமே ஒரு நாள் முடிந்து விடும் என்று தெரிந்து கொள்ளுதல் என்னை மிகவும் பாதிக்கின்றது. இதிலிருந்து எவ்வாறு வெளிவருவது?


உங்களை சுற்றியிருப்பவற்றின் நிலையற்ற தன்மை உங்களை சாந்தப்படுத்தி, உங்களுக்குள் ஆழ்ந்து செல்ல உதவவேண்டும். பாதிப்படைவது நல்லது தான், அது உங்களை தூக்கத்திலிருந்து எழுப்புகின்றது. அதைப் பற்றிக் கொண்டு ஆழ்ந்து உள்ளே செல்லுங்கள். உயர்ந்த ஓர் பரப்பெல்லை உங்களுக்குள் திறந்து, அங்கு  வெல்லமுடியாத உணர்வை அடைவீர்கள். இந்த வரையறுக்கப்பட்ட உடல் நீங்களல்ல, வரையறையற்ற மெய்யுணர்வே நீங்கள்  என்பதைக் கண்டு அனுபவிப்பீர்கள்.