யோகாவின் அற்புதம்

ஞாயிற்றுக்கிழமை, 21 ஜூன், 2015

நியூயார்க், அமெரிக்க ஐக்கிய நாடுகள்.



(யோகா - ஓர் புதிய பரிமாணம் என்னும் இடுகையின் தொடர்ச்சி கீழே தரப்பட்டுள்ளது.)

இந்த உலகம் ஏன் இருக்கின்றது?

உங்களுக்குக் கேட்க வேறெந்த கேள்வியும் இல்லை என்றே எண்ணுகிறேன்! இந்த உலகம் ஏன் இருக்கின்றது? எனக்குத் தெரியவில்லை. இந்த உலகம் ஏன் இருக்கின்றது என்னும் கேள்விக்குப் பதிலாக நான் ஏன் இருக்கிறேன் என்று நீங்கள் கேட்டுக் கொள்ளலாம். அதற்கு என்னிடம் விடை இருக்கின்றது. இந்த உலகம் மேலும் மேன்மையாவதற்காகவே நீங்கள் இருக்கின்றீர்கள்.

வாழ்க்கையை கொண்டாடவே இருக்கின்றீர்கள், வாழ்க்கையை பற்றிப் புகார் கூறிக்கொண்டோ, வருந்திக்கொண்டோ இருப்பதற்கு அல்ல. ஏன் இந்த உலகம் இருக்கின்றது? ஏன் இவ்வளவு அதிகமான வேற்றுமைகள் இருக்கின்றன? இது உண்மையில் கேள்வியல்ல, வியப்பாகும். வியப்பிற்கும்  கேள்விக்கும் இடையே உள்ள வேறுபாடு உங்களுக்குத் தெரிந்திருக்கும். வியப்பு  விடையை எதிர் பார்ப்பதில்லை.அது ஆச்சரியம்."விஸ்மையோ யோக பூமிகா" அதிசயம் யோகாவின் முன்னுரையாகும். எனவே, இப்போது  ஏன் இத்தனை வேற்றுமைகள் உள்ளன என்பதை பற்றி அதிசயித்துக் கொண்டிருக்க விட்டு விடுகிறேன். இந்த வியப்புணர்வு உங்களை யோகாவின் அற்புதங்களுக்கு அழைத்துச் செல்லும்.

ஆன்மீகத்தில் விருப்பமில்லாத நண்பர்கள், அதிர்ச்சிகளுக்கு ஆளாகும் போது அவர்களுக்கு நாம் எவ்வாறு உதவ முடியும்?

இந்தக் கேள்வியை உங்களுக்கே நான் விட்டு விடுகின்றேன். நீங்கள் பல வழிகளைக் கண்டறிந்து அவையனைத்தையும் உபயோகியுங்கள். எது பயன்பட்டாலும் உங்களுக்கு நல்வாழ்த்துக்கள். ஒரு சமயம், நான் ஒரு வாழும்கலை ஆசிரியரை நக்சலைட்டுகளிடம் பேசுமாறு அனுப்பி வைத்தேன்.  துப்பாக்கிகளுடன் இருந்த நக்சலைட்டுகளிடம் ஆசிரியர் சென்று பிராணாயாமம் செய்யுமாறு கேட்டுக் கொண்டார். அவர்கள்," ஏன் செய்யவேண்டும்? எங்களுக்கு அதனால் என்ன கிடைக்கும்? என்று கேட்டனர். ஆசிரியர்," நீங்கள் படபடப்பாக இருக்கிறீர்கள் அல்லவா? பயமும் இருக்கிறது. இதை செய்தால் உங்கள் வலிமை கூடும் என்று பதிலுறுத்தனர். அவர்கள் "ஒ அப்படியா? சரி கற்றுக் கொள்கிறோம்" என்று கற்க முன்வந்தனர். பிராணாயாமம் கற்றுக்கொண்ட பின்னர் அவர்கள் துப்பாக்கிகளை மீண்டும் எடுத்துக் கொள்ளவேயில்லை. இவையெல்லாம் கற்பிக்கும் திறன்கள்.
யோகா செயல் திறன். “யோகஹ  கர்மாசு கௌஷலம் இதுதான் பகவத் கீதையில் ஸ்ரீ கிருஷ்ணர் கூறியது. யோகா என்பது செயலில் திறன்.

சாதரணமாக, என்  மனம் எங்கும் அலை பாய்ந்து கொண்டிருக்கின்றது. அது ஓரிடத்தில் நிலைத்து நிற்ப்பதில்லை. என்னால் தியானம் செய்ய முடியவில்லை" என்று மக்கள் கூறுவதுண்டு. இப்போது நீங்கள் 20 நிமிஷங்கள் தியானம் செய்தீர்கள். உங்களை அமைதிப்படுத்தியது அல்லவா? மனதை அமைதிப்படுத்தத் தேவையானது அந்த சிறிய செயல் திறன் தான்.மனதில் எந்த எண்ணமும் இன்றி ஆழ்ந்த தியானத்திற்கு செல்வது அவ்வளவு கடினமானது அல்ல. உங்களுக்குத் தேவையானது  செயல் திறனேயாகும்.

சூரிய வணக்கம் சமயம் சார்ந்தது என்னும் சர்ச்சை வேதனையை ஏற்படுத்துகிறது. சூரிய நமஸ்காரத்தின் போது மந்திரங்கள் ஜபிக்கப்படவில்லை எனிலும் அது ஒரு அழகான யோகா அல்லவா?

நமஸ்காரம் என்னும் சொல்லுக்கு இரண்டு பொருட்கள் உள்ளன. ஒன்று வழிபாடு மற்றொன்று வாழ்த்து. நீங்கள் ஒருவரைச் சந்திக்கும் போது, நமஸ்கார் என்று கூறுகின்றீர்கள். அவரை வாழ்த்துகிறீர்கள் என்பது பொருள், அவரை வழிபடுகிறீர்கள் என்பது அல்ல. நான் கூறுவது புரிகிறதா? அச்சொல் வழிபாடு மற்றும் வாழ்த்து இரண்டிற்கும் பயன்படுத்தப்படுகிறது. இப்போது இந்தியாவில் இது ஒரு பெரும் வாக்குவாதமாகி விட்டது. ஏனெனில் அது சமயச் சாயலை அதிகப்படியாக கொடுக்கக் கூடும்.

அது போன்று, பல்வேறு விதமான மந்திரங்களும் ஒலி அதிர்வலைகள் தாம். ஒலி அதிர் வலைகள் உடலின் பல பகுதிகளில் தாக்கத்தினை ஏற்படுத்துகின்றன. உதாரணமாக, ஒருவர் அழுத்தத்தில் இருக்கும் போது, அவரிடமிருந்து என்ன ஒலி எழுகின்றது? ஹூம் என்பது தான். இந்த ஹூங்காரம் ஓர் மந்திரம். தேவி பாகவதத்தில் ஒரு கதை உள்ளது. அசுரர்கள் தாக்குவதற்கு முனைந்த போது, தெய்வத்தாய் எழுந்து ஹூம் என்ற ஒலியினை எழுப்பினாள். அனைத்து அசுரர்களும் அழிந்து சாம்பலாகி விட்டனர்.

இந்தக் கதையின் பொருள் என்ன? அதிக அளவு எதிர்மறை மனதில் எழும்போது, நமது உடலுக்குள்ளேயே கட்டமைக்கப்பட்ட ஓர் இயந்திர நுட்பம் உள்ளது. அது ஹூம்காரம் ஆகும். ஆழ்ந்து ஓர் மூச்செடுத்து ஹூம் என்றால் எதிர்மறைகள் அகன்று விடும். ஆகவே இந்த ஒலிகளுக்கு அவைகளுக்கே உரித்தான அதிர்வலைகள் உள்ளன. அது நமது அமைப்பிற்கு முக்கியமானது ஆகும். யாருக்கேனும் தடையிருந்தால், அவர்கள் அதை செய்ய வேண்டியதில்லை.

குருதேவ்,உங்களுக்கு எதிர்மறை எண்ணங்கள் தோன்றுகின்றனவா? அவ்வாறு ஏற்பட்டால், அவற்றை எவ்வாறு கையாளுகிறீர்கள்?

நீங்கள் அந்த எண்ணங்களே அல்ல, அன்பானவரே! எண்ணங்கள் என்பவை வரும், போகும். அவை வட்டமிட்டுத் திரிந்து கொண்டேயிருக்கும். நான் உங்களை ஒன்று கேட்க விரும்புகின்றேன். யாரையாவது கொல்ல வேண்டும் என்னும் எண்ணம் எப்போதாவது தோன்றியிருக்கின்றதா? " இல்லை, அது எனக்கு இயற்கையானது அல்ல" என்றே கூறுவீர்கள். அவ்வாறாயின் ஏன் யாரோ ஒருவருக்கு அந்த எண்ணம் தோன்றுகிறது? ஓர் எதிர்மறை எண்ணத்தினை நீங்கள் அடையும் போது மற்ற அனைவரும் அதே போன்ற எண்ணத்தினையே அடைவார்கள் என்று நினைக்கின்றீர்கள்.

குழந்தையாக இருந்தபோது,எந்த விதமான எதிர்மறை எண்ணங்களும் உங்களுக்கு ஏற்பட்டதில்லை. கவலைகள், பயங்கள் இருந்தாலும் யாரையும் கெட்ட விதமாக எண்ணியதில்லை.அல்லவா? அதை நீங்கள் அனுபவித்தறிந்திருக்கின்றீர்கள்.மூன்று வயதுக் குழந்தையாக இருந்ததை நினைவுபடுத்திப் பாருங்கள். உலகம் உங்களுக்கு அப்போது எப்படி இருந்தது? ஒரு சிறிய உலகம். எதிர்மறை ஏதேனும் இருந்ததா என்ன? ஏன்?


எதிர்மறை என்பது எலேக்ட்ரானை போன்றது. அது வெளிவட்டத்திலேயே இருக்கிறது. உங்கள் இருப்பின் உள்ளகத்தில் அனைத்தும் நேர்மறையே ஆகும். எந்த எதிர்மறை எண்ணமும் உங்களுடையது அல்ல. அவை வந்து  சுற்றிக் கொண்டிருக்கின்றன, அவைகளைப் பிடித்து வைத்துக் கொள்ளாதீர்கள்.