மகிழ்ச்சியின் உண்மையான மூலாதாரம்

செவ்வாய்கிழமை, 2 ஜூன் 2015,

பெங்களூரு  இந்தியா


இன்று பௌர்ணமி நாள், மேகமூட்டமாக  இருக்கின்றது. இப்படித்தான் வாழ்க்கையும். நீங்கள் முழு நிலவை போன்று தூய்மையான அழகனாவர். அது மேகமூட்டத்தால் (செயலற்ற தன்மை மற்றும் எதிர்மரையினைக் குறிப்பிட்டு)கண்ணுக்கு தெரிவதில்லை.வாழ்க்கையில் அருள் பொழிய துவங்கும் போது, அனைத்து மேகங்களும் விலகி மறைந்து விடுகின்றன. அப்போது முழுதாக மலர்ந்த நிலவு கண்ணுக்குத் தெரிகின்றது.

அது போன்றே ஓர் திரை ஞானத்தின் மீது படர்கின்றது. புரிந்து கொள்ளுங்கள், எப்போதெல்லாம் துன்பமாக, திருப்தியற்று, அமைதியின்றி  உணருகின்றோமோ அந்த நேரங்களிலெல்லாம், ஓர் திரை நமது பார்வையை மறைக்கின்றது. வெளிச்சத்திலிருந்து (ஞானம்) விலகியிருக்கின்றோம். கடவுளின் ஒளியிலிருந்து விலகி இருப்பதால் தான் இருள் சூழ்ந்து கொண்டிருப்பது போன்று தோன்றுகிறது. அந்த சமயங்களில் நமது நிழல் (துன்பம் மற்றும் கஷ்டம்) பெரிதாக தெரிகின்றது. அதைப் பார்த்துப் பயந்து விடுகின்றோம். எப்போதெல்லாம் பயம் தோன்றுகிறதோ, அது நாம் காணும் நமது நிழலால் தான் (கவலை மற்றும் துன்பம்). இந்த நிழலை எதிர்த்து நாம் போராடிக் கொண்டிருக்கின்றோம். இதைத் தாண்டி வருவதற்கு என்ன செய்ய வேண்டும்? வெளிச்சத்தை நோக்கி,குருவை நோக்கி நமது கவனத்தை திருப்பவேண்டும். ஒளியை நோக்கி திரும்பியவுடனேயே நம்மை சூழ்ந்திருக்கும் இருள் ஓரிரு நொடிகளிலேயே மறைந்து விடும். நாம் எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும் நிழலும் மறைந்து விடும்.

ஒருவர் மனதையும், உலகையும் தெய்வீகத்தின் ஓர் பகுதியாக கருத வேண்டும் என்று கூறப் பட்டுள்ளது. இவ்வுலகம் முழுமையையும் தெய்வத்தின் ஓர் பகுதியாகக் காணும் போது என்ன நிகழ்கின்றது? உலகின் மீது கொண்டுள்ள பற்றுதல் ஓர் முடிவுக்கு வருகின்றது. உங்கள் கோபம் பேராசை உங்களை பற்றிக் கொண்டுள்ள விருப்பங்களின் மீது ஜுரவேகம் அனைத்தும் முடிவுக்கு வருகின்றன. இது அனுபவபூர்வமான உண்மை. மேலோட்டமான பேச்சல்ல. உங்கள் வாழ்க்கையில் இதை நீங்கள் அனுபவித்துப் பார்க்க வேண்டும்.

மனம் நிலையில்லாதது, ஓய்வற்றது என்று நாம் அடிக்கடி கூறுகின்றோம். ஏன்? ஏனெனில் மனம் எப்போதுமே அதிக சந்தோஷத்தை விரும்புகின்றது.எப்போதுமே அதிக மகிழ்ச்சியை தேடி அலைந்து கொண்டிருக்கின்றது. சில நேரங்களில் ஒருவரது அண்மையில் அதிக மகிழ்ச்சி, ஒரு பதவியினை அடைவதில் அதிக மகிழ்ச்சி, என்றேல்லாம் எண்ணுகிறோம். ஐந்தாறு பேர் உங்களைப் புகழ்ந்து பேசிவிட்டால், மிக உயர்வாக உணர்ந்து அதிலிருந்து மகிழ்ச்சியினை அடைகின்றீர்கள். இந்த மாயத் தோற்றம் அல்லது மனப்போக்கினை (மனிதர்கள் மற்றும் பொருட்களில் மகிழ்ச்சியைத் தேடுதல்) முதலில் புரிந்து கொள்ளவேண்டும் புரிந்துகொள்ளும் நேரத்திலேயே தெய்வீகம் தான் மகிழ்ச்சியின் மிகப்பெரிய மூலாதாரம் என்பதைப் புரிந்தறிந்து கொள்வீர்கள். அதற்குப் பின்னர் உங்களுக்கும் தெய்வத்திற்கும் இடையே தூரமேதுவும் இல்லையென்பதை புரிந்து கொள்வீர்கள். முற்றிலும் ஒருங்கிணைந்து நீங்களும் கடவுளும் ஒன்றே என்பதையும் இவ்வுலகம் முழுமையிலும் தெய்வமே நிறைந்திருக்கின்றது என்பதையும் அறிந்து கொள்வீர்கள். அவ்வளவு தான். இதுவே அனைத்தின் சாரம். இதை உங்களுக்கு நினைவுறுத்திக் கொண்டேயிருங்கள். இதைப் புரிந்து கொண்டவுடன் அனைத்துத் துன்பங்களும் மறைந்து விடும்.

குருதேவ், அனைவரும் என்னை விரும்ப நான் என்ன செய்ய வேண்டும்?

முதலில் அனைவரும் விரும்ப வேண்டும் என்னும் விருப்பத்தை விட்டுவிடுங்கள். கடவுளின் விருப்பத்துக்குரியவராக இருக்கும் வரையில் நல்லது. அதுவே போதும். ஒவ்வொருவரையும் எவ்வளவு காலம் மகிழ்ச்சிப்படுத்திக் கொண்டே இருக்க முடியும்? உங்கள் ஆழ்மனதில், ஆத்மாவில் திருப்தியுணர்வினை அடையுங்கள்.. தெய்வீகத்தினை நோக்கி நடந்து செல்லுங்கள். எப்போது இறைவன் உங்களை நேசிப்பதை அறிகின்றீர்களோ அதற்குப் பிறகு உங்களுக்கு எதுவுமே தேவையாக இருக்காது. அவ்வளவு தான்.

குருதேவ் இத்தனை நறுமணமுள்ள படைப்பையும், கீர்த்தி மிகுந்த சூரியனையும் படைத்த கடவுளுக்கு நாம் ஏன் விளக்கும் அகர்பத்தியும் ஏற்றி வைக்கிறோம்?


இதெல்லாம் விளையாட்டுத் தான். இவற்றைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்காதீர்கள்.  புனிதமும் தூய்மையும் உடைய சூழலை ஏற்படுத்தவே இவற்றைச் செய்கின்றோம். கடவுளைத் திருப்திப் படுத்த அகர்பத்தியோ விளக்கேற்றுதலோ தேவையில்லை. நீங்கள் உள்ளிருந்து மகிழ்ச்சியுடனும் திருப்தியுடனும் இருந்தாலே கடவுள் மகிழ்ச்சியடைவார்.