கடவுளை மகிழ்விக்கும் வழி

செவ்வாய்கிழமை,
2 ஜூன், 2015

(உண்மையான மகிழ்ச்சியின் மூலாதாரம் என்னும் இடுகையின் தொடர்ச்சி)


குருதேவ், புனே ஆஸ்ரமத்தில், பிறந்த நாட்கள் மற்றும் ஆண்டு நிறைவு நாட்களில் ஆயுஷ் ஹோமம் செய்யப்படுகின்றது. இதன் முக்கியத்துவம் என்ன?

மந்திரங்கள் ஜபிக்கப்படும் போது நேர்மறையான புனிதமான சூழல் உருவாகின்றது. மந்திரங்களுக்கு நுண்ணிய அளவில் தாக்கம் உண்டு. நமது உடல் மொத்தமானது, நமது நுண்ணிய உருவம் அதை விட 1.5 மடங்கு பெரிதானது.காரண சரீரம் அல்லது காரண உடல், நுண்ணிய உருவத்தை விட 1000 மடங்கு நுண்ணியது.ஆகவே நமக்கு மூன்று விதமான உடல்கள் உள்ளன.மொத்த உடலை விட  நுண்ணிய உடல் சுருங்கி சிறியதாகும் போது ஒருவர் அமைதியற்றும், துன்பமாகவும் உணருகிறார். நுண்ணிய உடல் மேலும் குறையும்போது அந்த நபர் தனது மன சமநிலையை இழந்து தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தை அடைகிறார். இதுதான் தற்கொலைகளின் மூல காரணமாகும்.

நீங்கள் அணிந்து கொண்டிருக்கும் உள்சட்டை,சுருங்கி, உடலை விட சிறியதாகி விட்டால், எவ்வாறு உணருவீர்கள்? அதைக் கிழித்து விட்டாவது, விடுதலையாக உணர வேண்டும் என்று விரும்புவீர்கள் அல்லவா? அது போன்றது தான் தற்கொலை உணர்வும். நுண்ணிய உடல் அதிக அளவில் சுருங்கி, மொத்த உடலை விட சிறியதாகி விடுகின்றது. மந்திரங்களை ஜபித்து, பிராணாயாமம் தியானம் ஆகியவற்றை செய்யும் போது நுண்ணிய உடல் பெரிய அளவிலாகி, அதிக பலம் பெறுகின்றது. நுண்ணிய உடல் பலமாக இருக்கும் போது, ஒருவர் சரியான தோற்றத்துடன் இருக்கின்றார். நுண்ணிய உடல் சாதாரண நிலையை விட அதிகமாக மேலும் மேலும் விரிவடையும் போது, ஒருவர் பேரின்பத்தில் திளைத்திருப்பதை உணர்கின்றார். அதற்கு மேலும் நுண்ணிய உடல் விரிவடையும் போது, அது மிகவும் மென்மையானாதாகி காரண உடலுடன் ஒன்றி விடுகிறது. அதுவே மோக்ஷம்.(விடுதலை அல்லது முக்தி).

ஆயுஷ் ஹோமம் என்பது ஒருவரின் உடல்நலன் மற்றும் ஆயுள்விருத்திக்காக பிரார்த்தனை செய்யும் பழமையான மரபு. உடல் நலனுக்காக பிரார்த்திப்பது என்னெவன்றால், இந்த உடலை விடும் வரையில் பார்வை, காது கேட்கும் திறன், ஆகியவற்றுக்காக பிரார்த்திப்பது. ஜெபங்களுடன் நவகிரகங்களையும் கௌரவித்து, அவர்களுக்கு புனிதமான தானியங்களை ஹோமத்தீயிலிட்டு வணங்குகிறோம்.இதுதான் ஆயுஷ் ஹோமத்தில் செய்யப்படுவது. ஹோமத்தில் மந்திரங்களை ஜபித்து, இறைமையிடம்,"என்னுடைய ஆயுட்காலம் நீண்டிருக்கட்டும், நான் உடல் நலத்துடன், நோய்களின்றி வாழ வேண்டும். என் மூலம் நல்லவை மட்டுமே நிகழட்டும்.என்னை சுற்றியிருக்கும் அனைத்தையும் அனைவரையும் சார்ந்திருக்கும்படி உணர வேண்டும்" என்று பிரார்த்தித்து கொள்வது. எனவே  இந்த விருப்பங்களையும் பிரார்த்தனைகளையும் முன்வைத்து ஒருவர் ஆயுஷ் ஹோமம் செய்து கொள்கிறார்.  இதுதான் பழமையான வேதகால பிறந்த நாள் கொண்டாட்ட முறையாகும்.

குருதேவ், மனிதர்களும் பொருட்களும் நம் வாழ்வில் வந்து செல்பவை,- நம்முடையவை அல்ல என்று கூறப்படுகின்றது. என்னுடைய கேள்வி என்னெவெனில் நம்முடையவை இல்லையெனில் அல்லது நம்முடையவையாகவே போவதில்லை என்னும் போது ஏன் மனிதர்களும் நிகழ்வுகளும் நம் வாழ்வில் வருகின்றனர் ?

அனைத்துமே வாழ்வில் வந்து போகின்றன. எதுவுமே நிலையாக இருப்பதில்லை. இந்த பூமிக்கு நாம் வந்திருக்கின்றோம், ஒருநாள் இங்கிருந்து போய் விடுவோம். இவ்வாறு தான் உலக வாழ்க்கை சுழற்சி உள்ளது. ஆகவே இம்மாதிரியான கேள்விகளை கேட்டுக் கொண்டு உங்களை துன்புறுத்திக் கொள்ளாதீர்கள். புரிந்ததா? இளைப்பாறி சந்தோஷமாக இருங்கள்.

மலர் ஏன் பூக்கிறது? ஏன் சூரியன் ஒளி வீசுகிறது? ஏன் சூரிய ஒளி வெப்பமாக இருக்கிறது? ஏன் மழை பெய்கிறது? என்றெல்லாம் கேள்வி கேட்பதால் என்ன பயன்? ஏன் என்று கேள்விகளிலேயே உங்கள் மனம் சிக்கிக் கொள்கின்றது. இதற்கான விடைகளை பெறுவதில் உங்களுக்கு என்ன லாபம்? அந்த விடைகளை வைத்துக் கொண்டு என்ன செய்வீர்கள்? கேள்விகள் கேட்பது நல்லது தான், ஆனால் அதுவும் ஒரு அளவுக்குத் தான். எதையுமே கேள்வி கேட்பதற்கு ஒரு அளவு இருக்கின்றது. அந்த அளவை வரையறுத்து கொள்வது நமக்கு உள்ளிருந்து விழிப்புணர்வினை அடைய உதவுகிறது. - கேள்வியின் நோக்கமே தூக்கத்திலிருந்து எழுப்புவது தான். ஒருவர் யதார்த்தத்திற்கு வந்துவிட்டால் பின்னர் கேள்விகளே எழாது. அனைத்துக் கேள்விகளும் முற்றுப் பெற்று விடும். வாழ்க்கையே ஒரு இனிமையான நல்லிணக்கமாகி  விடும்.

என் குழந்தையின் மனதில் இருக்கும் பயத்தினை நான் எவ்வாறு கையாளுவது?

குழந்தையின் மனதில் அதிக பயம் இருக்காது. அப்படியிருந்தாலும், நீங்கள் நிதானமாக விளக்கிக் கூறுவதுடன் ஓம் நமசிவாய அல்லது ஜெய் குருதேவ் போன்ற சில மந்திரங்களை ஜெபிக்குமாறு கூறுங்கள். பயங்கள்  அனைத்தும் அகன்று விடும். உங்களுக்கு தார்மீக ஆதரவு இருக்கும் போது பயம் எழாது. அதனால் தான் மந்திர உச்சாடனம், பிராணாயாமம் ஆகியவை உங்களுக்கு வலுவான ஆதரவளித்து மனதிலுள்ள பயங்கள் விலகிவிடப் பெரிதும் உதவும். மந்திரங்கள் சிறப்பான அளவில் பலம் மற்றும் ஆதரவளிக்கும்.

குருதேவ், நான் ஓர் சீக்கியப் பெண். ஜைன மதத்தைச் சேர்ந்த ஒருவரை மணந்து கொள்ள விரும்புகிறேன். ஆனால் என் தந்தை, சீக்கிய மதமே மிகச் சிறந்தது, அதற்கு வெளியே திருமணம் செய்து கொள்ளக் கூடாது, என்று கூறுகிறார். மேலும் நான் வாழும் கலையில் சேர்ந்து என்னுடைய சமயத்தை புறந்தள்ளி விட்டதாகவும் கூறுகின்றார். நான் என்ன செய்வது?

அப்படியெல்லாம் எதுவுமில்லை. அவரிடம் பொறுமையாக, ஏன் இவ்வளவு அறியாமையுடன் இருக்கின்றீர்கள் என்று கேளுங்கள். குருவின் நல்லாசியின் கீழ் வந்தும் ஏன் பல விஷயங்களை தவறாகவே புரிந்து கொண்டிருக்கிறார்? அவர் குருநானக் தேவ்ஜியின் போதனைகளை சரியாகப் புரிந்து கொள்ளவில்லை.குரு கிரந்தத்தை மீண்டும் முழுவதுமாக நன்றாக படிக்குமாறு கூறுங்கள். அது மிக அற்புதமானது. அதில் மிக ஆழ்ந்த ஞானம் உள்ளது. மேலும் அது சுய நிர்ணயத்தினை பற்றியும் கூறுகின்றது.

ஜைன மதமும் இதே கொள்கைகளைக் கொண்டுள்ளது. மேலும் அது அஹிம்சையையும் உயர்ந்த உண்மையைத் தேடலையும் ஊக்குவிக்கின்றது.  நீங்கள் உற்றுப் பார்த்தால், சீக்கிய சமயம் என்பது 15 சிறப்பு மிகுந்த துறவிகளின் ஒன்றிணைவே ஆகும். 15 துறவிகளின் போதனைகள் ஒன்றாக இணைக்கப்பட்டதே குரு க்ரந்த் சாஹிப். 15 துறவிகளின் போதனைகள் ஒன்றாக இணைக்கப்பட்டதே குருக்ரந்த்சாஹிப்.முகம்மதியத் துறவியான போதிலும் கபீர்தாசின் போதனைகளும் அதில் உள்ளன. 

ஜாதி மற்றும் இன பாகுபாடுகளை முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு, சிறப்பு மிக்க துறவிகள் சீக்கிய சமயப் பரிணாமத்தினை ஏற்படுத்தினர். சீக் என்னும் சொல் சிஷ்ய (மாணவன்: இங்கு எப்போதும் கற்று வளர்தலையே விரும்புபவன் என்னும் பொருள்) என்பதைக் குறிப்பதாகும். ஆகவே உங்கள் தந்தையிடம், "நீங்கள் இந்த நற்பண்புகளை மறந்துவிட்டது போலத் தோன்றுகிறது. ஜப்ஜி சாஹேப் மற்றும் குருக்ரந்த்சாஹேபை மீண்டும் படியுங்கள். அதில் கூறப்படும் குர்பானி சமய ஜாதி வேறுபாடுகளுக்கு முடிவு காண்கிறது" என்று கூறுங்கள்.

வேதங்கள் உபநிஷதங்கள் ஆகியவற்றின் சாரமும் குருக்ரந்த்சாஹேபில் அடங்கியுள்ளது. ஜப்ஜி சாஹேபில் "ஏக் ஓம்கார் சத்நாம் கர்த புராக்ஹ்" அதாவது, ஓம்காரம் எங்கும் நிறைந்த ஒரே  தெய்வத்தையே குறிக்கின்றது என்று கூறப்பட்டுள்ளது. ஜைன மதமும், ஹிந்து மதமும் ஓம் என்பதை பற்றி அதே நம்பிக்கையையே உடையவை. என்ன வேறுபாடு இருக்கின்றது? இது தவறான புரிதலேயாகும். எந்த வித்தியாசமோ வேறுபாடோ கிடையாது. உங்கள் தந்தையிடம் " மற்ற சமயங்களை போன்றே நாங்களும் ஓம் மந்திரத்தின் சிறப்பினை பெரிதும் நம்புகிறோம்" என்று கூறுங்கள்.