குருவின் ஒரு பகுதி

திங்கள்கிழமை, 8 ஜூன், 2015,

பெங்களூரு, இந்தியா


(தியானம் வெளிப்படுத்துதலை அளிக்கின்றது என்னும் இடுகையின் தொடர்ச்சி)

குருதேவ், ஏன் தனிமையில் பயம் கொள்கிறோம்? ஏன் எப்போதும் ஒருவருடன் கூட இருப்பதை விரும்புகிறோம்?

இவ்வாறு உணருவதற்கு காரணம் என்னவென்றால்,உங்களுக்குள் ஆழ்ந்து சென்றிருக்கவே இல்லை. சுயத்தினை சந்திக்கவே இல்லை. உள்ளிருக்கும் உண்மையான சுயத்தினை நீங்கள் விழிப்புணர்வுடன் அறிந்து கொள்ளும் கணத்தில் அனைத்து பயங்களும், எதிர்மறைகளும் உடனே மறைந்து விடும். எவ்வாறு ஒருவர் தனது உண்மையான சுயத்தினை சந்திப்பது? உங்களது பாத்திரங்களை சில நிமிஷங்களுக்கு ஒருபுறமாக ஒதுக்கி விட்டு, "நான் யார்" என்று எண்ணிப் பாருங்கள். இக்கேள்வியை கேட்டுக் கொண்டே இருங்கள். இடைவிடாமல் இந்தக் கேள்வியை உங்களையே நீங்கள் கேட்டுக் கொண்டிருந்தால் ஆழ்ந்த தியானத்தில் மூழ்கி விடுவீர்கள். அப்போது நீங்கள் உண்மையை அறிந்து கொள்வீர்கள். அவ்வாறு நிகழும் போது,எந்த விதமான விரோதம், எதிர்மறை மற்றும் வெறுப்பு ஆகியவற்றுக்கும் இடமே இல்லை. சில க்ஷணங்களில் அவை மறைந்து விடும். ஆகவே இந்தக் கேள்விகளை உங்களையே கேட்டுக் கொண்டே இருப்பது மிக நல்லது. விரும்பினால் தினமும் சில நிமிஷ நேரத்திற்கு இதை செய்யலாம். தனிமையில் அமர்ந்து, "நான் யார்?" என்று கேட்டுக் கொண்டே இருங்கள். மனம் மௌனமாகி, அமைதியடைவதையும், மகிழ்ச்சியும் ஆனந்தமும் உங்களை நிரப்புவதையும் உணர்ந்தறிவீர்கள்.

குருதேவ், தர்மத்தின்படி, வெவ்வேறு ஜாதி மற்றும் வெவ்வேறு சமய கலப்புத் திருமணம் தவறானதா?

இல்லை. வேறு ஜாதி வேறு சமயம் ஆகியவற்றுக்கிடையே உள்ள திருமணம் என்பது இங்கு முக்கியமே அல்ல. முக்கியம் என்றால் பொருத்தம் மட்டும் தான்.உணர்ச்சி மிகுதியால், ஒருவரிடம் நீயில்லாமல் என்னால் வாழவே முடியாது என்று கூறாதீர்கள். உணர்ச்சி மிகுதியில் அவ்வாறு கூறினால் மிக விரைவிலேயே, “உன்னுடன் என்னால் வாழ முடியாது" என்று கூறுவீர்கள். அது கவிழ்ப்பது போன்றாகி விடும். அதனால், இந்த விஷயங்களில் மூத்தவர்களின் ஆலோசனையை கேட்டுக் கொள்ள வேண்டும்.

நான் ஒருவரை உண்மையாகவே விரும்புகிறேனா அல்லது அது வெறும் கவர்ச்சியா என்று எவ்வாறு தெரிந்து கொள்வது?

காலம் உங்களுக்குத் தெரிவிக்கும். அவர்கள் உங்களிடம் கடுமையாக நடந்து கொள்ளும் போது நீங்கள் அறிந்து கொள்வீர்கள். உங்கள் மீது மிக அதிகமான கோரிக்கைகளை திணிக்கும் போது நீங்கள் அவரை எந்த அளவு மதிக்கின்றீர்கள் என்பதைப் புரிந்து கொள்வீர்கள்.

குருதேவ், உங்கள் அழகு மற்றும் கவர்ச்சியின் ரகசியம் என்ன?

ஆங்கிலத்தில் "அழகு காண்பவரின் கண்களில் உள்ளது" என்று கூற்று உண்டு.யார் காண்கின்றாரோ அவரது கண்களிலேயே அழகு அமைந்திருக்கின்றது. உங்கள் மனம் சந்தோஷமாக, அமைதியாக இருக்கும்போது நீங்கள் மகிழ்ச்சியினை சுற்றியிருக்கும் உலகில் காண்கின்றீர்கள்.பார்ப்பவரெல்லாம் நல்லவராக தோன்றுகிறார்கள். மனதில் எதிர்மறைகளும், வெறுப்பும் நிறைந்திருக்கும் போது ஒவ்வொருவருமே எதிரியாகத் தோன்றுகிறார்கள். அனைத்துமே கண்ணோட்டத்தை பொறுத்தது தான். ஆஸ்ரமத்திற்கு வருவது நிச்சயமாக ஒருவரது உள்ளக் காட்சியினை மாற்றுகின்றது. அவ்வாறு நிகழவில்லையெனில், என்னிடம் அல்லது உங்களிடம் ஏதோ சரியில்லை. நீங்கள் வளர்ந்து வாழ்வில் முன்னேறுவதைக் காண்பது மட்டுமே எனது பணி. ஆன்மீகம் ஆனந்தத்தைத் தரவில்லையெனில் ஏன் அதை நோக்கி வருகின்றனர்? அது ஒரு சுமையாக இருந்தால், ஏன் அதை ஏற்றுக் கொள்கின்றனர்? நிச்சயமாக ஆன்மீகத்திலிருந்து நன்மை கிடைக்கிறது. அதனால் பலர் அதைப் பயிற்சி செய்கின்றனர். இயற்கை அதை இவ்விதமாக வடிவமைத்துள்ளது.

எவ்வாறு நான் நல்லறிவின் மீது இணக்கம் மற்றும் பற்றுக் கொள்வது?

உங்களுக்கு ஏற்கனவே அவை இருப்பதை உங்கள் கேள்வியே சுட்டிக் காட்டுகிறது. ஏற்கனவே இருப்பதை ஏன் தேடிக் கொண்டிருக்கின்றீர்கள்? நல்லறிவின் மீது இணக்கம் இல்லையென்று எண்ணினால், அதை வளர்த்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். ஆனால் அது ஒருபோதும் நிகழப் போவதில்லை. உங்களுக்குள் சில விஷயங்கள் இருப்பதாக நீங்கள் கருதிக் கொள்ள வேண்டும். சில விஷயங்களை நாம் அறிந்து கொள்ள வேண்டும் புரிந்து கொள்ள வேண்டும். சிலவற்றை நாம் முற்றிலும் நம்பி ஏற்றுக் கொள்ள வேண்டும்.

அனைத்தும் தெரிந்திருக்க முடியாது. சிலவற்றை காரணம் கண்டு புரிந்து கொள்ள வேண்டும். உதாரணமாக, யாரேனும்," இது விஷம், இதைக் குடிக்காதீர்கள்" என்று கூறினால் நீங்கள்," இது விஷம் என்று எப்படித் தெரியும்? உண்மையிலேயே விஷம் தானா என்று குடித்து பார்க்கிறேன்" என்று கூறமுடியாது. அந்த வித்தியாசத்தை கூற நீங்கள் உயிருடன் இருக்க மாட்டீர்கள். (சிரிப்பு) நான் கூறுவது புரிகிறதா?எனவே, சிலவற்றை நீங்கள் உண்மையென்று ஏற்றுக் கொண்டு விட வேண்டும், வேறு சில நீங்கள் அறிந்து புரிந்து கொள்ள வேண்டும்.

வாழ்க்கையில் அனைவரிடமும் அன்பு காட்டுங்கள். சிலர் அவர்களைப் போன்றே இருப்பவர்களிடம் மட்டுமே பேசி பழகுவதாகக் கூறுகின்றனர். அது சரியல்ல என்றே நான் எண்ணுகின்றேன். ஒரே மாதிரியான எண்ணங்கள் நடத்தையுடையவர்களிடம் பழகி என்ன பயன்? உங்களைப் போன்று இல்லாதவர்களிடம் வித்தியாசமான எண்ணப் போக்கு, நம்பிக்கைகள் உள்ளவர்களிடம் பழகுவதே அதிக அர்த்தமுள்ளதாகத் தோன்றுகிறது.அது உங்கள் திறன்களை மேம்படுத்தி, உங்கள் மனதை  புதிய விஷயங்களுக்கு எடுத்துச் செல்லும். ஒரே விதமான சிந்தனை அமைப்புகள் மற்றும் கொள்கைகள் கொண்ட இந்த திடமான அடிப்படைவாத அணுகுமுறை.

நம் நாட்டில் ஒரு பொதுவான பின்தங்கிய அடையாளம் மற்றும் ஆச்சாரமாக உள்ளது. ஒருவர் சில கொள்கைகளை பின்பற்றி, அவ்வாறில்லாத மற்றவர்களிடமிருந்து தனித்து ஒதுங்கி, நம் நாட்டில் கம்யுனிஸ்டுகள் போன்று உள்ளனர். ஒரு கம்யுனிஸ்ட் தன்னுடைய கொள்கைகளில் பிடிப்புடன் இருந்தால் பிற சமய அல்லது கொள்கைவாதிகளிடம் பேச ஏன் அவ்வளவு கஷ்டப்படுகிறார்கள்? பெரும்பாலும் அவர்கள் தங்கள் கொள்கைகளை ஏற்காதவர்களிடமிருந்து விலகி ஓடி விடுகின்றனர். இது ஒரு விதமான கொள்கை அடிப்படையிலான தீண்டாமை என்றே நான் கூறுவேன். சமய அல்லது ஆன்மீகவாதிகள் என்று தங்களை கருதிக் கொள்ளும் சிலர் கூட இவ்விதமே நடந்து கொள்கின்றனர். கடவுள் நம்பிக்கையற்ற ஒருவரை சந்திக்கும் போது ஒதுங்கி விடுகின்றனர். இது ஒருவரது நம்பிக்கைகளில் வலிமை என்பதை விட அந்த மனிதரின் பலவீனம் என்ற அடையாளத்தையே காட்டுகிறது. நமது எண்ணங்கள், நம்பிக்கைகள் இவற்றில் நாம் நன்கு நிறுவப் பட்டிருக்கும்போது, நாம் தலை நிமிர்ந்து சுதந்திரமாக நடக்க வேண்டும்.

குருதேவ், நாங்கள் எவ்வாறு தங்களுடைய தலைசிறந்த படைப்பாக ஆக முடியும்?


நீங்கள் ஏற்கனவே அவ்விதமாகத்தான் இருக்கிறீர்கள்! நீங்கள் குருவின் ஒரு பகுதி, நீங்கள் குருவின் அமைதியினை எங்கும் சென்று பரப்பவேண்டும்.