வாழ்க்கையை ஓர் கொண்டாட்டமாக்குதல்

வியாழக்கிழமை, 25 ஜூன், 2015,

கோடா கொலம்பியா


(கொலம்பியா பாராளுமன்றத் தலைவர்  உலகெங்கும், முக்கியமாக கொலம்பியாவில்  வாழும் கலை நிறுவனத்தின் மூலம் அளித்த அமைதி பணியினை கௌரவிக்கும் விதமாக  பூஜ்ய ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களுக்கு அந்நாட்டின் தலை சிறந்த விருதினை வழங்கினார். அந்நிகழ்ச்சியில் ஸ்ரீ ஸ்ரீ அவர்கள்  அளித்த உரை கீழே தரப்பட்டுள்ளது.)

ஆழ்ந்த ஞானம் மட்டுமே கொண்டாட்டத்தை தரமுடியும். உணர்வை நாம் அனைவருக்கும் தர வேண்டும். சரியான இடத்தில், சரியானவற்றை செய்து கொண்டு இருக்கிறோம் என்னும் திருப்தியுடனும் நல்லதே உங்களுக்கு நடக்கும் என்னும் நம்பிக்கையுடன் இருங்கள். நமக்கு தேவையான அனைத்தும் கவனித்துக் கொள்ளப்படும் என்னும் ஆழ்ந்த நம்பிக்கை இருக்க வேண்டும். வாழ்க்கையில் சவால்கள் ஏற்படும், ஒவ்வொரு சவாலும் உங்களை வலுவானவராக்கி உள்ளிருந்து ஒளி வீசச் செய்யும்.

ஒரு வைரம் வெட்டித் துண்டாக்கப்படும். அவ்வாறு வெட்டப்பட்ட வைரமே அதிகமான ஒளி வீசும். அது போன்றே தங்கம் நெருப்பிலடப்படும் போது அதிகமாக பிரகாசிக்கும்.கரும்பினை நசுக்கும் போது அதிக இனிப்புடன் சாறு வெளி வருகின்றது. நசுக்கப்படும் கரும்பு அது " நான் கசப்பான சாறைத் தருவேன்" என்று கூறுவதில்லை. அது போன்றே நம் வாழ்க்கையில் பிரச்சினைகள் வரும். அவையனைத்தும் மிகச் சிறியவையே என்று அறிந்து கொள்ளுங்கள். பெரிய கோணத்திலிருந்து அவற்றை காணுங்கள். வாழ்க்கை மிகப் பெரியது, இது மட்டுமே உங்கள் வாழ்க்கையல்ல பல பிறவிகள் எடுத்திருந்திருக்கின்றோம், வருங்காலத்திலும் பல பிறவிகள் உண்டு. அத்தகைய பரந்த கோணத்திலிருந்து காணுங்கள்.

எவ்வளவுக்கெவ்வளவு நீங்கள் திருப்தியுடன் இருக்கின்றீர்களோ அந்த அளவு உங்கள் வாழ்வில் அற்புதங்கள் நிகழும். உங்களில் எத்தனை பேர் அற்புதங்களை அனுபவித்திருக்கின்றீர்கள்? (பலர் கையுயர்த்துகின்றனர்)

யாரேனும் அற்புதங்களை அனுபவித்திருக்கவில்லையெனில் கவலைப்படாதீர்கள். உங்களுக்கும் நிகழும்.அதுதான் இந்த பாதையின் சிறப்பு, எல்லாமே ஏராளமாக இருக்கும். இந்த மார்க்கத்திலேயே தொடர்ந்திருந்து இந்த நறுமணத்தை பலருக்கும் அளியுங்கள். எனது கொலம்பியா பயணம் மிகவும் சிறப்பாக அமைந்தது. கொலம்பியா நேற்று ட்விட்ரில் இந்தியாவை ஏற்றுக் கொண்டுள்ளது. 
தைவான்,சீனா ஜப்பான் ஆகிய நாடுகளில் ஏன் இந்தியாவில் கூட பலருக்கு கொலம்பியா என்றொரு நாடு இருக்கிறது என்று தெரியாது. நமக்கு ஏராளமான பொறுப்புக்கள் உள்ளன. 

அனைத்துப் பொறுப்புக்களையும் புன்முறுவலுடன் ஓர் இறகு போன்று லேசாக ஏற்றுக் கொள்ள வேண்டும். ஸ்ரீ கிருஷ்ணரின் படத்தில்,அவர் மயிலிறகு கிரீடத்தை அணிந்திருப்பதை பாருங்கள். அது எதைக் குறிக்கின்றது தெரியுமா?  ஸ்ரீ கிருஷ்ணர் இந்த உலகம் முழுவதற்கும் பொறுப்பேற்றுக் கொள்கின்றார், ஆயினும் அது அவர் தலையில் பாரமாக இருப்பதில்லை. அந்தப் பொறுப்பு, ஓர் இறகு போன்று வண்ணமயமாக லேசாகவே உள்ளது என்பதையே குறிக்கின்றது. சாதரணமாக பொறுப்புக்கள் ஒருவரை பளுவானவராக ஆக்கும் ஆனால் ஞானம் பெற்ற வாழ்வில் பொறுப்புக்கள் ஓர் இறகினை போன்று லேசாகவே இருக்கும். அதிகப் பொறுப்புக்கள் ஏற்றுள்ளவரை பாருங்கள், 
எப்போதும் சோகமாகவே காணப்படுவர். பொறுப்புக்கள் லேசானவையாக ஏற்றுக்கொள்ள படும் போது அவை உங்கள் முகத்தில் ஓர் புன்முறுவலை ஏற்படுத்தும்,அதுதான் வாழும் கலை.

உங்கள் பிரச்சினைகளை என்னிடம் விட்டு விடுங்கள். உங்கள் பிரச்சினைகளை தந்து விடும்போது, நீங்கள் லேசாக உணருகின்றீர்கள். பல்வேறு நாடுகளிலிருந்தும் வந்திருக்கின்றவர்கள், உங்கள் நாடுகளுக்கு திரும்ப சென்று அங்கு ஆனந்த அலைகளை உருவாக்குங்கள். அடுத்த ஆண்டு மிக நன்றாக இருக்கும். அதற்கடுத்த ஆண்டாகிய 2017இல் உலக மெய்யுணர்வில் பெரும் மாற்றத்தை காணலாம். பலரது வாழ்வில் பெரும் மாற்றம் ஏற்படும். இந்த ஆண்டும்,அடுத்த ஆண்டும் இதற்காக நாம் உழைக்க வேண்டும். சில சிறிய சவால்கள் ஏற்படலாம், ஆனால் பெரிதாக எதுவும் இல்லை. நம் அனைவருக்கும் நன்றாக செயல்பட்டு 2017 ஐக் கொண்டாடும் ஆற்றல் உள்ளது. இந்த ஆண்டிலேயே பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. உலகெங்கும் மக்கள் சர்வ தேச யோகா தினத்தைக் கொண்டாடினர்.உலகில் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் மூன்றில் ஒரு பங்கு மக்கள் சுமார் 2 மில்லியன் மக்கள் யோகா மற்றும் தியானம் பயிற்சி செய்தனர். இது ஓர் மிகப் பெரிய படியாகும்.