கடந்தகால நினைவுகளை விட்டு விடுங்கள்

சனிக் கிழமை, 13 ஜூன்,2015

பெங்களூரு, இந்தியா


குருதேவ், தாங்கள் நிகழ் தருணத்திலேயே ஆனந்தம் உள்ளது என்று கூறுகின்றீர்கள். ஆனால் என்னை நிகழ்காலத்தில் முற்றிலுமாக இருக்கவிடாமல் கடந்த கால சில நிகழ்வுகள் பிடித்து வைத்துக் கொள்கின்றன. விருப்பம் இருந்தாலும் பல சமயங்களில் என்னால் முழுவதுமாக நிகழ் தருணத்தில் இருக்க முடிவதில்லை. நான் என்ன செய்வது?

நீங்கள் தலையைப் பின்புறமாக திருப்பி வைத்துக் கொண்டு முன்னோக்கி நடக்க வேண்டும் என்று முயற்சி செய்தால் அது எப்படி சாத்தியமாகும்? சற்றுக் கண் விழித்துப் பாருங்கள். எது நடந்ததோ அது நடந்து முடிந்து விட்டது. ஒவ்வொரு கணமும் வாழ்க்கை புதியதே ஆகும்.இப்போதுள்ள, இந்த க்ஷணத்திலுள்ள வாழ்க்கையின் மீது கவனம் செலுத்துங்கள். "ஒ! ஏன் இவ்வாறு நடந்தது? ஏன் அவ்வாறு  நடக்கவில்லை?"  என்றெல்லாம் கேள்வி கேட்பதை விட்டு விடுங்கள். கடந்த காலத்தை திரும்பத் திரும்ப எண்ணிப் பார்ப்பதில் எந்த லாபமும் இல்லை. போகட்டும் விடுங்கள்!

குருதேவ், முக்கியமாக என் மனைவியாக இருக்கும் போது அதிலும் அவள் கவனிக்காமலோ அல்லது புரிந்து கொள்ளாமலோ இருக்கும் பட்சத்தில் எந்த அளவுக்கு விட்டுக் கொடுக்கலாம் ?

எனக்கு இந்த விஷயங்களில் அனுபவம் இல்லை! (சிரிப்பு ) நான் எவ்வாறு பதில் கூற முடியும்?  வீட்டின் அதிகாரியாக அவள் இருப்பதால், நீங்கள் அவளை அனுசரித்து செல்வது நல்லது என்று கூறுவேன். அவள், வீட்டின் பிரதமர் போன்றவள். நீங்கள் என்ன செய்ய முடியும்? ஏதோ ஓர் வழியில் நீங்கள் அவளுடன்  பேசி, புரிந்துகொள்ள வையுங்கள்.உங்களுக்கு தெரியவில்லையெனில், பிறரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். இதைப் பற்றி ஒரு சிறிய கதை உண்டு. ஒருவரின் மனைவி அவர் சொல்வதற்கு முற்றிலும் எதிர்ப்பதமாகவே அனைத்தையும் செய்து வந்தாள். அவர்," இன்று இரவு உணவுக்கு குழம்பு வேண்டாம் என்று கூறினால் குழம்பு மட்டுமே இரவு உணவுக்குத் தருவாள். இன்று நீலநிறச் சட்டை அலுவலகத்திற்கு அணிய விருப்பமில்லை என்று கூறினால் மற்ற அனைத்து சட்டைகளையும் துவைக்கப் போட்டு விட்டு, அந்த நீலநிறச் சட்டையை மட்டுமே இஸ்திரி போட்டு வைப்பாள். அவர் வெளியில் உணவருந்த வேண்டாம் என்று நினைக்கும் தினத்தில், நிச்சயமாக வெளியில் சென்று உண்ண வேண்டும் என்று வற்புறுத்துவாள். இவற்றால்  அந்த கனவான் மிகவும் மனவருத்தம் அடைந்தார்.

இந்தியாவில் உருக்குலைந்த கணவர்கள் சங்கம் என்று ஒன்று உண்டு என்பதைக் கேள்விப் பட்டிருக்கின்றீர்களா? சில காலத்திற்கு முன்பு நான் பெண்ணுரிமைகள் பற்றி ஒரு சிறிய கட்டுரை எழுதியிருந்தேன். இந்த சங்கத்தின் உறுப்பினர் ஒருவரிடமிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. அதில் அவர்,"குருதேவ்! என் இவ்வாறு பெண்களிடம் பாரபட்சமாக இருக்கின்றீர்கள்? ஆண்கள் மீது சற்று கருணை காட்டுங்கள்! நாங்கள் இந்தக் காரணத்தாலேயே உருக்குலைந்த கணவர்கள் சங்கம் என்று ஒரு சங்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றோம்." என்று எழுதியிருந்தார். அது போல இந்தக் கனவானும் அச்சங்க உறுப்பினராக இருந்திருக்கலாம். மன உளைச்சல் காரணமாக பலர் அமைதியின்றி தனியாகவே நடைப்பயிற்சி செய்வார்கள். அது போன்று ஒரு நாள் இந்தக் கனவான் சாலையில் நடந்து கொண்டிருந்தார். அங்கு தற்செயலாக ஒரு துறவியை சந்தித்தார்.  துறவி, " என்னவாயிற்று?" என்று கேட்டார். கனவான், "துறவியே! நானிருக்கும் நிலையை நீங்கள் எவ்வாறு அறிவீர்கள்? நீங்கள் எப்போதுமே ஆனந்தமாக பேரின்ப நிலையிலேயே இருக்கின்றீர்கள்" என்று பதில் கூறினார். பின்னர் துறவியிடம் கனவான் தனது கதையைக் கூறினார். முழுக் கதையையும் கேட்ட பின்னர் துறவி கனவான் காதில் ஒரு மந்திரத்தைக் கூறி, இதை முயற்சி செய்து என்ன நடக்கிறது என்று பார்" என்று கூறினார்.

அம்மனிதர் திரும்பச் சென்று, துறவி கூறியதைச் செய்தார். ஆறு மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் துறவியைச் சந்தித்தார். இந்த முறை, கனவான், மிகுந்த மகிழ்ச்சியுடன் "துறவியே! உங்கள் மந்திரம் மிக நன்றாக வேலை செய்தது" என்று கூறினார்.அச்சமயம் வேறொருவர் அங்கு இவர்கள் பேச்சைக் கவனித்துக் கொண்டிருந்தார். அவரும் துறவியிடம்,அது என்ன மந்திரம் என்று எனக்கும் கூறுங்கள் என்று கேட்டுக் கொண்டார். துறவி, "இந்த மாதிரியான சூழ்நிலையில், எப்போதுமே உனக்கு என்ன வேண்டுமோ அதற்கு எதிரானதையே கேள். உனக்கு என்ன வேண்டுமோ அதைக் கேட்காதே. என்ன கேட்கிறாயோ அதை விரும்பாதே" என்று கூறினார். முதலில் இவ்வறிவுரையை ஏற்ற கனவான் அதையே ஆறு மாதங்கள் தினமும் செய்திருந்தார்.குழம்பு வேண்டாம் என்றால் அந்தக் குழம்பு தான்  கட்டாயம் வேண்டும் என்று கேட்டிருந்தார். நீலநிறச் சட்டை வேண்டுமென்றால் அது வேண்டவே வேண்டாம் என்று மனைவியிடம் கூறியிருந்தார். அவர் நிலைமையை சமாளித்து பிரச்சினையின் ஆணிவேரைக் களைந்திருந்தார். இது ஒரு திறன். யோகா இத்தகைய திறனை எடுத்து வரும். தொடர்பில் சிறந்த திறமையை அளிக்கும். இந்த அளவு கற்றுக் கொண்டாலும் பல பிரச்சினைகளை சமாளிக்கலாம். யாரும் என்னை புரிந்து கொள்வதில்லை என்று பலர் குறைப்பட்டு கொள்வதைக் கேட்டிருகின்றோம். உண்மையான பிரச்சினை என்னவென்றால், உங்களை சரியாக வெளிப்படுத்த நீங்கள் கற்றுக் கொள்ளவில்லை என்பதேயாகும். உங்களால் பிறரைப் புரிந்து கொள்ள வைக்க முடியவில்லை. இதுதான் சாரம்.

என்னால் என் பணியின் காரணமாக தினமும் ஒழுங்காக பயிற்சி செய்ய முடிவதில்லை. ஆனால் சீராக செய்ய வேண்டும் என்னும் விருப்பம் உள்ளது. நான் என்ன செய்வது ?

சரி ! நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். பணிக்கு செல்ல வேண்டுமென்பதால், பல் தேய்க்காமல் சென்று விடுவீர்களா? ஏராளமான வேலைகள் இருந்தாலும் பல் தேய்க்காமல் செல்வீர்களா? எனக்கு ஏராளமான பணிகள் உள்ளன. இன்று காலையிலிருந்து ஆயிரக்கணக்கான மக்களை சந்தித்தேன். அதிகப் பணி இருப்பதால் தண்ணீர் குடிக்காமல் இருந்து விடுவீர்களா? இன்று அதிக வேலையிருக்கிறது என்பதால் எழுந்தவுடன் பான்ட் சட்டை மட்டும் மாற்றிக் கொண்டு பணியிடத்திற்குச் சென்று விடுவீர்களா? கழிப்பறைக்குக் செல்ல மாட்டீர்களா? ஒருநாள் பல் தேய்க்காவிட்டால் யாரும் உங்கள் அருகில் கூட உட்கார முடியாது. எனவே தினமும் பல் தேய்க்க வேண்டியது அவசியம். இது பல் சுத்தம். அதே போல், பிராணாயாமம் மற்றும் தியானம் செய்வது மனச் சுத்தம்.

மனதை அழுத்தங்களிலிருந்து விடுவித்து மகிழ்ச்சியான மனதுடன் பணிக்குச் செல்ல ஒவ்வொரு நாளும் சில நிமிஷ நேரம் ஒதுக்குவது நல்லது. இதற்கென்று நேரம் ஒதுக்குங்கள். வழக்கத்திற்கு வந்தவுடன் பயிற்சி, உங்கள் தினத்தின் ஒரு பகுதியாகி விடும். எவ்வளவு அவசரமாக இருந்தாலும் 10 நிமிட நேரத்தை ப்ராணாயமம், தியானம் செய்ய ஒதுக்குவேன் என்று உறுதியெடுத்து கொள்ளுங்கள். இந்த ஒழுங்கிற்கு நீங்கள் வருவது தான் முக்கியம். ஒரு நாளில் ஒரு முறை பயிற்சி செய்தாலும் போதும். அப்படி ஒரு நாள் தவறி விட்டாலும் பரவாயில்லை. அதைப் பற்றி அதிகக் கவலைப்படாதீர்கள். அடுத்த நாள் செய்யுங்கள். ஆனால் செய்வதற்கு நேரமில்லை என்று கூறுவதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது.

ஒவ்வொருவருக்கும் 24மணி நேரம் உள்ளது.சாதாரணப் பணியிலிருப்பவருக்கும் 24மணி நேரம் தான், பிரதமருக்குக் கூட 24 மணி நேரம் தான் உள்ளது. இருவருமே நேரம் போதவில்லை என்றே கருதுகின்றனர். நமக்கிருக்கும் நேரத்தில் நம்மால் எவ்வளவு செய்ய முடிகிறது என்பதுதான் நமது திறனின் அளவுகோல்.

முதலில் பயிற்சி செய்து விட்டுப் பின்னர் தியானம் செய்ய வேண்டுமா அல்லது மாறாகவா? தயவு செய்து வழிகாட்டுங்கள்?

பயிற்சிகளை முடித்து விட்டுப் பின்னர் தியானம் செய்வது நல்லது.காலையில் எழுந்தவுடனேயே   தியானம் செய்து விட்டு பின்னர் பயிற்சிகளையும் செய்யலாம்.இரண்டுமே சரிதான். இரண்டு முறைகளையும் முயன்று, எது உங்களுக்குப் பொருந்தி வருகிறது என்று பாருங்கள். பிரம்ம முஹுர்த்தத்தில் (அதிகாலை 3 மணி முதல் 5 மணி வரையில்) தியானம் செய்வது நல்லது. அதற்காக உங்கள் தூக்கத்தை துறந்து விட்டு அந்த நேரத்தில் தியானம் செய்வதற்காக எழ வேண்டும் என்பதில்லை.

குருதேவ், எவ்வாறு ஒருவர் கடந்தகால உடலுறவு நினைவுப் பதிவுகளைளிருந்து வெளி வருவது?

அதிலிருந்து வெளிவர வேண்டும் என்னும் முயற்சியே அதை மேலும் கடினமானதாக (அந்த உணர்வை அல்லது நினைவுப்பதிவை ஆழமானதாக )ஆக்கும். சற்று அதிகப் பிராணாயாமம் செய்து இளைப்பாறுங்கள். அப்போது படிப்படியாக நீங்களாகவே அந்த எண்ணங்களைக் கடந்து அவை உங்களை தொல்லை செய்யாமல் இருப்பதைக் காண்பீர்கள். பின்னர் வரவே வராது.

அன்பு நிபந்தனையற்றது என்றால், ஏன் நாம் அன்புக்குறியவர்களிடமிருந்து எதையேனும் எதிர்பார்த்துக் கொண்டே இருக்கின்றோம்?

எதிர்பார்ப்புக்கள் இயல்பானவை. அவை எழும் போது, அத்தகைய எதிர்பார்ப்புக்கள் உங்களுடைய சந்தோஷத்தை குறைப்பவையே என்னும் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும். ஞானத்தில் நீங்கள் வளரும் போது, இத்தகைய பதிவுகள், தாமாகவே வீழ்ந்து,பெரிய, அழகான உங்களை, உண்மையில் காண்பீர்கள்.