நீ உன் எண்ணங்கள் அல்ல


சனிக்கிழமை, 13 ஜூன் 2015

பெங்களூர், இந்தியா


(கடந்த காலத்தை விட்டுவிடு என்ற பிரசுரத்தின் தொடர்ச்சி)

கேள்வி - பதில்கள்

என் எண்ணங்களின் (தோன்றுமிடம்) நானாக இருந்தால், அந்த மூலத்துக்கும், ஆன்மாவுக்கும் வித்தியாசம் இருக்கிறதா? அது இரண்டும் ஒன்றே என்றால் கெட்ட எண்ணங்கள் ஆன்மாவை பாதிக்குமா?

பார்! உனக்கு அந்த எண்ணம் நல்லது அல்லது கெட்டது என்று எப்போது தெரிகிறது?அந்த எண்ணம் வந்த பின்பே அது உனக்கு புரிகிறது. எண்ணம் தோன்றுவதற்கு முன், உன்னால் அதை தடுக்க முடியாது. அதை புரிந்து கொள்ளவும் முடியாது. அந்த எண்ணம் தோன்றி உடனடியாக மறைந்து விடும். எண்ணத்தை நீ ஒரு சாட்சி போல் பார்த்தால், சுலபமாக மறைந்து விடும். அதை அசை போட்டால், உன்னிடமே இருக்கும். எண்ணங்கள் தோன்றி மறையும் இயல்புடையவை. ஆனால் அந்த எண்ணங்களுக்குக் காரணமாக இருப்பது உன் ஆன்மா தான் நீ.  ஒரு வானத்தை போல் இருக்கிறாய். எண்ணங்கள் மேகம் போன்றவை, ஓரளவுக்கு புரிந்து கொள்ள முடியும். வானில் மேகங்கள் தோன்றி மறைகின்றன. இருந்தாலும் மேகங்களால் அளவிடற்கரிய வானத்தைத் தொட முடியுமா? முடியாது. கண்டிப்பாக முடியாது.

நீ விமானத்தில் போகும் போது, மேகங்களை விட உயரத்தில் பறக்கிறாய். அப்போது மேகங்களால் வானத்தை தொட முடியாது என்பதை  உணர்கிறாய்.ஆகாயம் ஒரு மாற்றமும் இல்லாமல் உள்ளது. மனதில் எண்ணங்கள் தோன்றி மறைகின்றன. தியானத்தின் போது இது தான் நிகழ்கிறது. ஒரு சாட்சியாக எண்ணங்கள் வந்து போவதை நீ கவனிக்கிறாய். எண்ணங்களை பிடித்து வைக்க தேவையில்லை. அப்படி செய்வது முட்டாள் தனமாகும். நல்ல எண்ணங்களானாலும், கெட்ட எண்ணங்களானாலும் அவை தோன்றி மறைகின்றன. எண்ணங்களுக்கு அப்பால் மிக உயரத்தில் இருக்கிறாய். இதை விஹங்க வழி என்று சொல்வார்கள். எண்ணங்களைக் கடந்து மிக உயரத்தில் இருந்து அவை வந்து போவதை கவனிப்பது என்று பொருள்.

குருதேவா! இந்த உடலில் நான் இருக்கும் போதே உங்களோடு கலந்துவிட முடியுமா அல்லது அப்படி கலக்க நான் இந்த உடலைத் துறக்க வேண்டுமா?

இல்லை. அப்படி செய்யாதே. உடலைத் துறப்பதை  பற்றி நினைத்துக் கூடப் பார்க்காதே. இப்படிப் பட்ட விஷயங்களை யார் உனக்குச் சொன்னார்கள்? எப்போதும் நாம் ஒன்றாக தான் இருக்கிறோம். ஒன்றாக சேர்வதற்காக உடலைத் துறக்க வேண்டும் என்ற தவறான சிந்தனை வேண்டாம். இது முட்டாள் தனமாகும். இந்த உடல் எப்படி இருந்தாலும் ஒன்றாக கலக்க முடியாது. இவை தனித் தனியாகத் தானிருக்க முடியும். மூச்சின் நிலையைக் கவனித்தால் நாம் ஒன்றாக இருப்பதை உணரலாம்.இன்னும் ஆழ்ந்து சென்று சூட்சுமமான இருப்பின் நிலைகளுக்கு சென்று பார்த்தால், எல்லாமே நம் மனதில் தோன்றி விரிவடைவதைக் காண முடியும். எனவே முட்டாள்தனமான காரியம் செய்யாதே. தியானத்தில் ஈடுபடு. சேவை, சாதனை, சத்சங்கத்தை வழக்கமாக்கி கொள். விரைவிலேயே உன்னுள் அன்பும் மகிழ்ச்சியும் ஊற்றெடுப்பதை அனுபவத்தில் பார்க்கலாம். உனக்கு ஆழ்ந்த திருப்தி ஏற்படும்.

குருதேவா! ஒரே கோத்திரத்தை சேர்ந்த இருவர் திருமணம் செய்து கொள்ளலாமா?

நான் இந்த முறை ஹரியானா சென்றிருந்த போது, விஞ்ஞானிகளும் பொது மக்களும் என்னை சந்திக்க வந்தார்கள். இந்த விஷயத்தை பற்றி பல ருசிகரமான தகவல்களைச் சொன்னார்கள். பசுக்களின் பற்றி ஆராய்ச்சி நடத்தி (ஜீனியாலஜி),இந்த வகை பசுக்களின் மூதாதையர்கள் எங்கிருந்து வந்தன என்று கண்டுபிடித்தார்களாம்.

ஹரியானாவில் ஒரே கோத்திரத்தில் இருப்பவர்கள் திருமணம் செய்து கொள்வதில்லை. அதனால் தான் அவர்களுக்குப் பிறக்கும் சந்ததியர்கள் ஆரோக்கியமாக இருப்பதாக சொன்னார்கள். இந்த ஆண்டில் நடந்த விளையாட்டுப் போட்டிகளில், ஹரியானாவை சேர்ந்தவர்கள் பத்தில் ஒன்பது மெடல்களை பெற்றதாகச் சொன்னார்கள். கோத்திர விதிகளை பின்பற்றி திருமணம் செய்வதால் மட்டுமே, விளையாட்டு போட்டிகளில் அவர்கள் குழந்தைகள் சிறந்து விளங்குவதாக நம்புகிறார்கள். மூன்று தலைமுறைக்கு தாய் வழி கோத்திரத்திலும் திருமணம் செய்ய மாட்டார்கள். அதனால் அங்கு பிறக்கும் குழந்தைகள் மிகவும் ஆரோக்கியமாக இருக்கின்றன. இவ்வழக்கம் நம் நாட்டில் பண்டைய காலத்திலிருந்தே பின்பற்றப்பட்டு வந்தது. மிருகங்களை வளர்ப்பதிலும் இதை நாம் பின் பற்ற வேண்டும்.

மிகவும் நெருங்கிய உறவினர்களுக்குள் திருமணம் கூடாது என்று சொல்லப்படுகிறது. விஞ்ஞான ரீதியாக இது சரி என்று தோன்றுகிறது. கோத்திர வழக்கம் பல நூற்றாண்டுகளாக பின்பற்றப் படுகிறது. அதே சமயம் இப்படிச் செய்யவே கூடாது என்று பிடிவாதம் பிடிக்கத் தேவையில்லை என்று நினைக்கிறேன். பஞ்சாப்,ஹரியானாவில் பின்பற்றப்படும் கோத்திர வழக்கத்துக்கும், தமிழ்நாட்டில் பின்பற்றப்படும் கோத்திர வழக்கத்துக்குமிடையே வித்தியாசங்கள் இருக்கக் கூடும். கோத்திர விதிகளைப் பின்பற்றி முடிந்த வரையில் ஒரே கோத்திரத்தை சேர்ந்தவர்கள் திருமணம் செய்யாமலிருப்பது நல்லது.

குருதேவா! வேறு ஜாதியினர் திருமணம் செய்து கொள்வது பற்றி சொல்லுங்கள். என் நண்பன் ஒரு முகமதியப் பெண்ணைக் காதலிக்கிறான். திருமணம் செய்து கொள்ள ஜாதி பார்ப்பது அவசியமா?

எல்லா இடத்திலும் நல்லவர்கள், கெட்டவர்களும் இருக்கிறார்கள். பலமுறை மற்றவர் தம்மை ஏமாற்றி விடுவாரோ என்ற பயமிருக்கும். எனவே இது போன்ற சமயத்தில், நீங்கள் உங்கள் பெற்றோரிடம் கலந்து பேசி ஆலோசிப்பது நல்லது. காதலிக்கத் துவங்கும்போது, சரியாக பார்க்க மாட்டாய். தெளிவாகச் சிந்திக்க மாட்டாய்.எது சரி? எது சரியல்ல? என்று பார்க்க முடியாது. எனவே உன் தாய் தந்தையரைக் கேட்டுச் செய்வது நல்லது. எந்த மதமோ, ஜாதியோ, நீ திருமணம் செய்து கொள்ள விரும்புபவர் நல்லவராக, இதயபூர்வமாக விரும்புபவராக, நற்குணங்கள் படைத்தவராக இருக்கவேண்டும். உன் மதத்தை,ஜாதியை சேர்ந்தவர் கெட்ட வழக்கமுள்ளவராக இருந்தால், குடிப் பழக்கத்துக்கு அடிமையாக இருந்தால், திருமணத்தால் என்ன பயன்? நற்பண்புகள் உடையவராக, மரியாதைக்குரிய குடும்பத்திலிருந்து வந்தவராக பார்த்து திருமணம் செய்து கொள்ள வேண்டும்.

எஞ்சிய வாழ் நாட்களை நான் ஆசிரமத்தின் வந்து சேவையில் கழிக்க விரும்புகிறேன். தற் சமயம் ஒரு பள்ளியில் ஹிந்தி மொழி கற்பிக்கிறேன். ஆசிரமம் எனக்கு மிகவும் பிடித்து விட்டது. நான் இங்கு சேவைக்காக வரலாமா? எனக்கு வழி சொல்லுங்கள்.

இங்கு ஆசிரமத்தில் மனித வளத்துறை (எச்.ஆர்.டி) இருக்கிறது. நீ வேலை தேடிக் கொண்டிருந்தால் அவர்களைப் பார். நான் இந்த உலகம் முழுவதையும் என் ஆசிரமாகக் கருதுகிறேன். என்னை பொறுத்தவரை ஆசிரமம் என்பது நான்கு சுவர்களுக்குள் உள்ளதல்ல. ஆசிரமம் என்றால் என்ன? ஆசிரமம் என்றால் இந்த மூன்றும் எளிதில் கிடைக்கும் என்று பொருள்.
·         ஆசிரமத்தில் உன் மன நிலையை மேம்படுத்தும் ஞானம் பற்றிக் கேட்டு அறிந்து கொள்ளலாம். உரையாடலாம்.
·         நல்ல உணவு கிடைக்கும்.
·         நல்ல ஓய்வு கிடைக்கும்.

இப்போது சொல். இந்த மூன்றையும் உன் வீட்டிலேயே அடையக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்த முடியாதா? யாராவது உன் வீட்டுக்கு வரும்போது அவர்களோடு அமர்ந்து ஞானம் பற்றி உரையாட முடியாதா? அப்படிச் செய்தால், அது உன் வீடு ஆசிரமாக ஆவதற்கு முதல் அடையாளமாகும்.

இரண்டாவதாக, வீட்டுக்கு வருபவர்களுக்கு உணவு கொடுக்காமல் இருக்கிறாயா? இந்தியாவில் வீட்டுக்கு வரும் விருந்தினருக்கு சுவையான உணவு படைக்கும் வழக்கம் உள்ளது. இது உன் வீடு ஒரு ஆசிரமம் என்பதற்கான இரண்டாவது அடையாளம்.

மூன்றாவதாக, உன் வீட்டின் சூழ்நிலை வருபவர்களுக்கு மனஅமைதி மற்றும் ஆக்க சக்தி அளிப்பதாக இருக்க வேண்டும். வருபவர்கள் ஆழ்ந்த ஓய்வை அனுபவித்து, ஆறுதலோடு திரும்ப வேண்டும். உலகில் உள்ள அனைத்து இல்லங்களும் ஆசிரமமாக வேண்டுமென்று விரும்புகிறேன். மக்கள் வம்பு பேசுவதை கைவிட்டு ஞானம் பற்றி அறிந்து கொண்டு, வாழ்க்கையைப் பற்றி ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். நான் யார்? வாழ்க்கை என்றால் என்ன? என்று சிந்திக்க வேண்டும். மூன்று விஷயங்கள் வாழ்க்கைக்கு இன்றியமையாதவை. இதயத் தூய்மை, மனத் தெளிவு, நேர்மையான செயல். நம்மால் வாழ்க்கையில் மூன்றையும் கடைப்பிடிக்க முடியாதா? இவைகளை நீ பின்பற்றும் போது உன் வீடு ஆசிரமாக மாறிவிடும்.

ஆசிரமத்திலிருந்து, பெங்களூர் செல்லும் வழியில் பசுமாடுகள் குப்பைத் தொட்டியிலிருக்கும் குப்பைகளை உண்பதைக் காண்கிறேன். இதற்கு என்ன செய்யலாம் ? இந்தப் பிரச்சினை நாடு முழுதும் இருப்பதாக நினைக்கிறேன்.

நீ சொல்வது சரி. இந்தப் பிரச்சினை நாடு முழுதும் உள்ளது. இங்கு ஆசிரமத்தில் குப்பைகளை மாற்றும் துறைக்கு சென்று அவர்களுடைய பணிகளைப் பார்க்க வேண்டும். சுற்றி வாழ்பவர்களுக்கு ப்ளாஸ்டிக் பொருள்களை மற்ற குப்பைகளோடு சேர்த்து போடக்கூடாது, ப்ளாஸ்டிக் பைகளை உபயோகப்படுத்தக் கூடாது என்று எடுத்துச் சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இங்கு ப்ளாஸ்டிக் பொருள்களை டீசலாக மாற்ற ஒரு யந்திரத்தை வைத்திருக்கிறோம்.தொண்டர்கள் அக்கம் பக்கத்திலிருக்கும் ப்ளாஸ்டிக் பொருள்களை சேகரித்து இந்த யந்திரத்தில் கொடுத்து தேவையான எரிபொருளாக மாற்றுகிறார்கள். அதேபோல் சமையல் அறையில் நறுக்கிய காய்கறிக் குப்பைகளையும், மீதமான உணவுப் பொருள்களையும் எரி வாயுவாக (பயோ காஸ்) மாற்றுகிறோம். ஒவ்வொரு நாளும் 400 – 500 கிலோ காய்கறிக் குப்பைகள் சேர்கிறது. இதனால் உருவாக்கப்படும் எரிவாயு சமைப்பதற்காக பயன்படுகிறது.இந்தத் தொழில் நுட்பங்களை ஒவ்வொரு கிராமத்திலும் சிறிய அளவில் துவங்க முடியும். குப்பைகளை உபயோகப்படுத்த முடியும். சுற்றுச் சூழல் மாசு படுவதை தடுக்கமுடியும். ஒவ்வொரு கிராமமும் தன்னிறைவு பெறமுடியும்.இது மிகவும் முக்கியம்.

பசுக்களை கண்ட இடங்களில் மேய விடக்கூடாது. ப்ளாஸ்டிக் பைகளை குப்பையோடு சேர்த்துப் போடக்கூடாது. மற்ற உலோகங்கள், கனிவளப் பொருள்களையும் பொது இடங்களில் போடக் கூடாது. மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.இப்படி செய்வதே மகத்தான தொண்டாகும். நீ யோக சாதனையால் பெற்ற சக்தியை நல்ல காரியத்துக்காக, சமூக நலத்துக்காக செலவிட வேண்டும். வீடு வீடாகச் சென்று பொது இடங்களில் குப்பை போடக்கூடாது என்று சொல்லி, சுற்றுப் புறத்தைத் தூய்மையாக வைப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.