யோகா : ஓர் புதிய பரிமாணம்

ஞாயிற்றுக்கிழமை, 21 ஜூன், 2015, 

நியூயார்க், அமெரிக்க ஐக்கிய நாடுகள்


ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களும் வாழும் கலையும், முதல் சர்வதேச யோகா தினத்தினை கொண்டாடும் விதமாக நியூ யார்க் லிங்கன் சென்டரில் ‘யோகா ஓர் புதிய பரிமாணம்’ என்னும் நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்தனர். யோகாவின் வளமான பாரம்பரியம் மற்றும் ஆழமான மதிப்புகள் ஆகியவற்றை உயர்த்திக் காட்டும் வகையில், ஆன்மீக விவாதம், நடனம், இசை மற்றும் குருதேவ் தலைமையில் ஒரு வழிகாட்டுதல் தியானம் முதலானவை அந்த இனிய மாலைப்பொழுதில் நடைபெற்றன. குருதேவ் அவர்களின் உரை கீழே தரப்பட்டுள்ளது.

ஆஹா! (சர்வதேச யோகா தின) கொண்டாட்டம் தொடர்கின்றது.சாதரணமாக, பலூன்கள், மதுபானம், அதிக உணவு வகைகள்,ஆகியவற்றுடனேயே கொண்டாட்டங்கள் நடைபெறும். ஆனால் இந்தக் கொண்டாட்டம் வித்தியாசமாக உள்ளது. இந்தக் கொண்டாட்டத்தில் மக்கள் வெறும் வயிற்றுடன் வந்தார்கள். உலகெங்கும் மக்கள் காலை விரதத்துடன் வந்து யோகா செய்து மிக்க மகிழ்ச்சியுடன் இருக்கின்றார்கள். எனவே இந்தக் கொண்டாட்டம் ஓர் வித்தியாசமான கொண்டாட்டம். பலூன்கள் இல்லை, மாசு இல்லை அனைவரும் கொண்டாட்ட மனஅலையுடன் ஒன்றிணைந்து வந்திருக்கின்றனர்.

உண்மையான கொண்டாட்டம் உள்ளிருந்தே துவங்குகின்றது. அது ஒப்பனைக் கொண்டாட்டமல்ல, ஆழமாக உள்ளிருந்து எழுவதாகும், மேலும் யோகா ஒரு முறைசாராக் குடும்ப ஒன்றுகூடுதல் போன்ற சூழலை ஏற்படுத்துகின்றது. இங்கு நீங்கள் அனைவரும் குடும்பம் போன்று ஒன்றியிருக்கின்றீர்கள் அல்லவா? நிமிஷநேரம் எடுத்துக் கொண்டு, அருகில் மற்றும் பின்னால் அமர்ந்திருப்பவரை நாம் முகமன் கூறி வாழ்த்தலாமா? செய்யலாமா? சொற்களை விட அதிர்வலைகளின் மூலம் நாம் அதிகம் வெளிப்படுத்துகின்றோம். நமது இருப்பின் ஆழத்திலிருந்து நமது தொடர்புகள் நிகழ்கின்றன. யோகா அதனுடன் இணைகின்றது.

நாம் இரண்டு மணி நேரத்திற்கு காதல் பற்றி பேசிக் கொண்டிருக்கலாம். அதை பெரிதாக நீங்கள் உணரமாட்டீர்கள். ஆனால் குழந்தையின் அல்லது ஒரு சிறிய நாய்க்குட்டியின் ஒரே ஒரு பார்வை  அன்பினை க்ஷணநேரத்தில் உங்களுக்குத் தெரிவிக்கும். உண்மையான தொடர்பு உள்ளிருந்தே எழுகின்றது. இது இரண்டு தனி மனிதருக்கிடையே அல்லது சிலருக்கிடையே மட்டும் நிகழ்வது அன்று. இது நமக்கும் இந்தப் படைப்பு முழுமைக்கும் இடையே நிகழ்வதாகும். அதுவே யோகா. யோகா என்பது சில உடற்பயிற்சிகள் அல்ல. அதையும் தாண்டி மேலானது. நமது வாழ்க்கையில் நல்ல தரத்தினை எடுத்து வருவது. நமது விழிப்புணர்வினை விரிவுபடுத்தி, நமது அறிவினைக் கூர்மையாக்கி, நமது உள்ளுணர்வுத் திறனை ஊக்குவிப்பது ஆகும். நாம் ஆறாவது அறிவு என்னும் பரிசினைப் பெற்றவர்கள். அதை வாழ்வின் களேபரங்களில் இழந்து கொண்டு வருகிறோம். 35 ஆண்டுகளுக்கு முன்னர் நான் யோகவினை பற்றிப் பேசும் போது, மக்கள்," இது எங்களுக்கானது அல்ல, வேறு வகையானவர்க்களுக்கானது ஆகும்’ என்று கூறியதுண்டு.

பொது மக்களிடையே யோகா சாதாரணமானவர்களுக்கு உகந்ததல்ல என்னும் எண்ணம் நிலவி வந்தது. உங்களில் எத்தனை பேர் பழமையான இந்த கலைக்கு எதிர்ப்பினைக் கண்டிருக்கின்றீர்கள்? (கூட்டத்தில் சிலர் கை உயர்த்துகின்றனர்). யோகா என்பது ஐக்கியம். ஒன்றிணைவு என்பதைக் குறிக்கும் யோக் என்னும் சொல் யோகாவிலிருந்து வந்தது என்பது உங்களுக்குத் தெரியுமா? யோகா நமது இதயம்,மனம், உடல், மற்றும் ஆத்மாவினை இணைக்கின்றது.சுற்றியிருப்பவர்களுடன் நம்மை இணைக்கின்றது.

யோகாவில் நீங்கள் ஆழ்ந்து முன்னேறிச் சென்றால், யோகா முட்டாள்தனமானது என்று கூறுவீர்கள். ஆச்சர்யமாக இருக்கிறதா? அதிர்ச்சியாக இருக்கிறதா? (கூட்டத்தில் அனைவரும் ஆம் என்று கூறுகின்றனர்.) இது உண்மையானதே.ஏனெனில் இரண்டு என்பதே கிடையாது. வெவ்வேறாக இரண்டு பொருட்கள் இருந்தால் தான் அவற்றை நீங்கள் இணைக்க முடியும். ஆனால் எதுவுமே தனித்தனியாக இல்லாத போது ஒன்றிணைப்பு என்பது எவ்வாறு நிகழும்? ஒருமைப்படுத்துதல்  என்பதே ஓர் மாயை. இதுவே ஞான யோகா. இரண்டு என்பதே  இல்லை, நாம் அனைவரும் ஒன்றே. ஒருங்கிணைத்தல் என்பது முயற்சியைக் குறிக்கிறது. வலது கையை இடது கையுடன் இணைக்கவேண்டுமெனில் அது முயற்சியினைக் காட்டுகிறது. ஆனால் விழித்தெழுந்து பாருங்கள்! அவையிரண்டும் உங்களது கைகள். அவை ஏற்கனவே ஒன்றாகவே இருக்கின்றன. என் கைகள் இரண்டையும் நான் ஒருமைப்படுத்துகின்றேன் என்று நீங்கள் கூற முடியாது. அவை ஏற்கனவே இணைந்திருக்கின்றன. இதுவே ஞான யோகா.

பக்தி யோகா என்பது வேறொன்றும் இல்லை, அனைத்தும் என்னில் ஓர் பகுதி அனைத்தின் மீதும் ஆழ்ந்த பெருமதிப்பும் ஆழ்ந்த அன்பும் உள்ளதே பக்தி யோகா. பின்னர் வருவது கர்ம யோகா. முழு ஆர்வத்துடன் முழு கவனத்துடன் எதையும் செயல்படுத்துவதே கர்ம யோகா. நாம் வாழ்வில் பல பங்குகளை வகிக்கின்றோம். ஒவ்வொரு பங்கையும் ஆர்வம்,பொறுப்பு, கவனம் அக்கறையுடன் வகிக்கின்றோமா? இது கர்ம யோகா.

ஹத யோகா என்பது நீங்கள் உணரும் ஆற்றலை தாண்டி நீட்டிச்செல்வது ஆகும்.இவையனைத்தும் யோகாவின் பல்வேறு விதங்கள் ஆகும். நாம் அனைவரும் ஒன்றே. இதையே குவாண்டம் இயற்பியல் மற்றும் குவாண்டம் மெக்கானிக்ஸ் ஆகியவை கூறுகின்றன. குவாண்டம் இயற்பியல் நிபுணரைக் கேட்டால், "அனைத்தும் அலைகளே" என்றே கூறுவார். அதையே தான், ஞான யோகாவும் கூறுகின்றது. வாழ்வில் இரண்டும் தேவை. அதாவது  குவாண்டம் இயற்பியல் பற்றிய ஒரு புரிதலும் (முழுமை) மற்றும் பாரம்பரிய வேதியியல் (சார்பியல்) ஆகிய இரண்டையும் பற்றிய புரிதல் தேவை.  

இந்தத் துறையில் ஒரு பெரிய குழப்பம் உள்ளது. பலர் என்னிடம் "இத்தகைய சிறப்பு மிக்க ஞானம் செறிந்த இந்தியா கடந்த சில நூற்றாண்டுகளாக பிற்போக்காக இருப்பது ஏன்? என்று கேட்டதுண்டு. இது ஏனெனில்,குவாண்டம் இயற்பியல் மற்றும் குவாண்டம் மெக்கானிக்ஸ் இரண்டுக்குமிடையே ஒரு குழப்பம் இருப்பது தான். நாம் அறிந்து கொள்ள வேண்டியது என்னவெனில், இரண்டிற்கும் அததற்கு என்று தனி இடம் உள்ளது. இரண்டுமே அத்தியாவசியமானவையாகும். பாருங்கள், இந்த அரங்கத்தில் அனைத்தும் மரத்தால் செய்யப்பட்டிருக்கின்றது. இதுதான் குவாண்டம் மெகானிக்ஸ் அதே சமயம் கதவு தரை அல்ல, தரை கூரையல்ல, கூரை சோபா அல்ல, இதுவே பாரம்பரிய வேதியியல். இரண்டிற்கும் அதற்குறிய இடம் உள்ளது. இரண்டுமே உண்மை. ஆனால் ஒரு தனித்தன்மை உண்டு. அதை காண்பதே விவேகம். 

வாழ்வில் எது தாற்காலிகமானது எது நிரந்தரமானது நாம் எதைச் செய்ய வேண்டும், எதைத் தவிர்க்க வேண்டும் என்பதையெல்லாம் கண்டறிந்து கொள்வதே விவேகம்.

இவற்றையெல்லாம் கேட்ட பின்னர், நீங்கள் “கடவுளே! இவையெல்லாம் மிகக் கடினமானவையாக தோன்றுகிறதே" என்று எண்ணலாம். சற்றே இளைப்பாறுங்கள்! யோகா ஓர் விளையாட்டு. யோகா அடக்கம் மற்றும் நகைச்சுவை இரண்டையும் அளிப்பது. இரண்டுமே உங்கள் இயல்பு.அடக்கமும், நகைச்சுவையும் இல்லையெனில் இந்த உலகம் மிகக் கடினமானதாக இருக்கும். இதை ஏற்றுக் கொள்கின்றீர்களா? அனைத்துப் போர்களும் தான் எனும் அகந்தை,அடக்கமின்மை,நகைச்சுவையற்ற நிலை இவற்றால் எழுவதுதான். ஒருவரின் ஓர் சிறிய சொல்,ஓர் பெரிய கிளர்ச்சியை ஏற்படுத்தி விடுகிறது. சிறிய விஷயங்கள் பெரும் அழிவை ஏற்படுத்தி விடுகிறது. ஏனெனில் நகைச்சுவை உணர்வு இல்லை. யோகா ஓர் விளையாட்டில்லை ஆனால் அதே சமயம், விளையாட்டுகள் நிறைந்தது.

நான் இயல்பாக இருக்கின்றேனா? நான் என்னுடனும், என்னை சுற்றி இருப்பவர்களுடனும் தொடர்பு கொள்கின்றேனா அல்லது என் சுய உருவத்தினை பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கின்றேனா? பிறர் என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்றே எண்ணிக் கொண்டிருக்கின்றேனா? என்று இன்று உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். ஆரம்ப காலத்தில் நாங்கள் யோகாவினைக் கற்றுக் கொடுக்கத் துவங்கிய போது இது ஒரு பெரிய பிரச்சினையாக இருந்தது. மக்கள் ரகசியமாக யோகா செய்ய வந்து,"நான் யோகா செய்வதை யாரிடமும் கூறிவிடாதீர்கள்,ஏனெனில் அவர்களுக்கு புரியாது. நான் ஏதோ பைத்தியக்காரத்தனமாக செய்து கொண்டிருப்பதாக எண்ணி விடுவார்கள்“ என்று கூறியதுண்டு. அதிர்ஷ்டவசமாக அத்தகைய வெறுப்புணர்வு இன்று மறைந்து விட்டது.

முன்னுதாரணங்கள் மாறிவிட்டன.ஐநா சபை 21 ஜூன் சர்வதேச யோகா தினம் என்று அறிவித்தத்தை அடுத்து, யோகாவை பற்றி சரியாகத் தெரியாமல் இருந்தவர்களும் கூட அதை முயன்று பார்க்க முன்வந்துள்ளனர். உங்களை மகிழ்விக்கும் உங்கள் உற்சாகத்தினை அதிகரிக்கும், உங்களை வலிமை,துடிப்பு மற்றும் சக்தி வாய்ந்தவராக ஆக்கும் ஒன்றினை ஏன் நீங்கள் செய்யக் கூடாது? இது வெறும் உடற்பயிற்சியல்ல. மக்களுக்கு சரியான புரிதல் இல்லாததால் இதனை உடற்பயிற்சியாக மட்டுமே கருதுகின்றனர். இன்று காலை, ஐநாவில் யோகாவும் தியானமும் செய்த போது, பலர் முதல் முறையாக செய்தனர். மிகவும் நன்றாகவே உணர்ந்தனர். அது மனதில் சிறந்த தெளிவை ஏற்படுத்தியதால், பலர் "ஒவ்வொரு ஒப்பந்தப் பேச்சு வார்த்தைக்கும் முன்னரும் நாம் தியானம் செய்து கொள்ள வேண்டும்" என்று கூறினர். ஒப்பந்தங்கள், பேச்சு வார்த்தைகள், உரைகள், நிகழ்த்தும்போதும் அழுத்தம் ஏற்படுகின்றது. நம்மை அழுத்தத்திலிருந்து முற்றிலும் விடுபடச் செய்வது யோகாவேயாகும்.