கடவுளை விட உயர்ந்தவர் - குரு

திங்கள்கிழமை, 8 ஜூன், 2015

பெங்களூரு, இந்தியா



(குருவின் ஓர் பகுதி என்னும் இடுகையின் தொடர்ச்சி)

குருதேவ், யார் உயர்ந்தவர், கடவுளா அல்லது குருவா என்று ஒரு பழமொழி மகாராஷ்டிர மாநிலத்தில் உண்டு. இதை விளக்கிக் கூறுங்கள். இல்லையெனில் எப்போதும் நான் நம்புவது போன்று சத்குருவே என்றும் உயர்ந்தவர் என்று தொடர்ந்து நம்புவேன்.

அந்தப் பழமொழி உண்மை தான். புனித கபீரின் ஈரடிச் செய்யுள் ஒன்று ஹிந்தியில் உண்டு." குரு கோபிந்த் தோ கடே காகே லகூன் பாஊ; பலிஹாரி குரு அப்னே கோபிந்த் தியோ பதாயே"  அதாவது கடவுளும் குருவும் என் முன்னே இருக்கின்றனர். யாருடைய திருக்கமலப் பாதங்களை நான் வணங்குகின்றேன்?  ஒ குருவே! தங்களுடைய ஆசியாலேயே என்னால் இறைவனை அடைய முடியும் என்று கபீர் கூறுகின்றார். குருவே உங்களை இறைவனிடம் அழைத்து செல்கின்றார். எனவே அது சரிதான். நம் நாட்டில் காலம் காலமாக குருவே உயர்ந்த நிலையில் இருக்கின்றார்.  அது ஓர் தனித்துவம் வாய்ந்த பீடம். நாம் குருவின் கௌரவம் கண்ணியம் ஆகியவற்றை போற்றிப் பாதுகாக்க வேண்டும்.

குருதேவ், இங்கு வந்திருக்கும் அனைவரையும் தங்கள் கிராமங்கள், நகரங்களுக்கு திரும்பச் செல்லும் போது, ஆளுக்கு ஒரு மரக்கன்று நடவேண்டும் என்று கூறுங்கள் . அப்போது தான் சூழலில் ஆக்சிஜென் அதிகரிக்கும். பலர் இங்கிருந்து திரும்பிச் செல்லும்போது செய்வதில்லை என்று கண்டறிகின்றேன்.

ஒரு மரக்கன்று நடவேண்டும் என்னும் உங்கள் வேண்டுகோளை நான் ஏற்றுக் கொள்ளமாட்டேன். ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் ஐந்து மரக் கன்றுகளாவது நட வேண்டும். இப்போது ஆஸ்ரமம் இருக்குமிடத்திற்கு நாங்கள் வந்த போது, இந்த நிலம் முழுவதும் வறண்டு தரிசாக கிடந்தது. ஒரு புல் கூட இல்லை. இப்போது ஆஸ்ரமம் எவ்வளவு பசுமையாக அழகாக இருக்கிறது பாருங்கள். தொடர்ந்து, அதிக அளவில் மரக்கன்றுகளை நட்டு, வளர்க்க வேண்டும்.

குருதேவ் நான் தினமும் ஐந்து முறை நமாஸ் செய்கிறேன். ஆறு ஏழு மாதங்களுக்கு முன்பு வாழும் கலையில் இணைந்தேன். தியானமும் நமாசும் சேர்ந்து செய்யலாமா? அல்லது தியானத்திற்கு தனியாக நேரம் ஒதுக்க வேண்டுமா?

எப்போதும் போல நீங்கள் நமாஸ் தொடர்ந்து செய்யுங்கள். பின்னர், அதை முடித்த பிறகு தியானம் செய்யுங்கள். சேர்ந்தும் செய்யலாம் அல்லது நமாஸ் செய்வதற்கு முன்போ பின்போ செய்யலாம்.

குருதேவ், படிப்பில், 90-95 மதிப்பெண்கள் பெறவேண்டும் என்று குழந்தைகளிடையே போட்டி மனப்பான்மையை தூண்டும் பெற்றோரை பற்றி தயவு செய்து கருத்துக் கூறமுடியுமா?

அத்தகைய பெற்றோர்களைச் சற்று இளைப்பாறுமாறு கூறுங்கள். போட்டி மனப்பான்மை என்பது இயல்பான ஒன்று, ஆனால் குழந்தைகளை அதற்காக அதிகமாக விரட்டக் கூடாது. பள்ளித் தேர்வுகளில் என்ன மதிப்பெண்கள் எடுக்கின்றார்களோ, அதை பெற்றோர் ஊக்குவித்து, குழந்தைகள் கவலைப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.சில உயரிய உதாரணங்களை கூற வேண்டும். உலகெங்கிலும் சில சிறந்த தலைவர்கள் பள்ளியில் முதல் தர மதிப்பெண்களை பெற்றதில்லை. பெற்றோர் குழந்தையின் திறன்களை ஊக்குவிக்க வேண்டும். குழந்தையைக் குறை கூறி அழுத்தம் தரக் கூடாது.

குருதேவ்,பயிற்சிகளை செய்யும்போது, நடக்கப் போவதை பற்றிய காட்சிகளை காண்கின்றேன். என்ன செய்வது?

அவ்வாறு தோன்றும் போது இயல்பாக தளர்வாக இருங்கள். கவலைப்பட வேண்டாம். தியான வழியில் ஆழமாக செல்லும்போது சில விஷயங்கள் நடக்கக் கூடும். சாதரணமான மனிதராக இருங்கள்.எதிலும் சிக்கிக் கொள்ளாதீர்கள். 90சதவீதம் வரையில் தோன்றுவது சரியாக இருக்கலாம், ஆயினும் 5 முதல் 10 சதவீதம் சரியாக இல்லாமலும் இருக்கலாம். எனவே அதை சாதரணமாக எடுத்துக் கொள்ளுங்கள். அசாதரணமான திறன்களை பற்றிப் பயப்பட வேண்டாம். ஆன்மீகப் பயிற்சிகளில் ஏற்படும் அவற்றைப் பயன்படுத்தி கொள்ளவும் வேண்டாம்.

எங்கள் பெற்றோர் எங்களை பற்றி அதிக சொந்த உணர்வுடன் இருக்கின்றனர். ஓர் நாளில் 8 முதல் 10 முறைகள் அழைக்கின்றனர். எவ்வளவு நாட்களுக்கு இதை பொறுத்துக் கொள்வது?

இன்றைய சமுதாய சூழலைப் பார்த்தால், பெற்றோர் தங்கள் குழந்தைகளை பற்றிக் கவலைப் படுவது இயல்பாகவே தோன்றுகிறது. அவர்கள் உங்களை மிகவும் நேசிப்பதாலேயே அவர்கள் அடிக்கடி உங்களை அழைத்து நீங்கள் நலமாக இருக்கிறீர்களா என்று கவனித்துக் கொள்கின்றனர். அது சுமையான வேதனையாக நீங்கள் உணர்வதால் பாதிக்கப்படுகின்றீர்கள். அவர்களை பற்றி, அவர்கள் கண்ணோட்டத்தைப் பற்றி சற்று சிந்தித்துப் பாருங்கள்.

குருதேவ், உங்களுக்கு மிகவிருப்பமான ஞானச் செய்தி என்ன?

முக்கியக் கருத்தைத் தெரிவிக்கும் ஒவ்வொரு ஞானச் செய்தியும் எனக்கு விருப்பமானது தான்.

உங்களுக்கு விருப்பமான குரு யார்?


குரு உங்களுக்கு உதவும் போது உங்கள் வேலை முடிந்துவிடுகிறது. நீங்கள் குருவை  நோக்கும் போது, அவர் உதவுகிறார். அதனால் தான், நீங்கள் குருமுகியாகும் போது - முற்றிலும் குருவினை நோக்கி உங்கள் மனம் திரும்பும் போது அனைத்தும் நடைபெறத் துவங்குகின்றன.