வளமான நம் இந்தியப் பாரம்பரியம்

13 மார்ச் 2014



அலகாபாத், உத்தரப் பிரதேசம்

கங்கா, யமுனா, சரஸ்வதி ஆகிய நதிகள் சங்கமிப்பதால், சங்கமம் என்ற பெயர் பெற்ற இந்த அலகாபாத் நகரம், பக்தி ஞானம் மற்றும் கர்மம் (ஒருவர் செய்ய வேண்டிய கடமை) ஆகியவற்றின் சங்கமத்தை காண்கிறது. நாம் எல்லோரும் சேர்ந்து பாடும் போது, எவ்வளவு அருமையாக இருக்கிறது? சம்ஸ்க்ருதத்தில் ஒரு பழமொழி இருக்கிறது, 

சப்த பிரம்மனே-நிஷ்நட்ட பரம்பிரம்மாதி கச்சதி’’. 

இது, சப்த-பிரமன் என்றால், எல்லாவற்றிற்கும் மூலமான உயர்ந்த படைப்பின் ஒலி, அதாவது எல்லாவற்றிற்கும் மூலமானது) இதன் பொருள் சப்த பிரம்மமான ‘ஓம்’ ல் முழுமையாக மூழ்குபவர் பரப்பிரம்மத்தை (அனைத்துமாகி பரவி இருக்கும் ஒரு பேருணர்வு) எளிதாக அடைவார்.
எனவே பஜனைகளில் கீர்த்தனைகள் பாடப்படும் போது, நாமும் இணைந்து முழு மனதுடன் பாட வேண்டும். முழுமையாக அதில் மூழ்கும் போது, நம் கவலைகளும் துயரங்களும் தீர்கின்றன, வாழ்வில் உள்ள சிக்கல்கள் தீர்கின்றன, வாழ்கை ஆனந்த மயமாக மாறுகிறது, ஒத்திசைவு திரும்பக் கிடைக்கிறது.

வாழ்கையில் ஒத்திசைவு பிசகுவதற்குக் காரணம், மன அழுத்தம், ஓய்வின்மை, வேட்கை, துவேஷத்தினால், மனதில் ஏற்படும் ஜுரம் போன்ற படபடப்பு. இந்த எதிர்மறைகளில் இருந்து விடுபட, நாம் அனைவரும் ஒவ்வொரு நாளும் சில நிமிடங்கள் நல்ல இசையை கேட்க வேண்டும். பாடத் தெரியுமா இல்லையா என்பது பொருட்டல்ல, நாம் அனைவரும் பாட வேண்டும். அவ்வளவு அருமையான நிகழ்ச்சியை இன்று நமக்கு வழங்கிய இந்த இளைஞர்களுக்கு நாம் பலத்த கரகோஷத்துடன் பாராட்டுக்களை தெரிவிக்க வேண்டும். அவர்கள் வளர்ந்தபின் நம் நாடு அவர்களுடைய திறமையால் பெருமை கொள்ளும். நம் நாட்டின் பாரம்பரிய இசைக்கு நிச்சயம் பெரும் புகழ் சேர்ப்பார்கள். இதைப் பார்த்து நான் உண்மையில் மிகவும் மகிழ்கிறேன்.

வாழ்கையை முழுமையாக மாற்றக் கூடிய தனித்திறன் பெற்றது நமது இந்திய ஆன்மிகம். நமது ஆன்மிகம் வெறும் ஏட்டளவில் இருப்பது அல்ல. செயல்படுத்தக் கூடிய, அறிவியல் பூர்வமான, நம் தினசரி வாழ்வில் கடைபிடிக்கக் கூடிய ஒன்று. இணையில்லாத மாபெரும் ஏழு பாரம்பரியத்துக்கு நம் நாடு பிறப்பிடம். அவை என்ன? முதலாவது இந்தியாவின் ஆன்மிகம். மக்களின் மனங்களைக் கவர்ந்து அவர்களை உள்ளிருந்து மலர வைக்கும் இத்தகைய தீர்க்கமான மற்றும் ஆழமான ஆன்மீகத்தை உலகில் வேறெங்கும் காண முடியாது. வாழ்கையை முழுதுமாக மாற்றி அமைக்கக் கூடிய தனித்தன்மை இந்திய ஆன்மீகத்திற்கு மட்டுமே இருக்கிறது. இந்தியா மிகவும் பெருமைப்பட வேண்டிய ஒன்று. யோகம், வேதாந்தம், தத்துவம் என அனைத்தையும் உள்ளடக்கியது இந்திய ஆன்மிகம்.

இரண்டாவது இந்திய ஆயுர்வேதம். 21ஆம் நூற்றாண்டு மருத்துவ முறையின் சாயம் வெளுக்கத் தொடங்கிவிட்டது. ஆனால் இந்திய ஆயுர்வேதமோ, தனித்துவமான பாரமபரியத்தில், அதன் மருந்துகள் எந்தவித பக்க விளைவுகளும் இன்றி, ஒருவரின் ஆரோக்கியத்தையும் ஒட்டு மொத்த நலனையும் பாதுகாத்து மேம்படுத்துகிறது. இன்று யோகாவிற்கும் நமது ஆன்மீகத்திற்கும் உலகெங்கும் மிக நல்ல மரியாதை இருக்கிறது. வித்தியாசமின்றி எல்லா நாடுகளிலும் மக்கள் யோகத்தைப் பயின்று தங்கள் வாழ்வில் இணைத்துக் கொள்கிறார்கள். ஆர்க்டிக் வட்டத்திற்கு மிக அருகே உள்ள நார்வே நாட்டின் வட முனையில் இருக்கும் டோம்சோ நகரத்திற்குச் சென்றீர்கள் என்றால் அங்கு வருடம் முழுவதற்கும் இரண்டு மாதங்களே சூரிய ஒளி கிடைப்பதைக் காணலாம். அந்த இடத்தில் கூட மக்கள் பிராணாயாமம் மற்றும் தியானம் பயில்கிறார்கள். ஓம் நமசிவாயா என்ற உச்சாடனம் அத்தகைய தூர தேசங்களில் கூட ஒலிப்பதைக் காணலாம். அதை போலவே பூமியில் அண்டார்க்டிக் வட்டத்திற்கு மிக அருகே உள்ள தென் பகுதி நிலத்தின் முனையான டியரா டெல் க்புயுகோ நகரில் கூட ஆயிரக்கணக்கான் மக்கள் ‘ஓம் நமசிவாய’ ஜெபித்து, சுதர்ஷனக் கிரியா செய்வதைக் காணலாம். இது இந்தியா உலகிற்கு அளித்த பரிசு. இந்திய ஆன்மிகம் உலகில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறது. ‘க்ருனவன்டோ விஸ்வம் ஆர்யம்,’ சொல்லியிருக்கிறார்கள். அதன் பொருள் நாம் வளர்ந்து நம் புகழ் உலகெங்கும் பரவும் என்பதே. அவர்கள் கனவு நிஜமாவதை நான் இன்று காண்கிறேன்.

மூன்றாவது, அருமையான இந்தியாவின் பாரம்பரிய இசை. இந்தியா பல விதமான இசை வடிவங்களின் இல்லம். இசையிலும் நடனத்திலும் அப்படி ஒரு வகைகளை உலகில் வேறெங்கும் காண முடியாது.  நீங்கள் இந்தியாவில் பயணம் செய்தால், ஒவ்வொரு 200 – 300 கிலோமீட்டருக்கும், மொழி அல்லது கிளை மொழி மாறுகிறது, இசை மற்றும் நடனம் மாறுகிறது, கலாசாரம் மற்றும் நம்பிக்கைகள் மாறுகிறது. இத்தகைய வேறுபாட்டை உலகில் வேறு எங்கும் காண இயலாது.
பன்னெடுங்காலமாக, நாம் இசையையும், நடனத்தையும் நம் கலாசாரத்தின் பிரிக்க இயலாத ஒரு பகுதியாகவே நாம் கருதி வருகிறோம். சிவ பெருமான் தானே தாண்டவம் செய்தார் (நடனத்தின் இறைவனாக நடராஜர் வடிவத்தில் சிவ பெருமான் செய்யும் நடன வடிவம்). சரஸ்வதி தேவி தன்னுடைய வீணையை வாசித்தார். சிவ பெருமானின் பரவச நடனத்தைக் கண்டு அவருடைய பக்தர்களான, நந்தி பகவான், பிருங்கி முனிவர் ஆகியோர் கூட ஆடத் துவங்கினர். நமது கலாசாரத்தில் இசைக்கு மிக முக்கியமான இடம் கொடுக்கப்பட்டு வருகிறது.

நான்காவது அருமையான மரபு இந்தியாவின் உணவு மற்றும் சமைக்கும் முறை. நம் நாடெங்கும் அவ்வளவு வகை வகையான சமையல்கள். சில வருடங்களுக்கு முன்பு அகமதாபாத்தில், அன்னம்பிரம்மம் என்ற பெயரில் இந்தியாவின் உணவு வகைகளுக்கான திருவிழாவைக் கொண்டாடினோம். சுமார் 5,700 வகை உணவுகள் தயாரிக்கப்பட்டன. ஏழு டன் தானியங்களைப் பயன்படுத்தி 265 சமையல் கூடத்தில் தயாரித்தனர் தொண்டர்கள். உலகில் வேறு எங்கும் இத்தனை வகை உணவுகளை கேள்விப்பட்டிருக்க கூட மாட்டார்கள். இது இந்தியாவின் சிறப்பு. நாம் என்ன செய்கிறோம் தெரியுமா? பீட்சா ஹட்டிற்கு போக விரும்புகிறோம். இந்தியாவின் வளமான பாரம்பரிய உணவு வகைகளை மறந்துவிட்டோம். உங்களுக்கு பீட்சாவின் கதை தெரியுமா? பீட்சா எப்படி உருவானது தெரியுமா?இத்தாலியில், மிஞ்சிப் போன எல்லா மாவையும் காய்கறிகளையும் போட்டு செய்தது தான் பீட்சா. இத்தாலிய மக்கள், உணவுப் பந்தி முடிந்தபிறகு,மீதம் உள்ளவற்றை கொண்டு தயாரித்த பீட்சாவை, தம்மிடம் உள்ள வேலையாட்களுக்குத் தந்தனர். நம் நாட்டைச் சேர்ந்த, சத்தான நமது உணவு வகைகளை நாம் மறந்து விட்டோம். மைதாவைக் கொண்டு தயாரித்த பீட்சாவிற்கு முக்கியத்துவம் தருகிறோம். அது நம் வயிற்றுக்கும் குடலுக்கும் கேடு விளைவிப்பதாகும். நீங்கள் திரிபுராவிற்குச் சென்றால், அங்கு தயாரிக்கப்படும் உணவு வகைகளை கண்டு ஆச்சரியப்பட்டுப் போவீர்கள். மூன்று மாநிலங்களுக்குச் சென்றபின் நான் இங்கு வந்துள்ளேன். காலையில் பீகாரில் உள்ள போதி கயாவிற்குச் சென்றேன். மதியம் மேற்கு வங்கத்திற்குச் சென்றிருந்தேன், இப்போது மாலையில் உத்தரப் பிரதேசத்திற்கு வந்திருக்கிறேன். ஒவ்வொரு பகுதியிலும் வித விதமான உணவு வகைகள் உள்ளன. நம் கலாச்சாரத்தின் ஒரு தனித்துவமான அடையாளம் இத்தகைய விதவிதமான உணவு வகைகள். இதை நாம் ஆதரிக்க வேண்டும்.

இந்தியாவின் ஐந்தாவது பெரும் பாரம்பரியம் துணிகளும் ஆடைகளும். வெளிநாடுகளில் பார்த்தால், அவர்களுடைய உடைகள் ஏறக்குறைய ஒரே வண்ணமும் வகையுமாகவும் இருக்கும். ஆனால் இந்தியாவில், அத்தனை வகையான துணிகள், ஆடைகள் அதற்கேற்ற வாறு விதவிதமான அணிகலன்கள். பன்னெடுங்காலமாய் இது பழக்கத்திலிருந்து வருகிறது. கோவில்களில் உள்ள விக்ரகங்களுக்கு கூட விதவிதமான உடைகளும் அணிகலன்களும் கொண்டு தினம் தினம் அலங்காரம் செய்யப்படுகிறது. இந்த குணமும் மரபும் நமது பண்டைய கலாசாரத்தின் ஒரு பகுதி.

அடுத்ததாக இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் துறை. மற்ற நாடுகளை விட தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி ஏன் இந்தியாவில் அதிகமாக இருக்கிறது என்று இலண்டனில் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு செய்தனர். இந்திய மொழிகளின் வேர் சமஸ்க்ருதம் என்பதை கண்டறிந்தனர். பிறகு சம்ஸ்க்ருத மொழியை ஆழமாக ஆய்ந்தனர். நமது மூளையில் உள்ள மொழிகள் சம்பந்தப்பட்ட நரம்புகளின் செயல்பாட்டுக்கு மிக உகந்ததாக சம்ஸ்க்ருத மொழி இருப்பதைக் கண்டனர். சம்ஸ்க்ருதம், மூளையின் மொழி நரம்புகளின் செயல்பாட்டை நன்கு மேம்படுத்தி தகவல்களை துல்லியமாக வேகமாக கிரகிக்க வைக்கிறது. இருபது வருட ஆராய்ச்சிக்குப் பிறகு, இங்கிலாந்தில் உள்ள மூன்று பள்ளிகளில் சம்ஸ்க்ருதத்தைக் கட்டாயப் பாடமாக்கிவிட்டனர். இதைப் பற்றி நீங்கள் செய்தித்தாளில் பார்த்திருக்கலாம் அல்லது கேள்விப்பட்டிருக்கலாம். கணினிகளை இயக்க ஆகச் சிறந்த மொழி சம்ஸ்க்ருதம் எனக் கண்டறிந்திருக்கிறார்கள், இந்திய மொழிகள் அனைத்தும் சமஸ்க்ருதத்தை அடிப்படையாகக் கொண்டது. சம்ஸ்க்ருதமோ அல்லது வேறு இந்திய மொழிகளோ பேசும்போது கூடவே நம் மூளையின் மொழி நரம்புகள் செயல்பட்டு ஒத்திசைவும் வல்லமையும் பெறுகிறது. இன்றைய விஞ்ஞானிகள் இதைத்தான் சொல்கின்றனர்.

இந்தியாவின் சுற்றலா ஏழாவது சிறப்பம்சம். இந்தியாவில் உள்ள அளவு அத்தனை சுற்றலாத் தளங்களின் எண்ணிக்கையை வேறு எந்த நாடும் இணை செய்ய முடியாது. ஒருமுறை கிரீஸ் நாட்டில் நடந்த வாழும் கலை நிகழ்ச்சிக்குப் பின், அங்கு சுற்றிப் பார்க்க அழைத்துச் சென்றார்கள். என்னுடன் இந்தியாவைச் சேர்ந்த சிலரும் வந்தனர். அவர்கள் கூறினார், ‘குருஜி, இங்கு அதிகம் பார்க்க எதுவுமில்லை, பெரும் கல் தூண்கள் மட்டுமே. ஆனாலும் முழு உலகமும் அதைப் பார்க்க இங்கு வருகின்றது. நம் நாட்டில் ஏராளம் இருக்கிறது.’ ஆனால் துரதிருஷ்டவசமாக, நம் நாட்டின் சுற்றுலாத் தளங்களையும் நமது பாரம்பரியத்தையும் நாம் சரியானபடி வெளி உலகுக்குத் தெரியப்படுத்தவில்லை.

கிரீஸ், மிகச் சிறிய நாடு, ஆனாலும் வருடந்தோறும் சுமார் 1.2 கோடி சுற்றுலாப் பயணிகள் வந்து பாரம்பரியச் சின்னங்களை, சுற்றுலாத் தளங்களைப் பார்க்க வருகின்றனர். ஆனால் இந்தியாவிற்கு சுமார் 40 இலட்சம் பயணிகளே வருகின்றனர். வளமான வகையான கலாசாரப் பாரம்பரியத்தை நாம் உலகுக்கு எடுத்துச் சொல்ல நாம் சரியான முயற்சி எடுக்கவில்லை. நாம் இன்னும் நமது கட்டமைப்பிலும், வசதிகளிலும் பின் தங்கி இருக்கிறோம். இந்த ஏழும் இந்தியா உண்மையாகப் பெருமைப்படக் கூடிய விஷயங்கள். இந்த ஏழு விஷயங்களையும் நாம் தகுந்த மதிப்போடு அணுகி வளர்த்தோமானால், நம் நாட்டின் பொருளாதாரம் தலை நிமிர்ந்து மீண்டும் வளர்ச்சிப் பாதையில் செல்லும். இதைத்தான் நான் நம்புகிறேன். 

நீங்கள் இந்த ஏழு விஷயங்களையும் ஞாபகத்தில் கொள்வீர்களா?

முதலாவதாக இந்திய ஆன்மிகம். ஒரு அசைக்கமுடியாத புன்னகையையும், இதயத்துக்கு ஆனந்தத்தையும் அளிப்பது. நமது ஆன்மிகம் வெறும் ஏட்டளவில் இருப்பது அல்ல. இது செயல்படுத்தக் கூடிய, அறிவியல் பூர்வமான, நம் தினசரி வாழ்வில் கடைபிடிக்கக் கூடிய ஒன்று. ஒருவரின் வாழ்கையை அப்படியே முழுமையாக மாற்றி அமைக்கக் கூடிய திறன் கொண்டது. உங்கள் வாழ்வின் எல்லாத் தளங்களிலும் உங்களை மலரச் செய்யும். சில நாட்களுக்கு முன் பீகாரில் இருந்தேன். பல்வேறு கிராமப்புறங்களில் இருந்து சுமார் நூறு இளைஞர்கள் வந்திருந்தனர். மூன்று வாரங்களுக்கு முன், அதாவது வாழும்கலை பயிற்சியை எடுப்பதற்கு முன், அவர்கள் மாவோயிஸ்ட் அமைப்பில் சேர்ந்து துப்பாக்கி மூலம் தங்கள் உரிமைகளை திரும்பப்பெற திட்டம் வைத்திருந்தனர்.

ஆனந்தப் பயிற்சியில், அவர்கள் பிராணாயாமம் செய்தனர், தியானம் செய்தனர், அதனால் தங்கள் வாழ்க்கையில், தங்கள் பார்வையில் அப்படி ஒரு மாற்றத்தை அனுபவித்தனர். பயிற்சி முடிந்தபின் என்னைப் பார்க்க வந்தனர். ஈரமான கண்களுடன் அவர்கள் கூறினார், ‘குருதேவ், எங்கள் வாழ்க்கையில் இனி எப்போதும் துப்பாகிகளும் ஆயுதங்களும் எடுக்க மாட்டோம். உங்கள் பாதங்களில் எங்களுடைய ஆயுதங்களை சமர்பிக்கிறோம்.’

அவர்களிடம் ஏற்பட்ட மாற்றத்தைக் கண்ட யாருடைய கண்களானாலும் சரி அதில் கண்ணீர் நிரம்பியிருக்கும். அவர்கள் எல்லோரும் அப்படி ஒரு நல்ல இதயங்களைப் பெற்றிருந்தாலும், அவர்கள் தவறான பாதையில் இருக்க நேர்ந்தது. ஏனென்று உங்களுக்குத் தெரியுமா? ஏனென்றால் அப்படிச் செய்யக் கூடாது என்று அவர்களுக்கு யாரும் சொல்லித் தரவில்லை. ஏனென்றால், அப்படி ஒரு அமைதியையும் ஆனந்தத்தையும் தங்கள் வாழ்கையில் அவர்கள் அனுபவித்திருக்க வில்லை. ஞானம், தியானம் மற்றும் கானம் இவைகளின் தேன் சுவையை அவர்கள் யாரும் அனுபவித்ததில்லை.

நம் ஆன்மீகத்தின் முக்கியமான மூன்று பகுதிகள் உள்ளன. ஞானம் (அறிவு), கானம் (பாட்டு) மற்றும் தியானம் (தவம்). நவீன விஞ்ஞானம் இதை மூளைச் செயல்பாடு (அறிவு), வலது மூளைச் செயல்பாடு (பாட்டு) மற்றும் புத்திச் செயல்பாடு (தியானம்) என்று அழைக்கின்றனர். இந்திய ஆன்மீகத்தில் தான் இந்த மூன்றும் உள்ளது, அதனால் தான் சமூகத்தில் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்த வல்லது என்று சொல்கிறோம். துரதிருஷ்டவசமாக, நமது நாட்டில் ஆன்மீகத்தை புறக்கணித்து விட்டோம், அல்லது அதை தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறோம்.


(குறிப்பு: இந்தி மொழியில் வழங்கப்பட்ட இந்த உரை தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது)