ஊழலை அகற்றுவோம்

14 மார்ச், 2014

வாரணாசி, உத்தரப் பிரதேசம்



விடுதலைக்கு வழி மெய்யுணர்வுப் பாதையே என்னும் இடுகையின் தொடர்ச்சி கீழே தரப்பட்டுள்ளது.

எல்லாப் பிரச்சினைகளுக்கும் அடிப்படைக் காரணம் ஊழலே ஆகும். அதை நாம் களைய  வேண்டும். முதலில் நம்மிலிருந்து துவங்கவேண்டும். எந்த விதமான லஞ்சமும் கொடுக்கவோ அல்லது வாங்கவோ மாட்டேன் என்று உறுதி மொழி எடுத்துக் கொள்ள வேண்டும்.

தேவையானவற்றைச்  செய்ய எந்த அரசு அதிகாரி மறுத்தாலும், பத்து பேர் சேர்ந்து அவர் முன்னால் அமைதியாக அமர்ந்து விடுங்கள்.ஐயா! உங்களைப் பணிவாக வணங்குகின்றோம், தேவையானால், மீண்டும் மீண்டும் நாங்கள் வருகின்றோம், ஆனால் உங்களுக்கு லஞ்சத் தொகை எதுவும் தரமாட்டோம் என்று கூறுங்கள். அவசியமானால், என்னுடைய பெயரை குறிப்பிடுங்கள். "நாங்கள் எங்கள் குருதேவிடம் லஞ்சம் கொடுக்கவோ அல்லது வாங்கவோ மாட்டேன் என்று உறுதி  கூறியிருக்கின்றோம், எங்கள் பணியை செய்ய தயவு செய்து அனுமதியுங்கள் என்று கூறுங்கள்.  

சத்சங்கத்தில் இந்த உறுதி மொழி எடுத்துக் கொண்ட அநேகம் பேர் லஞ்சம் எதுவும் கொடுக்காமல் தங்கள் வேலைகளை நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றார்கள். அனைவரும் என்று என்னால் அறுதியிட்டுக் கூற முடியாது, ஆனால் நிறையப் பேர் என்னிடம் திரும்பி வந்து லஞ்சமின்றி தங்கள் பணி நிறைவுற்றதாகக் கூறியிருக்கின்றார்கள். எனவே நீங்கள் லஞ்சம் இன்றி செயல்பட இந்த சங்கல்பத்தை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தூண்டுகின்றேன். உங்களுக்கு அதை செயல்படுத்த சக்தி இருக்கின்றது. உங்களை நீங்களே நம்புங்கள். சில கட்டுப்பாடுகளினால்  நிர்பந்தப்படுத்தப்பட்டு, லஞ்சம் வாங்குபவர்கள், மற்றும் லஞ்சத்தில் பங்கு அடைய விரும்பும்  மேலதிகாரிகளின் வற்புறுத்துதலுககு ஆளாபவர்கள் ஆகியோரை நான் இனி அவ்வாறு செய்தலை தவிருங்கள்லஞ்சத்தை வளர்க்காதீர்கள் என்று கேட்டுக் கொள்ளுகின்றேன்.

நேர்மையாக இருப்பதால் உங்களது ஊதிய உயர்வு, பதவி உயர்வு ஆகியவை தடைப்படாது. நேர்மையும் உறுதியும் கொண்ட நிலைப்பாட்டுடன் பணிபுரியுங்கள். நிச்சயம் முன்னேறுவீர்கள். ஏன் தெரியுமா? ஒரு தனி மனிதனின் பணித்திறனை விட மேலான ஒரு சக்தி அனைத்தையும் நிகழச் செய்கின்றது.நீங்கள் உண்மையைப் பேசும் போது உங்களில் ஒரு சிறந்த சக்தி பிறக்கின்றது. பொய் பேசும் போது உங்கள் உடலின் தசைகள் கூட வலுவிழந்து விடுகின்றன. நேர்மை என்பது, தானே சக்தி வாய்ந்தது. உண்மை என்பது  தானாகவே வலுப்பெற்றுள்ள ஒன்று.

ஒரு எளிய உதாரணம் தருகின்றேன். ஒரிஸ்ஸாவில் ஒரு பல்கலைக்கழகம் துவங்கினோம். ஒரு கனவான் என்னை இதன் பொருட்டு அணுகினார். அவர் ஏற்கனவே ஏழு பல்கலைக்கழகங்கள் துவங்கி நிர்வகித்து வருபவர். "குருதேவ் தங்களது நிறுவனத்தின் விளம்பரக் கொடியின் கீழ் ஒரு பல்கலைக்கழகம் துவங்க விரும்புகின்றேன் என்று கூறினார். நான் சம்மதித்தேன். ஏன் தெரியுமா? பெரும்பாலான நம் இளைஞர்கள் மேற்படிப்பிற்காக வெளிநாடுகள் செல்லுகின்றார்கள். ஒரு ஆண்டு காலத்தில் 20-22 இளைஞர்கள் ஆஸ்திரேலியாவில் கொல்லப்பட்டனர் என்று கேள்வியுற்றேன். ஒரு காலத்தில் உலகின் பல் வேறு நாடுகளிலிருந்து மக்கள் இந்தியாவின் காசி (தற்போதைய வாரணாசி) மற்றும் நாலந்தா பல்கலைக்கழகங்களுக்கு வந்து கல்வி கற்றனர். இந்தியா சிறந்த கல்வி மையமாக மதிக்கப்பட்டிருந்தது. ஏன் நமது குழந்தைகள் மேற்படிப்பிற்காக வெளி நாடுகள் செல்ல வேண்டும்?

வெளிநாடுகளிருந்து நிபுணர்கள், அறிஞர்கள் ஆகியோரை இங்கு வரவழைத்து கற்பிக்குமாறு செய்யலாம், அப்போது நம் இளைஞர்கள் வெளிநாட்டுப் பயணத்தைத் தவிர்த்துஇங்கேயே அக்கல்வியை கற்கலாம். இதை மனதில் குறிக்கோளாகக் கொண்டு, நமது மாணவர்கள் கீழை மற்றும் மேலை நாட்டுச் சிறப்புக்களைக் கொண்ட கல்வியினை அடையும் பொருட்டு ஒரிஸ்ஸா பலகலைக்கழகத்தைத் துவக்கினோம். நமது மாணவர்கள் உலகின் இவ்விரு பகுதிகளின் சிறப்புக்களை அடையும் தகுதி பெற்றவர்கள் ஆவர்.

இப்போதெல்லாம், ஒரு பல்கலைக்கழகத்தைத் துவங்குவதற்கான விண்ணப்ப செயல்முறை மிகவும் நீண்ட சலிப்பூட்டும் செயல்முறை ஆகும். அதை அரசாங்கத்தில் பதிவு செய்வது அதை விட சிரமமானது ஆகும்.அத்தகைய ஒரு நிலையை நாங்கள் சந்தித்தோம். ஒரு தொழில்துறையாளர், நாங்கள் பல்கலைக் கழகம் துவங்கப்போவதை அறிந்து, எங்கள் விண்ணப்பம் ஏற்கப்படுவதை தடுக்க முனைந்தார். தன்னுடைய பல்கலைக் கழகத்திற்கு மானியங்கள் பெறுவதற்கு அரசுக்கு ஏராளமாக லஞ்சம் கொடுத்து எங்களுக்கு முன்னதாகத், தான் துவங்கிவிட வேண்டும் என்று முயற்சித்தார். அவரது பல்கலைக் கழகம் 8000 ஏக்கர்களைக் கொண்டது, ஆனால் எங்களுடையது 200 ஏக்கர்கள் தான். எங்களது திட்டங்களை நிறுத்த, மற்றும் தாமதப்படுத்த அவர் எல்லாவிதமான முயற்சிகளையும் மேற்கொண்டார். ஆனால் கடவுள் அருளை பாருங்கள். அவர் எங்களுக்கு எதிராக எடுத்த ஒவ்வொரு கொடிய சூழ்ச்சியும் முடிவில் தோற்று விட்டது. அவரால் முடிந்த அனைத்தையும் செய்த பின்னரும், கோடிக்கணக்கான மதிப்புள்ள அவரது  பல்கலைக்கழகம் செயல்பட துவங்கவில்லை. இறையருளால், எங்களது பல்கலைக்கழகம் துவங்கப் பெற்று செயல்படத் துவங்கியது. அது நன்றாகச் செயல்படத் துவங்கி பாடப் பிரிவுகளில் பல மாணவர்கள் பதிவு செய்து கொண்டுள்ளனர்.

நேர்மை சுயமாகவே சக்தி கொண்டது. உண்மை என்பதும் சுயமான சக்தியுடையது. இப்போது நேரடியாக ஒரு உதாரணம் காட்டுகின்றேன். கூட்டத்திலிருந்து ஒரு ஆர்வலரை  மேடைக்கு அழைக்கின்றேன். உண்மை என்பது நமது உடலளவில் கூட எவ்வளவு சக்தி மிகுந்தது என்று உங்களுக்குக் காட்டுகின்றேன்.

குருதேவ்: உங்கள் பெயர் என்ன?

ஆர்வலர்: என் பெயர் சூரஜ்

குருதேவ்: சரி. இப்போது உங்கள் கையைக் காற்றில் இருக்கப் பற்றிக் கொள்ளுங்கள். எவ்வளவு  முடியுமோ அவ்வளவு திடமாகப் பற்றிக் கொள்ளுங்கள். இப்போது நான் என் பலம் முழுவதையும் உபயோகித்து உங்கள் கையைக் கீழே தள்ளுவேன், நீங்கள் அதை எதிர்க்க வேண்டும். நான் கேட்கும் கேள்விக்கு உண்மையான பதிலைக் கூற வேண்டும்.

உங்கள் பெயர் என்ன?

ஆர்வலர்: சூரஜ்

குருதேவ் தனது பலத்தை உபயோகித்தும் உண்மை கூறியதால் ஆர்வலருடைய கை திடமாக காற்றில் நிற்கின்றது.

குருதேவ்: சரி! இப்போது வேறொரு கேள்வி கேட்பேன், நீங்கள் பொய் சொல்ல வேண்டும்.இன்று என்ன கிழமை?

ஆர்வலர்: வெள்ளிக்கிழமை (உண்மையில் அன்று திங்கள் கிழமை)

குருதேவ், பலத்தை உபயோகித்து அழுத்தியதும்கை எளிதாகத் தாழ்ந்து விடுகின்றது.நல்லது! இப்போது நீங்கள், பிறர் தசைபலத்தை சோதித்து அவர்கள் உண்மை அல்லது பொய் பேசுகிறார்களா என்று தெரிந்து கொள்ளலாம். நீங்கள் உண்மை பேசும்போது ஒரு சிறப்பான சக்தி உங்களில் மலருகின்றது. பொய் பேசும் போது, உங்கள் உடற்தசைகள் வலுவிழந்து விடுகின்றனஉடன் பிறப்புக்களுக்கு இடையேயும், தம்பதிகளுக்கிடையேயும் கூட அவர்கள் கூறுவது உண்மையா அல்லது பொய்யா என்று கண்டுபிடிக்க இது நல்ல செய்முறை நுட்பமாகும்.(சிரிப்பு)

ஊழலற்ற சமுதாயம் நமக்கு தேவை. பிளவற்ற பலமான அரசாங்கம் இந்தியாவிற்குத் தேவை.   கூட்டணி  அரசு  வேண்டாம்.ஏன்? அயல்நாடுகள் இந்தியா வலுவான நாடாக ஆவதை விரும்ப வில்லை. இந்தியா பலவீனமாகவும் பிரிவினையோடும் வேண்டும் என்று விரும்பி, அவை, ரகசியமாக கூட்டணி அரசு அமைவதை ஆதரித்துக் கொண்டிருக்கின்றன. ஒரு டாலரின் ஈடு நூறு ரூபாய் என்னும் அளவுக்கு இந்தியாவின் நாணய மதிப்பைக் குறைந்து விட வேண்டும் என்று விரும்புகின்றன. நமக்கு இது வேண்டியதில்லை. இந்தியாவில் பணவீக்கமும்,ஏழ்மையும் இருக்கக் கூடாது. நம் நாட்டில் தீவிரவாதமும் நாச வேலைகளும் இருக்கக் கூடாது. மக்களுக்குள் பகைமை நிலவக் கூடாது. நாம் அனைவரும் ஒருவரே.

நமது நாட்டில் பொதுவுடைமை கொள்கையின் நிலை என்ன என்று தெரியுமாஒரு குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்த ஒரு தலைவருக்குத் தனது பிரிவைச் சேர்ந்த பிறர் வாழ்வில் முன்னேறுவதை ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. பாதுகாப்பற்ற உணர்வினால் தனது அதிகாரபூர்வமான பதவியை, தனது பிரிவைச் சேர்ந்த மற்றவரிடம் இழக்க விரும்புவதில்லை. சாதரணமாக , உங்களுடைய ஜாதிப் பிரிவினைச் சேர்ந்த ஒருவருக்கு வாக்களிக்க விரும்புவீர்கள். ஆனால் அவர் தலைவர் ஆனதும், தன்னுடைய இனத்தை சேர்ந்தவர்களுடைய நலனலையே புறக்கணித்து, அவர்கள் முன்னேறுவதைத் தடுக்கின்றார். தனது ஜாதிப்பிரிவைச் சேர்ந்த வேறொருவர் தன்னை விட வாழ்வில் உயருவதை அவர் விரும்புவதில்லை. உங்கள் வாக்குகளை அளிக்கும் போது, இத்தகைய அற்பமான (தவறானதும் கூட) செயல்களால் ஊசலாடாதீர்கள். எப்போதுமே நாட்டின் நலனையே முதன்மையாகக் கருதி வாக்களித்து முன்னேறுங்கள்.  இந்த முறை வாரணாசியில் 100 சதவீதம் வாக்களிப்பு நிகழவேண்டும் என்று விரும்புகின்றேன். செய்வீர்களா? யாராவது ஓட்டுப் போடுவதை தவிர்ப்பதாகத் தெரிந்தால், நீங்களே அவர்களை அழைத்து சென்று வாக்களிக்க  ஊக்குவியுங்கள். இது மிக முக்கியமானது.

சமுதாயத்தில் எங்கெல்லாம் தவறுகளைக் காண்கின்றோமோ, நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து அவற்றைத் தீர்க்க வேண்டும். நீங்கள் ஒவ்வொருவரும் மேம்பாடான இந்தியாவிற்குத் தன்னார்வத் தொண்டர் ஆக வேண்டும் என்று நான் விரும்புகின்றேன். சமுதாயத்தில் வறுமை, நோய்,அநீதி   ஆகியவை இருக்கக்கூடாது. நாம் அனைவரும், வல்லமையான, ஆரோக்கியமான, தற்சார்பு கொண்ட இந்தியாவாக நம் நாடு ஆக வேண்டும் என்பது நமது கனவாகக் கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு நாளும், ஒரு மணி நேரம் நாட்டிற்காக அர்ப்பணியுங்கள். நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து செய்தால், வாரணாசி மேன்மையாக இருக்கும். நாளை, கங்கை நதிக் கரையோரங்களை சுத்தப்படுத்தும், பணி செய்யப்போகின்றோம். அப்பணி மேரே காசி மேரே கங்கா என்று அழைக்கப் படுகின்றது. நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து சுத்தப்படுத்துவோம். மாசுபட்டு விட்ட நதியினை சுத்தப்படுத்தி மீண்டும் தூய்மையான நதியாக்குவது மிகவும் அவசியம் ஆகும்.

இன்று அலஹாபாதிலிருந்து வாரணாசிக்கு பயணம் செய்து கொண்டிருக்கும் போது, யமுனை நதிக்கு இணையாக அமைக்கப்பட்டிருக்கும் பெரிய கழிவுநீர் குழாய்கள் கீறல் விட்டு சில இடங்களில் ஒழுகிக் கொண்டிருந்ததைக் கண்டேன். இதனால் நதி நீரின் தாவர இனத்தை பாதிக்கும் வகையில் ஒரு அடர்த்தியான  அசுத்த அடுக்கு நதி நீரின் மேற்பரப்பில் உருவாகியிருக்கின்றது.
அப்பகுதி நதி நீர் சுத்தமாக உள்ளதா என்று என்னைச் சுற்றி உள்ளவர்களிடம் கேட்ட போது அவர்கள் அது கழிவு நீர் என்று கூறினார்கள். உடனே நான் கங்கை நதி மாசு நீக்கும் பணிகுழுவின் மேலாளரை தொலைபேசியில் அழைத்து, உடனடியாக அதை கவனிக்கும் படியும், ஒரு மணி நேரத்துக்குள் இப்பிரச்சினை தீர்க்கப்படும் என்று எனக்கு உறுதி மொழி அளிக்கும்படியும் கேட்டுக் கொண்டேன். சமுதாயத்தில் எங்கு தவறுகள் நிகழக் கண்டாலும், நாம் அனைவரும் ஒன்று கூடி, அவற்றைத்  தீர்த்து வைக்க வேண்டும்.மேம்பாடான இந்தியாவிற்கு விருப்பார்வத் தொண்டராக  உங்கள் ஒவ்வொருவரையும் ஊக்குவிக்கின்றேன்.செய்வீர்களா? இதுதான் நான் உங்களுக்குக் கூறுவது. சமுதாயத்தில், வறுமை, நோய், அநீதி ஆகியவை நிலவக் கூடாது. 

வலுவானஆரோக்கியமான தற்சார்புள்ள இந்தியாவை உருவாக்கக் கனவு காணுவோம்.