செல்வவளமிக்க நம் இந்திய கலாசாரம்

13 மார்ச் 2014
அலஹாபாத், உ.பி. இந்தியா

செல்வவளமிக்க நம் இந்திய கலாசாரத்தை பற்றி குருதேவர் ஹிந்தியில் பேசியதன் தொடர்ச்சி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
உன் நாட்டை விரும்புவதும், இறைவனை விரும்புவதும் ஒரு காசின் இரண்டு பக்கங்கள் போன்றது. நான் இறைவனை இதய பூர்வமாக விரும்புகிறேன். ஆனால் அவர் படைப்பை விரும்பவில்லை. அவர் படைத்த பூமியை, உருவாக்கிய சமுதாயத்தை விரும்பவில்லை” என்று யாரோ ஒருவர் சொன்னால் அது நேர்மையான பேச்சு அல்ல.“நீ ஒரு தோட்டக் காரனிடம் அன்பு வைத்திருக்கிறாய். ஆனால் அவன் தோட்டத்தை விரும்பவில்லை” என்று சொல்வது போல இருக்கிறது. இறைவனை விரும்பும் ஒருவர் கண்டிப்பாக சமுதாய நன்மையை விரும்புவார். நாம் அனைவரும் சமுதாய வளர்ச்சிக்காக பாடுபட வேண்டும்.
இன்று நாமனைவரும் இங்கு ஒன்று கூடியிருக்கிறோம். நீங்கள் இந்த ஆண்டு முழுதும் தேச சேவைக்காக ஒவ்வொரு நாளும் ஒரு மணி நேரத்தை ஒதுக்கி வைக்க வேண்டுகிறேன். நம் குழந்தைகளுக்காக, வருங்கால சந்ததியினரின் நலனுக்காக இப்போது இருப்பதை விட ஒரு மிகச் சிறந்த பூமியை, மிகச் சிறந்த சமுதாயத்தை விட்டுச் செல்ல வேண்டும்.
பயம், அநீதி மற்றும் லஞ்ச ஊழல் நிறைந்த சமுதாயத்தை நம் சந்ததியருக்கு விட்டுச் செல்லக் கூடாது. வலிமை வாய்ந்த தன்னிறைவு பெற்ற இந்தியாவை உருவாக்க நாம் பொறுப்பேற்க வேண்டும். கூட்டணியில்லாத ஒரு வலிமையான அரசை உருவாக்க வாக்களிக்க வேண்டும். மற்ற கட்சிகளின் உதவியை எதிர் பார்க்காமல் பெரும்பான்மை பெற்ற ஒரு அரசால் மட்டுமே நம் பொருளாதாரம் வளர்ச்சியடைய முடியும்.
உத்தரப் பிரதேசம் 20 ஆண்டுகளுக்கு முன் எப்படி இருந்தது? இன்று எப்படி இருக்கிறது? 20 ஆண்டுகளில் உத்தரப் பிரதேசம் வளர்ச்சி அடைந்ததா? அல்லது பின் தங்கி விட்டதா? இங்கு இருப்பவர்களில் எத்தனை பேர் உத்தரப் பிரதேசம் பின் தங்கிவிட்டது என்று நம்புகிறீர்கள் ? எத்தனை பேர் இங்கு குற்றம் மிகவும் அதிக அளவில் நடை பெறுகிறது என்று உணர்கிறீர்கள் ? (பார்வையாளர்களில் பலர் கைகளை உயர்த்துகிறார்கள்.)
நாம் தான் இதற்குப் பொறுப்பு. இன்று நம் சமுதாயத்தில் மக்கள் வருந்தும் நிலை இருப்பதற்கு சில கெட்ட மனிதர்கள் மட்டும் காரணம் அல்ல. நல்ல மனிதர்கள் பலர் குற்றம் நிகழும்போது பேசாமல் பார்த்துக் கொண்டிருப்பது தான் காரணம். நாம் நல்லவர்கள், சரியானவர்கள் என்ற எண்ணத்தோடு, நாம் இதற்குப் பொறுப்பல்ல என்று எண்ணுபவர்களால் குற்றம் அதிக அளவில் நடக்கிறது. நமக்கென்ன வந்தது என்ற உணர்வோடு குற்றத்தைத் தடுக்க நடவடிக்கை எடுப்பதில்லை. அதனால் தான் சமுதாயத்தில் குற்றங்கள், கொடுஞ்செயல்கள் அதிகமாக நிகழ்கின்றன. அதற்குக் காரணம் நல்ல மனிதர்களின் மௌனம் தான். குற்றம் செய்யும் சிலர் அல்ல.
இந்த சூழ்நிலையை என்னுடைய கண்ணோட்டத்தில் பார்த்தால், யாருமே கெட்டவர்கள் இல்லை. யாரொ சிலர் நல்ல குணங்களை, திறமைகளை வளர்த்துக் கொள்ள வாய்ப்பில்லாமல் இருக்கிறார்கள். அவர்களுக்குள்ளே இருக்கும் அழகை, குணத்தை அறியும் வாய்ப்பில்லாமல் இருக்கிறார்கள். எனவே சமுதாயத்தில் நிகழும் தீமைகளுக்கு நல்லவர்களே பொறுப்பு. தீய செயல் புரியும் சிலர் அல்ல. இப்போது நாம் விழித்தெழ வேண்டிய வேளை வந்து விட்டது. எனவே ஒவ்வொரு நாளும் ஒரு மணி நேரத்தை நாட்டுக்காக ஒதுக்கி இன்றே சேவையைத் துவங்குங்கள். வார நாட்களில் முடியா விட்டால், வார இறுதியில் அதிக நேரம் செலவிடலாம். சமுதாய வளர்ச்சிக்காக உங்கள் நேரத்தைக் கொடுக்க வேண்டும்.
சில நாட்களாக, பல இடங்களில் மக்களிடையே ஆனந்தக் கணக்கெடுப்பு துவங்கியிருக்கிறோம். வீடு வீடாகச் சென்று மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா என்று கேளுங்கள். இல்லாவிட்டால், அதற்குக் காரணம் என்ன? லஞ்ச ஊழல்? விலை உயர்வு? கெட்ட மனிதர்களிடையே வாழ்வதா ? அல்லது குடும்பத்தில் இருப்பவர்களின் கெட்ட நடத்தையா? முதலில், மக்கள் ஏன் வருத்தத்தில் உழல்கிறார்கள் என்று கண்டு பிடியுங்கள். பல சமயம், எல்லோரும் உட்கார்ந்து மனம் விட்டுப் பேசுவதால் நம் மனம் லேசாகி விடும். உன் பிரச்சினைகளை மற்றவர்களிடம் சொல்லும் போது உன் மனம் லேசாகி விடும். ஓய்வு கிடைக்கும்.
பல இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்வதாக அறிந்தேன். நாம் மக்களை சந்தித்துப் பேசும் போது இப்படி நிகழ்வதைத் தடுக்க முடியும். அவர்களுடைய பிரச்சினைகளை கேட்டறியும் போது, அவர்கள் தற்கொலை முடிவுக்குப் போகாமல் தடுக்கமுடியும். நீ உன் உயிரைக் கொடுக்க முடிவுக்கு வரும் போது ஏன் ராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்காக உயிரைக் கொடுக்க முன் வரலாமே? ராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்காக ஏதாவது நன்மை செய் என்று சொல்லலாம். இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்வது சரியல்ல. ராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்காக உயிரைக் கொடுக்கத் துணியும் போது, மனதில் ஒரு புத்துணர்ச்சியை உணரலாம். நீ பெருமைப்படலாம். இளைஞர்களான நீங்கள் எல்லோரும் வி.பி.ஐ (வாலண்டிர் ஃபார் பெட்டர் இந்தியா) அமைப்பில் உறுப்பினராகச் சேர்ந்து சேவையில் ஈடுபடுங்கள்.
15, 20 பேர்கள் அடங்கிய குழுவாகச் சேர்ந்து அருகில் உள்ள கிராமங்களுக்குச் சென்று மக்களிடம் பேசி அவர்களுடைய பிரச்சினைகளை அறிந்து கொள்ளுங்கள். சாதி மத வேறு பாட்டால் ஒருவரோடு ஒருவர் சண்டை போடுவதைத் தவிர்த்து எல்லோரும் ஒன்றாகப் பாடு பட வேண்டும் என்று அறிவுறுத்த வேண்டும். நீங்கள் ஒரு முன்னுதாரணமாக வாழ்ந்து அவர்களுக்கு உற்சாகமூட்ட வேண்டும்.
நம்மால் அவர்களுக்கு 4 நல்ல வார்த்தை சொல்ல முடியாதா ? நம் பேச்சால் மற்றவர்களுக்கு சுகமும், நிவாரணமும் கிடைக்க வழி செய்ய முடியாதா ? சமுதாயத்தில் நிகழும் வகுப்புக் கலவரத்தின் போது இரு சாராரையும் அழைத்து சமாதானம் செய்ய முடியாதா? முடியும் என்றால் ஏன் செய்வதில்லை? இப்போதிருந்தே செய்யத் துவங்குங்கள். உங்களால் பேச்சு வார்த்தை நடத்த முடியாவிட்டாலும் பரவாயில்லை. அவர்களைக் கூட்டி சத்சங்கம் நடத்துங்கள்.
இந்தியா ஏழை நாடு அல்ல. நம்மிடம் எல்லா விதமான செல்வங்களும் உள்ளன. இன்றும் நிதி சம்பந்தமான பல லஞ்ச ஊழல்கள் இந்தியாவில் நடக்கின்றன. லஞ்ச ஊழலுக்கு முடிவில்லாத போது நாடு எப்படி வளமை அடைய முடியும்? என் கனவு என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? நாடு முழுவதும் ஒரு பெரிய ஆன்மீக அலையைக் கொண்டு வர விரும்புகிறேன்.
ஒவ்வொரு கிராமத்திலும் சத்சங்கம் நடக்க வேண்டுமென்று விரும்புகிறேன். நகரத்தில் உள்ள மக்கள் அனைவரும் ஆனந்தமாக நடனமாடி வாழ்க்கையைக் கொண்டாட வேண்டும் என்று விரும்புகிறேன். குடி மற்றும் போதை மருந்துப் பழக்கத்தை நம் நாட்டிலிருந்து அடியோடு ஒழிக்க விரும்புகிறேன். உங்களுக்குத் தெரியுமா ? நம் நாட்டில் மதுபான விற்பனை மூன்று மடங்கு உயர்ந்திருக்கிறது. சில மாகாணங்களில் மிக மிக அதிகமாக விற்பனையாகிறது.
நம் இளைஞர்களை குடி மற்றும் போதை மருந்துப் பழக்கத்திலிருந்து விடுவிக்க ஆன்மீகம் மட்டுமே வழியாகும். இப்பழக்கத்துக்கு அடிமையான இளைஞர்களை நம் சத்சங்கத்துக்கு அழைத்து வாருங்கள். சில முறை தியானம் செய்யச் சொல்லுங்கள். தியானம் அவர்களுக்கு மது பானத்தை விட அதிக மயக்கத்தைக் கொடுக்க வல்லது. அவர்கள் மதுபானம் மற்றும் போதை மருந்துப் பழக்கத்தை அடியோடு விட்டு விடுவார்கள்.
அவர்களுக்கு ஆன்மீகத்தில் பல மடங்கு இன்பம் கிடைக்கும் என்று சொல்லுங்கள். அவர்க்கள் அனுபவ பூர்வமாக இந்த இன்பத்தை உணர முடியும். இந்த அனுபவத்தை அவர்கள் எப்போதும் மறக்கமாட்டார்கள். குடி, உங்கள் உடல் நலத்தையும், செல்வத்தையும் அழித்துவிடும்.ஆன்மீகத்தில் வரும் போது ஒரு மலர்ச்சி ஏற்பட்டு உங்கள் முகம் ஒளிவிடும். இங்கு இருக்கும் இளைஞர்களைப் பாருங்கள். அவர்கள் மகிழ்ச்சியோடு இருப்பது உங்களுக்குத் தெரிகிறதா? சமுதாயத்தில் குடி மற்றும் போதை மருந்தை ஒழிப்பது நமது கடமை.
ஒருவரை ஒருவர் சார்ந்திருப்பது எங்கே முடிகிறதோ அங்கே லஞ்ச ஊழல் துவங்குகிறது. நம் நாட்டில் நிலவும் லஞ்ச ஊழலால் கோபம் அடைந்தவர்கள் எவ்வளவு பேர் இங்கிருக்கிறீர்கள் ? கைகளை உயர்த்துங்கள். இங்கு உள்ள எல்லோருமே லஞ்ச ஊழல்களால் துயரப் படுவதை நான் பார்க்க முடிகிறது. யாருமே தங்களைச் சார்ந்தவர்களிடம் லஞ்சம் கேட்க மாட்டார்கள். யாரும் தன் சொந்த சகோதரன், ஒன்று விட்ட சகோதரன் மற்றும் உறவினருக்கு லஞ்சம் கொடுப்பதில்லை. அவர்களிடமிருந்து லஞ்சம் வாங்குவதுமில்லை. லஞ்சம் வாங்க ஆரம்பிப்பது ஒருவரை ஒருவர் சார்ந்த நிலை முடியும் போது மட்டுமே. ஆன்மீகம் ஒன்று மட்டுமே மக்களை ஒருவரை ஒருவர் சார்ந்தவர்கள் என்று உணர்த்தக் கூடியது.
எல்லோரையும் ஏற்றுக் கொள்ள வைப்பது ஆன்மீகம். மக்கள் என்னிடம் வந்து “குருதேவா 1 உங்கள் வேலை மக்களுக்கு தியானம் சொல்லிக் கொடுப்பது. ஏன் லஞ்ச ஊழல், அநீதி பற்றி அதிகமாகப் பேசுகிறீர்கள் ?” என்று கேட்கிறார்கள். “தயவு செய்து இதையெல்லாம் அரசியல் வாதிகளிடம் விட்டு விடுங்கள், எதற்காக வேண்டாத தொந்தரவு “ என்று சொல்கிறார்கள்.
இங்கு இருப்பவர்களில் எவ்வளவு பேர் நான் லஞ்ச ஊழலைப் பற்றிப் பேச வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? (எல்லோரும் கைகளை உயர்த்துகிறார்கள்.) நான் இதைப் பற்றி மேலும் மேலும் பேசுவேன். விவாதிப்பேன். நான் எப்போதும் லஞ்ச ஊழலுக்கு எதிராகப் போராடுவேன். இந்த நாட்டு மக்களைப் பாதிக்கும் எந்த விஷயமானாலும் நான் அதை எதிர்த்து நிற்பேன்.  இது என் கடமை. நம் எல்லோருடைய கடமையாகும்.
லஞ்ச ஊழல் இல்லாத சமுதாயம் நமக்குத் தேவை. உங்களுக்கு லஞ்ச ஊழல் இல்லாத சமுதாயம் வேண்டுமா ? இல்லையா? ஆம் ! இன்று நாம் உண்மையான வாக்குறுதி அளிப்போம். லஞ்சம் வாங்க மாட்டோம். லஞ்சம் கொடுக்க மாட்டோம். குறைந்த பட்சம் ஒரு ஆண்டுக்கு இந்த வாக்குறுதியைக் காப்பாற்றுங்கள். யாராவது இந்தப் பழக்கத்துக்கு அடிமையாக இருந்தாலும், குறைந்த பட்சம் ஒரு வருடத்துக்கு இதை விட்டு விடுங்கள்.
நான் வெளி நாடுகளுக்குச் செல்லும் போது அங்குள்ள அரசாங்க துதர்களையும் பிரமுகர்களையும் சந்திக்கும் போது, அவர்கள் என்னிடம் சொன்னார்கள். வெளிநாட்டு வங்கிகளில் ஏறக் குறைய 1400 பிலியன் அமெரிக்க டாலர்கள் இந்தியர்களின் கணக்கில் உள்ளதாகச் சொன்னார்கள்.(ஒரு பில்லியன் – 100 கோடி) இது 84 லட்சம் கோடி இந்திய ரூபாய்க்குச் சமம். இந்தப் பணம் கணக்கில் வராத கறுப்புப் பணம். இந்தியாவின் லக்ஷ்மியைத் திருடி வெளி நாட்டு வங்கிகளில் வைக்கும் போது லக்ஷ்மி கருப்பாகி விடுகிறாள். அவளைத் திரும்ப நம் நாட்டுக்குக் கொண்டு வர வேண்டும். ஒத்துக் கொள்கிறீர்களா ?
இந்தியா ஏழை நாடே அல்ல. நம்மிடம் எல்லாவிதமான செல்வங்களும் இருக்கிறது.ஆங்கிலேயர்கள் நாட்டை விட்டுச் செல்லும் போது நம் தங்கத்தை எடுத்துச் செல்ல 900 கப்பல்கள் தேவையாக இருந்தது. இன்றும் பல லஞ்ச ஊழல்கள் ஒன்றன் பின் ஒன்றாக நடக்கின்றன. லஞ்ச ஊழல் ஒழியா விட்டால் நம் நாடு எப்படி வளம் பெற முடியும் ?
நாம் எல்லோரும் இதற்காகப் போராட வேண்டும். அரசாங்கத்தாலும், சட்ட அமைப்புகளால் மட்டும் இதைச் செய்ய இயலாது. ஜன் லோக் பால் சட்டம் கொண்டு வந்தால் மட்டும் உதவாது. ஆன்மீகம் நம் நாட்டில் வளர்ந்து மக்கள் தங்கள் பொறுப்பை உணரும் போது, தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை அறியும் போது லஞ்சம் தானாகவே ஒழிந்து விடும் என்று நம்புகிறேன்.
இன்றும் கூட நம்மிடையே பல திறமை வாய்ந்த மக்கள் வாழ்கிறார்கள். நல்ல நேர்மையான மனிதர்களின் எண்ணிக்கை, கெட்டவர்களை விட பல மடங்கு அதிகம் உள்ளது. ஆனால் துரதிஷ்டவசமாக நாம் ஒன்று சேர்ந்து செயல் படுவதில்லை. இப்போது அதற்கான வேளை வந்து விட்டது. லஞ்ச ஊழல் இல்லாத, வன் முறையில்லாத, மன அழுத்தமில்லாத இந்தியாவை உருவாக்க நாம் ஒன்று சேர வேண்டும். இந்தியாவில் ஒவ்வொரு மன்னிதனும் பாதுகாப்பாக்க உணர வேண்டும். இப்படிப் பட்ட சமுதாயத்தை ஆன்மீக அலை ஒன்றால் மட்டுமே உருவாக்க முடியும்.
ஆன்மீகம் என்றால் நான் ஒரு குறிப்பிட்ட கலாசாரத்தையோ, குறிப்பிட்ட சடங்கு முறையையோ சொல்லவில்லை. ஆன்மீகம் என்றால், நாம் அனைவரும் ஒன்று சேர்ந்தவர்கள் என்ற உணர்வு எல்லோரிடமும் இருக்க வேண்டும். இதயம் தூய்மையாக இருக்க வேண்டும். மனம் தெளிவாக இருக்க வேண்டும். செயல் உண்மையாக இருக்க வேண்டும். (செயலில் வெளிப்படைத் தன்மை வேண்டும்) இந்த மூன்றையும் அடைய வேண்டும். நம்மிடம் இந்த குணங்கள் இயல்பாக உள்ளன. இதைப் பற்றிய விழிப்புணர்வை நாம் அதிகரிக்க வேண்டும். தேர்தல் வரும் இந்நேரத்தில் இது மிகவும் முக்கியமாகிறது. “வாக்களிப்பதால் என்ன கிடைக்கிறது. எதற்காக ஓட்டு போட வேண்டும். ஏன் வீட்டிலேயே ஒரு நாள் ஓய்வு எடுக்கக் கூடாது. இவ்வளவு வெய்யிலில் ஓட்டுப் போடப் போவது முட்டாள்தனம்.” என்று பலர் நினைக்கிறார்கள். அப்படி நினைக்காதீர்கள். ஒவ்வொருவரும் சென்று வாக்களிக்க வேண்டும். இந்த முறை 100 % மக்கள் வாக்களிக்க வேண்டும். நீங்கள் அப்படிச் செய்வீர்களா ?
இங்கேயே ஓட்டளிக்க உறுதி செய்து கொள்ளுங்கள்.மற்றவர்களையும் ஓட்டுப் போட சொல்லுங்கள். யாராவது வாக்குச் சாவடிக்கு செல்ல விரும்பாவிட்டாலும், கட்டாயப்படுத்தி அவர்களை அழைத்துச் சென்று ஓட்டுப் போடச் சொல்லுங்கள். இது நம் நாட்டுக்கு நாம் செய்யும் கடமையாகும். ஒரு வலுவான, தன்னிறைவு பெற்ற இந்தியாவை உருவாக்க நாம் பொறுப்பேற்க வேண்டும். மத்தியில் கூட்டணியல்லாத ஒரு வலுவான அரசு அமைக்க வேண்டும். நம் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடைய ஒரு வலுவான அரசு தேவை. இல்லாவிட்டால் ஒரு டாலர் 100 ரூபாய் ஆகிவிடும். இப்படி நடக்க விடக் கூடாது. உண்மையில் கடவுள் நம்பிக்கை உள்ள யாரும் நல்ல சமுதாயத்தை விரும்புவார்கள். நல்ல சமுதாயம் அமைய நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து உழைக்க வேண்டும்.
நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி பற்றி நாம் கவலைப் பட வேண்டும். சிறிய நாடான ஶ்ரீலங்கா 11% பொருளாதார வளர்ச்சி அடைந்து பெருமிதம் கொள்கிறது. பெரிய நாடாக இருந்தாலும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 4% மட்டுமே. தானியங்களின் விலை எல்லா நாடுகளிலும் சரிவடையும் போது, இந்தியாவில் மட்டும் மிக அதிக அளவில் விலை உயர்கிறது. (பணவீக்கம்) இதன் காரணமாக நம் விவசாயிகள் பெரிய அளவில் நஷ்டம் அடைகிறார்கள். நம் நாட்டு ஏழை மக்கள் விலை உயர்வால் மிகவும் அவதிப்பட்டு அழிகிறார்கள். இந்த நிலையை மாற்றுவது மிக அவசியம். சேவையும், பிரார்த்தனையும் இந்தியாவை நல்ல நிலைக்கு எடுத்துச் செல்லும் வழிகளாகும். எல்லோருடைய நல்வாழ்வுக்காகவும் பிரார்த்தனை செய்யுங்கள்.
“சப்கோ சன்மதி தே பகவான்” என்று நம் பிரார்த்தனையில் இருக்கிறது. இதன் பொருள் “கடவுளே ! எல்லோருக்கும் நல்ல அறிவைக் கொடு”. உங்கள் வாழ்க்கையை மற்றவர்களுக்குச் சேவை செய்ய அர்ப்பணியுங்கள். எல்லா விதமான முயற்சியும் செய்து மற்றவருக்கு உதவ வேண்டும். நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்து பல நற்காரியங்களைச் செய்ய முடியும்.
இங்கு இருக்கும் வேலை இல்லாத இளைஞர்கள் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள பயிற்சிகளில் சேர வேண்டும். வாழும் கலை பல பயிற்சிகளை நடத்துகிறது. இப் பயிற்சிகளில் சேர்ந்து தேர்வு பெற்றால் நல்ல வேலை கிடைக்க வழி பிறக்கும். உங்களுக்கு ஏதாவது தனிப்பட்ட பிரச்சினைகள், நிதிப் பிரச்சினை மனம் மற்றும் சமூக அளவில் பாதிப்பு இருந்தால், எல்லாவற்றையும் என்னிடம் விட்டு விடுங்கள். உங்கள் பிரச்சினைகள் அனைத்தையும் எனக்குக் கொடுத்து விடுங்கள். நாட்டுப் பிரச்சினைகளுக்கு நீங்கள் பொறுப்பேற்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
நாட்டைப் பற்றி நினைக்கும் போது உங்களுடைய சிறிய பிரச்சினைகள் தீர்ந்து விடும். கடவுளோடு “உன் வேலையை நான் செய்கிறேன். என் வேலையில் எனக்கு உதவி செய் “ என்று ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ளுங்கள். ஏன் கடவுள் உங்களுக்கு உதவ மாட்டார் ? இயற்கை அல்லது எல்லாம் வல்ல இறைவன் கண்டிப்பாக நம் விருப்பங்களை நிறைவேற்றுவார். நம் பிரச்சினைகள் கண்டிப்பாகத் தீரும். ஆனால் நாம் சமூகப் பிரச்சினைகளுக்கு பொறுப்பேற்க வேண்டும். நாட்டுக்காகவும் இந்த உலகத்துக்காகவும் பொறுப்பேற்க வேண்டும். இப்படிச் செய்தால் உங்கள் வாழ்வில் எந்தக் குறையும் வராது.