ஆன்மீகத்தில் முழுமையடைவதன் அளவுகோல்

1 மார்ச், 2014

பெங்களூரு, இந்தியா


கேள்விகள் - பதில்கள்

குருதேவ், குடும்பத்தை நிர்வகிப்பது மிகவும் கடினமாகி வருகிறது? என் அன்புக்குரியவர்களை தவிர யாரையும் என்னால் சமாளிக்க முடிகிறது. எது இல்லாததால் இப்படி?

நீங்கள் நேரிடையாக இல்லாமல் மறைமுகமாக தான் செய்தாக வேண்டும். உங்கள் குடும்பத்திற்கு நெருக்கமாக இருப்பவர் மூலமாகச் செய்யலாம். அவர்களுக்கு உங்களை மிக மிக நன்றாகவே தெரியும். நீங்கள் நடுநிலையாய் இருந்து, ஞானத்தை நூறு சதவீதம் வாழ்பவராக இருந்தால், நீங்கள் அவர்களுக்கு எதையும் உணர்த்த முயலத் தேவையில்லை, அவர்களாகவே உணர்வார்கள். வெகு நெருக்கமானவர்கள் உங்களுக்கு மிக உயர்ந்த மரியாதையை அளிப்பது நீங்கள் ஞானத்தில் நன்கு ஆழ்ந்திருக்கிறீர்கள் என்பதை குறிக்கும், ஏனென்றால் அவர்கள் உங்களை நன்கு அறிந்திருப்பார்கள். ஒவ்வொரு சூழ்நிலையையும் நீங்கள் எப்படி கையாள்கிறீர்கள் என்பதை பார்க்கிறார்கள், ஒவ்வொரு சூழ்நிலையிலும் எப்படி அமைதியை கைவிடாமல் இருக்கிறீர்கள் என்பதை பார்கிறார்கள். உங்களுக்கு நெருக்கமானவர்கள் உங்களை பாராட்டினால், உண்மையிலேயே நீங்கள் மலர்ந்து விட்டீர்கள் என்று பொருள். அப்படி என்றால் நீங்கள் போக வேண்டியது இன்னும் சற்று தூரமே.
நீங்கள் ஞானத்தில் நன்கு ஊன்றி இருக்கும் போது, உங்களை சுற்றி உள்ளவர்களை தவிர மற்றவர்களை உங்களால் பாதிப்படையவைக்க முடிகிறது. அப்படியும் நடக்கலாம்.

குருதேவ், 40 – 45 வருடங்களாக ஆன்மீகப் பாதையில் இருந்துவரும் ஒரு அமெரிக்கத் தூதரை நான் சந்திக்க நேர்ந்தது. சில புனிதர்களுக்கு சில காட்சிகள் காணக் கிடைத்ததாம், அதில் கடவுளின் அரசாங்கம் நீல நிறத்தில் இருப்பதைப் பார்த்தார்கள் என்று அவர் கூறினார். பல கோடி ஆத்மாக்கள் அந்த இராஜியதுக்குள் நுழைய முயற்சி செய்கின்றன, ஆனால் ஒரு ஆசானின் உதவியோடு மட்டுமே அவர்களால் உள்ளே போக முடியுமாம். இவையெல்லாம் உண்மையா என்று தெரிந்துகொள்ள விரும்புகிறேன்.

கோடிக்கணக்கானவர்களில், சிலரே ஆன்மீகப் பாதைக்கு வருகிறார்கள், அவர்களிலும் சிலரே என்னை நன்றாக அறியப் பெறுகிறார்கள் என்று பகவத்கீதையிலும் கூறப்பட்டிருக்கிறது. சுமார் 84 இலட்சம் உயிரின வகைகளில் மனிதன் ஒரே ஒரு வகை மட்டுமே. 84 இலட்சம் உடலெடுத்த பின்னேதான் உங்களுக்கு மனித உடம்பு கிடைக்கிறது. சற்றே கற்பனை செய்து பாருங்கள், 84 இலட்சம் உடல்கள்! பாக்டீரியா, பறவை, விலங்கு என 84 இலட்சம் பிறவிகளுக்குப் பின்னேதான் மனித வாழ்கை கிடைக்கிறது. மனித வாழ்க்கையில், வெகு சிலரே உண்மையான ஆன்மீகப் பாதை பற்றி அறிகிறார்கள்.  அவர்களில் அந்தப் பாதையில் பயணிக்கும் வெகு சிலரே அதிர்ஷ்டசாலிகள்.
புதிதாக ஏதும் இல்லை. மனிதப் பிறவி கிடைப்பது வெகு கடினம் என்று ஆதி சங்கராச்சாரியார் கூட சொல்லியிருக்கிறார். மனிதப் பிறவி கிடைத்த பின்னும் கூட ஆன்மீகப்பாதையில் நடப்பதற்கு ஆசைப்படுவது இன்னும் கடினம், வெகு சிலருக்கே அதைச் செய்யும் வாய்ப்பு கிடைக்கிறது; அவர்களுக்கு சரியான பாதை கிடைக்கிறது.

ஆன்மீகப் பாதையில் நடக்க விரும்பும் பலர், இந்த உலகம் ஒரு நாள் அழியப் போகிறது, அல்லது இறுதிப் பேரழிவு நாள் வரப்போகிறது போன்ற தவறான கருத்துக்களில் சிக்கிக் கொள்கிறார்கள். இத்தகைய மக்கள் பயத்தினால் பிரார்த்தனை செய்கிறார்கள். பயமும் குற்றவுணர்வும் அழுத்த இவர்கள் ஆன்மீகப் பாதைக்கு வருகிறார்கள். பயம் மற்றும் குற்றவுணர்வு, ஆகிய இந்த இரண்டு விஷயங்கள் உங்களை உங்களுக்குள் ஆழமாய்ப் போக விடவே விடாது சில குறிப்பிட்ட மதங்கள் செய்கின்றன. சுவர்க்கம் நரகம் மற்றும் பிற விஷயங்கள் என பயத்தை மக்களிடம் ஏற்படுத்தி, பயம் மற்றும் குற்றவுணர்ச்சியால் அப்படி ஒரு மன உளைச்சலுக்கு உள்ளாக்கி அவர்களுடைய மனம் அமைதியடையவே விடாமல் செய்கின்றன சில மதங்கள். தியானம் நிகழவே நிகழாது. இது துரதிருஷ்டமான ஒன்று. இந்த மக்களுக்கு ஆன்மீகப் பாதைக்கு செல்ல விழைவு இருந்தாலும், அவர்களுக்கு அந்தப் பாதை கிடைப்பதில்லை. இது கிடைப்பது பேரதிருஷ்டம். ஞானத்திற்கான வழி இவர்களுக்குக் கிடைப்பதில்லை. ‘மனம் ஓடுகின்ற நதியைப் போன்றது, எதற்காக இன்னும் தயக்கம்? நடந்ததையே பிடித்துக் கொண்டிருக்காதீர்கள். எல்லா நிகழ்வுகளும் போய்விட்டன, அதைப் போட்டுவிட்டு மேலே நகர்ந்து செல்லுங்கள். நிகழ் கணத்தில் வாழுங்கள். ஆன்மீகப் பாதையை விரும்பும் பலருக்கு இந்த ஞானம் கிடைப்பதில்லை. கடந்த காலத்தை எண்ணி வருந்தி, குற்றவுணர்சியால் வாடி வதங்கி மனம் பாழாகிறது.

அவர்கள் பிரார்த்தனையும் கூட செய்கிறார்கள். அவர்களுக்கு ஆசீர்வாதம் கிடைக்க அந்தப்  பிரார்த்தனை உதவுகிறது. ஆசீர்வாதம் எல்லோருக்கும் கிடைக்கிறது, சந்தேகமேயில்லை, ஆனால் ஞானமும், நல்ல பாதையும் மற்றும் முத்தியும் அவர்களுக்கு நீண்ட தூர கனவாகவே இருக்கிறது. அவர்கள் வாழ்க்கையில் அமைதி ஏற்படுவதே இல்லை. ஒரு நாள் சொர்கத்திற்குப் போவோம் என்ற நம்பிக்கையில் அவர்கள் இருக்கிறார்கள். இந்த ஆத்மாக்கள் ஆசை மற்றும் பயத்தின் வலையில் சிக்கிக் கொள்கிறது. இதிலிருந்தெல்லாம் விடுபடவே மனிதப் பிறவி கொண்டிருக்கிறார்கள், ஆனால் கடவுள் ஒருநாள் தங்களை விடுவிப்பார் என்று நினைக்கிறார்கள். இதை எல்லாம் சரி செய்ய அவர்கள் திரும்ப வந்தாக வேண்டும். திரும்ப அவர்களுக்கு தியானம் கிடைக்கும். எனவே, மனிதப் பிறவி, ஆன்மீகப் பாதைக்கான விருப்பம், அந்த ஆன்மீகப் பாதை கிடைப்பது, (மகா புருஷா சந்நிதோ: ஆன்மீக குரு), இந்த மூன்றும் மிக அரிதானது மற்றும் கிடைப்பதற்கு கடினமானது. இந்த மூன்றும் இருந்தால் நீங்கள் அதிர்ஷ்டசாலி. இதுதான் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் கவலை வேண்டாம், நீங்கள் அலைந்து கொண்டிருக்கவில்லை. நீங்கள் ஏற்கனவே அந்தப் பாதையில் இருக்கிறீர்கள், நீங்கள் ஆனந்தமாய், இறுக்கம் தளர்ந்து இருக்கிறீர்கள்.

இளைஞர்களாகிய நாங்கள் ஆன்மீகத்தில் ஈடுபடுவது கண்டு பலர் அச்சம் கொள்கிறார்கள். இது ஒவ்வொரு ஆத்மாவுக்கும் ஆசீர்வதிக்கப்பட்டது, உண்மையில் இது ஒரு வரம் என்று எப்படி இவர்களுக்குப் புரிய வைப்பது?

அவர்களுக்குப் புரியவைக்க முயல வேண்டாம். நீங்கள் நீங்களாக இருங்கள் அவர்களுக்குப் புரிந்து விடும். தானாகவே அது நடக்கும். புரியவைக்க முயல்வது அந்தப் பிரச்சினையை இன்னும் மோசமாக்கி விடும். உங்கள் அன்பும் பரிவும் உங்கள் நடத்தையில் வெளிப்பட வேண்டும் அவ்வளவே.

குருதேவ், ‘ஓம்’ மௌனத்திலிருந்து பிறந்ததா அல்லது மௌனம் ‘ஓம்’ ல் இருந்து பிறந்ததா? ‘ஓம்’ ஆ அல்லது வெறுமையா, இவற்றில் எது மூலம்?

எல்லாவற்றின் மூலம் அதுவென்றால் எப்படி அது மௌனத்திலிருந்து பிறந்திருக்க முடியும். ‘ஓம்’ எப்படி மௌனத்திலிருந்து பிறந்திருக்க முடியும். ஒலியின்மை மௌனம், ஓம் மௌனத்தையும் விஞ்சியது. எல்லா ஒலிகளும், மௌனத்திலிருந்தே பிறக்கிறது, ஆனால் எல்லா ஒலிகளையும் போன்றதல்ல ‘ஓம்’ ன் ஒலி. இருக்கும் எல்லாவற்றின் அடிப்படை அதிர்வு ‘ஓம்’ அதனால் தான் இது ஒரு கை ஓசை என்று அழைக்கபடுகிறது; அனாஹதம். இரண்டு கைகள் மோதுவதால் உண்டாகும் ஒலி அல்ல இது. இது வெளியை விஞ்சியது, இது காலத்தை விஞ்சியது, இது வார்த்தைகளை விஞ்சியது. படைப்பின் மூலாதார அதிர்வு ‘ஓம்’.
    
குருதேவ், மதத்தை பின்பற்றுவதால் சில நேரங்களில் ஒருவர் இறுகி விடுகிறார். சிலர் நல்லவர்களாகிறார்கள், ஆனால் இறுதியில் அவர்களும் துன்பம் அடைந்து அவர்களை சுற்றி உள்ளோரும் துன்பம் அடைகிறார்கள். நாம் மதத்தைத் தவறாகப் புரிந்துகொண்டோமா?

மிகச் சரியாகக் கூறினீர்கள். நாம் மதத்தை தவறாகப் புரிந்துகொண்டு விட்டோம். இப்போது நாம் மதத்திலிருந்து ஆன்மீகதிற்குச் செல்ல வேண்டும். புத்திசாலிகள் அதைத் தான் செய்வார்கள். மத ரீதியான வெற்று நம்பிக்கைகளிலிருந்து புத்திசாலிகள் விலகி இருப்பார்கள். நாம் மதரீதியான வெற்று நம்பிக்கைகளைத் தாண்டியவர்கள். ஆன்மீகப் பரிமாணத்திற்கு நாம் சென்றாக வேண்டும்.

நான் ஆராய்ச்சித் துறையைச் சேர்ந்தவன். எதையும் புதிதாகக் கண்டுபிடிப்பது எனக்கு மிகக் கடினமாக இருக்கிறது. எங்கள் துறையைச் சேர்ந்தவர்களுக்கு படைப்பாற்றல் அதிகமாக நீங்கள் தரும் அறிவுரை என்ன?

நீங்கள் தவறாமல் தியானம் செய்துவர வேண்டும். இந்தத் துறைக்கு தியானமும் வைராக்கியமும் (பற்றற்று இருப்பது) உண்மையில் உதவி செய்யும். அவ்வப்போது, சற்றே பின்னால் சென்று அமர்ந்து இந்த முழு உலகமும் ஒரு கனவைப் போன்றது என்பதை உணர்ந்து பார்க்க வேண்டும். இந்த முழு உலகமும் ஒரு நாள் முடியபோகிறது. இங்கிருந்து எடுத்துப் போக எதுவுமே இல்லை. இதைத்தான் நீங்கள் அவ்வபோது உங்கள் கவனத்திற்குக் கொண்டு வரவேண்டும். இது உங்கள் பற்றின்மையை உறுதியாக்கும். பற்றின்மை வளர, நீங்கள் தியானத்தில் மேலும் ஆழம் செல்ல முடிவதை உணர்வீர்கள்.

குருதேவ், தியானத்தின் போது, கண்களை ஐந்து முதல் பத்து சதவீதம் திறந்து வைப்பதால் என்ன பயன்? சிலை வடிவான புத்தர் கண்களை பாதி மூடியபடி இருப்பதாக வடிக்கிறார்கள். இதைப் பற்றி தயவு செய்து கூறுங்களேன்.

கண்களை மூடும்போது மனம், எண்ணவோட்டம் மற்றும் உணர்சிகளின் உலகிற்கு செல்கிறோம். இதுதான் மனோராஜ்யம் என்று அழைக்கப்படுகிறது. நம் கண்கள் திறந்திருக்கும் போது வெளி உலகுடன் தொடர்பிலிருக்கிறோம்.கண்களை முழுதும் மூடாமல் ஒரு பகுதி மட்டும் திறந்திருக்கும் போது  உங்கள் மனம் உள்ளே உள்ள எண்ணம் மற்றும் உணர்வுகளின் உலகத்திலும் இல்லாமல் வெளி உலகத்தையும் கவனத்தில் கொள்ளாமல் இருக்கிறது. பிறகு மனம் மெதுவாக அமைதியுற்று இறுக்கம் தளர்ந்து ஓயாவான நிலைக்கு வருகிறது.கண்களை மூடியவுடனேயே கனவு உலகத்திற்கு செல்பவர்களுக்கு இது அழகான நுட்பம். இது ஒரு சித்த ஔஷதி போன்றது. (மிகக் கச்சிதமான மருந்து) 

குருதேவ், சில நேரங்களில் நான் கடவுளுக்கு அருகாமையில் இருப்பதாகவும் மற்ற நேரங்களில் கடவுள் வெகு தொலைவில் இருப்பதாகவும் உணர்கிறேன். ஏன் இந்த ஏற்ற இறக்கம்?


குருதேவ்: நீங்கள் அருகிலிருக்கிறீர்களோ இல்லையோ, உங்களைப்பற்றியே சிந்திக்கவாறு இருக்க ஏராளமான நேரம் இருக்கிறது என்று நினைக்கிறேன். எழுந்து சென்று இந்த உலகிற்காக வேலை செய்யுங்கள். இந்தச் சமூகத்திற்காக ஏதேனும் செய்யுங்கள். இடைவிடாது வேலை செய்தவாறு இருக்கும்படி அமைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் தொண்டு செய்யும்போது உங்களுக்குப் புண்ணியம் கிடைக்கிறது, அந்த புண்ணியத்தின் பலனால் நீங்கள் தியானத்தில் மேலும் ஆழமாகப் போக முடியும். இவை எல்லாம் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது. எல்லாமே தொடர்புடையது.