நீங்கள் செய்ய வேண்டிய முதல் செயல் - உங்களை தளர்த்திக் கொள்ளுங்கள்

ஞாயிற்றுக்கிழமை 23 மார்ச், 2014

பாத் அண்டோகஸ்ட், ஜெர்மனி.

இன்று நம்முடன் உக்ரைனில் இருந்து தியானம் செய்பவர்கள், வாழும்கலை ஆசிரியர்கள் மற்றும் பயிற்சி செய்பவர்கள் அனைவரும் உள்ளார்கள். உக்ரைன் பெரும் நெருக்கடியில் இருப்பது நமக்குத் தெரியும். பதட்டம், நிச்சயமற்ற நிலை, பயம் ஆகியவை மக்களிடையே நிலவி வருகின்றது.
அனைவருடைய நன்மைக்காக உக்ரைனில் தற்போதுள்ள அனைத்துப் பிரச்சினைகளும் இணக்கமாகவும் அமைதியாகவும் தீர்க்கப்படட்டும். உக்ரைனிலுள்ள ரஷ்யர்களும் அன்னியப் படுத்தப்பட வேண்டாம், இங்குள்ள உக்ரைனியர்களும் அடக்கப்படவேண்டாம். உக்ரைனிலும் சுற்றுப் புறத்திலும் நல்லிணக்கம் தேவை. இந்த முழுப் பகுதியிலும் அமைதியும், வளமும் ஏற்படுத்தப்பட வேண்டும்.மக்கள் நெடுங்காலமாக கஷ்டப்பட்டு விட்டார்கள். தொடர்ந்து அவர்கள் கஷ்டபடுத்தப் படுவது அநீதியாகும். இங்குள்ள மோதல்கள் விரைவாக தீரவும், அமைதி நிலவவும் நாம் அனைவரும் தியானம் செய்வோம்.


அனைத்து மக்களிடமும் நல்லறிவு ஓங்கட்டும். முடிவெடுக்க வேண்டியவர்கள் மன அழுத்தத்தில் இருந்தால் அவர்கள் மனம் நன்கு செயல்படாது. கருத்துக்கள் உருவாகாது. மன அழுத்தத்தில் இருக்கும் போது சிறிய விஷயங்கள் கூட உங்களை தூண்டி, பெரிய சச்சரவுகளுக்கு வழிவகுக்கலாம்.


இந்த தருணத்தில் அனைவரும் நம் உணர்வுகளை  கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். 
தெருக்களில் கலக்கம் செய்யவோ, பிறரின் உடமைகளை நாசம் செய்யவோ கூடாது என்று மக்களுக்கு கற்பியுங்கள். ராணுவம், மக்களை உணர்வுபூர்வமாக புரிந்து கொண்டு தங்கள் கடமையை செய்ய வேண்டும். உக்ரைனில் இயல்பு வாழ்வும்,அமைதியும்  விரைவில் திரும்ப நாம் அனைவரும் தியானம் செய்வோம்.

தாமரைப் பூவினைப் போன்று இருக்க வேண்டும் என்று நேற்று தாங்கள் கூறினீர்கள். எவ்வாறு இதை பெற முடியும்? தினமும் பயிற்சிகளை செய்கின்றேன். ருமுறை தியானம் செய்கின்றேன். ஆயினும் நான் தாமரைப் பூவினைப் போன்று உணர்வதில்லை?

சரி! ஒரு பூவினை போன்றில்லாவிடினும் ஒரு இலையைப் போன்றாவது உணருங்கள். (சிரிப்பு) அதனால் தான் நான் தாமரை இலை என்றும் கூறினேன். சமயங்களில் நீங்கள்  விழித்தெழுந்து உங்களை உலுக்கிக் கொள்ள வேண்டும்."கடந்த காலம் கடந்து சென்று விட்டது. அவ்வளவு தான் , அது முடிந்துவிட்டது. நாம் முன்னோக்கி நடந்து கொண்டிருக்கின்றோம், ஆனால் நமது தலை பின்னோக்கியே திரும்பி இருக்கின்றது.முன்னோக்கி சென்று கொண்டிருக்கும் கன்வேயர் பெல்ட்டில் நின்று கொண்டு பின்னோக்கி பார்த்துக் கொண்டிருக்கின்றீர்கள். ஏதேனும் ஒரு சமயத்தில்,"சரி! கடந்த காலம் என்பது முடிந்து விட்டது. விழித்தெழுகின்றேன்" என்று கூறிக் கொள்ளுங்கள்.

மீண்டும் மீண்டும் நீங்கள் விழித்தெழ வேண்டும்.இதுவே தியானம் ஆகும். கடந்த காலத்தை பற்றி குறை கூறிக்  கொண்டிருக்காதீர்கள். கடந்த காலம் ஒருநாளும் முழு நிறைவானதாக இருக்காது. குறைபாடுகளே உங்கள் மனதில் ஒட்டிக் கொண்டிருக்கின்றது, அதுவே மாயை ஆகும். அது நீங்கள் வாழ்வில் முன்னேறிச் செல்வதை தடுக்கின்றது. மிக எளிய உண்மை என்னவென்றால், வாழ்வில் ஏற்றமும் இரக்கமும் இருக்கும் என்பதை ஏற்றுக் கொள்வது தான். உங்கள் பிரச்சினை என்ன ? உடல்நலப் பிரச்சினையா? உடல் எப்போதும் ஒரே மாதிரியாக இருக்காது. நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இந்த உடல் ஒரு நாள் உங்களை விட்டு விலகிச் செல்லும். நலமானதாக இருந்தாலும் நோயுற்றதாக இருந்தாலும் அது வீழ்ந்துவிடும்.

நோயுற்றவர்கள் மட்டுமே இறப்பார்கள் என்று எண்ணாதீர்கள். உடல் நலமுள்ளவர்களும் இறந்து விடுவார்கள். உடல் நலமுள்ளவர்கள் நோயுற்றவர்கள், அழகானவர்கள்,அவலக்ஷணமானவர்கள் யாராக இருந்தாலும் உடல் மறைந்து விடும். உங்களுக்கும் உங்கள் உடலுக்குமிடையே உள்ள உறவு நிச்சயம் ரத்தாகிவிடும். அதை பற்றி பயப்பட தேவையில்லை. உங்களுக்கு உண்ண உணவு, உறங்க உறைவிடம்,குளிர் எடுக்கும் போது அதற்குறிய ஆடைகள் ஆகியவை உங்களுக்கு கிடைக்கும். உங்களுக்குத் தேவையான அனைத்தையும் இயற்கை உங்களுக்கு அளிக்கின்றது.
ஒரு துறவி அழகான ஒரு செய்யுளை எழுதியிருக்கின்றார்,"அஜ்கர் கரே ந சகரி பஞ்சி கரே ந காம், தாஸ் மலுகா கே கயே சப் கே தாட்டா ராம்"

"மலைப்பாம்பு பணியில் இல்லை, பறவைகள் எந்த வேலையிலும் இல்லை, பணிபுரிவதும் இல்லை, ஆனால் இவைகளுக்கெல்லாம் இறைவன் உணவளிக்கின்றான்." இதன் பொருள் என்னவென்றால், ஒவ்வொருவருக்கும் தேவையானவை ஏராளமாக இருக்கின்றது என்பது தான். நம்முடைய பேராசையே நம்மை அழிக்கின்றது,தேவை அல்ல.தேவையை பற்றிய கவலை என்பதை விட, பேராசையால் ஏற்படும் கவலையே அதிகம். எனவே, முதல் காரியம் என்னவென்றால் இளைப்பாறுங்கள்.

இரண்டாவது பிரச்சினை பொருளாதாரக் கவலைகள். எல்லோருக்கும் அது உண்டு! பெரிய தொழிலதிபர்களுக்கும் இப்பிரச்சினை இருக்கின்றது. கோடிக்கணக்கில் பணம் இருந்தாலும் கோடிக்கணக்கில் கடனும் இருக்கின்றது. தங்கள் வாழ்வாதாரத்தை பற்றிய கவலையுடனேயே அவர்கள் இருக்கின்றார்கள். பெரிய தொழில்களை பாருங்கள்.ஸ்டுட்கர்ட்டிலுள்ள பெரிய கார் தொழில்சாலையைப் பாருங்கள். ஒரு காலத்தில் செழித்தோங்கி இருந்தது. இன்று என்ன கதி? கீழே இறங்கி விட்டது. இத்தகைய கொந்தளிப்புக்களை தொழில்கள் சந்தித்து வருகின்றன. நாடுகள் கடன் தீர்க்க முடியாதவைகள் ஆகி விடுகின்றன. கிரீன்லாந்து, ஐஸ்லாந்து ஆகிய நாடுகள். ஸ்பெயின் மற்றும் போர்ட்சுகலிலும் பொருளாதாரப் பிரச்சினைகள் ஏற்பட்டன. அமெரிக்கா கடனில் உள்ளது. சிறிய கடன்கள் இருந்தால் அவற்றிற்கு பெரிய கடன்கள் உள்ளன. அவ்வளவு தான்! பொருளாதாரப் பிரச்சினை என்றால் அது எங்கும் உள்ளது.

அடுத்தது உறவுகள் பிரச்சினை? உறவுகள் பற்றிதான் நீங்கள் எப்போதும் கவலை கொண்டுள்ளீர்கள். நான் கூறுகின்றேன்,உங்களைத் தளர்த்திக் கொள்ளுங்கள்! எது உங்களுடையதோ அது உங்களையே வந்து அடையும். உங்களிடம் ஒட்டிக் கொள்ளும்.உங்களுடையது இல்லையோ நீங்கள் சங்கிலியால் இணைத்து அதைப் பிடித்துக் கொண்டிருந்தாலும் அது உங்களுக்கெதிராகத் திரும்பிக் கொண்டு ஒரு நாள் உங்களை விட்டு ஓடிவிடும். யாரையும் சங்கிலியால் பிணைத்து வைத்துக்கொள்ள முடியாது. அவ்வாறு செய்தாலும் அவர்கள் தப்பி ஓடி விடுவார்கள். வேறென்ன கவலைப்பட இருக்கின்றது? மரணம்? யாருமே மரணத்தைப் பற்றிக் கவலைப் படுவதில்லை, ஆனால் அதைப் பற்றிய பயமே உங்களை அரித்துத் தின்று விடுகின்றது.

அப்பயம் ஏனெனில், நீங்கள் தியானம் செய்வதில்லை அல்லது அன்பை அறியாதவர்களாக இருக்கின்றீர்கள். உங்களிடம் அன்பும் அர்பணிப்பும் இருந்தால் மரணத்தை பற்றிய பயம் மறைந்து விடும். தியானம் பயத்தை அகற்றி விடும்.ஞானம்,ஆன்மீக அறிவு உள் வலிமையை ஏற்படுத்தும்.
இவையெல்லாம் இருந்தும் கூட பயம் சிறிது இருந்தால், இயற்கை ஏதோ ஒரு காரணத்திற்காக வைத்திருக்கின்றது. இருக்கட்டும். அதை ஏற்றுக் கொள்ளுங்கள். அவ்வளவு தான், முடிந்தது, நாம் விடுவிக்கப்பட்டு விட்டோம்.

நீங்கள் கூறலாம்," குருதேவ், நீங்கள் பேசும் போது, நாங்கள் கேட்டுக் கொண்டிருக்கும் போது எல்லாமே தெளிவாக இருக்கின்றது, ஆனால் திரும்பிச் சென்றவுடன், மறுபடியும் பழைய கதைதான்!" அதே கதை என்பதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன், அனேகமாக அதே நிலை என்பது சரி. சிறிதளவு வித்தியாசம் உள்ளது. நீங்கள் பத்து அடி முன்னெடுத்து வைத்தால், அதே பத்து அடிகளையும் பின்னால் வைக்க முடியாது. ஏழு அடிகள் பின்னேரலாம், மூன்று அடிகள் முன்னேறி இருக்கின்றீர்கள். அது எனக்கு நம்பிக்கையை அளிக்கின்றது!

அதனால் தான் நீங்கள் மீண்டும் வந்து கொண்டே இருக்கின்றீர்கள், நானும் திரும்பத் திரும்ப வருகின்றேன். மீண்டும் பேசிக் கொண்டே இருக்கின்றேன். உணவு எடுத்துக் கொள்கின்றோம், சிறிது நேரத்திற்குப் பிறகு மீண்டும் பசிக்கின்றது. எடுத்துக் கொண்ட உணவு ஜீரணம் ஆன பிறகு, மீண்டும் பசி எடுத்து உணவு உண்ண விரும்புகின்றீர்கள். இது மிகவும் இயல்பானது. இதைபற்றி உங்களுக்கு எந்த விரக்தியும் இல்லை. ஒரு நாள் கூட "ஒ கடவுளே!  நான் மீண்டும் சாப்பிட வேண்டுமா ? நேற்று உணவு எடுத்துக் கொண்டேன், இன்று மீண்டும் உண்ண வேண்டுமா? சமைக்க வேண்டுமே ?என்று கூறுவதில்லை. உணவு உண்ணக் களைப்படைவதே  இல்லை. உங்கள் வயிறு "நிறைந்து விட்டது, போதும்" என்று கூறினாலும், உங்கள் கண்கள் பார்ப்பனவற்றை "இது சுவையாக இருக்கின்றது, இன்னும் கொஞ்சம் எடுத்துக் கொள்கின்றேன்" என்று கூறுகின்றது.

கண்கள், நாக்கு மற்றும் வயிறு இவற்றுக்கிடையே ஒருங்கிணைவு இல்லை. நாக்கும் வயிறும் ஒருவரையொருவர் கவனிக்காத போது, அவைகளிடையே ஒருங்கிணைவு முறையற்று போய், அதனால் உடல் பருமன் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. வாழ்க்கையை புதிய கண்ணோட்டத்தில்  பார்த்தால் ஒ! பரவாயில்லை என்றே கூறுவீர்கள். பின்னர் ஞான செய்திகளை கேளுங்கள். அதை கேட்கும் போது மகிழ்ச்சி உண்டாகும். அனைத்துமே ஒரு விளையாட்டு நாம் அனைவருமே வெவ்வேறு விதமான நாடகப் பாத்திரங்கள் என்று அறிவீர்கள். வெவ்வேறு விதமான பங்குகளை ஆற்றுகின்றோம், இரவு உறங்கச் செல்லும் போது அனைவரும் ஒன்றே! அனைவரும் உறங்குகின்றோம், முடிந்தது கதை!உறங்கி எழுந்த பின்னர் மீண்டும் நமது பங்கினை ஏற்கின்றோம். விளையாட்டினை 100 சதவீதம் குழந்தைகளை போன்று விளையாடுங்கள். குழந்தைகளை பாருங்கள், சிரிப்பு அழுகை, கோபம், எல்லாமே 100 சதவீதம், பின்னர் மகிழ்ச்சியுடன் உறக்கம்.
வாழ்வில் எதைச் செய்தாலும் அதை ஒரு அற்பணிப்புடன் செய்யுங்கள். அற்பணிப்பு உங்களது  குணத்திற்கு அழகூட்டுகின்றது. அற்பணிப்பு ஏற்படும் போது சோம்பல் மறைந்து விடுகின்றது. இயற்கை நேர்மை நாணயம் போன்ற நற்குணங்களை உங்களுக்கு வழங்கியிருக்கின்றது. இந்த குணங்களை போன்று வேறு எதுவும் மகிழ்ச்சியைத் தராது. இவற்றைப் பற்றி நீங்கள் பெருமை  கொள்ள வேண்டும்.

ஒருவன் நேர்மையை இழப்பது அவனுக்குப் பெரும் நஷ்டமாகி விடுகின்றது. பாருங்கள் உக்ரைன் மற்றும் வட ஆப்பிரிக்காவில் என்ன நிகழ்கின்றது பாருங்கள். பரிதாபமானது வருந்தத்தக்கது. மக்களுக்கு இந்த அறிவு கூட இல்லை. ஆயிரக்கணக்கானவர்கள் சுடானில் கொல்லப்பட்டார்கள் எதற்கு? ஒரு நாற்காலியைப் பிடித்து வைத்துக் கொள்ள மட்டுமே. வன்முறை கூடாது என்னும்  அளவு கூட ஆன்மீக அறிவு இல்லை. உலகின் மீது சார்புணர்வு இல்லை. வேதாந்த அறிவு: முதலில் யாரோ ஒருவராகி, ஒன்றுமில்லாதவனாகி, பின்னர் ஒவ்வொருவருமாகும் நிலை இன்றைய உலகிற்கு மிகுந்த பொருத்தம் உள்ளது ஆகும்.

ஒருவருக்கு நாட்டின் தலைவர் அல்லது பாராளுமன்ற உறுப்பினர் என்னும் பதவி மக்களுக்குப் பணி புரிவதற்காக அளிக்கப்படுகின்றது. இது பணிக்குறிய பதவி. ஆனால் அவர்கள் அப்பதவியில் அமர்ந்து அதிகாரத்தை அனுபவிக்க முற்பட்டால் அது பெரும் நாசம். எந்தப் பதவியுமே தொண்டுப் பணிக்கானது ஆகும். இப்போது நான் இங்கு உயரே அமர்ந்திருக்கின்றேன். அப்போது தான் நான் உங்களைக் காண முடியும், நீங்களும் என்னைக் காண முடியும். உங்களில் ஒருவனாக நான் அமரலாம், அப்போது நாம் ஒருவரையொருவர் பார்க்க முடியாது. உங்களுடன் நான் பேசும் பொருட்டு மேலே அமர்ந்துள்ளேன். தவிர இங்குள்ள அலங்காரங்கள் அனைத்தும் எனக்காக அல்ல, கேமராவிற்க்காக மற்றும் உங்களுக்காக! என்னையே பார்த்து சலிப்படைந்து விடாமல் இருப்பதற்காக. நான் எப்போதுமே கருப்பு வெள்ளை தான், வண்ணங்களை காண வேண்டுமெனில் இந்த வண்ண அலங்காரங்களை காணலாம்.

மக்கள் இந்தப் பூமியில் இருப்பது, தொண்டிற்காக அதற்காகவே பதவி என்பதை உணராமல் இருக்கின்றார்கள். அவர்கள் பதவி இறங்கும் போது பெரும் அழிவை ஏற்படுத்துகின்றார்கள். மக்கள், நீங்கள் தலைவர் அல்லது பிரதமராக இருக்க வேண்டாம் என்று கூறினால் அவர்கள் மகிழ்ச்சியுடன் பதவி இறங்கி விட்டு விடுதலை ஆகவேண்டும். அவர்கள், சரி! மிக்க நன்றி! என்னுடைய சக்திக்கு இயன்ற வரையில் பணி புரிந்தேன், இப்போது கடற்கரையில் நடைப் பயிற்சி மற்றும் ஐஸ்கிரீம் உண்ணுதல் என்று அனுபவிக்கின்றேன்.." இதுவே அவர்களது மனப்பாங்காக இருக்க வேண்டும். பதவியில் இருக்கும் இம்மக்களைக் காணும் போது எனக்கு இரக்கமே ஏற்படுகின்றது. பொறாமைப் பட வேண்டிய நிலையில் அவர்கள் இல்லை, பரிதாபமான நிலையிலேயே இருக்கின்றார்கள். எப்போதும் அவர்களை சுற்றி பாதுகாப்பு, பொய்யான மரியாதை, இவற்றையே காண்கின்றார்கள். அவர்களுக்குப் பயத்துடன் வணக்கமும், பேராசையுடன் புகழுரைகளும் அளிக்கப்படுகின்றன. அவர்களை நோக்கி மக்கள் ஏதோ ஒரு உள்நோக்கத்துடனேயே அணுகுகின்றார்கள். இப்படிப்பட்ட பதவியை ஏன் அவர்கள் பிடித்து வைத்துக்கொள்ள வேண்டும் என்று விரும்புகின்றார்கள் ?ஏனெனில் இந்த ஞானம் அவர்களுக்கு இல்லை.

பழங்கால இந்தியாவில் அரசனாவதற்கு முன்னர் அறுபத்து நான்கு கலைகளை அறிந்திருக்க வேண்டும்.அவற்றில் ஒன்று ஆன்மீக அறிவு. ஆன்மீகத்தினைக் கற்காத ஒருவன் அரசன் ஆக முடியாது. வரலாற்றில் இந்தியா எந்த நாட்டின் மீதும் போர் தொடுத்ததில்லை. எந்த நாட்டையும் ஆக்கிரமித்தது இல்லை.அவ்வாறு செய்திருக்க முடியும்,ஆனால் தர்ம குருமார்கள் கொள்கையானது அரசர்களை தடுத்திருந்தது."விரிவாக்கம் சரியல்ல எந்த நாட்டையும் ஆக்கிரமிக்கக் கூடாது" என்றே கூறினார்கள். ஆனால் அரசர்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டார்கள். சகோதரர்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டார்கள். எப்போதும் அமைதி இருந்தது என்று கூற முடியாது. ஆயினும் எந்த நாட்டையும் ஆக்கிரமித்து அந்நாட்டு கலாசாரத்தை அழித்ததில்லை.எனவே இந்த ஆன்மீக அறிவு மிகவும் இன்றியமையாதது ஆகும். சுவிட்சர்லாந்த் எந்த நாட்டுடனும் போர் தொடுத்ததில்லை.கோஸ்டாரிக்கா மக்கள் மிகுந்த அமைதியானவர்கள். பொதுவாகவே உலகெங்கும் மக்கள் அமைதியானவர்களே. சில தலைவர்களே பேராசை பிடித்தவர்களாக இருக்கின்றார்கள். அவர்களுக்கு அதிகாரம் என்றால் என்ன என்று தெரியவில்லை, அதிகாரத்தை என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை, ஆகவே அவர்கள் எங்கும் முழு நாசத்தை ஏற்படுத்துகின்றார்கள். எந்த அதிகாரமுமே, அடிப்படையில் தொண்டாற்றுவதற்கே ஏற்பட்டதாகும். இதை மறந்தால், துன்பம் உண்டாகின்றது.